தமிழ்நாட்டுத் தமிழ் x இலங்கைத் தமிழ்

இலங்கைப் பேச்சுத் தமிழை, தமிழ்த் திரைப்படங்கள், இலங்கை வானொலி மூலம் சரியும் பிழையுமாக அறிந்திருந்தாலும், இணையத்தில் தமிழத் தளங்களைப் படிக்கத் தொடங்கிய பிறகு தான் இலங்கையின் எழுத்துத் தமிழ் வழக்குக்கும் தமிழ்நாட்டு வழக்குக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொண்டேன். இலங்கையின் வேறுபட்ட எழுத்து வழக்கு அவர்களின் வேறுபட்ட பலுக்கலின் விளைவே என்றாலும், இலங்கைத் தமிழ்ப் பலுக்கலை முழுமையாக அறிய வாய்ப்பு இல்லாது அவர்களின் எழுத்துக்களை மட்டும் படிக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உதவியாக இந்த இடுகை.

இலங்கைத் தமிழில் பயன்படுவது மிகவும் குறைவு. இல்லை, அறவே இல்லை என்றும் சொல்லலாம். தமிழ்நாட்டுத் தமிழர் ஜப்பான், ஜெர்மனி என்று எழுதினால் அவர்கள் யப்பான், யெர்மனி என்று எழுதுவார்கள். தமிழ்நாட்டிலும் ஒரு சில இடங்களில் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டுக்கு ஜமுனா ஆறு என்பதை யமுனை ஆறு என்கிறோம்.

ஸ்ரீ

இலங்கையில் ஸ்ரீ க்குப் பதிலாக சிறீ என்று எழுதுகிறார்கள். எடுத்துகாட்டுக்கு – Srilanka – ஸ்ரீலங்கா – சிறீலங்கா

t, d

படம் – padam என்று தான் எழுதுவோம், பலுக்குவோம். patam என்று எழுதினால், பலுக்கினால் பிழை. ஆனால், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு எழுதும்போது மட்டும் தமிழ்நாட்டில் t, d இரண்டுக்கும் பயன்படுத்துக்கிறோம். எடுத்துக்காட்டுக்கு, இந்தியா டுடே (india today). ஆனால், இலங்கையில் d என்பதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஒரு வகையில் இது கரத்தின் உண்மையான தமிழ்ப் பலுக்கலுக்கு ஒத்து வருவது.

அதே வேளை இலங்கையில் tக்கு பதில் சொல்லின் முதலில் கரமும் சொல்லின் இடை, கடையில் கரமும் பயன்படுத்துகிறார்கள். இது தமிழ்நாட்டுத் தமிழர்களைப் பெரிதும் குழப்பத்தில் ஆழ்த்துவது. எடுத்துக்காட்டுக்கு, test என்பதை ரெஸ்ற் என்றும் petroleum என்பதை பெற்றோலியம் என்றும் இலங்கையில் எழுதுவார்கள்.

பெற்றோர், உற்றோர் போன்ற தமிழ்ச் சொற்களில் tr என்னும் பலுக்கலைக் கொள்ளும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அன்னியச் சொற்களுக்கு மட்டும் ட்ர என்று எழுதுகிறார்கள்.

ர, ற

ராதிகா, ரவி என்று தமிழர்களுக்கு நன்கு பழக்கமான பெயர்களை இலங்கை, தமிழ்நாட்டில் ஒரு மாதிரியே எழுதுகிறார்கள். ஆனால், russel, ryan போல் தமிழர்களுக்கு அன்னியமான பெயர்களுக்கு மட்டும் இலங்கையில் றசல், றையன் என்று எழுதுகிறார்கள்.

ஆ, ஓ, ஒ, எ, ஏ

தமிழல்லா சொற்களில் பல இடங்களில்,

தமிழ்நாட்டில் ஆகாரப் பலுக்கல் இலங்கையில் ஓகாரம் அல்லது ஒகரம் ஆகும்.

எடுத்துக்காட்டுக்கு,

polymer – பாலிமர் – பொலிமர்; norway – நார்வே, நொர்வே, நோர்வே.
police – போலீஸ் – பொலிஸ் / பொலீஸ்
.

