எளிய தமிழ் என்ன என்பதற்கு பல வரைவிலக்கணங்கள் சொல்லலாம் என்றாலும், மக்களுக்குப் புரிகிற, தெரிகிற தமிழே எளிய தமிழ் என்று சொல்லலாம். இந்த அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளும் இடைமுகப்பும் எளிமையாக இல்லாததாக பல சமயம் விமர்சனத்துக்குள்ளாவது உண்டு.
எடுத்துக்காட்டுக்கு, தமிழ் விக்கிப்பீடியாவில் Log in என்பதற்கு புகுபதிகை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். இதற்குப் பதில் உள்ளே, நுழைக, நுழைவுப்பலகை, புகுபலகை போன்ற சொற்களைப் பயன்படுத்தினால் மக்களுக்கு எளிதாகப் புரியுமே என்று கேட்பவர்கள் உண்டு. புகுபதிகை போன்ற சொற்கள் தூய தமிழாக இருப்பதால் இவற்றைப் புரிந்து கொள்ள இயலாத தமிழர்கள் இத்தளங்களைப் புறக்கணித்துச் சென்றால் இழப்பு தானே என்றும் நினைக்கலாம்.
ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவென்றால்,
have you logged in ?, you need to log in, Log in to access this content?, log out, you have logged in as ravidreams, curretnly 6 users logged in, keep me logged in across all sessions, some one has already logged in this user name
போன்ற சொற்றோடர்கள் ஏறக்குறைய பல இணையத்தளங்களிலும் வருகின்றன.
log in என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் பார்த்தால் நுழைவுப்பலகை போன்ற பெயர்கள் புரியும். ஆனால், அதையே வினைச்லொக்கி மேற்கொண்ட எடுத்துக்காட்டுச் சொற்றொடர்களில் பொருத்தினால் பிழையாகி விடும். உள்ளே, வெளியே, நுழை போன்ற சொற்களைப் பயன்படுத்தினால்
keep me logged in போன்ற சொற்றொடர்களை “என்னை உள்ளேயே வைத்திருக்கவும் / என்னை நுழைத்து வைத்திருக்கவும்” என்று ஏடாகூடமாக மொழிபெயர்க்க வேண்டி வரும்.
இது தவிர விக்கிப்பீடியாவில் delete log, move log, new user creation log என்ற பல இடங்களிலும் log என்னும் சொல் ஒரே பொருளில் வருகிறது. இது எல்லா இடத்திலும் உள்ள கருத்து என்னவென்றால் ஒரு நிகழ்வைப் பதிவு செய்கிறோம். பதிவு செய்வது பதிதல், பதிக, பதிகை போன்ற தொடர்புடைய சொற்களுக்கு இட்டுச் செல்கிறது.
log in = புகுபதிகை, புகுபதிக
have you logged in ? = புகுபதிந்து விட்டீர்களா?
you need to log in. = புகுபதிய வேண்டும்
Log in to access this content? = இந்த உள்ளடக்கத்தைப் பார்க்க புகுபதிய வேண்டும்.
log out = விடுபதியவும்; விடுபதிக.
you have logged in as ravidreams = சீனிவாசனாகப் புகுபதிந்துள்ளீர்கள்.
currently 6 users logged in = 6 பயனர்கள் புகுபதிந்துள்ளார்கள்.
keep me logged in across all sessions = அமர்வுகளுக்கிடையேயும் புகுபதிந்து இருக்கவும்.
some one has already logged in this user name = உங்கள் பெயரில் வேறு யாரோ புகுபதிந்து இருக்கிறார்கள்.
delete log = நீக்கல் பதிகை
move log = நகர்த்தல் பதிகை
new user creation log = புதுப்பயனர் உருவாக்கப் பதிகை
***
பதிகை என்ற சொல்லை ஒரே ஒரு இடத்தில் மட்டும் பார்க்கும் போது சிரமமாக இருக்கிறது. ஆனால், அதே பொருள் தொடர்புடைய பல இடங்களிலும் அச்சொல் தேவைப்படும் போது அதன் பயன்பாட்டு முக்கியத்துவத்தை உணரலாம்.
இதே போல் தான் இன்னும் பல சொற்களுக்கும். பலரும் சொல் புரியவில்லை எனச் சொல்கையில் ஒரே ஒரு இடத்தைத் தான் பார்க்கிறார்கள். ஆனால், ஒரு இடைமுகப்பு மொழிபெயர்ப்பாளராக இருக்கையில் அது பயன்படும் எல்லா இடங்களையும் கவனித்து தளம் முழுக்க ஒரே மாதிரி ஒழுங்குடன் மொழிபெயர்ப்பது அவசியமாகிறது.
