விக்கிப்பீடியா

(12 நவம்பர் 2009 புதிய தலைமுறை இதழில் வெளிவந்த விக்கிப்பீடியா அறிமுகம். என் நேரமின்மை காரணமாக, வெளிவந்த கட்டுரையின் இறுதிப்பகுதியை ஆசிரியர் குழு எழுதியது. இதழ் நடைக்கு ஏற்ப சில சிறிய மாற்றங்களும் உண்டு)

புதுக்கோட்டை மாவட்டம் மாங்குடி அரசு நடுநிலைப் பள்ளி. காவிரி ஆற்றைப் பற்றி ஒரு கட்டுரைப் போட்டி. மாணவர்கள் தமிழ் விக்கிப்பீடியா ( http://ta.wikipedia.org ) என்ற இணையத்தளத்துக்குச் செல்கிறார்கள். காவிரி ஆற்றுடன் நிற்காமல் அதனுடன் தொடர்புடைய குடகு, மேற்குத் தொடர்ச்சி மலை, வங்காள விரிகுடா பற்றியும் படித்துப் பார்க்கிறார்கள். “விக்கிப்பீடியாவின் வரவுக்குப் பிறகு மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்துக்கு வெளியே உள்ளவற்றையும் ஆர்வத்துடன் கற்கிறார்கள். ஒரே மாதிரியான பாடநூல், நூலக கட்டுரைகளை மனப்பாடம் செய்வதில்லை. படைப்பூக்கம் கூடி இருக்கிறது. ஏன், ஆசிரியர்களே கூட தெரிந்து கொள்ள வேண்டிய பல விசயங்கள் விக்கிப்பீடியாவில் உள்ளன” என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சோதிமணி.

இது என்ன விக்கிப்பீடியா?

விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். சொற்களுக்குப் பொருள் தெரிய வேண்டும் என்றால் அகராதி பார்க்கிறோம் அல்லவா? அதைப் போல் எந்தத் தலைப்பு பற்றியும் விரிவாகத் தெரிந்து கொள்ள கலைக்களஞ்சியங்களைப் பார்க்கலாம்.

மிக எளிமையான சிந்தனைகள் தான் உலகைப் புரட்டிப் போட்டிருக்கின்றன. 2001 ஆம் ஆண்டு விக்கிப்பீடியாவைத் துவக்கிய சிம்மி வேல்சு, லாரி சாங்கர் ஆகியோரின் சிந்தனையும் எளிமையான ஒன்று தான்:

“உலகில் உள்ள எல்லோருக்கும் அறிவு கிடைக்க வேண்டும்.

இதற்காக ஒரு கலைக்களஞ்சியத்தைக் கூட்டு முயற்சியில் உருவாக்குவோம். அதை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மேம்படுத்தி இலவசமாகப் பயன்படுத்த உரிமை அளிப்போம். ”

இன்று, உலகில் கூடுதலாகப் பார்க்கப்படும் முதல் பத்து இணையத்தளங்களுள் விக்கிப்பீடியாவும் ஒன்று. ஆங்கில விக்கிப்பீடியாவில் மட்டும் 3 மில்லியன் கட்டுரைகள் உண்டு. நீங்கள் அறிய விரும்பும் எல்லா துறைகளும் விக்கிப்பீடியாவில் கிடைக்கும். கூகுளில் போய் தேடினால் கூட பெரும்பாலான முதற்பக்க முடிவுகள் விக்கிப்பீடியாவுக்கு இட்டுச் செல்லும். பலருக்கும் கூகுளும் விக்கிப்பீடியாவும் மட்டுமே இணையம் ! விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் Microsoft நிறுவனமே தன்னுடைய MSN Encarta திட்டத்தை நிறுத்திக் கொண்டது என்றால் பாருங்களேன் ! மனித வரலாற்றில் உருவான மிகப் பெரிய அறிவுத் தொகுப்பாக விக்கிப்பீடியா விளங்குகிறது.