எகரப் பலுக்கலும் இலங்கையில் ஓகாரம் அல்லது ஒகரமும் ஏகாரப் பலுக்கலும் வரும்.

தமிழ்நாட்டில் எகரப் பலுக்கல் இலங்கையில் ஏகாரம் ஆகும்.

எடுத்துக்காட்டுக்கு,

germany – ஜெர்மனி – ஜேர்மனி – யேர்மனி.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் பிரித்தானியர்களின் ஆதிக்கத்தில் மட்டும் இருந்ததும், இலங்கைத் தமிழர்கள் பிரித்தானியர் தவிர போர்த்துகீசியர், டச்சுக் காரர்கள் ஆதிக்கத்திலும் சில காலம் இருந்தது இந்த ஆகார ஓகார பலுக்கல் முறை வேறுபாடுகள், சொல் வேறுபாடுகளுக்கு முக்கிய காரணமாகும்.

இடுகுறிப் பெயர்ச்சொல் தவிர பிற அனைத்தையும் நல்ல தமிழில் மொழிபெயர்த்து விடுவது இந்த எழுத்து வேறுபாடு பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும். எடுத்துக்காட்டுக்கு, test matchஐ ரெஸ்ற் மேட்ச் என்று எழுதுவதா டெஸ்ட் மேட்ச் என்று எழுதுவதா என்பது தான் சிக்கல். test matchஐ தேர்வு ஆட்டம் என்றும் petroleum என்பதைப் பாறை நெய் என்றும் சொல்லத் தொடங்கினால் பொருள் நன்கு விளங்குவதோடு இரு நாட்டுத் தமிழர்களும் ஒருங்கே நல்ல தமிழ்ச் சொற்களைப் பிரச்சினையின்றிப் பயன்படுத்தத் தொடங்கலாம்.

இவை தவிர, பிற மொழிக்கலப்பைப் பொறுத்த வரை, தனித்தமிழ் இயக்கம் காரணமாக தமிழ்நாட்டுத் தமிழில் வடமொழிக் கலப்பு பெரிதும் குறைந்துள்ளது. ஆனால், இதன் தாக்கம் இலங்கையில் பெரிதும் உணரப்படாததால் அங்கு வடமொழிக் கலப்பு சற்று கூடுதலாக உள்ளது. எடுத்துக்காட்டுக்கு, இலங்கையில் பிரதி, பிரதானம், அபிவிருத்தி போன்ற சொற்கள் பெரிதும் வழக்கில் இருப்பதைக் காணலாம். அதே வேளை, தற்காலத் தமிழ்நாட்டுத் தமிழில் ஆங்கிலச் சொற்கள் கலந்து வருமளவுக்கு இலங்கைத் தமிழில் காணப்படவில்லை. video, audio, helicopter போன்ற சொற்களைத் தமிழ்நாட்டில் அப்படியே பயன்படுத்தி வருகையில் இலங்கையில் காணொளி, கேட்பொலி, உலங்கு வானூர்தி போன்ற சொற்களை இவற்றுக்கு ஈடாகப் பயன்படுத்தி வருவதைக் காணலாம். (இது போன்ற சில புது இலங்கைத் தமிழ்ச் சொற்களின் பொருத்தம் குறித்து எனக்கு உடன்பாடு இல்லை. எனினும், தமிழில் அனைத்தையும் சொல்லும் இந்த முயற்சி இலங்கையில் கடைக்கோடித் தமிழன் வரை தமிழ்ச் சொற்களைக் கொண்டு சேர்த்திருக்கிறது என்பது உண்மை!)

