பல புதிய தமிழ் வலைப்பதிவுகளைக் காண்கையில் மனதில் தோன்றிய எண்ணங்களை இங்கு பதிந்து வைக்கிறேன். இக்கருத்துக்களில் நான் செய்து திருத்திக் கொண்ட பிழைகளும் அடங்கும். இன்னும் நிறைய புதியவர்களைப் பார்க்கையில் கருத்துகள் மாறலாம். கூடலாம்.
தங்கள் வாசிப்புக்காக மட்டுமே எழுதுவோர், நிகழ் வாழ்க்கை நட்பு வட்டத்துக்கு மட்டும் எழுதுவோர் இவ்வேண்டுகோள்களைக் கண்டு கொள்ள வேண்டாம். ஆனால், முன் பின் அறிமுகமில்லா பலரும் தன் எழுத்துக்களைத் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று எழுதுவோர் கவனிக்கலாம்.
1. வலைப்பதிவு முகவரி
* சுருக்கமாகவும் நினைவில் கொள்ளவும் எழுதவும் இலகுவாகவும் முகவரி வையுங்கள்.
வண்ணாத்திப்பூச்சி சிறகடித்த போது என்பது உங்கள் வலைப்பதிவின் பெயராக இருக்கலாம். ஆனால், அதையே வலைப்பதிவின் முகவரியாக வைக்கத் தேவை இல்லை. http://vannaaththeepoochchisiragadiththappdhu.blogspot.com என்ற ரீதியில் பெயர் வைத்தால் முகவரியை வாசித்துப் புரிந்து கொள்வது, நினைவில் கொள்வது, உலாவியில் எழுதுவது எல்லாமே சிரமம். குழப்பமான முகவரியை விட தலைப்புக்குத் தொடர்பற்ற முகவரி பரவாயில்லை.
* வலைப்பதிவு முகவரி, வலைப்பதிவு பெயர் இவற்றை விட உங்கள் பெயரை நினைவில் வைத்துக் கொள்வது எளிது. ஒரு துறை சாராமல் பல விசயங்களையும், அனுபவங்களையும் எழுதும் வலைப்பதிவுகளுக்கு இந்த மாதிரி பெயர் சூட்டலாம். எடுத்துக்காட்டுக்கு, http://www.santhoshguru.blogspot.com/
* ஒரு துறை சார்ந்து மட்டும் தொடர்ந்து அப்பதிவில் எழுதப்போகிறீர்கள் என்றால் துறை தொடர்பான பெயரைச் சூட்டலாம். முகவரியைப் பார்த்த மட்டில் உங்கள் பதிவை நினைவில் கொள்ளவும் தேடு பொறிகளில் நல்ல இடம் பெறவும் உதவும். நல்ல எடுத்துக்காட்டு http://fuelcellintamil.blogspot.com, http://photography-in-tamil.blogspot.com/, http://tamilgnu.blogspot.com
* பதிவின் முகவரி தமிழில் இருந்தால் குழப்பத்துக்கு இடமளிக்காத எழுத்துக்கூட்டலைக் கொண்டிருப்பது நலம். எல்லாருக்கும் ஆங்கிலம் – தமிழ் எழுத்துப்பெயர்ப்பு விதிகள் தெரியாது. kaadhal, kadal, kaathal என்ற ஒரே சொல்லைப் பலவிதமாக எழுதுபவர்கள் இருக்கிறார்கள். குழப்பத்துக்கு இடமளிக்கும் தமிழ்ப்பெயரைக் காட்டிலும் தெளிவாக இருக்கும் ஆங்கிலப் பெயர்கள் பரவாயில்லை.
* முகவரியில் எண்கள், hyphen குறிகள் போன்றவற்றை இயன்ற அளவு தவிர்ப்பது நல்லது.
* தனித்தளப் பதிவர்களுக்கான பெயரிடல் குறிப்புகள்
2. வலைப்பதிவுத் தலைப்பு
எண்ணங்கள் என்ற ஒரே பெயரில் 2, 3 மூன்று வலைப்பதிவுகள் இருக்கின்றன. சிந்தனை, சொல், கவிதை, காதல் போன்று பரவலாகப் பயன்படும் கவர்ந்திழுக்கக்கூடிய சொற்கள் ஏற்கனவே பல பதிவர்களால் பயன்படுத்தப்படலாம். ஏற்கனவே பிரபலமான / கெட்ட பெயர் பெற்ற வலைப்பதிவுத் தலைப்புகள் உங்களுக்கு வீண் சிரமங்கள் / குழப்பங்களைத் தரலாம். எனவே, உங்கள் பதிவுக்குப் பெயரிடும் முன் கூகுள் பதிவுத் தேடலில் ஒரு முறை தேடிப் பார்த்து தனித்துவமான பெயரைத் தேர்ந்தெடுங்கள்.
