தற்குறிப்பு எழுதுவது எப்படி?

தற்குறிப்பு (Resume / CV / Bio-data ) எழுதுவது எப்படி?

* 2 பக்கங்களுக்கு மேல் வேண்டாம். குறிப்பிடுவதற்கு நிறைய இருந்தால் பின்னிண்ணைப்புப் பட்டியலாகத் தாருங்கள்.

* பக்கத்தின் தொடக்கத்தில் உங்கள் பெயர், தொலைப்பேசி, மின்மடல் விவரத்தைத் தாருங்கள்.

* அடுத்து உங்களைப் பரிந்துரைக்கும் முக்கியமான இருவரின் தொடர்பு விவரங்களைத் தாருங்கள்.

* கடைசி 5 ஆண்டுகள், அவற்றில் நீங்கள் முக்கியமாகச் சாதித்தவற்றை மட்டும் குறிப்பிட்டால் போதும். பால்வாடியில் வாங்கிய பரிசு முதற்கொண்டு வளவள என்று எழுத வேண்டாம்.

* ஒரே தற்குறிப்பை எல்லா நிறுவனங்களுக்கும் அனுப்பாதீர்கள்.

அடுத்த 5 ஆண்டுகளில் நீங்கள் செய்ய விரும்புவது என்ன? அதற்கு இந்த நிறுவனம் எப்படி பொருத்தமாக இருக்கும்? நிறுவனத்தின் பணிகளுக்கு நீங்கள் எப்படி சிறப்பாகப் பங்களிக்க முடியும்? எனக் குறிப்பிடுங்கள்.

* எல்லாரும் எழுதுவது போன்ற வழமையான தற்குறிப்புப் பாணிகளை மறந்து விடுங்கள். உங்களைச் சிறப்பாக எடுத்துக் காட்ட என்ன எழுதலாம், எப்படி எழுதலாம் என்று சிந்தியுங்கள். இதே போன்ற ஒரு தற்குறிப்பு உங்களிடம் வந்தால், அவரை நீங்கள் வேலைக்கு எடுப்பீர்களா?

* உண்மையை மட்டும் எழுதுங்கள். பொய் சொன்னால், நேர்முகத் தேர்வின் போதோ வேலையில் சேர்ந்த பிறகோ மிக இலகுவாக கண்டுபிடித்துவிடுவார்கள்.

* நட்பான, நேர்த்தியான தோற்றம் உள்ள உங்கள் ஒளிப்படம் ஒன்றைச் சேர்க்கலாம்.

* “MS Office தெரியும், English தெரியும், நடக்கத் தெரியும்.. ” போன்ற அடிப்படைத் திறன்களைக் குறிப்பிடாதீர்கள். உங்கள் முந்தைய வேலைகளை வைத்தே உங்களுக்கு என்னென்ன தெரியும் என்று நல்ல நிறுவனங்கள் கண்டு கொள்ளும். நீங்கள் சரியான அணுகுமுறை உள்ள ஆளாக இருந்தால், தேவையான திறன்களைப் பயிற்றுவிக்கவும் தயங்க மாட்டார்கள்.

* அடிப்படையான தற்குறிப்பை எழுதிய பிறகு உங்கள் நண்பர்களிடம் கருத்து கேளுங்கள். எழுத்து, இலக்கணம், தகவலில் பிழை என்பதை உறுதி செய்யுங்கள்.

தற்குறிப்புகளை மட்டும் அனுப்பி வைத்து விட்டு, வேலை உங்களைத் தேடி வரும் என்று கனவு காணாதீர்கள். மிகவும் நல்ல வேலைகள் விளம்பரப்படுத்தப்படாமலேயே நிரப்பப்படுகின்றன. மிகவும் திறமையானவர்கள் எந்தத் தற்குறிப்பும் தராமலேயே புதிய பணிகளில் சேர்கிறார்கள். உங்கள் துறை சார் அறிவையும் தொடர்புகளையும் பெருக்கி ஏதாவது சாதிக்க முனையுங்கள். நிறைய வேலைகள் தேடி வரும்.


Comments

One response to “தற்குறிப்பு எழுதுவது எப்படி?”

  1. மகுடம் மோகன் Avatar
    மகுடம் மோகன்

    வணக்கம் ரவி தங்களின் இந்த தளத்தை கண்டு மிக்க மகிழ்ச்சி,தமிழில் தரும் தங்களின் முயற்சிக்கும் ஆர்வத்திற்கும் எனது வாழ்த்துக்கள்,புதிய தலைமுறை பத்திரிக்கை வாயிலாக உங்களின் இந்த தளத்தை அறிந்தேன்,
    தற்குறிப்பு பற்றிய தங்களின் இந்த பதிவு பலருக்கும் பயன்தரும் என நம்புகிறேன் ,தொடர்ந்து பல நல்ல கட்டுரைகளை தர வேண்டுகிறேன்,

    அன்புடன்,மகுடம் மோகன்.