ஊர்: புதுகையில் உள்ள ஒரு சிற்றூர். என் அம்மா பிறந்த ஊர். மூன்று தாய் மாமாக்கள், எண்ணற்ற சொந்தங்கள் அங்கு இருக்கிறார்கள். படிப்பறிவற்றவர்கள் இல்லை. பலர் சிங்கப்பூர், மலேசியா என்று பிழைக்கச் சென்று உலக அனுபவம் பெற்றவர்களே.
எப்பொழுது: ஒரு சில நாட்கள் முன்னர். 2007 தான். 21 ஆம் நூற்றாண்டு தான். தமிழ்நாட்டில் தான்.
என்ன ஆனது:
நான் பிறந்த சாதியில் உள்ள அந்த ஊர்ப் பெண்ணும் இன்னொரு சற்றே ஒடுக்கப்பட்ட சாதிப் பையனும் ஒருவரை ஒருவர் விரும்பி மணம் முடிப்பதற்காக வீட்டை விட்டுச் சென்றுள்ளனர். பெண்ணின் அண்ணன் முன் நிற்க, பெண்ணின் குடும்பத்தினர் ஊரார் துணையுடன் பெண்ணையும் பையனையும் பெங்களூர் வரை சென்று தேடிக் கண்டுபிடித்து ஊருக்குக் கூட்டி வந்துள்ளனர். பெண்ணைப் பெண்ணின் குடும்பத்தினரே தூக்கிட்டுக் கொன்று எரித்து விட்டார்கள். பையனை அந்த சாதிக்காரர்களிடமே ஒப்படைத்து 24 மணி நேரத்துக்குள் அவர்களே கொல்ல வேண்டும் என்று எழுதி வாங்கி இருக்கிறார்கள். எப்படியோ பக்கத்து ஊருக்கு செய்தி கசிந்து காவல் துறைக்கு வழக்கு சென்றுள்ளது. ஆனால், எப்படியும் அந்தப் பையனைக் கொல்லாமல் விட மாட்டார்கள்.
அதிர்ச்சி: சிங்கப்பூரில் பிழைக்க வந்திருக்கும் நான் பிறந்த சாதி இளைஞர்கள் நிலைப்பாடு: “அந்தப் பையனை எப்படியாவது கொன்று விடுங்கள். என்ன செலவு ஆனாலும் சட்டச்சிக்கல் வந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்”.
இதுவே அடக்கும் சாதிப் பையனாக இருந்திருந்தால்: பையனையும் பெண்ணையும் பிரித்து இருப்பார்கள். ஆனால், கண்டிப்பாகப் பையனைக் கொன்றிருக்க மாட்டார்கள். கண்டித்துத் திரும்ப சேர்த்துக் கொள்வார்கள். ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்ணின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
குடும்பத்தினர் பெண்ணுக்கு உறுதுணையாக இருந்திருந்தால்: குடும்பத்தை ஊரை விட்டு விலக்கி வைத்திருப்பார்கள். அவர்கள் திருமண, இறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ள மாட்டார்கள். அவர்களும் பிற சொந்தங்கள், (பெற்ற தாய், கூடப்பிறந்த அண்ணன், தங்கை போன்ற நெருங்கிய உறவுகள் உட்பட) யார் வீட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள முடியாது. பெண்ணுக்கு தங்கைகள் இருந்தால் திருமணம் பெருஞ்சிக்கல் தான். வாழ்நாள் முழுக்க அனுபவிக்கும் இந்த நிராகரிப்பின் வலியை எழுத்தில் வடிக்க முடியாது.
இன்று சிங்கப்பூரில் உள்ள அண்ணனிடம் பேசிய போது இந்தத் தகவலைச் சொன்னார். பல பக்கத்து ஊர்களில் இது போல் நடந்து உள்ளது என்றும் நம் ஊரில் இது தான் முதல் என்றும் சொன்னார். நாம் தொலைபேசியில் இவ்வளவு பேசினாலும் ஊருக்குள் போய் பேச துணிவு வராது. பேசினாலும் குரல் எடுபடாது. நாமும் தனித்துப் போகலாம் என்றார். இதைவிடக் கொடுமை: சில நாள் அந்த ஊரில் இருந்தால் நமக்குக் கூட “நம் இனம், நம் சாதி” என்ற உணர்வு வந்து விடும் என்கிறார் !!!
