தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்துவது எப்படி?

தன் ஊரில் உள்ள தமிழார்வம் மிக்கவர்களுக்குத் தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்த விருப்பம் என்றும், ஆனால் தமிழ் வலைப்பதிவுகளின் தற்கால நிலைமை தன்னைத் தயங்கச் செய்வதாயும் நக்கீரன் எழுதி இருந்தார். இவரைப் போல் இன்னும் சிலரும் சில இடங்களில் எழுதக் கண்டிருக்கிறேன். இவர்கள் பலருக்கும் தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதைக் காட்டிலும் இணையத்தில் தமிழ் புழங்குவதை அறிமுகப்படுத்தித் தர வேண்டும் என்று விரும்புவதாகவே உணர்கிறேன்.

ஆனால், தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்த தமிழ் வலைப்பதிவுகளில் இருந்தோ அவற்றைத் திரட்டிக் காட்டும் தளங்களில் இருந்தோ தான் தொடங்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லையே? உண்மையில், தமிழ் இணையத்தில் தமிழ் வலைப்பதிவுகள், அவற்றின் வாசகர்கள் ஒரு சிறு பகுதி தான். வலைப்பதிவுகளைப் பற்றி அறியாமல் இயங்குவோரும், அறிந்தும் ஒன்றாமல் இயங்குவோரும் பலர். எனவே, தமிழ் வலைப்பதிவுகளின் நிலையை எண்ணி, தமிழ் இணையம் குறித்த அறிமுகத்தைத் தள்ளிப் போட வேண்டாம்.

சரி என்ன செய்யலாம்? சில அடிப்படையான இலகுவான வழிகள்:

– கணினியில் தமிழ் தெரியும், தமிழில் எழுதலாம் என்பதையே “அலாவுதீனின் அற்புத விளக்கில் இருந்து சீபூம்பா பூதம்” வந்த கதையாகப் பார்ப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்குக் கணினியில் ஒருங்குறித் தமிழைப் பார்கவும் எழுதவும் கற்றுக் கொடுக்கலாம். பள்ளியில் தமிழ் வழியத்தில் படித்துப் பின் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து வலைத்தள வடிவமைப்பு நிறுவனம் நடத்தும் நண்பன் ஒருவன் “உடைந்து சிதறி கொம்பும் கொக்கியுமாகத் தெரியும் ஒருங்குறித் தமிழ் எழுத்துக்களை” அது தான் இயல்பு போல என்று எண்ணி சிரமப்பட்டுப் படித்துக் கொண்டிருந்தான்…இந்தக் கொடுமையை எங்கு போய் சொல்ல ? தமிழுக்கு இவ்வளவு தெரிவதே மேல் என்று நினைத்துக் கொள்கிறார்களோ??

– கூகுள், யாகூவில் தமிழில் தேடலாம்; தமிழில் மின்மடல் அனுப்பலாம், பெறலாம்; தமிழில் அரட்டை அடிக்கலாம் என்று பலருக்குத் தெரியாது. அதைச் செய்து காட்டுங்கள். பழைய யாகூ மெயிலில் தமிழ் படிக்க இயலாமல் தடவிக் கொண்டிருப்பவர்களைப் புதிய யாகூ மெயிலுக்கு மாறச் சொல்லுங்கள்.

தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், மதுரைத் திட்டம், நூலகம் திட்டம், தமிழ் விக்சனரி போன்ற தகவல் ஆதாரங்களைச் சுட்டலாம்.

தமிழ் பிபிசி, சீனத் தமிழ் வானொலி, ஒலி 96.8 போன்ற தரமான உலகச் சேவைகளைக் காட்டலாம்.

தமிழ் செய்தித் தளங்களைப் படிக்கச் சொல்லலாம்.

– எழுத்தார்வம் இருப்பவர்களுக்கு வேர்ட்பிரெஸ் தளத்தில் வலைப்பதிவு தொடங்க உதவுங்கள்.

– விருப்ப வலைத்தளங்கள், வலைப்பதிவுகளின் செய்தியோடைகளைப் படிப்பதற்கு கூகுள் ரீடர் அறிமுகப்படுத்தலாம்.

– வலைப்பதிவுகளைக் காட்டிலும் மடற்குழுக்கள், குழுமங்கள், மன்றங்களில் உலாவுவது சிலருக்கு இலகுவாக இருக்கலாம். மட்டுறுத்தப்பட்டு நெறிமுறைகளுடன் இயங்கும் இத்தகைய பல நல்ல தமிழ்த் தளங்கள் உள்ளன. அவற்றை அறிமுகப்படுத்தலாம்.


Comments

4 responses to “தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்துவது எப்படி?”

 1. sir,
  thank you for tamil website.
  enakku oralavukkuthan english puriyum
  athanala say to sorry sir. forgive me

  thank you sir

 2. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  vijayalakshmi, தமிழ்த் தளங்கள் உங்களுக்குப்பயன்பட்டதில் மகிழ்ச்சி. நீங்கள் தமிழிலேயே எழுதி கருத்துகளைச் சொல்லலாம். ஆங்கிலம் தேவை இல்லை. தமிழில் எழுத http://tamil99.org தளம் பயன்படுத்தலாம். நன்றி.

 3. WordPress தமிழ் ப்லோக் எழுத வேண்டும் . நான் தனியாக Hosting space and domain வைத்து இருக்கேன் . படி படியான உதவி வேண்டும் .இப்பொழுது wordpress எல்லாம் தயார் .

  என்ன செய்யவேணும் நன் இப்போ .

  நன்றி
  நிலவன்

  1. ரவிசங்கர் Avatar
   ரவிசங்கர்

   நிலவன், நீங்கள் இந்த வலைப்பதிவில் எப்படி தமிழில் மறுமொழி எழுதினீர்களோ அதே போல வலைப்பதிவிலும் தமிழில் இடுகைகள் இடலாமே? உங்களுக்கு குறிப்பாக என்ன உதவி வேண்டும் என்று தெரிவித்தால் உதவ இயலும். நன்றி.