ஒருங்குறி X Unicode X யுனித்தமிழ்

ஒரு கூகுள் குழும நிருவாகியுடன் பேசிய போது…

நான்: உங்கள் குழுமத்தில் யுனித்தமிழ் என்ற சொல்லைக் கையாள்கிறீர்களே? யுனித்தமிழ் என்று சொன்னால், இசைத்தமிழ், நாடகத் தமிழ் போல் அதையும் ஒரு தமிழாகக் கருதிக் குழப்பிக் கொள்ள வாய்ப்பளிக்காதா? ஒருங்குறித் தமிழ் என்றால் இலகுவாகப் புரியுமே?

குழும நிர்வாகி: சுந்தரத் தமிழில் பாட்டிசைத்து….. என்று திருவிளையாடலில் சிவாஜி பேசும்
வசனம் ஞாபகம் வருகிறது. சுந்தரம் என்பது தமிழல்ல, அதனால் இது ஒன்றும் குறையாகியும் போகவில்லை.

நான்: தமிழ் வகைகளைப் பொறுத்து – இசைத்தமிழ், இயற்றமிழ், நாடகத் தமிழ் என்று அழைக்கிறோம். அதன் பண்புகளைக் குறித்து தீந்தமிழ், பைந்தமிழ், செந்தமிழ் என்கிறோம். இடத்தைப் பொறுத்து மதுரைத் தமிழ், சென்னைத் தமிழ் என்கிறோம். அது போல் சுந்தரத்தமிழ் என்பதில் சுந்தரம் தமிழ் இல்லாமல் போனால் கூட அது தமிழின் பண்பை விளம்ப உதவுகிறது. அதில் எனக்கு மறுப்பும் இல்லை. தனித்தமிழை வலிந்து திணிக்கும் எண்ணமும் இல்லை. கவிதைகளில் உச்சரிப்பு அழகுக்காக இப்படி வேற்றுமொழிச் சொல் புகுவது வழமை தான்.

குழும நிர்வாகி: பிறகென்ன? யுனித்தமிழ் போற்றுங்கள்!

குழும நிர்வாகி: மைல்கல் என்பதில் மைல் என்பது தமிழல்ல.

நான்: மைல் என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் இல்லை. தவிர, அடி போன்று தமிழில் இணைச்சொற்கள் இல்லாதபோது, அனைத்துலக அளவை அலகுகளை அப்படியே ஏற்றுக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது.

குழும நிர்வாகி: சிங்கைத்தமிழ், இலங்கைத்தமிழ், லண்டன் தமிழ் என்றெல்லாம்கூடச் சொல்லுகிறோம்.

நான்: ஊர்ப்பெயர்களை யாரும் மொழிபெயர்ப்பதில்லை.

குழும நிர்வாகி: யுனித்தமிழ் என்பது புதுப்பதம். இனிமையான பதம். கணினி யுகக்
கண்டுபிடுப்பு. இதில் தவறில்லை.

நான்: அப்படியானால், கணினி கூட நாம் உருவாக்கிய சொல். அதையும் விடுத்து computer, telephone, keyboard என்றே எல்லாவற்றையும் சொல்லிவிட்டுப் போகலாமே? uni என்பது இடுகுறிப் பெயர்ச்சொல் இல்லை. காரணப் பெயர். uni code என்பதை ஒரே குறிமுறை என்று இலகுவாகப் புரிந்து கொள்ள சொல்ல இயலும்போது எதற்கு uni என்ற சொல்லைக் கடன் வாங்க வேண்டும்? முதலில் மக்களுக்கு uni என்றால் என்ன என்று புரிந்து பிறகு unicode குறித்துத் தெரிந்து அதற்கான பொருள் விளங்குவதற்குள் ஒருங்குறித் தமிழ் என்றால் சட்டென்று புரியாதா?