அதனால், தகுந்த இடங்களில் புதிய பொருத்தமான சொற்களைப் பயன்படுத்துவதும் கற்றுக் கொள்வதும் தவிர்க்க இயலாதது.
புல்லாங்குழல் என்று சொன்னால் கூடத் தான் குழந்தைக்குப் புரியாது. அதற்காக காலத்துக்கும், ஓட்டை போட்ட இசைக் கருவி / பீப்பீ என்றே அதற்குப் புரிகிற மாதிரி சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? நம்மில் பலரும் புதிய தமிழ்ச் சொற்களைக் கற்றுக் கொள்வதை பள்ளிக்கூடக் காலத்துடன் நிறுத்திக் கொள்கிறோம். இது தான் பிரச்சினை. இந்தக் குறைவான சொற் தொகையைக் கொண்டு எப்படி உலகின் எல்லா கருத்துக்களையும் எடுத்துரைப்பது?
ஆங்கிலத்தில் ஒவ்வொரு நாளும் புதுச் சொற்களைக் கற்றுக் கொள்வதற்கும், பொருள் தெரியாத போது அகரமுதலிகளைப் புரட்டுவதற்கும் பழக்கப்படுத்திக் கொள்வது போல் தமிழுக்கும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். கணினிக்குப் புதியவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் கூட log in, password போன்ற சொற்கள் புதிதாகவே இருக்கும். கணினி, இணையத்தோடு இணைந்த புதிய சொற்களை, அக்கருவிகளைப் பயன்படுத்திப் பார்த்தே இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். எனவே ஒரு புதிய சொல் ஆங்கிலத்தில் இருந்தாலும் தமிழில் இருந்தாலும் பிரச்சினையும் தீர்வும் ஒன்று தான்.
தொடர்புடைய தமிழ் விக்சனரி குழும உரையாடலையும் பார்க்கலாம்.
பி.கு – லாகின், யூசர், ரெஜிஸ்ட்டர் என்று ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழ் எழுத்துகளில் எழுதினால் தான் மக்களுக்குப் புரியும் என்று செயல்படும் பெரிய தமிழ் ஊடக இணையத்தளங்களும் உள்ளன. அவற்றைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை !!
Comments
3 responses to “எளிய தமிழ்”
ஆங்கிலத்தில் ஒரு சொல் தெரியாவிட்டால் அகராதியைப் பார்த்து மனதில் பதிக்கிறோம் ஏன் இதை தமிழ் சொற்களுக்குச் செய்யக் கூடாது? யோசிக்க வேண்டிய விடயம். கலைச் சொற்களை ஆக்கும் போது புழக்கத்திலுள்ள சொற்களைக் கொண்டு அமைக்காமல் வேறு சொற்களை எடுப்பதன் மூலம் அவையும் உயிர்படையும்.
அர்த்தம் தெரியாதவர்கள் தேடிப்பிடிக்க வசதியாக இப்புதிய கலைச்சொற்களை விக்சனரியில் இட்டால் நன்று.
டெ. ரெங்கராசு’s last blog post..தமிழ் இலக்கணம் -திரிதல்
//பி.கு – லாகின், யூசர், ரெஜிஸ்ட்டர் என்று ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழ் எழுத்துகளில் எழுதினால் தான் மக்களுக்குப் புரியும் என்று செயல்படும் பெரிய தமிழ் ஊடக இணையத்தளங்களும் உள்ளன. அவற்றைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை !!//
‘கெமிஸ்ட்ரி மதிப்பெண் மாறுமா?’ ன்னு கொட்டை எழுத்துக்களில் கடந்தவாரம் தினமலர் செய்தித்தாளில் பார்த்ததாக நினைவு.
ரெங்கராசு – முக்கியமான விசயத்தைச் சுட்டிக் காட்டி இருக்கீங்க. கலைச்சொற்களைப் பயன்படுத்துவோர் மறக்காமல் அதற்கான பொருளை விக்சனரியில் சேர்த்து விடுவது நன்று.
மாஹிர் – நான் எடுத்துக்காட்டு கொடுக்க வேண்டாம்னு பார்த்தேன் 🙂