3. பதிவர் பெயர்
* உங்கள் பதிவர் பெயரைத் தேர்ந்தெடுக்கும் முன்னும் கூகுள் பதிவுத் தேடலில் அதே பெயரில் வேறு யாரும் இருக்கிறார்களா என்று தேடிப் பாருங்கள். சிவா, ரவி, குமார் போன்ற தெருவுக்கு நான்கு பேர் வைத்திருக்கும் பேர் என்றால் சிரமம் தான் 🙂 ஏற்கனவே அப்பெயரில் உள்ள பதிவர் பிரபலமானவர் / கெட்ட பெயர் பெற்றவர் என்றால் அதே பெயரைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால், உங்கள் மேல் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், அதே பெயரில் எழுதி பிரபல வலைப்பதிவர் ஆகப் பார்க்கலாம். இல்லாவிட்டால் உங்கள் வலைப்பதிவுப் பெயர், ஊர்ப்பெயர் என்று ஏதாவது முன்னொட்டாகச் சேர்த்துக் கொண்டு வலைப்பதியலாம். எடுத்துக்காட்டுக்கு, Tiger சிவா, காஞ்சிபுரம் குமார், துபாய் சீனு, ரிவால்வர் ரீட்டா..
* வேறு மொழி வலைப்பதிவுகளிலும் அதிகம் வாசித்து கருத்து சொல்பவர் என்றால் உங்கள் பெயரை ஆங்கில எழுத்துக்களிலேயே எழுதிக் கொள்வது நல்லது. (கந்தசாமி 707 / kanthasaamy 707) என்று அடைப்புக்குறிகள், / குறி, எண்கள் கொண்டு எழுதுவதைத் தவிர்க்கலாம்.
* ஒரே பெயரைக் கடைசி வரைக் கொண்டிருக்கப் பாருங்கள். வாரா வாரம் வேற வேற மொழிகளில் தன் பதிவர் பெயரை எழுதி நோகடிக்கும் பதிவர்களையும் அறிவேன். உங்கள் பதிவர் பெயரைக் கொண்டு நீங்கள் பல்வேறு இடங்களிலும் பல்வேறு காலங்களிலும் எழுதிய இடுகைகளைத் தேடிப் பிடித்துப் படிக்க இயலும் என்பதால் வேறு வேறு பெயரில் எழுதினால் உங்கள் ரசிகர்களைச் சிதற விடுவீர்கள் 🙂
* உங்கள் பதிவர் பெயரும் வலைப்பதிவுத் தளத்துக்கான பயனர் கணக்குப் பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மாற்றி வைத்துக் கொள்வது உங்கள் கடவுச் சொல் பாதுகாப்புக்கு நல்லது.
4. பதிவு விளக்கம்
திரைப்படங்களுக்குக் கீழ் Tagline போடுவது போல் வலைப்பதிவுத் தலைப்புகளுக்குக் கீழும் விளக்கம் தர ஒரு இடம் தருகிறார்கள். உங்கள் பதிவு எதைப்பற்றியது என்ற விளக்கத்தைத் தெளிவாக இங்கு தரவும். இந்த விளக்கம் புதிதாக உங்கள் வலைப்பதிவை ஓடைத் திரட்டிகள், தேடு பொறிகளில் பார்ப்பவர்களுக்குக் காட்டப்படும் என்பதால், அவர்கள் உங்கள் வலைப்பதிவைப் படிக்க முடிவெடுக்க இது உதவும். “என்னைப் பாதித்தவை, எனக்குத் தோன்றியவை” என்று விளக்கத்தை விட “கணினி, இணையம், வலைப்பதிவு, தமிழ் குறித்த தமிழ் வலைப்பதிவு” என்ற விளக்கம் கூடுதல் தகவல்களைத் தரும்.
5. பதிவர் படம்
* நீங்கள் ஏதேனும் ஒரு பதிவர் படத்தைத் தெரிவு செய்து தொடர்ந்து அதைப் பயன்படுத்துவது நல்லது. பல தளங்களில் இந்தப் பதிவர் படத்தின் அடிப்படையில் கருத்துகள்,பதிவுகளை யார் எழுதி இருக்கிறார்கள் என்று இலகுவாக நோட்டம் விட முடியும். இன்ன பதிவருக்கு இன்ன படம் என்பது மனதில் ஆழமாகப் பதியும் ஒன்று. எனவே, அதை அடிக்கடி மாற்ற வேண்டாம். எனவே, முதல் முறை படத்தைப் போடும் போதே என்ன படம் என்று தெளிவாக யோசித்துப் படம் போடுங்கள்.
