உபுண்டு – அறிமுகம்

(10 திசம்பர் 2009 புதிய தலைமுறை இதழில் வெளிவந்த கட்டுரை. ஆசிரியர் குழுவின் சிற்சில மாற்றங்களுடன்)

உபுண்டு

– அ. ரவிசங்கர்

உங்களுக்கு மோட்டார் பைக்குகள் பிடிக்குமா? பைக்குகளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மாட்டத் தெரியுமா? ஆனால், மோட்டார் பைக் விற்கும் நிறுவனமோ “நீங்கள் பைக்குகளைப் பிரித்துப் பார்க்கக்கூடாது. ஏதாவது பிரச்சினை என்றால் எங்களிடம் தான் வர வேண்டும். பழைய பைக்குகளைச் சீர் செய்ய மாட்டோம். திரும்பத் திரும்ப புது பைக்குகள் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும். உலகில் எல்லாரும் ஒரே வகை பைக் தான் ஓட்ட வேண்டும். வகை வகையான பைக் எல்லாம் வெளியிட முடியாது” என்று கட்டுப்பாடு மேல் கட்டுப்பாடு விதித்தால் எவ்வளவு கடுப்பாக இருக்கும்?

நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் நமக்குக் கூடுதல் உரிமை வேண்டுகிறோம். ஆனால், காசு கொடுத்து வாங்கும் கணினி மென்பொருள்களில் மட்டும் நமக்கு உரிமை இல்லாமல் இருப்பது ஏன்? கணினி மென்பொருள்களில் ஏதாவது பிரச்சினை என்றால் நம்மால் சீர் செய்ய இயலாது. நுட்பம் தெரிந்தாலும் வேண்டிய மேம்பாடுகளைச் செய்ய இயலாது. காசு கட்டியே வாங்க வேண்டும். அப்படியே வாங்கினாலும் நண்பருக்குத் தர காப்புரிமை ஒப்பாது. இப்படி, பயனருக்கு எந்த விதமான உரிமையும் அளிக்காமல் ஒரு சில மென்பொருள் நிறுவனங்களே தனியுரிமை பெற்று வளம் கொழிப்பது சரி இல்லை என்று ஒருவருக்குத் தோன்றியது. அவர் பெயர் ரிச்சர்டு சிட்டால்மேன் (Richard Stallman).

1983 ஆம் ஆண்டு, பயனர்களுக்கு கூடிய உரிமைகள் தரும் குனு திட்டத்தை (GNU Project) ரிச்சர்டு சிட்டால்மேன் தொடங்கினார். இத்திட்டத்தின் முழுமைக்குத் தேவைப்பட்ட லினக்சு (Linux) என்ற கரு மென்பொருளை லினசு டோர்வால்டுசு (Linus Torvalds) என்பவர் 1991ஆம் ஆண்டு கண்டறிந்தார். குனு/லினக்சு இயக்கு தளம் பிறந்தது. இயக்கு தளம் என்றால்? உங்கள் கணினியில் MS Office, Yahoo Messenger, Notepad போல பல மென்பொருள்கள் இருக்கும். இந்த மென்பொருள்களைப் புரிந்து கொண்டு இயக்கிக் காட்ட கணினிக்கு ஒரு அடிப்படை மென்பொருள் தேவை. இதை இயக்கு தளம் என்கிறோம். பலரும் பயன்படுத்தும் Microsoft Windows இத்தகைய ஒரு இயக்கு தளமே. Microsoft Windowsக்கு மாற்றாக இன்று பல குனு/லினக்சு இயக்கு தளங்கள் வந்து விட்டன. இவற்றில் உபுண்டு என்னும் இயக்கு தளம் மிக வேகமாகப் பரவி வருகிறது.

உபுண்டு என்றால்?

உபுண்டு, உங்களுக்கு எல்லா உரிமைகளையும் தரும் கணினி இயக்கு தளம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புதிய பதிப்பு வரும். இணையத்தில் இருந்தே புதிய பதிப்புக்கு இற்றைப்படுத்தலாம். ஒவ்வொரு முறையும் நிறுவத் தேவை இல்லை. பழைய கணினிகளில் கூட இயங்கும். அதிக நினைவகம், சேமிப்பு இடம் தேவையில்லை. மிக வேகமாக இயங்கும். ஒரு பைசா செலவில்லாமல், இன்றைய தொழில்நுட்பத்தில் உங்கள் கணினிகளை இயக்கலாம்.

