தமிழ்99 விசைப்பலகை தான் உலகிலேயே சிறந்த தமிழ் விசைப்பலகை.
மேலே இருப்பது தான் அந்த விசைப்பலகை !
இதில் என்ன சிறப்பா?
1. விசையழுத்தங்கள் மிகவும் குறைவு. இது தான் முதன்மையான பயன். அடுத்து வரும் சிறப்புகளுக்கும் இது தான் காரணம். கிரந்த எழுத்துக்கள், புழக்கத்தில் இல்லாத சிறப்பு எழுத்துக்கள் தவிர எல்லா தமிழ் எழுத்துக்களையும் SHIFT, CTRL விசை இல்லாம அழுத்த முடியும். உயிர் எழுத்து, அகர உயிர்மெய்கள் இரண்டையும் ஒரே விசையில் அழுத்த முடியும். கிரந்த எழுத்துக்களுக்கு அதிகம் மெனக்கெட வேண்டி இருப்பதால் பல சமயம் ஜன்னல் என்று எழுதுவதற்கு சன்னல் என்று எழுதுவதால், கிரந்த எழுத்துக்களின் தேவையைக் குறைக்கலாம்.
எடுத்துக்காட்டுக்கு, romanised / அஞ்சல் / தமிங்கில முறைக்கும் தமிழ்99 முறைக்கும் தேவைப்படும் விசையழுத்தங்களைப் பார்ப்போம்.
சொல் | romanised | தமிழ்99 | keystrokes saved |
தொழிலாளி | thozilaa+SHIFT+li | த ஒ ழ இ ல ஆ ள இ | 3 |
வெற்றி | ve+SHIFT+r+SHIFT+ri | வ எ ற ற இ | 2 |
கணையாழி | ka+SHIFT+naiyaazi | க ண ஐ ய ஆ ழ இ | 4 |
தந்தம் | thantham | த ந த ம f | 3 |
உயிரெழுத்துக்கள், அகர உயிர்மெய்யெழுத்துக்களை எப்படி உள்ளிடுவதென்று விசைப்பலகையைப் பார்த்தாலே புரியும். இனி, பிற உயிர்மெய்யெழுத்துக்களுக்கு மட்டும் ஒரு சுருக்கமான வழிகாட்டி.
எழுத்து | விசை வரிசை |
த் | த f |
த | த |
தா | த ஆ |
தி | த இ |
தீ | த ஈ |
து | த உ |
தூ | த ஊ |
தெ | த எ |
தே | த ஏ |
தை | த ஐ |
தொ | த ஒ |
தோ | த ஓ |
தௌ | த ஔ |
2. இலக்கணப்படி பல இடங்களில் அதுவே மெய்யெழுத்துக்களுக்கு புள்ளியும் வைத்துக் கொள்ளும். இதனால் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இரண்டையுமே ஒழிக்கலாம்.
எடுத்துக்காட்டுக்கு,
சொல் | விசைகள் |
புள்ளி | பு ள ள இ |
கன்று | க ன ற உ |
தங்கம் | த ங க ம f |
தந்தம் | த ந த ம f |
வெற்றி | வ எ ற ற இ |
3. பழகுவது எளிது. எழுத்துக்கள் இருக்கிற இடங்களை நினைவில் கொள்வதும் எளிது. உயிரெழுத்துக்கள் ஒரு பக்கமாகவும் அகர உயிரெழுத்துக்கள் இன்னொரு பக்கமாகவும் ஒழுங்காக ஒரு வரிசையில் அமைந்துள்ளன. அகர உயிர்மெய்யெழுத்துக்கள் அமைப்பிலும் நெருக்கமான எழுத்துக்கள் அருகருகே இருக்குமாறு ஒரு ஒழுங்கு இருக்கிறது. அடிக்கடி அடுத்து வரும் எழுத்துக்கள் அருகருகே உள்ளன.
எடுத்துக்காட்டுக்கு,
ந – த; ங – க; ண – ட; ன – ற; ஞ – ச
ஆகிய எழுத்துக்கள் அருகருகில் இருக்கும்.
4. தமிழ் எழுத்துக்களை எப்படி புரிந்து கொள்கிறோமோ அந்த வகையில தான் இது செயற்படும் விதமும் அமைந்திருக்கிறது. அதாவது, உயிரும் மெய்யும் சேர்ந்து உயிர்மெய் என்பது தான் இவ்விசைப்பலகையின் அடிப்படை.
5. மிக வேகமாக தட்டச்சு செய்யலாம். விரல்களை அயர வைக்காது. கடந்த ஒரு ஆண்டாகத் தான் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துகிறேன். ஆனால், ஏழு ஆண்டுகள் பழக்கமான ஆங்கிலத்தை விட வேகமாக தட்டச்சு செய்ய முடிகிறது. பழகிய பிறகு விசைப்பலகைய பார்க்காமயே தட்டச்சு செய்ய எளிது. ஆங்கில விசைப்பலகைக்கு கூட எனக்கு இன்னும் இந்த நம்பிக்கை வரவில்லை. தட்டச்சுப் பயிற்சி நிலலயத்துக்கு செல்லாமல் நீங்களே இதைக் கற்றுக் கொள்வது எளிது.
6. இது பல தமிழறிஞர்கள் ஒன்று கூடி கலந்து பேசி உருவாக்கி, சோதித்துப் பார்த்து தமிழக அரசால் கணித்தமிழுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே விசைப்பலகை. பிற விசைப்பலகைகள் எல்லாம் இந்த மாதிரி இல்லாமல் தனி முயற்சியில் உருவானவை. எனவே அதில் உள்ள நுட்பத் திறமும் குறைவாக இருக்கலாம்.
7. 247 தமிழ் எழுத்துக்களை 31 விசைகளில் அடக்குகிறது இந்த விசைப்பலகை வடிவமைப்பு. இதன் எளிமை பிற மொழி விசைப்பலகைகளில் காணக்கிடைக்காதது. இதன் வடிவமைப்பே புத்திசாலித்தனமானது. நாம் உள்ளிடாமலயே மொழியின் கட்டமைப்புக்கு ஏற்ப செயல்பட்டு நம் வேலையைக் குறைக்கிறது. இது தொடர்பாக உள்ள 12 புத்திசாலித்தனமான விதிகளைப் பாருங்கள். இதைப் பழகப் பழகத் தான் தமிழ் எவ்வளவு கட்டமைப்பும் ஒழுங்கும் உடைய எளிமையான மொழி என்று வியக்க வேண்டி இருக்கிறது.
8. அனைத்தையும் விட முக்கியமான விசயம், இதைப் பயன்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை. romanised / அஞ்சல் / தமிங்கில விசைப்பலகை மட்டும் பயன்படுத்த வேண்டாம். முதலில் கொஞ்ச நாள் தமிங்கிலத்தில் எழுதிப் பழகி விட்டு அப்பாவுக்கு காகிதத்தில் கடிதம் எழுதும்போது என்னை அறியாமல் appa eppadi irukkeenga? ungkaL katitham kaNdeen என்று எழுதும் அளவுக்கு உள்மனதில் இந்த எழுத்து முறை பதிந்து விடுகிறது. தமிங்கில குறுஞ்செய்தி அனுப்புவதாலும் இதே பாதிப்பு வருகிறது. அடுத்த தலைமுறை, தமிழுக்கான சொற்களை ஆங்கில எழுத்துக்களின் பிம்பங்களாக உள்வாங்கிக் கொண்டால் அதை விட அவமானம் உண்டோ? அதனால் இன்றே தமிங்கில தட்டச்சை விடவும். இதனை ஒப்பிட பிற தட்டச்சு முறைகளான பாமினி, typewriting layout எவ்வளவோ பரவாயில்லை. அவற்றைப் பழகியவர்களுக்கு அதை விட்டு தமிழ்99க்கு வர கடினமாக இருக்கும். ஆனால், தமிங்கிலக்காரர்கள் இலகுவாக மாறிக் கொள்ளலாம். தமிங்கிலத் தட்டச்சை விட்டொழிப்பதற்கான இன்னும் வலுவான காரணங்களை அறிய ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும் என்ற கட்டுரையைப் பாருங்கள்.
கணினியில் தமிழ்த் தட்டச்சுக்கு அறிமுகமாகும்போது ஏறக்குறைய எல்லாரும் தமிங்கிலப் பலகை மூலம் தான் அறிமுகமாகிறோம். ஆனால், விரைவில் அடுத்த கட்டமாக தமிழ்99 கற்றுக் கொள்வது நலம். சொந்தக் கணினி வைத்திருப்பவர்கள் தமிழ்99க்கான எ-கலப்பை அல்லது NHM writer பயன்படுத்தலாம். பயர்பாக்சு உலாவி பயன்படுத்துபவர்கள் வைத்திருப்பவர்கள் எ-கலப்பைக்கு ஒத்த தமிழ் விசைநீட்சியைப் பயன்படுத்தலாம்.
ஒருமுறை தமிழ்99 பயன்படுத்திப் பழகிவிட்டால் பிறகு கனவிலும் பிற முறைகளில் தட்டச்ச மனம் வராது.
இறுதியாக, மேல்விவரங்களுக்கு:
1999ஆம் ஆண்டு நடந்த தமிழ் இணைய மாநாட்டின் பகுதியாக அமரர் நா. கோவிந்தசாமி அவர்களின் முன்முயற்சியில் இவ்விசைப்பலகை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து மேலும் அறிய, பிற வலைப்பதிவர்கள் தமிழ்99 விசைப்பலகை அருமை பெருமைகள் பற்றி கூறுவதை படிக்க பின் வரும் தளங்களை பாருங்கள்:
2. கணினியில் தமிழ் தட்டச்சு எப்படி?
3. அனுராக்
5. Voice on Wings.
6. Shortcuts / Syntax that Tamil99 users should know.
7. தமிழ்99 பயனர் வாக்குமூலங்கள் 🙂.
9. தமிழ்99 தட்டச்சுப் பயிற்சி ஏடு 1, 2. (pdf)
10. கணிச்சுவடி – எ-கலப்பை நிறுவல், பயன்பாடு, தமிழ்99 பழகுமுறை குறித்து படங்களுடன் கூடிய விரிவான விளக்கம் உள்ள .pdf கோப்பு. ஆக்கம் – சிந்தாநதி.
11. கணினித்திரையில் பார்த்தவாறே தட்டச்சு செய்வதற்கான தமிழ்99 விசைப்பலகை Yahoo widget.
Comments
75 responses to “தமிழ்99”
நல்ல பதிவு!
நன்றி
ரவி!
