தங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடவில்லை, அது நன்றாகத் தான் இருக்கிறது. எனவே, தடுப்பூசி என்பதே ஒரு மோசடி என்கிறார்களே?
…ஒரு ஊரில் 100 பேர் இருக்கிறார்கள். அந்த ஊருக்குத் தீவிரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே, ஆளுக்கு ஒரு கைத்துப்பாக்கி எடுத்துக் கொண்டு ஊரைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கிறார்கள். இதில் ஒருத்தர் தான் மட்டும் சூராதி சூரர் வீராதி வீரர் தனக்கு துப்பாக்கி தேவையில்லை, பாரம்பரிய வேல் கம்பு போதும் என்று நிற்கிறார். ஒரு ஆள் மட்டும் இப்படி நிற்கும் போது அவரைச் சரியாகக் கண்டு பிடித்து ஊடுருவுதல் சிரமம் என்று தீவிரவாதக் கும்பல் திரும்பிப் போகும். இந்த ஒருத்தரைப் பார்த்து, “அட, நம்ம ஊருக்கு ஏதும் ஆபத்து இல்லை போல், நாம் தான் வீணாக பீதியாகி துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம், இதனால் ஆயுதம் விற்கும் கும்பல் தான் பயன் அடைகிறது” என்று எண்ணி ஒவ்வொருத்தராக துப்பாக்கியைக் கீழே போடும் போது ஊடுருவுவது எளிது. என்ன தான் கையில் துப்பாக்கியைப் பிடித்து இருந்தாலும், ஒவ்வொருவரும் சிறப்பாகச் சண்டை போடக் கூடிய தேர்ந்த வீரர்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, துப்பாக்கி இருந்தும் சிலர் மாளக் கூடும். இப்போது அதே வேல் கம்பு ஆள் என்ன சொல்வான்? “பார்த்தியா, துப்பாக்கி இருந்தால் கூட சாவு நிச்சயம், துப்பாக்கி விற்பதற்காக நம்மை ஏமாற்றி விட்டார்கள்”.
பட உதவி: Tkarcher, CC-BY-SA 4.0
இப்போது, இந்த ஊரைக் காக்க என்ன செய்ய வேண்டும்?
* எல்லோரும் துப்பாகி ஏந்த வேண்டும்.
* பாரம்பரிய வேல் கம்பு ஆட்களைத் தனித்தீவுக்கு நாடு கடத்த வேண்டும். அவர்களை விட்டு வைத்தால் தானும் செத்து மற்றவர்களையும் சாகடிப்பார்கள்.
இன்னும் புரியவில்லை என்றால் Herd Immunity என்னும் மந்தை நோய் எதிர்ப்புத் திறன் பற்றிப் படித்துப் பாருங்கள்.