ஏன் நெகிழிகளைச் சூழலுக்குக் கேடு விளைவிப்பதாய்ச் சொல்கிறோம்? நெகிழிகள் மக்கி மண்ணோடு கலக்காமல், மண்ணில் மேல் மட்டத்திலேயே தங்கி விடுகின்றன. இதனால், மண்ணில் நீர் ஊடுருவிச் செல்வதைத் தடுப்பது முதற்கொண்டு மேலும் மேலும் தன் மேல் மக்கா பொருட்களைத் தாங்கி மண்ணின் உயிர்ப்பைக் குறைக்கின்றன.
மண்ணின் உயிர்ப்பை மக்கா பொருட்கள் கெடுப்பது போலவே ஒரு மொழிக்குப் பொருந்தா சொற்கள் அதன் உயிர்ப்பைக் குறைப்பதைப் பார்க்கலாம்.
எடுத்துக்காட்டுக்கு, ஒரு தமிழ் விக்சனரி குழும உரையாடலில், பேராசிரியர். செல்வக்குமார் சொன்ன கருத்துகளைப் பார்க்கலாம்.
சீக்கிரம் – விரைவு ஆகிய இரு சொற்களை எடுத்துக் கொள்வோம்.
“தமிழகத்தில் சீக்ரம் என்று சொல்பவர்கள் ஒரு 5-10% இருக்கலாம், ஆனால் “அட விரசலாத்தான் வாயேன், இப்படி ஆற அமர வந்தா எப்படி?”, “இங்க அங்கெ பாத்து பேசிக்கிட்டு இருக்கூடாது, சட்டு புட்டுன்னு வரணும் பாத்துக்கோ”, “சரி, சரி மளமளன்னு செய்ங்க”, “அட மளார்ன்னு வா” “அட விறுவிறுன்னு வா”, “அட போய்ட்டு விர்னு வந்துட்டேயே!”, “போய்ட்டு சுருக்க வந்துடணும் பாத்துக்கோ”, “எம்புட்டு சுருக்க வந்திட்டீங்க!” என்று சொல்பவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். விர், விரசலா என்பது பொது வழக்கு விரைவு என்பது நல்ல எளிய சொல். விரைதல் என்னும் வினைச்சொல்லும் உண்டு, விரைந்து வந்தான் என்று வினையெச்சமாகக் கூறமுடியும், விரைசல் விரைதல் போன்ற சொற்கள் உண்டு. விரைமை என்று புதுச்சொல்லும் ஆக்க முடியும். அதே போல சட்டுபுட்டுன்னு என்று கூறுபவன் சடுதி என்னும் சொல்லையும் புரிந்துகொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. சட்டென்று முடித்துவிட்டான் என்பதனையும் புரிந்து கொள்வான்.
மளமளன்னு வா என்று அறிபவன் மள்குதல் என்றால் குறைதல், சுருங்குதல் (அஃகுதல்) என்று சொன்னால் புரிந்து கொள்வான். compress என்பதற்கு மள்குதல் (சுருங்குதல்) என்றுகூட சொல்லலாம். “சுருக்க வா” என்பதால், தொடர்பான சுருங்கு, சுருட்டு (சுருட்டி சின்னதாவது. சுருள் உருள் என்பது வேராக இருப்பினும்; சுருட்டி என்று ஒரு இசைப்பண் உண்டு). சுருக்கு = விரைவு என்னும் பொருள் இருப்பதை சுட்டினால் உடனே புரிந்து கொள்வான். சீக்ரம் என்னும் சொல்லை வேறு விதமாக (வினைச்சொல்லாகவோ, பெயர்ச்சொல்லாகவோ) சொல்ல முடியுமா என்று பாருங்கள் (விரைந்தான், விரைந்து செல், விரைதல், விரைவுந்து..) . தமிழ் வேர் உள்ள சொற்கள் பல்வேறு விதமாக கிளைத்துப் பெரும்பயன் தரவல்லது. கடன்பெறும் சொற்கள் அப்படிப்பட்டன அல்ல. மண்ணில் போட்ட பிளாஸ்டிக் போல் துருத்திக்கொண்டு நிற்கும்.
நியூ என்பது எளிய சிறிய சொல்தானே, ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது? புது என்றால் அது மேலும் “புத்” என்று சுருக்கம் கொண்டு புத்+ஆண்டு = புத்தாண்டு, புத்துணர்வு, புத்தூக்கம், புத்திணக்கம், புத்தெழுச்சி என்று எத்தனையோ சொற்கள் ஆக்கலாம். புதிய கிளர்சியூட்டும் பொருள்கள் கிட்டும். நியூ உணர்ச்சி, நியூ ஊக்கம் , நியூ ஆண்டு என்றெல்லாம் சொல்லிப்பாருங்கள், எப்படிச் செத்துக் கிடக்கும் உணர்வுகள் என்று. மேலும் தமிழ் வேர்ச்சொற்கள் வளர்சியூட்டும் விரிவு தரும், கடன் சொற்கள் இயல்பான வளர்ச்சியை முடக்கும்.”
நியூ ஆண்டு என்பதை விட நியூ இயர் என்பது இயல்பாக இருக்கும். நியூ என்ற ஒரு மக்கா சொல் இயர் என்ற இன்னொரு மக்கா சொல்லையும் சேர்த்துக் கொள்வதைக் கவனிக்கலாம். எனவே தேவையின்றி ஒரு மக்கா சொல்லைக் கடன் வாங்கிப் பயன்படுத்துவது அடுத்தடுத்து அதற்குத் தொடர்புடைய பல மக்கா சொற்களைப் பெறுவதற்கே வழி வகுக்கும். கடன் குட்டியும் போடும் தானே?