எத்தனை பேர்?

இன்று நம்மை நினைத்துக் கொள்பவர்கள் எத்தனை பேர்?

நம் வெற்றிக்கு வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி விருந்து கேட்காமல், அதைத் தன் வெற்றியாக கருதி அடுத்தவர்களிடம் சொல்லி மகிழ்பவர்கள் எத்தனை பேர்?

நம் இழப்புக்கு வருந்துபவர்கள் எத்தனை பேர்?

எப்படி இருக்கிறாய் என்று கேட்பதற்காக மெனக்கெட்டு அழைப்பவர்கள் எத்தனை பேர்?

அடுத்து நம்மை எப்போது பார்ப்போம் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்?

நாம் கேட்காமலேயே தேவையறிந்து உதவுபவர்கள் எத்தனை பேர்?

கடனாகக் கொடுக்காமல், கொடுக்கும் பணம் நமக்கு உதவுமே என்று தருபவர்கள் எத்தனை பேர்? இலட்சக்கணக்கில் தந்த பணத்தையும் ஆண்டுக் கணக்கில் திரும்பக் கேட்காமல் மறந்திருப்பவர் எத்தனை பேர்?

நம் பிறந்த நாள் வர ஆண்டு முழுக்க காத்திருப்பவர்கள் எத்தனை பேர்?

மறக்காமல் நமக்கு மெனக்கெட்டு கடிதம் எழுதுபவர்கள் எத்தனை பேர்? நாம் எழுதிய கடிதங்களை சேர்த்து வைத்திருப்பவர்கள் எத்தனை பேர்?

இப்படிச் செய்தால் நமக்குப் பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்துச் செய்பவர்கள் எத்தனை பேர்?

நம் காயங்களுக்காக நம்மை விட துயரப்படுகிறவர்கள் எத்தனை பேர்?

கேட்டு வாங்கி நம் புகைப்படங்களைப் பார்ப்பவர்கள், சேர்த்து வைப்பவர்கள் எத்தனை பேர்?

தனக்கொன்று வாங்குகையில் நமக்கும் ஒன்று சேர்த்து வாங்குபவர்கள் எத்தனை பேர்? தனக்கு ஒன்றை வாங்காமல் நமக்காகப் பொருள் சேர்ப்பவர் எத்தனை பேர்?

தனக்கு எது எளிது என்பதைப் பார்க்காமல் நமக்கு எது நல்லது என்று பார்ப்பவர்கள் எத்தனை பேர்?

நோயுற்ற போது உடனிருந்து பார்ப்பவர்கள் எத்தனை பேர்?

நாடு தாண்டியும் நம் திருமணத்துக்காக மட்டும் வருபவர்கள் / வந்து போனவர்கள் / வரப் போகிறவர்கள் எத்தனை பேர்?

ஒரு மன வருத்தத்தில், அகம் பார்க்காமல் தானே முன்வந்து இறங்கிப் பேசுபவர்கள் எத்தனை பேர்?

நமக்கு ஒன்று என்றதும் ஓடி வருபவர்கள் எத்தனை பேர்?

நமக்காகப் பரிந்து பேசுபவர்கள், நாம் இல்லாத இடத்தில் நம்மைப் பற்றி அவதூறு வந்தால், அதற்காக வெகுண்டு பேசுகிறவர்கள் எத்தனை பேர்? நம்மைப் பற்றி நினைத்து இன்னொருவரிடம் சிலாகித்துச் சொல்பவர்கள் எத்தனை பேர்?

நாம் வாங்கித் தந்த சிறு பொருளையும் பொக்கிஷம் போல் வைத்திருப்பவர்கள் எத்தனை பேர்?

நடுநிசிப் பொழுதில் நமக்கு ஒரு கலக்கம் என்றால் தயங்காமல் நாம் அழைத்து எழுப்பக்கூடியவர்கள் எத்தனை பேர்?

நம்மிடம் உரிமையுடன் ஒன்றைக் கேட்டு வாங்க எத்தனை பேர்? கேட்காமலேயே ஒன்றை எடுத்துக் கொள்ள உரிமை உள்ளவர்கள் நமக்கு எத்தனை பேர்?

நம் வெற்றிக்காக, உடல் நலத்துக்காக, நன்மைக்காக வேண்டிக் கொள்கிறவர்கள் எத்தனை பேர்?

நம் உறவினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் எத்தனை பேர்?

நாம் இறந்தால் அழுகிறவர்கள் எத்தனை பேர்? இடுகாடு வரை வரப்போகிறவர்கள் எத்தனை பேர்? நாட்கணக்கில் அழப்போகிறவர்கள் எத்தனை பேர்? ஆண்டுக்கணக்கில் அழப்போகிறவர்கள் எத்தனை பேர்? நம் இறப்பைத் தாங்காமல் உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறவர்கள் எத்தனை பேர்?

நாம் வாழும் வாழ்க்கையின் பொருளாய், பயனாய் இருப்பவர்கள் எத்தனை பேர்?

நம்மை உயிராய் நினைப்பவர்கள் எத்தனை பேர்?

நாம் உயிராய் நினைப்பவர்கள் எத்தனை பேர்?


Comments

2 responses to “எத்தனை பேர்?”

  1. என்னாச்சு ரவி திடீர்னு?

  2. எத்தனை பேரின் இந்த ‘எத்தனை பேர்’ பட்டியலில் நாம் இருக்கிறோம்?