அம்மாபட்டித் தமிழ்

அம்மாபட்டி – நான் 10 வயது முதல் 17 வயது வரை வளர்ந்த ஒரு மிகச் சிறிய ஊர். இப்பொழுதும் நாங்கள் குடி இருக்கும் ஊர். ஒரு 50 குடும்பங்கள் இந்த ஊரில் குடி இருக்கும என்று நினைக்கிறேன். இது போல் மாவட்டத்துக்குப் பல அம்மாபட்டிகள் உண்டு. திருச்சி, புதுகை, சிவகங்கை என மூன்று மாவடங்களின் எல்லையில் இவ்வூர் அமைந்திருக்கிறது.

மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ் என்று இருப்பது போல் நான் வளர்ந்த புதுகை, திருச்சி மாவட்டங்களில் ஒரு தெளிவான தனி வட்டார வழக்கு இல்லை. இப்பகுதிகளில் ஓரளவு வட்டாரச் சார்பு இல்லாத நடுநிலைத் தமிழ் தான் பேசப்படுகிறது என நினைக்கிறேன். அவ்வப்போது மதுரைத் தமிழின் அவன்க, இவன்க போன்ற பலுக்கல்கள் எட்டிப் பார்க்கும். இராம.கி அவர்களின் இடுகைகளைப் படிக்கும் போது சிவகங்கை வட்டாரத்தில் சிறப்பாகப் புழங்கும் பல சொற்களை அறிந்து கொள்ள முடிந்தது. இராம. கி அவர்களின் வலைப்பதிவிலும், சொல் ஒரு சொல் குழுமத்திலும் பல ஆய்வுகளுக்குப் பிறகு பரிந்துரைக்கப்படும் தனித் தமிழ்ச் சொற்கள், பழந்தமிழ்ச் சொற்கள், வேர்ச்சொற்கள் பலவும் எங்கள் ஊரில் படிக்காத பாமரனின் நாவில் சுளுவாக விளையாடுவதைக் காணும் போது வியந்திருக்கிறேன்.

நாடு தாண்டி வந்து டச்சு, ஜெர்மன், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என்று மூளை குழம்பிப் போயிருக்கும் வேளையிலும் சிறு வயதில் என்னை அறியாமல் கற்றுக் கொண்ட பல சொற்கள் இன்னும் நினைவில் இருந்து அகலாமல் உள்ளன. சில சொற்களையும் அவற்றை நாங்கள் பயன்படுத்திய சூழலையும் அவற்றுக்கான சென்னை அகரமுதலிப் பொருளையும் தருகிறேன். நகர வாழ்க்கை மட்டும் வாழ்ந்திருக்கும் பலருக்கு இந்தச் சொற்கள் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

இட்டரைஇட்டரை என்றால் இரு புறமும் வேலிகள் உள்ள குறுகிய பாதை என்று பொருள். பெரும்பாலும் ஒரே ஒரு மாட்டு வண்டி மட்டும் செல்லத்தக்க அளவுக்கே அகலம் இருக்கும். மேலும் விளக்கம் அறிய இங்கு பார்க்கவும்.

அதர்அதர் என்றால் வழி என்று பொருள். மாடுகளை காட்டில் அடைத்து விட்டு வரும்போது அதரைச் சாத்தி விட்டு வருமாறு சொல்வார்கள். அதர் என்றால் கதவு என்று இத்தனை நாள் பிழையாகப் புரிந்து வைத்திருந்தேன். இன்று அகரமுதலி பார்த்துப் பொருள் புரிந்தது.

அதர்¹ (p. 0070) [ atar¹ ] n atar . 1. Way, path, public road; வழி. ஆக்க மதர்வினாய்ச் செல்லும் (குறள், 594).

அதரைச் சாத்து என்பதற்குப் பதில் கடவை அடைச்சிட்டு வா என்றும் சொல்வார்கள். இப்பொழுது இணையத்தமிழில் password->கடவுச் சொல், pass->கடவு, passport->கடவுச் சொல் என்று பார்க்கும்போது அழகான தமிழ்ச் சொற்கள் எப்படி இன்னும் உயிர்ப்புடன் ஊர்ப்புறங்களில் இருக்கிறது என்று புரிகிறது.

