உபுண்டு – அறிமுகம்

(10 திசம்பர் 2009 புதிய தலைமுறை இதழில் வெளிவந்த கட்டுரை. ஆசிரியர் குழுவின் சிற்சில மாற்றங்களுடன்)

உபுண்டு

– அ. ரவிசங்கர்

உங்களுக்கு மோட்டார் பைக்குகள் பிடிக்குமா? பைக்குகளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மாட்டத் தெரியுமா? ஆனால், மோட்டார் பைக் விற்கும் நிறுவனமோ “நீங்கள் பைக்குகளைப் பிரித்துப் பார்க்கக்கூடாது. ஏதாவது பிரச்சினை என்றால் எங்களிடம் தான் வர வேண்டும். பழைய பைக்குகளைச் சீர் செய்ய மாட்டோம். திரும்பத் திரும்ப புது பைக்குகள் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும். உலகில் எல்லாரும் ஒரே வகை பைக் தான் ஓட்ட வேண்டும். வகை வகையான பைக் எல்லாம் வெளியிட முடியாது” என்று கட்டுப்பாடு மேல் கட்டுப்பாடு விதித்தால் எவ்வளவு கடுப்பாக இருக்கும்?

நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் நமக்குக் கூடுதல் உரிமை வேண்டுகிறோம். ஆனால், காசு கொடுத்து வாங்கும் கணினி மென்பொருள்களில் மட்டும் நமக்கு உரிமை இல்லாமல் இருப்பது ஏன்? கணினி மென்பொருள்களில் ஏதாவது பிரச்சினை என்றால் நம்மால் சீர் செய்ய இயலாது. நுட்பம் தெரிந்தாலும் வேண்டிய மேம்பாடுகளைச் செய்ய இயலாது. காசு கட்டியே வாங்க வேண்டும். அப்படியே வாங்கினாலும் நண்பருக்குத் தர காப்புரிமை ஒப்பாது. இப்படி, பயனருக்கு எந்த விதமான உரிமையும் அளிக்காமல் ஒரு சில மென்பொருள் நிறுவனங்களே தனியுரிமை பெற்று வளம் கொழிப்பது சரி இல்லை என்று ஒருவருக்குத் தோன்றியது. அவர் பெயர் ரிச்சர்டு சிட்டால்மேன் (Richard Stallman).

1983 ஆம் ஆண்டு, பயனர்களுக்கு கூடிய உரிமைகள் தரும் குனு திட்டத்தை (GNU Project) ரிச்சர்டு சிட்டால்மேன் தொடங்கினார். இத்திட்டத்தின் முழுமைக்குத் தேவைப்பட்ட லினக்சு (Linux) என்ற கரு மென்பொருளை லினசு டோர்வால்டுசு (Linus Torvalds) என்பவர் 1991ஆம் ஆண்டு கண்டறிந்தார். குனு/லினக்சு இயக்கு தளம் பிறந்தது. இயக்கு தளம் என்றால்? உங்கள் கணினியில் MS Office, Yahoo Messenger, Notepad போல பல மென்பொருள்கள் இருக்கும். இந்த மென்பொருள்களைப் புரிந்து கொண்டு இயக்கிக் காட்ட கணினிக்கு ஒரு அடிப்படை மென்பொருள் தேவை. இதை இயக்கு தளம் என்கிறோம். பலரும் பயன்படுத்தும் Microsoft Windows இத்தகைய ஒரு இயக்கு தளமே. Microsoft Windowsக்கு மாற்றாக இன்று பல குனு/லினக்சு இயக்கு தளங்கள் வந்து விட்டன. இவற்றில் உபுண்டு என்னும் இயக்கு தளம் மிக வேகமாகப் பரவி வருகிறது.

உபுண்டு என்றால்?

உபுண்டு, உங்களுக்கு எல்லா உரிமைகளையும் தரும் கணினி இயக்கு தளம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புதிய பதிப்பு வரும். இணையத்தில் இருந்தே புதிய பதிப்புக்கு இற்றைப்படுத்தலாம். ஒவ்வொரு முறையும் நிறுவத் தேவை இல்லை. பழைய கணினிகளில் கூட இயங்கும். அதிக நினைவகம், சேமிப்பு இடம் தேவையில்லை. மிக வேகமாக இயங்கும். ஒரு பைசா செலவில்லாமல், இன்றைய தொழில்நுட்பத்தில் உங்கள் கணினிகளை இயக்கலாம்.