* உங்கள் முகத்தைக் காட்டும் புகைப்படம் என்றாலும் வாரா வாரம் உங்களைப் புதிதாக எடுத்துக் கொள்ளும் படங்களைப் போட்டுக் கொள்ள வேண்டாம் 🙂 அவற்றை orkut, facebook போன்ற தளங்களில் போட்டு நண்பர்களுக்குக் காட்டலாம். அடிக்கடி அதை மாற்றினால் உங்கள் நண்பர்கள் அல்லாத வாசகர்களுக்கு உங்களை அடையாளம் கண்டு கொள்வதில் சிரமம் இருக்கலாம்.
* உங்கள் முகத்தைக் காட்டும் படம் என்றால் அதனால் வரக்கூடிய பின்விளைவுகள், சிக்கல்களை உணர்ந்த பின் போடுங்கள். நீங்கள் ரொம்ப பிரபலமானால், உங்களை நிம்மதியாக உணவு கூட உண்ண விடாமல் ரசிகர்கள் கையெழுத்து வாங்கத் துரத்தலாம் (நினைப்புத் தான் 😉 ) உண்மையில், உங்களை விரும்பாதோராலும், உங்கள் அனுமதியின்றியும் தவறுதலாகப் பயன்படுத்த வாய்ப்புகள் உண்டு. மிகவும் சர்ச்சைக்குரிய விசயங்களில் தீவிரமாக எழுதுவோர் என்றால் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் உண்டு.
6. வலைப்பதிவு மொழி
பல வலைப்பதிவுச் சேவை தளங்களும் மொழி அடிப்படையில் உங்கள் தளத்தைக் காட்சிப்படுத்துகின்றன. அச்சேவைகளுக்கும், உங்கள் வாசகர்களுக்கும் ஒரே பதிவில் தமிழ், ஆங்கிலம் என்று மாற்றி மாற்றி காண்பது உவப்பாக இருக்காது. ஒரு வலைப்பதிவில் ஒரு மொழியில் மட்டும் எழுதலாம்.
7. வலைப்பதிவு எண்ணிக்கை
வலைப்பதிவுக்கு வந்த புதிதில் துறை சார் பதிவுகள், கூட்டுபதிவுகள், புகைப்படப்பதிவுகள் என்று பல வகையிலும் புதுப் புதுப் பதிவுகளாகத் திறக்கத் தோன்றலாம். ஆனால், ஏகப்பட்ட பதிவுகளை வைத்திருப்பது நிர்வகிக்கச் சிரமமாக இருப்பதுடன் உங்கள் வாசகர்களுக்கும் நீங்கள் எழுதும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து படிப்பது சிரமமாக இருக்கும். எனவே தேவையற்ற பதிவுகளை நீக்கி விடுங்கள். ஏற்கனவே இருப்பவற்றில் பொருத்தமானவற்றை ஒன்று சேர்த்து விடுங்கள்.
8. திரட்டிகளைச் சாராதீர்கள்
தமிழ் வலைப்பதிவுகளைத் திரட்டிக் காட்ட நிறைய தளங்கள் இருக்கின்றன. வலைப்பதிவுக்கு அறிமுகமாகும் புதிதில் புதிய வாசகர்கள், நட்புகளைப் பெற இவற்றைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. ஆனால், இவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் தொடர்ந்து இவற்றைச் சார்ந்து இயங்குவதற்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளுங்கள். எழுதத் தொடங்கி ஆறு மாதம் கழித்து திரட்டிகளில் இருந்து விலகி எழுதிப் பாருங்கள். இல்லை, திரட்டியில் இணைக்காமல் புதிய பதிவொன்றைத் தொடங்கி எழுதிப் பாருங்கள். உங்கள் எழுத்தின் தரம், தன் சொந்த வலுவில் அது பெற்றுத் தரும் தொடர் வாசகர்கள் குறித்து உங்களை ஆய்வுக்குட்படுத்திக் கொள்ள இது உதவும். என்ன எழுதினாலும் வந்து படித்து கருத்து சொல்லும் திரட்டி வாசகர்கள் உங்கள் எழுத்தாற்றல் பற்றிய மித மிஞ்சிய தன் மதிப்பீடுகளை வளர்த்து விடக்கூடும். உங்களுக்காக எழுதுவது போய் வாசகர்கள் விரும்பிப் படிப்பதை மட்டும் தரும் தூண்டுதலுக்கு உள்ளாவீர்கள்.
