சென்னை வலைப்பதிவர் பட்டறை திட்டமிடப்பட்டது எப்படி?
989 மடல்கள். இரண்டு மாத உழைப்பு, திட்டமிடல். நூற்றுக்கணக்கில் தொலைபேசி உரையாடல்கள். ஒவ்வொரு வாரமும் பட்டறை குறித்த திட்டமிடலுக்கான நேரடி சந்திப்புகள். அரங்கத்தை இறுதி செய்வது, குறுந்தகடு, நூல் அச்சிடல் வேலை என்று இவற்றுக்காக குறைந்தது 15 மனித உழைப்பு நாட்களாவது செலவு இடப்பட்டிருக்கும். இவற்றின் விளைவாகத் தான் பதிவர் பட்டறை சாத்தியமானது.
மே 20, 2007 கோவை வலைப்பதிவர் பட்டறை முடிந்து ஒரு வாரத்தில் இதற்கான திட்டமிடல் தொடங்கி விட்டது. நுட்பத்தை முன்னிறுத்தி பட்டறை நடை பெற வேண்டும் என்ற ஒத்த நோக்கும் புரிந்துணர்வும் உள்ள நண்பர்களான பாலபாரதி, பொன்ஸ், விக்கி, icarus பிரகாஷ், மா.சிவகுமார் ஒன்று கூடினோம். தொடர்ந்து ஆர்வம் காட்டிய லக்கிலுக், சிந்தாநதி எங்களுடன் இணைந்து கொண்டார்கள். இதற்கான ஒரு கூகுள் குழுமம் உருவாக்கப்பட்டது. இன்றோடு அதில் 989 மடல்கள். திட்டமிடல் வரிசை:
1. நிகழ்வு நாள் எல்லாரும் கலந்து கொள்ளத் தக்க விடுமுறையான ஞாயிறாக இருக்க வேண்டும். நிகழ்வு குறித்த விழிப்புணர்வு பரவ 2 மாதமாவது அவகாசம் வேண்டும்.
2. அரங்கம் எல்லாராலும் எளிதாக அடையத்தக்கதாக இருக்க வேண்டும். இணைய, கணினி வசதி உள்ள வகுப்பறைகள் அருகில் இருக்க வேண்டும்.
3.அரங்கையே இலவசமாகப் பெற வேண்டும். வாடகை அரங்குகள் செலவே 30, 000 ரூபாய் பிடிக்கலாம். நன்கொடையில் நடத்தும் நிகழ்வுக்கு இது கட்டுபடியாகாது. கல்லூரி, பள்ளி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடத்தினால் அவர்களின் ஒத்துழைப்பும் நிகழ்வுக்கு அங்கீகாரமும் கிடைக்கும். இந்த அடிப்படையில் ஜூன் மாதப் பாதியிலேயே சென்னைப் பல்கலைக்கழக அரங்கு அமைந்தது.
4. பணிகளைப் பிரித்து கொண்டோம்.
பதிவர்களுடனான தொடர்பு, ஒருங்கிணைப்பு – பொன்ஸ்.
ஊடகங்கள், ஆதரவாளர்கள் தொடர்பு – விக்கி, மா.சி, பிரகாஷ்
நிதி நிர்வாகம் – பாலபாரதி, மா.சி
உள்ளடக்கம் – மா.சியும் நானும்.
குறுந்தகடு, பை, banner, கணிச்சுவடி அச்சிடல், சாப்பாடு உள்ளிட்ட logisitics – பாலபாரதி, லக்கி லுக்
banner, bit notice, logo, cd cover உள்ளிட்ட அனைத்து design பணிகள் – லக்கி லுக், சிந்தாநதி
CD உருவாக்கம் – நந்தா, ப்ரியன்
பதிவு, தளம் ஒருங்கிணைப்பு – விக்கி, நான். (விக்கி மென்பொருள், wordpress தான் நமக்கு பிடிச்ச விசயமாச்சே 🙂 )
ஒவ்வொருவரின் பொறுப்பும் வேலைகளில் உள்ள முன்னேற்றமும் தினமும் மடலாடற்குழுவிலும் அதற்கான கூகுள் docsலும் ஆவணப்படுத்தப்பட்டது.
இணைய வழித் தொடர்பில் இருந்தவர்கள் பெயரை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். நேரடியாக வராததால் களத்தில் பங்காற்றிய இன்னும் பலரின் உழைப்பை குறிப்பிடாமல் விட்டிருக்கிறேன்.