இந்த எழுத்து வழக்கு வேறுபாடுகளால் தமிழ் விக்கித் திட்டங்களில் பல சுவையான உரையாடல்கள் அடிக்கடி இடம்பெறும். இலங்கைத் தமிழர் வழக்கில் பிழையானது, குழப்புவது, நகைப்புக்குரியது, புரியாது, வேறுபட்டது என்று தமிழ்நாட்டுத் தமிழருக்குத் தோன்றும் வழக்கு, பலுக்கல் உண்மையில் பண்டைய தமிழ் வழக்காகவும் இருக்க வாய்ப்பு உண்டு. தமிழில் இருந்து பிரிந்த மலையாளம், பல பழந்தமிழ்ச் சொற்களைக் கொண்டிருப்பது போல் தமிழ்நாட்டு சமூக, அரசியல் தாக்கத்துக்கு உட்படாத இலங்கைத் தமிழும் பண்டைய தமிழின் கூறுகளை, பலுக்கல் முறைகளைப் பேணி வைத்திருக்கக்கூடும். தவிர, எந்த ஒரு வழக்கையும் பிழையென்று நிறுவ முடியும் என்றாலும் அதை உணர்ந்து தங்கள் வழக்கை அவரவர்களே மாற்றிக் கொள்ள முன் வர வேண்டும். இல்லையென்றால், இது சிறுபான்மை x பெரும்பான்மை , திணிப்புப் பிரச்சினையாகப் பார்க்கப்படும். தமிழ் விக்கிமீடியா போன்ற பன்னாட்டுக் கூட்டுத் தமிழ்த் திட்டங்களில் ஏதேனும் ஒரு வழக்கை முன்னிறுத்துவது, வலியுறுத்துவது பிற வழக்கினரின் உணர்வுகளைப் பெரிதும் புண்படுத்துவதாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

சரியோ தவறோ இரு நாட்டவரும் அடுத்தவரின் வழக்குகளை அறிந்து ஒருவரை ஒருவர் இணக்க முறையில புரிந்து கொண்டு கூட்டாகச் செயல்படுவது தமிழின் வருங்காலத்துக்குப் பெரிதும் அவசியமாகும்.

இத்தகைய புரிந்துணர்வுக்கு இணையம் ஒரு நல்ல கருவியாக இருப்பது காலத்தின் கொடை.


Comments

6 responses to “தமிழ்நாட்டுத் தமிழ் x இலங்கைத் தமிழ்”

  1. Shankar Ganesh Avatar
    Shankar Ganesh

    //ஜமுனா ஆறு என்பதை யமுனை ஆறு என்கிறோம்.//
    ஆங்கிலத்தில் யமுனா (Yamuna) என்றுதானே குறிப்பிடுகிறோம்? ஆற்றின் உண்மைப் பெயர் அது இல்லையா?

  2. பார்க்க – http://en.wikipedia.org/wiki/Jamuna

    இந்தித் திரைப்படங்களில் ஜமுனா ஆறு என்று குறிப்பிடக் கேட்டிருக்கிறேன். அதனால், அதுவே உள்ளூர்ப் பெயராக நினைத்திருந்தேன். Jesus – யேசு, Joseph – யோசப் என்று தமிழில் வழங்கும். ஆனால், இங்கு ஜ-ய தொடர்பு இல்லாமல் இந்த கிறித்துவப் பெயர்களின் மூல மொழிப் பலுக்கலைப் பின்பற்றுகிறோம். டாயிட்ச் (ஜெர்மன்), நெதர்லாந்து (டச்சு) மொழியில் ஆங்கிலத்தில் j வரும் பல இடங்கள் ய என்றே பலுக்கப்படுகிறது.

    இலங்கைத் தளங்களில் இந்த ஜ-ய வேறுபாடு பல இடங்களில் இருக்கப் பார்த்து இருக்கிறேன். எடுத்துக்காட்டுக்கு, யட்டி (ஜட்டி), யன்னல் (ஜன்னல்).

  3. நல்ல பதிவு ரவி..
    எனக்கே நான் பேசுவதை நினைத்தால் சிரிப்பு வருது பாருங்க… 😉

  4. //Joseph – யோசப் //
    சூசையப்பர் என்றி இலங்கையில் சொல்வார்கள்!

  5. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    மயூ, தமிழகத்திலும் இந்த வழக்கம் உண்டு என நினைக்கிறேன். விவிலியத்தில் இது போன்ற பெயர்கள் வரும். இயன்ற அளவு ஆங்கில ஒலிப்பில் இல்லாது மூல மொழி ஒலிப்புக்கு ஏற்பவோ மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்ப்பெயர்களாகவோ இருக்கும். அருளப்பர், சின்னப்பர், மத்தேயு போன்ற பெயர்களைத் தமிழகத்திலும் கேட்டிருக்கிறேன்.

  6. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    மயூ, தமிழ்நாட்டிலும் சூசையப்பர், அருளப்பர், சின்னப்பர் போன்ற பெயர்கள் இருக்கு..