வலைப்பூவா வலைப்பதிவா ?

வலைப்பூ, வலைப்பதிவு – இரண்டுமே blog என்பதற்கு ஈடான சொற்களாகப் புழங்குகின்றன. எது நல்ல சொல்?

இந்த இரண்டு சொற்களின் இளகுத் தன்மையையும் பார்ப்போம்.

வலைப்பதிவு

weblog – வலைப்பதிவு

blogger – வலைப்பதிவர்

blogging – வலைப்பதிதல்

blog (வினை) – வலைப்பதி.

blogger circle – பதிவர் வட்டம்.

blog world / blogdom – பதிவுலகம்

videoblog – நிகழ்படப்பதிவு / ஒளிதப் பதிவு

audioblog – ஒலிதப்பதிவு.

வலைப்பூ

weblog – வலைப்பூ

blogger – வலைப்பூக்காரர் ?? 😉

blogging – வலைப்பூத்தல் ?? 😉

blog (வினை) – வலைப்பூ பூ?? 😉

blogger circle – பூ வட்டம்?? 😉

blog world / blogdom – பூவுலகம் ?? பூந்தோட்டம் ??

videoblog – படப்பூ ?? 😉

audioblog – ஒலிப்பூ ?? 😉

புதுச் சொற்களை உருவாக்கும்போது வேர்ச்சொற்களிலிருந்தும் வினை சார்ந்தும் ஒரு சொல்லில் இருந்து பல சொற்கள் கிளைத்து வருவது போலவும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாகவும் தனிச்சொல்லாக இல்லாமல் சொற் தொகுதியாகவும் (word ecosystem) இருக்க வேண்டும் என்று மொழி அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.

வலைப்பூ என்ற சொல்லில் உள்ள பெரிய குறை, வலை என்கிற முன்னொட்டை விட்டு விட்டு அதனால் செயல்பட முடியாது. தனித்து, பூ என்ற சொல்லை மட்டும் வைத்து சுருக்கமாக இந்த நுட்பம் குறித்து பேச முடியாது. வலைப்பூ என்பது தமிழ்மணம், தேன்கூடு என்று பூ சார்ந்த பெயர்களில் தளப்பெயர்கள் அமையத் தான் வழி வகுக்குமே தவிர வலைப்பதிவு நுட்பத்தை விவாதிக்க உதவாது.

வலைப்பதிவு என்பது வலுவான சொல்லாகத் தெரிகிறது.


Comments

26 responses to “வலைப்பூவா வலைப்பதிவா ?”

 1. சயந்தன் Avatar
  சயந்தன்

  நானொரு வலைப் பூக்காரர். வந்து நாலு முழத்தில வலைப் பூ வாங்கிப் போக முடியுமா..;)

  நான் வலைப்பதிய ஆரம்பித்த காலங்களில் வலைப்பூ என்றுதான் சொன்னார்கள். ஆனால் இயல்பாகவே அது வலைப்பதிவாகி விட்டது போலத்தான் தெரிகிறது. உங்களுக்கு தெரியுமா..? ஈழத்தவர் மத்தியில் இதனை ஆரம்பத்தில் குடில் என்று எழுதினோம். வெறும் குடில்.
  Blog – குடில்
  weblog – வலைக்குடில்
  blogging – குடிலல்
  blog (வினை) – குடில் குடிபுகு
  audioblog – ஒலிக்குடில் (ஓலைக் குடில் அல்ல)

 2. வசந்தன்(Vasanthan) Avatar
  வசந்தன்(Vasanthan)

  //வலைப்பூ என்பது தமிழ்மணம், தேன்கூடு என்று பூ சார்ந்த பெயர்களில் தளப்பெயர்கள் அமையத் தான் வழி வகுக்குமே தவிர வலைப்பதிவு நுட்பத்தை விவாதிக்க உதவாது என்று நினைக்கிறேன்.//

  நல்லாயிருக்கு இந்த வசனம்.

