The Bourne, Riding alone for thousands of miles, Ratatouille, The Prince and Me

The Bourne Ultimatum, The Bourne Supremacy, The Bourne Identity – Action படம்னாலே ஒன்னு Superman, Spider-man வகையறா ஜட்டிமேன் படங்கள் அல்லது James Bondன் சாகசப் படங்கள் போல தான் இது வரைக்கும் பார்த்து அலுத்துப் போய் இருந்தது. நண்பரின் மூலம் கிடைத்த திருட்டு டிவிடியைப் பார்த்து இந்தப் படத்துக்கு செம ரசிகனாகி The Bourne Supremacy, The Bourne Identityனு பாகம் 3, 2, 1னு தலைகீழா இந்த படத் தொடரைப் பார்த்தாலும் கதை தெளிவா புரிஞ்சது. வழக்கமா முதல் பாகத்தை ஒப்பிடுகையில் அடுத்தடுத்த பாகங்கள் சரி இல்லைம்பாங்க..ஆனா, இதுல அடுத்தடுத்த பாகங்கள் ஒவ்வொன்னும் முந்தையத மிஞ்சுறதா இருக்கு. திருட்டு டிவிடில பார்த்துட்டு திரையரங்கில் பார்த்தா effect இன்னும் நல்லா இருக்குமேன்னு திரையரங்கிலும் பார்த்தேன்..அநேகமா, இப்படி நான் பார்க்கிற முதல் படம் இது தான்னு நினைக்கிறேன்..இந்தப் படங்கள் எல்லாமே இதே பெயரில் அமைந்த புதினத் தொடரை அடிப்படையா வைத்து எடுக்கப்பட்டவை. அவற்றையும் -படிக்க வேண்டியவை- பட்டியல்ல சேர்த்தாச்சு.

அமெரிக்க நலனுக்குப் புறம்பா இருக்கவங்களை ஒழித்துக் கட்ட ஒரு கொலையாளிப் படையை திரைமறைவில் உருவாக்குது CIA. இதுல பணியாற்றுறவங்க எல்லாம் நல்லா மூளைச்சலவை பண்ணப்பட்டு தங்கள் உண்மை அடையாளத்தைத் தொலைத்து / மறந்து இதில் பணியாற்றுகிறார்கள். இப்படி பணிபுரியும் Jason Bourneக்கு amnesia வர, தான் யார் எனக் கண்டுபிடிக்கப் புறப்படுகிறான். இதற்கிடையில் இவனால் தங்களுக்கு இடைஞ்சல் என்று நினைக்கும் CIA இவனைக் கொல்ல ஆளை ஏவி விடுகிறது. இந்தியா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் என்று பல ஊர் அலைந்து மூன்றாம் பாகத்தின் முடிவில் தன் அடையாளத்தைக் கண்டுபிடிக்கிறான் Jason Bourne.

தன் வீராப்பைக் காட்டுவதற்காகவோ கெட்டவர்களை ஒழிக்கிறேன் பார் என்றோ இல்லாமல் நியாயமான காரணத்துக்காக, தேவையில்லாமல் யாரையும் கொல்லாமல், செய்த கொலைகளுக்கு வருந்தும் மனிதத்தோடு நகரும் கதை நல்லா இருக்குது. முன்சன், பெர்லின், பாரிஸ், ஆம்ஸ்டர்டாம் என்று நான் பார்த்த, வாழ்ந்த நகரங்களில் கதை நகர்வது இன்னும் கூடுதலா படத்தை ரசிக்க வைச்சது. car துரத்தல், bike துரத்தல் போல இதில் புதுசா வரும் மொட்டை மாடி துரத்தல் எனக்குப் பிடிச்ச காட்சி. Jason Bourneஆக நடித்திருக்கும் Matt Damonஐ முன்பே சில படங்களில் பார்த்து இருந்தாலும் இந்தப் படத்துக்குப் பிறகு பிடிச்சுப் போச்சு. மூன்றாம் பாகத்தில் அதிக நேரம் வரும் Julia stilesக்காவாவது அடுத்த பாகம் வந்தால் நல்லா இருக்கும் 🙂 ஆனா இது தான் கடைசி பாகம்கிறாங்க..

கொசுறு: கமல் நடித்த வெற்றி விழா படத்தின் கதையை The Bourne Identityயுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் 🙂

Riding alone for thousands of miles – இது வரைக்கும் சீனப் படம்னா அது Bruce Lee, Jackie, Stephen Chow வகையறா அடிதடி படங்கள் தான் தெரியும். விகடன் உலக சினிமா அறிமுகத்தில் சில கதையம்சம் கூடியுள்ள படங்களுக்கான அறிமுகத்தைப் பார்த்ததுண்டு. இந்தப் படத்தின் இயக்குனரின் இன்னொரு படம் தேடிக் கிடைக்காமல், கிடைத்த இந்தப் படத்தை எடுத்து வந்தேன்.

ஒவ்வொருவரும் தங்கள் மனதில் உள்ள அன்பை மறைக்காமல் காட்டப் பழக வேண்டும் என்பது தான் படத்தின் அடிப்படைக் கரு. மனதை நெகிழ வைக்கும் படங்களுக்கு வரி வரியாய் கதை சொல்ல மனது வருவதில்லை. படத்தில் உள்ள நெகிழ்ச்சி என் எழுத்தில் வராமல் பல்லிளிப்பதும் ஒரு காரணம். இந்தப்படத்தின் கதையைச் சொல்லலாம் என்று முயன்று இரண்டு பத்தி எழுதினேன். பிறகு, வேண்டாம் என்று அழித்து விட்டேன்.

