நவீன அறிவியல் மருத்துவத்தின் (அல்லோபதி என்கிற ஆங்கில மருத்துவம்) மீது மக்கள் வைக்கும் இரு பெரும் குற்றச்சாட்டுகள் என்ன?
* தனியார் மருத்துவமனைகளில் தேவையற்ற சோதனைகள், மருந்துகள் தந்து காசு பிடுங்குகிறார்கள்.
* தவறான மருத்துவம் பார்க்கிறார்கள். ஒரு மருத்துவமனையில் குணம் ஆகாதது இன்னொரு மருத்துவமனையில் குணமாகிறது. இவர்களை எப்படி நம்புவது?
இது தான் உங்கள் பிரச்சினை என்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் அரசு பொது மருத்துவமனை. அங்கு மருந்து, அறுவை சிகிச்சை, சோதனை முதற்கொண்டு அனைத்தும் இலவசம். தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் பாடம் நடத்தும் பேராசிரியர்கள் தான் அங்கு மருத்துவம் பார்க்கிறார்கள். எனவே, அவர்கள் சரியாக மருத்துவம் பார்ப்பார்களா என்ற ஐயமே உங்களுக்கு வேண்டாம்.
ஆனால், உங்கள் குறை என்ன?
அரசு மருத்துவமனையில் கூட்டமாக இருக்கிறது. காக்க வைக்கிறார்கள். சுத்தமாக இல்லை. என்னைக் கனிவுடன் கவனித்துப் பொறுமையாகப் பதில் சொல்வதில்லை (இந்தக் குற்றச்சாட்டு உண்மை இல்லை என்பது வேறு விசயம்)
முதலில், இப்படிப்பட்ட குறைகளே பலருக்கு ஊடகம் எழுப்பும் பிம்பங்களால் வந்தது தான். நேரடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்ப்போர் சிலரே. அப்படியே இது தான் உங்கள் குறை என்று நீங்கள் தனியாருக்குச் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் அங்கு செலுத்தும் தொகை உங்கள் egoவுக்கும் சேர்த்து தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எவ்வளவு பெரிய தனியார் மருத்துவமனைக்குச் செல்கிறீர்களோ, அந்த அளவு காசு வாங்கிக் கொண்டு உங்கள் egoவைக் குளிர்விப்பார்கள். தனியறை, AC, TV மற்றும் இன்ன பிற வசதிகள் இருக்கும். இருக்கிற குறைந்த நிதியில் கோடிக்கணக்கானோர் உயிரைக் காப்பாற்றுவது தான் அரசின் முதல் கடமை. உங்கள் egoவைக் குளிர்விப்பது அன்று.
ஒன்று புரிந்து கொள்ளுங்கள். அரசு பேருந்தில் ஏறினாலும் தனியார் பேருந்தில் ஏறினாலும் இலக்கு ஒன்று தான். நீங்களே உங்களைப் பணக்காரர் என்று நினைத்து தனியாக helicopter வாடகைக்கு எடுத்து ஆண்டி ஆகாதீர்கள். அதை விட மோசம், போகாத ஊருக்கு வழிகாட்டும் ஏமாற்று மருத்துவத்தில் சிக்கி சுடுகாட்டுக்குப் போகாதீர்கள்.
காண்க – முகநூல் உரையாடல்