தமிழ் அடிப்படை ஆங்கிலத் தட்டச்சு மென்பொருள்

தமிழ்99 விசைப்பலகை குறித்து நண்பர் ஒருவருடன் நடந்த மடல் உரையாடலில், ஆங்கிலத் தட்டச்சு அறியாமல் “முதலில் தமிழ்99 கற்றுக் கொள்ளக்கூடிய ஒருவர் ஏன் பிறகு ஆங்கிலத் தட்டச்சையும் தனியாகக் கற்க வேண்டும்? தமிழ்99 அடிப்படையிலேயே ஆங்கிலத்தையும் எழுதுவது போல் ஒரு மென்பொருள் செய்தால் என்ன?” என்று கேட்டார்.

முதலில் இது நல்ல யோசனை என்று தோன்றிய பிறகு இதில் உள்ள அபத்தத்தைக் கண்டு கொண்டேன்.

வாட் இஸ் யுவர் ஃப்ரெண்ட் நேம் என்று எழுத வேண்டுமானால் தமிழ்99 உதவும்.

ஆனால், what is your friend name என்று ஆங்கில எழுத்துக்களிலேயே எழுத தமிழ்99 மட்டுமல்ல எந்த தமிழ் அடிப்படை விசைப்பலகை மென்பொருளும் உதவாது. அப்படியே உதவினாலும் அது தலையைச் சுத்திக் காதைத் தொடும் வேலையாகத் தமிழையும் ஆங்கிலத்தையும் மனம், மூளை, muscle motor memory என்று சகலத்தையும் குழப்பி விடும்.

இப்ப அஞ்சலில் wiingka என்று அழுத்தினால் நீங்க வருது. இங்க w எப்படி வந்தது? ஆங்கில விசையில் ஒரு n தான் இருக்கு என்பதால் சும்மா இருக்கும் w பயன்படுத்தினோம். அது போல் நம்ம கிட்ட ஒரு வ தான் இருக்கு. w, v இரண்டையும் எப்படி வேறுபடுத்தி எழுதுவது? அப்ப என்ன செய்வோம்? ஆங்கிலத்துக்கு உதவாத ழ,ள என்று தமிழில் சும்மா இருக்கும் எழுத்துக்களை, f, w, போன்றவற்றுக்குப் போட்டு இட்டுக்கட்டுவோம்.

அப்ப என்னாகும் ழ, ள ஓசை மறந்து மனதில் f, w ஓசைகள் பதியத் தொடங்கும்.

இதே போல் இன்னும் சும்மா இருக்கும் எழுத்தகளான ற, ஞ, ங, எல்லாம் வேற ஆங்கில எழுத்துக்குப் போகும்.

இப்படி சும்மா இருக்கும் விசைகளை ஒதுக்காமல் எல்லா ஆங்கில எழுத்துக்களையும் தமிழ்99 முறையிலேயே எழுதுகிறோம் என்று வையுங்கள்.

x என்ற ஒரு ஆங்கில எழுத்தை அழுத்த எக்ஸ் என்று அடிக்க வேண்டும். இதில் எ க f SHIT ஸ f – என்று ஆறு விசைகளை அழுத்த வேண்டும் !!! அல்லது சும்மா இருக்கும் ண, ன விசைகளை இதற்கு ஒதுக்க வேண்டும்.

சும்மா ஒரு பேச்சுக்கு ஆங்கில எழுத்துக்களுக்கு எத்தனைத் தமிழ்99 விசைகள் என்று பார்ப்போமே..

a – ஏ – 1

b – பி – 2

c – சி – 2

d – டி – 2

e – ஈ – 1

f – எஃப்

g – ஜி – 3

h – ஹெச் – 5

i – ஐ

j – ஜே – 3

k – கே – 2

l – எல் – 3

m – எம் – 3

n – என் – 3

o – ஓ – 1

p – பி – 2

q – க்யூ – 4

r – ஆர் – 3

s – எஸ் – 4

t – டி – 2

u – யூ – 2

v – வீ

w – டபிள்யூ – 7

x – எக்ஸ் – 6

y – வொய் – 4

z – இசட் – 4

தமிழ்99 முறையில் ஆங்கிலம் அடித்தால் 300 முதல் 400 வீதம் சக்தி வீணாகும் போல் இருக்கு. இப்படி எழுதினால் what என்பதை வாட் என்று யோசிக்க மாட்டோம். டபிள்யூஹெச்ஏடி என்று தான் யோசிப்போம். t-d, p-b போன்ற வேறுபாடுகளைக் காட்ட இன்னும் சில கூடுதல் விசைகளை அழுத்த வேண்டி வரலாம். மண்டை குழம்புவது ஒரு புறம். தேவையற்ற mental processing ஒரு புறம்.

இதுவும் இல்லாவிட்டால் நாம் “வாட் இஸ் யுவர் நேம்” என்று தமிழில் எழுதினால் அதைப் புரிந்து கொண்டு கணினியே what is your name என்று எழுதிக் காட்ட வேண்டும். இப்படி ஒரு மென்பொருளைக் கண்டுபிடிக்க எத்தனை ஆண்டு உழைப்பு தேவைப்படும் என்று தெரியாது. அப்படியே கண்டுபிடித்தாலும் அது யாருக்கும் பயன்படும் என்றும் தெரியாது.