5. ஏற்கனவே பதிபவர்களுக்கு unconference தலைப்புகள். புதிதாக வருபவர்களுக்கு தலைப்பு வாரியாகப் பயிற்சி அறை. வகுப்பு, பாடம் இல்லாமல் பொறுமையாகப் பயில ஒரு அறை. எல்லாரும் ஒரே நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றாமல் விரும்பிய தலைப்புகளில் கலந்து கொள்ளும் வகையில் இப்படி திட்டமிடப்பட்டது.
கொள்கைகள்
தமிழ் வழி செயல்பாடு – மடல் உரையாடல். நிகழ்வு முழுக்க தமிழில்.
பட்டறைக்கான சின்னம் முதலில் blog camp என்பதைக் குறிக்கும் வண்ணம் ஆங்கிலத்தில் இருந்தது. தமிழர் தமிழுக்காக நடத்தும் நிகழ்வில் ஆங்கிலம் எதற்கு என்று உணரப்பட்டு பின் தமிழில் வடிவமைத்தோம்.
தமிங்கிலத் தட்டச்சைக் காட்டிலும் திறமான தமிழ்99 முறையை முன்னிறுத்திப் பயிற்சி அளிப்பது.
திறவூற்று ஆதரவு – குறுந்தகட்டில் உள்ள மென்பொருள்கள் எல்லாம் திறவூற்று மென்பொருள்கள்.
நிதி மேலாண்மை – வரவு, செலவுக் கணக்குளைப் பொதுவில் வைத்தல். பட்டறை ஒருங்கிணைப்பாளர்களின் மீதான நம்பகத்தன்மைக்கும் திறந்த செயல்பாட்டுக்கும் இது அவசியம். நன்கொடை பணம் மீதமானால் அதையும் அடுத்து வரும் பட்டறை, கணித்தமிழ் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவது.
ஆடம்பரம் குறைப்பு – தரமான உணவு ஆனால் நியாயமான செலவில். பட்டறைக்கான டி-சட்டை அடிக்கலாம் என்று யோசித்தோம். ஆனால், அதிகம் பயனில்லாத டி-சட்டையை விட அந்தச் செலவில் இன்னொரு பட்டறையே நடத்திவிடலாம் என்று அந்த எண்ணத்தைக் கை விட்டோம்.
ஆதரவாளர்கள் – தனி நபர்களே எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி பெயரைக் கூட வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஆயிரக்கணக்கில் நன்கொடைகளை அள்ளி அள்ளி வழங்கும்போது, அவர்களுக்கு உரிய மரியாதை தரும் வகையிலேயே ஆதரவாளர்களைப் பெற்றுக் கொண்டோம். வணிக நோக்குக்காக 1,000 அல்லது 2,000 கொடுத்து கடை விரிக்க நினைத்தவர்கள், விளம்பரத் தட்டி வைக்க விரும்பியவர்களை வரவேற்கவில்லை. பட்டறை எங்கும் விளம்பரங்களாக நிறைந்து பொருட்காட்சி போல் ஆகி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். பணமாகப் பெற்றுக் கொள்வதை விட புத்தகம் அச்சிடல், அரங்கு உதவி, வாடகைக் கணினி என்று பொருளாகப் பெற்றோம். இதன் மூலம் நிகழ்வில் அவர்களும் அங்கமாக உணர முடியும் அல்லவா? தமிழ் எழுது மென்பொருள்கள் விற்கும் நிறுவனம் ஒன்று அணுகியது. இலவச எ-கலப்பை இருக்க காசு கேட்டு விற்கும் மென்பொருள்களை ஆதரிக்கக்கூடாது என்று அவற்றைத் தவிர்த்து விட்டோம்.
இயன்ற அளவு திறந்த திட்டமிடல் – யார் என்ன தலைப்பில் பேசப் போகிறார்கள், எப்படி நிகழ்வு நடக்கப்போகிறது என்பதைக் கூகுள் குழுமங்கள், பதிவு இடுகைகள், தளம் மூலம் இயன்ற அளவு திறந்த முறையில் திட்டமிட்டோம்.