உபுண்டுவில் நச்சுநிரலே (Virus) இல்லை என்பதால் பயமின்றி பிளாப்பி வட்டுகள், பேனா வட்டுகளைப் பயன்படுத்தலாம். நீங்கள் கணினி அறிவு மிக்கவரா? உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி உபுண்டுவை மேம்படுத்திப் பயன்படுத்தலாம். உபுண்டு அடிப்படையிலான சேவைகள் வழங்கி தொழில் கூட தொடங்கலாம். உபுண்டுவை நிறுவும் போது OpenOffice, Firefox போன்ற பயனுள்ள பல மென்பொருள்களைத் தானாகவே நிறுவி விடுகிறது. கூடுதல் மென்பொருள்கள் வேண்டுமா? உபுண்டு மென்பொருள் மையத்துக்குப் போய் வேண்டிய மென்பொருளை நிறுவலாம்.

பலதரப்பட்டவர்களின் தேவைக்கு ஏற்ப உபுண்டு பல வடிவங்களில் கிடைக்கிறது. மாணவர்களுக்குத் தேவையான கற்றல் மென்பொருள்களைக் கொண்டு Edubuntu கிடைக்கிறது. ஊடகத் துறையில் உள்ளவர்களுக்கு Studio Ubuntu கிடைக்கிறது.

விண்டோசுடன் சேர்ந்தே கூட உபுண்டுவைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறை கணினியைத் துவக்கும்போதும் உபுண்டுவா, விண்டோசா என்று முடிவு செய்யலாம். உபுண்டு பயன்படுத்துவதில் ஐயமா? உலகெங்கும் உள்ள உபுண்டு பயனர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

தமிழ் உபுண்டு

உபுண்டு நிறுவிய கணினிகளைத் தமிழிலேயே இயக்கலாம். http://ubuntu-tam.org/vaasal/request-ubuntu-cd என்ற முகவரிக்குச் சென்று இலவசமாக உபுண்டு வட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த வட்டுகளைச் சோதனை முறையில் பயன்படுத்திப் பார்த்துப் பிடித்திருந்தால் நிறுவிக் கொள்ளலாம்.

உபுண்டுவைத் தமிழாக்க, தமிழ்நாட்டில் உபுண்டுவைப் பரப்ப பல தமிழ்க் கணினி ஆர்வல இளைஞர்கள் உழைத்து வருகிறார்கள். சென்னை குனு/லினக்சு குழுமம், NRCFOSS, காஞ்சி லினக்சு பயனர் குழு, ஈரோடு-திருப்பூர்-உதகை-வேலூர் தகவல் நுட்ப மன்றங்களும் தி. வாசுதேவன், தங்கமணி அருண், கனகராஜ், பத்மநாதன், சிவாஜி, பாரதி சுப்ரமணியம், இராமன், தியாகு, கென்னத், செல்வமுரளி, பாலாஜி, சேது, மு. மயூரன் போன்ற எண்ணற்ற ஆர்வலர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழிலேயே எழுதப்பட்ட உபுண்டு பயனர் புத்தகம் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கிறது.

உபுண்டுவில் ஏதாவது குறைகள் உள்ளனவா?

விண்டோசில் மட்டும் இயங்கும் மென்பொருள்களை உபுண்டுவில் இயக்க Wine ( http://www.winehq.org ) என்ற மென்பொருள் உதவுகிறது. ஆனால், எல்லா மென்பொருள்களுக்கும் ஆதரவு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இவற்றுக்கு மாற்றாக, கட்டற்ற மென்பொருள்கள், இணையத்தில் இயங்கும் மென்பொருள்களைப் பயன்படுத்தலாம். வலைப்படக் கருவி (webcam) போன்ற வன்பொருள்களை வாங்கும் முன் அவற்றுக்கு உபுண்டு / லினக்சு ஆதரவு உண்டா என்று தேடிப் பார்த்து வாங்குவது நல்லது.

