தமிழ் வலைப்பதிவர்களுக்குப் 10 வேண்டுகோள்கள்

தொடர்ந்து பல தமிழ் வலைப்பதிவுகளை வாசித்து வரும் வகையில் தமிழ் வலைப்பதிவர்களை நோக்கி சில வேண்டுகோள்களை வைக்க விரும்புகிறேன்.

1. உங்கள் வலைப்பதிவில் மறுமொழி மட்டுறுத்தலைச் செயற்படுத்தி இருந்தால் தயவு செய்து CAPTCHAவை நீக்கி விடுங்கள். பல சமயங்கள் மறுமொழியை விட CAPTCHA பெரிதாக இருக்கிறது !! இதை நீக்க blogger dashboard – settings – comments – show word verification for comments என்பதை no என்று தெரிவு செய்யுங்கள்.

2. மறுமொழிகளைக் காட்ட துள்ளு சாளரங்களைப் பயன்படுத்தாதீர்கள். துள்ளு சாளரங்களைப் பலரும் விரும்புவதில்லை. தவிர, இந்தக் குட்டியூண்டு பெட்டிக்குள் எழுதுவதும் சிரமமாக இருக்கிறது. இடுகை இருக்கும் பக்கத்திலேயே மறுமொழி இட இந்த துள்ளு சாளரம் தேவைப்படலாம். ஆனால், இந்த கொந்து வேலை செய்த பல பதிவுகள் குழப்புகின்றன. இடுகையைப் படித்துக் கொண்டிருக்கும் போதே சில இடுகைகள் தானாக மறுமொழிப் பக்கத்துக்கு ஓடி விடுகின்றன. இதைத் தவிர்க்க blogger dashboard – settings – comments – show comments in a pop-up window – no என்று தெரிவு செய்யுங்கள்.

3. பக்கத்தைத் திறக்கும் போதே பாடல்களைப் பாட விடாதீர்கள். பலர் அலுவலகங்கள், கல்லூரிகளில் இருந்தும் உங்கள் பதிவைத் திறக்கக்கூடும். எதிர்ப்பாராத வேளையில் கூடுதல் ஒலியில் பாடல்கள் பாடுவது, பல தளங்களில் ஒரே நேரத்தில் பல பாடல்கள் பாடுவது என்று தானாகவே பாடல் பாடுவது பெரும்பாலான பயனர்களால் விரும்பப்படுவதில்லை. நீங்கள் இடும் ஒலிப்பதிவுகள், ஒளிப்பதிவுகளில் autoplay=false என்று நிரலை மாற்றுவதன் மூலம் இப்படி தானே பாடுவதை நிறுத்த முடியும்.

4. முழுமையான ஓடை வசதி தாருங்கள். ப்ளாகர் பயனர்கள் இதைச் செயற்படுத்த blogger dashboard – settings – allow blog feeds – full என்று தேர்ந்தெடுங்கள். வேர்ட்பிரெஸ் பயனர்கள் WordPress Dashboard – Options – Reading – Syndication feeds – for each article – show – full text என்று தேர்ந்தெடுங்கள். பலர் கூகுள் ரீடர், ப்ளாக்லைன்ஸ் போன்ற ஓடைத் திரட்டிகள் மூலம் உங்கள் பதிவுகளைப் படிக்கிறார்கள். அலுவலகம் போன்ற இடங்களில் ப்ளாகர் தடை செய்யப்பட்டவர்களுக்கு இப்படி படிப்பது தான் ஒரே வழி. நீங்கள் முழுமையாக ஓடை வசதி தருவதால் உங்கள் பதிவுக்கு வரும் வாசகர் எண்ணிக்கை, பார்வைகள் எண்ணிக்கை குறைவாகும் என்று கருத வேண்டும். இது குறைந்த கால விளைவாகவே இருக்கும். முழுமையான ஓடைகளை வாசிப்பவர்கள் உங்கள் தொடர் வாசகர்களாகவும் இரசிகர்களாகவும் மாறும் வாய்ப்பு அதிகம். ஆனால், குறை ஓடைகளைச் சொடுக்கி பதிவுக்குப் போய் படிக்க நினைப்பவர்கள் குறைவே.