நலமாக இருக்கிறீர்களா,,.(உங்கள் பதிவில் நீங்கள் தமிழ்ப் பள்ளி தேடியதால் உங்களைத் தெரியும்) கணனியில் நான் கருவிலுள்ள சிசு…எனினும் இப்படிப் பயனுள்ள தகவல்களைத் தாருங்கள். படித்து பயன் படுத்த முயல்கிறேன்.
லைடலிலா???இருக்குறீங்க..;ஈழத்தில் யாழ்ப்பாணத்துக்கு மேல் உள்ள தீவுக்கூட்டத்தில் ஒன்றை (வேலணை)” லைடன்” எனக் கூறுவார்கள். இது டச்சுக்காரர் எம்மை ஆளும் போது இட்ட பெயர். இப்படி Kayts,Delft உண்டு.
எனக்கும் ஓர் BLOG உண்டு . நேரமிருந்தால் பாருங்கள்.
யோகன் பாரிஸ்
சிவபாலன் – பாராட்டுக்கு நன்றி. தொடர்ந்து என் வலைப்பதிவுக்கு வாருங்கள்.
யோஹன் – மெனக்கெட்டு இந்தப் பதிவைப் போட 90 நிமிடங்கள் ஆனது ! தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததில் மகிழ்ச்சி.
ஆமாம், தமிழ்ப் பள்ளிகள் குறித்து நீங்கள் தகவல் தந்தீர்கள். ஆனால், இன்னும் அத்தகவலை பயன்படுத்தவில்லை. அதற்கு மன்னிக்கவும் வேண்டும். லைடன் பள்ளி சிறிதாக இருப்பதாக கேள்விப்பட்டதால் போய்ப் பார்க்கவில்லை. டென் ஹாகுக்கோ ஆம்சுடர்டாமுக்கோ போய் பார்க்க வேண்டும். நாளை உத்ரெஹ்டில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கிறார்கள். அதற்குப் போகலாமா என்று யோசித்ததுக் கொண்டிருக்கிறேன். நிறைய இலங்கைத் தமிழர்கள் இங்கு பழக்கமாகி இருக்கிறார்கள். பல விதயங்களிலும் நட்பாகவும் உதவியாகவும் இருக்கிறார்கள். அவர்களை அறிய அறிய ஈழ விதயங்களை அறிந்து கொள்வதில் அக்கறை அதிகமாகிறது
நான் தமிழ் ல எழுத ஆசை ஆன ரொம்ப வேகமா வரல நான் என்ன பன்னும்
தமிழ்நாட்டுக்கு வெளியில் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துபவர்கள் மிக்க்குறைவாகவே உள்ளனர். அந்த வகையில் உங்கள் பதிவு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
தமிழ் வலைப்பதிவுகள் மூலம் பலரும் கணினியில் தமிழ் எழுதக் கற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சியான விஷயமே.
ஆனால் தமிழில் எழுதுவது எப்படி என்று கேட்டால் எல்லோருமே ஆரம்ப நிலையிலேயே romanised முறையைத்தான் கைகாட்டி விடுகின்றனர். அதனால் புதியவர்களும் அந்த முறையிலேயே பயிற்சி பெறுகின்றனர். இன்னொரு முறைக்கு மாற மட்டுமல்ல, முயலக்கூட யாரும் முன்வருவதில்லை.
தமிழ்99 முறையின் எளிமை பற்றி பலமுறை சொல்லிப் பார்த்தாகி விட்டது. பலரும் கண்டுக்கிற மாதிரி இல்லை. பார்ப்போம், உங்களை மாதிரி புதியவர்களும் இதைப்புரிந்து பதிவிடுகிற போது நம்பிக்கை பிறக்கிறது.
//அப்பாவுக்கு காகிதத்தில் கடிதம் எழுதும்போது என்னை அறியாமல் appa eppadi irukkeenga? ungkaL katitham kaNdeen என்று எழுதும் அளவுக்கு உள்மனத்தில் இந்த எழுத்து முறை பதிந்து விடுகிறது. தமிங்கில sms அனுப்புவதாலும் இதே பாதிப்பு வருகிறது. அடுத்த தலைமுறை தமிழுக்கான சொற்களை ஆங்கில எழுத்துக்களின் பிம்பங்களாக உள்வாங்கிக் கொண்டால் அதை விட அவமானம் உண்டோ? //
இதைத்தான் யாரும் புரிந்து கொள்ளவில்லை. இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் எல்லோருமே இப்படித்தான் ஆகப்போகிறார்கள்.
ரவி சங்கர்.
சில லிங்குகள் போகமுடியவில்லை.
அதுவும் தேவையான எழுத்துருவை இறக்கிக்கொள்ளவும்- இது கிடைக்கவில்லை.
முக்கியமாக romanised முறைதான் எளிமையானது என்றே பலரும் தவறாகப் புரிந்து வைத்துள்ளனர். ஒருமுறையாவது பயன்படுத்திப் பார்த்தால் தானே தமிழ்99 முறையின் சிறப்பை உணர முடியும்.
romanised என்றால் ஆங்கில எழுத்தில் அப்படியே அடித்தால் போதுமே என்று நினைக்கிறார்கள். சுமார் 30 நிமிடங்கள் பயிற்சி செய்தாலே தமிழ்99 முறையில் வேகமாக தட்டச்ச பயிற்சி பெற முடியும். இரண்டு மூன்று தினங்களில் அதிக பிழையின்றியும் தட்டச்ச முடியும்.
romanised முறையில் கூட அதைவிட அதிக பயிற்சி அவசியம்தான். அதை எழுதும்போது ஆங்கிலத்தில் தான் சிந்திக்கிறீர்கள் தமிழில் அல்ல! இந்த அரைகுறை தமிங்கிலத்தை தமிழ் வலைப்பதிவர்கள் கைவிட முன் வந்தாலே சீக்கிரமாக நேரடி தமிழ் தட்டச்சுக்கு விடிவு காலம் பிறக்கும்.
வடுவூர்குமார் – எந்த இணைப்புகளுக்குப் போக முடியவில்லை என்று சொன்னால் கவனித்து திருத்துவேன். தமிழக அரசு இணையத்தளங்கள் tam/tab எழுத்துருவில் இருக்கலாம். அதற்கு எழுத்துருவை நிறுவிக் கொள்வது தவிர வேறு வழியில்லை. ஒரு வேளை நீங்கள் பயர்பாக்ஸ் வைத்திருந்தால் அதியமான், பத்மா நீட்சிகளை நிறுவிப் பாருங்கள். உதவலாம்.
சிந்தாநதி – வருகைக்கும் தொடர் கருத்துக்களுக்கும் நன்றி. தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துபவர்கள் குறைவு என்று பொதுமைப்படுத்த முடியாது. ஒரு வேளை இலங்கையில் வேறு மாதிரி இருக்கலாம். வலைப்பதிவர்களிலும் தமிழ்99 பயன்படுத்துபவர்களை அதிகம் கண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, சொந்தக் கணினி வைத்து கொஞ்சம் நுட்பங்களை நோண்டிப் பார்ப்பவர்கள் தாமாகவே தமிழ்99ஐ கண்டுபிடித்துப் பயன்படுத்தி விடுவார்கள். தமிழக அரசு அங்கீகரித்துள்ளதால் இதற்கு கூடுதல் வெளிச்சமும் உண்டு. தமிழ்99 இருப்பதை நானாகத் தான் கண்டு பயன்படுத்தத் தொடங்கினேன். ஆனால், நானும் முதலில் சுரதா எழுதியில் வெட்டி ஒட்டு நொந்து noodlesஆகித் தான் பிற தெரிவுகளை தேடத் துவங்கினேன்.
அனைவருக்கும், இடுகையில் சொல்ல மறந்த சில-
தமிழ்99ஐ பரப்புவதில் word of mouth ரொம்ப முக்கியம். தெரிந்தவர்கள் அடுத்தவருக்கும் இதன் அருமையை விளக்க வேண்டும். குறைந்தது அவர்கள் வலைப்பதிவுகளில், மின்மடல்களில் நண்பர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தமிழ் எழுதக் கற்றுக் கொடுக்கச் சொல்லும் அனைவருக்கும் தமிழ்99ஐ தான் அறிமுகப்படுத்தி வருகிறேன்.
பல விதயங்களுக்கு கூடி விவாதிக்கும் வலைப்பதிவர்கள் இதற்கும் ஒரு நியமமாகக் கருதிப் பரிந்துரைக்கலாம். தங்கள் வலைப்பதிவுகளில் உள்ள தமிங்கிலத் தட்டச்சுப் பெட்டியைத் தூக்கலாம்.
தமிழ் தெரியாத நடிகை ஆங்கிலத்தில் எழுதி தமிழ் வசனங்களை மனப்பாடம் பண்ணுவது அவர்களுக்கு பிழைப்பு. அது கூட நாளாக நாளாக தமிழ் கற்றுக் கொள்கிறார்கள் சிலர். ஆனால், தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தும் தமிழ்ச் சிந்தனைகளை ஆங்கிலத்தில் காலத்துக்கும் எழுதிக் கொண்டிருப்பது தான் கொடுமை. புதியவர்களை ஆங்கிலம்-தமிழ் எழுத்துப்பெயர்ப்புக் கருவிகள் எந்த அளவுக்கு எழுதத் தூண்டுகிறதோ அந்த அளவுக்கு அது பிற நல்ல தட்டச்சு முறைகளை தெரிந்து கொள்ள விடாமல் சோம்பற்படுத்தி விடுகிறது.
ஆங்கிலம் மூலம் தமிழ் எழுதுவது intuitive என்று சப்பைக் கட்டு வேறு. அட மக்கா..தமிழுக்கு ஆங்கிலத்துக்கு என்று இரண்டு தட்டச்சு கற்றுக் கொண்டால் குழம்பி விடுவோம் என்று பிழையாக நினைக்கிறார்கள். தமிழை ஆங்கிலமாக எழுதினால் சோர்ந்து விடுவோம் என்பது மட்டும் தான் உண்மை. எனக்கு தமிழ், ஆங்கிலம் இரண்டுமே அழகாக குழப்பமின்றி தட்டச்ச வருகிறது. இது இதை கற்றுக் கொண்டவர்கள் மட்டுமே அறியும் உண்மை. சிலர் சீன எழுத்துக்களை கூட இப்படித் தான் அடிக்கிறார்கள் என்று சாக்கு சொல்கிறார்கள். அவர்கள் ஆயிரக்கணக்கில் எழுத்துக்கள் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அது தேவையாக இருக்கலாம். நமக்கு வெறும் 31 தானே? எதற்கு காதை சுற்றி மூக்கை தொட வேண்டும்? தமிங்கிலப் பலகையில் ஞ அடிக்க nja என்று அடிக்க வேண்டும். ந அடிக்க w அடிக்க வேண்டும்..இந்த விதிகள் தான் குழப்பும். தமிழ்99 பலகையில் எல்லாம் ஒரே விசை தான் !
