தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்களுக்கு பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன்?

எட்டு கோடித் தமிழர் இருக்கிற போது ஏன் இந்த ஒற்றைப் படை நிலை?

முதலில் ஒன்றை அறிவோம். இந்தக் குறைவான எண்ணிக்கை தமிழ் இணையத் திட்டங்களுக்கு மட்டும் உள்ள நிலை இல்லை. மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால், சமூகத்தில் நிகழ்வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் பல கூட்டு முயற்சி, தன்னார்வல, இலாபநோக்கற்ற திட்டங்களுக்கும் கூடப் பங்களிப்பு குறைவே. ஆக, நிகழ் உலகத்தில் பங்களிப்புக் குறைவுக்கு காரணமாக இருக்கும் பணமின்மை, நேரமின்மை, மனமின்மை, திறனின்மை போன்ற அத்தனைக் காரணங்களும் இணையத்துக்கும் பொருந்தும்.

தமிழ் இணையத் தன்னார்வலக் கூட்டு முயற்சித் திட்டங்களில் பங்களிப்புகள் குறைவாக இருப்பது ஏன்?

ஒவ்வொரு நாளும் திட்டத்தில் பங்கு கொண்டு ஒரு மணி நேரமாவது செலவிடுபவர்கள், அது குறித்த பெருமளவு சிந்தனைகளைச் சுமந்து திரியும் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கை ஒவ்வொரு திட்டத்திலும் விரல் விட்டு எண்ணத்தக்க அளவிலேயே இருக்கிறது.

எட்டு கோடித் தமிழர் இருக்கிற போது ஏன் இந்த ஒற்றைப் படை நிலை?

இந்தக் குறைவான எண்ணிக்கை தமிழ் இணையத் திட்டங்களுக்கு மட்டும் உள்ள நிலை இல்லை. மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால், சமூகத்தில் நிகழ்வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் பல கூட்டு முயற்சி, தன்னார்வல, இலாபநோக்கற்ற திட்டங்களுக்கும் கூட பங்களிப்பு குறைவே. நிகழ் உலகத்தில் பங்களிப்புக் குறைவுக்கு காரணமாக இருக்கும் பணமின்மை, நேரமின்மை, மனமின்மை, திறனின்மை போன்ற அத்தனைக் காரணங்களும் இணையத்துக்கும் பொருந்தும்.

எட்டு கோடித் தமிழரில் போர்ச் சூழலால் அல்லல்படும் பல இலட்சம் ஈழத் தமிழர்களை விடுவோம்.

அவர்களைத் தவிர்த்து, உணவு, உடை, உறைவிட, பிற இன்றியமையா வாழ்க்கைத் தேவைகள் முடிந்து,  நிம்மதியாக வாழும் தமிழர்கள் எத்தனை பேர்?

(இவர்களில் பாதி மக்கள் தொகையான பெண்கள் தொகையைக் கழித்து விடலாம். இது வரை இது போன்ற திட்டங்களில் முனைப்புடன் இயங்கும் பெண் பங்களிப்பாளரைக் கண்டதில்லை. அவர்களை அப்படி பங்களிக்க விடாத சமூகக் காரணிகள் எவ்வளவோ உள)

எஞ்சியவர்களில் முழு நேர கணினி, வேகமான அளவற்ற இணைய இணைப்பு உள்ளோர் எத்தனை பேர்? அலுவலகத்தில் நாள் முழுக்க கணினியைக் காண்பவர்கள் பலர் ஓய்வு நேரத்திலும் கணினி முன் அமர விரும்புவதில்லை. அதையும் பொருட்படுத்தாது வருபவர்களுக்கு, இணையத்தில் நுட்பத் தடையும் சேர்ந்து கொள்கிறது. எடுத்துக்காட்டுக்கு, விக்கிமீடியா திட்டங்களில் பங்களிக்க விரும்புபவர்களுக்கு மீடியாவிக்கி மென்பொருளைப் புரிந்து கொள்வதில் தொடக்கக் காலச் சிரமங்கள் இருக்கின்றன.

அவர்களில் கல்வி கற்ற தமிழார்வமுள்ளோர் எத்தனை? மேற்கண்ட வசதிகளைப் பெற்று இருந்தாலும் பொழுது போக்குக்காக அணுகுபவர்களும் பலர்.

அவர்களில் இத்திட்டங்களுக்குப் பங்களிக்கும் ஓய்வு நேரம், வயது, மனநிலை, வேகம், திறன் வாய்க்கப்பெற்றவர்கள் எத்தனை பேர்?

