“பள்ளிக் கல்வியில் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் அந்த அளவு எடுப்பதில்லையே? அதிலும், ஆங்கில வழிய மாணவர்களைக் காட்டிலும் தமிழ் வழிய மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் எடுக்கிறார்களே, ஏன்?”
இது, ஊரில் தமிழ் வழியத்தில் பயின்று வரும் தங்கை ஒருத்தியின் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களைப் பார்த்த பிறகு அப்பா கேட்ட கேள்வி.
பத்தாம் வகுப்பை விட பன்னிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைய காரணங்கள்:
* பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்திட்டம் சற்று மாறுபட்டது. கல்லூரிக் கல்விக்கு முன்னோட்டமாக சற்று ஆழமான புதிய தலைப்புகளை அறிமுகப்படுத்துவது. எனவே, பத்தாம் வகுப்பில் புரியாமல் மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவது போல் பன்னிரண்டாம் வகுப்பில் இயலாது.
* பன்னிரண்டாம் வகுப்புக்குத் திறனும் அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்கள் தேவை. இது எல்லா பள்ளகளிலும் அமையாது.
* 11, 12 வகுப்புகள் படிக்கும் மாணவர்களின் விடலைப் பருவம் ஒரு முக்கியமான கால கட்டம். இந்த வயதில் சிலர் திசை மாறுவதைக் காணலாம்.
தமிழ் வழிய மாணவர்களை விட ஆங்கில வழிய மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் எடுக்கிறார்களா?
இதற்குத் தெளிவான புள்ளிவிவரங்கள் உள்ளனவா தெரியவில்லை. மனத் தோற்றமாக இருக்கலாம். உண்மையாகவே இருந்தாலும், அதற்கான காரணங்கள் மிக எளிமையாக விளக்கலாம்:
* ஆங்கில வழியப் பள்ளிகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகள். நகரத்தில் உள்ளவை. இந்த அடிப்படையிலேயே ஆங்கிலம், தமிழ் வழியப் பள்ளிகளுக்கான வேறுபாட்டைக் காண இயலும். ஆங்கில வழியத்தில் படிப்பவர்கள் எல்லாரும் பணக்காரர்கள் இல்லாவிட்டாலும், கல்விக்காக செலவு செய்ய முனைபவர்கள். “இவ்வளவு காசு செலவு செய்யுறோமே.. ஒழுங்கா உக்கார்ந்து படி” என்று பல தனியார் பள்ளிப் பெற்றோர்கள் கூறுவதைக் கேட்கலாம். ஆக, இந்த மாணவர்களுக்கு இருக்க வேண்டிய ஒரே முனைப்பு படிப்பு தான். ஆனால், தமிழ் வழிய மாணவர்கள் பெரும்பாலும் வறிய பின்னணியில் உள்ளவர்கள். ஊர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள். பள்ளியில் படிக்கும் நேரம் போக வீட்டில், வயலில், கடையில் பெற்றோருக்கு உதவியாக செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கும். எனவே, அவர்கள் கவனம் செலுத்திப் படிப்பதற்கான நேரமும் வீட்டுச் சூழலும் குறைவே.
* ஒரு வேளை பள்ளியில் உள்ள ஆசிரியரின் பயிற்சி போதாவிட்டால், சிறப்பு வகுப்புகளுக்குச் செல்லும் வாய்ப்பு தமிழ் வழிய மாணவர்களுக்குக் குறைவு.
* ஆங்கில வழியப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் போதே திறம் கூடிய மாணவர்களைச் சேர்க்கிறார்கள். எனவே, அவர்கள் தேர்வு முடிவுகளும் சிறப்பாக வந்தால் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
* நகரத்தில் உள்ள தனியார் ஆங்கில வழியப் பள்ளி மாணவர்களின் உறவு வட்டம், நட்பு வட்டம் சற்று விழிப்புணர்வு கூடியதாக இருக்கும். பள்ளிப்படிப்பு முடித்த பிறகு என்ன செய்ய வேண்டும், அதற்கு எப்படிப் படிக்க வேண்டும் என்பன போன்ற வழிகாட்டல்களும் அதற்கான முனைப்பும் இருக்கும். தமிழ் வழிய மாணவர்களிடம் இவை சற்றுக் குறைவாக இருக்கலாம்.
எனவே, தமிழ் வழிய மாணவர்களின் தேர்வுத் திறம் சற்றுக் குறைவாக இருந்தால் அதற்கு அவர்கள் சமூகப் பின்னணி தான் காரணமே ஒழிய பயிலும் மொழி ஒரு காரணமில்லை. அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதோடு அவர்கள் குடும்பத்தின் வாழ்க்கைத் தரம், சமூகப் பின்னணியை உயர்த்துவதும் முக்கியத் தேவை ஆகும்.
Comments
9 responses to “ஆங்கில வழிய மாணவர்கள் அறிவாளிகளா?”
சமீபத்தில் நண்பர் ஒருவர் என்னிடம் சொன்ன தகவல் வேதனைக்குரியது. இப்போதெல்லாம் அரசு பள்ளிகளில் தமிழ் மீடியத்தில் குழந்தைகளை சேர்ப்பதை கௌரவ குறைச்சலாக கிராமங்களில் கூட நினைக்க தொடங்கி விட்டார்கள். இதன் காரணமாக அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் பெரும்பாலனோர் தலித் குழந்தைகளாகவே இருக்கிறார்கள்.
