தமிழ்நாட்டில் கவிதை ரசனை

இப்பொழுது எல்லாம் நான் கவிதை எழுதுவேன் என்று சொல்லிக்கொள்ளவே தயக்கமாக இருக்கிறது. ஓ நீயுமா என்று அலட்சியப் பார்வை பார்ப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.

இந்த நிலைக்கு நான்கு பேர் தான் முக்கியக் காரணம் என நினைக்கிறேன்.

1. மலிவு விலை வார இதழ்களில் வரும் கவிதைகள்
2. யாருமே வாங்காத இலக்கிய இதழ்களில் வரும் யாருக்குமே புரியாத கவிதைகள்
3. FM வானொலிகளில் ஏதாவது நகைச்சுவை, பாடல் அல்லது கவிதையாவது சொல்லத்தூண்டும் தொகுப்பாளர்கள்
4. T. ராஜேந்தர், விவேக் தேவர், பார்த்திபன், அப்துல் கலாம் (இவர் எழுதுவன பாடல்கள் தான், கவிதைகள் அல்ல) போல் எசகு பிசகாக எதையாவது எழுதி விட்டு அதை கவிதை என்று விளம்பரப்படுத்துபவர்கள்.

மலிவு விலை இதழ்கள் என்பதில் வாரமலர், குடும்பமலர், ராணி, பாக்யா வகையறாக்கள் எல்லாம் அடக்கம். குமுதம், விகடனில் தப்பித்தவறி அவ்வப்பொழுது நல்ல கவிதைகள் வந்து விடுகின்றன. அதனால் அவற்றை மன்னித்து விடுகிறேன். மேற்குறிப்பிட்டுள்ள வகையறா இதழ்களில் வருவன பெரும்பாலும் புலம்பல் அல்லது அறிவுரை கவிதைகள் தான். ஓ மானிடா என்று ஆரம்பித்து ஒரு பக்கத்துக்கு அறிவரை கூறி அறுக்கும் சமுக சீர்திருத்த பிதற்றல் காரர்களின் அறிவுரை கவிதைகள் (!) வாரமலரில் ரொம்ப பிரசித்தம். அல்லது, என் அன்பே என்று தொடங்கி புலம்புகிறார்கள். ஒரே வரியில் எழுதாமல் வரிக்கு ஒரு வார்த்தையாக பிய்த்து பிய்த்து எழுதினாலே கவிதை என்று கூறிக்கொள்ளுமளவுக்கு தான் சராசரி தமிழனின் கவிதை இலக்கியத்தின் ரசனை இருக்கிறது என்று நினைக்கிறேன். அது மாதிரி கவியரங்கத்தில் ஒவ்வொரு வரியையும் இரண்டு முறை மூன்று முறை படிக்கும் இம்சையான வழக்கத்தை எந்த கவி ராசன் தொடங்கி வைத்தார் எனத்தெரியவில்லை. ஒரு வேளை ஒலி பெருக்கி கோளாறினால் யாராவது இந்த வழக்கத்தை தொடங்கி வைத்து இருக்கலாம். இந்த மாதிரி இதழ்கள், கவியரங்கங்கள் மூலம் கவிதைக்கு அறிமுகமாவதனால் இப்படித்தான் கவிதை என்று புரிந்து கொண்டு அதே மாதிரி எழுதத் தொடங்கி விடுகிறார்கள். நல்ல தேடல் இருப்பவர்கள் மட்டும் நல்ல கவிதைகளை தேடிப் பிடித்துப் படித்து தங்களை செம்மைப்படுத்திக் கொள்கிறார்கள்.

எனக்கு பிடிக்காத இன்னொரு போக்கு தீபாவளி, பொங்கலுக்கு தவறாமல் அருளுரை வழங்கும் சாமியார்கள் போல் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ready made கவிதைகள் எழுதும் பிரபலக் கவிஞர்கள் பற்றியது. சுனாமி நிகழ்வுக்கு ஒவ்வொரு கவிஞராக கவிதாஞ்சலி எழுதிய போது எனக்கு கடுப்பாக வந்தது. உண்மையான சோகம் உடையவன் எவனும் அந்த நேரத்தில் கவிதை எழுதவும் மாட்டான். அதை பத்திரிக்கைக்கு அனுப்பி பிரசுரிக்கச் சொல்லவும் மாட்டான். அந்தக் கவிஞர்களின் குழந்தைகளும் சுனாமியில் செத்திருந்திருந்தால் இப்படித்தான் கவிதை எழுதிக் கொண்டிருந்திருப்பார்களா எனத் தெரியவில்லை.

ஆன்மத்திருப்திக்காக செய்யும் எந்த ஒரு கலை வடிவத்திலும் மட்டும் தான் உண்மையும் நேர்மையும் இருப்பதாக கருதுகிறேன். நடன அரங்கேற்றமாகட்டும் பாட்டுக்கச்சேரியாகட்டும் கைத்தட்டலை எதிர்பார்த்து அதை தொடங்கும்போதே அதில் உள்ள ஆன்ம அர்ப்பணிப்பு செத்துவிடுவதாகத்தான் நினைக்கிறேன். ஒரு பாடகியின் மிகச்சிறந்த பாடல் அவள் குழந்தைக்கு பாடும் தாலாட்டாகத் தான் இருக்க முடியும். ஒரு நர்த்தகியின் மிகச்சிறந்த நடனம் அவள் காதலனுக்காக மட்டும் ஆடிக்காட்டுவதாகவோ இறைவன் சந்நிதியில் ஆடுவதாகத்தான் இருக்க முடியும். நல்ல கவிதையும் அப்படித்தான். இப்படி எழுதினால் பிரசுரிப்பார்கள், இப்படி எழுதினால் பாராட்டுவார்கள் என்று நினைக்கும் போதே கவிதையின் நேர்மை செத்து விடுகிறது. கலைஞனுக்கு ஊக்க மொழிகள் தேவை தான்..ஆனால், அதை மட்டும் கருத்தில் கொண்டு அவன் வெளியிடும் கலைப்படைப்பில் தரம், உண்மை இருக்காது என்று நம்புகிறேன். யாராவது எழுதச்சொல்லி கேட்டு சிறுகதை, கட்டுரை எழுதலாம். ஆனால், கவிதை எழுத முடியாது; கூடாது. ஏனெனில் கவிதையின் இலக்கணம் அதன் வடிவத்தில் இல்லை. அதன் உயிரில், உணர்வில் இருக்கிறது.

