தமிழ்நாட்டில் இணையச் சேவைகள்

தமிழ்நாட்டில் இணைய வழிச் சேவைகள் எந்த அளவு உள்ளன? அன்றாட வாழ்க்கையை இலகுவாக்க இணையத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்? சில நாட்களாகத் துருவிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் தாமதம் தான்.

* பேருந்துச் சீட்டு வாங்க Red Bus
* இரயில் சீட்டு வாங்க
* புத்தகம் வாங்க Flipkart , NHM
* கோவையில் திரைப்படம் பார்க்க http://www.thecentralcinemas.com/ . இணையப் பார்வையாளர்களுக்கு என்றே காட்சி நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பு வரை மூன்று வரிசை இடங்களை ஒதுக்கி வைக்கிறார்கள். இது தெரியாமல் நிறைய நாள் சீட்டு கிடைக்காமல் திரும்ப வந்ததும், கள்ளச்சீட்டு வாங்கியதும் உண்டு 🙁
* Vodafone புதுப்பிப்பு
* Sun DTH புதுப்பிப்பு, Dish TV புதுப்பிப்பு
* ICICI இணைய வங்கி.

இன்னும் சில சேவைகள் வந்தால் நன்றாக இருக்கும்:

* மளிகைப் பொருள் விற்பனை. பீட்சா மாதிரி ஒரு மணி நேரத்துக்குள் வீட்டுக்கு வர வேண்டும். இல்லாவிட்டால், சீக்கிரம் என் அக்கா மகனாவது வளர்ந்து முக்குக் கடைக்குப் போய் வரப் பழக வேண்டும்.
* NetFlix மாதிரி DVD வாடகை, புத்தக வாடகைச் சேவைகள். உருப்படிக்கு 25 ரூபாய் வைக்கலாம்.
* மின் கட்டணம் போன்ற அனைத்து அரசு கட்டணங்களும் இணையத்தில் செலுத்தும் வசதி.
* அனைத்துத் திரையரங்குகளுக்கான சீட்டுகளையும் ஒரே இடத்தில் பதியும் வசதி. Red Bus போல.

சென்னையில் மின் கட்டணம் செலுத்தல், வாடகை DVD பெறுதல் போன்ற வசதிகள் இருந்தாலும் அனைத்து ஊர்களுக்கும் வர வேண்டும்.

நீங்கள் பயன்படுத்திப் பார்த்து நன்றாக உள்ள இணையச் சேவைகளைத் தெரிவிக்கலாமே?

வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி?

ஆர்வமுள்ள ஒரு துறை, தொடர்ந்து வலைப்பதிதல், பிற ஆர்வலர்களுடன் உறவாடல், பணம் ஈட்டுவது குறித்து தெளிவான திட்டமிடலும் முயற்சியும் இருந்தால் வலைப்பதிவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணம் ஈட்டுவதற்கு பல வழிகள் உள்ளன.

நேரடி வழிகள்

1. வலைப்பதிவில் விளம்பரம்

வலைப்பதிவில் பணம் என்றால் பலரும் புரிந்து கொள்வந்து இந்த நேரடி வழியைத் தான்.  வலைப்பதிவு ஆங்கிலத்தில் இருந்தால் கூடுதல் வாய்ப்புகள். ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் வருகைகள் வேண்டும். Adsense, தட்டி விளம்பரங்கள், தொடுப்பு விளம்பரங்கள் மூலம் பணம் ஈட்டலாம். தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது மாணவர் சங்கர் கணேசு Adsense மூலமாக மட்டுமே ஒவ்வொரு மாதமும் 20,000+ பணம் ஈட்டுகிறார்.

2. விளம்பர இடுகைகள்

சில நிறுவனங்களின் பொருட்களைப் பற்றி வலைப்பதிவில் எழுத காசு தருகிறார்கள்.  விளம்பர இடுகைகள் எழுதும் மயூரேசன் கூடுதல் தகவல் தரலாம்.