“என் குழந்தையை அரசு பள்ளியில் சேர்க்கிறேன்,” என்று சொன்னால், “தலித் பசங்க படிக்கிற பள்ளியிலா,” என்று கிண்டலடிக்கிறார்களாம். இந்த போக்கு தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் பரவி விட்டதா அல்லது நண்பரின் மாவட்டத்தில் மட்டும் தானா என்று தெரியவில்லை.
ரவி மாதத்திற்கு ஒரு முறையாவது போஸ்ட் போடுங்கள். ஆங்கிலத்தில் வலைப்பதிவது பற்றி எக்கச்சக்க அருமையான வலைப்பதிவுகள் இருக்கின்றன. ஆனால் தமிழில் எண்ணிக்கை மிகவும் குறைவு. நீங்கள் நிறைய எழுதலாமே!
சாய்ராம், உங்கள் நண்பர் சொன்ன பள்ளி எந்த வட்டத்தில் உள்ளது? ஊர்ப்புறங்களிலும் ஆங்கில வழிய மோகம் கூடி வருவது உண்மை தான். ஆனால், நிலைமை அவர் சொல்லும் அளவுக்குக் கவலைக்கிடம் இல்லை என்று உறுதியாகச் சொல்ல இயலும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எங்கள் உறவினர்களில் பலர் ஆங்கில வழியத்தில் சேர்த்தாலும் தமிழ் வழியத்தில் பயிலும் மற்றவர்களைக் குறைவாக நினைப்பது இல்லை. அரசு தமிழ் வழியப்பள்ளிகளில் அனைத்துச் சாதி மாணவர்களும் பயில்கிறார்கள். நான் படித்த அரசு உதவி பெறும் பள்ளியில் கூட காசு கொடுத்து விடுதியில் தங்கித் தமிழ் வழியத்தில் பயிலச் சேர்ப்பவர்கள் இருக்கிறார்கள். ஊர்ப்புற ஆங்கில வழியப் பள்ளிகள் பலவும் காசை வாங்கிக் கொண்டு தரமற்ற கல்வி தருவதாலும், வீட்டில் ஆங்கிலம் இல்லா நிலையில் உயர் வகுப்பு வர வர பிள்ளைகள் சிரமப்படுவதாலும், ஆங்கிலப் பள்ளியில் இருந்து மீண்டும் தமிழ் வழியப் பள்ளிக்கு வந்து நிம்மதியாகப் படிக்கும் பிள்ளைகளையும் அறிவேன்.
அடிக்கடி எழுத முயல்கிறேன். தூண்டுலதுக்கு நன்றி 🙂
தெளிவான அலசல் ரவி
உங்கள் கருத்தோடு முழுமையாக உடன்படுகிறேன்.
ஆனால் இலங்கையில் (தனியார்) ஆங்கில பள்ளிகளில் ‘படிக்கிமாட்டாத’ மாணவர்களை தான் பெரும்பாலும் சேர்ப்பார்கள்… 😉
நிமல், இலங்கையிலாவது தமிழ் வழிப் பள்ளிக் கல்வி உயிரோடு இருப்பது தான் ஆறுதல்… இங்கும் படிக்காத பிள்ளைகளை விடுதிப் பள்ளிகளில் சேர்ப்பதாக மிரட்டுவார்கள் 🙂
அது எப்படி அக்குவேறு ஆணிவேரா எல்லா reasons உம் புட்டு புட்டு வெச்சிருக்கீங்க. 🙂
“பன்னிரண்டாம் வகுப்புக்குத் திறனும் அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்கள் தேவை. இது எல்லா பள்ளகளிலும் அமையாது.”
+1000
எங்க ஊர்ல இருக்குற எல்லா ஆங்கில வழி, fees ‘லம்ப்’ஆ வாங்குற பள்ளிகள்ல கூட இதே நிலைமைதான். எல்லாரும் tuitions, coaching centres (classes are conducted by college professors) பள்ளி முடிந்தவுடன் போய்டுவோம்.
இந்த தடவை 1௦ம் வகுப்பு தேர்வில் மாநில முதல் இடம் பெற்ற பையன் தொலைக்காட்சிப் பேட்டியில் அவன் மார்க் வாங்குனதுக்கு காரணம் tuition teachersன்னு சொல்ல… அதுக்கு பேட்டி எடுத்தவர் உங்க பள்ளி ஆசிரியர்களால இல்லையான்னு கேட்க… அவன் சமாளிக்க… ஒரே comedy தான்! 😀
என்னைக்கு இதெல்லாம் மாறப்போகுதோ!
🙂
ஒவ்வொரு நாளும் ஒரே பாடத்துக்கு மூன்று வெவ்வேறு ஆசிரியர்களிடம் பயிற்சிக்குப் போகும் பசங்கள எல்லாம் பார்த்திருக்கேன் 🙂 🙂
இன்றைய கல்வியின் நிலை கவலைக்கிடமாக இருப்பது நாளைய சமூகம் மோசமாக இருக்குமென்பதற்கு முன்னறிவிப்பு.
Links of relevance: http://www.ted.com/talks/ken_robinson_says_schools_kill_creativity.html
http://www.ted.com/talks/sir_ken_robinson_bring_on_the_revolution.html