இலவச அனுமதி – காசு இல்லை என்ற ஒரே காரணத்துக்காக யாரும் நிகழ்வில் கலந்து கொள்ளாமல் போய் விடக்கூடாது. காசு கட்டி தான் கலந்துக்கணுமா என்ற அலட்சியமும் சலிப்பும் எவருக்கும் வரக்கூடாது. கணினிப் பயன்பாடும், கணினியில் தமிழும் பரவ வேண்டும் என்றால் இது போன்ற விசயங்களை இலவசமாகவே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். நாம் அறிந்ததை இன்னொருவருக்கு சொல்லித் தந்து உதவ கட்டணம் தேவை இல்லை தானே?
பட்டறையின் முக்கியத்துவம்:
எனக்குத் தெரிந்து,
இந்திய மொழிகளில் வலைப்பதிவு, கணிமை ஆகியவற்றில் இவ்வளவு பெரிய அளவில் மக்களை ஒன்றுகூட்டிய முதல் மொழி தமிழ் தான்.
எந்த ஒரு வணிக நிறுவனமோ அமைப்போ இதை நடத்த வில்லை. மக்களால் மக்களுக்காக மக்கள் பணத்தில் செய்யப்பட்ட நிகழ்வு. பொதுவாக ஒரு நிகழ்வை எப்படி இணைய வழி ஒருங்கிணைப்பது, திறந்த முறையில் திட்டமிடுவது, பெறும் நன்கொடைக்கு எப்படி நம்பகத்தன்மையை உறுதி அளிப்பது என்பதற்கு இது ஒரு முயற்சி.
ஆன்மிகம், இலக்கியம், சமையல், ஜோசியம், பட்டிமன்றம், திரைப்படம் என்ற அலுத்துப் போன வட்டத்தைத் தாண்டி நிகழுலக நவீனத் தேவைகளுக்காக தமிழை முன்னெடுத்து இருக்கிறோம். நுட்பத்தை மக்களின் தாய்மொழியிலேயே சொல்லித் தர முடியும். அது இன்னும் இலகுவாகப் போய்ச் சேரும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
பட்டறையில் கலந்து கொண்டவர்கள், நடத்தியவர்கள் அனைவரும் இளைஞர்கள். வழக்கமாக வயது கூடியவர்கள் தான் தமிழ் சார்ந்த நிகழ்வுகளில் ஒருங்கிணைப்பார்கள். இளைஞர்களுக்குத் தமிழில் ஆர்வம் இல்லை என்று யார் சொன்னது? 🙂
நிகழ்வில் பங்களித்தவர்களில் பலர் சமூகத்தின் உயர்தட்டு வர்க்கத்தில் இருப்பதாகப் பார்க்கப்படும் கணினி தொழிற்துறையினர். பணமும் நுனி நாக்கு ஆங்கிலமும் உலகப் பார்வையும் வந்தாலும் தமிழார்வமும் சமூக அக்கறையும் குன்றத் தேவை இல்லை என்பதற்கான அத்தாட்சி.
சமயம், சீரழிவில் இருந்து மீட்பு, கல்வி, மருத்துவம், போர்ச்செலவு, ஊர் வளர்ச்சி ஆகியவற்றுக்கே இது வரை மக்கள் நன்கொடை அளித்திருக்கிறார்கள். மொழிக்காகவும் நன்கொடை அளிப்பார்கள், அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறோம்.
“அவையில் கூடி இருக்கும் ஆன்றோர்களே, அவரே, இவரே, பெரியோரே, தாய்மாரோ” போன்ற கல் தோன்றா காலத்து சம்பிரதாயங்களை மூட்டை கட்டி unconference முறையைப் பயன்படுத்தி இருக்கிறோம்.
இணைய வழி ஒருங்கிணப்பு, இயன்ற அளவு திறந்த திட்டமிடல்.
பட்டறையின் கொள்கைக்கு உடன்படும் விளம்பரதாரரைப் பெற்றுக் கொள்ளுதல். 🙂
கணினி என்றாலே ஆங்கிலம் தானோ என்ற எழுதப்படாத mythஐ உடைக்க முயலுதல்.
தமிழ் வலைப்பதிவுலகுக்கு முதல் பெரிய ஊடக வெளிச்சம்.
அடுத்து என்ன?
