தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்களுக்கு பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன்?

தமிழ் இணையத் தன்னார்வலக் கூட்டு முயற்சித் திட்டங்களில் பங்களிப்புகள் குறைவாக இருப்பது ஏன்?

ஒவ்வொரு நாளும் திட்டத்தில் பங்கு கொண்டு ஒரு மணி நேரமாவது செலவிடுபவர்கள், அது குறித்த பெருமளவு சிந்தனைகளைச் சுமந்து திரியும் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கை ஒவ்வொரு திட்டத்திலும் விரல் விட்டு எண்ணத்தக்க அளவிலேயே இருக்கிறது.

எட்டு கோடித் தமிழர் இருக்கிற போது ஏன் இந்த ஒற்றைப் படை நிலை?

இந்தக் குறைவான எண்ணிக்கை தமிழ் இணையத் திட்டங்களுக்கு மட்டும் உள்ள நிலை இல்லை. மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால், சமூகத்தில் நிகழ்வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் பல கூட்டு முயற்சி, தன்னார்வல, இலாபநோக்கற்ற திட்டங்களுக்கும் கூட பங்களிப்பு குறைவே. நிகழ் உலகத்தில் பங்களிப்புக் குறைவுக்கு காரணமாக இருக்கும் பணமின்மை, நேரமின்மை, மனமின்மை, திறனின்மை போன்ற அத்தனைக் காரணங்களும் இணையத்துக்கும் பொருந்தும்.

எட்டு கோடித் தமிழரில் போர்ச் சூழலால் அல்லல்படும் பல இலட்சம் ஈழத் தமிழர்களை விடுவோம்.

அவர்களைத் தவிர்த்து, உணவு, உடை, உறைவிட, பிற இன்றியமையா வாழ்க்கைத் தேவைகள் முடிந்து,  நிம்மதியாக வாழும் தமிழர்கள் எத்தனை பேர்?

(இவர்களில் பாதி மக்கள் தொகையான பெண்கள் தொகையைக் கழித்து விடலாம். இது வரை இது போன்ற திட்டங்களில் முனைப்புடன் இயங்கும் பெண் பங்களிப்பாளரைக் கண்டதில்லை. அவர்களை அப்படி பங்களிக்க விடாத சமூகக் காரணிகள் எவ்வளவோ உள)

எஞ்சியவர்களில் முழு நேர கணினி, வேகமான அளவற்ற இணைய இணைப்பு உள்ளோர் எத்தனை பேர்? அலுவலகத்தில் நாள் முழுக்க கணினியைக் காண்பவர்கள் பலர் ஓய்வு நேரத்திலும் கணினி முன் அமர விரும்புவதில்லை. அதையும் பொருட்படுத்தாது வருபவர்களுக்கு, இணையத்தில் நுட்பத் தடையும் சேர்ந்து கொள்கிறது. எடுத்துக்காட்டுக்கு, விக்கிமீடியா திட்டங்களில் பங்களிக்க விரும்புபவர்களுக்கு மீடியாவிக்கி மென்பொருளைப் புரிந்து கொள்வதில் தொடக்கக் காலச் சிரமங்கள் இருக்கின்றன.

அவர்களில் கல்வி கற்ற தமிழார்வமுள்ளோர் எத்தனை? மேற்கண்ட வசதிகளைப் பெற்று இருந்தாலும் பொழுது போக்குக்காக அணுகுபவர்களும் பலர்.

அவர்களில் இத்திட்டங்களுக்குப் பங்களிக்கும் ஓய்வு நேரம், வயது, மனநிலை, வேகம், திறன் வாய்க்கப்பெற்றவர்கள் எத்தனை பேர்?

அப்படி பங்களிப்பவர்களுக்கு உதவியாகத் தமிழிணையத்தில் தமிழில் கிடைக்கும் தகவல் ஆதாரங்கள் எவ்வளவு?

… என்று யோசித்துக் கொண்டே போனால், இத்திட்டங்களுக்கு உள்ள பங்களிப்புக் குறைபாடுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ், தமிழிணையத் திட்டங்கள் வளர, தமிழ்ச் சமூகம் வளர வேண்டியது முதற் தேவையாக இருக்கிறது.