முறைப்பாடு – எங்கள் வீட்டார் யாரிடமாவது சண்டை போட்டால் எங்களுக்கும் அவங்களுக்கும் முறைப்பாடு என்று சொல்வோம். சண்டை போட்டுப் பேசாமல் இருப்பவர்களை முறைப்பாட்டுக்காரர்கள் என்போம். இதற்கு முறையீடு என்ற வகையில் அகரமுதலியில் பொருள் இருக்கிறது.

படல் – பனையோலை கொண்டு செய்யப்பட்ட சிறு கதவு அல்லது gate என்று சொல்லலாம்.

படல் (p. 2433) [ paṭal ] n paṭal . < படு¹-. [M. paṭal.] 1. cf. paṭala. Small shutter of braided palm leaves or thorns; பனையோலையாலேனும் முள்ளாலேனும் செய்யப்பட்ட அடைப்பு. படலடைத்த சிறுகுரம்பை நுழைந்து புக்கு (திவ். பெரியதி . 4, 4, 3). 2. cf. paṭala. A kind of hurdle or wattled frame for sheltering cattle; sun-shade; a kind of tatty against sun, rain or wind, used in a shed, bazaar or hovel, or before a shop; மறைப்புத் தட்டி. (W.) 3. Frames of various designs adorned with flowers and fastened on to a temple-car, etc.; தேர் முதலியவற்றில் இடும் பூந்தடுக்கு 4. A kind of ola umbrella; ஓலைக் குடைவகை. Nāñ. 5. Hole of a yard-arm or sailyard; பாய்மரத்தில் இணைக்கப்பட்ட குறுக்குக்கட் டையிலுள்ள குழி. (W.) 6. Sleep; உறக்கம். பட லின் பாயல் (ஐங்குறு. 195).

கடகப்பெட்டி இல்லாத வீடே இருக்காது. பெரும்பாலும் அரிசி போட்டு எடுத்துச் செல்வார்கள்.

கடகம்¹ (p. 0657) [ kaṭakam¹ ] n kaṭakam . 1. Large tray made of palmyra-stems; பனை யகணியால் முடையப்பட்ட பெரியபெட்டி. (புறநா. 33, உரை.)

படப்பு – வைக்கோற்போர்.

படப்பு (p. 2431) [ paṭappu ] n paṭappu . < படப்பை. 1. Hay rick; வைக்கோற்போர். மன்றத் தார்ப்பிற் படப் பொடுங் கும்மே (புறநா. 334).

பண்டுவம்(உடல்நிலை சரியில்லாத) கிழவனுக்கும் குழந்தைகளுக்கும் பண்டுவம் பார்த்தே நான் சோர்ந்து போயிடுறேன்னு அம்மா சொல்வாங்க..அது ஏதோ பக்குவம் பார்க்கிறது என்று நினைத்து இருந்தேன். medical treatement என்பதைத் தான் அவ்வளவு எளிதாகச் சொல்லி விடுகிறார்கள்.

பண்டுவம் (p. 2451) [ paṇṭuvam ] n paṇṭuvam . Medical treatment; வைத்தியம். Loc

அம்மான் – மாமா. பேச்சு வழக்கில் கூட அம்மான் மகன் என்று கிழவன், கிழவிகள் குறிப்பிடக் கேட்டிருக்கிறேன்.

அம்மான் (p. 0099) [ ammāṉ ] n ammāṉ . < id. 1. Mother’s brother, maternal uncle; தாயுடன் பிறந்தவன். (பிங்.) 2. Wife’s father; பெண்கொடுத்தவன். Loc. 3. Husband of father’s sister; அத்தை கணவன். Loc . 4. Father; தகப்பன். மலரோனம்மான் (கம்பரா. மாரீசன். 22). 5. God, as father; கடவுள். ஆழி யங்கைக் கருமேனி யம்மான் (திவ். திருவாய். 5, 1, 6).

வெள்ளென – சீக்கிரம், விரைவில் என்று பொருள். புதுகை வட்டத்தில் உள்ளவர்கள் இச்சொல்லைப் பயன்படுத்தாத நாளே இருக்காது.

வெள்ளென (p. 3797) [ veḷḷeṉa ] adv veḷḷeṉa . < வெள்ளெனல் +. 1. Early in the morning; அதிகாலையில். வெள்ளென எழுந்திருக்கவேண்டும். 2. Before hand, betimes; குறித்த காலத்திற்கு முன்னமே. பகலில் வெள்ளென வந்துவிட்டாய்.