உபுண்டுவில் நச்சுநிரலே (Virus) இல்லை என்பதால் பயமின்றி பிளாப்பி வட்டுகள், பேனா வட்டுகளைப் பயன்படுத்தலாம். நீங்கள் கணினி அறிவு மிக்கவரா? உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி உபுண்டுவை மேம்படுத்திப் பயன்படுத்தலாம். உபுண்டு அடிப்படையிலான சேவைகள் வழங்கி தொழில் கூட தொடங்கலாம். உபுண்டுவை நிறுவும் போது OpenOffice, Firefox போன்ற பயனுள்ள பல மென்பொருள்களைத் தானாகவே நிறுவி விடுகிறது. கூடுதல் மென்பொருள்கள் வேண்டுமா? உபுண்டு மென்பொருள் மையத்துக்குப் போய் வேண்டிய மென்பொருளை நிறுவலாம்.

பலதரப்பட்டவர்களின் தேவைக்கு ஏற்ப உபுண்டு பல வடிவங்களில் கிடைக்கிறது. மாணவர்களுக்குத் தேவையான கற்றல் மென்பொருள்களைக் கொண்டு Edubuntu கிடைக்கிறது. ஊடகத் துறையில் உள்ளவர்களுக்கு Studio Ubuntu கிடைக்கிறது.

விண்டோசுடன் சேர்ந்தே கூட உபுண்டுவைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறை கணினியைத் துவக்கும்போதும் உபுண்டுவா, விண்டோசா என்று முடிவு செய்யலாம். உபுண்டு பயன்படுத்துவதில் ஐயமா? உலகெங்கும் உள்ள உபுண்டு பயனர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

தமிழ் உபுண்டு

உபுண்டு நிறுவிய கணினிகளைத் தமிழிலேயே இயக்கலாம். http://ubuntu-tam.org/vaasal/request-ubuntu-cd என்ற முகவரிக்குச் சென்று இலவசமாக உபுண்டு வட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த வட்டுகளைச் சோதனை முறையில் பயன்படுத்திப் பார்த்துப் பிடித்திருந்தால் நிறுவிக் கொள்ளலாம்.

உபுண்டுவைத் தமிழாக்க, தமிழ்நாட்டில் உபுண்டுவைப் பரப்ப பல தமிழ்க் கணினி ஆர்வல இளைஞர்கள் உழைத்து வருகிறார்கள். சென்னை குனு/லினக்சு குழுமம், NRCFOSS, காஞ்சி லினக்சு பயனர் குழு, ஈரோடு-திருப்பூர்-உதகை-வேலூர் தகவல் நுட்ப மன்றங்களும் தி. வாசுதேவன், தங்கமணி அருண், கனகராஜ், பத்மநாதன், சிவாஜி, பாரதி சுப்ரமணியம், இராமன், தியாகு, கென்னத், செல்வமுரளி, பாலாஜி, சேது, மு. மயூரன் போன்ற எண்ணற்ற ஆர்வலர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழிலேயே எழுதப்பட்ட உபுண்டு பயனர் புத்தகம் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கிறது.

உபுண்டுவில் ஏதாவது குறைகள் உள்ளனவா?

விண்டோசில் மட்டும் இயங்கும் மென்பொருள்களை உபுண்டுவில் இயக்க Wine ( http://www.winehq.org ) என்ற மென்பொருள் உதவுகிறது. ஆனால், எல்லா மென்பொருள்களுக்கும் ஆதரவு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இவற்றுக்கு மாற்றாக, கட்டற்ற மென்பொருள்கள், இணையத்தில் இயங்கும் மென்பொருள்களைப் பயன்படுத்தலாம். வலைப்படக் கருவி (webcam) போன்ற வன்பொருள்களை வாங்கும் முன் அவற்றுக்கு உபுண்டு / லினக்சு ஆதரவு உண்டா என்று தேடிப் பார்த்து வாங்குவது நல்லது.