தற்போது, 250க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் விக்கித்திட்டங்கள் இயங்குகின்றன. கலைக்களஞ்சியத்துக்குத் துணையாக, விக்கி அகராதி, விக்கி நூல்கள், விக்கி செய்திகள் என்று பல புதிய திட்டங்கள் வந்துள்ளன.

சரி, விக்கிப்பீடியாவால் தமிழருக்கு என்ன நன்மை?

தமிழில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கிய கலைக்களஞ்சியங்கள், விகடன் தமிழாக்கிய பிரித்தானியா கலைக்களஞ்சியம் போன்றவை கிடைக்கின்றன. ஆனால், இவற்றை அனைவராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. அச்சு வடிவில் மட்டுமே இருக்கும். போகும் இடம் எல்லாம் தூக்கித் திரிய முடியாது. புதிய செய்திகள் இருக்கா. ஆங்கிலம் அறிந்தவர்கள் இணையத்தில் தகவல் தேடிப் படிக்க பல இணையத் தளங்கள் இருக்கின்றன. ஆனால், தமிழ் இணையத்தளங்கள் பலவும் அரசியல், திரைப்படம், விளையாட்டு, செய்திகள் என்ற வட்டத்திலேயே உள்ளன. தமிழ் மட்டுமே அறிந்த ஒருவர் இணையத்தின் மூலம் இலவசமாக பல துறை அறிவு பெற தமிழ் விக்கிப்பீடியா மட்டுமே தற்போது ஒரே வழி. பள்ளி மாணவர்கள் தங்கள் பாடத்திட்டம் தொடர்பான கட்டுரைகளைப் படிக்கலாம். கல்லூரி மாணவர்கள் தங்கள் துறை சார்ந்து உள்ள கட்டுரைகளைப் படிக்கலாம். முதற்பக்கத்தில் உள்ள பொது அறிவு, உலக நடப்புக் கட்டுரைகளைப் படித்துப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம்.

உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ள துறை சார் வல்லுனர்கள் கட்டுரைகளை எழுதுகிறார்கள். இவர்களுடன் எந்தத் தயக்கமும் இன்றி ஒரு நண்பரைப் போல உரையாடி அவர்களின் அறிவையும் நட்பையும் பெற்றுக் கொள்ள இயல்வது எவ்வளவு பெரிய நன்மை? எடுத்துக்காட்டுக்கு, தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கும் வல்லுனர்கள் பட்டியல்.

பேராசிரியர்கள் – வி. கிருஷ்ணமூர்த்தி (கணிதம்), செ. இரா. செல்வக்குமார் (மின்னணுவியல்)

முதுகலை ஆசிரியர் – சு. இரவிசங்கர் ( இயற்பியல்)

முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் – கார்த்திக் பாலா (காட்டுயிர்கள்), ரெங்கராசு (பொறியியல்)

அறிவியல் ஆய்வாளர்கள் – தானியல் பாண்டியன் (மருத்துவம்), மகிழ்நன் (உயிரித் தொழில்நுட்பம்), கலையரசி (மூலக்கூற்று உயிரியல்), இரா. செல்வராசு (வேதியியல்).

மென்பொருளாளர்கள் – சுந்தர், சிவக்குமார், நற்கீரன், மயூரன், உமாபதி, கோபி, சிறீதரன், விஜி பழனியப்பன், அராப்பத்

கல்லூரி மாணவர்கள் – ராஜ்குமார் (இசை), நிரோஜன் சக்திவேல் (திரைப்படம்), சிந்து (இசை), கலாநிதி (கணக்கு வழக்குகள்)

ஈழத்து நாடகக் கலைஞர் – கே. எஸ். பாலச்சந்திரன் (நாடகம்)

எழுத்தாளர்கள் ஜெயமோகன், அ. முத்துலிங்கம் ஆகியோர் தங்கள் கட்டுரைகள் சிலவற்றை உரிமம் விலக்கிப் பதிப்பிக்கத் தருகிறார்கள்.

