தற்குறிப்பு எழுதுவது எப்படி?

தற்குறிப்பு (Resume / CV / Bio-data ) எழுதுவது எப்படி?

* 2 பக்கங்களுக்கு மேல் வேண்டாம். குறிப்பிடுவதற்கு நிறைய இருந்தால் பின்னிண்ணைப்புப் பட்டியலாகத் தாருங்கள்.

* பக்கத்தின் தொடக்கத்தில் உங்கள் பெயர், தொலைப்பேசி, மின்மடல் விவரத்தைத் தாருங்கள்.

* அடுத்து உங்களைப் பரிந்துரைக்கும் முக்கியமான இருவரின் தொடர்பு விவரங்களைத் தாருங்கள்.

* கடைசி 5 ஆண்டுகள், அவற்றில் நீங்கள் முக்கியமாகச் சாதித்தவற்றை மட்டும் குறிப்பிட்டால் போதும். பால்வாடியில் வாங்கிய பரிசு முதற்கொண்டு வளவள என்று எழுத வேண்டாம்.

* ஒரே தற்குறிப்பை எல்லா நிறுவனங்களுக்கும் அனுப்பாதீர்கள்.

அடுத்த 5 ஆண்டுகளில் நீங்கள் செய்ய விரும்புவது என்ன? அதற்கு இந்த நிறுவனம் எப்படி பொருத்தமாக இருக்கும்? நிறுவனத்தின் பணிகளுக்கு நீங்கள் எப்படி சிறப்பாகப் பங்களிக்க முடியும்? எனக் குறிப்பிடுங்கள்.

* எல்லாரும் எழுதுவது போன்ற வழமையான தற்குறிப்புப் பாணிகளை மறந்து விடுங்கள். உங்களைச் சிறப்பாக எடுத்துக் காட்ட என்ன எழுதலாம், எப்படி எழுதலாம் என்று சிந்தியுங்கள். இதே போன்ற ஒரு தற்குறிப்பு உங்களிடம் வந்தால், அவரை நீங்கள் வேலைக்கு எடுப்பீர்களா?

* உண்மையை மட்டும் எழுதுங்கள். பொய் சொன்னால், நேர்முகத் தேர்வின் போதோ வேலையில் சேர்ந்த பிறகோ மிக இலகுவாக கண்டுபிடித்துவிடுவார்கள்.

* நட்பான, நேர்த்தியான தோற்றம் உள்ள உங்கள் ஒளிப்படம் ஒன்றைச் சேர்க்கலாம்.

* “MS Office தெரியும், English தெரியும், நடக்கத் தெரியும்.. ” போன்ற அடிப்படைத் திறன்களைக் குறிப்பிடாதீர்கள். உங்கள் முந்தைய வேலைகளை வைத்தே உங்களுக்கு என்னென்ன தெரியும் என்று நல்ல நிறுவனங்கள் கண்டு கொள்ளும். நீங்கள் சரியான அணுகுமுறை உள்ள ஆளாக இருந்தால், தேவையான திறன்களைப் பயிற்றுவிக்கவும் தயங்க மாட்டார்கள்.

* அடிப்படையான தற்குறிப்பை எழுதிய பிறகு உங்கள் நண்பர்களிடம் கருத்து கேளுங்கள். எழுத்து, இலக்கணம், தகவலில் பிழை என்பதை உறுதி செய்யுங்கள்.

தற்குறிப்புகளை மட்டும் அனுப்பி வைத்து விட்டு, வேலை உங்களைத் தேடி வரும் என்று கனவு காணாதீர்கள். மிகவும் நல்ல வேலைகள் விளம்பரப்படுத்தப்படாமலேயே நிரப்பப்படுகின்றன. மிகவும் திறமையானவர்கள் எந்தத் தற்குறிப்பும் தராமலேயே புதிய பணிகளில் சேர்கிறார்கள். உங்கள் துறை சார் அறிவையும் தொடர்புகளையும் பெருக்கி ஏதாவது சாதிக்க முனையுங்கள். நிறைய வேலைகள் தேடி வரும்.

ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி?

பேச்சு ஆங்கிலத்தை ( Spoken English ) வளர்த்துக் கொள்வதற்கான எளிய குறிப்புகள்: ஆங்கிலம்

* 30 நாட்களில் பேச்சு ஆங்கிலம், Repidex, விவேகானந்தா கல்வி நிலையம் போன்றவற்றை நாடாதீர்கள். முறைப்படி இலக்கண விதிகளை நினைவு வைத்துப் பேச வேண்டி இருப்பது, உங்களை மனம் தளரச் செய்யலாம். நீங்கள் பேசிப் பழகப் பழக நாளடைவில் இலக்கணம் தானாக வரும்.