2004ல் தொடங்கிய உபுண்டு, நாளுக்கு நாள் பயன் கூடி வருகிறது. Dell கணினிகளில் உபுண்டு நிறுவி விற்கிறார்கள். செல்பேசிகளிலும் பயன்படுத்தலாம். உபுண்டு இலவசம், தரமானது என்பதை விட உங்கள் கணினியை முழு உரிமையுடன் பயன்படுத்த, உங்களிடம் இருப்பதை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள சுதந்திரம் அளிக்கிறது என்பதே முக்கியமானது.

மெத்தவிகாரி ஒரு பௌத்த துறவி. இலங்கை பள்ளிகளில் உபுண்டு போன்ற கட்டற்ற மென்பொருள்கள் பயன்பாட்டுக்குப் பாடுபட்டு வருகிறார். ஏன் உபுண்டுவை ஆதரிக்கிறீர்கள் என்று கேட்ட போது: “நான் ஒரு துறவி. எனக்கு கணினி கற்றுத் தாருங்கள், உங்களிடம் உள்ள மென்பொருள்களைத் தாருங்கள் என்று யாரும் கேட்டால் மறுக்க இயலாது. விண்டோசு போன்ற மென்பொருள்களைப் பகிர்ந்து கொள்ளவோ இலவசமாகத் தரவோ எனக்கு உரிமை இல்லை. உபுண்டுவில் இப்படிப் பகிர்ந்து பயன்படுத்தும் உரிமை உள்ளது” என்கிறார். உபுண்டு என்னும் தென்னாப்பிரிக்கச் சொல்லுக்கு மனிதம் என்றும் பொருள்!

கட்டுரை தகவல், படங்களுக்கு நன்றி: மு. மயூரன், இளஞ்செழியன், ம. ஸ்ரீ ராமதாஸ்

****

பெட்டிச் செய்தி 1

ம. ஸ்ரீ ராமதாஸ், கும்பகோணத்தைச் சேர்ந்த பொறியாளர். தமிழ் உபுண்டு வளர்ச்சிக்குப் பங்காற்றி வருகிறார். ராமதாசைப் போல பல ஆர்வலர்கள், உள்ளூர் தகவல் தொழில் நுட்ப மன்றங்கள் இணைந்து தமிழ்நாட்டில் கட்டற்ற மென்பொருள் பயன்பாட்டைப் பெருக்க உழைக்கிறார்கள்.

பெட்டிச் செய்தி 2

இளஞ்செழியன் என்பவரின் முன்முயற்சியில் மலேசியாவில் உள்ள இரு தமிழ்ப் பள்ளிக்கூடங்களில், 500 மாணவர்கள் தமிழ் வழியிலேயே கணினியை இயக்கிப் பாடங்களைக் கற்று வருகிறார்கள். இதற்கு உபுண்டு உதவுகிறது. வாரம் ஒரு மணி நேரம் கணினியைப் பயன்படுத்துகிறார்கள். நான்கு படிநிலைகளில் தகவல் தொழில்நுட்பம் பற்றி பாடம் படிக்கிறார்கள். வருங்காலத்தில், 4000க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

பெட்டிச் செய்தி 3

http://ubuntu-tam.org/vaasal/request-ubuntu-cd என்ற முகவரியில் இலவசமாகவே உபுண்டு வட்டுகளைப் பெறலாம்.

http://ubuntu.org

http://tamilfoss.org

http://www.edubuntu.org

http://ubuntustudio.org

http://wubi-installer.org/


Comments

2 responses to “உபுண்டு – அறிமுகம்”

  1. ரவிசங்கர் உங்களுடைய மின்னஞ்சல் கொடுத்த உற்சாகம் காரணமாய் தான் சில வாரங்களுக்கு முன் என்னுடைய மேஜை கணிப்பொறியில் உபண்டுவை நிறுவினேன். உபண்டுவை பயன்படுத்த தொடங்கிய பிறகு தான் விண்டோஸில் இருந்த லிமிட்டேஷன் எனக்கு புலப்படுகிறது. இப்போது நானும் உபண்டு ப்ரியன் ஆகி விட்டேன்.

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      “உபுண்டு பிரியன்” – இந்தப் பேர் நல்லா இருக்கே 🙂