2004ல் தொடங்கிய உபுண்டு, நாளுக்கு நாள் பயன் கூடி வருகிறது. Dell கணினிகளில் உபுண்டு நிறுவி விற்கிறார்கள். செல்பேசிகளிலும் பயன்படுத்தலாம். உபுண்டு இலவசம், தரமானது என்பதை விட உங்கள் கணினியை முழு உரிமையுடன் பயன்படுத்த, உங்களிடம் இருப்பதை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள சுதந்திரம் அளிக்கிறது என்பதே முக்கியமானது.

மெத்தவிகாரி ஒரு பௌத்த துறவி. இலங்கை பள்ளிகளில் உபுண்டு போன்ற கட்டற்ற மென்பொருள்கள் பயன்பாட்டுக்குப் பாடுபட்டு வருகிறார். ஏன் உபுண்டுவை ஆதரிக்கிறீர்கள் என்று கேட்ட போது: “நான் ஒரு துறவி. எனக்கு கணினி கற்றுத் தாருங்கள், உங்களிடம் உள்ள மென்பொருள்களைத் தாருங்கள் என்று யாரும் கேட்டால் மறுக்க இயலாது. விண்டோசு போன்ற மென்பொருள்களைப் பகிர்ந்து கொள்ளவோ இலவசமாகத் தரவோ எனக்கு உரிமை இல்லை. உபுண்டுவில் இப்படிப் பகிர்ந்து பயன்படுத்தும் உரிமை உள்ளது” என்கிறார். உபுண்டு என்னும் தென்னாப்பிரிக்கச் சொல்லுக்கு மனிதம் என்றும் பொருள்!

கட்டுரை தகவல், படங்களுக்கு நன்றி: மு. மயூரன், இளஞ்செழியன், ம. ஸ்ரீ ராமதாஸ்

****

பெட்டிச் செய்தி 1

ம. ஸ்ரீ ராமதாஸ், கும்பகோணத்தைச் சேர்ந்த பொறியாளர். தமிழ் உபுண்டு வளர்ச்சிக்குப் பங்காற்றி வருகிறார். ராமதாசைப் போல பல ஆர்வலர்கள், உள்ளூர் தகவல் தொழில் நுட்ப மன்றங்கள் இணைந்து தமிழ்நாட்டில் கட்டற்ற மென்பொருள் பயன்பாட்டைப் பெருக்க உழைக்கிறார்கள்.

பெட்டிச் செய்தி 2

இளஞ்செழியன் என்பவரின் முன்முயற்சியில் மலேசியாவில் உள்ள இரு தமிழ்ப் பள்ளிக்கூடங்களில், 500 மாணவர்கள் தமிழ் வழியிலேயே கணினியை இயக்கிப் பாடங்களைக் கற்று வருகிறார்கள். இதற்கு உபுண்டு உதவுகிறது. வாரம் ஒரு மணி நேரம் கணினியைப் பயன்படுத்துகிறார்கள். நான்கு படிநிலைகளில் தகவல் தொழில்நுட்பம் பற்றி பாடம் படிக்கிறார்கள். வருங்காலத்தில், 4000க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

பெட்டிச் செய்தி 3

http://ubuntu-tam.org/vaasal/request-ubuntu-cd என்ற முகவரியில் இலவசமாகவே உபுண்டு வட்டுகளைப் பெறலாம்.

http://ubuntu.org

http://tamilfoss.org

http://www.edubuntu.org

http://ubuntustudio.org

http://wubi-installer.org/

தமிழ் TuxPaint

குழந்தைகள் வரைவதற்கான TuxPaint மென்பொருளைத் தமிழாக்கி உள்ளோம். 2004ல் தமிழா குழுவினர் வெளியிட்ட தமிழாக்கம் TSCIIயில் இருந்தது. அதை ஒருங்குறிக்கு மாற்றி, கூடுதலாக இருந்த புதிய சரங்களைத் தமிழாக்கி உள்ளோம்.

1. TuxPaint மென்பொருளைத் தரவிறக்கி நிறுவுங்கள்.

2. நிறுவுகையில் configurationல் Languages என்பதில் தமிழைத் தெரிவு செய்யுங்கள். ஏற்கனவே நிறுவி இருந்தால், (விண்டோசு கணினியில்) C:\Program Files\TuxPaint போய் Tuxpaint-config என்பதைச் சொடுக்கி அமைப்பை மாற்றலாம்.