தமிங்கிலப் பலகை சமையல் தெரியாதவனும் அவசரத்தில் உள்ளவனும் noodles கிண்டுவது மாதிரி. ஆனால், காலாகாலத்துக்கும் அதை தின்றால் உடல் வீணாகி விடும். ஆராக்கியமான கணித்தமிழை நான் வளர்க்க வேண்டும். கணினியில் தமிழ் bioscope பார்த்த பூரிப்பில் நம் எழுத்துக்களை இழந்து விடக்கூடாது.
தமிழ்99ல் விசை அழுத்தங்கள் மிச்சமாவது மட்டுமல்ல..எல்லாம் பக்கம் பக்கமாக உள்ளதால் மிக எளிதாக தட்டச்சு செய்யலாம். எடுத்துக்காட்டுக்கு, கன்று, உங்கள் போன்ற சொற்களை அடித்துப் பார்த்தால் இது எவ்வளவு எளிமை என்று புரியும். தமிழின் ergonomicsஐ இப்படி ஆராய்ந்து இந்த விசைப்பலகையை வடிவமைத்த நா. கோவிந்தசாமி அவர்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்.
எனவே சில வேண்டுகோள்கள் –
1. உங்களிடம் யாராவது தமிழ் எழுதக் கற்றுக் கொடுக்க கேட்டால், தமிழ்99 மட்டும் பரிந்துரையுங்கள்.
2. உங்களுக்கே தமிழ்99 தெரியாவிட்டால் இன்றே பழகுங்கள்.
3. நீங்கள் உருவாக்கும் விசைப்பலகை மென்பொருள்கள், எழுத்துப்பெயர்ப்பிகள் ஆகியவற்றில் தமிங்கில முறையை ஒரு எச்சரிக்கையுடன் தந்து தமிழ்99ஐ கடுமையாக பரிந்துரையுங்கள். இது எ-கலப்பை, தமிழ்கீ போன்ற பரிந்துரைகளுக்குப் பொருந்தும்.
4. உங்களுக்கு சொந்தக் கணினி, நிர்வாக அணுக்கம் இல்லை என்றால், பயர்பாக்ஸ் நிறுவச் சொல்லிக் கேட்டு தமிழ்கீ நீட்சி மூலம் தமிழ்99ல் தட்டச்சுங்கள்.
5. சுரதா எழுதியில் கூட tam என்ற விருப்பத் தெரிவு தமிழ்99 முறையை குறிக்கும்.
ஒரு முறை தமிழ்99 பழகினால் பிறகு தமிங்கிலப் பக்கம் யாரும் தலை வைத்துக் கூடப் படுக்க மாட்டார்கள்.
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று !
ரவிசங்கர், மிகவும் உபயோகமான பதிவு. நானும் பல சந்தர்ப்பங்களில் தமிழ் 99ஐப் பரிந்துரைத்து எழுதியிருக்கிறேன். நீங்கள் கூறுவது போல் word of mouth இதற்கு மிகவும் அவசியமென்று தோன்றுகிறது. குறிப்பாக, wiki கட்டுரைகள் போன்ற நீண்ட உள்ளீடுகளுக்கு தமிழ் 99னின் உபயோகம் மிகவும் சாதகமாக இருக்கும். (wiki ரவிசங்கர் நீங்கதானே?)
தமிழ் 99 குறித்து இன்னோரு சிந்தனை – விசைகளின் மீது ஆங்கில எழுத்துக்கள் இருப்பதால் அதுவே தமிழ் 99ஐப் பயில்வதற்கு ஒரு தடையாகி விடுகிறதோ என்றும் தோன்றுகிறது. விசைகளின் மீது தமிழெழுத்துக்கள் இருந்தால், அவற்றைப் பார்த்துப் பழகும் புதியவர்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் கணினிக்கோ ஆங்கில விசைப்பலகை இன்றியமையாதது. ஆகவே எனக்குத் தோன்றும் ஒரு யோசனை – (USB நுழைவில் பொருத்தக்கூடிய) இரண்டாவது விசைப்பலகை, தமிழெழுத்துக்களுடன். அதாவது ஒரு விசைப்பலகை கொண்டு இரு மொழிகளிலும் உள்ளிடுவதை விட, இரு மொழிகளுக்கும் தனித்தனி விசைப்பலகைகள். கணினியில் தீவிரமாகத் தமிழை உபயோகிக்கும் பயனர்களுக்கு (உ-ம், வலைப்பதிவர்கள், விக்கிப்பீடியர்கள், etc) இந்த ஏற்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்று தோன்றுகிறது. (கொஞ்சம் hardware / software மாற்றங்கள் தேவைப்படலாம்). இதை மட்டும் செய்ய முடிந்தால் ‘கணினியில் தமிழில் தட்டச்சுவது எப்படி’ போன்ற கேள்விகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்்.
http://www.chummaa.com/subpages/kaninicheithigal/Kanithamil.htm
ரவி சங்கர்
பிறகு முயற்சிட் செய்ததில், சரியாக கிடைத்தது ஆனால் பாருங்க எனது அலுவலகத்தில் வின் 95 உள்ளது.அதில் இதை செயல்படுத்த முடியவில்லை.
வீட்டில் பிரச்சனையில்லை.
தகவல்களுக்கு நன்றி
ரவிசங்கர்,
மிகவும் பயனுள்ள பதிவு. Tamilnet விசைப் பலகையை இதுவரை நான் பயன்படுத்தவில்லை. அருமையான பல தகவல்களைச் சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி. தமிழ்மணத்தில் கொஞ்சப் பேர்தான் நல்ல பதிவுகளைத் தந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நீங்களும் ஒருவர். தொடர்ந்தும் இப்படியான கட்டுரைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
மிக்க நன்றி.
பணிவன்புடன்,
வெற்றி
நீங்கள் குறிப்பிடும் தமிழ்நெட் 99 உம் தமிழக அரசின் பரிந்துரையும் ஒரே இரவுக்குள்ளே கிடைத்தவையாக்கும். செந்தில்நாதன் தமிழகக்கணிச்சங்கத்தோடு சேர்ந்தவராக்கும். தமிழ்நெட்99 குறித்து ஆஹா ஊஹா என்பதிலே வியப்பில்லை. எதற்கும் உத்தமம் குழுவுக்கு முந்திய webmasters list அஞ்சல்களைப் பார்த்தீர்களென்றால், தெரியும் தமிழ்நெட் 99, தாம், தாப் அரசியல்
முதன்முதலில் Pals அகரமுதலியை கணினியில் பாவித்தபோது இந்த தமிழ்நெட் முறையில் தட்டச்ச வேண்டி வந்தது. அப்போதுதான் இம்முறை பற்றி அறிந்தேன்.
அதற்கு முன்பே பாமினி முறையில் தட்டச்சப் பழகிவி்ட்டதால் இன்றுவரை பாமினி முறையிலேயே தட்டச்சி அதை ஒருங்குறிக்கு மாற்றிக்கொண்டிருக்கிறேன்.
ஆனால் தமிழ்நெட் விசைப்பலகை முறையில் தட்டச்சுவதொன்றும் கடினமில்லை. எனக்கு இம்முறை கையகப்பட (விசைப்பலகை பார்க்காமலேயே தட்டச்ச) இரு மணித்தியாலங்களே தாராளமாகப் போதுமென்று நினைக்கிறேன். உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் இருக்கும் விசைகளை மட்டும் ஞாபகப்படுத்திக்கொண்டால் போதும்.
புதிதாக தமிழில் தட்டச்சப் பழகுவோருக்கு நான் பரிந்துரைப்பதும் தமிழ்நெட் முறைதான்.
நான் புரிந்துகொண்ட அளவில் ஈழத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாவிப்பது பாமினி முறையில் தட்டச்சுவதை. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாவிப்பது romanised முறையை. சரியா?
எனக்கு romanised முறையில் தட்டச்ச முடிந்தாலும் அதைப் பாவிப்பதில்லை. தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே அம்முறையைப் பாவிக்கிறேன். தமிழ் ஒலிப்புக்கு அம்முறையில் ஏற்படுத்தப்பட்ட ஆங்கிலப் பலுக்கல்களில் சில எனக்குப் பிடிக்கவில்லையென்பதும் ஒரு காரணம்.
விசைப்பலகை பார்க்காமலேயே பாமினி முறையில் தட்டச்சப் பழக எனக்கு மூன்று நாட்கள் மட்டுமே எடுத்தன. ஆனால் ஆங்கிலத்தில் விசைப்பலகை பார்க்காமல் தட்டச்ச இன்னும் அதிக நாட்கள் எடுத்தன. இதற்கு, விசைகளில் தமிழ் எழுத்து இல்லாததே காரணம்.
சரளமாக எழுதும் நிலைக்கு வரவேண்டுமானால் விசைப்பலகையைப் பார்க்காமல் தட்டச்சும் நிலைக்கு வந்தே ஆகவேண்டும். எனவே விசைப்பலகையில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பது இந்த நிலையை அடைய இடைஞ்சலாக இருக்கும் அல்லது தாமதப்படுத்தும்.
எனவே என் பரிந்துரை, தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட விசைப்பலகையைத் தவிர்க்கவேண்டுமென்பதே.
வேண்டுமானால் விசைகளின் அமைவிடத்தைத் தமிழெழுத்துக்களோடு குறித்த தாள் ஒன்றைத் தற்காலிகமாக வைத்துக்கொண்டு பயிற்சி செய்யலாம்.
பழகுவோருக்கு எனது இன்னோர் ஆலோசனை:
எக்காரணம் கொண்டும் ஓரிரு விரல்களை மட்டும் பாவித்து விசைகளைக் குத்துவதைத் தவிருங்கள்.
பழகத் தொடங்கும்போதே பத்துவிரல்களையும் பாவித்துத் தட்டச்சப் பழகுங்கள். மெதுவாகவென்றாலும் முறைப்படி பழகத்தொடங்கி, பின் வேகத்தைக் கூட்டுங்கள்.
____________________________________
நல்ல பதிவு. இப்படியான பதிவுகள் வந்து நீண்டகாலமாகிவிட்டது.