பாடல் வேறு, செய்யுள் வேறு, கவிதை வேறு என்ற தெளிவு வரும்போது தான் நல்ல கவிதைகள் வெளி வரும். இனங்கண்டு ரசிக்கப்படும். நல்ல பாடலில், செய்யுளில் நல்ல கவிதையும் ஒளிந்திருக்கலாம். ஆனால், அவற்றின் வடிவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நல்ல கவிதை பிறப்பதில்லை. எதுகை, மோனையோடு நான்கு வரி உளறினாலே அதை கவிதை என்று வாங்குகிற சம்பளத்திற்கு வஞ்சகமில்லாமல் பாராட்டும் FM வானொலி தொகுப்பாளர்கள் இன்னொரு வகை கொடுமைக்காரர்கள். இதைக் கேட்டு புல்லரித்துப் போய் பக்கத்துக் கடை தையல்காரர்கள், மளிகைக் கடை காரர்கள் எல்லாரும் நானும் கவிதை சொல்கிறேன் என்று கிளம்பிவிடுகிறார்கள். பெரும்பாலும் இக்கவிதைகள் என் பேரு காசி, எனக்கில்லை ராசி என்பது போன்ற T.ராஜேந்தர் பாணியில் தான் இருக்கின்றன. தொகுப்பாளர்களும் நேரம் போகாவிட்டால் நகைச்சுவை துணுக்கு, கடி ஜோக், ஒரு பாட்டு அல்லது ஒரு கவிதையாவது சொல்லுங்களேன் என்கிற rangeக்கு கவிதை எழுதுவதைக் கொண்டு வந்து விட்டார்கள்.

ஒருவன் எவ்வளவு பெரிய கவிஞன் ஆனாலும் பார்ப்பதை பற்றியெல்லாம் கவிதை எழுதி விட முடியாது. அப்படி எழுதினால் அது வார்த்தை விளையாட்டு தானே தவிர கவிதையாகாது. பா. விஜய் ஒரே நாளில் 12 கவிதை தொகுப்புகள் வெளியிட்ட பொழுது ஆடிப்போய் விட்டேன். அவர் கவிதை எழுதுகிறாரா இல்லை அச்சு நிறுவனம் நடத்துகிறாரா தெரியவில்லை.

இது ஒரு புறம் என்றால், புரியாத கவிதைகள் எழுதும் நவீன கவிஞர்கள் இன்னொரு புறம். பத்திரிக்கை ஆசிரியரையும் சேர்த்து தமிழ் நாட்டில் நான்கு பேருக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய தமிழ் சொற்களை கொண்டு இவர்கள் எழுதும் கவிதைகளை என்னவென்று சொல்வது? ஒரு வேளை, பத்திரிக்கை ஆசிரியருக்கே புரியாவிட்டாலும், எழுதித் தந்தவர் பெரிய ஆள் என்பதால் பிரசுரித்து விடுகிறாரா எனத்தெரியவில்லை. ஆனால் எந்த சமரசமும் செய்யாமல் எனக்குப் புரிந்தால் போதும் என்ற ரீதியில் எழுதும் அக்கவிஞர்களை நிச்சயம் பாராட்டுகிறேன். இல்லை, இந்தப் பத்திரிக்கைகளில் கவிதை பிரசுரமாக இப்படி மேதாவித்தனமாக எழுதுவது தான் தர நிர்ணயமா? சில கவிதைகளை படிக்கும் போது நிச்சயமாக கடைசி வரை எதைப்பற்றி தான் எழுதி இருக்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரு வேளை, என் இலக்கிய அறியாமை தான் இதற்கு காரணம் என்றால் தயவு செய்து அக்கவிஞர்களின் பேனா என்னை மன்னிக்குமாக..இது போன்ற எனக்கு மட்டுமே புரியும் கவிதைகளை நானும் எழுதி நண்பர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது உண்டு என்றாலும், அவை என் ஆன்ம திருப்திக்காக எழுதியவை. யாருக்கும் புரிந்து என்னை பாராட்ட வேண்டும் என்று எழுதியதில்லை. இந்தக் கவிஞர்களும் அப்படி ஆன்ம திருப்திக்காக எழுதியிருந்தால் பத்திரிக்கைகளுக்கு அனுப்பாமலாவது இருக்கட்டும்.

குழந்தையின் சிரிப்பை போல் எந்த விளக்கமும் விளம்பரமும் தேவைப்படாமல் நேர்மையாக மனதை தொடுவது தான் நல்ல கவிதை என நினைக்கிறேன். நான் எழுதியவற்றில் நல்ல கவிதைகள் என்று கருதுவன எல்லாம் தானாக வந்து விழுந்தவை தான். யோசித்து, வார்த்தை திருகி எழுதப்படவை அல்ல. அதை எழுதி முடிக்கா விட்டால் வேறு ஒன்றும் செய்ய இயலாது என்ற தவிப்பில் தான் எழுதியிருக்கிறேன்.

போன வாரம் பெர்லின் போயிருந்த போது ஒரு ரயில் நிலையத்தில் 20, 25 குழந்தைகள் தரையில் கால் நீட்டி உட்கார்ந்து சுவாரசியமாக ice cream சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். உயிருள்ள பொம்மைகள் போல் இருந்த அவர்களின் அழகைப் பார்க்கவே கண்கொள்ளாமல் இருந்தது. அந்தக் காட்சியை புகைப்படம் எடுக்க நினைத்தேன். பின்னர், நான் அப்படி செய்வதால் அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளக் கூடும் என்பதால் ஒளிந்திருந்து அவர்களை பார்த்து விட்டு வந்தேன். அதுவும் இல்லாமல், அவ்வளவு அற்புதமான காட்சியை அனுபவிக்காமல் புகைப்படம் எடுத்தும் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. இது போன்று அன்றாட வாழ்வில் எத்தனையோ விடயங்கள் கவி எழுத உந்துகின்றன. ஆனால், அப்படியெல்லாம் இல்லாமல் stereotypeஆக வெகுஜன இதழ்களில் வரும் கவிதைகள் தமிழ் மக்களின் கவி ரசனையை மழுங்கடிக்கிறது என்று தான் நினைக்கிறேன்.

எல்லாவற்றையும் மொழிக்குள் அடக்கி விட முடியம் என்று தோன்றவில்லை. புகைப்படமாகட்டும், திரைப்படமாகட்டும், இசையாகட்டும் எதிலும் கூட கவித்துவத்தை உணர்த்த முடியும் என்று நினைக்கிறேன். கவித்துவம் என்ற உணர்ச்சி மேலிடும் போது கவிதையின் வடிவம் அவசியம் இல்லாமல் போகிறது . கண்ணீரும் மௌனமும் புன்னகையும் உணர்த்தாத கவித்துவத் தருணங்களை எந்த கவிதை உணர்த்திவிட முடியும்? ஆக, என்னைப் பொறுத்த வரை கவிதையின் இலக்கணம் அதன் உயிரில், உணர்ச்சியில் இருக்கிறது. அப்படி இல்லாதவைகளை கவிதை என்று தப்பாக அடையாளப்படுத்தாதீர்கள்; அங்கீகரிக்காதீர்கள்.