அந்தப் பையன் அடக்கும் சாதியா, ஒடுங்கிய சாதியா என்பது பிரச்சினையில்லை. வேறு சாதி என்பதே பிரச்சினை என்றார்.
நாளிதழ்களில் இது போன்ற செய்திகள் பார்ப்பது உண்டு என்றாலும் சொந்த ஊரில் நடக்கும் போது திகீர் என்கிறது 🙁
🙁 🙁 🙁
சாதி ஏற்றத் தாழ்வுகள் மட்டுமே பிரச்சினை இல்லை. சாதி என்று ஒன்று இருப்பதே பிரச்சினை தான். ஏற்றத் தாழ்வுகள் ஒழிந்தாலும் சாதி ஒழியும், ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. துணிவுள்ள தனிநபர்கள் சாதி அடையாளங்களைப் புறந்தள்ளி வாழ இயல்கிறதே தவிர, ஒட்டு மொத்த சமூகத்தின் மனநிலையிலும் மாறுதல் வருவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. படிக்காதவர்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்கிறார்கள் என்றால் படித்தவர்கள் திட்டம் போட்டுத் துல்லியமாகச் சாதியை வளர்க்கிறார்கள். இருப்பதிலேயே ஆக அடக்கும் சாதிக் காரனும் தன் சாதிக்குள் தான் பெண் கட்டுவேன் என்கிறான். இருப்பதிலேயே ஆக ஒடுக்கப்பட்ட சாதிக்காரனும் தன் சாதிக்குள் தான் பெண் கட்டுவேன் என்கிறான். சாதி ஏற்றத்தாழ்வு அளவுக்கு இந்த சாதி அடையாளம் காத்தல் பிரச்சினையும் முக்கியம்.
ஒவ்வொருவனும் ஏதோ ஒரு அடையாளத்தை வலியுறுத்த, மேல்நாட்ட விரும்புகிறான். சாதி என்று ஒன்று இல்லாவிட்டால், பணம், நிறம், மதம் என்று ஏதாவது ஒன்றைப் பிடித்துக் கொள்கிறான். இது சமூக வியாதியா? சாதியெல்லாம் இல்லை என்று சொல்பவர்கள் தமிழகத்தின் ஏதாவது ஒரு சிற்றூருக்குச் சென்று சில நாட்கள் வாழ்ந்து பார்த்தால் உண்மையைப் புரிந்து கொள்ளலாம். சாதிய அடக்குமுறையை சொந்த வாழ்க்கை அனுபவங்களாலேயே நன்கு உணர்ந்திருக்கிறேன்.
Comments
12 responses to “சாதி”
i ready your blog… abt. caste, …Tamil language.. then description abt. u… it was nice.
your writing impressed me lot…but i don’t know your e’ mail id… would u mind giving your id… i can’t write in tamil..pl. sorry for that.. looking forward your….
சமூகத்தின் மனநிலையிலும் மாறுதல் வருவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை
ஹ்ம்ம் 🙁
விஜய் – நன்றி. ravidreams_03 at yahoo dot com என்ற முகவரிக்கு எழுதுங்களேன்.
ஒரு உயிரின் சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஏற்கனவே இன்னொரு உயிரை அழித்து விட்டனர்.
யார் என்ன என்பதை வெளிப்படையாக வைப்பதில் இருந்து உங்களைத் தடுப்பது எது? அந்தப் பையனின் உயிருக்கு முன்னால் சாதிப் பெயரைக் காப்பாற்றுவது என்ன முக்கியம்?
இவ்வாறு “கையறு”நிலையில் பதிவை போடுவதைத் தவிர வேறு எனன செய்வதாக உத்தேசம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு »
இந்த மாதிரிக் கதைகளை எல்லா ஊரிலும் எல்லா சாதியிலும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதனால், குறிப்பிட்டு இது என்ன சாதி என்று குறிப்பிடுவது முக்கியமாகத் தோன்றவில்லை. என்ன சாதி என்பதை விட சாதி அமைப்பின் கொடுமையைச் சுட்டவே இவ்விடுகை.
மீண்டும் சகஜமான 😉 பதிவுகளை எழுதுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
VoW, எங்க ஊர்க் காரர்கள் அருவாளோடு பதிவுலகத்துக்கு வர மாட்டார்கள் என்று துணிவு தான் 😉
பதிவில் எழுதுவதே இன்னும் கொஞ்ச நாளைக்கு குறைவா இருக்கும் என்று 23வது முறையா சொல்லிக்கிறேன் 😉
தமிழன் எனும் இணத்தின் சிதைவுகளுக்கு காரணம் இன்னும் எம்முடனேயே வேரூண்டி இருக்கும் இவ்வாரான பிற்போக்கு குணங்களே.