அப்படி பங்களிப்பவர்களுக்கு உதவியாகத் தமிழிணையத்தில் தமிழில் கிடைக்கும் தகவல் ஆதாரங்கள் எவ்வளவு?

… என்று யோசித்துக் கொண்டே போனால், இத்திட்டங்களுக்கு உள்ள பங்களிப்புக் குறைபாடுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ், தமிழிணையத் திட்டங்கள் வளர, தமிழ்ச் சமூகம் வளர வேண்டியது முதற் தேவையாக இருக்கிறது.

தமிழ்நாடு, ஈழத்தில் இருந்து வரும் பங்களிப்புகளை விட பிற மாநிலங்கள், நாடுகளில் நல்ல வாழ்க்கைச் சூழல், உறவுகள் / நட்புகள் குறுக்கிடா ஓய்வு நேரம் வாய்க்கப் பெற்றவர்கள் கூடுதல் பங்களிப்புகளை அளிப்பதைக் காணலாம்.

தொலைநோக்கின்மை

ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் குழந்தைகள் பசியால், ஊட்டக்குறைவால் இறக்கிறார்கள். ஆனால், ஆழ்துழாய்க் கிணறில் அகப்பட்ட ஒற்றைச் சிறுவனைத் தான் நாள் முழுதும் ஊடகங்கள் கவனிக்கின்றன. அரசுகளும் கவனிக்கின்றன. கண்ணுக்குத் தெரியாமலும் கொஞ்சம் கொஞ்சமாகவும் நிகழும்  பிரச்சினையானாலும் சரி பயனாலும் சரி அவை நம்மை ஈர்ப்பதில்லை.

அதே போல் இந்தத் திட்டங்களின் தொலைநோக்குத் தேவையை நாம் உணர்வதில்லை. இன்று இத்திட்டம் முழுமையடையாவிட்டால் பெரிய இழப்பு ஒன்றும் இல்லை என்ற எண்ணம் பலரை அதற்கானப் பங்களிப்பை ஒத்திப் போடச் செய்கிறது. “நாம் செய்யும் சிறு பங்களிப்பா பெரிய வேறுபாட்டை நல்கப் போகிறது” என்று எண்ணச் செய்கிறது.

நான்

“நான்” என்ற உணர்வு அனைவரிடமும் மேலோங்கி இருப்பதும் ஒரு முக்கியத் தடை. வெற்றிகரமான கூட்டு முயற்சித் திட்டங்களின் அடிப்படையே ஒருவரின் பங்களிப்பை இன்னொருவர் எந்த வகையிலும் மாற்றி அமைக்கலாம் எனபதும் அம்மாற்றங்கள் நன்னோக்கிலேயே இருக்கும் என்ற புரிதலும் எதிர்ப்பார்பும் தான். ஆனால், தான் தந்த ஒன்றை எப்படி மாற்றலாம், குறை கண்டுபிடிக்கலாம் என்று எண்ணுவோரும், எந்த விதத்திலும் தங்கள் பங்களிப்பு குறித்து உரையாடி மேம்படுத்திக் கொள்ள முனையாதோரும் உளர்.

மாற்றங்களை அனுமதிப்பவர்களும் தங்கள் பெயர் ஏதாவது ஒரு வகையில் பெரிதாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து பங்களிக்க வேண்டிய திட்டங்களில் இது சாத்தியமில்லை என்பது ஒவ்வொரு பங்களிப்பாளரும் தங்கள் உழைப்புக்கு ஏற்ற பாராட்டு கிடைக்காமல் போவதாக எண்ணலாம்.

தொல்லைத் தலைவர்

ஒரு திட்டத்தை முன்னின்று தொடங்கிச் செய்பவரோ, திட்டத்தில் முன்னணி பங்களிப்பாளராக இருக்கும் ஒருவரோ திட்டத்தைத் தன்னோடு தொடர்புப் படுத்தி ஒட்டு மொத்தப் பெயரையும் தட்டிச் செல்ல முனைவதும், ஊக்கமுடன் வரும் புதியவர்களைப் புறக்கணிப்பதும் உண்டு. மிகவும் முக்கியமான திட்டங்களில் இந்தச் செயற்பாடு இருந்தால், அது இன்னொரு புதிய திட்டத்துக்கு வித்திட்டு பங்களிப்பைச் சிதறச் செய்யும். முக்கியமில்லாத திட்டங்களில் மற்றவர்கள் பங்களிக்காமல் அமைதியாக இருந்து விடுவார்கள்.