3. முகவர் திட்டங்கள்

வாசகர்களுக்குப் பயனுள்ள பொருட்களின் முகவர்களாகச் செயல்படலாம். எடுத்துக்காட்டுக்கு, Amazon புத்தக முகவர் திட்டம்,  Hostgator வலையிட வழங்கி முகவர் திட்டம். வாசகர்கள் இந்த தொடுப்புகளை அழுத்திச் சென்று பொருட்களைப் பெறும் போது, நமக்கு ஒரு பங்குத் தொகை கிடைக்கும். இதற்குப் பெரிய அளவில் வாசகர்கள் வேண்டும் என்றில்லை. வழக்கமாக இந்தப் பொருட்களை நம் நண்பர்களுக்குப் பரிந்துரைக்கும் போது கூட இந்தத் தொடுப்புகளை அழுத்தி வாங்கச் சொல்லலாம்.

4. வலைப்பதிவு விற்பனை

நிறைய வாசகர்கள் ஒரு சமூகமாகப் பங்கெடுக்கும், பணம் ஈட்ட வாய்ப்புள்ள ஒரு வலைப்பதிவை உருவாக்கினால், அதை விலை கொடுத்து வாங்குவதற்கு ஆட்கள் உண்டு. மிக இலகுவாக, 500 அமெரிக்க டாலர் தொடக்கம் எந்த விலைக்கும் விற்க இயலும்.

மறைமுக வழிகள்

மேற்குறிப்பிட்ட நேரடி வழிகள் பலவும் அதிக வாசகர் வட்டம் உடைய ஆங்கில வலைப்பதிவுகளுக்கே பொருந்துபவை. ஆனால், ஓரளவு அறிமுகமான தமிழ் வலைப்பதிவுகள் மூலமும் கூட பணம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

5. வலைப்பதிவு நுட்ப வேலை வாய்ப்புகள்

வேர்டுபிரெசு மென்பொருளை உங்கள் சொந்தத் தளத்தில் நிறுவி வலைப்பதிகிறீர்களா? வலைப்பதிவு நிறுவல், இற்றைப்படுத்தல், பராமரப்பு, பரப்புதல் ஆகியவற்றில் அனுபவம் உண்டா? வலைப்பதிவு வடிவமைப்பு, வரை கலை வடிவமைப்பு, நிரலாக்கம் ஆகியவற்றில் தேர்ச்சி உண்டா? இத்துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. ஊரோடி பகீ, நான் உட்பட சில தமிழ் வலைப்பதிவர்கள் இது போன்ற WordPress நிறுவல் வேலைகளை எடுத்துச் செய்கிறோம்.

6. வலைப்பதிவு எழுத்து வேலை

பல தொழில் முனைவர்கள் தொழில்முறையில் வலைப்பதிவுகளைத் தொடங்கி அவற்றில் கட்டுரைகள் எழுத எழுத்தாளர்களைத் தேடுகிறார்கள். ஒரு கட்டுரைக்கு 2 அமெரிக்க டாலர் முதல் 200 அமெரிக்க டாலர் வரை வாய்ப்புகள் உள்ளன.

7. தொழில் வளர்ச்சிக்கு வலைப்பதிதல்

நமது தொழில் குறித்த விழிப்புணர்வு, விளம்பர வாய்ப்புகளுக்கும் வலைப்பதிவைப் பயன்படுத்தலாம். நேரடியாக உற்பத்தியாளரிடம் பேசித் தெளிவு பெற இயல்வதால் நம்பகத் தன்மை கூடி கூடுதல் விற்பனைக்கு உதவும். எடுத்துக்காட்டுக்கு, பதிப்புத் தொழில், தனது பதிப்பகம் குறித்து எழுதும் பத்ரி.

8. துறை வல்லுனராகும் வாய்ப்புகள்

நமக்கு ஈடுபாடுள்ள துறை, வேலை குறித்து தொடர்ந்து வலைப்பதிவதன் மூலம்  நம் திறமைகளைக் காட்சிப்படுத்தி புதிய வாய்ப்புகளை வெல்ல இயலும்.  வலைப்பதிவராகத் தொடங்கி அதன் மூலம் இன்று நூல் வெளியிடத் தொடங்கி உள்ளவர்கள், அச்சு ஊடகங்களில் தொடர்கள் எழுதுபவர்கள் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, லக்கிலுக் ஒரு எழுத்தாளராக வளரத் தொடங்கி உள்ளார். விக்கி, தானூர்திகள் துறையில் இந்திய அளவில் மதிப்புக்குரிய வலைப்பதிவராக உள்ளார்.
தொடர்புடைய இடுகைகள்:

இணையத்தில் பணம் பண்ணலாம் வாங்க – பகுதி 1

இணையத்தில் பணம் பண்ணலாம் வாங்க – பகுதி 2

இணையத்தில் பணம் பண்ணலாம் வாங்க – பகுதி 3

இணையத்தில் பணம் பண்ணலாம் வாங்க – பகுதி 4

OpenDNS

என்னுடைய BSNL இணைய இணைப்பின் மூலம் தளங்களைத் திறப்பது மெதுவாக இருந்தது. சில வேளை பெரிய தளங்கள் மட்டும் வரும். பல சின்ன, புதிய தளங்கள் திறக்காமல், “Cannot found” பிழை வரும். இது நச்சுநிரல் வேலையோ என்று எண்ணி விண்டோசைத் தூக்கி விட்டு உபுண்டுவை மட்டும் மீள நிறுவினேன். பிரச்சினை தீரவில்லை. அப்போது தான் நண்பர் logic, “இது இணையச் சேவை வழங்கும் நிறுவனத்தின் தளப் பெயர் வழங்கியில் உள்ள குறைபாடாக இருக்கலாம். OpenDNS முயன்று பாருங்கள்” என்றார். OpenDNSக்கு மாறிய பிறகு, பிரச்சினை தீர்ந்தது ! தளங்கள் திறக்கும் வேகமும் கூடி உள்ளது. வாழ்க OpenDNS !

தொடர்புடைய இடுகைகள்:

* OpenDNSக்கு மாறுவது எப்படி?
* OpenDNS அறிமுகம்.
* இணையத்தள வழங்கி இடத்தை மாற்றிய பின் உதவும் OpenDNS

tamil X thamil X thamiz X thamizh X tamiz X tamizh

தமிழ்123.com , தமிழ்abc.com , தமிழ்அனக்கோண்டா.me என்றெல்லாம் தளப் பெயர் வைப்பவர்கள் தமிழை thamiz, thamil, tamizh, thamizh, tamiz என்றெல்லாம் விதம் விதமாக எழுதாமல் tamil என்றே எழுதுவது நலம்.

* tamil என்று எழுதுவது சுருக்கமாக, நினைவு வைக்க இலகுவாக, குழப்பமின்றி இருக்கிறது. தளங்களுக்குப் பெயரிடுவதில் இது முக்கியம்.

* தளப் பெயரை எழுத்தில் பார்க்காதவர்கள் தன்னிச்சையாக tamil என்று தொடங்கும் முகவரிக்கே செல்வர். அத்தளம் செயல்பாட்டில் இல்லாவிட்டால் வெற்றுப் பக்கத்தைப் பார்ப்பார்கள். உங்கள் தளம் பிரபலமானால், கண்டிப்பாக tamil என்று தொடங்கும் முகவரியையும் போட்டிக்காரர்கள் வாங்கிப் போட முயல்வர். தொடர்பில்லாத உள்ளடக்கங்களைத் தந்து உங்களுக்கு கெட்ட பெயரும் வருமான இழப்பும் பெற்றுத் தரலாம்.

* tamil என்ற எழுத்துக்கூட்டல் மட்டுமே தமிழர் அல்லாதவர்களுக்கும் புரியும்.

* ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டலுக்கும் உச்சரிப்புக்கும் தொடர்பு இருப்பதில்லை. எனவே, தமிழை சரியாக உச்சரிக்கிறோம் என உணர்ச்சிவசப்பட்டு ஆங்கில எழுத்துக்கூட்டலை மாற்ற வேண்டாம்.

தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்துவது எப்படி?

தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்த தமிழ் வலைப்பதிவுகளில் இருந்தோ அவற்றைத் திரட்டிக் காட்டும் தளங்களில் இருந்தோ தான் தொடங்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லையே? உண்மையில், தமிழ் இணையத்தில் தமிழ் வலைப்பதிவுகள், அவற்றின் வாசகர்கள் ஒரு சிறு பகுதி தான். வலைப்பதிவுகளைப் பற்றி அறியாமல் இயங்குவோரும், அறிந்தும் ஒன்றாமல் இயங்குவோரும் பலர். எனவே, தமிழ் வலைப்பதிவுகளின் நிலையை எண்ணி, தமிழ் இணையம் குறித்த அறிமுகத்தைத் தள்ளிப் போட வேண்டாம்.