5. குறைந்த எண்ணிக்கையில் gadgetகள், java நிரல் சேவைகளைப் பயன்படுத்துங்கள். பலர் குறைந்த வேக இணைய இணைப்பில் இருந்தும், செல்பேசிகளில் இருந்தும் உங்கள் பதிவை அணுகக்கூடும். உங்கள் பதிவின் வேகத்தைக் குறைக்கும் அளவுக்கு மீறிய gadgetகள், java நிரல் சேவைகள் வாசகரின் வாசிப்பு வசதியைக் குறைக்கும்.

6. நீங்கள் இரசித்த பதிவைப் பற்றி எழுத விரும்பினால், அந்தப் பதிவு / இடுகைக்கு தொடுப்பு கொடுத்து ஒரு சில வரிகள் மட்டும் எடுத்துக்காட்டி எழுதுங்கள். முழுமையாக வெட்டி ஒட்ட வேண்டாம்; அது அப்பதிவரின் அனுமதி பெற்று செய்தாலும் கூட. ஒரே இடுகை பல இடங்களில் இடம் பெற்றால், இரட்டை உள்ளடக்கம் என்ற வகையில் தேடு பொறிகளைக் குழப்பி முதலில் அதை எழுதியவருக்குப் பாதமாக அமையக்கூடும்.

7. புதிய தளங்களை வாசகர்களும் தேடுபொறிகளும் கண்டடைய உதவ இணையத்தில் தொடுப்பு கொடுத்து எழுதுவது ஒரு முக்கிய அடிப்படையாகும். பதிவர் x இப்படி எழுதினார் என்று மொட்டையாக எழுதினால் புதிதாக உங்கள் பதிவை வாசிப்பவர்களுக்கு பதிவர் x யாரென்றும் தெரியாது. அவரை எப்படி வாசிப்பது என்றும் தெரியாது. எனவே, அவர்களுக்கு உதவும் வண்ணம் பொருத்தமான இடங்களில் பிற இடுகைகள், பதிவர்களுக்குத் தொடுப்பு கொடுத்து எழுதுங்கள். தகவல்களுக்கு தொடுப்பு கொடுக்கும் போது இங்கே இங்கே இங்கே என்று தொடுப்பு தராதீர்கள். ஏனெனில் நீங்கள் தரும் ஒவ்வொரு தொடுப்பும் ஒரு வகையில் தேடுபொறிகளுக்கு அத்தளங்களைப் பற்றி குறிச்சொல் இட்டு விளக்குவது போன்று ஆகும். தெளிவான, விளக்கமான சொற்கள் மூலம் தொடுப்பு தருவதால் தமிழ் இணையத்தில் தேடல் முடிவுகளைத் துல்லியமாக்கி நீங்கள் தொடுப்பு தரும் தளத்தை இலகுவில் கண்டடைய உதவுகிறீர்கள்.

எடுத்துக்காட்டுக்கு,

சரியான தொடுப்பு கொடுக்கும் முறை

நந்தா எழுதிய அஞ்சாதே விமர்சனம்

தவறான தொடுப்பு கொடுக்கும் முறை

நந்தா எழுதிய அஞ்சாதே விமர்சனத்தைப் படிக்க இங்கு சொடுங்கள்.

8. உங்கள் எல்லா இடுகைகளுக்கும் பொருத்தமான குறிச்சொற்கள் இடுங்கள். இவை தேடுபொறிகளில் உங்கள் இடுகைகளை இலகுவில் கண்டடைய உதவும்.

9. இயன்ற இடங்களில் உங்கள் இடுகை முகவரிகளைப் புரிந்து கொள்ளத் தக்க வகையில் அமையுங்கள். எடுத்துக்காட்டுக்கு, blog.nandhaonline.com/?p=42 என்ற முகவரியைக் காட்டிலும் blog.nandhaonline.com/அஞ்சாதே-விமர்சனம்/ என்ற முகவரியை இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். புரிந்து கொள்ள மட்டுமல்ல, தேடல் முடிவுகளிலும் இது போன்ற முகவரிகள் உங்களுக்குச் சாதகமான இடங்களைப் பெற்றுத் தரும். WordPress.com ல் பதிவு வைத்திருப்பவர்களுக்கு இது தானாகவே அமைந்திருக்கும். தனித்தளத்தில் வேர்ட்பிரஸ் நிறுவிப் பயன்படுத்துபவர்கள் WordPress dashboard – options – Permalinks போய் Data and Name based அல்லது அதை ஒத்த custom முகவரிகளைப் பயன்படுத்துங்கள். Blogger.com பயனர்கள் முதலில் உங்கள இடுகையை எழுதிப் பதிப்பிக்கும் முன்னர் பொருத்தமான ஆங்கிலத் தலைப்பிட்டுப் பதிப்பித்தால், உங்கள் இடுகை முகவரியிலும் பொருத்தமான ஆங்கிலக் குறிச்சொற்கள் இடம்பெறும். பிறகு இடுகையைத் தொகுத்துத் தேவையான தமிழ்த் தலைப்பு இட்டுக் கொள்ளலாம்.