* பேச முற்படும் முன் நிறைய ஆங்கிலப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டே இருங்கள். எடுத்துக்காட்டுக்கு, கிரிக்கெட் வர்ணனை, தொலைக்காட்சிச் செய்திகள். பொருள் புரியாவிட்டாலும் ஓசைகள், சொற்களுக்குப் பழக்கப்பட உதவும்.

* உங்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாவிட்டால், விளம்பர வாசகங்கள், கடைகளின் தட்டிகள், படம் போட்ட சிறுவர் கதை நூல்கள் போன்றவற்றை வாசிக்கத் தொடங்கலாம். HINDU போன்ற உயர் தர ஆங்கில இதழ்கள், அகரமுதலிகளை எடுத்த எடுப்பிலேயே புரட்டுவது மட்டும் ஆங்கிலம் பேச உதவாது.

* தமிழ் தெரியாத பிற மொழி நண்பர்களிடம் பேச்சு கொடுத்துப் பழகுங்கள். இந்தச் சூழ்நிலைகளில் உங்கள் பேச்சுப் பிழைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள். நீங்கள் பேசுவது அவருக்குப் புரிந்தாலே வெற்றி தான்.

* சரியோ தவறோ பேசத் தொடங்குங்கள். பேசவே தொடங்காமல் ஆங்கிலம் தெரியவில்லையே என்று வருந்துவதில் பயனில்லை. நீங்கள் எவ்வளவு கூடுதலாகவும் அடிக்கடியும் வெவ்வேறு விசயங்களைப் பேசிப் பழகுகிறீர்களோ அவ்வளவு விரைவில் பேச்சு ஆங்கிலம் கைக்கூடும்.

* நன்கு தெரிந்தவர்களிடம் குறை ஆங்கிலத்தில் பேசக் கூச்சமாக இருந்தால், முன் பின் தெரியாத இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டுக்கு, ஒரு வாடிக்கையாளர் சேவையைத் தொலைபேசியில் அழைக்கும் போது ஆங்கிலத்தில் பேச வாய்ப்பு இருந்தால் பேசிப் பாருங்கள்.

ஆங்கிலம் மட்டுமல்ல எந்த ஒரு மொழிக்கும் இந்தக் குறிப்புகள் பொருந்தும். உங்களுக்கு வேறு ஏதும் குறிப்புகள் தெரிந்தால் சொல்லுங்கள்.

திரட்டி செய்வது எப்படி?

Yahoo! Pipes, Google Reader இரண்டுமே தன் விருப்பத் திரட்டிகள் செய்ய உதவுகின்றன.

முதலில், திறம் வாய்ந்த Yahoo! Pipes கொண்டு நான் உருவாக்கிய திரட்டிகள் சில:

1. தமிழ்மணத்தில் எனக்குப் பிடித்த நான்கு துணை ஓடைகளை ஒன்றிணைக்கும் திரட்டி. இதே முறையில் தமிழ்மண ஓடைகளுக்குப் பதில் நம் விருப்பப் பதிவுகளின் ஓடைகள் அல்லது நம் பல்வேறு பதிவுகளின் ஓடைகளை ஓன்றிணைத்துக் கொள்ள முடியும்.

2. துறை வகைகள் போக, நாம் விரும்பாத பதிவுகள், விரும்பாத பதிவர்கள் ஆகியோரையும் ஓர் ஓடையில் இருந்து நீக்கிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டுக்கு, மகளிர் சக்தி திரட்டியில் இருந்து கலை என்ற பதிவரை மட்டும் விலக்கி நான் உருவாக்கி உள்ள ஒரு திரட்டியை இங்கு பார்க்கலாம். (இங்கு, கலை அவர்களை விலக்கி நான் உருவாக்கியது ஓர் எடுத்துக்காட்டுக்கு மட்டுமே. மற்றபடி, அவர் பதிவுகளை விரும்பிப் படிக்கவே செய்கிறேன்!).

இப்படி, வடிகட்டித் திரட்டிகள் உருவாக்க இயல்வதால், நமக்கு விருப்பமில்லா பதிவர்களை, பதிவுகளை நீக்கச் சொல்லி எந்த ஒரு திரட்டி நிர்வாகத்திடமும் முறையிட்டுக் காத்திருக்கத் தேவை இல்லை. அவர்கள் விலக்கும் வரை வேறு வழியின்றி அப்பதிவுகளைப் பார்க்க நேரிடவும் வேண்டாம். திரட்டித் தளங்கள் தாமே தன் விருப்பமாக்கல் வசதிகளைத் தரும் வரை இது போன்ற திரட்டிகளை நாம் உருவாக்கிக் கொள்ளலாம்.