காதலியின் முதல் முத்தம் போல், குழுந்தை அம்மா என்று அழைக்கும் முதல் முறை போல் எத்தனேயோ கவித்துவமான தருணங்கள் வாழ்வில் வருகின்றன. அவற்றை எல்லாம் கவிதை எழுதி ஆவணப்படுத்தாமல் அந்தத் தருணத்தை அப்படியே ரசிப்பது உசிதம் என்ற மனநிலை சில மாதங்களாக இருக்கிறது. அதனால் நான் கவிதை எழுதுவதே குறைந்து வருகிறது.

எந்த ஒரு கவிஞனும் அவனுடைய மிகச்சிறந்த கவிதையை எழுதிச்சென்றதாய் தோன்றவில்லை. நல்ல கவிதை இது வரை எழுதப்பட்டு காட்சிப்படுத்தப்பட வில்லை என்று தான் கருதுகிறேன். எத்தனையோ நல்ல கவிதைகள் கவிஞனுக்குள்ளேயே வாசிக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டு இருக்கலாம்.

சரி, இவ்வளவு சொல்கிறேனே..நல்ல கவிதை என்று நான் நினைப்பதில் இரண்டை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்..பாரதி எழுதிய காக்கைச் சிறகினிலே பாட்டும், தேடிச்சோறு நிதம் தின்று பாட்டும் எனக்குப் பிடித்தவை. உங்களுக்கு பிடித்த கவிதைகளையும் எனக்கு சுட்டிக்காட்டுங்கள்.

ரவி


Comments

31 responses to “தமிழ்நாட்டில் கவிதை ரசனை”

  1. Anonymous Avatar
    Anonymous

    நான் போடுவது பேட்டா
    உனக்கு ஒரு டாட்டா
    நீ வாய மூடிகிட்டு போடா

    எப்படி கவிதை.

  2. கவிதை விசயம் எனக்கு மட்டும்தான் புரியவில்லை என்று நினைத்து இருந்தேன்.

  3. Anonymous Avatar
    Anonymous

    உங்க கட்டுரைல பல விதயங்களை ஒத்துக்கணும். ஆனா, சாதத்துக்கு என்னிக்கும் தொட்டுக்க மாவடுங்குற மாதிரி பாரதி எழுதிய காக்கைச் சிறகினிலே பாட்டும், தேடிச்சோறு நிதம் தின்று பாட்டும் விட்டா வேறொண்ணும் கவிதை இல்லீங்கிற மாதிரி எழுதிருக்கீங்க.

    என்னிக்குத்தான் நீங்க எல்லாருமே எடுத்ததுக்கெல்லாம் பாரதியோட தலைப்பாகைலயும் மீசைலயும் தொங்குறத நிறுத்தப்போறீங்க?
    🙁

  4. ///
    ஒரு பாடகியின் மிகச்சிறந்த பாடல் அவள் குழந்தைக்கு பாடும் தாலாட்டாகத் தான் இருக்க முடியும். ஒரு நர்த்தகியின் மிகச்சிறந்த நடனம் அவள் காதலனுக்காக மட்டும் ஆடிக்காட்டுவதாகவோ இறைவன் சந்நிதியில் ஆடுவதாகத்தான் இருக்க முடியும்.

    குழந்தையின் சிரிப்பை போல் எந்த விளக்கமும் விளம்பரமும் தேவைப்படாமல் நேர்மையாக மனதை தொடுவது தான் நல்ல கவிதை என நினைக்கிறேன்.

    அற்புதமான காட்சியை அனுபவிக்காமல் புகைப்படம் எடுத்தும் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

    கண்ணீரும் மௌனமும் புன்னகையும் உணர்த்தாத கவித்துவத் தருணங்களை எந்த கவிதை உணர்த்திவிட முடியும்?
    ////

    பதிவைப் படிக்கும்போதே ஒத்த சிந்தனையை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது. 100% ஒத்துப்போகிறேன், கடைசி பாரதி பத்தியைத் தவிர. இவ்வளவையும் சொல்லிவிட்டு எனக்குப் பிடித்த கவிதை என்று ஒன்றை இனங்காட்டுவதே சரியில்லை என்று நினைக்கிறேன்.

    சொல்ல விட்டுப்போனதாக நான் நினைப்பது..

    ஒவ்வொருவராலும் ஒரே ஒரு *முழுமையான காதல் கவிதை, ஒரு நட்புக் கவிதை, ஒரு தாய்மைக் கவிதை… களையே உள்ளத்திலிருந்து எழுதமுடியும். அதன்பின்னோ முன்னோ அவர்கள் எழுதியிருப்பதெல்லாம் எழுதவேண்டும் என்ற எண்ணத்திற்காக எழுதிய பாசாங்குகள் சுமந்ததாகவே இருக்கமுடியும். அந்த முழுமையான கவிதை எது என்பதையும் அந்தக் கவிஞன் மட்டுமே அறியமுடியும்.

    மற்றபடி நல்ல பதிவு.

  5. நந்தன் | Nandhan Avatar
    நந்தன் | Nandhan

    இதை பாருங்கள். ‘அடிக்க வராமல் இருந்தால் சரி! 🙂

  6. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    anonymous 1-தாங்க முடியலை சாமி 🙂

    anand-எல்லாருக்கும் அப்படித்தாங்க. யாரும் காட்டிக் கொள்வதில்லை என நினைக்கிறேன்.