 3. குமரன் (Kumaran) Avatar
  குமரன் (Kumaran)

  இரவிசங்கர் (இப்படி உங்கள் பெயரின் முன் இ சேர்த்து விளிப்பதைத் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்).

  நான் வலைப்பதிய வந்த போது (அக்டோபர் 2005) பலரும் ப்ளாக்கை வலைப்பூ என்றே சொன்னார்கள் நானும் அப்படியே சொன்னேன். போஸ்டிங்கை பதிவு என்று சொன்னார்கள்; சொன்னேன். ஆனால் நீங்கள் சொன்ன குழப்பமும் வந்தது. தமிழ்மணம் புதிய வடிவில் போன வருட பொங்கலின் போது வந்த போது அதில் ப்ளாக் என்பதற்கு வலைப்பதிவு என்றும் போஸ்டிங்க் என்பதற்கு இடுகை என்றும் குறித்தார்கள். அதுவே இப்போது பைய பைய என் பாவனையில் வந்துகொண்டு இருக்கிறது. இன்னும் முழுமையாக வரவில்லை. இன்னும் அவ்வப்போது வலைப்பூ என்று சொல்கிறேன்.

 4. videoblog – ஒளியப் பதிவு?

  audioblog – ஒலியப்பதிவு?

  ‘தம்’ விகுதி (ஒலிதம், ஒளிதம்) ஒலிக்கும், ஒளிரும் பண்பினை, திறனைச் சுட்டச் சிறப்பானதாகவிருக்கும்.
  ‘அம்’ விகுதி (ஒலியம், ஒளியம்) ஒலிக்கும், ஒளிரும் செயற்பாட்டிலே பயன்படும் கருவிகளின் பொதுமைப்பெயர்களுக்குப் பயன்படலாம்.

 5. ☆ சிந்தாநதி Avatar
  ☆ சிந்தாநதி

  ஆரம்பத்தில் நிறைய பேர் வலைப்பூ என்றே பயன்படுத்தி வந்தாலும் நீங்கள் கூறியுள்ளபடி பொருள் பொருத்தம் கருதியோ என்னவோ காலப்போக்கில் வலைப்பதிவு என்பதே நிலைத்து விட்டது. இன்று வலைப்பதிவு என்றால் (web)blog என்று இணையத்தமிழ் உலகம் ஏற்றுக் கொண்டு விட்டது

 6. மாஹிர் Avatar
  மாஹிர்

  ஆரம்பத்தில் வலைப்பூவின் தாக்கம்-வளர்ச்சி எப்படி இருக்கும் என்று கணித்திருப்பார்கள் நம்மவர்கள் அதனால் வலைப்பூ என்று வைத்திருப்பார்கள்.

  வலைப் “பூ” தான்தோன்றித்தனமாக நிறைய பேருக்கு காதில் பூ சுத்துவதால் கூட இருக்கலாம்.

 7. பகீ Avatar
  பகீ

  ada ippidi ellam yosikkireenga…..

 8. பொன்ஸ் Avatar
  பொன்ஸ்

  மத்ததெல்லாம் விட்டுடறேன்.. பூவட்டம் ரொம்ப நல்லா இருக்கு.. அப்படியே பயன் படுத்திக்கலாமே? :)))

  சயந்தனின் வலை குடில் போல, வலை மனை, என்ற சொல்லையும் பயன்படுத்திக் கேள்விப்பட்டதுண்டு.

  பொதுவாகவே தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் இருப்பது வழக்கம் தானே.. அது மாதிரி வலைப்பூவும் வலைப்பதிவும், இரண்டும் இருக்கலாகாதா? பெயர்ச்சொல்லாகவேனும்?

 9. யோகன் பாரிஸ்(Johan-Paris) Avatar
  யோகன் பாரிஸ்(Johan-Paris)

  ரவிசங்கர்!
  நீங்க எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்த பின் சொல்லுங்க அதை நான் பின்பற்றுகிறேன்.