குழும நிர்வாகி: யுனி என்பது யுனிகோடு என்பதன் அடையாளத்தை மட்டுமே காட்டுகிறது. எனவே
யுனி என்பது தமிழுக்குப் புதுச்சொல் வரவு. நாம் ஆங்கிலத்தை அப்படியே
எடுத்துக்கொள்ளவில்லை என்று ஆறுதல் கொள்ளலாம். தமிழுக்குக் கிடைத்த
புதுச் சொல் வரவால் ஆனந்தப்படலாம்!

நான்: உங்கள் கருத்துக்களுடன் மாறுபடுகிறேன். ஆனால், குழும நிர்வாகிகள் என்ற முறையில் உங்கள் முடிவுகளை மதிக்கிறேன். நன்றி.

குழும நிர்வாகி: யுனி என்பது தமிழ் என்று நான் கூறவில்லையே. ஒருங்குறித்தமிழ் என்பதைவிட யுனித்தமிழே அழகு என்று கூறுகிறேன். ஒருங்குறி என்பது Unicode என்பதற்குப் பொருள்கூறும் சொல். யுனித்தமிழ் என்பது பொருள்கூறும் வகையில் உருவானதல்ல. ரோஜா என்பதைப்போல தழுவி உருவானது.

நான்: ஒருங்குறித் தமிழ் என்று சொல்வதற்கான தேவையே கூட இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. unicode என்பது ஒரு encoding வகை. அவ்வளவுதான். அதைத் தமிழோடு சேர்த்து சிறப்பித்துக் கூற ஒன்றும் இல்லை. unicodeலேயே utf-8, 7, 16 little endian, 16 big endian, 32 little endian, 32 -big endian முதல் இப்போது அடிபட்டுக் கொண்டிருக்கும் TUNE வரை இருக்கிறது. வாசகருக்கு ஒரு technical specification தருவது என்றால் அதை முழுமையாக இந்தத் தளம் unicode (utf-8) குறிமுறையில் அமைந்திருக்கிறது என்று சொல்லலாம. அல்லது என்கோடிங் என்றே சொல்வது புது சொல்லாகவும் அழகாகவும் இருக்குமா? . இல்லை, யுனித் தமிழ் என்று சொன்னால் போதும் என்றால் எத்தனையோ encodingகள் இருக்கின்றன. western encodingல் இருப்பது வெஸ்டர்ன் தமிழா? இப்படியே டிஸ்கி தமிழ், அஸ்கி தமிழ் என்று புதுப்பதங்கள் ஆக்கிக் கொண்டே போனால் வேடிக்கையாக இல்லையா?

குழும நிர்வாகி: நிச்சயமாக இல்லை. நீங்கள் இப்படிக் கேட்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

நான்: நாம் மட்டும் தான் இப்படி யுனித்தமிழ் போன்ற சொற்களை ஆக்கிக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். ஆங்கிலேயர்களோ சப்பானியர்களோ ஏன் unienglis, unijapanese போன்ற சொற்களை உருவாக்கவில்லை? ஏனெனில் இப்படி ஒரு சொல்லே தேவையில்லை…!!! கூகுளில் unichines, unijapanese என்று தேடிப்பாருங்கள். நாம் ஆக்க வேண்டிய சொற்களை விட்டுவிட்டு வேண்டாத சொற்களை ஆக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் என் கருத்து.

குழும நிர்வாகி: தமிழன் எதையாவது புதிதாகச் செய்யவேண்டுமானால் அவன் ஆங்கிலேயனையோ ஜப்பானியனையோ நகலெடுத்துத்தான் செய்யவேண்டும் என்று நீங்கள் சொல்வது தமிழனுக்கு அவமானம்! உங்கள் கருத்து தவறானது என்பது என் கருத்து. இதோ ஒரு சொல்லை நான் உருவாக்கியே காட்டுவேன் என்று வலியச்சென்று ஆக்கிய சொல்லல்ல யுனித்தமிழ்! இயல்பாய், தேவையின் பயனாய் உருவான சொல் அது! உங்களுக்க்குப் பிடிக்கவில்லை என்றால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது.
நீங்கள்தான் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். நான் அறிந்து மிகப் பலரும் விரும்பிப் பயன்படுத்துகிறார்கள்.