பிரி – வைக்கோலால் சடை போல் பின்னி, வைக்கோல் போரைக் கட்டி வைக்கப் பயன்படும் கயிறு.

பிரி³ (p. 2702) [ piri³ ] n piri . 1. [T. M. piri.] Twist, strand, wisp; புரி.

காரையூர், காரைக்குடி, காரைக்கால் என்று எல்லா இடங்களிலும் வரும் காரையின் பொருள் கீழே. தற்போதும், தமிழகத்தின் பல சிற்றூர்களிலும் காரை வீடு, காரைவீட்டுக்காரன் என்று குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது. பொதுவாக, மண்வீடல்லாத சாந்து, சிமெந்து பூசப்பட்ட வீடுகள் எல்லாமே காரை வீடு தான் என நினைக்கிறேன்.

காரை² (p. 0889) [ kārai² ] n kārai . [T. gāra, K. gāre .] 1. Mortar, plaster for building; சுண்ணச்சாந்து. காரையினால் விளக்குறு மேனிலத் தோகையர் கீதமும் (திருப்போ. சந். அலங்க. 17).

population distribution என்பதை மக்கள்தொகைப் பரம்பல் என்று தமிழ் விக்கிபீடியாவில் சொன்னார்கள். இது என்னடா பரம்பல் என்று யோசித்தால், ஊரில் பரம்படிப்பது நினைவுக்கு வந்தது. தொளியில் (வயலில் சேறு நிறைந்திருக்குமாறு உழப்பட்ட நிலம்) உள்ள மண் கட்டிகளை உடைக்க, ஒரு பலகையைக் கட்டி இழுப்பார்கள். இதைப் பரம்படிக்கிறது என்பார்கள். இப்படி பரம்படித்து வருவது, பரப்பி விடுவது பரம்பல்.

பரம்பு² (p. 2499) [ parampu² ] n parampu . < பரம்பு-. 1. Board or roller for smoothing land newly ploughed; harrow, drag; உழுதகழனியைச் சமப்படுத்தும்பலகை. பரம்பு மேற்போய செய்யுள் (சேதுபு. திருநாட். 44). 2. Dry ground laid out, especially for plantain or palm gardens; பரவியநிலம். பரம் பெலாம் பவளம் (கம்பரா. நாட்டுப். 2).

ஊரணியில் உள்ள கலங்கிய நீரைக் கொண்டு வந்து தேத்தாங்கொட்டை கொண்டு தேத்தி தெளிந்த நீரைக் கொண்டு வருவார்கள் அம்மா. இதைத் தேற்றும் கொட்டை -> தேற்றாங்கொட்டை என்று புரிந்து வைத்திருந்தாலும், தேற்றுதல்->தெளிதல் என்று நேரடிப் பொருளை அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ளவோ பழக்கத்துக்குக் கொண்டு வரவோ இல்லை. தேற்று என்றால் உடம்பைத் தேற்றுதல், figureஐத் தேற்றுதல் 😉 என்ற அளவில் தான் புரிதல் இருந்தது.

தேற்று-தல் (p. 2071) [ tēṟṟu-tal ] 5 v. tr tēṟṟu. Caus. of தேறு-. 1. [T. tērucu.] To make clear, convince, assure, relieve from doubt; தெளிவித்தல். தையால் தேறெனத் தேற்றி (கலித். 144). 2. To know, understand; தெளிந்தறிதல். கரத்தல் கனவிலுந் தேற்றாதார் மாட்டு (குறள். 154). 3. To swear, take an oath; சூளுறுதல். தேரொடுந் தேற்றிய பாகன் (கலித். 71). 4. [M. tēṟṟuka.] To clear, clarify, as with the tēṟṟā-ṅ-koṭṭai; தேற்றாவிதை யால் நீர்தெளியச் செய்தல். தேற்றுவித்தாற் புனல் தேற்றுநர்போல் (அஷ்டப். அழகர்கலம். 85). 5. To refine; சுத்தஞ்செய்தல். (W.) 6. To comfort, console; ஆற்றுதல். 7. To cure, give relief; குணமாக்குதல். (W.) 8. [M. tēṟṟuka.] To com municate strength; to nourish, cherish, invigo rate; பலமுண்டாக்குதல். (W.) 9. To encourage, hearten; தைரியப்படுத்துதல். Loc.