 10. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  சயந்தன் –
  //நானொரு வலைப் பூக்காரர். வந்து நாலு முழத்தில வலைப் பூ வாங்கிப் போக முடியுமா..;)//

  😉

  தhomepage = வலைமனை என்ற வகையில் blog = குடில் என்றார்கள் போல். ஆனால் home = மனை என்பது போல் blog = குடில் என்பது ஒத்துப் போவதில்லை. நேரடி மொழிபெயர்ப்பு பல இடங்களில் கோமாளித் தனமாகப் போனாலும், blog = பதிவு என்பது பொருத்தமாக இருக்கிறது. குடில் குடிபுகு என்பதெல்லாம் மிகையாக ஒரு சொல்லை நீட்டிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது. ஆனால், இந்த குடில் சொல் இப்பொழுது வழக்கொழிந்து விட்டதால், விட்டு விடுவோம்.

  வசந்தன் – 😉 வலைப்பூ என்ற சொல்லை பயன்படுத்தினால், வலைப்பூவில் மட்டுறுத்துனராக (moderator) இருப்பவரை பூந்தோடக் காவல்காரன் என்று சொல்வதில் போய்த் தான் முடியும் 😉 விஜயகாந்த் ரசிகர்கள் மட்டும் மகிழலலாம்.

  குமரன் – இரவிசங்கர் என்று சொன்னால் என்ன பிழை? என் அலுவல்சார் கையெழுத்தே தமிழில் அ. இரவிசங்கர் என்று தான் இடுகிறேன். நீங்கள் அழைத்ததில் மகிழ்ச்சியே. ஆமா, முன்னர் வலைப்பதிவுக் கலைச்சொற்களில் குழப்பம் இருந்தது. தமிழ்மணப் புதுப்பதிப்புக்குப் பின் நல்ல சொற்கள் வந்துள்ளன. இதில் இடுகை எனக்கு மிகவும் பிடித்த சொல். இல்லாவிட்டால், எல்லாவற்றுக்கும் பதிவு பதிவு என்று குழப்பி அணித்துக் கொண்டிருக்க வேண்டும். தமிழ்மணம் குழுவில் யாரோ ஒரு நல்ல தமிழாசான் இருக்கிறார். பூங்கா இதழ் ஆசிரியர் பக்கம், தமிழ்மணம் அறிவிப்பு வலைப்பதிவில் தமிழ் விளையாடுகிறது 🙂 தமிழ்மணம், தேன்கூட்டுப் பெயர்க்காரணங்கள் உள்ளங்களை நெல்லிக் கனி போல் தெளிவாக இருக்கும் ஒன்று. ஆனால், சின்ன விசயங்களை நாம் யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை தானே? காசி தமிழ்மணத்துக்கு முதலில் வைத்த நந்தவனம் என்று இருப்பதை கவனியுங்கள். கலைச்சொற்களில் ஒன்றுக்கு ஒன்று கிளைத்து வரும் சொற்களை வைப்பது நன்று. அழகான பெயர்கள் வைத்து விளையாடுவது வீட்டுக்கு வண்ணமடிப்பது போல் நன்றாக இருக்கலாம். ஆனால், மொழி உறுதியாக இருக்க வேண்டும் என்றால் நுட்பம் சார்ந்த சொற்களாகத் தான் பயன்படுத்த வேண்டும். தமிழ்மணம், தேன்கூடு போன்ற பெயர்கள் தளப் பெயர்களை வாசகர் மனதில் பதியவைக்க உதவும். ஆனால், வலைப்பதிவுகள் குறித்து தமிழில் கட்டுரை எழுத வேண்டி வந்தால் வலைப்பூ என்னும் சொல் நொண்டி அடிக்கும்.

  anonymous – இணைப்புகளுக்கு நன்றி. 2003 வாக்கில் வந்த அந்த பதிவை முன்னரே வாசித்திருக்கிறேன்.