நான்: பேனா கொண்டு எழுதினால் பேனா தமிழா? பென்சில் கொண்டு எழுதினால் பென்சில் தமிழா? எதை வைத்து எழுதுகிறோம் என்பதற்கும் மொழிக்கும் தொடர்பே இல்லை. எதை வைத்து வேண்டுமானாலும் எந்த மொழியை வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற போது அதை மொழியோடு சேர்த்துச் சொல்ல அவசியமில்லை. அந்த வகையில் ஒருங்குறி என்பது எந்த மொழியையும் ஒருவர் எழுதி இன்னொருவர் படிக்க உதவும் குறிமுறை. அவ்வளவே. அதை மொழியோடு சேர்த்துச் சொல்லிப் புதுச்சொல் என நினைக்க ஒன்றுமே இல்லை என்பது தான் என் கருத்து.

குழும நிர்வாகி: தவறான கருத்து!

நாடகத்துல வந்தா நாடகத்தமிழா என்று கேலிசெய்வதாய் இருக்கிறது. பேச்சில் வந்தால் அது பேச்சுத்தமிழா என்று அறியாமையில் கேட்பதாய் இருக்கிறது. பேனா தமிழ் பென்சில் தமிழ் என்று உங்களை கேட்க வைப்பது உங்கள் அறியாமை. நான் அப்படிப் பெயர் சூட்டவில்லை. குறியீட்டின் முறையோடு இணைத்தே யுனித்தமிழ்
என்று கொண்டேன். கணித்தமிழ் என்ற பதம் தெரியுமா உங்களுக்கு? இணையத்தமிழ் என்ற பயன்பாடு தெரியுமா உங்களுக்கு? மேலும் மேலும் தவறான கருத்துக்களையே முன் வைக்காதீர்கள். விளக்கம் தர மட்டுமே நான் தயாராய் இருக்கிறேன். விவாதிக்க நான் தயாரில்லை. பணி இருக்கிறது நிறைய!

நான்: விளக்கங்களுக்கு நன்றி.


Comments

17 responses to “ஒருங்குறி X Unicode X யுனித்தமிழ்”

  1. Dr.Sintok Avatar
    Dr.Sintok

    “மடல் உரையாடல்” …………………chat உரையாடல் தெரியும் மடல் உரையாடல் எப்படி நடத்துவது…? தங்கள் ஐயங்களுக்கான விடையை நானும் எதிர்பார்க்கிறென்…

  2. Dr.Sintok – இந்தப் பதிவில் உள்ள வரிசையிலேயே நாங்கள் உரையாடவில்லை. நான் ஒரு விரிவான மடல் எழுத அவர் மறுமொழி எழுத, இலகுவான வாசிப்புக்காக அவற்றைப் பொருத்தமாக இடம் மாற்றி, வெட்டி ஒட்டித் தந்திருக்கிறேன். அவ்வளவு தான்.

  3. arutperungo Avatar
    arutperungo

    ரவி,

    யுனித்தமிழ் என்பது ‘தேவை’யில்லாமல் கண்டுபிடிக்கப் பட்ட சொல் போலதான் என்று தோன்றுகிறது.
    இந்தத் தளம் ஒருங்குறி – குறிமுறையில் இயங்குகிறது என்று சொன்னால் போதும் என்பது என் கருத்து.

    (பெரும்பாலானத் தமிழ் தளங்களில் தமிழ், ஆங்கிலம் இரண்டுமே கலந்துதானே இருக்கிறது… அப்புறமேன் யுனித்தமிழ், ஒருங்குறித் தமிழ் என்று பொய் சொல்லிக்கொண்டு? :))

  4. ரவி,
    தமிழை புகுத்துவதிலும் உபயோகிப்பதிலும் உள்ள பெரும் பிரச்சனை இது. முடிந்தவரை நற்றமிழ் எனும் எண்ணம் வரும் வரை இப்படி கல்ப்படம் இருக்கத்தான் போகிறது. கருத்தளவில் பேசாமல் விதண்டாவாதம் செய்தால் என்ன செய்வது. அழகு என்பது அவரவர் பார்வையில் இருப்பது. அழகாய் இனிமையாய் இருக்கிறது என்பதற்காக இருப்பதை வைத்துக்கொள்ள வேண்டுமா.