21 ம் நூற்றாண்டிலும் இன்னும் பண்படாத மனிதர்கள்.
“நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலைக்கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்” என்று இதனால் தான் பாடினார் போலும்.
இதுப் போன்ற சாதி கொடுமைகளை ஒழிப்பதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டு அது செயல் வடிவம் பெறவேண்டும்.
“சாதி வெறியும் தமிழீழச் சட்டமும்” எனும் இந்த ஆக்கத்தை நேரம் இருப்பின் சென்று பாருங்கள்.
ரவி,
மனித உயிரின் உன்னதத்தையும், மதிப்பையும் உனர்த்த வகுக்கப்பட்ட மதங்கலே நிரம் மாரிய பிரகு, மதத்தின் வலித்தோன்ரல்கலாய் வந்த சாதிகல் தடம்புரன்டு மோதிக்கொல்வதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.
சாதி ஒரு தனிமனித சமூகத்தின் அடையாலம். மனித சமூகதின் அடையாலத்தை மார்ரத்தேவையில்லை.
இங்கு உனரப்பட வேன்டியதும், உனர்த்தப்பட வேன்டியதும் ஒன்ருமட்டுமே.
அது
உயிரின் உன்னதம்
//இந்த மாதிரிக் கதைகளை எல்லா ஊரிலும் எல்லா சாதியிலும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதனால், குறிப்பிட்டு இது என்ன சாதி என்று குறிப்பிடுவது முக்கியமாகத் தோன்றவில்லை.//
இன்றுதான் உங்கள் பதிலை பார்த்தேன், கோபியின் இந்த மாதத்திய பின்னூட்டம் எனக்கு மின்னஞலில் வந்தது. உங்கள் பதில் ஒத்துக்கொள்ளும்படி இல்லை.
அந்தப் பையனை கொன்றுவிட்டார்களா? அதை முன்கூட்டியே போலீசாரிடம் சொல்லி தடுக்கவிடாமலிருக்கும்படி உங்களை செய்தது என்ன? நான் ஏற்கனவே சொன்னதுபோல இது ஒரு உயிர்ப் பிரச்சினை. கொல்லப்பட்ட பெண் உங்கள் சாதி, தூரத்து உறவினராகக் கூட இருக்கலாம். இம்மாதிரி ஒரு கையறு நிலையில் ஒரு பதிவை போட்டு மனசாட்சியை சமாதானம் செய்தீர்கள் என்றால், மன்னிக்கவும் you too are an accessory after the fact.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அந்தப் பையனை கொன்றுவிட்டார்களா? அதை முன்கூட்டியே போலீசாரிடம் சொல்லி தடுக்கவிடாமலிருக்கும்படி உங்களை செய்தது என்ன? //
எல்லாம் முடிந்த பிறகே செய்தி எனக்குத் தெரிந்தது. வெளிநாட்டில் இருந்தேன்.
இந்த மாதிரி வழக்குகளில் காவலர்கள் எந்த அளவு நீதிக்குத் துணையாக இருப்பார்கள் என்பது நீங்கள் அறியாதது அல்ல.
சாதி அமைப்பினால் நேரடியாகவே பாதிக்கப்பட்டு, காவலர்-மனித உரிமை ஆணையம் என்று அலைந்து எதவும் கதைக்கு ஆகாது என்று வெறுத்த அனுபவம் எங்கள் குடும்பத்துக்கு உண்டு. தனிப்பட்ட குடும்ப விவரங்களை இதற்கு மேல் பொதுவில் தெரிவிக்க இயலாது என்பதை உங்களை விட யாரும் அறியார்.
// இம்மாதிரி ஒரு கையறு நிலையில் ஒரு பதிவை போட்டு மனசாட்சியை சமாதானம் செய்தீர்கள் என்றால், மன்னிக்கவும் you too are an accessory after the fact.//
ஊழல், ஈழப் படுகொலைகள் என்று எந்தப் பிரச்சினைக்கும் பதிவு “மட்டும்” போடும் எல்லாருக்கும் இது பொருந்தும். குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கிறேன் 🙁