3. தமிழில் செய்திகள்.

4. தமிழ் இணைய இதழ்கள்.

5. தமிழ்நாடு குறித்த ஆங்கிலச் செய்திகள்.

6. தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளின் சங்கமம் – சில தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளின் வலை சீர்தரங்களுக்குட்படாத ஓடை வடிவங்களின் காரணமாக, இத்திரட்டி அவ்வளவு திறம் வாய்ந்ததாக இல்லை. இது தொடர்பில் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள் தளங்களுக்கு மின்மடல் இட்டிருக்கிறேன். அவர்கள் ஓடை வடிவம் மாற்றப்படும்போது, இத்திரட்டியின் திறமும் கூடும்.

இத்திரட்டிகளின் முகப்பில் இடப்பக்கத்தில் உள்ள view/edit pipe இணைப்பைப் பின்பற்றி இத்திரட்டியை படியெடுத்து நாம் விரும்பும் வண்ணம் ஓடை முகவரிகளை மாற்றி சேமித்துக் கொள்ள முடியும்.

tamilblogs-yahoopipes.JPG

Yahoo! Pipes தளத்தில் சற்று நேரம் விளையாடிப் பார்த்தால் அதன் சாத்தியங்கள் புலப்படும். ஏதேனும் உதவி தேவையென்றால் மறுமொழியில் கேளுங்கள்.

வலை 1.0, வலை 2. 0 என்றால் என்ன என்று இங்கு விளக்கி இருப்பதைப் பார்க்கலாம். Yahoo! Pipes போன்றவைகளை வலை 3.0 என்று கருத இயலும். இந்த வலை 3.0 என்னவென்றால், இணையத்தளங்களை வெறும் காட்சிப்படுத்தலுக்கான தளங்களாகக் கருதாமல் அவற்றில் இருந்து வேண்டிய தரவுகளைப் பெற்று நிரலாக்கத்தின் மூலம் நம் விருப்பப்படி பார்க்க இயல்வதாகும். இதை வலை நிரலாக்கம் (web programing) என்கிறார்கள்.

இனி, கூகுள் மூலம் திரட்டி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தற்போது பலரும் அறிந்திருக்கும் மகளிர் சக்தி திரட்டி, கூகுள் மூலம் உருவாக்கப்பட்டது தான்.

1. Google Readerல் உங்கள் ஜிமெயில் கணக்கு விவரம் கொண்டு புகுபதியவும்.

2. உங்கள் விருப்பப் பதிவுகளின் முகவரியை Add Subscription என்ற பெட்டியில் ஒவ்வொன்றாக இட்டுச் சேர்த்துக் கொள்ளுங்கள். (திரைக்குறிப்பு a)

add-subscription.JPG

3. எடுத்துக்காட்டுக்கு, நீங்கள் குழந்தைகள் மட்டும் எழுதும் வலைப்பதிவுகளுக்கான திரட்டி உருவாக்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது, Manage Subscriptions (திரைக்குறிப்பு b) சென்று குழந்தைப் பதிவர்களின் பதிவுப் பெயர்களுக்கு அடுத்து இருக்கும் Add to folderஐத் தெரிவு செய்து New Folder->kids என்று பெயரிட்டுக் கொள்ளுங்கள். (திரைக்குறிப்பு c)

add-folder.JPG

4. அதே பக்கத்தின் மேலே Tags என்று இருக்கும் இணைப்பைச் சொடுக்கிச் சென்று kids என்ற குறிச்சொல்லை privateல் இருந்து publicஆக மாற்றுங்கள் (திரைக்குறிப்பு d).

make-public.JPG

5. இப்போது, Add a clip to your site என்ற இணைப்பு வரும். அதைப் பின்பற்றி குழந்தைகளின் பதிவுகளை மட்டும் திரட்டும் திரட்டியை உங்கள் பதிவின் பக்கப்பட்டையில் இட முடியும் (திரைக்குறிப்பு e).

add-clip.JPG

6. அதே பக்கத்தில் kidsகு அடுத்து View Public Page (திரைக்குறிப்பு f) என்று இருக்கும். அதைப் பார்வையிட்டால் உங்கள் kids திரட்டிக்கான ஓடை முகவரி (திரைக்குறிப்பு g) இருக்கும். அதைப் பெற்று உங்கள் நண்பர்களுக்குத் தரலாம்.

public-page-feed.JPG

இதே போல் உங்கள் பதிவுகள் அனைத்தையும் குறிச்சொல்லிட்டு ஒன்றிணைத்துப் பொது ஓடை உருவாக்கி நண்பர்களுக்குத் தரலாம்.

