நிலவேம்பின் டெங்கு எதிர்ப்புத்திறன்

கேள்வி: தமிழக அரசின் கீழ் இயங்கும் கிங் மருந்தாய்வு நிறுவனமே நிலவேம்பின் வைரசு எதிர்ப்பு திறன் குறித்து ஆய்வு வெளியிட்டுள்ளதாமே?

பதில்: ஆம். நிலவேம்பின் வைரசு எதிர்ப்பு மற்றும் பிற மருத்துவ குணங்கள் குறித்து கிங் மருந்தாய்வு நிறுவனம் மட்டுமன்றி உலகின் பல நிறுவனங்களும் ஆய்வு செய்து முதல் நிலை ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளன. இத்தகைய ஆய்வுகள் பெரும்பாலும் சோதனைத் தட்டில் மட்டுமே நிகழ்ந்த முதல் நிலை ஆய்வுகள்.

நிலவேம்பு டெங்குவைக் குணப்படுத்தும் என்று இன்னும் இறுதியான முடிவுகள் இல்லை. நில வேம்பு அனைத்து வைரசு நோய்களின் முதல் இரு நாட்களில் காய்ச்சலைக் குறைக்கலாம் என்று பொத்தாம் பொதுவாக கூறுகிறார்கள். எந்த ஒரு மருந்தும் பரிந்துரைக்கப்படுவதற்கு முன் எலிகள், மனிதர்கள் மீதான சோதனைகள் என்று பல கட்டங்களைத் தாண்டி வர வேண்டும். யாரோ ஒருவருக்கும் மட்டும் குணமாவது மருந்து அன்று. அனைவருக்கும் அனைத்து வேளையிலும் எத்தகைய தீவிரத் தன்மையிலும் செயற்பட வேண்டும். இதில் குழந்தைகள், கர்ப்பிணிகள், வேறு நோய் உள்ளவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று உறுதிப்படுத்த வேண்டும்.

டெங்குவின் நோய் செயற்படு தன்மை காரணமாக, இது நோயைக் குணப்படுத்தாமல் போவதோடு இன்னும் தீவிரமாக்கவும் முடியும். எப்படி என்கிறீர்களா?

டெங்கு வைரசுகள் ஐந்து வகைப்படும். ஏதேனும் ஒரு வைரசு முதலில் உங்களைத் தாக்கும் போது வரும் டெங்குக்கு முதல் நிலை டெங்கு என்று பெயர். இது மற்ற வைரசு காய்ச்சல்கள் போலவே, நீங்கள் எதைக் குடித்தாலும் குடிக்காவிட்டாலும், பெரும்பாலும் தானாகவே குணமாகி விடும். இவ்வாறு குணமாகும் போது, நமது உடலின் இயற்கையான எதிர்ப்பு சக்தி இந்த வைரசுக்கு எதிரான எதிர்மங்களை (antibody) உற்பத்தி செய்து போராடும்.

ஆனால், முதல் நிலை டெங்கு தாக்கிய ஒருவரை இன்னொரு வகை டெங்கு வைரசு தாக்கினால், முதலில் நமது உடல் உருவாக்கிய எதிர்மமே, இரண்டாம் வகை வைரசின் தாக்குதலுக்கும் பெருக்கத்துக்கும் கூடுதல் வசதி செய்து தருகிறது. இந்த இரண்டாம் நிலை டெங்கு தாக்குதல் தான் மிகத் தீவிரமான டெங்கு அதிர்ச்சி நிலைக்கும் உயிர் ஆபத்துக்கும் இட்டுச் செல்லக்கூடியது. ஒரு வேளை நில வேம்பு பொத்தாம் பொதுவாகவோ குறிப்பிட்ட ஒரு வைரசு வகைக்கு எதிராக மட்டுமோ எதிர்க்கும் திறனுடையது என்பது நிறுவபட்டாலும் கூட, அதன் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டும் செயற்பாடானது, சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற கதையாக முடியலாம்.

பிறகு ஏன் அரசு நிலவேம்பு குடிக்கச் சொல்கிறது?

இது போன்று கொள்ளை நோய்கள் வரும் போது மக்கள் பெரும் பீதி நிலைக்கு ஆளாவார்கள். இப்போதே ஒரு நாளைக்கு 200க்கு மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருந்தே இல்லை என்ற பீதியில் அனைத்து மக்களும் மருத்துவமனைகளில் குவிந்தால் நிலை கட்டுக்கு அடங்காமல் போகும். அவர்களின் பீதியைக் குறைக்க ஏதேனும் ஆறுதல் மருந்து அளிக்க வேண்டிய தேவை உள்ளது. அந்த ஆறுதல் மருந்து தான் நிலவேம்பு. ஆறுதல் மருந்து தரும் அரசு காய்ச்சல் வந்தால் மருத்துவமனைக்கு வாருங்கள் என்றும் மறக்காமல் சொல்கிறது. ஆனால், ஏமாற்று மருத்துவ மோசடிக் கும்பல் அதனை மறைத்து தங்களிடம் மருந்து இருப்பதாக அழைக்கிறது. மக்கள் நோய் முற்றினாலும் வீட்டிலேயே கசாயம் குடித்துச் சாகிறார்கள். எனவே தான் நிலவேம்பு குறித்த உண்மையை எடுத்துரைக்க வேண்டியுள்ளது.

காண்க:
* நில வேம்பு ஆய்வுக் கட்டுரை குறித்த திறனாய்வு
* முகநூல் உரையாடல்


Comments

One response to “நிலவேம்பின் டெங்கு எதிர்ப்புத்திறன்”

  1. விழிப்புணர்புப் பதிவு நன்றி