3.  C:\Program Files\TuxPaint\locale\ta\LC_MESSAGES என்ற இடத்தில் உள்ள Tuxpaint.mo கோப்பை நீக்குங்கள்.

4. புதிய TuxPaint.mo கோப்பைத் தரவிறக்கி C:\Program Files\TuxPaint\locale\ta\LC_MESSAGES ல் சேருங்கள்.

தமிழாக்க உதவிக்கு நன்றி: சுந்தர், மயூரன், இராம. கி, புருனோ, கட்டற்ற தமிழ்க் கணிமை குழுமம், தமிழ் விக்சனரி குழுமம்.

கூகுள் தமிழ் எழுதி பயன்படுத்தாதீர் !

தட்டச்சு என்பது ஒரு மனப்பழக்கம். இந்த கூகுள் தமிழ் எழுதியில் எழுதிப் பழகி விட்டால், பிற எழுதிகளைப் பயன்படுத்த உங்களுக்கு கை வராது. ஆர்க்குட், ப்ளாகர் தவிர்த்த பிற தளங்களில் தமிழில் எழுதுவது உங்களுக்குச் சிரமமாகும். அதன் விளைவாக, கூகுள் தமிழ் எழுதி பக்கத்தை நாடத் தொடங்குவீர்கள். நேரடியாக எல்லா தளங்களிலும் இலகுவாகத் தமிழில் எழுதுவதை விடுத்து வீணே கூகுள் தமிழில் எழுதியில் இருந்து வெட்டி ஒட்டத் தொடங்குவீர்கள். இதனால், கூடுதல் கூகுள் சார்பு நிலையை அடைவீர்கள். அல்லது, பிற தளங்களில் எழுத வேறு மென்பொருள்கள், வேறு தட்டச்சு முறைகளைப் பயில வேண்டும். இதனால் உங்கள் மூளை குழம்பும்.

 கூகுள் தமிழ் எழுதி போன்ற எந்த ஒரு இந்திய மொழி கூகுள் எழுதியையும் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில்,

1.  கூகுள் தமிழ் எழுதியில் பழகி விட்டால்,   கூடுதல் கூகுள் சார்பு நிலையை அடைவீர்கள். கூகுள் எழுதி வசதி இல்லாத தளங்களில் எழுத வேறு மென்பொருள்கள், வேறு தட்டச்சு முறைகளைப் பயில வேண்டும். இதனால் மூளை குழம்பும். ஒரு மொழியை எழுதுவதற்கான தட்டச்சு மென்பொருள் என்பது மிகவும் அடிப்படையான ஒன்று. இந்த மென்பொருள்களை நிறுவனச் சார்பின்றி மாற்றிக் கொள்ளும் சுதந்திரம் இருப்பது முக்கியம்.

2. எ-கலப்பை, NHM Writer போன்று அல்லாது கூகுள் எழுதி ஒரு dynamic writer. அதாவது, இன்ன விசையை அழுத்தினால் இன்ன எழுத்து வரும் என்று உங்களால் ஊகிக்க இயலாது. நீங்கள் எழுத எழுத உங்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொள்ளும்.

ஒரு தட்டச்சும் பழக்கத்தை மிகையாகத் தன்விருப்பமாக்குவது தவறு. கூகுள் தன் ஊகிக்கும் நிரலாக்கத்தை மாற்றினால் நாமும் பழக்கத்தை மாற்ற வேண்டி இருக்கும். அவசரத்துக்கு வேறு மென்பொருள்களை நாட வேண்டி வந்தால் வேகமாக எழுத இயலாது. துவக்க நிலையில், இது இணையத்தில் உள்ள பெரும்பாலானோர் எந்த ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழை எழுதுகிறார்கள் என்பதன் அடிப்படையில் செயல்படுகிறது. நாம் வேறு மாதிரி எழுதும் முறையைக் கொண்டிருந்தால் துவக்கத்தில் சிரமப்பட வேண்டி இருக்கும்.

