ஏன் ஒரு ஆங்கிலச் சொல்லை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தமிழாக்கக்கூடாது?

ஆங்கிலத்தில் இருந்து பெயர்க்கும் போது மட்டும் பல சூழல்களில் இருக்கும் ஒரு சொல்லின் மூலத்தை ஆய்ந்து பார்த்து எல்லா இடங்களிலும் ஏன் அதைப் பிடித்துத் தொங்க வேண்டும்? என்னைக் கேட்டால் இதுவும் ஒரு வகை ஆங்கில அடிமைச் சிந்தனை தான். ஆங்கிலேயன் என்ன சொல் பயன்படுத்தினான், எதற்குப் பயன்படுத்தினான் என்பதை அச்சு பிசகாமல் மதிப்பளித்துப் பின்பற்றித் தமிழாக்குவது போல் இருக்கிறது. ஏன் இந்தத் தமிழ்ச் சொல் என்று யாராவது வினவினால், குறிப்பிட்ட ஆங்கிலச்சொல்லைக் குறிப்பிட்டு விளக்காமல் நம் தமிழாக்கத்தை நியாயப்படுத்த முடியாது. இங்கு ஆளப்படும் தமிழ்ச் சொல் என்பது ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு மாற்று போல் இருக்கிறதே தவிர, தமிழர்களின் சுதந்திரமான சிந்தனைக்கு வித்திடுவதாகத் தெரியவில்லை.

பண அட்டைகள் குறித்த தமிழாக்கங்கள் பற்றி இராம.கி எழுதி இருந்தார். இது தொடர்பான உரையாடல் தமிழ் விக்சனரி குழுமத்தில் நடந்தது.

ஒரு ஆங்கிலச் சொல் வெவ்வெறு சூழல்களில் வந்தாலும், தமிழிலும் எல்லா இடங்களிலும் ஒரே சொல் கொண்டு தான் மொழிபெயர்க்க வேண்டும் என்பது இராம. கி.யின் பரிந்துரை. இது தொடர்பில் என் கருத்துக்கள்:

ஆங்கிலத்தில் ஒரு வேர்ச்சொல் பல இடங்களில் வரும்போது அவ்வெல்லா இடங்களுக்கும் ஒரே தமிழ்ச் சொல்லை ஆளத் தேவை இல்லை.

தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கிறோம் என்று வைப்போம். கண், கண்ணாடி, கண்ணீர் என்பதை eye, eye glass, eye water என்றா மொழிபெயர்ப்போம்? eye, glass, tear என்று அந்த ஊர் மொழிச் சொல்லை வைத்து தானே மொழிபெயர்க்கிறோம்.

ஏன் ஆங்கிலத்தில் இருந்து பெயர்க்கும் போது மட்டும் பல சூழல்களில் இருக்கும் ஒரு சொல்லைப் பிடித்து தொங்க வேண்டும்? இதுவும் ஒரு வகை ஆங்கில அடிமைச் சிந்தனை தான். ஆங்கிலேயன் என்ன சொல் பயன்படுத்தினான், எதற்குப் பயன்படுத்தினான் என்பதை அச்சு பிசகாமல் மதிப்பளித்துப் பின்பற்றித் தமிழாக்குவது போல் இருக்கிறது. ஏன் இந்தத் தமிழ்ச் சொல் என்று யாராவது வினவினால், குறிப்பிட்ட ஆங்கிலச்சொல்லைக் குறிப்பிட்டு விளக்காமல் நம் தமிழாக்கத்தை நியாயப்படுத்த முடியாது. இங்கு தமிழ்ச் சொல் என்பது ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு மாற்று போல் இருக்கிறதே தவிர, தமிழர்களின் சுதந்திரமான சிந்தனைக்கு வித்திடுவதாகத் தெரியவில்லை. ஒரு புதிய சிந்தனையைச் சூழலைப் புரிந்து கொள்ள ஆங்கிலச் சொல் ஒரு கருவியாக இருக்கலாமே தவிர,  தமிழின் அனைத்துப் புதுச் சொற்களும் ஆங்கில அடிப்படை, சார்பு உடையதாக இருப்பது சரி இல்லை.

ஆங்கிலச் சொற்களை நேரடியாக மொழிபெயர்ப்பது செயற்கையாக இருக்கிறது. ஒரே பொருளை இரு வேறு மொழியினர் வேறு விதமாகப் பார்ப்பது இல்லையா? rainbow – ஆங்கிலேயேனுக்கு மழையின் வில்லாகிறது; நமக்கு வானின் வில்லாகிறது.  இரண்டும் குறிக்கும் பொருள் ஒன்று தான். இரு சக்கர வண்டி, துவி சக்கர வண்டி போன்ற சொற்கள் இருந்தாலும் மிதிவண்டி என்ற சொல்லே நிலைத்தது. மக்களைப் பொருத்தவரை அது மிதித்தால் நகரும் வண்டி. அவ்வளவு தான். 