வடுவூர் குமார்
//எனது அலுவலகத்தில் வின் 95// அது எந்த அலுவலகம்.இந்தக்காலத்தில் இப்படியொரு அலுவலகமா? இன்னும் பழைய பஞ்சாக்கம் படிப்பதற்கு எதற்கு கணினி? கணினி என்பதே கால மாறுதல்களை உடனுக்குடன் உள்வாங்கிக்கொள்வதுதான்.
//ஒரே இரவுக்குள்ளே கிடைத்தவையாக்கும். செந்தில்நாதன் தமிழகக்கணிச்சங்கத்தோடு சேர்ந்தவராக்கும். தமிழ்நெட்99 குறித்து ஆஹா ஊஹா என்பதிலே வியப்பில்லை. எதற்கும் உத்தமம் குழுவுக்கு முந்திய webmasters list அஞ்சல்களைப் பார்த்தீர்களென்றால், தெரியும் தமிழ்நெட் 99, தாம், தாப் அரசியல்//
உண்மையில் ஒரு பயனுள்ள கருவி அல்லது செயல்முறை குறித்த விவாதத்தினிடையே இது போன்ற தேவையற்ற அரசியல் குழப்பங்களும் வெறுப்புகளும் கொண்டிருப்பவர்களால் தான் விழிப்புணர்வும் முயற்சிகளும் மங்கிப் போகின்றன. பலரும் பலவித விசைப்பலகை மற்றும் பலவித எழுத்துருக்களை புழங்கிக் கொண்டிருக்கையில் தமிழ்நெட்டில் இதை அறிமுகப்படுத்த அரசியல் விளையாட்டுகள் நடந்தேறியிருக்கலாம். அதற்காக இதன் பயன்பாட்டை குறைத்து மதிப்பிடுவதோ புறக்கணிப்பதோ தேவையற்றது. ஒத்த கருத்து எட்டப்படாத நிலை இப்போது இணையத்தில் இருப்பது போலவே அன்று மாநாட்டிலும் இருந்ததாக படித்திருக்கிறேன். கடைசியில் அரசாங்கம் தமிழ்99 முறையை அங்கீகரித்து அறிவித்தது.
இன்று எந்த விருப்பு வெறுப்புமின்றி எல்லா தட்டச்சு முறைகளையும் சோதித்து அறியும் ஒருவரால் தமிழ்99 முறையைத்தவிர வேறொன்றை பரிந்துரைக்க முடியாது என்பது தான் உண்மை. (பழைய அரசியல்களிலேயே மூழ்கியிருப்பவர்களால் இதை ஏற்க முடியாது என்பதும் உண்மை.)
பாமினி கற்ற வசந்தன்கூட
//ஆனால் தமிழ்நெட் விசைப்பலகை முறையில் தட்டச்சுவதொன்றும் கடினமில்லை. எனக்கு இம்முறை கையகப்பட (விசைப்பலகை பார்க்காமலேயே தட்டச்ச) இரு மணித்தியாலங்களே தாராளமாகப் போதுமென்று நினைக்கிறேன். உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் இருக்கும் விசைகளை மட்டும் ஞாபகப்படுத்திக்கொண்டால் போதும்.
புதிதாக தமிழில் தட்டச்சப் பழகுவோருக்கு நான் பரிந்துரைப்பதும் தமிழ்நெட் முறைதான்.//
என்கிறார். நன்றி
//தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாவிப்பது romanised முறையை// இல்லை வசந்தன்
இணையத்துக்கு வெளியே இங்கும் பாமினி, அல்லது தட்டச்சு முறைதான் முற்றாகப் பயன்படுத்தப் படுகிறது. அரசாங்கம் தமிழ்99 முறையை பரிந்துரைத்திருந்தாலும், அரசு அலுவலகங்களில் கூட இன்னும் தட்டச்சு முறையைத்தான் கணினித் தட்டச்சுக்கும் பயன்படுத்துகிறார்கள்.
இணையத்திலும் பெரும்பாலும் அப்படியே. ஆனால் தட்டச்சு தெரியாமல் வந்த புதியவர்கள் இணையத்தில் கொட்டை போட்ட சீனியர்களால் romanised முறைக்கே வழிகாட்டப்பட்டு இன்று தமிழ் இணையம் அல்லது வலைப்பதிவுலகம் பெரும்பாலும் romanised முறையைத்தான் பின்பற்றுகிறது.
——-
முன்பு தந்த சுட்டி திசைகள் இணையத்தில் வந்த கட்டுரை. இப்போது சும்மா என்ற தளத்தில் இருக்கிறதைப் பார்த்தேன்.
அதில் குறிப்பிட்டுள்ள கருவி
http://www45.brinkster.com/valaichuzhi/tools/tamilwrite.html
பாஷா இந்தியாவில் தமிழ்99 பற்றிய கட்டுரை
http://www.bhashaindia.com/Developers/IndianLang/Mlingual/TamilKeyboards.aspx?lang=ta
voice of wings – ஆமாங்க நான் தமிழ் விக்கிபீடியாவுல இயங்குற ரவிசங்கர் தான். ஆனா, நம்ம பேர விக்கி ரவிசங்கரா ஆக்கிறாதீங்க 🙂
புதிதாகப் பயில்பவர்களுக்கு விசைப்பலகையில் எழுத்து அச்சிடப்பட்டிருந்தால் பயில வசதியாக இருக்கும் என்பது உண்மை தான். ஆனால், அதற்கு இரண்டு தனித்தனி விசைப்பலகைகள் என்பது சரி வராது. பொருட்செலவு ஒன்று. வசதிக்குறைவு இரண்டு. எல்லா இடங்களுக்கும் தூக்கிக் கொண்டு திரிய முடியாது. மடிக்கணினிகளுக்கு ஒத்து வராது. தவிர, ஒரே நேரத்தில் பல தளங்களை பார்வையிடுகிறோம். தமிழிலும் ஆங்கிலத்திலும் மாற்றி அடிக்க வேண்டி இருக்கும். அப்ப ஒரு விசைப்பலகைல இருந்து இன்னொரு விசைப்பலகைக்கு கைய மாத்த முடியுமா சொல்லுங்க..தற்பொழுது எ-கலப்பைல உள்ள alt விசைகள் ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் மாறுவதற்கு போதுமானது. நியாயப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் விற்பனையாகும் கணினிகளில் விசைப்பலகையில் ஆங்கிலத்தோடு சேர்த்து தமிழ் விசைப்பலகையும் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். இது போன்ற செல்பேசிகளில் இந்தியும் இங்குள்ள துருக்கி கடைகளில் அரபு விசைப்பலகை அச்சிடப்பட்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன். ஸ்ரீபெரும்புதூரில் இத்தனை வன்பொருள் நிறுவனங்கள் வந்து இது கூட செய்யாட்டி அப்புறம் என்ன தொழில் முன்னேற்றம்? ஆனா, தனியா தமிழ் விசைப்பலகை அச்சிட்டு விற்கிற வேலை தனியா நடக்குது. இது வீண் வேலை. ஆங்கில விசைப்பலகையிலேயே தமிழையும் அச்சிட்டுத் தயாரிக்க வேண்டும். இல்லை, சில தன்னார்வலர்கள் பலகையில் ஒட்டிக்கிற மாதிரி தமிழ் எழுத்து ஒட்டிகளை (stickers) தருவதா படிச்சேன். அதை ஒட்டி வைச்சுக்கலாம். இல்லை, rem ote controlக்கு விற்கிற உறை மாதிரி விசைப்பலகைக்கும் தமிழ் எழுத்து அச்சிட்ட ஒரு transparent உறை மாட்டலாம். அட ஆர்வம் இருக்கவங்க, இந்த வலைப்பதிவுல கொடுத்திருக்கிற உருவரை (layout) படத்த அச்செடுத்து முன்னாடி வைச்சு அடிக்கலாம். இல்லை, இதுக்கு நீங்களே ஒரு அருமையான குட்டிக் கருவி செஞ்சு தந்திருக்கீங்க..இல்லை, செல்பேசி மூடிகளை கழட்டி மாட்டிக் கொள்வது போல விசைப்பலகைக்கும் கழற்றி மாட்டிக்கூடிய வகையில் ஒரு மேல்மூடி வைத்து வடிவமைத்தால் பிரச்சினை ரொம்ப சுளுவாகி விடும். இப்ப இருக்க ஆங்கில விசைப்பலகை மூடிய கழற்றிட்டு தமிழும் ஆங்கிலமும் பொறித்த புது மூடிய மாட்டிக்கலாம். ஆனா, மக்களும் இத கேக்குறதில்ல. உற்பத்தியாளர்களும் செஞ்சு தர்றதில்லை..மாற்றம் தேவைனு உணர்ந்திட்டா எவ்வளவோ செய்யலாங்க..ஆனா, உண்மை என்ன தெரியுமா? இது எதுவுமே தேவையில்லைங்க..தமிழ்ல எழுதணும்கிற ஆர்வமும் தேவையும் இருக்கவங்க எந்த உதவியும் இல்லாம இந்த உருவரைய அரை மணி நேரத்தில் உள் வாங்கிக் கொள்ள முடியும். உயிரெழுத்துக்களும் சரி மெய்யெழுத்துக்களும் சரி ஒரு ஒழுங்கோட தான் இதில அமைச்சிருக்காங்க..இரண்டு மணி நேரப் பயிற்சியில் தட்டுத் தடுமாறி அடிக்கத் தொடங்கி விடலாம். ஆனால், முக்கியம் என்னவென்றால் தொடர்ந்து ஒரு வாரத்துக்காவது பயில வேண்டும். நடுவில் தமிங்கிலப் பலகைக்குத் தாவினால், காப்பாத்த எந்த கடவுளும் வராது.
ஆரம்ப காலத்துல சுரதா எழுதியில இருந்து வெட்டி ஒட்டி எழுதி நொந்து போய் அப்புறம் இத கண்டுபிடிச்சு விக்கிபீடியாவுல கலக்குனது வரலாறு (நானே சொல்லிக்குறேன் ;))
எதையோ எதையோ பரப்ப இயக்கம் ஆரம்பிக்குறாங்க..அப்படி இருக்க கண்டிப்பா கணினியில் தமிழை வேகமா எளிதா முறையா எப்படி எழுதணுங்கிறத பரப்ப கண்டிப்பா ஒரு இயக்கம் தேவை. கொஞ்சம் முன்யோசனை, கொஞ்சம் தன்னார்வலர் தேவை. இந்த நேரம் பார்த்து வெளிநாட்டுல படிக்க வர வேண்டியதா போச்சே-னு நான் நொந்துக்குற நேரங்கள்ல இதுவும் ஒன்னு. கணினி விற்பவர்கள், பள்ளிகள், கல்லூரிகள், வலை உலாவு மையங்கள் ஆகியவற்றை குறி வைத்து தமிழ் எழுதி மென்பொருகள், உதவிக் குறிப்புகள், விளக்கப்படங்கள் ஆகியவற்றை பரப்ப வேண்டும். இது எண்ம (digital) அறிவொளி இயக்கம். நாம் தான் முன்னெடுக்க வேண்டும். குறைந்தது நம் நண்பர்கள், உறவினர்களுக்காவது சொல்லித் தர வேண்டும்.