ஒரு நிகழ்வின் முதல் வடிவத்தைக் கொண்டு வர தான் உழைப்பு அதிகம் தேவைப்படும். ஒரு நாள் பட்டறை என்பதற்காக இவ்வளவு மெனக்கடவில்லை யாரும். இது ஒரு இயக்கம் போல் தமிழ்நாடு எங்கும் பரவ வேண்டும் என்பது தான் எங்கள் ஆவல். அடுத்த பட்டறையை நடத்துபவர்களுக்கான என் பரிந்துரைகள்:
– தனி ஆளாக இறங்காதீர்கள். தனி ஆளாக செய்யாதீர்கள். செய்யவும் இயலாது. தவிர, திறந்த முறையில் செய்வதால் – இது நம்ம விழா – என்று உணர முடிவது சிறப்பு. இந்த உணர்வைத் தொடரச் செய்வது உங்கள் பொறுப்பு
– அரங்கம் வைத்து பெரிய அளவில் செய்ய வேண்டும் என்று தான் இல்லை. செலவும் அதிகம். உளைச்சலும் அதிகம்.
– குறுந்தகடு, கணிச்சுவடி என்று எல்லாம் தயாராக இருக்கிறது. அதற்காக மெனக்கடும் வேலை மிச்சம். ஒரு அரங்கம், பயிலகம், வாடகைக்கணினிகள், நுட்பம் அறிந்து உதவ விவரமான ஓரிரு பதிவர் இருந்தால் பட்டறையை எளிதாக நடத்தலாம். ஒவ்வொரு பயிற்சிக்கும் ஒரு பதிவர் என்று தேவை இல்லை. நான்கைந்து பயிற்சிகளை ஒரே பதிவரே தந்து விடலாம். குறுந்தகட்டில் சில பயிற்சிகளின் நிகழ்பட விளக்கமும் உண்டு. அதையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
– அடுத்த பட்டறைகளில் பயிற்சி வகுப்புகள் அதிகமாக இருக்கட்டும். ஆண்டுக்குப் பல முறை கூடி வலைப்பதிவு பற்றி unconferenceல் உரையாடுவதால் பயனில்லை. கலந்துரையாடல்கள் கூடிய நிகழ்வை ஆண்டுக்கு ஒரு முறை பெரிய அளவில் செய்யலாம். திட்டமிடலுக்குப் போதிய அவகாசமும் கலந்து கொள்ள முன்னணிப் பதிவர்களுக்குத் தூண்டுகோலாகவும் இருக்கும். அடிக்கடி பட்டறை என்றால் ஊடக வெளிச்சமும் குறையும். பதிவர் ஆர்வமும் குறையும். போதிய இடைவெளி வேண்டும். வெளிச்சம் இடாமல் பதிவர் அல்லாத பொதுமக்கள், மாணவர்களுக்கு அடிக்கடி நடத்தலாம். வலைப்பதிவுக்கான பட்டறை என்பதைக் காட்டிலும் கணினி, இணையத்தில் தமிழ் குறித்து வலைப்பதிவர்கள் நடத்தும் பட்டறையாக இருந்தால் நன்றாக இருக்கும். பட்டறையின் ஒரு பகுதியாக வலைப்பதிவை அறிமுகப்படுத்தலாம்.
– இதற்காகப் பதிவர் சங்கம் பதிவது என்று இறங்கினால் ஏகப்பட்ட அரசியல், நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. இப்போது உள்ளது மாதிரி ஆர்வலரே கூடி செய்யலாம். அது இறுக்கத்தைக் குறைக்கிறது. பலரின் பங்களிப்பை அளிக்கிறது.
– blogger, தமிழ்த்திரட்டி என்ற வட்டத்தில் இல்லாமல் wordpress, google reader போன்றவற்றையும் அறிமுகப்படுத்துங்கள்.
– தயவு செய்து தவறான தமிங்கிலத் தட்டச்சைப் பரப்பி விடாதீர்கள். சரியான முறையைச் சொல்லிக் கொடுப்பது நம் கடமை. தமிழ்99 முறையில் தமிழ்த் தட்டச்சைச் சொல்லித் தாருங்கள்.
Tamilbloggers.org
தற்போது தமிழ் வலைப்பதிவுலகத்துக்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரத் தளம் இல்லை. தமிழ்மணம் முதலிய திரட்டிகள் இருந்தாலும் அவை நிறுவன மயப்படுத்தப்பட்டுள்ளதால் அவற்றின் பெயரை நாம் பயன்படுத்தி ஆதரவாளர்களைத் தேட முடியாது. ஆதரவாளர்களுக்கு நம் பலத்தைக் காட்ட, இது போன்று நடவடிக்கைகளுக்கு ஒரு களம் தேவை. இதை முன்னிட்டு Tamilbloggers.orgப் பலப்படுத்துவது நல்லது.