நாம் பயன்படுத்தும் சொற்கள் நம் சமூகத்தை, பண்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். அஞ்சலி, condolence meeting, இரங்கல் கூட்டம்  போன்ற சொற்கள் இருக்க,  அக வணக்கம், வீர வணக்கம்  போன்ற சொற்களை ஈழத்தவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சொற்களின் ஊடாக வெளிப்படும் அம்மக்களின் பண்பாட்டைத் தலைகீழாக நின்றாலும் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்து விட முடியாது. 

சொற்கள் உள்ளூர் சிந்தனையை வெளிப்படுத்த வேண்டும். சொல்லைத் தமிழாக்காமல் சிந்தனையைத் தமிழாக்க வேண்டும். ஆங்கிலச் சொல்லையே அறியாவிட்டாலும், தமிழ்ச் சிந்தனைக்கு ஏற்ப சொல் ஆக்குவது தான் மொழி மரபு என்பது என் நம்பிக்கை, நிலைப்பாடு.

ஏன் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக ஏற்றுக் கொள்ளக்கூடாது?

Video என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சலனப்படம், அசைபடம், நிகழ்படம், காணொளி, விழியம், ஒளியம் என்று எண்ணற்ற சொற்கள் தமிழ் இணையத்தில் புழங்கி வருகின்றன. இப்படிப் பட்ட சொற்களைப் பயன்படுத்தாது ஏன் வீடியோ என்பதையே தமிழ்ச் சொல்லாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று மயூரன் தமிழ் விக்சனரி குழுமத்தில் கேட்டிருந்தார்.

ஆங்கிலச் சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனைக்கு ஆதரவாக இருப்பவை:

1. இவை மக்கள் வாழ்வில் ஏற்கனவே புழங்கும் சொற்கள் என்பதால் மக்களால் எளிதாகப் புரிந்து கொள்ளப்படும்.

2. ஒரே ஆங்கிலச் சொல்லுக்கு பல்வேறு தமிழ்ச் சொற்கள் இருப்பதால் வரும் குழப்பத்தைத் தவிர்க்கலாம்.

3. பல நேரங்களில் ஒற்றை ஆங்கிலச் சொல்லுக்கு ஏற்கனவே இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்களை ஒட்டு போட்டுப் புதுத் தமிழ்ச் சொல் உருவாக்குகிறோம். எடுத்துக்காட்டுக்கு, photo = புகை + படம், video = நிகழ் + படம் என்று. இவ்வாறு செய்வது மொழியின் வளர்ச்சியா குறுக்கமா என்று தெரியவில்லை. ஏற்கனவே இருக்கிற எளிய சொற்களைக் கொண்டு புதிய கருத்துக்களைப் புரிந்து கொள்வது வரவேற்கத்தக்கது. அதே வேளை, ஒரு குழந்தை குறைந்த சொல் தொகையை வைத்துக் கொண்டு புரிய வைக்க முயல்வது போலவும் ஒரு குற்றவுணர்ச்சி உண்டு. முக்கியமாக, இவை வேர்ச்சொல்லாக்கத்துக்குப் பயன்படுவதில்லை. photo, video போன்றவை எல்லாம் வேர்ச்சொல் போல் செயல்பட்டு இன்னும் பல கூட்டுச் சொற்களை உருவாக்கும். தமிழில் ஏற்கனவே ஒட்டுப்போட்டு தான் இச்சொற்களை உருவாக்கி வைத்திருப்பதால், இவற்றில் இருந்து புதிதாக உருவாகும் சொற்கள் இன்னும் நீண்டு கொண்டே போகின்றன.

4. ஆங்கிலச் சொற்கள் பல சமயங்களில் சுருக்கமாகவும் ஓசை நயம் மிக்கதாகவும் இருப்பதாகக் கருதப்படுகிறது. ரயில் மேல் மயில் வருது என்று கவிதை எழுதலாம் அல்லவா 😉

5. பிற மொழிச் சொற்களை ஏற்றுக் கொள்வது ஒரு மொழியின் வளர்ச்சிக்கு உதவும். இது எல்லா மொழிகளிலும் எல்லா காலங்களிலும் நிகழ்வது தான் என்று சிந்தனை.

6. தமிழில் சொல் இல்லை என்பதற்காக சில சமயம் நவீன துறைகளைக் குறித்து எழுதத் தயங்குகிறோம். அதற்கான கலைச்சொல் உருவாகும் வரை காத்திருக்கிறோம். இது புது சிந்தனைகளைத் தமிழர்கள் அறிந்து கொள்வதில் தேவையற்ற தாமதத்தை உண்டாக்குகிறது.