வடுவூர் குமார் – என் நினைவு சரியானால், நீங்கள் சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் இருக்கிறீர்கள். சிங்கப்பூரிலேயே விண்டோஸ் 95ஆ? அட சாமி ! தமிழ்நாடே தேவலை போல்..அதில என்னென்ன வேலை செய்யுறீங்க..காசு தான் பிரச்சினைனா, உங்க முதலாளிக்கு லினக்ஸ் பத்தி நீங்க எடுத்துச் சொல்லலாமே?
வெற்றி – உங்கள் பாராட்டுக்கு நன்றி. தொடர்ந்து பயனுள்ள இடுகைகளை தர முயல்வேன். தமிழ்மணம் நல்ல இடுகைகள் குறைந்து வருகிறது; இருக்கும் நல்ல இடுகைகளும் கூட்டத்தில் காணாமல் போய் விடுகிறது என்ற உங்கள் அயர்ச்சி எனக்கும் இருக்கிறது. இப்ப எனக்குப் பிடித்த வலைப்பதிவுகளை கூகுள் ரீடரில் சேர்த்து வருகிறேன். இதன் மூலம் தமிழ்மண, தேன்கூட்டுக்குப்பையில் தலை நுழைக்காமல் நீங்கள் விரும்பியதை படிக்கலாம்.
வசந்தன் – பாமினி பயன்படுத்தும் நீங்களும் தமிழ்நெட்99ன் பயன்களை முன்மொழிவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிங்கிலத்திலிருந்து தமிழ்99க்கு மாறுவது சுலபம். பிற முறைகளில் இருந்து மாறுவதற்கு உள்ள தயக்கம் புரிந்து கொள்ளத்தக்கது தான். பார்க்காமலே தட்டச்சு செய்து பழகுவது குறித்த உங்கள் கருத்து உண்மை தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. எப்படி ஒரு வருடத்துக்குள் என்னால் ஆங்கிலத்தை விட தமிழை வேகமாக தட்டச்ச முடிகிறது என்று விளங்கிக் கொள்ள உங்கள் கருத்து உதவும். பார்த்து அடிக்கும்போது நாம் சோம்பல்படுகிறோம். விரல்களைப் பழக்குவதில்லை. ஒரு பாதுக்காப்புடன் செயல்படுகிறோம். ஆனால், பார்க்காமல் அடிக்கும்போது துவக்கத்தில் தப்பு விட்டாலும் பிறகு விரலும் மனமும் பழகி விடுவதுடன் நம்பிக்கையுடனு அடிக்க ஆரம்பித்து விடுகிறது. சர்க்கஸ் காரன் வித்தை பழகுவது போலத்தான் 🙂
அடையாளம் காட்டாத நண்பர் – நான் இந்த இடுகையை எழுத முற்படும்முன் தமிழ்நெட்99 விசைப்பலகையை யார் வடிவமைத்தார், எத்தனை நாளில் வடிவமைத்தார்கள், அதன் அரசியல் என்ன – என்று ஒன்றும் தெரியாது. ஒரு கூடுதல் தகவலுக்காக வலையில் மேய்ந்து இட்டவை. நீங்கள் சொல்வது எல்லாம் உண்மையாக இருந்தாலும் கூட கவலை இல்லை. ஏனென்றால், இவ்விசைப்பலகையில் உள்ள பயனர் எளிமை நான் அனுபவப்பூர்வமாக கண்டு உணர்ந்தது. இவ்விசைப்பலகையைத் தேர்ந்தெடுத்த முடிவு முழுக்க முழுக்க அதன் பயன்பாட்டு எளிமையால் தான். தமிழக அரசு அங்கீகரித்தது என்பதற்காக எல்லாம் யாரும் வீணாய்ப் போன விசைப்பலகையை கட்டி அழ மாட்டார்கள்.
வலியது நிலைக்கும். அவ்வளவு தான்.
சிந்தாநதி – நீங்கள் தந்த சுட்டிகளுக்கு நன்றி. தொடர்த்து பின்னூட்டுகள் மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொள்வது குறித்தும் மகிழ்கிறேன்
அனானிமஸ், பின்னணி அரசியல் காரணங்கள் என்னவாயிருந்தாலும், இது தமிழில் வேகமாக உள்ளீடு செய்வதற்கேற்ற நுட்பம் என்று கண்டு கொண்டதாலேயே இதனைப் பரிந்துரை செய்து வந்திருக்கிறேன். செந்தில்நாதன் எந்தக் குழுவைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரது ‘ஆஹா ஊஹா'(ஓஹோ?)வில் உண்மைக்குப் புறம்பாக எதுவுமில்லை என்பதாலேயே அவரை மேற்கோள் காட்டியிருக்கிறேன். அது சரி, நீங்கள் ‘ஆகும்’ என்று வரவேண்டிய இடங்களிலெல்லாம் ‘ஆக்கும்’ என்று குறிப்பிடுவதன் மர்மமென்னவோ? 🙂
வசந்தன்,
//விசைப்பலகை பார்க்காமலேயே பாமினி முறையில் தட்டச்சப் பழக எனக்கு மூன்று நாட்கள் மட்டுமே எடுத்தன. ஆனால் ஆங்கிலத்தில் விசைப்பலகை பார்க்காமல் தட்டச்ச இன்னும் அதிக நாட்கள் எடுத்தன. இதற்கு, விசைகளில் தமிழ் எழுத்து இல்லாததே காரணம்.
சரளமாக எழுதும் நிலைக்கு வரவேண்டுமானால் விசைப்பலகையைப் பார்க்காமல் தட்டச்சும் நிலைக்கு வந்தே ஆகவேண்டும். எனவே விசைப்பலகையில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பது இந்த நிலையை அடைய இடைஞ்சலாக இருக்கும் அல்லது தாமதப்படுத்தும்.
எனவே என் பரிந்துரை, தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட விசைப்பலகையைத் தவிர்க்கவேண்டுமென்பதே.//
முதன் முதலாக ஆங்கிலத்தில் தட்டச்சைப்் பயின்று, பிறகே தமிழிலும் பயின்றிருப்பீர்கள் என்று அனுமானிக்கிறேன். முதல் முறை பயில்வதற்கு அதிக நேரம் எடுத்ததிலொன்றும் வியப்பில்லையே. அதாவது, நீங்கள் தமிழ் தட்டச்சைப் பயின்ற போது, உங்கள் விரல்கள் ஏற்கனவே தட்டச்சும் திறமையைப் பெற்றிருந்தன. ஆகவே, விரைவில் உங்களால் கற்றுக்கொள்ள முடிந்தது.
விசைகளில் எழுத்துக்கள் பொறித்திருந்தால் அது தட்டச்சும் வேகத்திற்குத் தடையாக இருக்கும் என்பது உண்மையென்றால், இன்று விசைப்பலகைகளில் ஆங்கில (அல்லது மற்ற மொழி) எழுத்துக்களை ஏன் பொறித்திருக்கிறார்கள்?
விசைகளில் எழுத்துக்கள் இல்லாவிட்டாலும் ஒரு உந்துதலால் இன்று பலரும் (சில ஆயிரம் நபர்கள்?) தமிழில் தட்டச்சிக் கொண்டிருக்கிறோம். இந்த எண்ணிக்கை சில இலட்சங்களை அடைய வேண்டுமென்றால், கணிமை எளிமையாக்கப்பட வேண்டும். தமிழெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட விசைப்பலகைகளைக் கொண்டு வருவது கணிமையை எளிமையாக்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.
முன்பு காசியின் பதிவில் நடத்தப்பட்ட வாக்குப் பதிவின்படி தமிழ் வலைப்பதிவர்கள் பயன்படுத்தும் விசைப்பலகை முறைகள் விகிதம்:
சராசரியாக…
ரோமன்-46%
பாமினி-19%
தமிழ்99-13%
தட்டச்சு-9%
மற்றவை-13%
ரவிசங்கர் எழுதியது:
// பார்க்காமலே தட்டச்சு செய்து பழகுவது குறித்த உங்கள் கருத்து உண்மை தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. எப்படி ஒரு வருடத்துக்குள் என்னால் ஆங்கிலத்தை விட தமிழை வேகமாக தட்டச்ச முடிகிறது என்று விளங்கிக் கொள்ள உங்கள் கருத்து உதவும். பார்த்து அடிக்கும்போது நாம் சோம்பல்படுகிறோம். விரல்களைப் பழக்குவதில்லை. ஒரு பாதுக்காப்புடன் செயல்படுகிறோம். ஆனால், பார்க்காமல் அடிக்கும்போது துவக்கத்தில் தப்பு விட்டாலும் பிறகு விரலும் மனமும் பழகி விடுவதுடன் நம்பிக்கையுடனு அடிக்க ஆரம்பித்து விடுகிறது. சர்க்கஸ் காரன் வித்தை பழகுவது போலத்தான் 🙂
//
அதேதான் நான் சொன்னதும். எனது அனுபவமும் அதுதான். எழுத்துக்கள் பொறிக்கப்படாத நிலையில் தேவையுடன் விசைகளைப் பார்க்காமல் தட்டச்சுகிறோம். அதைத்தவிர வேறுவழியில்லையென்பதால் விரைவில் பலகையைப் பார்க்காமலே தட்டச்சப் பழகிவிடுகிறோம். ஆனால் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தால் அந்தத் தேவை இயல்பா இல்லாமற் போய்விடுகிறது. பார்க்காமல் தட்டச்ச வேண்டும் என்ற நோக்கத்தோடும் விருப்போடும் முழு முயற்சி செய்தாலொழிய அந்த நிலைக்கு வருவது சிரமமே.
சிந்தாநதி,
நான் சொல்ல வந்தது வலைப்பதிவில் பதிவர்கள் பயன்படுத்தும் எழுத்துரு முறை பற்றியே. அச்சொல் விடுபட்டுவிட்டதால் பொதுவான பார்வையாகப் போய்விட்டது.