ஒவ்வொரு வலைப்பதிவு வாசகர், பதிவரும் இந்தத் தளத்தில் பயனர் கணக்கு உருவாக்கினால் எத்தனை பேர் வாசிக்கிறார்கள், எழுதுகிறார்கள் என்று தமிழ் வலைப்பதிவுலகத்தின் பரப்பை அளவிட முடியும். தமிழ் வலைப்பதிவர் உதவிப் பக்கத்தை இங்கு நகர்த்தலாம். தமிழில் கணினி, பதிவு குறித்து விளக்க, உரையாட இங்கு ஒரு மன்றம் அமைக்கலாம். வலைப்பதிவு தொடர்பான உதவிக் கட்டுரைகளை விக்கிப்பக்கங்களில் தொகுக்கலாம்.
இந்தத் தளம் பதிவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பதிவர்களின் நலனை முன்னிறுத்திச் செயல்படுவதாக இருக்கும். அரசியல் புகாமல் நுட்பம் பேசும் இடமாக இருக்கும். ஒரு வலுவான தளத்தைக் கட்டி எழுப்ப முடியும் என்றால் அதைச் சுட்டி ஆதரவாளர்களைப் பெற முடியும். தளத்தில் விளம்பரங்களைப் பெற்று வெளியிட்டால் அதுவே கூட அடுத்தடுத்த பட்டறைச் செலவுகளுக்கு உதவும். நன்கொடை முறை நன்று தான் என்றாலும் கூடுதலாக எவ்வளவு பொருள் ஈட்ட முடியுமோ ஈட்டி அவற்றைப் பதிவுலக மேம்பாட்டுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நேரடியாகக் களத்தில் இருந்து செயல்பட்டவர்களுக்கும் தொடர்ந்து இந்த முயற்சியை முன்னெடுக்க இருப்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Comments
23 responses to “சென்னை வலைப்பதிவர் பட்டறை திட்டமிடப்பட்டது எப்படி?”
வேறெந்த வார்த்தையும் கிடைக்காததால் ‘பாராட்டுக்கள்’என்ற வார்த்தையை இடுகிறேன்.வலைப்பதிவு தொடர்பான மடல்கள்,செய்திகள்,பின்னூட்டங்கள் ஆகியவைகளைக் கடந்த சில வாரங்களாகப் படித்து வந்ததில் ஒருவிஷயம் புலப்பட்டது. அருமையான நண்பர்கள்.யாருடைய எழுத்திலும் ஈகோ காணப்படவில்லை. அற்புதமான குழு.அனைவருமே கணிணி சார்ந்த துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள்,இளைஞிகள்.மொழிக்காக இத்தனை சிரத்தை எடுத்துக் கொண்டு உழைத்தது கண்டேன்.பட்டறை அரங்கில் குழுவினர் முகத்தில் எந்தப் பதட்டமும் காணப்படவில்லை.துல்லியமாகத் திட்டமிட்டு உழைத்தது வீண் போகவில்லை.பட்டறை வெற்றியடைந்தது குறித்து ஒவ்வொருமே பெருமிதம் கொள்ளலாம்.நண்பர் திரு மா.சிவகுமார் ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தார்.”அமர்வதற்கு நாற்காலிகள் போதவில்லையென்றால்,நாமே நாற்காலிகளைத் தேடி எடுத்துப் போடுவோம்” என்று.இத்தகைய மனப் பக்குவம் அனைவருக்கும் அவ்வளவு எளிதாக வந்துவிடாது.குழு உறுப்பினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழ் வலைப் பதிவர் பட்டறை பலத்த சிரமத்தின் மத்தியில் இனிதாக முடிவுற்ற சேதி கேட்டு புளாங்கிதம் அடைந்தேன், இதில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நல்ல தகவல்கள்…!!! நன்றி…!!!
ரவி,
இனி இது போன்ற பட்டறைகள் எங்கு நடந்தாலும், இந்தப் பட்டறையின் சாயல்கள் கண்டிப்பாக இருக்கும்.
மிகவும் நல்ல முறையில் நடந்தேறியது.
நன்றிகள் பல அனைவருக்கும்.
மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்தும் பாராட்டும்…
அருமையான திட்டமிடலும், அதற்கான பலனும்.
நன்றியும், வாழ்த்துக்களும்!