சரி, ஏன் இவ்வாறு ஆங்கிலச் சொற்களைத் தமிழாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று என் மனதில் எழும் சிந்தனைகள்:

1. சொற் தொடர்பு:

மொழி என்பது ஒரு ecosystem போல் என்று பேராசிரியர் செல்வகுமார் சொல்வார். ஒவ்வொரு சொல்லுக்கும் இன்னொரு சொல்லுக்கும் தொடர்பு இருக்கும் போது தான் அந்த மொழி உயிர்ப்புடன் இருக்கும். video என்ற ஆங்கிலச் சொல்லுடன் visual என்பதைப் பொருத்தலாம். audio என்ற சொல்லுடன் audible என்ற ஆங்கிலச் சொல்லைப் பொருத்தலாம். இந்தச் சொற்களைப் பொருத்திப் பார்த்துப் புரியாத சொல்லைப்புரிந்து கொள்ள முடியும் வசதி ஆங்கிலேயருக்கு இருக்கிறது.

ஆனால், இந்தச் சொல் தொடர்பைக் கணக்கில் எடுக்காமல் தனிச்சொற்களை மட்டும் கடன் வாங்கினால் ஒன்று அந்தச் சொல் புரியாமல் தனித்து நிற்கும். அல்லது, அதைத் தொடர்ந்த சொற்களும் ஆங்கில மூலமாகவே மாறும். கலைச்சொல்லாக்கத்தில் இந்தத் தொடர்பை முக்கியமாக கருதுகிறேன். வலைப்பதிவு என்று சொன்னால், பதிவர், பதிவுலகம், பதிப்பித்தல் என்று தொடர்பு வருவதைப் பாருங்கள். அதே வேளை வலைப்பூ என்றால் பூக்காரன், பூவுலகம், பூப்பூத்தல் என்றா சொல்ல முடியும்? ஆகவே, தமிழ்ச்சொல்லாகவே இருந்தால் கூட இந்த சொல் தொடர்பைப் பேணுவது அவசியம்.

video என்ற ஒற்றைச் சொல்லைப் புகுத்துவது மூலம் வீடியோக்காரர், வீடியோக்கலை, வீடியோ கடை என்று எத்தனை இடங்களில் ஒரு சொல்லைப் புகுத்துகிறோம் பாருங்கள்.

2. இலக்கணச் சிதைவு:

தமிழ் இலக்கணப்படி ஒவ்வொரு சொல்லும் தன்னாலேயே பொருளுடையது. ஒவ்வொரு சொல்லின் ஒலிப்பும் சில இலக்கணங்களுக்கு உட்பட்டது. இப்படி தேவையே இல்லாமல் கடன்வாங்கப்படும் சொற்கள் தமிழின் ஒலிப்பையும் பொருட்செறிவையும் குறைப்பதைக் காணலாமே? எடுத்துக்காட்டுக்கு, photo என்ற சொல்லைக் கடன் வாங்கி அதைத் தமிழில் எழுதிக் காட்ட ஃபோட்டோ என்று எழுதுகிறோம். ஆனால், இப்படி ஆய்த எழுத்தை முதலில் எழுதுவதால் ஆய்த எழுத்தின் ஒலிப்பையும் ஆய்த எழுத்து சொல் முதலில் வராது என்ற தமிழ் இலக்கணத்தையும் சிதைக்கிறோம். ballஐ பால் என்று எழுதுகிறோம். paal என்று வாசிக்க வேண்டியதை baal என்று வாசிக்கிறோம். ஆங்கிலச் சொற்றொடர்கள் எழுதும் போது இலக்கணத் திருத்திகள் கொண்டு எல்லாம் பயபக்தியுடன் சரி பார்த்து தானே செயற்படுகிறோம். ஆனால், தமிழ்ச் சொற்களை எழுதும்போது மட்டும் தமிழின் இலக்கணத்தைப் பொருட்படுத்தாது அலட்சியமாக இருப்பது சரியா? பிற மொழிச் சொற்களைக் கடன் வாங்குவதை நிறுத்தினாலே பாதி தமிழ்ச் சிதைவு குறையும் என்று நம்புகிறேன். இலக்கணத்தைக் காலத்துக்குக் காலம் மாற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கலாமோ? எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஒவ்வொரு மொழியும் ஒரு உயிரினம் போன்று அதற்கென தெளிவான கட்டமைப்புடன் தான் உருவாகிறது. உயிரினங்கள் தங்களுடன் கலந்து புது இனங்கள் உருவாவது போல் மொழிக்கலப்பால் புதிய மொழிகள் உருவாகலாம். ஆனால், அது முந்தைய மொழிகளின் இருப்புக்கு உறுதி அளிப்பதில்லை. உயிரினப் பல்வகைமையைப் பேண எப்படி விழைகிறோமோ அதே போல் மொழிப் பல்வகைமைகளையும் தனித்துவத்தையும் காக்க முற்படுவதும் அவசியம்.