  vikram – ஒளிதம், ஒலிதம் ஆகியவை விக்சனரியில் அண்மையில் ஒருவர் பரிந்துரைத்த சொற்கள். நன்றாக இருந்ததால் இங்கு பயன்படுத்தினேன். ஒளியம், ஒளியம் ஆகியவையும் நன்றாக இருக்கிறது. இந்த -தம், -அம் இரண்டு விகுதிகளில் வேறுபாடு குறித்து எனக்கு நுணுக்கமாகத் தெரியவில்லை. அறிந்தவர் சிறப்பை விளக்கலாம். நீங்களும் விக்சனரிக்கு வந்து உரையாடலாமே.

  சிந்தாநதி – ஆமா, வலைப்பதிவு என்னும் சொல் தான் நிலைத்து வருகிறது. இருந்தாலும், வலைப்பூ என்று சிலராவது சொல்கிறார்கள். அந்த சொல்லின் போதாமை குறித்து விளக்கத் தான் இந்தப் பதிவு.

  மாஹிர் –
  //வலைப் “பூ” தான்தோன்றித்தனமாக நிறைய பேருக்கு காதில் பூ சுத்துவதால் கூட இருக்கலாம்.//

  🙂

  பகீ – 😉

  பொன்ஸ் – மேலே பின்னூட்டில் நான் சொல்லி உள்ள கருத்துக்களை எல்லாம் படித்தால் வலைப்பூ என்ற சொல்லை புறந்த தள்ள வேண்டி இருப்பதை அறியலாம். தமிழில் ஒத்த சொற்களே இல்லை என்று சிலர் சொல்வர். மயூரன் இது குறித்து தனி இடுகையே இட்டுள்ளார். பார்க்கவும் –

  http://mauran.blogspot.com/2005/08/blog-post_112471479401844230.html

  பூவை பூ என்று சொன்னாலும் மலர் என்று சொன்னாலும் காம்பு, மொட்டு, இதழ் என்ற தொடர்புடைய சொற்கள் தடையின்றி இருக்கின்றன. ஆனால், blog என்ற மூலச் சொல்லுக்கு வலைப்பூ என்று சொல்லி விட்டால் அதற்கு அடுத்து அது தொடர்புடைய சொற்களுக்கு தோரணம், நார், மாலை, கொத்து, செண்டு என்று சொல்வதில் போய்த் தான் முடியும். வலைப்பூ என்ற சொல்லை வைத்துக் கொண்டு அந்த நுட்பத்தை விளக்கும் கட்டுரையை தமிழில் எழுத முடியாது. ஆனால், வலைப்பதிவு என்னும் சொல்லால் முடியும். பார்க்க – தமிழ் விக்கிபீடியா கட்டுரை –

  http://ta.wikipedia.org/wiki/வலைப்பதிவு

  யோஹன் – இதில் முடிவெடுக்க எல்லாம் ஒன்றும் இல்லை. முடிவெடுக்க நாம் ஆளும் இல்லை. தகுந்த, வலிமை உடைய சொல் நிலைக்கும். அவ்வளவு தான். மேலே உள்ள வாதங்களை படித்துப் பார்த்து என்ன சொல் சிறப்பு என்று நீங்களே முடிவு செய்து கொள்ளும்.

 11. தமிழ்மணம், தேன்கூடு என்பவற்றின் பெயரிடுதல்கள் எதேச்சை. அவற்றுக்கும் வலைப்பூ என்ற சொல்லுக்கும் சம்பந்தமில்லை.
  இரவிசங்கர் அழைப்புக்கு நன்றி. உங்களின் சொல்லாக்கும் குழுமத்திலே அது ஏற்கனவே இருக்கின்றேன்.

 12. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  விக்ரம், தமிழ்மணம், நந்தவனம், தேன்கூடு பெயர்களுக்கும் பூக்களுக்கும் இருக்கும் தொடர்பு தற்செயலாக இருக்க வாய்ப்பில்லை. குறைந்தபட்சம், subconscious பெயர்க்காரணமாக இருக்க வேண்டும்.