Ratatouille – பல குழந்தைகள் படத்தைப் பார்த்திருந்தாலும், உண்மையிலேயே இந்தப் படத்தை மட்டும் தான் முதன் முதலில் ஒரு குழந்தை உள்ளிட்ட குடும்பத்துடன் திரையரங்கில் அமர்ந்து பார்த்தேன். திரையரங்கில் குழந்தைகளைக் காட்டிலும் பெரியவர்கள் தான் கூட!! பெரிய ஆட்களுக்காக எடுக்கப்படும் படங்கள் எல்லாம் மகா bore அடிக்கையில் குழந்தைகளுக்காக எடுக்கப்படும் படங்களில் அனைவருக்குமான குறைந்தபட்ச பொழுதுபோக்காவது உத்திரவாதமாக இருப்பது நிறைவு தான். வெளிநாடுகளில் தணிக்கைச் சான்றிதழ் பரிந்துரைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதால் பெரியவர்களுக்கான படங்களுக்குச் சிறுவர்களை அனுமதிப்பதில்லை. ஆக, சிறுவர்கள், அவர்களுடன் சேர்த்து பெரியவர்களைத் திரையரங்குக்கு வர வைக்க குழந்தைகளுக்கான படங்கள் எடுப்பதைத் தவிர வெளிநாட்டவருக்கு வேறு வழியே இல்லை. நம்ம ஊர் போல் குரங்கு, பூனை, நாய், குதிரை, பாம்பு ஆகியவற்றை இங்கு நடிக்க வைக்க முடியாது ஆகையால் நம்ம இராம.நாராயணன் zooவில் இல்லாத விலங்குகளையும் animation படங்களாகக் கொண்டு வந்து விடுகிறார்கள். நாம் கனவிலும் யோசித்துப் பார்க்காத எலி, எலியின் அண்ணன், அப்பா , கூட்டாளிகளின் உணர்வுகள், கதைகளை இந்த வகையில் பார்க்க முடிவது மகிழ்ச்சி. விலங்குகள் உள்ள animation படம் என்றால் Finding Nemo தான் எனக்கு Golden standard போல். அந்த அளவுக்கு வேறு எந்தப் படமும் இன்னும் என்னைக் கவரவில்லை.

நினைத்தைச் செய்வதற்கு அடிப்படை, பிறப்பு, சிறப்புத் தகுதிகள் என்று எதுவும் தேவை இல்லை என்பது தான் படத்தின் அடிப்படைக் கரு. ஒரு எலிக்கு சிறந்த சமையல்காரர் ஆகும் ஆசை வருகிறது. அதை எப்படிச் சாதிக்கிறது என்பது தான் கதை. 2 மணி நேரம் கவலை மறந்து தாராளமாகப் பார்க்கலாம். Pixar animation studios தயாரிப்பு என்பதால், தனியாக animationஐப் பாராட்டத் தேவை இல்லை தானே?

The Prince and Me – இது 4 மாதம் முன்னர் பார்த்த படம். குறைந்த தயாரிப்புச் செலவு, எளிமையான கதை, இயல்பான நகைச்சுவை என்று நிறைவான படம். சுவீடன் நாட்டு இளவரசன் ஒருவன், தன் அடையாளத்தைக் காட்டிக் கொள்ளாமல் அமெரிக்காவுக்குப் படிக்க வருகிறான். அங்கு எளிய குடும்பத்துப் பெண் ஒருத்தியுடன் காதல் வயப்படுகிறான். சுவீடனுக்கு வந்து முறைப்படி மணக்கும் முன் அரச வாழ்க்கைக்குப் பழக்கப்படுகிறாள் இந்தப் பெண். ஆனால், அரச வாழ்க்கைப் பகட்டும் போலித்தன்மையும் உறுத்த, காதலை உதறிவிட்டு படிப்பைத் தொடர அமெரிக்கா திரும்புகிறாள். “படிப்பை முடிக்கும் வரை காத்திருக்கிறேன்” என்று நாயகனும் அமெரிக்கா வந்து வசனம் பேசுவதுடன் படம் முடிகிறது. இந்தப் படத்துக்கு ஒரு வீணாய்ப் போன இரண்டாம் பாகமும் உண்டு.


Comments

3 responses to “The Bourne, Riding alone for thousands of miles, Ratatouille, The Prince and Me”

  1. Bourne திரைப்படம் மூன்றும் பார்த்தேன்… கதைப்புத்தகம் என் மாமா பையனிடம் உள்ளது. தற்போது வாசிக்கும நம்ம சிட்னி ஷெல்டனின் புத்தகம் வாசித்து முடிந்ததும் அந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டியதுதான். ஆனாலும் மச்சானின் கருத்துப்படி புத்தகம் கடும்் போரிங்காம்!

  2. […] இன்னும் விரிவான விமர்சனத்துக்கு The Bourne, Riding alone for thousands of miles, Ratatouille, The Prince and Me […]

  3. சாத்தான் Avatar
    சாத்தான்

    ரொம்ப லேட்டு, இருந்தாலும் சொல்றேன். போர்ன் சுப்ரமசி, போர்ன் அல்டிமேட்டம் நாவல்களை படிக்க ஆரம்பிச்சிடாதீங்க. மரண கடி. சுப்ரமசி மகா கடி. அல்டிமேட்டம் படிச்சதில்ல, ஆனா மதிப்புரைகள்ல கிழிச்சிருக்காங்க. படங்கள் அட்டகாசம். போர்ன் 4 படம் 2010ல வருது. ஆனா கிரீன்கிராஸ் இயக்குநர் இல்ல. கெட்ட செய்தி.