திரட்டிகளில் இருந்து விலகி இயங்குவது எந்த விதத்திலும் என் வலைப்பதிவுக்கான வருகையைக் குறைக்கவில்லை. மாறாக, அதை விடக்கூடுதல் வாசகர்களே வருகிறார்கள். திரட்டிகள் மூலமாக மட்டுமின்றி தேடுபொறிகள், ஓடைத் திரட்டிகள் மூலமாகவும் உங்கள் பதிவுகளை வாசிக்க நிறைய பேர் இருக்கிறார்கள். பல புதிய தரமான வாசகர்கள் பொருளுள்ள மறுமொழிகளைத் தருகிறார்கள். திரட்டிகளில் இருக்கையில் பதிவு போடும் அன்று மட்டும் வாசகர் வரத்து எண்ணிக்கை உயரும். மற்ற நாட்கள் வரத்து துப்புரவாக ஓய்ந்து போகும். திரட்டிகளில் இருந்து விலகிய பின் வலைப்பதிதல், வலைப்பதிவு நுட்பம் குறித்து அறிந்து கொண்டு தேடுபொறிகளுக்கு உகந்ததாக எழுதத் தொடங்கிய பின் ஒவ்வொரு நாளும் சீராகவும் நிறைவாகவும் வாசகர் வரத்து இருக்கிறது.
இவற்றையும் பாருங்கள்:
9. தேடுபொறிகளுக்காகவும் இடுகைத் தலைப்புகளை எழுதுங்கள்
திரட்டிகளில் இணைந்திருப்போர் அவற்றின் மூலம் கூடுதல் வாசகர்களைக் கவர ஏடாகூடமான / கவர்ச்சித் தலைப்புகளை வைப்பது வழக்கம். ஆனால், இவை ஒரு நாளில் குறுகிய நேரத்துக்கு மட்டுமே வாசகர்களைப் பெற்றுத் தர உதவும். அதற்குப் பிறகு, தேடு பொறிகள் மூலம் உங்கள் இடுகைகளைத் தொடர்ந்து அடைய வேண்டுமானால், இடுகையின் உள்ளடக்கம் குறித்த தெளிவான, சுருக்கமான தலைப்புகளைத் தாருங்கள். கவிதை, கதை போன்றவற்றை விட தகவல்களைத் தரும் இடுகைகளுக்கு இவை பொருந்தும். “செம ரவுசான படம்” என்ற தலைப்புக்குப் பதில் “ஓரம்போ – திரை விமர்சனம்” என்ற தலைப்பு வைக்கலாம்.
10. உங்கள் அலுவலக, சொந்த விவரங்களை வெளியிடாதீர்கள்
உங்கள் அலுவலக விவரம், வீட்டு முகவரி, உங்கள் உறவினர் பெயர்கள், புகைப்படங்கள், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களை வலைப்பதிவிலோ வேறு எந்த இணையக் களத்திலுமோ வெளியிடாதீர்கள்.
ஏற்கனவே நான் எழுதிய தமிழ் வலைப்பதிவர்களுக்கான 10 நுட்ப வேண்டுகோள்களையும் கவனத்தில் கொள்ளலாம்.
Comments
7 responses to “புதிய தமிழ் வலைப்பதிவர்களுக்கான வேண்டுகோள்கள்”
[…] புதிய தமிழ் வலைப்பதிவர்களுக்கான வேண
எளிய தமிழில் அருமையான கருத்தை எடுத்தியம்பியுள்ளீர்.
உங்கள் தமிழ்ப்பணிக்கு எனது மனமார்ந்த நன்றி.
அன்புடன்
ரவிச்சந்தர்.
மலேசியா
நிறைய தகவல்கள். மிக்க நன்றி.
வாழ்த்துக்கள்
naan puthithaka blogs thotanka utavi seiverkala? naan tamil professor . your help not me tamil web members. so kindly, help it.
thankyou
R.kumar
நல்ல தகவல்கள் சகோதரா நன்றிகள். ஆனால் ஒரு சந்தேகம் திரட்டியில் இணைக்காமல் ஒரு ஆக்கம் வாசகரைச் சென்றடையுமா?
நன்றி, ம. தி. சுதா. வலைக்குப் புதிதாக இருக்கும் நிலையில் திரட்டிகள் உதவும். மன்றங்கள், குழுமங்கள், டுவிட்டர், facebook ஆகியவற்றில் பெருக்கிக் கொள்ளும் நட்பு வட்டத்தின் மூலமும் தரமான இடுகைகளைத் தொடர்ந்து தருவதன் மூலமும் கண்டிப்பாக திரட்டிகள் துணையின்றியே வாசகரை அடைய முடியும். பலரும் கூகுள் ரீடர், கூகுள் தேடல்கள் மூலம் நமது வலைப்பதிவைப் படிப்பார்கள்.
fine