Voice on Wings,
இல்லை. நான் முதலில் தட்டிப் பழகியது பாமினிதான். கணினியை இயங்குநிலைக்குக் கொண்டுவருவதையும் ஓய்வுநிலைக்குக் கொண்டுபோவதையும் தெரிந்துவைத்துக்கொண்டு கணினியில் நான் செய்த முதல் வேலையே தமிழில் சில ஆவணங்களைத் தட்டச்சியதுதான். நான் ஆங்கிலத்தை முறைப்படி தட்டச்சியது கிட்டத்தட்ட ஒருவருடத்தின் பின், அதாவது வெளிநாடு வந்தபின் என்பதுதான் சரி. ஆங்கிலம் தட்டச்சப் பழகியபோதுதான் நீங்கள் சொல்வதுபோல் ஏற்கனவே முறைப்படி பத்துவிரல்களையும்கொண்டு தட்டச்சப் பழகியிருந்தேன். அப்படியிருந்தும் தமிழைவிட அதிகநாட்கள் பிடித்தன. (சிலவேளை இது எனக்கு மட்டும்தானோ என்னவோ?)
பலரை தமிழில் தட்டச்சுவதற்கு ஊக்குவிக்க வேண்டுமென்றால் விசைகளில் தமிழ் பொறிக்கப்படவேண்டுமென்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நான் சொல்லவந்தது, அப்படிப் பொறிக்கப்படாமல் இருந்தால் பலகையைப் பார்க்காமல் தட்டச்சும் திறன் விரைவில் கைவரும் என்பதையே. (நீங்கள் சொன்னதன் தர்க்கத்தைப் புரிந்துகொள்கிறேன். நான் சொன்னபடி பார்த்தால் இன்று ஆங்கிலத் தட்டச்சுப்பலகை வைத்திருக்கும் யாருமே விசைப்பலகை பார்க்காமல் ஆங்கிலத்தைத் தட்டச்சும் திறமையுடன் இருந்திருக்கக்கூடாது. சிலவேளை தமிழர்கள் பற்றிய என் தாழ்வுக்கணிப்பீடு காரணமோ?;-))
அனாமதேய நண்பரே,
நீங்கள் இம்முறையில் இருக்கும் குறைபாடுகள், அரசியலைப் பற்றிச் சொன்னால் நாங்கள் வேண்டாமென்கிறோமா?
எதையும் எழுந்தமானத்துக்குத் தலையில் தூக்கிவைத்து ஆடுவதற்கோ சகட்டுமேனிக்கு எதிர்த்துக்கொண்டிருப்பதற்கோ தயாரில்லாத பலர் வலைப்பதிகிறார்கள். உங்களின் நியாயமான விமர்சனத்தை தகவல்பூர்வமாக வைக்கலாம்.
எல்லோருத் ஒருங்குறியைத் தலையில் தூக்கிவைத்து ஆடியகாலத்தில் இராம.கி, Voice on Wings, போன்றோர் ‘இதுவும் அரைகுறைதான்’ என்று அதிலுள்ள குறைகளைச் சொல்லிப் பதிவுகள் எழுதியபோதுதான் ஒருங்குறியிலுள்ள குறைபாடுகள் பற்றி அறிய முடிந்தது. (அப்போதும் சகட்டுமேனிக்கு ஒருங்குறியைத் துதிபாடி அதை எதிர்ப்பவர்களை வசைபாடி வந்தவர்கள் சிலர் இருந்தார்கள்)
நீங்களும் தமிழ்நெட் முறையிலுள்ள குறைகளையோ அரசியலை முன்வைத்துப் பின்னூட்டம் தரலாமே?
voice on wings – ஆஹா ஊஹோ ஓஹோ – ஆகும் ஆக்கும் – ஏதும் உள்குத்து உள்ளர்த்தம் இல்லாமல் இருந்தால் சரி 😉
//விசைகளில் எழுத்துக்கள் பொறித்திருந்தால் அது தட்டச்சும் வேகத்திற்குத் தடையாக இருக்கும் என்பது உண்மையென்றால், இன்று விசைப்பலகைகளில் ஆங்கில (அல்லது மற்ற மொழி) எழுத்துக்களை ஏன் பொறித்திருக்கிறார்கள்? //
வசந்தனும் நானும் சொன்னது ஒரு அவதானமும் ஊகமும் தான். அறிவியல்ரீதியாக யாரும் இந்த நடத்தையை படித்துப் பார்த்திருக்கிறார்களா தெரியாது. ஆனால், இது போன்ற குட்டி குட்டி ஆய்வுகளை பள்ளி, கல்லூரிகளில் கூட செய்து பார்க்கலாம். ஆங்கில எழுத்துக்கள் பொறித்திருந்தும் வேகமாக ஆங்கிலத்தை தட்டுபவர்கள் தமிழில் இல்லையே என்பதற்கு காரணம் இருக்கிறது. ஆங்கில தட்டச்சு முறையும் கணினிப் பலகை முறையும் ஒன்றே. ஆனால், நமது வழமையான தமிழ்த் தட்டச்சு மையங்களில் பயிற்றுவிக்கும் முறை கணினியில் யாரும் பயன்படுத்துவது கிடையாது. அல்லது அப்படிப் பயின்று வந்தவர்கள் மட்டும் வேகமாகத் தட்டுவார்களாக இருக்கும். எடுத்துக்காட்டுக்கு, அரசு அலுவலக கணக்கர்கள். ஆனால், அஞ்சல் பலகையாகட்டும் தமிழ்99 ஆகட்டும், எந்தத் தட்டச்சுப் பயிற்சி நிலையத்திலும் சொல்லிக் கொடுப்பதாகத் தெரியவில்லை. எல்லாம் நாமாகத் தான் கற்றுக் கொள்கிறோம். அதனால் தடுமாற்றம் அதிகம். ஆங்கிலம் அளவுக்கு தமிழ் தட்டச்சாமல் போவதால் பயிற்சியும் குறைவு. ஆகக் கடைசியில் தமிழில் தட்டச்சுவது கடினம் என்று பொத்தாம் பொதுவாக முடிவு செய்து விடுவது ;(
இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். பல பயர்பாக்ஸ் நீட்சிகளை உருவாக்கியுள்ள நீங்கள் தமிழ்த் தட்டச்சுப் பயிற்சிக்கு ஏன் ஒரு நீட்சியை உருவாக்கக் கூடாது? எடுத்துக்காட்டுக்கு ஒரு தட்டசுப் பயிற்சி நீட்சி இங்கு உள்ளது.
https://addons.mozilla.org/firefox/2828/
இது குறித்து தமிழா – கட்டற்ற தமிழ் கணிமைக் குழுவுக்கும் ஒரு மடல் இடுகிறேன். அங்கு நாம் ஒன்று கூடி இதை உருவாக்கலாமே?
மடற்குழு முகவரி – http://lists.thamizha.com/mailman/listinfo/freetamilcomputing_lists.thamizha.com
//தமிழெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட விசைப்பலகைகளைக் கொண்டு வருவது கணிமையை எளிமையாக்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை. //
உடன்படுகிறேன்.
கொரிய மொழி கொச கொச எழுத்துக்களை நீங்கள் பயந்து விட்டீர்களா 😉 தெளிவாக இருக்கும் தமிழெழுத்துக்கள் அப்படி பயமுறுத்தாது என்பது என் நம்பிக்கை. தவிர, தமிழ்-ஆங்கிலப் பலகைகள், தமிழ் மட்டும் உள்ள பலகைகள் ஏற்கனவே சந்தையில் உள்ளன. பரவலாக வில்லை. அவ்வளவுதான். மக்களும் கேட்டு வாங்குவதில்லை. ஏற்கனவே தமிழில் அடிக்க தனியாக விசைப்பலகை வாங்கணும் போல என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களை, ”ஆமா, நீங்க உண்மையில இன்னொரு பலகை வாங்கணும்னு” சொன்னா அது எண்மத் தமிழை (digital tamil) இன்னும் தேக்கப்படுத்திவிடாதா? ஆங்கிலம்-தமிழ் கூட்டுப் பலகை நல்ல தீர்வாக இருக்கட்டும். சில நூறு ரூபாய் கூடுதல் செலவை விட்டு விட்டாலும் (ஆனால், அரசுச் செலவில் விசைப்பலகை வாங்கும் இடங்களில் இதுவும் முடிவெடுக்கச் சிக்கலைத் தரும்), பயன்பாட்டிலேயே பிரச்சினை இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் அதிகம் பயன்படுத்தாத தூர வைப்பது desktop publisherகள் போல் தமிழையோ ஆங்கிலத்தையோ தொடர்ந்து அடிப்பவர்களுக்கு தான் பொருந்தும். நம்மை போன்று கீற்றுக்கு கீற்றுக்கு (tab by tab) மொழி மாற்றி அடிக்கத் தேவை உள்ளவர்கள், பலகையை திரும்ப திரும்ப இடம்மாற்றிக் கொண்டிருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
சிந்தாநதி – தமிழ்விசைப்பலகை குறித்த தகவல்களை தாராளமாக இங்கு திரட்டித் தாருங்கள். ஏற்கனவே நம் பின்னூட்டு வழி உரையாடல்கள் தமிழ் விசைப்பலகைகள் குறித்த ஒரு நல்ல திறனாய்வாக மாறி வருவது கண்டு மகிழ்கிறேன்.
இலங்கை தமிழ்99 ல் சில மாற்றங்களை செய்திருந்தார்கள் என்றால் அது வருத்தத்தற்குரியது. உலகெங்கும் ஒன்றாக இருப்பது நல்லது. ஏனெனில் தமிழ்99 ஆங்கிலப் பலகையில் இருந்தோ வேறு எதில் இருந்தோ உருவாகவில்லை. தமிழ் எழுத்துக்களின் இருப்பிடம் ஆங்கில எழுத்துக்களின் இருப்பிடத்துக்கு எந்த விதத்திலும் தொடர்புடையது அல்ல. அதனால் அவற்றை ஜெர்மன், பிரெஞ்சுப் பலகையில் உள்ள ஆங்கில எழுத்துக்களுக்கு ஏற்ப இடம்மாற்றி இருந்தால் அது பெரும் பிழை. தமிழ்99 வடிவமைக்கப்பட்டதில் ergonomicsம் படிக்கப்பட்டதாக வலையில் தகவல் உள்ளது. அனுபவத்தில் அது உண்மையாக இருக்கும் என்றே தோன்றுகிறது. கிரந்த எழுத்துக்கள் இடம் மாறியது பெரிய குறை இல்லை. உண்மையில் நன்மை என்று கூடத் தோன்றுகிறது. ஏனெனில் இட விரலில் SHIFT அழுத்திக் கொண்டு வலப்பக்கங்களில் உள்ள விசையை அழுத்த வசதியாக இருக்கும். ஆனால், இரண்டு இணை தமிழ் எழுத்துக்களை இடம் மாற்றியது எந்த அளவு நன்மை பயக்கும் என்று இப்பொழுது சொல்லத் தெரியவில்லை. இந்த மாற்றங்களுக்கு ஜெர்மன், பிரெஞ்சு மூலங்கள் தவிர வேறேதும் காரணம் இருக்கிறதா? தெரிந்தால் சொல்லுங்களேன். அது நல்ல காரணமாகக் கூட இருக்கலாம் தானே.