    anonymous 2-எங்கும் பாரதி எதிலும் பாரதி என்பதனால் வந்த உங்கள் அலுப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதே சமயம் பாரதி போன்று நேர்மையாக எழுதுகிறவர்கள் குறைவு என நினைக்கிறேன். பாரதியின் பாடல்களிலும் வசனங்களும் கவித்துவம் குறைவான அம்சங்களும் உண்டு தான். ஒத்துக்கொள்கிறேன். அவர் எழுதியது தான் கவிதை மற்றதெல்லாம் சும்மா என்றும் சொல்லவில்லை. ஒரு எடுத்துக்காட்டு தரும் போது அனைவருக்கம் பரிச்சயமானதை தர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அதைக் குறிப்பிட்டேன். நல்ல கவிஞர்கள் மோசமான கவிதைகள் எழுதுவதும் உண்டு. அடையாளமே இல்லாதவர்கள் அருமையான கவிதைகள் எழுதுவதும் உண்டு. அதனால், உங்களுக்கு தெரிந்த நல்ல கவிதைகள் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

    jsri-உங்கள் பாராட்டுக்கு நன்றி. கடைசி பத்தியில் எளிமையான எடுத்துக்காட்டு தருவது அவசியமாய் தோன்றியதால் தந்தேன். இல்லாவிட்டால் முழுப்பதிவும் abstractஆகப் போய்விடும். ஆம்,அவரவர் படைப்புகளில் எது masterpiece என்று அவரவர் நெஞ்சுக்கு தான் தெரியும். மற்றதெல்லாம் அதை அடைய எடுத்துக்கொண்ட முயற்சியும் இருப்பைக் காட்டும் முயற்சியும் தான். என் கட்டுரையில் விட்டுப் போயிருந்தாலும் அருமையான இந்தக் கருத்தை தெரிவித்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்

    mathan-உங்கள் பதிவை பார்த்து அடிப்பதற்கு ஒன்றுமில்லை. உங்கள் கவிதைகளுக்கான inspirationகள் நன்றாக இருக்கின்றன

  7. Vaa.Manikandan Avatar
    Vaa.Manikandan

    மிக நீண்ட காலத்திற்கு முன்பு நான் புலம்பினேன்.இபோது நீங்கள்.தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்.

  8. Anonymous Avatar
    Anonymous

    சரி சரி எங்கள் இளவல் மணிகட்டான் தொடர்ந்து புலம்பிக்கொண்டே இருக்கின்றார். அதனால், அவர்தான் முதலிலே புலம்பினார் என்று சொல்லிவிடுவோம்.

  9. முத்து(தமிழினி) Avatar
    முத்து(தமிழினி)

    “நிச்சயம் என் அபத்தாவால் இந்தப் பெயரை உச்சரிக்க முடியாது”

    i enjoyed this sentence of yours( you have commented for a ariticle in my blog)..its true…

  10. Anonymous Avatar
    Anonymous

    The confusion has actually started when you started claiming “Naanum kavithai eluthuveen”… as you said, ” the best kavithais of any are all never published or not written”….

    In that situation why do you want to express yourself out…? that you are a good poet….or for that case a poet…?

    You should actually say or better think “Enakkum kavithai varum…”

    Take care…. good blog though… keep it going…..

  11. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    மேலே உள்ள அடையாளம் காட்டாத பயனருக்கு மறுமொழி- நண்பரே, என் பதிவில் எந்தக் குழப்பமும் இல்லை. நான் எழுதுவது தான் சிறந்த கவிதை என்று நான் சொல்லிக் கொள்ளவே இல்லை. சிறந்த கவிதை பற்றிய புரிதலுக்கப் பிறகு, கவிதை எழுதும் frequency குறைந்திருக்கிறது என்றும் நல்ல கவித்துவத் தருணங்களுக்காக காத்திருக்கிறேன் என்றும் தான் சொல்லி இருக்கிறேன். மிகச்சிறந்த கவிதைகள் எழுதப்படாமல் போயிருக்காலம் தான்..அதற்காக எழுதப்பட்டிருப்பவை எல்லாம் மோசமான கவிதைகள் என்று பொருள் கிடையாது..

    மற்றபடி, நேர்மையாக உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி

  12. Anonymous Avatar
    Anonymous

    “ஒரு பாடகியின் மிகச்சிறந்த பாடல் அவள் குழந்தைக்கு பாடும் தாலாட்டாகத் தான் இருக்க முடியும். ஒரு நர்த்தகியின் மிகச்சிறந்த நடனம் அவள் காதலனுக்காக மட்டும் ஆடிக்காட்டுவதாகவோ இறைவன் சந்நிதியில் ஆடுவதாகத்தான் இருக்க முடியும். நல்ல கவிதையும் அப்படித்தான்… காதலியின் முதல் முத்தம் போல், குழுந்தை அம்மா என்று அழைக்கும் முதல் முறை போல் எத்தனேயோ கவித்துவமான தருணங்கள் வாழ்வில் வருகின்றன.”

    சார், நீங்கள் சொல்லும் சோதா கவிஞர்கள் எல்லோரும் குழந்தையின் சிரிப்பு, காதலியின் முத்தம், சிகரெட்டின் கடைசி இழுப்பு என்று cliché-க்களைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்களால் நன்றாக எழுத முடியவில்லை. நீங்களும் இதே சோ கால்டு கவித்துவப் பட்டியலிடம் இன்ஸ்பிரேஷனை எதிர்பார்த்துக்கொண்டிருந்தால் உங்கள் கவிதையும் இன்னொரு ஜெராக்ஸ் காப்பி மாதிரித்தான் இருக்கும். முதலில் இந்த கவித்துவ பஜனையை விடுங்கள். அது சரியான ஏமாற்று வேலை.

    “இதைக் கேட்டு புல்லரித்துப் போய் பக்கத்துக் கடை தையல்காரர்கள், மளிகைக் கடை காரர்கள் எல்லாரும் நானும் கவிதை சொல்கிறேன் என்று கிளம்பிவிடுகிறார்கள்.”

    இன வெறி, ஜாதி வெறி போல இதை வர்க்க வெறி என்று சொல்லலாம். கடைக்காரர்கள் கவிதை எழுதக் கூடாதா?

  13. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    கடைசி anonymousக்கு மறுமொழி-clicheக்கள் குறித்த உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்..ஆனால், எல்லாரும் கவிதை பாடி முடித்து விட்டார்கள் என்பதற்காகவே அத்தருணங்களில் கவித்துவம் இல்லை என்று சொல்வதற்கில்லை. கவிதை பற்றிய உணர்வே இல்லாதவனும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க எடுத்துக்காட்டு தரும் நோக்கில் தான் அவற்றை குறிப்பிட்டேன். புரியாமல் எழுதும் கவிஞர்களை விமர்சித்து விட்டு நானும் அந்த மாதிரி ஓர் எடுத்துக்காட்டை தர விரும்ப வில்லை.

    கடைக்காரர்கள் எல்லாம் கவிதை எழுதலாமா என்று நான் சொல்லவில்லை. மாறாக மலிவான விடயங்களை கவிதை என்று வெகு சன ஊடகங்கள் அங்கீகரித்து தொலைப்பதால், சாமானியர்களிடம் கவிதை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் போகிறது என்று தான் வருத்தப்பட்டேன். பல இலக்கியங்கள் படித்து தேர்ந்தவர்களை காட்டிலும் மிக எளிய பின் புலம் உடைய பலர் நல்ல கவி புனையும் திறன் உள்ளதை கண்டிருக்கிறேன்..படிப்பறிவில்லாத கிராமத்தவர் பாடும் நாட்டுப்புறப் பாடலிலும் கவித்துவம் நிறைந்து இருப்பதை கண்டிருக்கிறேன்.