தேற்று² (p. 2071) [ tēṟṟu² ] n tēṟṟu . < தேற்று-. 1. Making clear; தெளிவிக்கை . 2. Becoming clear; தெளிவு. செஞ்சொற்பொருளின் றேற்றறிந்தேனே (சிவப். பிரபந். நால்வர். 28). 3. See தேற்றா. (பிங்.) தேற்றின் வித்திற் கலங்குநீர் தெளிவதென்ன (ஞானவா. தாம வியா. 3).

நஞ்சை, புஞ்சை = நன்செய், புன்செய். இப்புவும் ஊர்ல நிலத்தை செய்யுன்னு தெளிவா சொல்றோம்.

செய்² (p. 1599) [ cey² ] n cey . < செய்-. 1. Deed, act, action; செய்கை. களிறு களம்படுத்த பெருஞ்செய் யாடவர் (நெடுநல். 171). 2. [K. key, M. ceyi.] Field, especially wet field; வயல். செய்யிற் பொலம்பரப் புஞ் செய்வினை (பரிபா. 1, 128). 3. A unit of field measure = 276 ft. × 276 ft. = 76,176 sq. ft. = 1¾ acres of wet land (R. F.); 1¾ ஏகர்கொண்ட நன்செய் நிலவளவு. 4. Peru-ṅ-kuḻi, a land measure consisting of 1 ciṟu-kuḻi; 1 சிறு குழிகொண்ட நிலவளவை. (G. Sm. D. I, i, 288.)

குண்டு = சிறு விளைச்சல் நிலம். அகரமுதலியில் உள்ள பொருள் கொஞ்சமும் பிசகாமல் சொல்லி வைத்தாற்போல் சிறு விளை நிலங்களுக்குத் தான் இச்சொல்லைப் பயன்படுத்தி வருகிறோம்.

குண்டு² (p. 0979) [ kuṇṭu² ] n kuṇṭu . cf. kunḍa. [M. kuṇṭu.] 1. Depth; ஆழம். வண்டுண மலர்ந்த குண்டுநீ ரிலஞ்சி (மணி. 8, 8). 2. Sinking in, hollow, lowness; தாழ்வு. (சூடா.) 3. A small field; சிறுசெய். (S. I. I. iii, 15.) 4. A land measure = 189 sq. ft. = ¼ acre (R. F.); 189 சதுர அடியுள்ள ஒரு நில வளவு. 5. Pool, pond; குளம். (சங். அக.) 6. Manure-pit; உரக்குழி. Loc.

முறத்தை ஊரில் சுலவு என்றும் சொல்வார்கள். அதை ஒரு பெயர்ச்சொல்லாகத் தான் தெரியுமே தவிர, அது எத்தனையான அருமையான வினைப் பொருள் தருவது என்று இப்பொழுது தான் தெரிகிறது.

சுலவு-தல் (p. 1534) [ culavu-tal ] 5 v. intr culavu. To revolve, move round, hover about; சுழலுதல். சுலவுற் றெதிர்போகிய தூவியனம் (நைடத. அன்னத். 45).–tr. 1. To whirl; சுழலச்செய்தல். (J.) 2. To coil round, as a cord; to surround; சுற்றுதல். அர வூறு சுலாய்மலை தேய்க்கும் (திவ். திருவாய். 7, 4, 2).

வாமடை – இது மடை வாய் என்பதில் முன்பின்னாகத் தொக்கப் போலி என்று நினைக்கிறேன். நீர்ப்பாயும் நிலத்தில் ஒவ்வொரு சிறு வாய்க்காலில் இருந்தும் ஒரு சில பார்களுக்கு நீர் பாய்வதற்கு அடைத்து வைத்திருக்கும் வாயை, வாமடை என்போம்.

பரி – இது ஒரு கூம்பு வடிவக் கூடை. மழைக்காலத்தில் கட்டு வாய்க்காலில் நீரோடும்போது இதை வைத்து வாய்க்காலை அடைத்தால் போல் பிடித்துக் கொண்டால், மீன்கள் இதில் மாட்டிக் கொள்ளும்.