திட்டத்தின் தனித்துவம், தேவை

இணையத்தில் ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியத்துக்கு இருந்த தேவை ஒரு அகரமுதலி, செய்திச் சேவைக்கு இருக்கவில்லை. அதன் காரணமாகவே உலக அளவிலேயே கூட விக்கிப்பீடியா வெற்றி பெற்ற அளவு அதன் மற்ற திட்டங்கள் வெற்றி பெறவில்லை. ஆக, ஒரு திட்டம் தனித்துவமானதும், உடனடித் தேவை மிக்கதாகவும், அத்தேவையைத் தீர்க்கப் புகுந்த முதல் திட்டமாகவும் இருத்தல் அவசியம்.

திட்டத்தின் அளிப்புரிமை

திட்டத்தின் அளிப்புரிமை விதிகளும் முக்கியமானவை. தன்னுடைய ஆக்கங்களை எந்தத் தடையுமின்றி பிறருக்கு நல்காமல் தன்னுடைய இருப்பைத் தக்க வைப்பதில் மட்டும் அது முனையுமானால், தங்களுடைய உழைப்பு, திறன், அறிவை எந்த ஊதியமும் இல்லாமல் நல்கக் கூடியவர்களை அத்திட்டத்தால் ஈர்த்துக் கொள்ள இயலாது.

திட்டத்தின் வணிகப் பெறுமதி

திறமூல, கட்டற்ற இயக்கங்கள் இலவசமாகவே கிடைக்கும் என்றாலும் அவை வணிக முயற்சிகளைப் பெரும்பாலும் தடை செய்வதில்லை. லினக்சு, வேர்ட்பிரெசு இலவசமாகக் கிடைத்தாலும் அவற்றைச் சுற்றி பணம் ஈட்டும் பெறும் வாய்ப்புகள் உள. இதுவரை தமிழில்அத்தகைய கணிமைத் திட்டங்கள் குறைவாகவே இருக்கின்றன. இருந்தாலும் பொருள் ஈட்டும் வாய்ப்பு  குறைவாகவே உள்ளது.

தமிழர் பண்பு

தமிழர்கள் ஒன்று கூடி எந்த ஒரு கூட்டு முயற்சியிலும் ஒத்துழைப்பது குறைவு என்றும் சிலர் கருதுகின்றனர். பார்க்க – தமிழ் இணையத்தில் கூட்டுச் செயற்பாடுகள்.

**

எல்லாம் அமைந்தும் இணையத் திட்டங்களுக்குப் பங்களிக்காதவர்கள் தன்னலக்காரர்களா?

எல்லாரையும் அப்படிச் சொல்ல இயலாது.

சிலருக்கு, உதவி செய்ய எல்லாம் அமைந்தும், பசி, பிணி, கல்வியின்மை என்று ஒவ்வொரு நாட்டிலும் உயிர் போகும் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருப்பதால் இதை விட முக்கியமானப் பிரச்சினைகளுக்கு தங்கள் உழைப்பைத் தந்திருக்கலாம்.

சரி, அப்ப இணையத் திட்டங்களுக்குப் பங்களிப்பவர்கள் பொதுநலக்காரர்களா?

அப்படியும் சொல்ல இயலாது 🙂 கொஞ்சம் பெரிய வட்டத்தில் தன்னலக்காரர்கள் என்று கொள்ளலாம். இத்திட்டங்களில் பங்களிப்பவர்களால் பொது நலன் இருந்தாலும் அதில் தன்னலமும் இருக்கிறது. என் வீடு, என் உறவு என்பதில் இருந்து என் மொழி, என் பண்பாடு, என் இனம் என்ற அடுத்த கட்ட தன்னலத்துக்கு நகர்கிறார்கள். அதன் அடுத்த கட்டமாக என் நாடு, என் உலகம் என்று நகரலாம். நானே தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கும் அளவுக்கு ஆங்கில விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பதில்லை.

பொது நலம் என்ற ஒரே காரணத்துக்காக நாம் இத்திட்டங்களில் ஈடுபடுவதில்லை. ஒரு பொது நலனுக்கு உதவுவதில் நம்முடைய தனிப்பட்ட நலனும் உள்ளடங்கி இருக்க வேண்டும். (நான் நேரம் ஒதுக்கி சில விக்கிப்பீடியா கட்டுரைகள் எழுதினால் எனக்குத் தேவைப்படும் கட்டுரைகளையும் யாராவது எழுதித் தருவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு உண்டு!!).