தன் ஊரில் உள்ள தமிழார்வம் மிக்கவர்களுக்குத் தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்த விருப்பம் என்றும், ஆனால் தமிழ் வலைப்பதிவுகளின் தற்கால நிலைமை தன்னைத் தயங்கச் செய்வதாயும் நக்கீரன் எழுதி இருந்தார். இவரைப் போல் இன்னும் சிலரும் சில இடங்களில் எழுதக் கண்டிருக்கிறேன். இவர்கள் பலருக்கும் தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதைக் காட்டிலும் இணையத்தில் தமிழ் புழங்குவதை அறிமுகப்படுத்தித் தர வேண்டும் என்று விரும்புவதாகவே உணர்கிறேன்.

ஆனால், தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்த தமிழ் வலைப்பதிவுகளில் இருந்தோ அவற்றைத் திரட்டிக் காட்டும் தளங்களில் இருந்தோ தான் தொடங்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லையே? உண்மையில், தமிழ் இணையத்தில் தமிழ் வலைப்பதிவுகள், அவற்றின் வாசகர்கள் ஒரு சிறு பகுதி தான். வலைப்பதிவுகளைப் பற்றி அறியாமல் இயங்குவோரும், அறிந்தும் ஒன்றாமல் இயங்குவோரும் பலர். எனவே, தமிழ் வலைப்பதிவுகளின் நிலையை எண்ணி, தமிழ் இணையம் குறித்த அறிமுகத்தைத் தள்ளிப் போட வேண்டாம்.

சரி என்ன செய்யலாம்? சில அடிப்படையான இலகுவான வழிகள்:

– கணினியில் தமிழ் தெரியும், தமிழில் எழுதலாம் என்பதையே “அலாவுதீனின் அற்புத விளக்கில் இருந்து சீபூம்பா பூதம்” வந்த கதையாகப் பார்ப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்குக் கணினியில் ஒருங்குறித் தமிழைப் பார்கவும் எழுதவும் கற்றுக் கொடுக்கலாம். பள்ளியில் தமிழ் வழியத்தில் படித்துப் பின் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து வலைத்தள வடிவமைப்பு நிறுவனம் நடத்தும் நண்பன் ஒருவன் “உடைந்து சிதறி கொம்பும் கொக்கியுமாகத் தெரியும் ஒருங்குறித் தமிழ் எழுத்துக்களை” அது தான் இயல்பு போல என்று எண்ணி சிரமப்பட்டுப் படித்துக் கொண்டிருந்தான்…இந்தக் கொடுமையை எங்கு போய் சொல்ல ? தமிழுக்கு இவ்வளவு தெரிவதே மேல் என்று நினைத்துக் கொள்கிறார்களோ??

– கூகுள், யாகூவில் தமிழில் தேடலாம்; தமிழில் மின்மடல் அனுப்பலாம், பெறலாம்; தமிழில் அரட்டை அடிக்கலாம் என்று பலருக்குத் தெரியாது. அதைச் செய்து காட்டுங்கள். பழைய யாகூ மெயிலில் தமிழ் படிக்க இயலாமல் தடவிக் கொண்டிருப்பவர்களைப் புதிய யாகூ மெயிலுக்கு மாறச் சொல்லுங்கள்.

தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், மதுரைத் திட்டம், நூலகம் திட்டம், தமிழ் விக்சனரி போன்ற தகவல் ஆதாரங்களைச் சுட்டலாம்.

தமிழ் பிபிசி, சீனத் தமிழ் வானொலி, ஒலி 96.8 போன்ற தரமான உலகச் சேவைகளைக் காட்டலாம்.

தமிழ் செய்தித் தளங்களைப் படிக்கச் சொல்லலாம்.

– எழுத்தார்வம் இருப்பவர்களுக்கு வேர்ட்பிரெஸ் தளத்தில் வலைப்பதிவு தொடங்க உதவுங்கள்.

– விருப்ப வலைத்தளங்கள், வலைப்பதிவுகளின் செய்தியோடைகளைப் படிப்பதற்கு கூகுள் ரீடர் அறிமுகப்படுத்தலாம்.

– வலைப்பதிவுகளைக் காட்டிலும் மடற்குழுக்கள், குழுமங்கள், மன்றங்களில் உலாவுவது சிலருக்கு இலகுவாக இருக்கலாம். மட்டுறுத்தப்பட்டு நெறிமுறைகளுடன் இயங்கும் இத்தகைய பல நல்ல தமிழ்த் தளங்கள் உள்ளன. அவற்றை அறிமுகப்படுத்தலாம்.