உண்மையிலேயே தமிழன் கணினியைக் கண்டுபிடித்து முதலில் தமிழ் விசைப்பலகையையும் செய்து உலகம் எங்கும் போய் “தமிழ் அடிப்படையில் உன் மொழியை எழுது” என்று சொன்னால் இப்படி எல்லாம் யோசித்துப் பார்த்து நம்மளை “போடாங்க…” என்று சொல்வானா இல்லையா? இதன் அபத்தத்தை உணர்வானா இல்லையா?

ஆனால், நாம் மட்டும் தான் ஒன்றுமே சிந்திகாமல் “ஆஹா..ammaa என்று எழுதினால் அம்மா வருகிறது” என்று இருக்கிறோம். த என்ற ஒற்றை எழுத்தை எழுத ஏன் tha என்று மூன்று விசைகளை அழுத்த வேண்டும் என்று கேள்வி கேட்பதில்லை. அம்மா என்பதை ஏன் ஏஎம்எம்ஏஏ என்று மனதில் பதிக்கிறோம் என்று உறுத்திக் கொள்வது இல்லை. நானும் முதலில் இரண்டு மாதம் அஞ்சல் பயன்படுத்தினேன். ஆனால், அது தமிழ்99 பற்றி தெரியாமல். தமிழ்99 தெரிந்தவுடனே இதன் வீரியம் புலப்பட்டு விட்டது. ஆனால், நாம் தமிழ்99 பற்றி எடுத்துச் சொல்லியும், பழகிடுச்சுன்னு மாறாமல் இருப்பவர்களை நினைத்தால் 🙁

கதையின் நீதி : அந்தந்த மொழிகளுக்கான தேவைகள் அந்தந்த மொழி அடிப்படைச் சிந்தனை, செயற்பாடுகளினாலே திறமாகத் தீர்க்க இயலும். இனி வரும் காலத்தில் எப்படியும் ஆங்கிலம் பயிலாமல், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யாமல் இருக்க இயலாது. எனவே ஆங்கிலத் தட்டச்சையும் கற்றுக் கொள்வது தான் சரியாக இருக்கும்.

சரி, தமிழ்99 முறையைச் சோதித்துப் பார்க்க, பழகிப் பார்க்க விரும்புகிறீர்களா? இன்று தைப்பொங்கல் வெளியீடாக w3tamil எழுதியின் இற்றைப்படுத்தப்பட்ட பதிப்புக்கு வந்திருக்கிறது. அதில் முயன்று பாருங்கள்.

ஆனால், தமிழ்99 குறித்து நான் இது வரை வெளிப்படுத்தாத இரண்டு சிறு குறைகள் உண்டு.

1. நீங்கள் தமிழ், ஆங்கிலம் தவிர்த்து இன்னும் பல இந்திய மொழிகளில் எழுத வேண்டும் என்றால் தமிழ்99 சரியாக மூளையைக் குழப்பி விடும்.

ஆப் கா நாம் க்யா ஹை என்றால் அதுவும் மனதில் தமிழ் எழுத்தாகத் தான் ஓடும். ஏனெனில் இந்திய மொழிகளுக்கு இடையில் இருக்கும் நெருக்கமான ஒலிப்பு ஒற்றுமை. அங்கு இந்தியை அடிப்பதற்கு மட்டும் என்று இந்தி அஞ்சலைப் பயன்படுத்த கை வரவே வராது. பூர்ணா கூட ஒரு முறை தமிழ்99 அடிபடையில் இந்தி விசைப்பலகை செய்வோமா என்றார். ஆனால், இந்தியில் உள்ள 5 ச, 5 க – க்களை நினைத்து அந்த யோசனையை விட்டாச்சு.. இப்படி 10, 12 மொழிகளில் எழுதக் கூடிய ( !! ) வினோத் போன்றவர்களுக்கு அஞ்சலே பரவாயில்லை.

2. நோர்வே, பிரான்சு போன்ற ஐரோப்பிய நாடுகள், ஆங்கிலம் அல்லா மொழி விசைப்பலகைகளும் புழக்கத்தில் உள்ள நாடுகளில் qwerty விசைப்பலகையில் உள்ள ஆங்கில எழுத்துக்கள், நிறுத்தக் குறிகளை இடம் மாற்றிப் போட்டு இருப்பார்கள். எடுத்துக்காட்டுக்கு நோர்வேயில் [ ] விசையைத் தூக்கி எண்கள் வரிசையில் போட்டு விட்டார்கள். அங்கு தமிழ்89 முறையில் ச அடிக்க வேணும் என்றால் alt விசை அழுத்த வேண்டி வரும். இது போன்ற குழப்பங்களைத் தவிர்க்க ஒரே பதிப்புடைய மென்பொருள்கள் உதவாது. அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப திருத்தப்பட்ட தமிழ்99 மென்பொருள் பதிப்புகள் வர வேண்டும். இப்போது NHM எழுதியில் நாமே தேவைப்படும் மாற்றங்களைச் செய்து கொள்ள இயலும் என்பதால் சில ஆர்வலர்கள் திரட்டி இந்தப் பணியையும் செய்ய வேண்டும்.

தொடர்புடைய இடுகைகள்:

1. ஏன் தமிழ்99 சிறந்த தமிழ் விசைப்பலகை?
2. ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும்?
3. தமிழ்99 விழிப்புணர்வு widget
4. செருப்புக்காக காலை வெட்டுவது எப்படி?


Comments

One response to “தமிழ் அடிப்படை ஆங்கிலத் தட்டச்சு மென்பொருள்”

  1. உங்கள் கருத்து மிக முக்கியாமான ஒன்று. நான் அழகி மென்பொருள் தான் உபயோகபடுத்றேன். அது மிக நல்ல முறையில் உள்ளது.