3. சொல் இழப்பு:

ரயில் என்ற சொல்லுடன் சேர்ந்து ரயில்வே என்ற சொல்லையும் உறுத்தல் இல்லாமல் பயன்படுத்துகிறோம். ரயில் பாதை என்றாவது சொல்லலாம் என்று தோன்றுவதில்லை. இல்லாத சொல் என்று கடன் வாங்கி, அந்தப் புதுச் சொல்லுடன் இணைந்து வரக்கூடிய பிற தமிழ்ச் சொற்களையும் இழந்து விடுகிறோம். rail=இருப்பு என்றே பயன்படுத்தி இருந்திருந்தோமானால் இருப்புவே என்று எழுதுவது உறுத்தி இருப்புப் பாதை என்று இயல்பாக எழுதி இருப்போம்.

4. ஓசை நய அரசியல்:

ரயில், கார் எல்லாம் ஓசை நயமாக இருக்கிறதே? தமிழ் ஒலிப்புக்கும் ஒத்தும் வருகிறதே? எனவே அப்படியே இவற்றை ஏற்றுக் கொள்ளலாமே? என்று சிந்திக்கத் தூண்டுதலாக இருந்தாலும், இந்த ஓசை நயத்துக்குப் பின் ஒளிந்திருக்கும் அரசியல் உறுத்துகிறது. ஒரு மொழியின் சொற்களைக் காட்டிலும் இன்னொரு மொழியின் சொல் ஓசை நயமாகவும் இனிமையாகவும் இருக்கிறது என்று தொடங்கும் மொழிக் கலப்பு, பிறகு, இருக்கும் மொழியைக்காட்டிலும் புகுந்த மொழி மேம்பட்டது, புகுந்த மொழியைப் பேசுவோர் மேலோர் என்ற அரசியலில் போய் முடிகிறது. வடமொழிக்கலப்பின் இன, சமூக, அரசியல் வரலாறு இந்தப் பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது. உதவுகிறேன் என்று புகும் மொழி ஒரு இனத்தையே இப்படி அடிமை மனநிலைக்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் தள்ளுவதை ஏற்க இயலாது.

5. பல சொற்கள் இருப்பது நன்மை தான்:

ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு பல தமிழ்ச் சொற்கள் இருப்பது நன்மை தான். தொலை நோக்கில், ஏதாவது ஒரு சொல் மக்கள் ஏற்பு பெற்று நிலைக்கும். நிச்சயம் குழப்பம் வராது. பொருளே தெரியாமல் அப்படியே ஆங்கிலச் சொல்லை ஏற்றுக் கொள்வதைக் காட்டிலும், இப்படி முயன்று பார்க்கப்படும் பல தமிழ்ச் சொற்கள் தமிழனின் பார்வையில் எப்படி ஒரு சிந்தனை உள்வாங்கப்படுகிறது என்று புரிய உதவும். bicycle என்ற சொல்லின் நேரடிப் பொருளுக்கே தொடர்பு இல்லாமல் மிதி வண்டி என்ற சொல் நிலைப்பதைக் காணலாம். இது குறிப்பது என்னவென்றால், ஒருவேளை தமிழனே bicycleஐக் கண்டுபிடித்திருந்தால் மிதி வண்டி என்றே பெயர் வைத்திருக்கக்கூடும். இன்று நாம் பல சொற்களைக் கடன் வாங்க வேண்டி இருப்பதற்கு முக்கிய காரணம், அச்சொற்கள் குறிக்கும் சிந்தனைகள், புத்தாக்கங்கள் நம் மண்ணில் தோன்றாமை தான். இந்த அடிப்படைப் பிரச்சினையைக் களைய முனையாமல் சொற்களைக் கடன் வாங்கி காலத்தை ஒப்பேற்றுவது மழுங்கிய சமூகத்தின் அறிகுறியாகவே தோன்றுகிறது.