    \\
    இதோ ஒரு சொல்லை நான் உருவாக்கியே காட்டுவேன் என்று வலியச்சென்று ஆக்கிய சொல்லல்ல யுனித்தமிழ்! இயல்பாய், தேவையின் பயனாய் உருவான சொல் அது!
    \\
    என்னை மிகவும் வருத்தப்படும் வார்த்தைகள் இவை. இயல்பாய் வருகிறது என்பதற்காக முயற்சி எடுக்காமல் தமிழ்ப்படுத்துவது கலப்படத்தை ஆதரிப்பது என்ன வகையில் தமிழுக்கு சிறப்பு.

    \\உங்களுக்க்குப் பிடிக்கவில்லை என்றால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது
    \\

    இதில் பிடித்தது பிடிக்காததை தாண்டி நல்ல தமிழ்ப்படுத்தப்பட்ட சொல் கிடைக்கும்போது உவந்து ஏற்காமல் மாற்றத்தை விரும்பாமல் இருந்தால் என்ன சொல்வது என்று சரியில்லை.

    சத்தியா

  5. இது செல்வராஜ் எப்போதோ குறிப்பிட்ட கருத்து, அதனுடன் நானும் உடன்படுகிறேன் – Unicode எனபது ஒரு பதிவு செய்யப்பட்ட trademark. (காண்க: http://www.unicode.org/policies/logo_policy.html)
    அதை ஒருங்குறி, யூனித்தமிழ் என்றெல்லாம் தமிழாக்குவது அபத்தமான ஒரு செயல். அதற்கு இணையாக நெருப்புநரி (Firefox), இடிப்பறவை (Thunderbird), நுண்ணிய மென்மை (Microsoft), போன்ற தமிழாக்கங்களைக் குறிப்பிடலாம். சிரிப்பை வரவழைக்க இத்தகைய தமிழாக்கங்களைக் கையாண்டாலும், தீவிரச் சூழல்களில் இத்தகைய பதங்களை உபயோகிக்கலாகாது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். ஏனோ, unicode என்று வரும்போது மட்டும் ஒரு விதிவிலக்காக அதைத் தமிழ்ப்படுத்தியே அழைத்துக் கொண்டிருக்கிறோம்.

  6. ரவி,

    மடற்குழுக்களில் விவாதித்து அவப்பெயர் சம்பாதித்துக்கொள்ளும் அனுபவத்தின் நோவினை புரிந்துகொள்கிறேன்.

    இந்த உரையாடலில் இருந்து நான் விளங்கிக்கொண்டது என்னவென்றால்,

    யுனித்தமிழ் என்ற சொல்லை அவர்கள் வைத்துவிட்டார்கள். (சிலவேளை ஒருங்குறி என்ற சொல் வருவதற்கு முன்னமே வைத்திருக்கலாம்)

    இப்பொழுது அதை பற்றி வ்மர்சனம் எழும்போது பெருந்தன்மையோடு அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கும் உளவியல் பின்னணியில் உங்களோடு விதண்டாவாதம் புரிகிறார்கள்.

    இது வெறும் விதண்டாவாதமே. தன்முனைப்புப்பிரச்சினை. நிர்வாகிக்கு தனது சொல்லாட்சிகுறித்த இத்தனை விளக்கங்கள் நீங்கள் கேட்குமுன் இருந்தேயிராது.

    இக்குழுமம் தமிழ்க் கணிமை உலகில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப்பொறுத்தே அவர்களுக்கு எதிரான வாதத்தின் பயன்பாட்டினை அளவிடலாம்.

    மற்றபடி, ஆயிரம் பூக்கள் பூக்கட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதான்.

