சற்றுமுன்

சற்றுமுன்… செய்திச் சேவை வரும் பிப்ரவரி 15 அன்று முதல் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. வாழ்த்துகள் !

சற்றுமுன்னின் சிறப்புகளாக நான் கருதுவன:

– 24 மணி நேரமும் இற்றைப்படுத்தப்படும் உலகளாவிய தமிழ் இணையச் செய்திச் சேவை.
– இயன்ற அளவு இனிய தமிழில் செய்தி, தள வடிவமைப்பு.
– வாசிப்பவர்களாலேயே எழுதப்படுகிறது. தமிழ் வலைப்பதிவுலகில் மிகப்பெரிய கூட்டுப் பதிவு இது தான் என நினைக்கிறேன்.
– வெகு மக்கள் ஊடகங்கள் ஆர்வம் காட்டாத செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவது. முக்கியமாக, இணையப் பயனர்களுக்கு ஆர்வம் ஊட்டக்கூடிய செய்திகளைத் தருவது. எடுத்துக்காட்டுக்கு, கூகுள் knol குறித்த செய்தி.
– தமிழகம், ஈழம் தவிர்த்து பிற நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு ஆர்வம் ஊட்டும் செய்திகளையும் பகிர்ந்து கொள்வது.
– செய்திகளில் வில்லைக்காட்சிகள், நிகழ்படங்கள் தருவது.
– அறிவியல் இன்று போன்ற முயற்சிகள்.
– யாகூ, எம்எஸ்என், ஏஓஎல் எல்லாமே தமிழுக்கு வந்தாலும் ராசிபலன், அழகுக் குறிப்புகள், சமையல் குறிப்புகள்.. என்ற அலுக்க வைக்கும் வணிக மந்திரத்தை விட மாட்டேன் என்கிறார்கள். அவற்றுக்கு இடையே சற்றுமுன் வேறுபட்டு நிற்கிறது.
– முழுமையான செய்தி ஓடை தருவது.
– விளம்பரங்கள் இல்லாமல் / குறைவாக இருப்பது.
– தினத்தந்தி வகையறா இதழ்கள் ஒருங்குறிக்கு மாறாமல் இருக்கையில், அவற்றில் உள்ள முக்கியமான செய்திகளை ஒருங்குறியில் பெற்றுத் தருவது.
– வெகுமக்கள் செய்தி ஊடகங்கள் போல் அரசியல் / வணிக உந்துதல் இல்லாமல் இருப்பது.
– ஒரே செய்திகளுக்கான பல்வேறு இதழ்களின் தொடுப்புகளையும் ஓரிடத்தில் பார்க்கத் தருவது. இதை வேறு எந்த வணிகத் தமிழ்த் தளமும் செய்யும் என்று தோன்றவில்லை.
– இன்னும் சில செய்திப் பதிவுகள், கூட்டுப் பதிவுகள், இதழ்கள் போல் இல்லாமல் செய்தியோடு, அரசியல், சொந்தக்கருத்தைக் கலக்காமல் செய்தியைச் செய்தியாக மட்டும் தருவது.
– தமிழில் வெளிவராத செய்திகளையும் மொழிபெயர்த்துத்தருவது.

சற்றுமுன்னுக்கான வேண்டுகோள்கள்:

– பிற தளங்களில் இருந்து படியெடுத்துப் போடும் செய்திகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். அல்லது, செய்தியின் நீளத்தைச் சுருக்கி முழுச் செய்தியைப் படிக்கத் தொடுப்பு கொடுக்கலாம்.
– எந்தத் தமிழ்த் தளத்திலும் வெளிவந்திராத முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை பிற தளங்களில் இருந்து மொழிபெயர்த்துத் தருவதை கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துச் செய்யலாம்.
– சற்றுமுன் வளர வளர வருகை எண்ணிக்கைகளுக்கு மயங்கி, “ரஜினி பேரனுக்கு மொட்டை அடித்தனர்” போன்ற செய்திகளைத் தராமல் இருப்பது.
– அரசியல் கலந்த கேலிச்சித்திரங்களைத் தவிர்ப்பது. தொடர்ந்தும் தளத்திலும் செய்திகளிலும் அரசியல் கலக்காமல் இருப்புத.