வேறெந்த வார்த்தையும் கிடைக்காததால் ‘பாராட்டுக்கள்’என்ற வார்த்தையை இடுகிறேன்.வலைப்பதிவு தொடர்பான மடல்கள்,செய்திகள்,பின்னூட்டங்கள் ஆகியவைகளைக் கடந்த சில வாரங்களாகப் படித்து வந்ததில் ஒருவிஷயம் புலப்பட்டது. அருமையான நண்பர்கள்.யாருடைய எழுத்திலும் ஈகோ காணப்படவில்லை. அற்புதமான குழு.அனைவருமே கணிணி சார்ந்த துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள்,இளைஞிகள்.மொழிக்காக இத்தனை சிரத்தை எடுத்துக் கொண்டு உழைத்தது கண்டேன்.பட்டறை அரங்கில் குழுவினர் முகத்தில் எந்தப் பதட்டமும் காணப்படவில்லை.துல்லியமாகத் திட்டமிட்டு உழைத்தது வீண் போகவில்லை.பட்டறை வெற்றியடைந்தது குறித்து ஒவ்வொருமே பெருமிதம் கொள்ளலாம்.நண்பர் திரு மா.சிவகுமார் ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தார்.”அமர்வதற்கு நாற்காலிகள் போதவில்லையென்றால்,நாமே நாற்காலிகளைத் தேடி எடுத்துப் போடுவோம்” என்று.இத்தகைய மனப் பக்குவம் அனைவருக்கும் அவ்வளவு எளிதாக வந்துவிடாது.குழு உறுப்பினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
[…] உருவான விதம் குறித்து ரவிஷங்கரின் கட்டுரை. பட்டறைக்கான சின்னம் முதலில் blog camp […]
கலக்கிட்டீங்க!
Ravi
I appreciate all your efforts.
But I have some contradictions.
Mainly the location – Many confused this with the Madras University & people from other places found it difficult to reach it on time
And Indian Blogcamp doesn’t had any entry fee & it was free. But I don’t think comparing this with the blog camp is right. Tamil being a vernacular language, I think the leverage, the sponsors, the reach, the no. of participants for this event (Valai Pattarai) is really huge & a great success. But still at this point of time, it is not appropriate in comparing these 2 events.
Regards
Venkatramanan
Ravi I don’t know how to express my feeling here. But its really great and as a tamil blogger I am really very proud of yourself.
Hurray……..
Bage
http://www.oorodi.com
அனைவருக்கும் வாழ்த்துக்கள். உண்மையில் தமிழ்ச் சூழலில் இது ஒரு புரட்சிதான்.
//wordpress, the knowledge foundation என்று ஏதேனும் அமைப்பு சார்ந்தே இது வரை செய்யப்பட்டிருக்கிறது. பொதுவாக ஒரு நிகழ்வை எப்படி இணைய வழி ஒருங்கிணப்பைது, திறந்த முறையில் திட்டமிடுவது, பெறும் நன்கொடைக்கு எப்படி நம்பகத்தன்மையை உறுதி அளிப்பது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.//
எதாவது ஒரு அமைப்பாக, மையக் குழுவாக செயற்பட்டு இருப்பீர்கள்தானே? இதைச் சற்று விளக்குங்களேன்.
அமைப்பு இல்லாமல் என்று விட்டு, பின்னர் Tamilbloggers.org முன்வைக்கின்றீர்கள். அது தவறு என்று சொல்லவில்லை. விளக்கினால் நன்று. நன்றி.
(பிற இந்திய மொழி வலைப்பதிவர்களும் பட்டறைகளை நிகழ்த்தியிருக்கின்றார்கள். அனால் இந்த முறையிலோ, அல்லது அளவிலோ அல்ல். )
subramanian S.K, திண்டுக்கல் சர்தார் – நீங்கள் இருவரும் ஒருவரா 🙂
பாலாஜி, பகீ, சுந்தரவடிவேல், ரவி, வெயிலான், வாசகன், bala subra, – நன்றி.
வெங்கட்ரமணன் – BlogCamp.in 2006 ல் கட்டணம் விதிக்கப்பட்டதா என்று கேட்டிருக்கிறேன். உறுதிப் படுத்திக் கொண்டு கட்டுரையில் பிறகு குறிப்பிடுகிறேன். இந்தியா முழுதும் உள்ள பொது மொழியான ஆங்கிலத்தில் வலைப்பதிவர்களின் நிகழ்வுடன் மாநில மொழியான தமிழில் எழுதும் வலைப்பதிவர்களின் பட்டறையை ஒப்பு நோக்கினாலும் கூட நாம் சிறப்பாகச் செய்திருப்பது நல்ல விசயம் தான்.
