திரும்பத் திரும்ப பார்க்கும் திரைப்படங்கள்

சின்னப் வயசுல விரும்பினாலும் விரும்பாட்டியும் விதி, சம்சாரம் அது மின்சாரம் பட கதைவசன ஒலிநாடாக்கள் வீட்டிலோ பக்கத்து வீட்டிலோ ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும்..

நிறைய படங்கள் நல்லா இருந்தாலும் சில படங்கள் தான் அலுக்காம திரும்பத் திரும்ப அலுக்காம பார்க்க முடியுது.. வளந்த வயசுல ரஜினி படங்கள் அப்படி அலுக்காமல் பார்த்தது.. சன் தொலைக்காட்சி புண்ணியத்தில் பாட்ஷா படத்த நிறைய தடவை பார்த்திருக்கேன். கில்லி, பிதாமகன், காக்க காக்க இதெல்லாம் திரையரங்கிலயே மூணு முறைக்கு மேல பார்த்தது.

தமிழ்ப்படம் எல்லாம் மண்டை காஞ்சு இந்தி, தெலுங்கு-ன்னு போக ஆரம்பிச்சப்ப சில அருமையான மசாலா படங்கள் கிடைச்சுச்சு..

பொம்மரில்லு – ஜெனிலியா, பாடல்கள், பாசம், இளமை, திரைக்கதைக்காக இந்தப் படம் என் திரைல ஓடுது, ஓடுது, ஓடிக்கிட்ட்ட்டே இருக்கு..! தமிழ்ல சந்தோஷ் சுப்ரமணியம் என்ற பேர்ல வந்திருக்கு. தெலுங்குப் படத்தைப் பார்த்த பிறகு தமிழ்ப் படத்தைப் பத்து நிமிடம் கூடப் பார்க்க முடியல.

அத்தடு – தெலுங்குப் படம் – இதப் பார்த்த அன்னியில இருந்து மகேஷ் பாபு ரசிகர் ஆகியாச்சு..தமிழ்நாட்டு நாயகர்கள்ட்ட கூட வராத ஏதோ ஒரு ஈர்ப்பு இவர் கிட்ட இருக்கு.. இது வரைக்கும் 20 தடவைக்கு மேல பார்த்திருப்பேன்.. இந்த படத்துல தனிச்சு சொல்லன்னு இல்லாம மொத்தமாவே ரொம்ப பிடிச்ச மசாலா படம். தமிழ்ல நந்துஎன்கிற பேர்ல வந்திருக்கு.

தூம் – 2 – அண்மையில் தமிழ் மொழிமாற்றப் படம் பார்க்கப் போய் செம சிரிப்பு. இந்தியில பார்த்தாலும் சிரிப்பு தான்னாலும் தமிழாக்கம் கலக்கல்.

Children of heaven – இரானியப் படம் – இது நான் மட்டும் இல்ல உலகம் முழுக்க உள்ள திரைப்பட ஆர்வலர்கள் விரும்பிப் பார்த்துக்கிட்டே இருக்க படம். இந்தப் படம் பிடிக்காட்டி அவன் மனுசனே இல்ல.. இது வரை பார்த்திருக்காட்டி அவன் திரைப்பட ரசிகனே இல்ல.. அலி, சாரா பாசக் கதைய பார்த்துக்கிட்டே இருக்கலாம். மனம் சோர்வா இருக்கப்ப அந்த வெள்ளந்தி முகங்களைப் பார்த்தா நூறு சாமியப் பார்த்த மாதிரி.. கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.. இது வரைக்கும் ஒரு 25 தடவை பார்த்திருப்பேன்.. ஊர்ல ஆங்கிலமும் தெரியாத இரானிய மொழியும் தெரியாத தங்கைகளுக்கும் இந்தப் படத்தை புரிந்து விரும்பிப் பார்க்க முடிந்தது.. அப்ப இதோட மொழி என்ன? காட்சி மொழியில் ஒரு அருமையான திரைப்படம்.. படத்த பார்த்தா தான் புரியும்.. போக்கிரி விஜய் குடலை உருவி மாலை போடுறத எல்லாம் சோளப் பொறி சாப்பிட்டுக்கிட்டே பார்க்கிற ஆட்கள் கூட இந்தப் படம் பார்க்கும்போது அலி, சாராவின் சின்ன வலிகளுக்காக மனம் பதறுவாங்க.. அது.. படம் !

சச்சின் – 2005ல விடாம வீட்டுல dvdல ஓடுன படம். இந்தப் படம் திரையரங்குல ஏன் ஓடலன்னு இன்னி வரைக்கும் எனக்கு புரில.. இத நான் போட்டுக் காமிச்ச எல்லாருக்கும் பிடிச்சிருக்கு.. இந்தோனேசியா நாட்டு நண்பன் கூட ரசிச்சுப் பார்த்தான்.. tamitorrents தளத்துல அதிகமா பதிவிறக்கப்பட்டிருக்கு.. இருந்தாலும் ஓடாதது விஜய்க்கு வருத்தமா தான் இருக்கணும்.. ஒன்னு இரண்டு நல்ல நேரடிப் படத்துல அவர் நடிக்கலாம்னு நினைச்சாலும் நம்மாளுங்க விட மாட்டாங்க போல.. இது குஷி படம் மாதிரி மேம்போக்கா பலர் சொன்னாலும் அத விட பல மடங்கு என்ன ரசிக்க வைச்ச படம் இது. 30 தடவையாச்சும் பார்த்திருப்பேன்.. ஜெனிலியா, விஜய் இரண்டு பேர் பாத்திரப் படைப்பு, இசை, வடிவேல் நகைச்சுவை, ஒளிப்பதிவு எல்லாம் ரொம்பப் பிடிச்சது. மனசை லேசாக்கிற படம்.


Comments

2 responses to “திரும்பத் திரும்ப பார்க்கும் திரைப்படங்கள்”

  1. […] நான் திரும்பத் திரும்பப் பார்க்கும் திரைப்படங்கள் குறித்து அறிய பொம்மரில்லு, அத்தடு, சச்சின், தூம் -2, child…பாருங்கள். […]

  2. //இந்தப் படம் திரையரங்குல ஏன் ஓடலன்னு இன்னி வரைக்கும் எனக்கு புரில.. //

    உண்மைதான்.. இதை விட மோசமான விசய் படங்கள் கூட ஓடியுள்ளன