விக்கிப்பீடியாவில் கட்டுரைகளைப் படிப்பது எப்படி?

1. http://ta.wikipedia.org என்ற இணைய முகவரிக்குச் செல்லுங்கள்.

2. தளத்தின் இடப்பக்கத்தில் ஒரு தேடல் பெட்டி இருக்கும். அதில் நீங்கள் தேடும் தலைப்பை உள்ளிட்டு “செல்” என்ற பொத்தானை அழுத்தினால் கட்டுரைப் பக்கத்துக்கு அழைத்துச் செல்லும்.

நீங்கள் விரும்பும் கட்டுரைகள் தளத்தில் இல்லையா? ஒவ்வொரு விக்கிப் பக்கத்தின் மேலும் “உரையாடல்” என்று ஒரு பொத்தான் உண்டு. அதனை அழுத்தி உங்கள் வேண்டுகோளை இட்டு “மாற்றங்களைச் சேமிக்கவும்” என்ற பொத்தானை அழுத்துங்கள். உங்கள் தேவைக்கு ஏற்ற கட்டுரைகளை மற்ற விக்கிப் பங்களிப்பாளர்கள் உருவாக்கித் தருவார்கள்.

விக்கிப்பீடியாவுக்கு நீங்கள் எப்படி பங்களிக்கலாம்?

சமூகம், மொழி, கல்வி வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைப்பவரா நீங்கள்? அப்படி என்றால், தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பது சரியான வழி. தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது ஏறத்தாழ 19, 800 கட்டுரைகளே உள்ளன. பல்வேறு அடிப்படைத் தலைப்புகளில் ஒரு இலட்சம் கட்டுரைகளையாவது விரிவாக விரைந்து எழுதினாலே தமிழ் விக்கிப்பீடியா நல்ல பயன் தரும்.

உங்களிடம் ஒரு கணினி, இணைய இணைப்பு இருந்தால் ஓய்வு நேரத்தில் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கலாம். கணினியில் தமிழில் எழுதப் பழகுங்கள். பங்களிப்பதற்கு யாருடைய ஒப்புதலும் கல்வித் தகுதியும் தேவை இல்லை. நல்ல நோக்கம் மட்டும் போதும். உங்களுக்கு விருப்பமான எந்தத் துறை பற்றியும் தகவல்களைக் குவித்து எழுதலாம். எடுத்துக்காட்டுக்கு, உங்களுக்கு கிரிக்கெட் மீது ஆர்வமா? கிரிக்கெட் விளையாட்டின் விதிமுறைகள், வரலாறு, இந்திய அணியின் வீரர்கள், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பற்றி கட்டுரைகள் எழுதலாம். மற்ற பங்களிப்பாளர்கள் உங்கள் கட்டுரைகளைத் திருத்தி மேம்படுத்துவர். ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பொருத்தமான படங்கள் சேர்க்கலாம். பிழை திருத்தலாம். விரிவாக்கி எழுதலாம். தகவல்களைச் சரி பார்க்கலாம். உங்களின் ஒவ்வொரு பங்களிப்பும் உங்கள் பெயரில் பதிவாகும். காலத்துக்கும் நிலையாக இருக்கும். விக்கிப்பீடியா ஒரு இலாப நோக்கற்ற திட்டம். எனவே, உங்கள் உழைப்பு வருங்காலத் தமிழ்ச் சமூகம் முழுமைக்கும் இலவசமாக கிடைக்கும்.

விக்கிப்பீடியாவில் குறையே இல்லையா?