இன்னொன்று, இந்த பொதுத் திட்டங்களில் ஈடுபடுவது ஒரு வித விளையாட்டு, பொழுதுபோக்கு போன்று மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும் இருப்பதும் அத்திட்டத்தில் இருந்து ஒருவர் பெற்றுக் கொள்ளும் பயனே. இந்த மனமகிழ்ச்சி என்னும் தன்னலம் இல்லாமல் ஒருவர் இவற்றில் ஈடுபாடு காட்ட இயலாது. எனவே, ஒருவருக்கு அக்கறை இருந்தாலும், இந்த ஈடுபாட்டின் மூலம் அவருக்கு மகிழ்ச்சி வரவில்லை என்றால், அவரைக் குற்றம் சொல்ல இயலாது.

சரி, அப்ப இந்தத் திட்டங்களை வளர்ப்பது எப்படி?

ஆர்வம் உள்ள பங்களிப்பாளர்கள் அயராது அன்றாடமோ வாரம் சில மணி நேரமோ தங்கள் இயலுகைக்கு ஏற்பவும் திட்டத்தின் தேவைக்கு ஏற்பவும் உழைக்க வேண்டும்.

இயன்ற அளவு எல்லா களங்களிலும் திட்டம் குறித்து பரப்புரை செய்ய வேண்டும். ஆனால், ஒரே ஆட்களிடம் திரும்பத் திரும்பச் சொல்வதிலோ இறைஞ்சுவதிலோ பயன் இருப்பதில்லை என்று கண்டு கொண்டிருக்கிறேன். ஒருவருக்கு ஒரு திட்டம் குறித்த இயல்பான ஆர்வம் இருக்கும் எனில், அவர் முதன்முறை அறிந்த உடன் தானாகவே வந்து விடுவார். நம் அழைப்புக்காக மட்டுமே வருபவர்கள் துவக்க உற்சாகத்தை விரைவிலேயே தொலைத்து விடுவார்கள்.

திட்டத்தின் பயன், திட்டம் குறித்த தகவல் கிடைக்கும் பயனர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பங்களிக்கத் தொடங்குவார்கள். ஏனெனில், நாம் பெற்றதில் ஒரு பகுதியையாவது திரும்பத் தர வேண்டும் என நினைப்பது நம்முள் உள்ள இயல்பு.

அவ்வளவு சீக்கிரம் திட்டத்துக்குத் தகுந்த முனைப்பான பங்களிப்பாளர்கள் கிடைக்காமல் போகலாம். ஆனால், அப்படி கிடைக்கையில் அவர்கள் பல சாதாரண பங்களிப்பாளர்களை விட பல மடங்கு பங்களிப்பார்கள் என்பது என் அனுபவம்.

சற்றுமுன்

சற்றுமுன்… செய்திச் சேவை வரும் பிப்ரவரி 15 அன்று முதல் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. வாழ்த்துகள் !

சற்றுமுன்… செய்திச் சேவை வரும் பிப்ரவரி 15 அன்று முதல் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. வாழ்த்துகள் !

சற்றுமுன்னின் சிறப்புகளாக நான் கருதுவன:

– 24 மணி நேரமும் இற்றைப்படுத்தப்படும் உலகளாவிய தமிழ் இணையச் செய்திச் சேவை.
– இயன்ற அளவு இனிய தமிழில் செய்தி, தள வடிவமைப்பு.
– வாசிப்பவர்களாலேயே எழுதப்படுகிறது. தமிழ் வலைப்பதிவுலகில் மிகப்பெரிய கூட்டுப் பதிவு இது தான் என நினைக்கிறேன்.
– வெகு மக்கள் ஊடகங்கள் ஆர்வம் காட்டாத செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவது. முக்கியமாக, இணையப் பயனர்களுக்கு ஆர்வம் ஊட்டக்கூடிய செய்திகளைத் தருவது. எடுத்துக்காட்டுக்கு, கூகுள் knol குறித்த செய்தி.
– தமிழகம், ஈழம் தவிர்த்து பிற நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு ஆர்வம் ஊட்டும் செய்திகளையும் பகிர்ந்து கொள்வது.
– செய்திகளில் வில்லைக்காட்சிகள், நிகழ்படங்கள் தருவது.
– அறிவியல் இன்று போன்ற முயற்சிகள்.
– யாகூ, எம்எஸ்என், ஏஓஎல் எல்லாமே தமிழுக்கு வந்தாலும் ராசிபலன், அழகுக் குறிப்புகள், சமையல் குறிப்புகள்.. என்ற அலுக்க வைக்கும் வணிக மந்திரத்தை விட மாட்டேன் என்கிறார்கள். அவற்றுக்கு இடையே சற்றுமுன் வேறுபட்டு நிற்கிறது.
– முழுமையான செய்தி ஓடை தருவது.
– விளம்பரங்கள் இல்லாமல் / குறைவாக இருப்பது.
– தினத்தந்தி வகையறா இதழ்கள் ஒருங்குறிக்கு மாறாமல் இருக்கையில், அவற்றில் உள்ள முக்கியமான செய்திகளை ஒருங்குறியில் பெற்றுத் தருவது.
– வெகுமக்கள் செய்தி ஊடகங்கள் போல் அரசியல் / வணிக உந்துதல் இல்லாமல் இருப்பது.
– ஒரே செய்திகளுக்கான பல்வேறு இதழ்களின் தொடுப்புகளையும் ஓரிடத்தில் பார்க்கத் தருவது. இதை வேறு எந்த வணிகத் தமிழ்த் தளமும் செய்யும் என்று தோன்றவில்லை.
– இன்னும் சில செய்திப் பதிவுகள், கூட்டுப் பதிவுகள், இதழ்கள் போல் இல்லாமல் செய்தியோடு, அரசியல், சொந்தக்கருத்தைக் கலக்காமல் செய்தியைச் செய்தியாக மட்டும் தருவது.
– தமிழில் வெளிவராத செய்திகளையும் மொழிபெயர்த்துத்தருவது.

சற்றுமுன்னுக்கான வேண்டுகோள்கள்:

– பிற தளங்களில் இருந்து படியெடுத்துப் போடும் செய்திகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். அல்லது, செய்தியின் நீளத்தைச் சுருக்கி முழுச் செய்தியைப் படிக்கத் தொடுப்பு கொடுக்கலாம்.
– எந்தத் தமிழ்த் தளத்திலும் வெளிவந்திராத முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை பிற தளங்களில் இருந்து மொழிபெயர்த்துத் தருவதை கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துச் செய்யலாம்.
– சற்றுமுன் வளர வளர வருகை எண்ணிக்கைகளுக்கு மயங்கி, “ரஜினி பேரனுக்கு மொட்டை அடித்தனர்” போன்ற செய்திகளைத் தராமல் இருப்பது.
– அரசியல் கலந்த கேலிச்சித்திரங்களைத் தவிர்ப்பது. தொடர்ந்தும் தளத்திலும் செய்திகளிலும் அரசியல் கலக்காமல் இருப்புத.

நான் சற்றுமுன் தளத்தில் செய்திகள் எழுதுவது இல்லை என்றாலும் தள பராமரிப்பில் பங்களித்து வருகிறேன். அந்த வகையில் வேர்ட்ப்ரெஸ் குறித்து நிறைய கற்றுக் கொள்ளவும் தூண்டுதலாக இருக்கிறது.

தொடர்ந்து சற்றுமுன்… வளர வாழ்த்துகள்.

தமிழ்க் கணிமை ஆர்வலர்கள்

நான் அறிந்த சில இணையத் தமிழ் நுட்ப ஆர்வலர்கள் பெயரைப் பதிந்து வைக்கிறேன்.

(எந்த வரிசையிலும் இல்லை)

1. முகுந்த்தமிழா! அமைப்பின் முனைப்பான பங்களிப்பாளர்களில் ஒருவர். இவர் உருவாக்கிய எ-கலப்பை பல தமிழர்கள் கணினியில் எளிதாகத் தமிழ் எழுத உதவுகிறது.

2. மாகிர்தமிழூற்று – தமிழர்களின் அறிவுச் சுரங்கம் என்ற பெயரில்  தமிழிணையம் சார்ந்து பல நுட்பப் பணிகள் ஆற்றி வருகிறார். தமிழ் இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், விக்கி இயக்கங்கள் தொடர்பில் பயனுள்ள தேடு கருவிகள், வழிகாட்டுக் கருவிகள் உருவாக்கி உள்ளார்.

3. கோபி – இந்திய மொழிகள் பலவற்றுக்குமான ஒருங்குறி எழுது கருவிகள் செய்திருக்கிறார். இது தவிர, பல பயனுள்ள தமிழ் சார் Firefox நீட்சிகள் செய்து தந்திருக்கிறார்.