    எனினும் உங்கள் கருத்துக்களை படித்த பின் தான், ஒவ்வொருவரும் ஒரு விடயத்தை எப்படி வெவ்வேறு விதமாக அணுகி புரிந்து கொள்கிறார்கள் என அறிய முடிந்தது. உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

  14. Anonymous Avatar
    Anonymous

    பாரதி நல்ல கவிஞர் என்பதில் ஐயமில்லை. ஆனால் பாரதி கவிதையில் தன் காலத்து வாழ்க்கையை, தன்னைச் சுற்றி ஏற்பட்டு வந்த மாற்றங்களை எழுதவில்லை. அன்றாட வாழ்க்கையை எழுதவில்லை. மின்சாரம், ரயில் முதலான நவீன வாழ்க்கைக் கூறுகளை எழுதவில்லை. கண்ணன், வெள்ளிப் பனிமலை என்று கசிந்துருகிக் கொண்டிருந்தார். முதலில் பாரதியை விட்டு வெளியே வெகுதூரம் வாருங்கள்.

    நல்ல கவிதை எழுத வாழ்த்துக்கள்!

    – அதே அனானிமஸ்

  15. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    அதே அனானிமசுக்கு மறுமொழி :)- என்னது பாரதி தன்னை சுற்றியுள்ள விடயங்களை எழுதவில்லையா..அப்ப அவர் எழுதிய நாட்டுப் பற்றுப் பாடல்கள், சாதி எதிர்ப்பு, பெண்ணுரிமை பாடல்கள் எல்லாம் என்னவாம்..அவற்றை கவிதைகள் என்று ஒப்புக் கொள்ள மனமில்லாதவர்களும் கூட அவற்றில் தொனிக்கும் சமூக அக்கறையை மறுக்க இயலாதே..இது தவிர இதழ்களிலும் எண்ணற்ற கட்டுரைகள் எழுதி உள்ளார்.

    அப்புறம் இன்னொரு கருத்து. பாரதி உண்மையிலேயே கண்ணனை பற்றி மட்டுமே பாடி இருந்தாலும் ஒன்றும் பிழை இல்லை. அவரவருக்கு எது நன்றாக வருகிறதோ அதை மட்டும் செய்தாலே போதுமானது. எனக்கும் சமூக அக்கறை உண்டு என்று அதை பற்றி எல்லாரும் கவிதை எழுதும் போது தான் கவித்துவம் தொலைந்து போகிறது.

  16. வாய்சொல்வீரன் Avatar
    வாய்சொல்வீரன்

    இந்தப் பதிவை படிங்க. இந்தப் பதிவிலிருந்து ஒரு வார்த்தை ‘பணம் தேவை இல்லை. மனம் தான் தேவை’. நம்ம நாட்டுக்கு இப்போ ரொம்ப தேவையான விஷயத்தை எழுதியிருக்கார்.

    http://sivapuraanam.blogspot.com/2005/11/blog-post_17.html

  17. இரவி,

    (நான் இராஜா, உன்னுடைய நண்பன்)

    “தமிழ்நாட்டில் கவிதை ரசனை” என்ற கட்டுரைப் படித்தேன்.தாமதமான மறுமொழிக்கு காரணம் இந்த வலைதளத்தை அறிந்துகொண்டது ஒரிரு நாட்களுக்கு முன்புதான்.கட்டுரையின் முதல் வரியே, கவிதை ரசனையைப் பற்றிய விமர்சனமா இல்லை, இங்கு எழுதப்படுவது எதுவும் கவிதை இல்லை,நான் எழுதுவது மட்டுமே கவிதை என்று கட்டுரையாளர் நினைக்கின்றாரோ என எண்ண்த்தோன்றுகின்றது.”ஒரே வரியில் எழுதாமல்…………சராசரி தமிழனின் கவிதை இலக்கியத்தின் ரசனை இருக்கிறது என்று நினைக்கிறேன்” என்ற வரிகளுக்கும்,பெண்களை கற்பு என்ற தளத்துக்குள் முடக்கி வைப்பதற்கும் பெரிதாக வேறுபாடு இல்லை.அதே சமயத்தில் “ஏனெனில் கவிதையின் இலக்கணம் அதன் வடிவத்தில் இல்லை. அதன் உயிரில், உணர்வில் இருக்கிறது.” என்று உண்மையைக் கூறி கட்டுரையின் பிற்பகுதியில் முன்சொன்ன கருத்தோடு முரன்பட்டு நிற்கின்றாய்.ஏனெனில் இதை இந்த வடிவத்தில்தான் எழுதவேண்டும் என்பதும் ஒரு பிற்போக்குத்தனம்தான்.எல்லோருக்கும் புரியும்படி எழுதினால் போதுமானது.உணர்வுகளும்,உணர்ச்சிகளும் வரிகளுக்குள் ஒளிந்திருக்கும்போது அது தானாகவே கவித்தன்மை பெற்றுவிடும்.தன்னுடையகோபம்,ஏக்கம், உணர்ச்சிகள் என எல்லாவற்றையும் சகமனிதனுடன் ஒருவன் வாய்மொழியாகவோ அல்ல்து வேறு ஏதோனும் ஒரு வழியாகவே வெளிப்பத்துகின்றான்.அந்த கோபம்,வலி,கவித்துவமான் தருணங்கள் எல்லாம் அந்த வடிவத்தில் வெளிப்படும்போது அது கவிதையாக நிலை பெறுகின்றது.”நெஞ்சுப் பொறுக்குதிலையே” என்று பாரதி பாடும்போது, அது மக்களின் மீதான கோபம்தானே.அது மக்களை நேசித்த அந்த உள்ளம், உணர்வு ஒளிந்திருப்பதால்தானே காலம் கடந்து அவன் வாழ்கிறான்.கவலை வேண்டாம்.காலம் ஒரு நதி போல…சிலர் கவிதைப்பூக்களைத் தூவி செல்கின்றனர்.நதியின் நீர் சுழற்சியில் காகிதப்பூக்கள் காணாமல் போய்விடும்.வாசமுள்ள பூக்கள் மட்டுமே நதியின் நீரோட்டத்தக்கு ஈடு கொடுக்கும்.