அவ்வளவு தான் திரட்டி நுட்பம் !

அருஞ்சொற்பொருள்

தன் விருப்பத் திரட்டி – Personalised aggregator

ஓடை – Feed

வலை சீர்தரம் – Web Standard

தரவு – Data

நிரலாக்கம் – Programing

புகுபதி – Login

ஒலிப்பதிவு இடுவது எப்படி?

உங்கள் குரலை மட்டும் பதிய:

1. Audacity, LAME MP3 encoder ஆகிய இரு மென்பொருளைப் பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.
2. Audacity மென்பொருளைக் கொண்டு ஒலிப்பதியுங்கள். பதிந்த பின், file->export as-> MP3 சென்று உங்கள் பதிவை MP3 கோப்பாக மாற்றிக் கொள்ளுங்கள்.
3. ijigg.com சென்று ஒரு பயனர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உங்கள் MP3 கோப்பைப் பதிவேற்றுங்கள். அங்கு கிடைக்கும் embed codeஐ உங்கள் பதிவில் படியெடுத்து ஒட்டுங்கள்.

உங்கள் நண்பருடனான இணைய வழி உரையாடலைப் பதிய:

1. Skype பயன்படுத்தி உரையாடுங்கள்.
2 Powergramo பயன்படுத்தி அந்த உரையாடலைப் பதியலாம். பின்னர் அந்தக் கோப்பை audacity கொண்டு தொகுத்து, mp3ஆக மாற்றி, ijiggல் பதிவேற்றிக் கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் ஒலிப்பதிவு நுட்பம்!

கணினியில் தமிழில் எழுதுவது எப்படி?

பார்க்க வேண்டிய பக்கங்கள்:

1. கணினியில் தமிழ் எழுத்துக்கள் தெரிய வைப்பது எப்படி?
2. தமிழில் எழுத மென்பொருள்கள்
3. கணிச்சுவடி
4. தமிழ்த் தட்டச்சுப் பயிற்சிப் பாடம்

நான் பரிந்துரைக்கும் முறை:

1. NHM writer பதிவிறக்கி, தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்துங்கள். NHM writer பயன்படுத்த NHM Writer Manual உதவும். வேறு எந்த விசைப்பலகை வடிவத்தையும் நான் பரிந்துரைப்பதில்லை. பார்க்க – சிறந்த தமிழ் விசைப்பலகை எது?

கீழே இருக்கிறது தான் தமிழ் 99 விசைப்பலகை அமைப்பு. படத்தை பெரிய அளவில் பார்க்க அதன் மேல் சொடுக்குங்கள்.

தமிழ்99 விசைப்பலகை

அம்மான்னு அடிக்க அ ம ம ஆ – னு வரிசையா இடைவெளி இல்லாம அழுத்தணும். சில எடுத்துக்காட்டுக்கள்:

அப்பா – அ ப ப ஆ
தம்பி – த ம ப இ
உனக்கு – உ ன க க உ
கட்டம் – க ட ட ம f
கோடு – க ஓ ட உ
தங்கம் – த ங க ம f
தத்தம் – த அ த த ம f

மேலே உள்ளத இரண்டு மணி நேரம் பயிற்சி செஞ்சாலே எந்த எழுத்து எங்க இருக்குன்னு மனசில பதிஞ்சிடும். பழகிட்டா, ஆங்கிலத்த விட வேகமா எழுத முடியும்.

தயவு செஞ்சு அம்மா என்று எழுத ammaa என்ற மாதிரி உள்ள தமிழ்த் தட்டச்சுக் கருவிகளைப் பயன்படுத்தாதீங்க. துவக்கத்துல, தமிழ் எழுதிப் பார்க்க அது உதவும். ஆனா, வேகமா, சோர்வு இல்லாம எழுத மேல் உள்ள தமிழ்99 முறை தான் உதவும். இது பலரும் பரிந்துரைக்கும் உண்மை.

லினக்சில் எப்படி தமிழ் எழுதறதுன்னு தெரியனும்னா கேளுங்க. தனியா விளக்குறேன். NHM Writer நிறுவ admin access கணினியில் இல்லாதவர்கள், firefoxல் தமிழ் விசை நீட்சியை சேர்த்துக் கொள்ளலாம்.