4. ஜெகத்இனியன் என்ற பெயரில் இந்திய மொழிகளுக்கான தமிழ் எழுத்துப் பெயர்ப்புக் கருவியைத் தனி உழைப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

5. Voice on Wings – முகுந்த், கோபியுடன் இணைந்து Firefox தமிழ்விசை நீட்சியின் உருவாக்கத்தில் பங்கு வகித்தவர். விக்கிப்பீடியா, வலைப்பதிவுகள் தொடர்பான Firefox நீட்சிகளையும் உருவாக்கி இருக்கிறார். இவரது அண்மைய உழைப்பு – மாற்று!.

6. மயூரன் – தமிழில் கட்டற்ற முயற்சிகள் எங்கிருந்தாலும் அங்கு மயூரனும் இருப்பார்! தமிழ் லினக்சு, தமிழ் உபுண்டு, தமிழ்க் கணிமை குழுக்களில் இவரது ஈடுபாடு பலரும் அறிந்தது.

7. காசி – தமிழ் வலைப்பதிவுகள் பெருகத் தொடங்கிய போது அவற்றைக் காட்சிப்படுத்தி, கூடிய வாசக வெளிச்சம் கிடைக்க உதவியாகத் தமிழ்மணம் திரட்டியை உருவாக்கினார்.

8. சுரதா – தமிழிணையக் கருவிகளுக்கு இவர் உருவாக்கிய சுரதா தளம் ஒரு களஞ்சியம் போல். இவருடைய சுரதா ஒருங்குறி எழுதி, பொங்குதமிழ் கருவிகளைப் பயன்படுத்தி இராதவர்கள் மிகக் குறைவே.

9. மறைந்த உமர் தம்பி அவர்கள் – இவரது உழைப்பும் உணர்வும் கோபி, மாஹிர் போன்ற பலரையும் தூண்டி விட்டது பெரும் சிறப்பாகும்.

10. மறைந்த சாகரன் என்னும் கல்யாண் – தேன்கூடு, பெட்டகம் என பல நல்ல இணையத்தளங்களை உருவாக்கினார். ஆனால், இவரது மறைவுக்குப் பிறகு இம்முயற்சிகளும் மறைந்தது சோகம்.

11. சிந்தாநதி – பல தமிழ் இணைய முயற்சிகளில் பின்னணியில் இருந்து செயல்பட்டு ஊக்குவித்தவர். இவரது அகால மறைவு பெரும் இழப்பு.

12. முனைவர் A. G. Ramakrishnan – இவரது குழுவினர் தமிழில் எழுதிய உரையைப் பேச்சுக்கு மாற்றும் செயலியைக் கண்டுபிடித்துள்ளனர்.

13. K. S. Nagarajan – NHM writer, NHM converter என்ற இரண்டு அருமையான மென்பொருள்களை உருவாக்கியவர். தமிழில் தற்போது கிடைக்கும் எழுதிகளில் NHM writer மிக அருமையானது. முழு நேரமாகவே தமிழ்க் கணிமைகளில் ஈடுபட்டிருக்கும் இவரிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்.

14. சுந்தர் – தமிழ் இலக்கண கணிமை, விக்கி நுட்பம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். தானியங்கியாக தமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள் சேர்த்தது சுந்தரின் மிக முக்கியமான பங்களிப்பு.

இணையத் தமிழ் உள்ளடக்க உருவாக்கம் – தமிழ்நாடு அரசு கவனிக்குமா?

என்றாவது, தமிழ் வளர்ச்சித் துறை தொடர்புடைய தமிழக அரசு அமைச்சர் / அதிகாரி கண்ணில் படலாம் என்ற பேராசையில், தமிழக அரசுக்கு சில வேண்டுகோள்கள்.

* தமிழ்நாடு அரசு இணையத்தளத்தின் அனைத்துத் தகவல்களையும் முழுக்கத் தமிழில் தாருங்கள். TSCII வடிவில் இருந்தாலும், கூடவே ஒருங்குறித் தமிழிலும் ஒரு பதிப்பு தாருங்கள். இதன் மூலம் தமிழக அரசுத் தகவல்களை கூகுள் போன்ற தேடுபொறிகளின் மூலம் தேட இயலும்.