தமிழ்நாடு, ஈழத்தில் இருந்து வரும் பங்களிப்புகளை விட பிற மாநிலங்கள், நாடுகளில் நல்ல வாழ்க்கைச் சூழல், உறவுகள் / நட்புகள் குறுக்கிடா ஓய்வு நேரம் வாய்க்கப் பெற்றவர்கள் கூடுதல் பங்களிப்புகளை அளிப்பதைக் காணலாம்.

தொலைநோக்கின்மை

ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் குழந்தைகள் பசியால், ஊட்டக்குறைவால் இறக்கிறார்கள். ஆனால், ஆழ்துழாய்க் கிணறில் அகப்பட்ட ஒற்றைச் சிறுவனைத் தான் நாள் முழுதும் ஊடகங்கள் கவனிக்கின்றன. அரசுகளும் கவனிக்கின்றன. கண்ணுக்குத் தெரியாமலும் கொஞ்சம் கொஞ்சமாகவும் நிகழும்  பிரச்சினையானாலும் சரி பயனாலும் சரி அவை நம்மை ஈர்ப்பதில்லை.

அதே போல் இந்தத் திட்டங்களின் தொலைநோக்குத் தேவையை நாம் உணர்வதில்லை. இன்று இத்திட்டம் முழுமையடையாவிட்டால் பெரிய இழப்பு ஒன்றும் இல்லை என்ற எண்ணம் பலரை அதற்கானப் பங்களிப்பை ஒத்திப் போடச் செய்கிறது. “நாம் செய்யும் சிறு பங்களிப்பா பெரிய வேறுபாட்டை நல்கப் போகிறது” என்று எண்ணச் செய்கிறது.

நான்

“நான்” என்ற உணர்வு அனைவரிடமும் மேலோங்கி இருப்பதும் ஒரு முக்கியத் தடை. வெற்றிகரமான கூட்டு முயற்சித் திட்டங்களின் அடிப்படையே ஒருவரின் பங்களிப்பை இன்னொருவர் எந்த வகையிலும் மாற்றி அமைக்கலாம் எனபதும் அம்மாற்றங்கள் நன்னோக்கிலேயே இருக்கும் என்ற புரிதலும் எதிர்ப்பார்பும் தான். ஆனால், தான் தந்த ஒன்றை எப்படி மாற்றலாம், குறை கண்டுபிடிக்கலாம் என்று எண்ணுவோரும், எந்த விதத்திலும் தங்கள் பங்களிப்பு குறித்து உரையாடி மேம்படுத்திக் கொள்ள முனையாதோரும் உளர்.

மாற்றங்களை அனுமதிப்பவர்களும் தங்கள் பெயர் ஏதாவது ஒரு வகையில் பெரிதாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து பங்களிக்க வேண்டிய திட்டங்களில் இது சாத்தியமில்லை என்பது ஒவ்வொரு பங்களிப்பாளரும் தங்கள் உழைப்புக்கு ஏற்ற பாராட்டு கிடைக்காமல் போவதாக எண்ணலாம்.

தொல்லைத் தலைவர்

ஒரு திட்டத்தை முன்னின்று தொடங்கிச் செய்பவரோ, திட்டத்தில் முன்னணி பங்களிப்பாளராக இருக்கும் ஒருவரோ திட்டத்தைத் தன்னோடு தொடர்புப் படுத்தி ஒட்டு மொத்தப் பெயரையும் தட்டிச் செல்ல முனைவதும், ஊக்கமுடன் வரும் புதியவர்களைப் புறக்கணிப்பதும் உண்டு. மிகவும் முக்கியமான திட்டங்களில் இந்தச் செயற்பாடு இருந்தால், அது இன்னொரு புதிய திட்டத்துக்கு வித்திட்டு பங்களிப்பைச் சிதறச் செய்யும். முக்கியமில்லாத திட்டங்களில் மற்றவர்கள் பங்களிக்காமல் அமைதியாக இருந்து விடுவார்கள்.

திட்டத்தின் தனித்துவம், தேவை

இணையத்தில் ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியத்துக்கு இருந்த தேவை ஒரு அகரமுதலி, செய்திச் சேவைக்கு இருக்கவில்லை. அதன் காரணமாகவே உலக அளவிலேயே கூட விக்கிப்பீடியா வெற்றி பெற்ற அளவு அதன் மற்ற திட்டங்கள் வெற்றி பெறவில்லை. ஆக, ஒரு திட்டம் தனித்துவமானதும், உடனடித் தேவை மிக்கதாகவும், அத்தேவையைத் தீர்க்கப் புகுந்த முதல் திட்டமாகவும் இருத்தல் அவசியம்.