  ஏற்கனவே விக்சனரி குழுமத்தில் இருக்கீங்களா? அங்க vikram.laxmiனு பார்த்த நினைவு..சரி, இந்த அழைப்ப திரும்ப ஏற்று அங்க வந்து உரையாடுங்களேன்..கொஞ்ச நாளா குழுமம் உறங்கிக் கிடக்கு 🙁 அப்புறம், அது என் குழுமம் இல்லீங்க..நம்ம குழுமம் 🙂

 13. மயூரேசன் Avatar
  மயூரேசன்

  பொதுவாக இப்போது வலைப்பதிவு என்பதே பாவனையில் உள்ளதாலும் அந்த சொல்லின் சிறப்புத் தன்மை காரணமாகவும் அதில் நிற்பது தகும் என்பதே என் கருத்து.

 14. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  வருகைக்கு நன்றி மயூரேசன். சொல்ல மறந்த ஒன்று – பூங்கா இதழின் பெயருக்கும் வலைப்பூவுக்கும் உள்ள தொடர்பு 🙂 இவை எல்லாம் எதேச்சையாக இருக்க வாய்ப்பில்லை தானே? ஒரு கலைச்சொல் கற்பனைகளை எப்படி வழிப்படுத்துகிறது என்பதற்கு வலைப்பூ நல்ல ஒரு எடுத்துக்காட்டு

 15. இலவசக்கொத்தனார் Avatar
  இலவசக்கொத்தனார்

  சரிங்க. இனி வலைப்பத்வு, இடுகை என்ற சொற்களையே பயன்படுத்துகிறேன். நன்றி.

 16. Anonymous Avatar
  Anonymous

  பூங்கா இதழின் பெயருக்கும் வலைப்பூவுக்கும் உள்ள தொடர்பு
  😉

  is it so? interesting, fascinating & intriguing. Is this a hypothesis or a deduction? 🙂

 17. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  இலவசக்கொத்தனார் – 🙂

  anonymous – இதுல hypothesis, deduction ஒன்னும் இல்ல. blog-blogger-blogspot-bloglines இதுக்கு என்ன தொடர்போ அந்தத் தொடர்பு தான்

  பூ – மணம் – தமிழ்மணம்

  பூ – தேன் – தேன்கூடு

  பூ – பூங்கா – நந்தவனம்

  ஆகியவற்றுக்கும் உள்ள தொடர்பு. இதுல நல்லது கெட்டதுன்னு சொல்ல ஒன்னுமில்ல. எப்படி ஒரு சொல் பிற சொற்களுக்கு கற்பனைகளுக்கு காரணமாக இருக்குன்னு எடுத்துக்காட்ட முயன்றேன். அவ்வளவுதான். இப்படி தொடர்பை நினைத்து மெனக்கெட்டு பெயரிடப்படிருக்காவிட்டாலும் இந்தத் தொடர்பு இருப்பது சுவாரசியம் தானே? மத்தபடி இந்தப் பெயர்கள் தமிழ் மரபுக்கு ஏற்ற மாதிரி சுவையாகவும் இருக்கு. பதிவுலகம்னு திரட்டிக்கு பேர் வைச்சிருந்தா அவ்வளவு சுவராசியமாகவும் இருந்திருக்காது தான்..

 18. Anonymous Avatar
  Anonymous

  I totally understand the feeble relationship existing among these terms.

  I do not want to discuss further given this is a minor issue beyond a trivial naming issue.

  However since I have long watched the net for how such poetic assumptions and coutecious compliments turned into facts for the future, I have to point it out here.

  1. Naming poongaa has something to do with thamizmaNam, but NOT with valaippoo

  2. I have seen few feedbacks are suggesting that valaipoo was suggested in the beginning and then the other terms got coined. Can any of these people give a reference rather than stating it was the one term used in the first place.