* தமிழ்நாடு அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி பாட நூல்கள் அனைத்தையும் ஒருங்குறி உரையாகவும், Pdf கோப்புகளாகவும் தாருங்கள். ஆங்கில வழியத்தில் படித்தவர்கள், தமிழ் வழியத்தில் படித்திருந்தாலும் அத்தகவல்கள்-தமிழ்க்கலைச்சொற்கள் மறந்தவர்கள், இலங்கை-சிங்கப்பூர்-மலேசியா வாழ் தமிழர்கள் ஆகியோருக்கு உதவும். இந்நாடுகளின் கலைச்சொல்லாக்கத்திலும் தமிழ்நாட்டுடன் இசைவு இருக்கும். தமிழ்நாட்டுப் பாட நூல்கள் நாட்டுடைமை என்பதால் இவற்றைப் பொதுக் களத்தில் எவருக்கும் பயன்படுவது போல் வைக்க வேண்டும்.

செய்தி: தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடப் பாடநூல்கள் இப்போது இணையத்தில் pdf வடிவில் கிடைக்கின்றன !

* நாட்டுடைமையாக்கப்பட்ட அனைத்துத் தமிழ் நூல்களையும் ஒருங்குறி உரையாகவும், Pdf கோப்புகளாகவும் தாருங்கள். உலகம் முழுக்க எண்ணற்ற ஆர்வலர்கள் மதுரைத் திட்டம் போன்றவை மூலம் தங்கள் பொன்னான நேரத்தைச் செலவிட்டு இந்நூல்களை மென்னூலாக்கி வருகிறார்கள். இது தேவையற்ற காலம் மற்றும் உழைப்பு விரயமாகும்.

* தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தளத்துக்கும் ஒருங்குறித் தமிழ்ப் பதிப்பு தாருங்கள். அத்தளத்தில் உள்ள தேவையற்ற பயனர் எளிமையைக் குலைக்கும் கூறுகளை நீக்கி, எளிமையான உரை வடிவத் தளமாகத் தாருங்கள்.

* தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் இணையத்தளங்கள் அனைத்திலும் தமிழ்ப் பதிப்பு கொண்டு வரப் பணியுங்கள்.

* கடந்த இரண்டு ஆண்டாகத் தமிழ் இணைய மாநாடு நடைபெறவில்லை. அதனை மீளத் தொடங்குங்கள்.

* தமிழ்நாட்டுத் தமிழ்ப் பாடம், கணினி அறிவியல் பாடங்கள் ஆகியவற்றில் கணினியில் தமிழ்ப் பயன்பாடு குறித்துப் பாடங்களைச் சேருங்கள். பள்ளிகளுக்கு வாங்கும் கணினிகளில் தமிழ்99 தமிழ் விசைப்பலகை அச்சிப்பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள். பள்ளிக் குழந்தைகளுக்கு கணினியை அறிமுகப்படுத்தும்போதே தமிழ்த் தட்டச்சையும் சேர்த்து அறிமுகப்படுத்துங்கள். தமிழ் லினக்ஸ், தமிழ் Firefox, தமிழ் Open Office என்று திறமூலத் தமிழ் மென்பொருள்களை ஊக்குவியுங்கள். இதனால் அரசுக்குச் செலவும் மிச்சம். குழந்தைகளும் ஆங்கிலம் மீதான மருட்சி இல்லாமல் எளிதில் கணினியைக் கையாளத் தொடங்குவார்கள்.

* தமிழ்நாட்டில் புதிதாகப் படித்து வெளிவரும் தமிழாசிரியர்களின் தரம் மெச்சிக் கொள்ளும் மாதிரி இல்லை. மிகச் சிறந்த மாணவர்களை தமிழ்ப் படிப்புக்கு ஈர்க்க கல்லூரியில் தமிழ்ப்பட்டப்படிப்பு முழுக்க இலவசமாகவும் (விடுதிச் செலவு உட்பட) அதில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்குங்கள். இதனால், தமிழ்ப் படிப்புக்குப் போட்டி ஏற்பட்டுச் சிறந்த மாணவர்கள் அப்படிப்பை நாடுவார்கள்.

தமிழ் செய்தித் தளங்கள்

கூகுள் செய்திகளின் இந்திப் பதிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. விரைவில் பிற இந்திய மொழிப் பதிப்புகளும் வரும் என்கிறார்கள். இந்தியில் ஒருங்குறி அல்லாத பிற எழுத்துருக்களில் அமைந்திருந்த தளங்களின் தகவல்களையும் ஒருங்குறிக்கு மாற்றி வெளியிடும் பொறுப்பை கூகுளே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் தினமலர், தினகரன், விகடன் போன்ற தளங்கள் ஒருங்குறியில் செய்தி வெளியிடுவதற்கான அறிகுறிகளை காணாதிருக்கையில் இது முக்கியத்துவம் வாய்ந்தது. குறைந்தபட்சம் செய்தியோடைகளையாவது வழங்க இது போன்ற முன்னணி செய்தித் தளங்கள் முன்வரவேண்டும்.