ஒவ்வொரு விசையை அழுத்தும் போதும் என்ன எழுத்து வெளிவரும் என்று அறிய இயல்வது முக்கியம். ஆனால், கூகுள் எழுதியில் முழுச் சொல்லையும் எழுதிய பிறகே தமிழுக்கு மாறுகிறது. இப்படி வெளிவரும் சொல் பிழையாக இருந்தால் backspace அழுத்திச் சென்று பிழை நீக்குவது பெரிய தலைவலியாகப் போகும். ஒரு பத்து வரி கட்டுரை எழுதிப் பார்த்தால் கூகுள் எழுதி எவ்வளவு சிரமமாக இருக்கிறது என்று புரியும்.

3. நாளை யாகூ, எம்எஸ்என் எல்லாரும் இது போன்ற ஊகித்தறியும் மென்பொருள்களை ஆளுக்கு ஒருவராக அறிமுகப்படுத்தினால், ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் இந்த ஊகித்தறியும் மென்பொருள்கள் எந்த அளவு ஒரு போல் இயங்கும் என்று சொல்ல இயலாது. ஒரே தமிழ்ச் சொல்லை வெவ்வேறு முறையில் வெவ்வேறு தளங்களில் எழுத வேண்டி வருவது குழப்பமாக இருக்கும்.

3. இணைய வசதி இன்றி வெறுமனே கணினியில் எழுத இது உதவாது

4. நீங்கள் என்ன எழுத நினைக்கிறீர்கள் என்பதை ஊகித்துக் கற்றுக் கொள்வது போல் இது அமைக்கப்பட்டிருப்பது இந்த மென்பொருளின் சிறப்பாகப் பலர் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில், இது தான் இதன் பெரிய குறை. ஆங்கிலத் தட்டச்சுக்கு இது போல் ஊகித்தறியும் மென்பொருள் வந்தால் உங்களுக்கு எவ்வளவு அயர்ச்சியாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

செல்பேசியில் அதிக விசைகள் இல்லாத நிலையில் குறுஞ்செய்தி போன்று சிறிய அளவிலான செய்திகள் எழுத இந்த ஊகிக்கும் முறை உதவும். கணினியில் பெரிய கட்டுரைகள் எழுத இது உதவாது. ல, ழ, ள, ற, ர, ண, ன, ந எழுத்துக்கள் அடங்கிய சொற்களை எழுதிப் பாருங்கள். இந்த முறையின் அயர்ச்சி புரியும்.

தவிர, இந்த கற்றல் நிகழ்வு உங்கள் உலாவியின் நினைவகத்தில் நடக்கிறது. நீங்கள் வேறு கணினி, இயக்குதளங்கள், உலாவிகளைப் பயன்படுத்தினால் திரும்ப முதலில் இருந்து கூகுளுக்குத் தமிழ் சொல்லித் தர வேண்டி இருக்கும். இது உங்கள் தட்டச்சும் வேகத்தைப் பெரிதும் மட்டுப்படுத்தும்.

5. ஒரே கணினி, உலாவியை உங்கள் நண்பர்கள், உறவினர்களோடு பகிர்ந்து கொண்டால் நீங்கள் செய்து வைத்திருக்கும் தன்விருப்பமாக்கல்கள் குளறுபடி ஆகலாம்.

6. சில சொற்களைத் தலைகீழாக நின்றாலும் எழுத முடியாத அளவுக்கு வழுக்கள் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு, guha priya, guhapriya என்று எழுதிப் பாருங்களேன் 😉 (நன்றி – கோபி)

7. ஆர்க்குட் போன்ற தளங்களின் பிரபலம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான இளைய தலைமுறையினர் இந்திய மொழி எழுத்துக்களை ஆங்கில எழுத்துக்களாக மனதில் பதித்துக் கொள்ளத் தொடங்குவார்கள். தொன்மையான வரலாற்றைக் கொண்ட பெரும்பான்மையான இந்திய மொழிகளுக்கு இதை விட வேறு அவமானம் உண்டோ?

இந்தத் தீமைகளை ஓரளவேனும் தவிர்க்க வேண்டும் என்று கூகுள் நினைத்தால், பின்வருவனவற்றைச் செய்யலாம்:

1. இணைப்பறு நிலையிலும் செயல்படுமாறு தரவிறக்கிக் கொள்ளத்தக்க மென்பொருள் பொதியாக இதை மாற்ற முனைய வேண்டும்.