  7. VoW, நீங்கள் குறிப்பிட்ட மாதிரி ஒரு விதிவிலக்காகத் தான் ஒருங்குறி என்ற தமிழாக்கத்தைப் பயன்படுத்தி வருகிறோம். unicode என்பது நுட்பம் சார்ந்த காரணப் பெயராக அமைந்திருப்பதும் நெருப்பு நரி போல் வேடிக்கையான தமிழாக்கமாக இல்லாததும் ஒரு காரணம். இல்லாவிட்டால், வணிகப் பெயர்களைத் தமிழாக்குவது தவறு தான்.

    யுனிகோட், யுனிக்கோட், யுனிக்கோடு, யுனிகோடு என்று பலவாறு எழுதுவதற்குப் பதில் Unicode என்று பிற மொழிச் சொல்லை பிற மொழி எழுத்திலேயே எழுதி விட்டுப் போய் விட்டால் கடைசி வரை அது தமிழல்ல என்று தெளிவு மனதில் இருக்கும். அல்லது, குறைந்தபட்சம் அடைப்புக்குறிகளிலாவது Unicode என்று எழுதிச் சுட்ட வேண்டும். Unicode என்ற ஆங்கிலச் சொல்லை வாசிக்கவே தெரியாதவருக்கு எந்த விதத்தில் யுனித்தமிழ் என்ற சொல்லாக்கம் உதவும் என்று புரியவில்லை.

    மயூரன், இந்த உரையாடல் குழுமத்தில் பொதுவில் நடை பெறவில்லை. தனி மடலில் நடைபெற்றது. குழுமத்துக்கும் தமிழ்க் கணிமைக்கும் தொடர்பில்லை என்று ஆறுதல்படலாம். எனினும், இணையத்தில் பலரும் அறிந்த குழுமமே. இதில், என்ன கவலை என்றால் பலரறி குழுமத்தில் புழங்கும் சொற்கள் அக்குழும உறுப்பினர்கள் மூலம் அவர்கள் இயங்கும் பதிவுகள், மறுமொழிகள், தளங்கள், வேறு குழுமங்கள் என்று இணையம் முழுவதும் பரவுவது தான். தவிர, இது ஏதோ ஒரு சொல், ஒரு குழுமம், ஒரு நிர்வாகி என்பதற்காகப் பதியவில்லை. பல மூத்த, முன்னணி இதழாளர்கள், அறிஞர்கள் கூட இதே கருத்தோட்டங்கள், கலைச்சொல்லாக அணுகுமுறைகளுடன் இருப்பதைப் பார்த்து கவலை கொண்டே எழுதினேன். ரோசாப்பூவூ விட ரோஜாப்பூ இனிமையாக இருக்கிறது, அரசனை விட ராஜா அழகாக இருக்கிறார் போன்ற விருப்பங்களை பல இடங்களில் காணலாம்.

  8. 1. சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து என்று பாரதி பாடியதாகத் தான் நினைவு. சுந்தரத் தமிழில் பாட்டிசைத்து என்று திருவிளையாடலில் சிவாஜி பாடினாரா?

    அரசவையில் நீங்கள் யார் என்ற கேள்விக்கு பதில் சொல்லும்போது அப்படி சொல்லுகிறார்.

    2. ஒருங்குறித் தமிழ் என்று சொல்வதைக் காட்டிலும் யுனித்தமிழ் என்று சொல்வது எப்படி அழகாக இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. யாராவது விளக்கி என் அறியாமையைப் போக்குங்க 😉

    அழகு அவரவர் மனதில் உள்ளது. கருத்துகள் வேறுபடலாம். அது அப்படித்தான் இருக்கும் என விட்டு விடுவதே நன்று. பொதுவாக விவாதங்கள் நண்பர்கள் பிரியத்தான் உதவுகின்றன. தான் என்று ஒரு விஷயம் இருக்கும் வரை விவாதங்களால் பெரிய பயன் ஏதும் இல்லை. கடைசியில் மக்களுக்கு எது உகந்ததாக படுகிறதோ அதுவே நிலைக்கும்.

    திவே

  9. tv –

    1. திருவிளையாடல் கு்றித்த விளக்கத்துக்கு நன்றி.