  18. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    ராஜா, நீ என் வலைப்பதிவ படிக்க வந்ததுல மகிழ்ச்சி. உன் விமர்சனத்த ஏத்துக்கிறேன். மானே, தேனே-னு எகனை மொகனையா எழுதிட்டு அத கவிதைனு சொல்றவங்கள தான் சாடி இருந்தேன். இப்படியே போனா, இன்னும் பத்து வருஷம் கழிச்சு தூய தமிழ்ல பேசுறதயே கவிதைனு நினைச்சுக்குற போக்கு வரலாம். அது தான் என் கவலை..கட்டுரையில் தொனிக்கும் முரண், நான் இன்னும் நல்லா தெளிவா கட்டுரை எழுதிப்பழகமாங்கிறத தான் குறிக்குது

  19. மிதக்கும் வெளி Avatar
    மிதக்கும் வெளி

    உங்கள் பதிவில் ஒருசில உண்மைகள் இல்லாமல் இல்லை. ஆனால் வாரமலர் பாணி கவிதைகளுக்கு வரவேற்பு குறைந்துவருகிறது என்றுதான் நினைக்கிறேன். அப்புறம் அது என்ன விவேக் தேவர்?
    சுனாமிக்கவிதைகள் பற்றி நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. அது சுனாமியை விடக் கொடுமையானது. நவீன கவிதைகள் புரியவில்லை என்ற புலம்பலை விடுத்து அதைப் புரிந்துகொள்ள முயற்சியுங்கள். புரிந்துகொள்வது எல்லோருக்குமான ஒற்றைப் புரிதல் அல்ல. பிரதி, அர்த்தம் ஆகியவை குறித்து தமிழ்ச்சூழலில் பேசப்பட்ட விஷயங்களைத் தவயுசெய்து படியுங்களேன்.

  20. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    மிதக்கும் வெளி,

    (ஆமா, வெளியே மிதப்பது தானே? அதைக் கட்டி வைக்க முடியுமா என்ன ? :))

    நவீன கவிதைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்ற உங்கள் ஆலோசனையை ஏற்கிறேன். ஏற்கனவே முயற்சி செய்து கொண்டும் இருக்கிறேன்.

  21. நவீன கவிதைகள், நவீன ஓவியங்கள் இவற்றை எல்லாம் எப்படி புரிந்துகொள்வது? ஏதாவது பட்டறையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டுமா? இல்லை இவையெல்லாம் எனக்காக இல்லை என்று ஒதுங்கிச் செல்வதா?

  22. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    நம்பி, நவீன ஓவியத்துக்கு பட்டறைகள் உண்டு. ஒரு வேளை அவற்றில் கலந்து கொண்ட பிறகு, அவற்றைப் பற்றிய புரிதல் அதிகமாகலாம். எனக்குத் தெரியல. ஆனால், எந்த ஒரு படைப்பும் மானுடத்துக்கான படைப்பாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ரசிப்பதற்கு கூட முறையான பயிற்சி தேவை என்பது பலரை அன்னியப்படுத்தலாம். சில புதுக்கவிதை பாசறைகளும் நடப்பதுண்டு. ஆனால், நவீன கவிதைகளை எப்படி புரிந்து கொள்வது என்பது இன்னும் புதிராகத் தான் உள்ளது. ஒரு வேளை திரும்பத் திரும்ப நிறைய படித்து, அது குறித்து உரையாட வேண்டுமோ என்னவோ? சிற்றிதழ்களை தொடர்ந்து படித்தாலும் நவீன கவிதைகள் புரியுமோ என்னவோ? எத்தனை நாளைக்குத் தான் அடுத்தவனை குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறதென்று நானும் ரொம்ப நாள் கழித்து கவிதை மாதிரி ஒன்று எழுதி பதிப்பித்திருக்கிறேன். பார்க்க –
    http://thamizhthendral.blogspot.com/2006/12/blog-post.html

  23. Anonymous Avatar
    Anonymous

    ரவி!
    நானும் இப்படியொரு (தொனிப்பு);கட்டுரை தமிழ்மணத்தில் இட்டுள்ளேன்; நான் உங்கள் ஆதங்கத்தை மிகப் புரிகிறேன்; பலர் புரிந்தாலும் “தூங்குவது போல் நடிப்பவனை “எழுப்பும் நிலையில் தான் உள்ளார்கள்.
    பக்கத்தில் நின்றால் அடித்தே!!விடுவார்கள்!!!உண்மை கசப்பது இயல்பு.
    என் பதிவுக்குப் பின்னூட்டிய 22 வயது இளைஞர்; தான் புதுக்கவிதை பார்க்கச் சென்று மரபுக்கவிதையில் வந்து நிற்பதாகக் குறிப்பிட்டார்.
    ஆனால் பலர் அப்படியே!! அதை அண்ணாந்து பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்???,
    தங்களுக்கு வந்த பின்னூட்டங்கள் வாயிலாக ; புரியாமல் பலர் தவிப்பது கண்டு!! நமக்கும் 4 நாலுபேர் துணையுண்டென்பது; மெய்யாகவே!! மகிழ்வாயிருக்கையா???ஏனெனில் இது எனக்குத்தான் புரியவில்லையோ!!என சந்தேகமாக இருந்தது.
    என் கட்டுரையையும் படிக்கவும்.உங்கள் அளவுக்கு நேர்த்தியில்லை;
    யோகன் பாரிஸ்
    http://johan-paris.blogspot.com/2006/12/blog-post_07.html

  24. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    யோகன், என் எல்லா இடுகைகளையும் படித்து கருத்து சொல்வதற்கு நன்றி. உங்கள் இடுகையையும் படித்த பிறகு எனக்கு நீங்கள் என் கவிதை பற்றி என்ன சொல்வீர்கள் என்று பயமாக இருக்கிறது. கொஞ்சம் படித்துப் பார்த்து கருத்து சொல்லுங்களேன்.

    http://thamizhthendral.blogspot.com/2006/12/blog-post.html

    உங்களுக்குப் புரியவில்லை என்றால் தயங்காமல் திட்டுங்கள். என்னை நானே மேம்படுத்திக் கொள்ள உதவும்

  25. வெற்றி Avatar
    வெற்றி

    ரவிசங்கர்,
    உங்கள் பதிவைப் படித்தேன். மற்றும்படி, எனக்கு இப்பதிவு பற்றிக் கருத்தெல்லாம் சொல்லும் அளவுக்கு கவி ஆய்வுத் திறன் இல்லை.