2. கணினி, உலாவி, இயக்குதள சார்பு இன்றி குறைந்தபட்சம் கூகுள் பயனர் கணக்கோடு இணைந்ததாக இந்த மென்பொருளை மாற்ற வேண்டும்.

ஆனால், இவ்வளவையும் செய்தாலும்,

தமிழ்99 போன்று அந்தந்த மொழிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தட்டச்சு முறைகள், அவற்றை ஊக்குவிக்கும் எ-கலப்பை, NHM Writer போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்துங்கள். அஞ்சல் / தமிங்கில முறை தான் வேண்டுமென்றாலும் குறைந்தபட்சம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தட்டச்சு செய்ய உதவும் நிலையான மென்பொருள்களை நாடுங்கள்.

தமிழ் உரைபேசி

கோபி உருவாக்கும் ஔவை உரைபேசி மென்பொருளுக்கு தெளிவான தமிழ் ஒலிப்பும் நல்ல குரல் வளமும் உடைய தமிழ்நாட்டு, இலங்கை ஆண் / பெண் / குயில் / கிளி உடனடியாகத் தேவை.

தமிழ்99 செய்திகள்

தமிழ்99 செய்திகள்.

எழுதுவது: ரவிசங்கர் 😉

* தமிழ்99 தளத்தை இன்று இற்றைப்படுத்தினேன். குறிப்பாக, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பகுதி பாருங்கள். தள மேம்பாடு குறித்த ஆலோசனைகளை வரவேற்கிறேன். தள பராமரப்பு, வடிவமைப்புப் பெருமைகள் அனைத்தும் சிந்தாநதியைச் சேரும்.

* இணையத்தில் ஒரு தமிழ்99 எழுதி இல்லாத குறையைப் போக்க W3Tamil எழுதி வந்திருக்கிறது. காணத்தக்க விசைப்பலகையாக இருப்பதுவும், பதிவிறக்கி இணைப்பறு நிலையிலும் பயன்படுத்த இயல்வதும் இதன் சிறப்பு.

* வலைப்பதிவுகளில் தமிழ்99 எழுதியைப் பொதிந்து கொள்வதற்கான widget.

* தமிழ் எழுது கருவிகள், குறிமுறைகள், எழுத்துருக்கள், மென்பொருள்கள் தொடர்பில் சேது அவர்கள் காட்டும் ஆர்வம், ஈடுபாடு, பொறுமை, நேர்த்தி வியக்க வைக்கிறது. சேது அவர்கள் போன்ற இன்னும் பல தமிழ்க் கணிமை ஆர்வலர்கள் உரையாடலைக் கவனிக்க கட்டற்ற தமிழ்க் கணிமை குழுவில் இணைய வரவேற்கிறேன்.

* சொல்லின் ஈற்றில் ஸ், ஷ், ஜ் போன்ற கிரந்த எழுத்துக்கள் வரும்போது அவற்றை தமிழ்99 முறையில் இலகுவாக எழுத ஒரு சின்ன புதிய தமிழ்99 விதியைப் பரிந்துரைத்து இருந்தேன். முன்பு சொல்லின் ஈற்றில் ஸ் எழுத ஸ+f அடிக்க வேண்டி இருக்கும். தற்போது ஸ மட்டும் எழுதினால் போதும். அதே வேளை சொல்லின் ஈற்றில் ஸ் எழுத வேண்டுமானால் ஸ+அ என்று அடித்து எழுதிக் கொள்ளலாம். பிரஷ், பிரிஜ், மெஸ், வனஜ், சந்தோஷ் போன்ற ஆங்கில, வடமொழிப் பெயர்கள், சொற்களை எழுத இந்த விதி உதவும். இதற்கான புதிய tamil99 xml கோப்பையும் சேது அளித்து இருக்கிறார். இந்த மாற்றம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இன்னும் வேறு நல்ல யோசனைகள் ஏதும் உண்டா?

* உத்தமம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. இந்த ஆண்டுக்கான அதன் செயல்திட்டத்தில் தமிழ்99 விசைப்பலகை முறையைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்துவது குறித்து அரசு மட்டத்தில் காய் நகர்த்த வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்.