 19. Kasi Arumugam Avatar
  Kasi Arumugam

  //பூ – மணம் – தமிழ்மணம்

  பூ – தேன் – தேன்கூடு

  பூ – பூங்கா – நந்தவனம்//

  தமிழ்மணம், நந்தவனம் என்ற பெயர்கள் வலையில் வரக்காரணமானவன் என்ற வகையில் சொல்வதானால், ரவிசங்கர் சொல்வது சரியே :-))

  தேன்கூடு, பூங்கா பற்றி நான் சொல்லமுடியாது. ரவிசங்கர் சொல்வதே என் யூகமும்.

  -காசி

 20. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  anonymous –

  1. தமிழ்மணம் கமழும் பூங்கா என்று நினைத்துப் பெயர் வைத்தார்களோ என்னவோ? ஆனால், தமிழ்மணம் என்ற பெயருக்கு காரணம் வலைப்பூ என்ற பெயர் தான் என்று காசி விளக்கி இருக்கிறார். எனவே, பூங்கா என்ற பெயரை இடத் தூண்டிய மூலச் சொல்லாக வலைப்பூவை கருதலாம் தானே?

  2. 2003 முதல் தான் தமிழில் வலைப்பதிவுகள் எழுதப்பட்டது குறித்த குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. அவை அனைத்தும் பெரும்பாலும் வலைப்பூ என்று தான் குறிப்பிடுகின்றன. தமிழ் வலைப்பதிவுகளை தொகுத்து வழங்கி வந்த மதி கந்தசாமி அவர் பதிவை வலைப்பூ என்று குறிப்பிட்டது கூட இந்த பெயர் பரவலாக காரணமாக இருக்கலாம். அதே வேளை ஈழத் தமிழர்கள் குடில் என்றும் அழைத்து வந்தனர். என்ன காரணத்தாலோ அந்தப் பெயர் நிலைக்க வில்லை. தமிழ்மணத்தின் வரவுக்குப் பின் தான் தமிழ் வலைப்பதிவுக் கலைச்சொற்களில் ஒரு ஒழுங்கு வந்தது என்று நினைக்கிறேன். அதன் வரவுக்குப் பின்னரே வலைப்பதிவு என்ற பெயரும் நிலைத்திருக்க வேண்டும்.

  நீங்கள் பெயரை வெளி இட்டும் தமிழிலும் எழுதலாம் என்பது என் வேண்டுகோள்.

  காசி – நீங்களே வந்து விளக்கியது நல்லதா போச்சு 🙂

 21. Anonymous Avatar
  Anonymous

  கீமேன் அவ்வப்போது காலை வாரிவிட்டால், கணிணியை மீண்டும் உயிர்ப்பிக்காமால் தமிழிலே எழுத முடிவதில்லை. உங்கள் இரண்டு வாதங்களும் எதிர்பார்த்தவையே. காசி வந்து விளக்கியது வலைப்பூ, தமிழ்மணம் என்பன குறித்தேயென்பதைக் கவனியுங்கள் 😉

  1. நீங்கள் சொல்லும் வகையிலே சரியாகவிருக்கலாம். ஆனால், பூங்கா என்ற பெயர் உருவாகும்போது வலைப்பூ என்ற பெயர் எவ்விதத்திலும் சிந்தையிலே வரவில்லை என்பதுதான் உண்மை

  2. வலைப்பூவினை உருவாக்கியவர் சொந்தமான தன் முதற்பதிவினையிட்ட நாளினையும் வலைப்பதிவு என்ற பெயர் முன்னிடப்பட்ட நாளினையும் ஒரு முறை ஒத்துப்பாருங்கள்.