    2. அழகு அவரவர் மனதில் உள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன். உடை, விடுமுறை, உணவு போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பது தனிநபர் உரிமை, விருப்ப்ம், ரசனை சார்ந்தது. அதை விவாதிக்க இரண்டாவது நபருக்கு எந்த உரிமையும் இல்லை.

    எனினும், முன்னணி நாளிதழ்கள், குழுமங்கள் ஆகியவற்றின் ஆசிரியர்கள் அவர்கள் விருப்பதுக்குட்பட்டு பரிந்துரைக்கும் சொற்கள் இந்நிறுவனங்கள், நபர்கள் மேல் உள்ள நம்பகம் காரணமாக கேள்வியின்றி அதன் வாசகர்களால் உட்கொள்ளப்பட்டு அவர்கள் உரையாடல்களிலும் புழக்கத்துக்கு வருகிறது. இக்குழுமத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் எனக்குத் தனிமடலில் எழுதும்போது தாங்கள் யுனித்தமிழில் எழுதுவதாகக் கூறிய போதே ஒரு குழுமத்தின் உச்சியில் துவங்கும் சொல்லாடல் எப்படி அடிமட்டம் வரை பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த விதத்தில், இது போன்று பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் விருப்பத்துக்கு அப்பாற்பட்டும் தொலைநோக்கில் சமூக நோக்கில் சிந்தித்து செயல்பட வேண்டியது விரும்பத்தக்கது.

    தமிழ் பாசுரங்களைக் காட்டிலும் வடமொழி மந்திரங்களே ஓசை நயமுள்ளவை, சக்தியுள்ளவை என்று எண்ணுவது, அம்மா என்று சொல்வதைக் காட்டிலும் mummy என்று சொல்வதைப் பெருமையாக நினைப்பது, ஒரு என்று சொல்வதைக் காட்டிலும் யுனி என்று சொல்வது இனிமையானது என்று கூறுவது எல்லாமே சுட்டி நிற்கும் ஆபத்து ஒன்று தான் – நம் மொழியின் ஓசை, சிறப்பு, பொருளைக் காட்டிலும் இன்னொரு மொழி ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்தது என்னும் தாழ்வு மனப்பான்மையைத் திட்டமிட்டோ அறியாமலோ சமூகத்தில் விதைப்பது. இதன் தீமையை அறிந்தும் சுட்டிக்காட்டாமல் வெறும் நட்பு பாராட்டி என்ன பயன்? கருத்துக்களையும் அதைச் சொல்லும் நபர்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க வல்ல மனப்பக்குவம் உள்ள பல நண்பர்களைப் பெற்று இருக்கிறேன். அதன் இன்பமே தனி. இனி வரும் நட்புகளும் அது போல் இருப்பதையே விரும்புகிறேன்.

  10. ரவி, மயூரன்,

    \\மடற்குழுக்களில் விவாதித்து அவப்பெயர் சம்பாதித்துக்கொள்ளும் அனுபவத்தின் நோவினை புரிந்துகொள்கிறேன்.\\

    தன்முயற்சியில் சற்றும் மனம்தளரா விக்கரமாதித்தனை மனதில் கொண்டு உங்கள் பணிகளை தொடருங்கள். உங்கள் சேவை தமிழுக்கு தேவை. எனக்கு இதுவரை unicode என்பது ஒரு நுட்பம் என்ற அளவிலே அறிமுகம் இருந்தது அது ஒரு தனி நிறுவனத்தை சார்ந்தது என்பது இந்த நல்ல உரையாடலில் அறியக் கிடைத்தது. மேலும் இது சாரந்த மற்ற விபரங்களையும் படிக்க தூண்டியுது.VoWக்கு நன்றி.

    \\ஒரு குழுமத்தின் உச்சியில் துவங்கும் சொல்லாடல் எப்படி அடிமட்டம் வரை பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த விதத்தில், இது போன்று பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் விருப்பத்துக்கு அப்பாற்பட்டும் தொலைநோக்கில் சமூக நோக்கில் சிந்தித்து செயல்பட வேண்டியது விரும்பத்தக்கது.\\
    மிக்க உண்மை என்னைப்போன்றோர் அதிகம் நேரம் செலவிடுவது இல்லை. எது பெரும்பான்மையோ அதையே பிடித்துக்கொள்கிறோம்.