திட்டத்தின் அளிப்புரிமை

திட்டத்தின் அளிப்புரிமை விதிகளும் முக்கியமானவை. தன்னுடைய ஆக்கங்களை எந்தத் தடையுமின்றி பிறருக்கு நல்காமல் தன்னுடைய இருப்பைத் தக்க வைப்பதில் மட்டும் அது முனையுமானால், தங்களுடைய உழைப்பு, திறன், அறிவை எந்த ஊதியமும் இல்லாமல் நல்கக் கூடியவர்களை அத்திட்டத்தால் ஈர்த்துக் கொள்ள இயலாது.

திட்டத்தின் வணிகப் பெறுமதி

திறமூல, கட்டற்ற இயக்கங்கள் இலவசமாகவே கிடைக்கும் என்றாலும் அவை வணிக முயற்சிகளைப் பெரும்பாலும் தடை செய்வதில்லை. லினக்சு, வேர்ட்பிரெசு இலவசமாகக் கிடைத்தாலும் அவற்றைச் சுற்றி பணம் ஈட்டும் பெறும் வாய்ப்புகள் உள. இதுவரை தமிழில்அத்தகைய கணிமைத் திட்டங்கள் குறைவாகவே இருக்கின்றன. இருந்தாலும் பொருள் ஈட்டும் வாய்ப்பு  குறைவாகவே உள்ளது.

தமிழர் பண்பு

தமிழர்கள் ஒன்று கூடி எந்த ஒரு கூட்டு முயற்சியிலும் ஒத்துழைப்பது குறைவு என்றும் சிலர் கருதுகின்றனர். பார்க்க – தமிழ் இணையத்தில் கூட்டுச் செயற்பாடுகள்.

**

எல்லாம் அமைந்தும் இணையத் திட்டங்களுக்குப் பங்களிக்காதவர்கள் தன்னலக்காரர்களா?

எல்லாரையும் அப்படிச் சொல்ல இயலாது.

சிலருக்கு, உதவி செய்ய எல்லாம் அமைந்தும், பசி, பிணி, கல்வியின்மை என்று ஒவ்வொரு நாட்டிலும் உயிர் போகும் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருப்பதால் இதை விட முக்கியமானப் பிரச்சினைகளுக்கு தங்கள் உழைப்பைத் தந்திருக்கலாம்.

சரி, அப்ப இணையத் திட்டங்களுக்குப் பங்களிப்பவர்கள் பொதுநலக்காரர்களா?

அப்படியும் சொல்ல இயலாது 🙂 கொஞ்சம் பெரிய வட்டத்தில் தன்னலக்காரர்கள் என்று கொள்ளலாம். இத்திட்டங்களில் பங்களிப்பவர்களால் பொது நலன் இருந்தாலும் அதில் தன்னலமும் இருக்கிறது. என் வீடு, என் உறவு என்பதில் இருந்து என் மொழி, என் பண்பாடு, என் இனம் என்ற அடுத்த கட்ட தன்னலத்துக்கு நகர்கிறார்கள். அதன் அடுத்த கட்டமாக என் நாடு, என் உலகம் என்று நகரலாம். நானே தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கும் அளவுக்கு ஆங்கில விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பதில்லை.

பொது நலம் என்ற ஒரே காரணத்துக்காக நாம் இத்திட்டங்களில் ஈடுபடுவதில்லை. ஒரு பொது நலனுக்கு உதவுவதில் நம்முடைய தனிப்பட்ட நலனும் உள்ளடங்கி இருக்க வேண்டும். (நான் நேரம் ஒதுக்கி சில விக்கிப்பீடியா கட்டுரைகள் எழுதினால் எனக்குத் தேவைப்படும் கட்டுரைகளையும் யாராவது எழுதித் தருவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு உண்டு!!).

இன்னொன்று, இந்த பொதுத் திட்டங்களில் ஈடுபடுவது ஒரு வித விளையாட்டு, பொழுதுபோக்கு போன்று மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும் இருப்பதும் அத்திட்டத்தில் இருந்து ஒருவர் பெற்றுக் கொள்ளும் பயனே. இந்த மனமகிழ்ச்சி என்னும் தன்னலம் இல்லாமல் ஒருவர் இவற்றில் ஈடுபாடு காட்ட இயலாது. எனவே, ஒருவருக்கு அக்கறை இருந்தாலும், இந்த ஈடுபாட்டின் மூலம் அவருக்கு மகிழ்ச்சி வரவில்லை என்றால், அவரைக் குற்றம் சொல்ல இயலாது.

சரி, அப்ப இந்தத் திட்டங்களை வளர்ப்பது எப்படி?

ஆர்வம் உள்ள பங்களிப்பாளர்கள் அயராது அன்றாடமோ வாரம் சில மணி நேரமோ தங்கள் இயலுகைக்கு ஏற்பவும் திட்டத்தின் தேவைக்கு ஏற்பவும் உழைக்க வேண்டும்.

இயன்ற அளவு எல்லா களங்களிலும் திட்டம் குறித்து பரப்புரை செய்ய வேண்டும். ஆனால், ஒரே ஆட்களிடம் திரும்பத் திரும்பச் சொல்வதிலோ இறைஞ்சுவதிலோ பயன் இருப்பதில்லை என்று கண்டு கொண்டிருக்கிறேன். ஒருவருக்கு ஒரு திட்டம் குறித்த இயல்பான ஆர்வம் இருக்கும் எனில், அவர் முதன்முறை அறிந்த உடன் தானாகவே வந்து விடுவார். நம் அழைப்புக்காக மட்டுமே வருபவர்கள் துவக்க உற்சாகத்தை விரைவிலேயே தொலைத்து விடுவார்கள்.

திட்டத்தின் பயன், திட்டம் குறித்த தகவல் கிடைக்கும் பயனர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பங்களிக்கத் தொடங்குவார்கள். ஏனெனில், நாம் பெற்றதில் ஒரு பகுதியையாவது திரும்பத் தர வேண்டும் என நினைப்பது நம்முள் உள்ள இயல்பு.

அவ்வளவு சீக்கிரம் திட்டத்துக்குத் தகுந்த முனைப்பான பங்களிப்பாளர்கள் கிடைக்காமல் போகலாம். ஆனால், அப்படி கிடைக்கையில் அவர்கள் பல சாதாரண பங்களிப்பாளர்களை விட பல மடங்கு பங்களிப்பார்கள் என்பது என் அனுபவம்.


Comments

15 responses to “தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்களுக்கு பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன்?”

 1. இளா Avatar
  இளா

  என்ன சொல்ல..:)

 2. அன்பு ரவி,

  வலியது வாழும். நல்லது வாழும் என யாரும் சொல்லவில்லை. Survival theory தான் இன்று உச்சத்தில் இருக்கிறது. முதலீட்டாளர்கள் சமூகத்தில் அபத்த consumerism தலைதூக்கும் போது மதிப்பீடுகளுக்கு வேலையில்லை. சமூகம் சார்ந்த பிரச்சனை இது. சமூகம் பயணிக்கும் பாதையை சார்ந்த சிக்கல்.

  மற்றொன்று நீங்கள் சொன்ன இணைய தளங்கள் எல்லாம் இருப்பது எவ்வளவு பேருக்கு தெரியும். தெரிந்தாலும் இதன் பயன்பாடும் தேவையும் பற்றிய விழிப்புணர்வு எவ்வளவு தூரம் பரவியிருக்கிறது. இவை இணைய மேல்தட்டால் செவ்வனே சமூகமாய் வளர்ந்து வருகிறது என்று தானே நான் கருதியிருந்தேன்.

  எதுவாக இருந்தாலும் உங்களது பதிப்பு விழிப்புணர்வின் தொடக்கம். வாழ்த்துக்கள் பல.

 3. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  இளா – ம்ம் !

  சாய்ராம் –

  //சமூகம் சார்ந்த பிரச்சனை இது. சமூகம் பயணிக்கும் பாதையை சார்ந்த சிக்கல்.//

  உண்மை. அதனாலேயே முதலிலேயே நிகழ் உலகத் திட்டங்களுக்கும் இந்தப் பிரச்சினை உண்டு என்று குறிப்பிட்டேன்.

  திட்டம் குறித்துத் தெரியாதவர்களை விட்டு விடுவோம். தமிழ்நாட்டில் கணினி, இணைய அணுக்கம் கூடக் கூட அறியாமை தானாகக் குறையும். ஆனால், அறிந்தும் பங்களிக்காதவர்கள் / பங்களிக்க இயலாதவர்கள் குறித்த சிந்தனையே.

  கட்டுரையைத் தற்போது விரிவுபடுத்தி இருக்கிறேன். தொலைநோக்கின்மை என்று தொடங்கும் பகுதியில் இருந்து படித்துப் பாருங்கள். நன்றி.

 4. Nice questions. Tamil society has to contemplate on these issues.

  N. Ganesan

 5. Mohandoss Ilangovan Avatar
  Mohandoss Ilangovan

  //தமிழ் இணையத் தன்னார்வலக் கூட்டு முயற்சித் திட்டங்களில் //

  இதில் மாற்றுவையும், சற்றுமுன்னையும் இணைப்பது சரியா?

  தமிழ் விக்கிபீடியா, தமிழ் விக்கிசனரி, விக்கி நூல்கள், மதுரைத் திட்டத்துடன் மாற்றுவையும் சற்றுமுன்னையும் இணைக்க முடியுமா?

  //மதுரைத் திட்டம் < 10
  தமிழ் விக்கிப்பீடியா = 20
  தமிழ் விக்சனரி = 6
  தமிழ் விக்கி நூல்கள், தமிழ் விக்கி செய்தி = 0
  தமிழ் விக்கி மூலம் = 1
  நூலகம் திட்டம் < 10 ?
  மாற்று! = 6
  சற்றுமுன்… = 5
  தமிழா!< 10//

 6. அன்பு ரவி,

  நீங்கள் இந்த கட்டுரையை மாற்றிய பிறகு நான் படித்து பார்த்தேன். ‘நான்’ என்கிற சுயநலம் அழிக்க முடியாதது என்பதை தான் கம்யூனிசத்தின் வீழ்ச்சியின் அமெரிக்க முதலாளிகள் சமூகத்தின் பெரு வளர்ச்சியும் இன்று நிரூபித்து வருகிறது.

  நீங்கள் சொன்ன திட்டங்கள் பெருமளவில் இணைய தேவையாக கொள்முதல் செய்யபடும் போது பங்களிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். உதாரணத்திற்கு ஒரு தமிழ் படம் ரிலீஸ் ஆனவுடன் அதனை பற்றிய விக்கி பக்கத்தை பல்லாயிரம் பேர் வாசிக்க வந்தார்கள் என்றால் பங்களிப்பவர்களின் எண்ணிக்கையும் உயரக்கூடும்.

  தொலைநோக்கின்மை என்கிற தலைப்பிற்கு கீழே இருப்பது தத்துவம் சார்ந்த ஒரு பெரிய விவாதத்தின் தொடக்கம். இப்படி ஒரு விவாதம் பல நூறு வருடங்களாய் பல நாடுகளில் பல பிரிவுகளில் நடந்து வருகிறது. பிளாட்டோ தொடங்கி இன்றைய பின்நவீனத்துவம் வரை எல்லா தேடலும் இந்த கேள்விக்கான பதில் தேடும் முயற்சியே.

 7. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  Mohandoss – தன்னார்வத் தமிழ் இணையத் திட்டத்திற்கான ஒரு வரையறையை தமிழ் விக்கிப்பீடியாவில் பார்க்கலாம். இதனை ஒட்டி ஒவ்வொருவர் பார்வையிலும் எது தன்னார்வத் திட்டம் என்பதும் மாறுபடலாம். இவை உங்கள் பார்வையில் தன்னார்வத் திட்டங்கள் இல்லை என்றால் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். என் பார்வையில் மாற்று!ம் சற்றுமுன்னும் ஏன் தன்னார்வத் திட்டங்கள் என்று விளக்கி உள்ளேன்.

  சாய்ராம் – நான் ஏதோ எனக்குப் புரிந்த அளவில் எழுதுவதற்கு நல்ல விளக்கங்களைத் தருகிறீர்கள். நன்றி.

 8. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  Mohandoss – கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்த எடுத்துக்காட்டுகள் அனைத்தையும் நீக்கி இருக்கிறேன். எல்லாரின் வரையறைக்கும் உடன்பாடான ஏதாவது ஒரு திட்டம் இருந்தாலும், அதில் ஏன் பங்களிப்பு குறைவாக இருக்கிறது என்று அலசுவது தான் கட்டுரையின் நோக்கம். அதை விடுத்து, எது எல்லாம் தன்னார்வத் திட்டம் என்று தற்போது உரையாடல்கள் திசை திரும்புவதை விரும்பவில்லை. எவை எல்லாம் தன்னார்வத் திட்டம் என்பதும் முக்கியமான விசயம் தான். அதை இன்னொரு இடுகையில் பார்ப்போம். நன்றி.

 9. Milking The GNU: Why hackers FLOSS: “Why hackers do what they do: Understanding Motivation and Effort in Free/Open Source Software projects”

 10. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  அருமையான தொடுப்பு Balaji. நன்றி. இடுகையின் இறுதியில் நான் சுட்டிய கருத்தையே இந்த ஆராய்ச்சியும் முக்கியமாகச் சுட்டுகிறது. சேவை, கீவை எல்லாத்தையும் தாண்டி, இவற்றில் ஈடுபடுவது ஒரு வித மகிழ்ச்சி அளிக்க வேண்டும். மற்றதெல்லாம் பிறகு தான்.

  //enjoyment-based intrinsic motivation, namely how creative a person feels when working on the
  project, is the strongest and most pervasive driver. We also find that user need, intellectual
  stimulation derived from writing code, and improving programming skills are top motivators for
  project participation.//

 11. […] அவருடைய கடைசி பதிவில், தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்களுக

 12. எப்பிடிங்க இந்தளவு பெரிய கட்டுரைகளை ஆர அமர இருந்து எழுதுறீங்க. கொஞ்சம் எழுதுவதற்குள் எனக்கு வெறுப்புத் தட்டிவிடும்.

  அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கூட்டுப் பணிகளில் பங்கெடுத்திருக்கின்றேன். விக்கிப்பீடியாவில் இருந்து பங்களிப்பைக் குறைத்துக்கொண்டதற்கான காரணம் எனக்கு இன்னமும் புரியவில்லை. சில வேளை ஆங்கில வலைப்பதிவு மீது ஏற்பட்ட மோகம் காரணமாக இருக்கலாம்.

  இப்படியான நிகழ்வுகளில் பங்கெடுக்க தனிப்பட்ட ஆசைகளும், அதற்கொத்த பொது திட்டமும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். வேர்ட்பிரஸ் என்றால் நான் இப்போது ஓடி ஓடி பங்களிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்!

  இவை எல்லாவற்றிற்கும் மேல் நேரம் மிக மிக முக்கியமான காரணம்.

 13. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  மயூ – உங்கள் கருத்துகளுடன் முழுக்க உடன்படுகிறேன்.

  //எப்பிடிங்க இந்தளவு பெரிய கட்டுரைகளை ஆர அமர இருந்து எழுதுறீங்க. கொஞ்சம் எழுதுவதற்குள் எனக்கு வெறுப்புத் தட்டிவிடும். //

  பாகம் பாகமாக எழுது வாசிப்பவர்களை அலைய விடக்கூடாது என்பதற்காக ஒரே மூச்சாக எழுத நினைக்கிறேன். ஆனால், அதுவே சில சமயம் குறையாகவும் போய் விடுகிறது. இனி இயன்ற அளவு இடுகைகளைச் சுருக்கி எழுத வேண்டும்.

 14. இளங்கோவன் Avatar
  இளங்கோவன்

  // இத்திட்டங்களில் பங்களிப்பவர்களால் பொது நலன் இருந்தாலும் அதில் தன்னலமும் இருக்கிறது. என் வீடு, என் உறவு என்பதில் இருந்து என் மொழி, என் பண்பாடு, என் இனம் என்ற அடுத்த கட்ட தன்னலத்துக்கு நகர்கிறார்கள். அதன் அடுத்த கட்டமாக என் நாடு, என் உலகம் என்று நகரலாம். //

  அடா அடா அடா!