  யாரென ஊகிக்க முடிந்தாலுங்கூட, பெயர் அவசியமில்லையென்று கருதுகிறேன். உங்களுக்குத் தனியஞ்சல் யேரென்று கூறி யாராவது அனுப்பாமலா இருக்கப்போகிறார்கள் ? 😉 பெயரிலாமல் எழுதுவதிலேயே என்னால் அடாவடித்தனங்கள் செய்யமுடிகின்றது 🙂 அதனால், நீங்கள் இப்பின்னூட்டத்தினை அனுமதிப்பினும் சம்மதமே, அனுமதிக்காவிட்டாலும் சம்மதமே. இது தம்படிக்கும் பயனில்லாத வாதமும் ஆதாரங்களும். முக்கியமானவை இவையல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

  கணிச்சொல்லாக்கம் என்ற இணையக்குடிசைக்கைத்தொழில் வலைப்பதிவுக்காலத்துக்கும் முற்பட்டதெனினுங்கூட, தமிழ்மணத்தின் வரவுக்குப் பின் தான் தமிழ் வலைப்பதிவுக் கலைச்சொற்களில் ஓர் ஒழுங்கு வந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

 22. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  anonymous – தமிழில் எழுதியதற்கு நன்றி.

  1. இதனால் தான் இந்த பெயர் வந்தது என்று நிறுவும் எந்த முயற்சியும் எனக்கில்லை. இப்படி இருக்குமோ என்ற கருத்தையே முன்வைத்தேன். நீங்கள் ஒரு வேளை பூங்கா இதழ் நிர்வாகத்தில் தொடர்பிருந்து இக்கருத்தை தெரிவிக்கிறீர்கள் என்றால், உங்கள் மறுமொழியை ஏற்றுக் கொள்கிறேன்.

  2. சுற்றி வளைத்து சொல்லாமல் நீங்களே ஒப்பு நோக்கி இணைப்புகளை தந்திருந்தால் நன்றாக இருக்கும். உண்மையில் என் மேலோட்டமான மனதில் தோன்றிய எண்ணங்களை முன்வைத்தேனே தவிர இது குறித்து ஆராய்ச்சி எல்லாம் செய்ய வில்லை. உங்களுக்கு உறுதியான கலைச்சொல் வரலாற்றுத் தகவல் தெரிந்தால் தயவு செய்து தெரிவியுங்கள். இது போன்ற விசயங்களில் கூட ஆக்கப்பூர்வமாக ஆவணப்படுத்தி வைக்கும் பதிவாக இது இருக்கட்டும். நன்றி.

 23. 1. பூங்கா இதழ் நிர்வாகத்தில் எனக்கு எத்தொடர்புமில்லை

  2. இதிலே சுற்றி வளைத்தல் என்பதில்லை. வலைப்பூ வரலாறு அரசியலிலே அநாவசியத்துக்கு இழுபட விரும்பவில்லை. “நமது மூக்குக்குக் குத்து வந்தால், துரத்தித் துரத்திக் குத்து” என்பதே நம் வலைமொழி அவ்வளவே. 🙂 வரலாறு என்பதே என்னுரை, உன்னுரை, எம்முரை, உம்முரை என்பதாக நிகழ்வுகளைத் தொகுப்பதுதானே? வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.

  இதற்குப் பிறகொரு அறுதிப்பின்னூட்டம் வலைப்பூ வரலாறு அறிந்த அதிகாரத்தோடு வரும். அதுதான் உண்மை.

  எதற்கும் பெயரைச் சொல்லாமலே எழுதிவிட்டுப்போகிறான் என்றிருக்கக்கூடதல்லவா?

  -/இரமணிதரன், க.

 24. ஷங்கர் கணேஷ் Avatar
  ஷங்கர் கணேஷ்

  இவையெல்லாம் சரி, RSS Feed களைத் தமிழில் எப்படி அழைப்பீர்கள்? 🙂

 25. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  RSS feed = RSS ஓடை.

  .doc, என்பது போல் rss, atom என்பதெல்லாம் மொழிபெயர்க்கப்படக்கூடாத உலகளாவிய நுட்பப் பெயர்கள்.

  மற்றபடி feed = ஒடை, news feed = செய்தியோடை போன்ற சொற்கள் எல்லாம் புழக்கத்துக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சு