  11. // யுனிகோட் – ஒரு பெயர்ச்சொல்லாகத் தான் படுகிறது… காரணம் பின்னணியில் இருந்தாலும்… இப்பெயர் நிலைப் பெற்று விட்டது..

    http://www.unicode.org/standard/translations/tamil.html

    ஒருங்குறி ஏற்புடையதுதான்.. கிட்டத்தட்ட ட்ரேட் மார்க் சமாச்சாரம் ஆகிபோச்சு இது.. அப்படியே பயன்படுத்துவதும் ஏற்புடையதே…

    // தமிழ் பாசுரங்களைக் காட்டிலும் வடமொழி மந்திரங்களே ஓசை நயமுள்ளவை, சக்தியுள்ளவை என்று எண்ணுவது,

    ஒவ்வொரு மொழிக்கு ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது. தமிழில் இருக்கும் சிறப்பு சமஸ்கிருதத்தில் இல்லை. சமஸ்கிருதத்தில் உள்ள சிறப்புகள் தமிழில் சில இல்லாது போகலாம். சமஸ்கிருதம் ஓசை நயம் பெற்றது என்பதால் தமிழின் தரம் குறையாது.

    ஓசை சமஸ்கிருதத்தின் சிறப்பென்று தமிழ் செய்யுளொன்றிலே படித்த ஞாபகம்.. மீண்டும் காணக் கிடைக்கும்போது தருகிறேன்..

    அதற்காகத் தமிழ் அதற்கு சளைத்தது அல்ல..

    இன்றிருப்பது போல் நமது முன்னோர்கள் தமிழுக்கும் சமஸ்கிருததுக்கும் இடையே பகைமைப் பாராட்டவில்லை. இன்று இந்தப் பக்கம் ஒருவர் நின்றுக் கொண்டு சம்ஸ்கிருதத்தையும் அந்தப் பக்கம் ஒருவர் நின்று கொண்டு தமிழையும் பழிப்பது வேடிக்கை..

    சமஸ்கிருதம் தேவ மொழி என சில நண்பர்கள் சொல்வார்கள்.. தமிழ் தெய்வமே பேசிய மொழி என்பதுண்டு…

    உயர் ஆரியத்திற்கு நிகராக வாழ்ந்தேன் என தமிழ் கூறுவதாக பாரதி போற்றுகிறார். சில நல்ல விஷயங்கள் என் நண்பனிடம் இருந்தால் ஏற்றுக் கோள்கிறேன்.

    அதே போல் நல்ல விஷயங்கள் பிற மொழிகளில் இருந்தால் எம்மொழியினை அது மேம்படுத்த உதவுமாயின் நிச்சயம் ஏற்பேன். அது சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் எதுவானாலும் சரி..

  12. இப்படித் தான் பல பேர் இருக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் தமிழ் மொழி அறிவின்மை. பாடசாலைகளில் தமிழ் படிப்பித்தால் போதாது, தமிழின் சிறப்புப் பற்றியும் படிப்பிக்க வேண்டும்.

    அவர் யுனிகோட் ஒரு பதிவுசெய்யப்பட்ட பெயர் என்று வாதிட்டிருந்தால் பரவாயில்லை. அழகாக இருக்கிறதாம் அதற்காக அதைப் பாவிக்க வேண்டும் என்று முட்டாள்தனமாக வாதிட்டிருக்கிறார்.

    எனக்கென்றால் “ஒருங்குறி” தமிழாய் அழகாய் இருக்கிறது. 😉

  13. து.சாரங்கன் Avatar
    து.சாரங்கன்

    “ஒருங்குறி” என்பதுதான் மிக எளிமையாக புரிகிறது. யுனித் தமிழில் வரும் யுனிக்கு பல அர்த்தங்கள் உள்ளன. இங்கிலாந்து பேச்சு வழக்கில் Universityயின் சுருக்கமாகவே “யுனி” பெரும்பாலும் கையாளப்படுகிறது.