சிந்தனைகளுக்கு மட்டும் அறிமுகம் ஆகாமல் அதோடு சேர்ந்து சொற்களையும் கடன் வாங்குவது தான் பிழையாகப் போய் விடுகிறது. தரமான தாய்மொழிக் கல்வி, தாய்மொழி வழிச் சிந்தனை இவற்றின் மூலம் புத்தாக்கங்களின் ஊற்றுக்கண்ணாக தமிழகம் இருக்கும் என்றால் தமிழகத்தில் இருந்து எழும் புதிய சிந்தனைகள், புத்தாக்கங்கள் இவற்றுக்குத் தமிழிலேயே பெயர் வைப்பது எளிதாகி விடும். பிற மொழிச் சொற்களைத் தமிழில் சேர்க்கலாமா என்ற நிலை மாறி தமிழ்ச் சொற்கள் உலக மொழிகளில் புதுச் சொற்களாகச் சேரும் நிலை வந்தால் எப்படி இருக்கும்? WordPress உலகளாவிய மென்பொருள் தான். ஆனால், பாலம், பால்நிலா, நிகரிலா என்று பெயரில் பிரபலமான WordPress வார்ப்புருக்கள் இருப்பதை அறிவீரா? மென்பொருளாக்கம் போன்ற துறைகளில் உலக அளவில் தமிழர் முன்னணியில் இருக்கையில் நாம் செய்யும் புத்தாக்கங்களுக்கான சிந்தனைகளையும் பெயர்களையும் தமிழிலேயே செய்வோமானால் எவ்வளவோ தமிழ்ச் சொற்கள் உலக அளவில் புழங்கும்.

ஒருங்குறி X Unicode X யுனித்தமிழ்

ஒரு கூகுள் குழும நிருவாகியுடன் பேசிய போது…

நான்: உங்கள் குழுமத்தில் யுனித்தமிழ் என்ற சொல்லைக் கையாள்கிறீர்களே? யுனித்தமிழ் என்று சொன்னால், இசைத்தமிழ், நாடகத் தமிழ் போல் அதையும் ஒரு தமிழாகக் கருதிக் குழப்பிக் கொள்ள வாய்ப்பளிக்காதா? ஒருங்குறித் தமிழ் என்றால் இலகுவாகப் புரியுமே?

குழும நிர்வாகி: சுந்தரத் தமிழில் பாட்டிசைத்து….. என்று திருவிளையாடலில் சிவாஜி பேசும்
வசனம் ஞாபகம் வருகிறது. சுந்தரம் என்பது தமிழல்ல, அதனால் இது ஒன்றும் குறையாகியும் போகவில்லை.

நான்: தமிழ் வகைகளைப் பொறுத்து – இசைத்தமிழ், இயற்றமிழ், நாடகத் தமிழ் என்று அழைக்கிறோம். அதன் பண்புகளைக் குறித்து தீந்தமிழ், பைந்தமிழ், செந்தமிழ் என்கிறோம். இடத்தைப் பொறுத்து மதுரைத் தமிழ், சென்னைத் தமிழ் என்கிறோம். அது போல் சுந்தரத்தமிழ் என்பதில் சுந்தரம் தமிழ் இல்லாமல் போனால் கூட அது தமிழின் பண்பை விளம்ப உதவுகிறது. அதில் எனக்கு மறுப்பும் இல்லை. தனித்தமிழை வலிந்து திணிக்கும் எண்ணமும் இல்லை. கவிதைகளில் உச்சரிப்பு அழகுக்காக இப்படி வேற்றுமொழிச் சொல் புகுவது வழமை தான்.

குழும நிர்வாகி: பிறகென்ன? யுனித்தமிழ் போற்றுங்கள்!

குழும நிர்வாகி: மைல்கல் என்பதில் மைல் என்பது தமிழல்ல.

நான்: மைல் என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் இல்லை. தவிர, அடி போன்று தமிழில் இணைச்சொற்கள் இல்லாதபோது, அனைத்துலக அளவை அலகுகளை அப்படியே ஏற்றுக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது.

குழும நிர்வாகி: சிங்கைத்தமிழ், இலங்கைத்தமிழ், லண்டன் தமிழ் என்றெல்லாம்கூடச் சொல்லுகிறோம்.

நான்: ஊர்ப்பெயர்களை யாரும் மொழிபெயர்ப்பதில்லை.

குழும நிர்வாகி: யுனித்தமிழ் என்பது புதுப்பதம். இனிமையான பதம். கணினி யுகக்
கண்டுபிடுப்பு. இதில் தவறில்லை.

நான்: அப்படியானால், கணினி கூட நாம் உருவாக்கிய சொல். அதையும் விடுத்து computer, telephone, keyboard என்றே எல்லாவற்றையும் சொல்லிவிட்டுப் போகலாமே? uni என்பது இடுகுறிப் பெயர்ச்சொல் இல்லை. காரணப் பெயர். uni code என்பதை ஒரே குறிமுறை என்று இலகுவாகப் புரிந்து கொள்ள சொல்ல இயலும்போது எதற்கு uni என்ற சொல்லைக் கடன் வாங்க வேண்டும்? முதலில் மக்களுக்கு uni என்றால் என்ன என்று புரிந்து பிறகு unicode குறித்துத் தெரிந்து அதற்கான பொருள் விளங்குவதற்குள் ஒருங்குறித் தமிழ் என்றால் சட்டென்று புரியாதா?