நற்கீரன் – wordpress, the knowledge foundation ஆகியவை சட்டப்படி பதியப்பட்ட நிறுவனங்கள். அவற்றின் நிர்வாகத்துக்குள் யார் வேண்டுமானாலும் புக முடியாது. அது போன்று எந்த ஒரு நிறுவனமோ சங்கமோ நேற்றைய பட்டறைக்கு உருவாக்கப்படவில்லை. நிகழ்ச்சி நிரல் முதற்கொண்டு பெரும்பாலும் தன்னார்வலர்கள் விரும்பிய தலைப்புக்கு இடம் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சி நிரலை ஒரு சிலர் உருவாக்கி முடிவு செய்து திணிக்கவில்லை. இப்படி ஒரு நிகழ்வைச் செய்கிறோம் என்பதை அறிவிப்பதற்கான விளம்பரப்பலகையாகத் தான் tamilbloggers.org பயன்பட்டிருக்கிறது. ஊடக வெளிச்சம், நிகழ்வுக்கு professional look வர வேண்டும் என்பதற்காக தனித்தளம் பதிந்து செய்தோம். இல்லாவிட்டால், இது கூட அவசியம் இல்லை தான். கிட்டத்தட்ட நாம விக்கிபீடியா கட்டுரை எழுதும் styleல் இது ஒரு Open / wiki Organising என்று சொல்வேன் 🙂
நிதி விடயத்தை எப்படி கையாண்டீர்கள். சில தீர்க்கமான முடிய்வுகள் எடுத்திருக்கின்றீர்கள், எவ்வாறு செய்தீர்கள். குழு நிலையில் தானே. எடுத்த முடிவுகள் எங்கு அலசப்பட்டன என்று சுட்ட முடியுமா?
Ravi
Thanks for your response.
But why I am so confident that BlogCamp.in was free because I was a participant of that event!
Regards
Venkatramanan
ஆம்.இருவரும் ஒருவர் தான்.வலைப் பதிவுக்கு முற்றிலும் புதியவன்.மேலும் முதல் பதிவு அனுப்பும்போது மின்தடங்கல் ஏற்பட்டுவிட்டது.எனவேதான் மறுமுறையும் பின்னூட்டமிட்டேன்.புதிய அனுபவம்.எனவே புனைப் பெயரில் இடுவதா சொந்தப் பெயரில் இடுவதா என கொஞ்சம் திகைத்து விட்டேன்.ம்.பாடப் பாட ராகம்.
பாராட்டுக்கள் சார்
வலைப்பதிவர் பட்டறை குறித்து சகோதரி பொன்ஸுடன் பேசிக்கொண்டிருந்த போது வேலைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன என்று சொன்னார்கள். பிறகு பல சொந்த வேலைகளால் சரியாக கவனிக்க முடியாமல் போய்விட்டது. உங்கள் பதிவின் மூலம் எவ்வளவு ஈடுப்பாட்டுடன் நல்லதொரு பயனுள்ள பட்டறையை வெற்றிகரமாக நடத்தியுள்ளீர்கள் என்பது புரிந்தது. இதற்காக உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் நன்றியுடன் பாராட்டுக்கள்.
பாராட்டுக்கள்.
பங்களிப்புன்னு ஒன்றும் செய்யவில்லையே என்று ஆதங்கப்பட வைத்துவிட்டீர்கள்.அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.
///கணினி என்றாலே ஆங்கிலம் தானோ என்ற எழுதப்படாத mythஐ உடைக்க முயலுதல்.///
பாராட்டுக்கள்.
இதையும் தமிழிலேயே சொல்லியிருக்கலாமே :-))
-அபுல்
[…] Ravishankar – சென்னை வலைப்பதிவர் பட்டறை திட்டமிடப
[…] ஏற்பாடு செய்யப்படவில்லை. 2007 சென்னை வலைப்பதிவர் பட்டறை போன்ற முயற்சியின் தொடர்ச்சியாக […]
[…] ஏற்பாடு செய்யப்படவில்லை. 2007 சென்னை வலைப்பதிவர் பட்டறை போன்ற முயற்சியின் தொடர்ச்சியாக […]