    இணையச் சூழலில், தெரிந்தே பிறரினின் நேரத்தை வீணடிப்பவர்கள் (trolls), விதண்ட வாதம் செய்பவர்கள், தங்கள் தவறை ஒப்புக் கொள்ளாதவரகள், மொக்கைப் பதிவு போடுபவர்கள், என பலதரப்பட்டவர்கள் உள்ளனர். சில வேளை இது நமக்கு வருத்ததைத் தந்தாலும் தனிமனித சுதந்திரத்தை மதித்து அவர்களை அவர்கள் போக்கிலே விட்டுவிட்டு, நம்மால் முடிந்த நல்லதைச் செய்ய வேண்டியதுதான். இக்கருத்தைச் சொல்லும் ஒரு குறள் கூட உள்ளது (சட்டென்று ஞாபகத்தில் வரவில்லை).

  14. இங்கிலாந்தில் மட்டும் இல்லை சாரங்கன்..கூகுளில் தேடிப் பார்த்ததில் uni என்பது universityக்கான பிரபலமான சுருக்கமாகப் பல நாடுகளில் புழங்குது போல இருக்கு..

  15. ரவி,
    மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது பதிவு; சிந்திக்க வைத்ததும் கூட! ஒருங்குறித் தமிழ் என்பது மிகப் பொருத்தமான காரணப் பெயராகத் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் பல சொற்கள் இன்ன பிற மொழிகளிடமிருந்து கடன் வாங்கியும் புணர்த்தும் வளர்வது போல யுனித்தமிழையும் கொள்ளலாமா? ‘ 7’O clock blade’ என்பதை எவ்வாறு கூறுவது? 7’O clock சவரத்தகடு என்றா? . ஏழு மணி(க்கு மயிர் மழிக்கும்) சவரத்தகடு (காரணப் பெயரோ?!) என்றா? அது போல் தான் தோன்றுகிறது இதுவும்.

    ஆனால் யுனிகோடு தமிழ் என்று சொல்லி இருந்தாலும் பரவாயில்லையே? யுனித்தமிழ் என்ற சொல்லாக்கத்தை எவ்வாறு இலக்கணப்படி வகைப்படுத்துவது? ஈறு கெட்ட மூன்றாம் வேற்றுமைத் தொகையா?

    மொழி வளர்ச்சிக்கு சில புதிய இலக்கண வடிவங்கள் இன்றியமையாதது என்று வழுவமைதிகளாய் இவற்றை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா? இருந்தாலும் சிறப்பான பதம் ஒன்றிருக்க ‘பார்க்க நன்றாக இருக்கிறது; கேட்க நன்றாக இருக்கிறது’ என்றெல்லாம் தேவை இல்லாத சொற்களை படைப்பானேன்? குழும நிர்வாகிகளுக்கே வெளிச்சம்!

  16. >> நிர்வாகி: யுனி என்பது யுனிகோடு என்பதன் அடையாளத்தை மட்டுமே காட்டுகிறது.

    அப்படியா? எனக்குத்தெரிந்து பல நாடுகளில் மாணவர்கள் University-ஐ யுனி என்று அழைக்கிறார்கள்.

  17. தங்கள் ஆதங்கத்தையும் மற்றவர்களின் பின்னூட்டங்களையும் படித்தேன். யுனிக்கோட் இல் உள்ள தமிழை மொழிக்கலப்பு இல்லாத மொழிமாற்றம் செய்வதில் தவறு இல்லை. இது “copy right violation ” அல்ல.
    கணனி தெரிந்தவர் தமிழ் வல்லுனர்களை நெறிப்படுத்துவதா? அல்லது தமிழ் மொழியை தெரிந்தவர் கணனி வல்லுனர்களை நெறிப்படுத்துவதா? என்ற வாதத்தின் பதிலே உங்கள் வினாவிற்கான பதில்.