குழும நிர்வாகி: யுனி என்பது யுனிகோடு என்பதன் அடையாளத்தை மட்டுமே காட்டுகிறது. எனவே
யுனி என்பது தமிழுக்குப் புதுச்சொல் வரவு. நாம் ஆங்கிலத்தை அப்படியே
எடுத்துக்கொள்ளவில்லை என்று ஆறுதல் கொள்ளலாம். தமிழுக்குக் கிடைத்த
புதுச் சொல் வரவால் ஆனந்தப்படலாம்!

நான்: உங்கள் கருத்துக்களுடன் மாறுபடுகிறேன். ஆனால், குழும நிர்வாகிகள் என்ற முறையில் உங்கள் முடிவுகளை மதிக்கிறேன். நன்றி.

குழும நிர்வாகி: யுனி என்பது தமிழ் என்று நான் கூறவில்லையே. ஒருங்குறித்தமிழ் என்பதைவிட யுனித்தமிழே அழகு என்று கூறுகிறேன். ஒருங்குறி என்பது Unicode என்பதற்குப் பொருள்கூறும் சொல். யுனித்தமிழ் என்பது பொருள்கூறும் வகையில் உருவானதல்ல. ரோஜா என்பதைப்போல தழுவி உருவானது.

நான்: ஒருங்குறித் தமிழ் என்று சொல்வதற்கான தேவையே கூட இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. unicode என்பது ஒரு encoding வகை. அவ்வளவுதான். அதைத் தமிழோடு சேர்த்து சிறப்பித்துக் கூற ஒன்றும் இல்லை. unicodeலேயே utf-8, 7, 16 little endian, 16 big endian, 32 little endian, 32 -big endian முதல் இப்போது அடிபட்டுக் கொண்டிருக்கும் TUNE வரை இருக்கிறது. வாசகருக்கு ஒரு technical specification தருவது என்றால் அதை முழுமையாக இந்தத் தளம் unicode (utf-8) குறிமுறையில் அமைந்திருக்கிறது என்று சொல்லலாம. அல்லது என்கோடிங் என்றே சொல்வது புது சொல்லாகவும் அழகாகவும் இருக்குமா? . இல்லை, யுனித் தமிழ் என்று சொன்னால் போதும் என்றால் எத்தனையோ encodingகள் இருக்கின்றன. western encodingல் இருப்பது வெஸ்டர்ன் தமிழா? இப்படியே டிஸ்கி தமிழ், அஸ்கி தமிழ் என்று புதுப்பதங்கள் ஆக்கிக் கொண்டே போனால் வேடிக்கையாக இல்லையா?

குழும நிர்வாகி: நிச்சயமாக இல்லை. நீங்கள் இப்படிக் கேட்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

நான்: நாம் மட்டும் தான் இப்படி யுனித்தமிழ் போன்ற சொற்களை ஆக்கிக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். ஆங்கிலேயர்களோ சப்பானியர்களோ ஏன் unienglis, unijapanese போன்ற சொற்களை உருவாக்கவில்லை? ஏனெனில் இப்படி ஒரு சொல்லே தேவையில்லை…!!! கூகுளில் unichines, unijapanese என்று தேடிப்பாருங்கள். நாம் ஆக்க வேண்டிய சொற்களை விட்டுவிட்டு வேண்டாத சொற்களை ஆக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் என் கருத்து.

குழும நிர்வாகி: தமிழன் எதையாவது புதிதாகச் செய்யவேண்டுமானால் அவன் ஆங்கிலேயனையோ ஜப்பானியனையோ நகலெடுத்துத்தான் செய்யவேண்டும் என்று நீங்கள் சொல்வது தமிழனுக்கு அவமானம்! உங்கள் கருத்து தவறானது என்பது என் கருத்து. இதோ ஒரு சொல்லை நான் உருவாக்கியே காட்டுவேன் என்று வலியச்சென்று ஆக்கிய சொல்லல்ல யுனித்தமிழ்! இயல்பாய், தேவையின் பயனாய் உருவான சொல் அது! உங்களுக்க்குப் பிடிக்கவில்லை என்றால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது.
நீங்கள்தான் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். நான் அறிந்து மிகப் பலரும் விரும்பிப் பயன்படுத்துகிறார்கள்.