  26. சாத்வீகன் Avatar
    சாத்வீகன்

    அருமையான பதிவு ரவிசங்கர்

    மலிவு விலை கவிதைகள் மலிந்து விட்டன.. நாளிதழ்கள் தரும் பரிசு நூறு ரூபாய்க்கு உரைநடையை உடைத்து போடுபவர்கள் அதிகம் ஆகி விட்டனர்.

    குப்பை என்று நாம் முடிவெடுத்தது போல ஒதுக்கி தள்ளி மேற்செல்ல வேண்டியதுதான்… காலத்தை கடந்து நிற்பதே கவிதை..

    நல்ல கவிதையின் வாசிப்பு இன்று எங்கும் இல்லை..

    ஒப்பு நோக்க..

    அமானுஷ்யங்களின் அலறலில்…..
    புதுக்கவிதை புனைதல்
    மரபு கவிதைகள் எங்கே……

    அன்புடன்
    சாத்வீகன்.

  27. Anonymous Avatar
    Anonymous

    அருமையான பதிவு.

    ஒவ்வொருத்தரும் கவிதை என்று ஏதோ ஒன்றை எழுதுவது அவர்களின் விருப்பத்திற்க்கும், திருப்திக்கும்தான்.

    அதை பத்திரிகைகளில் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்காகத்தான் அதனை பத்திரிக்கைகளுக்கு அனுப்புகிறார்கள். அது கவிதை இல்லையென்றால் அதற்கு வேறு ஏதாவது பெயர் கொடுத்து இலக்கணம் கொடுக்கலாம்.

    இலக்கணத்தோடுதான் கவிதை இருக்க வேண்டுமென்றால், ரசனைக்கு பஞ்சமாகிப் போகும். பிறகு, 150 பக்க புத்தகங்களை எப்படி நிறப்புவது. எல்லாரும் ஏதாவது எழுதிட்டுப் போகட்டும். அதில் கவிதையுடைய அந்தஸ்துடையது மட்டுமே பாராட்டப்படுகிறது என்பது கண்டறிந்த உண்மை.

    நானும்தான் கவிதையென்ற பெயரில் ஏதோ எழுதுகிறேன். அதை நான் கவிதை என்றே அழைக்கிறேன். ஏனென்றால் வேறொருப் பெயர் எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் பார்த்திபன் தனது படைப்புக்குக் கிறுக்கல்கள் என்று பெயரிட்டார்.

    சுனாமிக்கு கவிதை எழுதுவது, அவர்களுக்கு ஏற்படும் வருத்தத்தை அதன் மூலம் வெளிப்படுத்த முயல்கிறார்கள். அதனை பிரசுரிப்பது மக்களை சென்றடைய வேண்டுமென்பதற்க்காக. ஒரு எய்ட்ஸ் விழிப்புண்ர்வு விளம்பரத்தை எடுத்துக் கொண்டால், அதில் வெறும் கருத்துக்களை மட்டுமே சொல்ல முடியும். கருத்துக்களோடு, சிறிது இசையும், உங்களால் அங்கிகரிக்கப்படாத அந்த கவிதையும் சேரும்போது இன்னும் கூடுதலாய் மக்களை சென்றடைகிறது.

    அதனால்தான் கவிதையை இப்போது மரபுக்கவிதை, புதுக்கவிதைன்னு இரண்டு வகைப் படுத்துறாங்க. இலக்கணம் பார்த்து அமைப்பது மரபுக்கவிதை. எதுவுமே பார்க்காம எழுதுறது புதுக்கவிதை. நீங்க கண்களால் கண்டு ரசிக்கிறத, மக்கள் அவர்களுக்கு தெரிஞ்ச முறைல ரசிக்கிறாங்க. அவ்வளவுதான். உங்களோட இந்தப் பதிவை பலபேர் படிக்கும்போது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கிற மாதிரி, அவங்க எழுதுனது பத்திரிக்கைகாரங்களுக்கு புடிச்சி பலபேர சொன்றடையுதுங்குறது அவர்களுக்கு மகிழ்ச்சி.

    உங்களுடைய இந்தப் பகுதி மரபுக் கவிதைக்குப் பொருத்தமா இருக்கும். ஆனால் புதுக் கவிதைக்கு…

    இதை கவிதைன்னு சொல்ல உங்களுக்கு விருப்பமில்லைன்னா வேற ஏதாவது பெயர் கொடுங்க! 🙂

    அப்பாடா! எழுதி முடிச்சிட்டேன்… நானும் எதிர்ப்பாட்டு பாடிட்டேன். அப்புறம் ரவி படு சோக்கா எழுதிக்கிறீங்க…

  28. Anonymous Avatar
    Anonymous

    //சுனாமிக்கு கவிதை எழுதுவது, அவர்களுக்கு ஏற்படும் வருத்தத்தை அதன் மூலம் வெளிப்படுத்த முயல்கிறார்கள். அதனை பிரசுரிப்பது மக்களை சென்றடைய வேண்டுமென்பதற்க்காக. ஒரு எய்ட்ஸ் விழிப்புண்ர்வு விளம்பரத்தை எடுத்துக் கொண்டால், அதில் வெறும் கருத்துக்களை மட்டுமே சொல்ல முடியும். கருத்துக்களோடு, சிறிது இசையும், உங்களால் அங்கிகரிக்கப்படாத அந்த கவிதையும் சேரும்போது இன்னும் கூடுதலாய் மக்களை சென்றடைகிறது.//

    நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் ஜி.

    //உங்களோட இந்தப் பதிவை பலபேர் படிக்கும்போது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கிற மாதிரி, அவங்க எழுதுனது பத்திரிக்கைகாரங்களுக்கு புடிச்சி பலபேர சொன்றடையுதுங்குறது அவர்களுக்கு மகிழ்ச்சி.//

    இதையும் தான்.

  29. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    அடையாளம் காட்டாத நண்பருக்கு –

    //நல்ல கவிதைகளுக்கான தேடல் உங்களிடம் இல்லை என்பதையே உங்கள் பதிவு சப்தமாகச் சொல்கிறது. //

    ஒத்துக்கொள்கிறேன். அண்மை காலங்களில் வெளிநாட்டு வாழ்க்கையில் கவிதை புத்தகங்கள் வாங்கிப் படிப்பது குறைந்து விட்டது. இந்த முறை ஊருக்கு வரும்போது வாங்கிப் படிக்க முயல்வேன். நல்ல கவிதை என்று நீங்கள் கருதும் படைப்புகளை எனக்கு பரிந்துரை செய்வீர்களா? வாங்கிப் படிக்க உதவும்.