பத்தக்கட்டை (பொத்தல் கட்டை?) – ஊரில் குளம் கலங்கி ஓடும் மழைக்காலத்தில் மிகவும் மகிழ்ச்சியூட்டும் உள்ளூர்க் கண்டுபிடிப்பு இது. இதைச் சிறப்பாக விளக்குவது என்றால் படம் வரைய வேண்டும். இல்லை, நிகழ்படமாகவே காட்ட வேண்டும். இது என்னவென்றால், குளத்தில் இருந்து நீர் கலங்கி (வெள்ளப் பெருக்கால் குளம் நிறைந்து ததும்பி ஓடும் குளத்து நீர்) இறங்கி ஓடும் வழியில் ஒரு குறுக்கு வாய்க்கால் வெட்டி அதன் முடிவில் ஒரு பொத்தல் இடப்பட்ட மரக்கட்டையைப் புதைத்து விடுவார்கள். இந்தக் கட்டைக்குப் பின்புறம் குழி வெட்டி ஒரு பானையைப் புதைத்து விடுவார்கள். இதன் வழியாக வரும் நீர் பொத்தல் வழியாக வெளிப்பட்டு, கீழிறங்கி திரும்பவும் கீழே ஓடிக்கொண்டிருக்கும் ஓடைக்குப் போகும். ஆனால், கீழே ஓடையில் உள்ள மீன்கள், நீர்ப்பெருக்கு குறைவாக உள்ள இந்த வழியில் எதிர் நீச்சல் இட்டு வரும். அவ்வாறு பத்தக்கட்டை வரை ஏறி வரும் மீன்கள் அதற்குப் பிறகு நீர் வழியில்லாமல் திகைத்துத் தவ்வியோ வழுக்கியோ பின்னால் இருக்கும் பானைக்குள் விழுந்து விடும். இப்படி இரவில் பத்தக்கட்டை போட்டுவைத்து வந்தால் பகலில் போய் மீனை அள்ளிக் கொள்ளலாம். இப்படி, ஊரில் மழைக்காலங்களில் மீன்பிடித்து மகிழ்ந்த கதைகளையே தனியாக எழுதலாம்.

மேற்படிப்புக்காக GRE தேர்வு எழுதும்போது ஆங்கிலச் வேர்ச் சொற்களின் பொருளை அறியும் போது பெரும் வியப்பும், ஆங்கிலமொழி சார்ந்திருக்கும் இலத்தீன், கிரேக்கம் மீது ஒரு விதமான மதிப்பும் வரும். ஏனோ தமிழ்நாட்டில் இப்படி தமிழை வேர் பிரித்து ரசிக்கும்படி யாரும் சொல்லித் தருவதில்லை.

மெத்தப் படித்த மேதாவிகள் எல்லாம் பண்ணித் தமிழை விட்டொழிக்க முடியாமல் திண்டாடுகையில், எங்கள் ஊரில் உள்ள ஆங்கில வாசனையே இல்லாத, தொலைக்காட்சி-வானொலி பண்ணித் தமிழின் ஆளுகைக்குள் வராத, நாட்டுப் புறத்து மக்கள், மூத்தவர்களிடம் எண்ணற்ற அழகு தமிழ்ச் சொற்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அரசோ ஆர்வலர்களோ ஊர் ஊராய்ச் சென்று இது போன்ற சொற்களை ஆவணப்படுத்தி வைத்தால் அது மாபெரும் தமிழ்த் தொண்டாக இருக்கும்.


Comments

5 responses to “அம்மாபட்டித் தமிழ்”

  1. சிறு குழிகொண்ட நிலவளவை. (G. Sm. D. I, i, 288.)///
    i enjoyed reading your blog and I really appreciate your love for Tamil.

  2. நன்றி, delphine.

  3. அருமையான பதிவு, ரசித்தேன். எங்களூரில் புழங்கும் வார்த்தைகல் சில.
    1.கடகப்பெட்டி
    2.அம்மான்
    3.வெள்ளென
    இவை எமக்கான தனித்துவமான பேச்சுவழக்கென்றே இதுகாறும் நினைத்திருந்தேன்.

  4. நன்றி, கானாபிரபா.

    வெள்ளென – எங்க புதுகை மாவட்டம் பக்கம் மட்டும் இருக்குன்னுல்ல நினைச்சிருந்தேன் !!! மற்றபடி, நான் சொன்ன நிறைய சொற்கள் பல பகுதிகளிலும் உண்டு. ஆனா, நகரத்து ஆட்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை

  5. தமிழ் Avatar
    தமிழ்

    அருமை சகோதரா
    நம்முடைய வாழ்க்கைச் சுவடுகளின் அடையாளமே நம் பேச்சு வழக்கு தான் உங்கள் பதிவுக்கு நன்றி