10. மேற்கண்ட வேண்டுகோள்களில் ஒன்றிரண்டையாவது உடனே செயற்படுத்துங்கள் 🙂


Comments

11 responses to “தமிழ் வலைப்பதிவர்களுக்குப் 10 வேண்டுகோள்கள்”

 1. good suggestions!

 2. good !! Usefull information

 3. தகவலுக்கு நன்றி…(இதை சொல்லி சொல்லி அலுத்துப்போச்சு) :).

  தனித்தள வோர்ட்பிரஸ்க்கான டிப்ஸ் ஒண்ணுதான் இருக்கு. இன்னும் வேற ஏதாவது இருக்கா????

 4. Avatar
  Anonymous

  //இங்கு சொடுங்கள்.// நானும் பல இடங்களில் இவ்வாறு தான் பாவித்து வந்தேன். மாற்றிக்கொள்கின்றேன்.

  மற்றது உங்கள் முகப்பில் “என்னைப் பத்தி” என்று எழுதியுள்ளீர்கள். என்னைப் பற்றி/ என்னைப் பத்தி எது சரியானது?

  நன்றி

 5. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  Anonymous, என்னைப் பற்றி, என்னைப் பத்தி – இரண்டுமே சரி தான். என்னைப் பத்தி, பேச்சுத் தமிழில் இன்னும் நெருக்கமான உணர்வதைத் தருவது போல் இருப்பதால் அதைப் பயன்படுத்தினேன்.

  நந்தா – தனித்தள வேர்ட்பிரெஸ் நுட்பங்கள் ஒரு கடல் மாதிரி இருக்கு ! இப்ப தான் உள்ள குதிச்சிருக்கேன் 🙂 கொஞ்சம் கொஞ்சமா எழுதுறேன். இங்க சொல்லி இருப்பது பொதுவாக எல்லா வலைப்பதிவர்களுக்குமான நுட்ப நெறிமுறைகள் தான்.

  சந்திரசேகர் , இளா – நன்றி.

 6. தமிழ் வலைப்பதிவு | வேர்ட்பிரசில் அர்த்தமுள்ள முகவரி

  […] அர்த்தமற்று இருக்கின்றது அத்துடன், Page Rangeஐக் கூட்டவும் உதவாது என்று ரவி […]

 7. தொடுப்பு கொடுக்கும் விடயம் பற்றி அறிந்து கொண்டேன். இனி சரியான முறையில்தான் தொடுப்பு கொடுப்பேனாக்கும்~!!!

 8. —blog.nandhaonline.com/அஞ்சாதே-விமர்சனம்/ —

  இதற்கு இன்னும் முழுமையான அளவில் நிரலிகள் தயார் ஆகவில்லை 🙁

  1. வோர்ட்பிரெஸ் பின் தொடர்தல் சுட்டி (pingback/trackbacks) வேலை செய்வதில்லை.
  2. ப்ளாகர்/ப்ளாக்ஸ்பாட் தொடுப்பு முகவரியில் இட்டால், ‘தவறான சுட்டி’ என்று திட்டுகிறது (ஸ்னாப்ஜட்ஜ் பதிவுகள்)
  3. எண்களும் எழுத்துகளுமாய் என்னுடைய உலாவியில் காட்சியளிக்கிறது (http://blog.ravidreams.net/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/)

  மொத்தத்தில் இந்த வழிமுறையில் அமைந்த உரல்கள் எனக்கு குழப்பம் கலந்த மிரட்டலையே தருகின்றன

 9. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  பாலாஜி –

  1. இதே இடுகையில் ஆறாவது மறுமொழி மயூரேசனிடம் இருந்து ஒரு பிங்கு வந்திருக்கிறதே?