தற்போது MSN தமிழ், Yahoo தமிழ், Thatstamil ஆகிய செய்தித்தளங்களே செய்தியோடைகளை வழங்குகிறது. அதிலும் thatstamilன் செய்தியோடை உள்ளடக்கம் ஆங்கிலத்தில் இருக்கிறது. தமிழ் சிஃபி, வெப் உலகம் போன்று இணையத்தில் மட்டும் இயங்கும் செய்தித் தளங்கள் விரைவில் இந்த வசதிகளை கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கலாம். Yahoo தமிழ், MSN தமிழ் போன்றவை தனித்துவமான செய்திகளைத் தராமல் செய்தி நிறுவனங்கள் சார்ந்து செயல்படுவது ஒரே செய்திக் கட்டுரை இரண்டிலும் வெளி வருவதற்கான குழறுபடிகளுக்கும் வாய்ப்பாகப் போய் விடக்கூடும். தவிர, இவ்விரு தளங்களும் அவற்றின் பன்னாட்டுத் தரத்திற்கு இல்லாமல் வழக்கமான தமிழ் மசாலா தளம் போலவே இருப்பது ஏமாற்றமளிக்கிறது. பிபிசி தமிழ் தமிழகச் செய்திகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தால் நன்றாக இருக்கும். குறைந்தபட்சம் அதன் இணையப்பதிப்பிலாவது இதைச் செய்யலாம். சீனத் தமிழ் வானொலியும் சீனச் செய்திகளிலேயே மூழ்கிக் கிடப்பதால் அதிகம் தமிழக செய்தி சார் பயனற்றதாக இருக்கிறது. தரம் வாய்ந்த இவ்விரு பன்னாட்டு வானொலிகளும் இணையப் பரப்பில் ஒரு முன்னணி செய்தித் தளமாக செயல்பட வாய்ப்பு உண்டு.

தினமலர், தினகரன், தினமணி போன்ற அச்சு ஊடக செய்தித் தளங்கள் இணையத்தின் சாத்தியத்தை துளியளவும் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் எளிதில் செய்யக்கூடியன, செய்ய வேண்டியன –

1. ஒருங்குறி எழுத்துருக்களுக்கு மாறுதல்.
2. அச்சில் வந்த செய்திகளை மட்டும் படி எடுத்து இணையத்தில் போடாமல் இணையத்துக்கு என்று தனித்துவமான 24 நேரமும் தொடர்ந்து இற்றைப்படுத்தப்படும் செய்தி அறிக்கைகளைத் தருவது.
3. செய்திப் பக்கங்களில் மட்டுறுத்தப்பட்ட பின்னூட்டு அளிக்கும் வசதி.
4. வாசகர்களே செய்தி சார் நிழற்படங்கள், நிகழ்படங்கள், கட்டுரைகளை பதிவேற்றும் வசதி. அவற்றின் தரத்தைக் கண்காணித்து இத்தளங்கள் உடனுக்குடன் வெளியிட்டால் உள்ளூர் செய்திகள், பரபரப்புச் செய்திகளை இற்றைப்படுத்த சரியான வாய்ப்பாக இருக்கும்.

வழக்கமான நிறுவனமயப்படுத்தப்பட்ட செய்தித் தளங்கள் போக சற்றுமுன் போன்ற பதிவுலகில் வெளி வரும் கூட்டு முயற்சி செய்தித் தளங்களும் குறிப்பிட்டத்தக்க பணியாற்றக்கூடும். வெறுமனே வெட்டி ஒட்டும் பதிவுகளாக இல்லாமல், உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த, தமிழ் அச்சு ஊடகங்களில் வணிகக் கட்டாயங்களால் வெளி வராது இருக்கின்ற, பல செய்திகளை இவை வெளிக்கொணர்வது சிறப்பு.

இணையத்தில் அதிகம் விரும்பிப் பார்க்கப்படுபவைகளில் செய்தித் தளங்கள் முதன்மையானவை. இதைத் தமிழ் இணையப்பரப்பில் இயங்கும் செய்தித் தளங்கள் கூடிய சீக்கிரம் புரிந்து கொள்வது நலம்.