வசந்தன் – அடையாளம் காட்டாத நண்பர் கருத்தளவில், பயன்பாட்டு அளவில், ஒப்பீட்டளவில் தமிழ்99ல் உள்ள குறைகளை தெரியப்படுத்தினால் நானும் மகிழ்வேன். ஒருங்குறி குறித்த திறனாய்வில் இராம. கி, voice on wings குறித்து நீங்கள் சொன்னது மிகவும் சரி. எப்போதுமே மாற்றுப் பார்வை தான் நல்ல மாற்றங்களுக்கு வழி வகுக்கும்.
அடையாளம் காட்டாத நண்பருக்கு – நீங்கள் சொன்ன கருத்தில் அடையாளம் காட்டாமல் இருப்பதற்கு என்ன இருக்கிறது என்று புரியவில்லை. துணிவாக கூறத்தக்கதை தான் சொல்லி இருக்கிறீர்கள். அரசியலால் எவ்வளவோ சீரழியும்போது தெரியாத்தனமாக அரசியலால் இது போன்ற நல்ல விதயங்கள் வந்தால் நல்லது தானே :)?
அன்புடன்,
ரவி
நல்ல பதிவு.
//தமிழக அரசு அங்கீகரித்தது என்பதற்காக எல்லாம் யாரும் வீணாய்ப் போன விசைப்பலகையை கட்டி அழ மாட்டார்கள்.//
உண்மை. தமிழக அரசு அங்கீகரத்துடன் குறையுள்ள சில நுட்பங்கள்/தரங்கள் வெளிவந்து அதே வேகத்தில் பயனிழந்த வரலாறு அனைவருக்கும் தெரியும்.
//வலியது நிலைக்கும். அவ்வளவு தான்.//
விசையமைப்புகளை பொருத்தமட்டில் “எளியது” நிலைக்கும் 🙂
//ஆங்கிலம்-தமிழ் கூட்டுப் பலகை நல்ல தீர்வாக இருக்கட்டும்.//
இத்தகைய கூட்டுப் பலகையை வன்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள்தான் தயாரிக்க வேண்டுமென்பதில்லை. Screen Printing உதவியோடு சிறு சிறு தன்னார்வ குழுமங்கள், தமிழ் கணிமை அமைப்புகள் கூட அச்சிட்டு வழங்க இயலும்.
இன்றுதான்
கண்ணில் பட்டது
உங்கள் பதிவு.
அருமை!
தமிழ் மொழி அடிப்படை மாறாத வரை
இதுவே-
தமிழ் பேசும் மக்களின்
விசைப்பலகை!
மிகவும் உபயோகமாக இருந்தது, ஆறேழு வருடங்களாக கணிப்பொறி துறையிலதான் இருக்கேன், இதை தெரிஞ்சுக்காம இருந்துட்டேன்னு சிறிது வெட்கமாக உள்ளது.
இந்த இரு படங்களும் என்னைப் போல் புதிதாக கற்றுகொள்கிறவர்களுக்கு சிறிது உதவலாம்.
tamilnet99 keyboard layout
tamil99 keyboard at screen top, so that we can easily type
ஆங்கில தட்டச்சு பயிற்சியில் asdf பயிற்சி கையேடு உள்ளது போல், tamilnet99 பயற்சிக்கும் ஏதாவது கையேடு இருந்தால் நன்றாக இருக்கும். யாராவது உதவி செய்ய இயலுமா? நன்றி
anonymous – நன்றி.
செந்தில் – 99 முதல் கணினி பயன்படுத்தியும் 1005ல் தமிழ் தட்டச்ச முடியும் என்பதே எனக்குத் தெரியும். அப்ப நானும் வெட்கப்பட்டேன். ஆனா, தமிழ்99 குறித்து விரைவிலேயே கண்டுகொண்டேன். அதுனால, திறன் குறைந்த தமிழ் விசைப்பலகைல நேரம் வீணாக்கல..நீங்க தந்திருக்கிற உதவிப் படங்களுக்கு நன்றி.
http://lists.thamizha.com/mailman/listinfo/freetamilcomputing_lists.thamizha.com
என்ற முகவரியில் இயங்கும் கட்டற்ற தமிழ் கணிமை குழு மூலமா, தமிழ் தட்டசுப் பயிற்சி செயலி ஒன்னு உருவாக்க இருக்கோம். அங்க வந்து பாருங்களேன். நன்றி
அருமையான தகவல்கள், நன்றி ரவிசங்கர்.
இலக்கியா – மகிழ்ச்சி
தமிழ் 99 குறித்து மேலும் அறிய விக்கிபீடியா கட்டுரையை படிக்கலாம்.
எல்லாம் சரி. ஆனால் கணணி என்று எழுதினால் கண்ணி என்று வருகிறதே?
floraipuyal – தமிழ் 99ல் தமிழ் இலக்கணத்துக்கு ஏற்ப சில சிறப்பு விதிகள் உள்ளன. அப்பா, அக்கா, அண்ணா என்று புள்ளி வைத்த எழுத்தும் அதை அடுத்து அதன் அகர எழுத்தும் வருவது தமிழில் வாடிக்கை. இதை தட்டச்ச எளிமைப்படுத்தவே இந்த விதி. இதனால் தான் கணணி கண்ணி ஆகிறது. ஆனால், கணினி, கணனி என்பவை தான் சரியான பலுக்கல்கள்?? தவிர, க+ண+அ+ண+இ என்று எழுதினால் கணணி என்று பிழையில்லாமலே எழுத முடியுமே. சில வட மொழிச்சொற்கள் எழுதும் இடத்தும் வேறு சிற்சில இடங்களிலும் இப்படி அகரம் சேர்த்து எழுத வேண்டும். தமிழ் விக்கிபீடியா கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறாவது விதியைப் பாருங்கள். நன்றி.
பாமினி பாவிக்கிறேன் முயன்று பார்கிறேன் இதற்கு மாற
தலைவா, tamilnet99.kmp or tamilnet99.kmx எங்கே கிடைக்கும் ? எனக்கு அஞ்சலும் வேணும் தமிழ்99னும் வேணும்.
anonymous நண்பா – firefoxல் தமிழ் விசை நீட்சியை நிறுவிக் கொண்டால் அஞ்சல், தமிழ்99, தட்டச்சு முறை என்று எல்லாமே கிடைக்கும்.
பார்க்க – https://addons.mozilla.org/firefox/2994/
இல்லை, இந்த கோப்புகளை செயலி செய்வதற்காகவோ லினக்சுக்காகவோ தேடுகிறீர்கள் என்றால், இது குறித்த நுட்ப விசயங்களை கேட்க சரியான ஆட்கள் மூன்று பேர்.
1. Higopi – http://www.hi.gopi.com
2. mugunth – http://www.mugunth.tamilblogs.com
3. mauran – mauran.blogspot.com
ரவி,
மிக அழகாக தமிழ்99 விசைப்பலகையின் சிறப்புகளை எடுத்துக் கூறியுள்ளீர்கள். பலரையும் நல்வழிப்படுத்துமுகமாக எழுதியுள்ளது கண்டு மகிழ்ந்தேன். மிகத்தேவையான சுட்டிகள் கொடுத்துள்ளதும் நன்று. இதுபோல பயனுடைய பதிவுகள் தாருங்கள்.
செல்வா
தமிழ்99 தட்டச்சு முறையைப் பயில ஏதாவது ஆவணங்கள் இணையத்தில் கிடைக்குமா?
இதைப் பயில ஆவணம் எல்லாம் தேவைப்படும்னு நினைக்கலங்க..2, 3 நாள் இந்த விசைப் பலகை படத்தைப் பார்த்து பயிற்சி செஞ்சாலே பழகிடும்.தட்டச்சுவதில் உள்ள குறுக்கு வழிகளை அறிய தமிழ் 99 குறித்த தமிழ் விக்கிபீடியா கட்டுரையைப் பாருங்கள் – http://ta.wikipedia.org/wiki/தமிழ்_99
மிக்க நன்றி.
Romanized கொஞ்சம் கடிதான். பல ஒற்றை எழுத்துகளைத் தட்ட ஒன்றுக்கு மேற்பட்ட விசைகளைத் தட்ட வேண்டி இருக்கிறது. கொஞ்ச நாள் பழைய type-writer லே-அவுட் முயன்று பார்த்தேன், ஒத்துவரவில்லை.
தமிழ்நெட்99 பழைய type-writer லேஅவுட்டை விட சிறந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆரம்பத்தில் முயன்று பார்க்கும் போது சில சிக்கல்கள் இருந்ததால் மறுபடி அஞ்சலுக்கு வந்து விட்டேன்.
உங்கள் இக்கட்டுரை மிகவும் விளக்கமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது. விரைவில் தமிழ்நெட்டில் தட்ட ஆரம்பிக்கிறேன். நன்றி.
~~~
Anonymous, (அஞ்சல் + தமிழ்நெட்டுக்கு)
e-கலப்பை இறக்குமதிப் பக்கத்தில்
(http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3 )
முதலில் தமிழ் நெட்டை இறக்குங்கள் (முதல் லின்க்). அதில் கலப்பை softwareம், தமிழ்நெட் லே அவுட்டும் உள்ளது.
பின்னர் புது யுனிகோட் அஞ்சல் லேஅவுட்டை தனியாக இறக்கி (கடைசி லின்க்), கலப்பையில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
முக்கிய ஆவணங்களை தூசு தட்டி பார்ப்பது போன்று உங்கள் பதிவை இன்று பார்த்தேன்.
//மிக வேகமா தட்டச்சு செய்யலாம். அயர்ச்சி, சோர்வு வராது.//
முற்றிலும் உண்மையே, தமிங்கிலத்தில் எழுதுவதால் பெரிய அளவிலான கட்டுரைகள் எழுதும்போது விரல்களில் வலி ஏற்படுகிறது.
“யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்”, என்கிற உங்கள் பதிவிற்கு நன்றி
வணக்கம் ரவிஷங்கர்,
நான் இதுவரை ஈ-கலப்பை மூலமே தட்டச்சு செய்து வருகிறேன்.. இதில் ஒரு சில அசௌகரியங்கள் இருந்தாலும் வேகமாக தட்டச்சு செய்ய முடிகிறது. இதிலிருந்து அதற்கு மாறுவது கடினமா??
இருந்தாலும் தமிழிலேயே சிந்திக்க இது வழிவகுக்கும் என்பதற்கும், ஆங்கிலத்தின் உதவியுடன் தமிழை உபயோகிப்பதற்கும் சற்றே தவறு என்று தோன்றுகிறது.
இவ்வளவுதூரம் சொல்லி இருப்பதால், நான் இதை முயற்சித்து வருகிறேன். கூடிய சீக்கிரம் தேறிவிடுவேன் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
உங்களது இந்த அர்ப்பணிப்பி பாராட்ட்டத் தக்கது. வாழ்த்துக்கள்.
நந்தா எ-கலப்பையைப் பயன்படுத்தியேவும் தமிழ்99 முறையில் தட்டச்ச முடியும்.
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?op=&cid=3 என்ற பக்கத்தில் எ-கலப்பை 2.0b (Tamilnet99) என்று பக்கத்தின் முதலிலேயே பொதி இருக்கு பாருங்க. அதை நிறுவிப் பழகிக்கலாம். எ-கலப்பை, ஒருங்குறி, விசைப்பலகை இதுங்களுக்கு இடையேயான வேறுபாட்டை அறிய http://blog.ravidreams.net/?p=154 பாருங்க.
நன்றி, ரவிஷங்கர்!
எளிமையான விளக்கம்!
இப்பொழுதுதான் முயற்சித்து செய்து வருகிறேன். பார்க்கலாம்.
உங்களது இந்த பெரும் பணி பாராட்டத்தக்கது.
வாழ்த்துக்கள்!!
நன்றி ரவிஷங்கர். நிறைய சிரமப்பட்டு விவரங்களை அழகாகத் தந்திருக்கிறீர்கள். இதற்குமுன் இந்த விசைப்பலகை பற்றி படித்தபோதெல்லாம் விசைப்பலகை லே அவுட்டை பார்த்துவிட்டு விட்டேன் ஜூட். அதுவும் ஆங்கிலத் தட்டச்சு பலஆண்டுகள் பழக்கமானதால், இந்த முறை மிகவும் கடினமாக இருக்கிறது. ஆனால், யுனிக்ஸின் vi editor போல, முதன்முதல் ஆங்கில தட்டச்சு போல இதுவும் ஆரம்பம் கடினம். ஆனால் போகப்போக பழக்கமாகிவிடும் என நினைக்கிறேன். பார்ப்போம். உங்கள் இந்த பதிவிற்காகவே முயற்சிக்கிறேன். என்னுடைய கணிணித் திரையிலேயே உங்கள் பதிவிலுள்ள லேஅவுட்டை வைத்திருக்கிறேன். விரைவில் லேஅவுட் மண்டையில் பதிகிறதா என்று பார்ப்போம்.
anbudaiyeer, Vanakkam.
intha Tamil99 visaippalakaiyai Naan pathivirakkam seythukolaa virumpukirEn. vivarankalai thruka. – Girijamanaalan.
கிரிஜா மணாளன்,
கீழ் வரும் முகவரியில் பதிவிறக்கலாம்
http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&lid=5
இந்த தமிழ்99 விசைபலகையை எங்கு கிடைக்கும்?
ராசகுமார் – இதற்காகத் தனியாகக் கடையில் விசைப்பலகை வாங்கத் தேவை இல்லை. உங்களிடம் உள்ள qwerty ஆங்கில விசைப்பலகை கொண்டே எழுதலாம். இதற்கான மென்பொருளை கீழ் வரும் இணைப்பில் பதிவிறக்கலாம்
http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&lid=5
தோழர் ரவி, தமிழ்99 விசைபலகையை, புதிதாக பயன்படுத்துவர்களின் தடுமாற்றத்தை தடுக்க துனையாக Yahoo Widget ஒரு விசைப்பலகையை உருவாக்கியுள்ளது..
http://widgets.yahoo.com/gallery/view.php?widget=41883
தகவலுக்கு நன்றி, பிறைநதிபுரத்தான். இதற்கான இணைப்பைக் கட்டுரையில் சேர்த்திருக்கிறேன்.
ரவி,
மேலுள்ள படத்தில் ச, ஞ, ய, ந, ழ ஆகிய எழுத்துக்கள் மறைந்துள்ளன. முழுமையான படத்தை வெளியிடவும் .
சுட்டிக்காட்டியதற்கு நன்றி, பத்மகிஷோர்.சரி செய்திருக்கிறேன்.
[…] who already use the traditional Tamil transliteration scheme, the tamilnadu government specified Tamil99 keyboard users, Bamini keyboard users (mostly from Sri Lanka) and traditional tamil typewriting keyboard […]
ரவி……நீங்கள் எழுதுற நடை எனக்கு பிடிச்சிருக்கு.
ஒரு பள்ளிக்கூட ஆசிரியர்
பாராட்டுக்கு நன்றி, மு. குருமூர்த்தி. ஒரு பள்ளிக்கூட ஆசிரியரே பாராட்டுவது மகிழ்வுக்குரிய விசயம் தான்..
Where can I find this Tamil99 keyboard layout image without english letters in them.
When I see English and Tamil I always try to reference tamil letters with English keys. So I think it would be better if the image only contained Thamiz letters and not English letters.
I am searching on google but nothing I can find 🙁
Capitalz,
எனக்கும் அப்படி ஒரு படம் தெரியவில்லை. எனினும் http://tamil99.org தளத்தில் உள்ள பயிற்சி எழுதியில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமே உள்ளன. அதன் திரைவெட்டைத் தற்காலிகமாகப் பயன்படுத்தலாம். நீங்கள் கேட்டது போல் ஒரு படம் உருவாக்க முயல்கிறோம். நன்றி
hiii
Hi
I unable to download ekalappai. Its said bandwith exeeded. Is any other way to download. Please let me know. Nandri
please try http://software.nhm.in/products/writer . you can type in tamil99 using this software.
[…] தமிழ்99 முறை அறிமுகமானவர்களுக்கு இந்த முறை மிகவும் எளிதில் பிடிபடும். கணினியில் தமிழ்99 எழுதும் போது அதில் இன்னும் கூட சிறப்பான குறுக்கு வழிகள் உள்ளன. முயன்று பாருங்கள். நோக்கியா தவிர்த்த பிற செல்பேசிகளில் தமிழ் எழுதும் முறை எப்படி இருக்கிறது என்று அறிந்தவர்கள் தெரிவியுங்கள். நன்றி. Cancel reply […]
please sent tamil pet names
Hi,
I need some training to type using the tamil Key board. The PDF link is not working..Kindly check it out..
Please continue your efforts. God Willing i will post next time in Tamil
Regards
Siraj
வணக்கம் siraj. சுட்டிக்காட்டியதற்கு நன்றி. தற்போது சரியான இணைப்புகளைத் தந்துள்ளேன்.
super
நன்றி ரவிசங்கர்
[…] – has a brief outline on layouts and the basis for Tamil99http://blog.ravidreams.net/tamil99/ (in Tamil) on why Tamil99 is the besthttp://ta.wikipedia.org/s/3vc – Tamil Wikipedia article […]
[…] http://blog.ravidreams.net/tamil99/ Inscript: இதன் மாதிரி வடிவம் கீழ் காட்ட […]
I am sorry but I don’t think Tamil99 is the best choice. Romanised keyboard is much more efficient and speedy. In fact Google phonetic keyboard provides a scroll down list of words, with the most right one as default choice. As a Tamil typing tool, I would definitely choose it over Tamil99 , because it is almost 10 times faster. I tried using Tamil99 but gave up after a while because I felt it was not worth spending my time on. I don’t buy your argument that phonetic keyboard will make us use Tanglish. It all depends on choice.
[…] ஏன் தமிழ்99 சிறந்த தமிழ் விசைப்பலகையாகக் கருதப்படுகிறது? http://blog.ravidreams.net/tamil99/ […]
[…] ஏன் தமிழ்99 சிறந்த தமிழ் விசைப்பலகையாகக் கருதப்படுகிறது? http://blog.ravidreams.net/tamil99/ […]
[…] http://blog.ravidreams.net/tamil99/ […]
தமிழை இலத்தின வரியுருவில் எழுத்துப்பெயர்ப்பாக பதிவதையோ அல்லது இங்கு போல விசைச்சர கோர்வையாக உள்ளிடிலுக்குப் பயன்படுத்துவதையோ “தமிங்கிலம்” எனக் குறிப்பிடுவது சரியா?
தமிழில் ஆங்கில சொற்களை கலந்து எழுதும் நடையைத்தான் தமிங்கிலம் என பின்வரும் விக்கிப்பீடிய கட்டுரையிலும் அதில் சுட்டப்பட்டுள்ள தமழிறிஞர் இராம.கி. இன் பதிவுகளலும் “தமிங்கிலம்” என விவரிக்கப்படுகிறது!
தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதற்கும் “தமிங்கிலம்” எனவே விவரிப்பின் பொருட் குழப்பங்கள்தான் ஏற்படும். இது பற்றிய கருத்துகள் காண விழைகிறேன்.
கா. சேது
10-06-2014
மன்னிக்கவும். இணைப்பை மறந்துள்ளேன்.
இதோ: http://ta.wikipedia.org/s/jof
தமிழோடு ஆங்கிலம் கலந்து எழுதுவது / பேசுவதைத் தான் தமிங்கிலம் என்கிறோம். எனவே, நீங்கள் சொல்வது போல் ஒலிபெயர்ப்பு முறை என்றோ ஒரு வணிகப் பெயரான அஞ்சல் என்றோ குறிப்பிட வேண்டும். இம் முறையில் இருந்து சற்று மாறுபடும் கூகுள் எழுதி முதல் இன்னும் பல்வேறு முறைகள் உள்ளன. எல்லாவற்றையும் எல்லாரும் இலகுவாக புரிந்து கொள்ளும் பெயராக தமிங்கிலத் தட்டச்சு என்று குறிப்பிடுகிறேன். பெயர் தவறாக இருக்கலாம். ஆனால், எல்லாரும் சரியாக புரிந்து கொள்கிறார்கள் ! 🙂