நான்: பேனா கொண்டு எழுதினால் பேனா தமிழா? பென்சில் கொண்டு எழுதினால் பென்சில் தமிழா? எதை வைத்து எழுதுகிறோம் என்பதற்கும் மொழிக்கும் தொடர்பே இல்லை. எதை வைத்து வேண்டுமானாலும் எந்த மொழியை வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற போது அதை மொழியோடு சேர்த்துச் சொல்ல அவசியமில்லை. அந்த வகையில் ஒருங்குறி என்பது எந்த மொழியையும் ஒருவர் எழுதி இன்னொருவர் படிக்க உதவும் குறிமுறை. அவ்வளவே. அதை மொழியோடு சேர்த்துச் சொல்லிப் புதுச்சொல் என நினைக்க ஒன்றுமே இல்லை என்பது தான் என் கருத்து.

குழும நிர்வாகி: தவறான கருத்து!

நாடகத்துல வந்தா நாடகத்தமிழா என்று கேலிசெய்வதாய் இருக்கிறது. பேச்சில் வந்தால் அது பேச்சுத்தமிழா என்று அறியாமையில் கேட்பதாய் இருக்கிறது. பேனா தமிழ் பென்சில் தமிழ் என்று உங்களை கேட்க வைப்பது உங்கள் அறியாமை. நான் அப்படிப் பெயர் சூட்டவில்லை. குறியீட்டின் முறையோடு இணைத்தே யுனித்தமிழ்
என்று கொண்டேன். கணித்தமிழ் என்ற பதம் தெரியுமா உங்களுக்கு? இணையத்தமிழ் என்ற பயன்பாடு தெரியுமா உங்களுக்கு? மேலும் மேலும் தவறான கருத்துக்களையே முன் வைக்காதீர்கள். விளக்கம் தர மட்டுமே நான் தயாராய் இருக்கிறேன். விவாதிக்க நான் தயாரில்லை. பணி இருக்கிறது நிறைய!

நான்: விளக்கங்களுக்கு நன்றி.

Puncture ஒட்டும் கடைக்குத் தமிழில் என்ன பேர்?

இது சயந்தன் எனக்கு சொன்ன கதை !

1990களில் தமிழீழத்தில் உள்ள கடைகளுக்கு எல்லாம் தமிழ்ப் பெயர் வைக்குமாறு விடுதலைப் புலிகள் வலியுறுத்திய காலமாம். bakery – வெதுப்பகம் ஆனது. bank – வைப்பகம் ஆனது. இந்த வரிசையில், tyreல் உள்ள துளை (puncture) ஒட்டும் கடைக்கு ஒருவர் தமிழ்ப் பெயர் எழுதி வைத்தாராம். அது என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சயந்தன் அந்தப் பெயரை சொன்ன போது விழுந்து விழுந்து சிரித்தேன் 🙂

அந்தப் பேர்..

..

..

.

.

….

….

ஒட்டகம் ! 😉

camel_in_sichuan_china.jpg

ஹா..ஹா..அந்தக் கடைக்காரர் இப்படி நினைத்ததில் தவறு ஒன்றும் இல்லை. ஒட்டுப் போடும் இடம் ஒட்டகம் தானே 🙂 பாலகம், நூலகம் மாதிரி 🙂

கடைகளுக்கு, ஆட்களுக்குத் தமிழ்ப் பெயர் வைத்தால் தமிழ் பரவலாகும் என்பது உண்மை தான். சில சமயங்களில் இப்படி எதிர்ப்பார்க்காத வேடிக்கைகளும் வந்து விடுகின்றன. ஆனால், தமிழ் வளர்ச்சியில் விருப்பம் உள்ளோர் இப்படிப் பெயர் சூட்டுவதையும் தாண்டி சிந்திப்பதே நலம் பயக்கும். ஏதோ ஒரு இணைய உரையாடலில் குறிப்பிட்டார்கள் – “நாம் cycle partsக்குத் தமிழ்ப் பெயர் வைப்பதற்குள் வெள்ளைக்காரன் அந்த partsஐயே மாத்தி விடுகிறான்” என்று. அது தான் உண்மையாக இருக்கிறது. ஆங்கிலக் கண்டுபிடிப்புகளை தமிழாக்கிப் புரிந்து கொண்டு பெயர் வைத்துக் கொண்டிருப்பதால் தமிழ் ஒரு போதும் பெரிதும் வளர்ந்து விடாது. மாறாக தமிழ்நாட்டில் இருந்தே, தமிழ்த் தேவைகளுக்கேற்ற கண்டுபிடிப்புகள் தமிழ்ச் சிந்தனையூடாக வருவது அவசியம். அப்படி வந்தால் தமிழும் வளரும். தமிழரும் வளர்வர். நாம் கண்டுபிடித்ததற்கு என்ன பேர் வைக்கலாம் என்று வேறு நாட்டவர்கள் கலைச்சொல்லாக்கக் குழு வைக்கலாம் 😉 ஆனால், இந்த தமிழ் வழிச்சிந்தனை வளர்வதற்கு அடிப்படைத் தேவை பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்துப் பாடங்களையும் தமிழில் கற்கும் வாய்ப்பு. இதை இன்னொரு கட்டுரையில் தான் விரிவாக எழுத முடியும்.