விக்கிப்பீடியாவில் யார் வேண்டுமானாலும் எழுதினால் அதை எப்படி நம்புவது, யாராவது தவறான தகவலைத் தர மாட்டார்களா என்று நினைக்கலாம். Nature ஆய்விதழ் விக்கிப்பீடியாவின் 42 அறிவியல் கட்டுரைகளை பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தது. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே தரத்திலேயே இருந்தன. பிரித்தானிக்கா நூற்றாண்டு வரலாறு கொண்டது. விக்கிப்பீடியா தோன்றி 8 ஆண்டுகளே ஆகின்றன. இன்னும் பலரும் பங்களிக்கத் தொடங்கும் போது விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மை கூடுவது உறுதி. 24 மணி நேரமும் உலகின் பல பகுதிகளில் உள்ள தன்னார்வலர்கள் விக்கிப்பீடியாவில் நிகழும் மாற்றங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். தவறான தகவல் எதுவும் சேர்ந்தால் உடனே நீக்கி விடுகிறார்கள். விக்கிப்பீடியாவில் உள்ள தகவல்களைச் சரிபார்த்துப் பயன்படுத்தவே பரிந்துரைக்கிறோம். எனவே, ஒரு துறையில் உள்ள தகவல்களுக்கு நுழைவாயில் என்ற அளவில் விக்கிப்பீடியாவைத் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம் என்பதைத் தாண்டி ஒரு உலகாளவிய பண்பாட்டுப் புரட்சி. எந்த அதிகார அமைப்பும் இல்லாமல், மனிதர்கள் தங்களின் இயல்பான ஒன்று கூடி வாழும் குணத்தால் அரிய அறிவுச் செல்வங்களை உருவாக்க முடியும் என்பதற்குச் சான்று.

இந்த விக்கிப்பீடியா தேரை ஊர் கூடி இழுப்போம் வாருங்கள். தேர் வரக் காத்திருக்கும் மாங்குடிகள் நிறைய இருக்கின்றன…

***
பெட்டிச் செய்தி 1:

தமிழ் விக்கித் திட்டங்கள்

* http://ta.wikipedia.org
* http://ta.wiktionary.org
* http://ta.wikinews.org
* http://ta.wikisource.org
* http://ta.wikibooks.org

பெட்டிச் செய்தி 2:

மயூரநாதன், ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் கட்டிடக் கலைஞர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். 2003ல் தமிழ் விக்கிப்பீடியாவைத் தொடங்கி கட்டியெழுப்பிய முன்னோடி. இன்று வரை 3000 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி உள்ளார். இவரைப் போல பல பேராசிரியர்கள், மென்பொருளாளர்கள், அறிவியல் ஆய்வாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், எழுத்தாளர்கள் பலர் உலகெங்கும் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுகிறார்கள்.

பெட்டிச் செய்தி 3:

தமிழ் விக்கிப்பீடியா பயன்படுத்த, அதில் கட்டுரைகள் எழுத உங்களுக்கு உதவி வேண்டுமா? [email protected] என்ற முகவரிக்கு எழுதுங்கள். அல்லது, 99431 68304 அழையுங்கள்.


Comments

3 responses to “விக்கிப்பீடியா”

  1. mohamed ali Avatar
    mohamed ali

    பலருக்கும் பயனுள்ள கட்டுரை

    வாழ்த்துக்கள்,

    நன்றி
    நீடூரலி

    Knowledge does not die out save when it is concealed.
    — Holy Prophet
    A man who holds a piece of knowledge without transmitting it others should take care of his life so that the knowledge may not perish with him.
    –Holy Prophet.

  2. சமீபத்தில் விக்கி மூலம் அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு தமிழ் விக்கி பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்று எண்ணி இருந்தேன். அதற்கு அவசியமின்றி செய்து விட்டிர்கள். அருமையான பதிவு. நானும் தற்போதெல்லாம் எந்த விடயத்தையும் கூகிள்-ல் தேடுவதற்கு முன் விக்கிபீடியா- வில் தேடுகின்றேன். இது பல மக்களையும் சென்று அடைய வேண்டும். எனது ஒய்வு நேரங்களில் விக்கிபீடியா- விற்கு பங்களிக்க விரும்புகின்றேன்.

    நன்றி
    பிரேம் ஆனந்த்

  3. நீங்கள் அன்று எழுதிய கட்டுரை பலரை விக்கிபிடீயாவில் எழுத அழைத்து வந்திருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.