* இலங்கை அரசு தன் கல்வித்திட்டத்தில் பாமினி விசைப்பலகை முறைக்கே ஆதரவு தர இருப்பதாக நண்பர் ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே இலங்கையில் பாமினி விசைப்பலகை முறை பொதுப் பயன்பாட்டில் இருப்பதால் இந்த முடிவு புரிந்து கொள்ளத்தக்கதே. கூடுதலாக, தமிழ்99 இயங்குவதற்கான தமிழ் இலக்கண அடிப்படைகளைப் புரிந்து கொள்ள இயலாத சிறு குழந்தைகளுக்கு பாமினி முறை உகந்ததாக இருக்கும் என்ற வாதத்தையும் அறிந்து கொள்ள முடிந்தது.

* தமிழ்99 ஆர்வலர் குழுமம் தொடங்கப்பட்டிருக்கிறது. தமிழ்99 பழகுபவர்களுக்கு உதவ, தமிழ்99 ஒட்டிகள், விசைப்பலகைகளை உருவாக்க, வினியோகிக்க, தமிழ்99 பயன்பாட்டைப் பரவலாக்குவதில் பலமுனைத் தாக்குதல்களுக்கான உத்திகளை வகுக்க 😉 இந்தக் குழுமம் செயல்படும்.

* எனக்குத் தெரிந்து பாமினி விசைப்பலகையை விட்டு தமிழ்99க்கு மாறிய முதல் ஆள், மயூரேசன். Tamil99 rocks என்கிறார் ! தமிங்கில விசைப்பலகையில் இருந்து தமிழ்99க்கு மாறுவதை விட பாமினியில் இருந்து மாறுவது சிரமம் என்று நினைத்து இருந்தேன். ஆனால், இயலாதது அல்ல அன்று மயூரேசன் புரியவைத்து விட்டார். இப்ப அவருக்கு பாமினி மறந்து போச்சாம் 😉 நீங்க இன்னும் தமிழ்99க்கு மாறலியா? தமிழ்99க்கு மாறிய மா.சிவகுமார் தமிழ்99 நன்மைகள் குறித்து விளக்குவதைப் படியுங்கள்.

* நண்பர் பாரி. அரசு, தமிழ் எழுத்து பொறித்த கணினி விசைப்பலகைகளை கட்டுபடியாகும் விலைக்கு வாங்க, தமிழ்நாட்டில் 6 மாதமாக அலைந்து வெறுத்துப் போய் கடைசியில் தானே அவற்றைக் கைக்காசு போட்டு உற்பத்தி செய்து இலாபமின்றி தன்னார்வல முறையில் வினியோகிக்க நினைத்து இருக்கிறார். இது குறித்த உரையாடலை தமிழ்99 குழுமத்தில் காணலாம்.

இரண்டரை இலட்சம் முதலீட்டில் சீனாவில் இருந்து 1000 விசைப்பலகைகளை இறக்க முடிவெடுத்திருக்கிறார். இவற்றில் ஆங்கிலம், தமிழ் எழுத்துகள் தமிழ்99 முறையில் அச்சிடப்பட்டு இருக்கும். எனினும், உற்பத்தி உத்தரவு கொடுக்கும் முன் இதற்கான சந்தை வாய்ப்பை அறிய விரும்புகிறோம்.

என்னால் பத்து பலகைகளைப் பெற்று வினியோகிக்க / விற்க / பயன்படுத்த இயலும் என்று உறுதி அளித்திருக்கிறேன். ஒரு பலகையின் விலை 200 இந்திய ரூபாயில் இருந்து 300 இந்திய ரூபாய்க்குள் இருக்கலாம். இது போல் 50 தன்னார்வலர்களாகவது கிடைத்தால் இவற்றை உற்பத்தி செய்வது குறித்த முடிவு எடுக்க இயலும். நீங்களாகவோ நண்பர்கள் மூலமாகவோ இதற்கு உதவ முடியும் என்று நினைத்தால் இங்கு சென்று உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள்.

தமிழ்நாட்டில் தமிழ் எழுத்துகள் பொறித்த கணினி விசைப்பலகையை விற்கவும் வாங்கவும் ஆள் இல்லை என்பதை நினைத்தால்.. 🙁