இப்போதைக்கு, அண்மையில் இது தொடர்பாக நான் கவனித்து மகிழ்ந்த இரு விசயங்கள்.

தமிழ்மணம் வலைப்பதிவுத் திரட்டி உருவாக்கிய காசி ஆறுமுகம், கோவையில் ஒரு சிறு உணவுப் பொறி ஒன்றை உருவாக்கி இருக்கிறார். தமிழ்மணத்தில் நல்ல தமிழ்ச் சொற்களை ஆண்டதின் விளைவாக இன்று தமிழ் வலைப்பதிவரிடையே நல்ல தமிழ்ச் சொற்கள் வலம் வருவதைக் கண்ட காசி, தான் உருவாக்கிய கருவியின் நுட்பப் பெயரையும் தமிழில் வைக்க விரும்பி நண்பர்கள் ஒரு சிலரிடம் ஆலோசனை கேட்டிருந்தார். இது போல் தமிழ்நாட்டில் உருவாகும் கருவிகளுக்குத் தமிழ்ப் பெயர் வைத்து அறிமுகப்படுத்துவது பெரிதும் வரவேற்கத்தக்கது.

இதுபோல் அமெரிக்காவில் இருக்கும் சதீஷ் அழகழகான wordpress தோற்றக்கருக்களை உருவாக்கி அதற்கு தமிழ்ப் பெயர்கள் வைத்து வருகிறார். இவரது தோற்றக்கருக்களின் பெயர்களான பால் நிலா, நிகரிலா ஆகியவை உலகெங்கும் உள்ள wordpress பயனர்களால் உச்சரிக்கப்படும். ஒசாகா மொழியில் புசாகா என்றால் நிலா என்று தம் பிள்ளைக்கு புசாகா என்று பெயர் வைக்கும் தமிழ்ப் பெற்றோர் சிலர் மாதிரி நிலா என்றால் தமிழில் moonஆம் என்று சில மேல்நாட்டுக்காரர்கள் தமிழ்ப் பெயர் வைத்தால் எப்படி இருக்கும் 😉 ? நம் சொற்களைப் பரப்ப, தமிழை உலக அறியச்செய்ய இது ஒரு வழி.

வலைப்பூவா வலைப்பதிவா ?

வலைப்பூ, வலைப்பதிவு – இரண்டுமே blog என்பதற்கு ஈடான சொற்களாகப் புழங்குகின்றன. எது நல்ல சொல்?

இந்த இரண்டு சொற்களின் இளகுத் தன்மையையும் பார்ப்போம்.

வலைப்பதிவு

weblog – வலைப்பதிவு

blogger – வலைப்பதிவர்

blogging – வலைப்பதிதல்

blog (வினை) – வலைப்பதி.

blogger circle – பதிவர் வட்டம்.

blog world / blogdom – பதிவுலகம்

videoblog – நிகழ்படப்பதிவு / ஒளிதப் பதிவு

audioblog – ஒலிதப்பதிவு.

வலைப்பூ

weblog – வலைப்பூ

blogger – வலைப்பூக்காரர் ?? 😉

blogging – வலைப்பூத்தல் ?? 😉

blog (வினை) – வலைப்பூ பூ?? 😉

blogger circle – பூ வட்டம்?? 😉

blog world / blogdom – பூவுலகம் ?? பூந்தோட்டம் ??

videoblog – படப்பூ ?? 😉

audioblog – ஒலிப்பூ ?? 😉

புதுச் சொற்களை உருவாக்கும்போது வேர்ச்சொற்களிலிருந்தும் வினை சார்ந்தும் ஒரு சொல்லில் இருந்து பல சொற்கள் கிளைத்து வருவது போலவும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாகவும் தனிச்சொல்லாக இல்லாமல் சொற் தொகுதியாகவும் (word ecosystem) இருக்க வேண்டும் என்று மொழி அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.

வலைப்பூ என்ற சொல்லில் உள்ள பெரிய குறை, வலை என்கிற முன்னொட்டை விட்டு விட்டு அதனால் செயல்பட முடியாது. தனித்து, பூ என்ற சொல்லை மட்டும் வைத்து சுருக்கமாக இந்த நுட்பம் குறித்து பேச முடியாது. வலைப்பூ என்பது தமிழ்மணம், தேன்கூடு என்று பூ சார்ந்த பெயர்களில் தளப்பெயர்கள் அமையத் தான் வழி வகுக்குமே தவிர வலைப்பதிவு நுட்பத்தை விவாதிக்க உதவாது.

வலைப்பதிவு என்பது வலுவான சொல்லாகத் தெரிகிறது.