    //திருமணமாகாத 10, 20 வயதுப் பாடகிகள் என்ன செய்வார்களோ ;)//

    என் வாதத்தில் உள்ள குறையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. யாரையும் திருப்திப்படுத்த விழையாமல் தன் திருப்திக்காக செய்யும் கலையில் மேன்மை இருக்கும் என்பது என் நம்பிக்கை. நான் குறை சொல்வதற்காக ஒருவர் மாற்றியும் எழுத வேண்டாம். இன்னொருவர் பிடிக்கிறது என்பதற்காக அதே மாதிரி எழுத வேண்டாம். விற்கும் பொருளை தயாரிப்பதற்கு பெயர் வணிகம். கவிதை அல்ல.

    //கவிதையில் வார்த்தை விளையாட்டு இருக்கக்கூடாது என்கிறீர்களா இல்லை வார்த்தை விளையாட்டில் கவிதை இருக்கக்கூடாது என்கிறீர்களா? இரண்டுமே வெவ்வேறு கோடிகள் என்கிறீர்களா?//

    வார்த்தை விளையாட்டில் கவிதையும் கவிதையில் வார்த்தை விளையாட்டும் இருக்கலாம். ஆனால், வெறும் வார்த்தை விளையாட்டை மட்டும் கவிதையாகப் பரப்பும் ஒரு சிலரைத் தான் கட்டுரையின் தொடக்கத்தில் சாடி உள்ளேன்.

    //மற்றவர்கள் சொந்தப் படைப்புகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்புவது அனுப்பாதது குறித்துக் கருத்துச் சொல்லத் தாங்கள் யாரென்று தான் தெரியவில்லை. பத்திரிகை ஆசிரியரோ?
    //

    யார் வேண்டுமானாலும் எழுதி அனுப்பலாம். எதை வேண்டுமானாலும் இதழாசிரியர் பதிப்பிக்கலாம். விரும்பாவிட்டால் நானும் புறக்கணிக்கலாம். ஆனால், வெகுசன வார இதழ்களில் வெளியாகும் சில குப்பைகள் கவிதை பற்றி ஒட்டு மொத்த மக்கள் பார்வையையும் பாதிக்கும்போது வெகுசன ஊடகங்களில் உள்ளோருக்கு கவிதை பற்றியமேம்பட்ட புரிதலும் பொறுப்பும் இருக்க வேண்டும் என்பதே என் நிலை. பக்கத்தை நிரப்புவதற்காக எதை வேண்டுமானாலும் பதிப்பிக்கலாமா?

    ////நல்ல கவிதை இது வரை எழுதப்பட்டு காட்சிப்படுத்தப்பட வில்லை என்று தான் கருதுகிறேன்.////

    //நீங்கள் வாசித்தது அவ்வளவு தான் என்று தான் கருதுகிறேன்.//

    மேலே நான் சொல்லியிருப்பது என் சிந்தனை மட்டும் இல்லைங்க..இது மாதிரியே சிறந்த இசை இன்னும் வாசிக்கப்படவில்லைனு ஒரு புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞன் சொல்லி இருக்கிறான். பெயர் மறந்து விட்டது. பன்னிரெண்டாம் ஆங்கிலப்பாடத்தில் எனக்குப் பிடித்த கவிதை இது. தேடிப்பிடித்துச் சொல்கிறேன்.

  30. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    ஜி – படு ஜோக்கா எழுதுறேங்கிறீங்களா இல்ல படு சோக்கா (நல்லா) எழுதுறேங்கிறீங்களா? எதுவா இருந்தாலும் சரி? என்ன இருந்தாலும் நீங்க நம்ம junior ஆச்சே..அண்ணாவுல என்ன படிச்சீங்க?

    எதை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எழுதிப் போடலாம். அதை எவர் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம். ஆனால், இதனால் இந்த கலை வடிவைப் பற்றிய மக்களிடையான புரிதல் தவறாக அமைந்து விடுகிறது என்பது தான் என் வருத்தம். கவிதை உலகில் மூழ்கி முத்தெடுத்தவருக்கு நல்ல கவிதை தெரியுமானால் அதை மக்களுக்கு இனங்காட்ட வேண்டியபொறுப்பு இருக்கிறது.

    தமிழ்மணத்துல ஒன்னும் நல்லாவே வர்றதில்லன்னு சில காலமா கொஞ்சம் அங்கலாய்ப்பு இருக்கு. அது மாதிரி கவிதை எல்லாம் ஒன்னும் சரி இல்லங்கிற ஒரு பார்வையும் மக்கள்ட்ட இருக்கு..சில பேர் பண்ற தப்பால ஒரு நல்ல கலை வடிவம் பிழையா புரிஞ்சுக்கப்படுதேங்கிறது தான் என் ஆதங்கம்.

    மத்தபடி காலத்தை கடந்து நிற்பது தான் கவிதை என்று நினைக்கிறேன். அது என்ன வடிவில் இருந்தாலும்.

  31. நன்று….

    உங்களின் ஒரு சில கருத்துகள் ஏற்றுகொல்லபடுகிறது…..

    என்னுடைய கவிதை ஒன்றை கான்பிக்கிறேன்….

    நுங்கு வண்டி

    மூணுகண்ணு நொங்கெடுத்து
    நொச்சிக்குச்சி அச்சுபோட்டு
    கருவேலங் கவகொடுத்து
    தள்ள தள்ள போகும்பாரு,
    எங்க ஊரு சீமையில
    திருவாரு தேருபோல
    பள்ளம் மேடு காடெல்லாம்
    உருண்டு போகும் நுங்கு வண்டி!!

    நடந்து பழகுன நாள்மொதலா
    நா ஓட்டின மொதவண்டி
    வண்டி ஓட்டி ஓட்டியே
    நட பழகினது நாந்தானே;
    வயக்காடு வரப்புவழி
    வல்லம் பாற, வால் பாற
    எல்லா ஊரும் சுத்திச்சுத்தி
    வண்டியில போய் வருவன்!

    வருசம் இருவது ஓடிருச்சு,
    கட்டிடங்க பெருத்திருச்சு
    வண்டி ஓட்டின தடத்துல
    காரும் பஸ்சும் வந்தாச்சு
    வயலு வரப்பு போயிருச்சு
    வாழத்தோப்பு வயக்காடு
    தென்னந்தோப்பு பனங்காடு
    போனஎடமும் தெரியல

    காருலவந்து எறங்கினாலும்
    காரோட தார தெரியல
    நொங்கு வண்டி போனதடம்
    நென்சுக்குள்ள பதிசுருச்சு;
    இனி யொரு தடவ அது போல
    நொங்குவ்ண்டி தள்ளிக்கிட்டு
    எங்கூரு வரப்பெல்லாம்
    ஓட்டணும்னு ஏங்குது!