நான் சற்றுமுன் தளத்தில் செய்திகள் எழுதுவது இல்லை என்றாலும் தள பராமரிப்பில் பங்களித்து வருகிறேன். அந்த வகையில் வேர்ட்ப்ரெஸ் குறித்து நிறைய கற்றுக் கொள்ளவும் தூண்டுதலாக இருக்கிறது.

தொடர்ந்து சற்றுமுன்… வளர வாழ்த்துகள்.


Comments

5 responses to “சற்றுமுன்”

 1. venkatramanan Avatar
  venkatramanan

  மற்றும் செய்திகளுக்கு தொடர்பான நாளிதழ்களின் சுட்டியை அளித்தால் permalinkஐ அளித்தல் நலம். உதா. http://satrumun.com/2008/02/12/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/ என்ற சுட்டியில் உள்ள செய்தியில் “தினத்தந்தி” சுட்டி permalinkஆக தரப்பட்டுள்ள்ளது. ஆனால் பெரும்பாலான செய்திகளில் தினத்தந்தி செய்தி என்றால் வெறும் http://http://www.dailythanthi.com/home.asp? என்று இணைப்பு தருவதனால் உபயோகம் இல்லை என்பதும் அமீரகம் செய்திகள் அதிகம் என் கருத்து. மற்றபடி “சற்றுமுன்”னின் அந்த niche தன்மை மிகவும் நன்றாக உள்ளது.

  அன்புடன்
  வெங்கட்ரமணன்

 2. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  venkatramanan, ஆமா நிரந்தரத் தொடுப்புகள் குறித்து நீங்கள் கூறியுள்ளது உண்மை தான். சற்றுமுன் குழுவினரின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன். அமீரகச் செய்திகள் கூடுதலாக இருந்தது உண்மை தான். ஆனால், அது பிற ஊர் செய்தித் தொகுப்பாளர்கள் அதிகமாகப் பங்களிக்காததால் வந்த தோற்றம் 🙂 இருப்பினும், ரொம்பவும் உள்ளூர்ச் செய்திகள் இனி http://satrumun.com/localnews/ தளத்தில் வரும்.

 3. ‘சற்றுமுன்’ குழுவினருக்கு வாழ்த்துக்கள்!!

  பரபரப்பா செய்தி இருக்குணும்கிறதுக்காக… இப்படியா
  “ஜெ. உயிர் தப்பினார் – விமானம் நடுவானில் கோளாறு!”

  தினத்தந்தியை விட தினமணிதான் எனக்கு பிடிக்கும் 😉

 4. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  தென்றல் » நீங்கள் சுட்டிக் காட்டுவது உண்மை தான். ஆனால், இது சற்றுமுன்னின் செய்திகள் பகிரும் தன்மையால் வரும் விளைவு என்று நினைக்கிறேன். பிற செய்தித் தளங்களில் ஒரு செய்தி எவ்வாறு வெளியிடப்படுகிறதோ அதை மாற்றாமல் அப்படியே வெளியிடுகிறார்கள். பிற தளங்களின் செய்திகளைச் சிதைக்கக்கூடாது என்பது ஒரு காரணம். நல்ல மாற்றங்களைச் செய்யலாம் என்றாலும் நேரமின்மை ஒரு காரணம். இது போன்ற விசயங்களில் சற்றுமுன் இன்னும் சிறப்பாகச் செயல்படலாம் என்பது தான் என் எண்ணமும்.

 5. murugeswari Avatar
  murugeswari

  angilathil ariyamudiyatha visayangalai tamilil arivathu migavam santhosamaga ullathu. nandri