  2. இது வரை எந்த இடத்திலும் தமிழ் எழுத்துக்கள் உள்ள முகவரிகளைத் தவறு என்று சொல்லி நான் பார்த்தது இல்லையே? இது உங்கள் உலாவியில் உள்ள பிரச்சினையா என்று புரியவில்லை. வேர்ட்பிரெஸ்ஸை விட்டாலும் தமிழ் விக்கிப்பீடியா உள்ளிட்ட பல மொழி விக்கிப்பீடியாக்களும் இப்படி அர்த்தமுள்ள முகவரிகளையே பயன்படுத்துகின்றன. எங்கும் பிரச்சினை வந்தததாகக் கேள்விப்பட்டதில்லை.

  3. Konquror / Firefox 3 Beta 3 பயன்படுத்துங்கள். முகவரிப்பட்டையிலேயே அழகாய்த் தமிழ் எழுத்த்துக்களைக் காட்டும்.

 10. #1… சற்றுமுன் தளத்தில் இந்தப் பிரச்சினையை பெரிதும் பார்க்கிறேன்:

  காட்டாக: செய்தி – எஸ்.எம் கிருஷ்ணா பதவி விலகல் | சற�

  அங்கே மறுமொழியாக ‘மகாராட்டிர ஆளுனராக ஜாமிர் நியமிப்பு | சற்றுமுன்… ‘ இருக்கிறது; க்ளிக்கினால் செல்லமாட்டேங்குது 🙁

  #2. விக்கிப்பீடியா ஆண்டறிக்கை குறித்த கட்டுரையை ஸ்னாப்ஜட்ஜில் சேமிக்கலாம் என்று எத்தனித்தபோதும் ‘உரல் நீளம்’ அல்ல்து ‘தவறு’ என்று அனுமதிக்க மறுத்து விட்டது. இது அனேகமாக ஸ்க்ரிப்ட்டின் குழப்பம் என்றே எண்ணுகிறேன்.

 11. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  பாலாஜி
  1. பிரச்சினை இருப்பதை இப்போது தான் கவனிக்கிறேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி. இது நாள் வரை பிங்குகள் வருவதைப் பார்த்திருக்கிறேனே ஒழிய அவற்றைச் சொடுக்கிப் பார்த்தது இல்லை. இதே இடுகையில் உள்ள மயூரேசனின் பிங்கும் பிழையான முகவரிக்கு இட்டுச் செல்கிறது. பிங்கு அனுப்பும் இடுகையின் முகவரி மிக நீளமாக இருக்கையில் இந்தப் பிரச்சினை வருகிறது போலும் 🙁 அறிவியில் இன்று கட்டுரையில் என்னுடைய சற்றுமுன் கட்டுரை தொடுப்பு தந்த பிங்கு வேலை செய்வதைப் பார்க்கலாம். அந்த இடுகையின் முகவரி சிறிதாக இருந்தது காரணம் என்று நினைக்கிறேன்.

  தனித்தளத்தில் நிறுவிய வேர்ட்பிரெஸ் பதிவுகளில் இது தொடர்புடைய நிரல் எங்கிருக்கிறது என்று பார்த்து கூடுதல் எழுத்துக்களை அனுமதிக்கச் சொல்லலாம். ஆனால், இதே பிரச்சினை wordpress.com பதிவுகளிலும் இருக்கிறது போலும். வேர்ட்பிரெஸ் மன்றத்தில் இது குறித்து எடுத்துரைக்க வேண்டும். இது போக page-slugகளும் குறைவான எழுத்துக்களையே அனுமதிப்பதால் தமிழ் முகவரிகள் துண்டுபட்டுப் போகின்றன.

  எல்லாம் தமிழ் ஒருங்குறிச் சொதப்பல்களில் ஒன்று 🙁 ஒரு உயிர்மெய் எழுத்துக்கு ஒரு இடம் என்று வாங்கி இருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. எங்கெல்லாம் எழுத்துக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துகிறார்களோ அங்கெல்லாம் உதை வாங்கிக்கொண்டிருக்கிறோம்.

  2. wordpress snapjudgeல் இருந்தா முயன்றீர்கள்? பிளாகரில் இருந்து அதே கட்டுரைக்கு என்னால் தொடுப்பு கொடுக்க முடிந்தது. wordpress பிரச்சினை என்றால் இது குறித்தும் மன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும்