தமிழ் வலைப்பதிவுகளை வாசிக்க தற்போது கூகுள் திரட்டி பயன்படுத்துகிறேன். இதனால் வந்த நன்மைகள்:
1. பிடிக்காத, தலைவலி தரும் வலைப்பதிவுகளை நாம் விரும்பாவிட்டாலும் பார்த்துத் தொலைக்க வேண்டியதில்லை. அவற்றை நீக்கச் சொல்லி யாருக்கும் எழுதிக் காத்துக் கொண்டிருக்கத் தேவை இல்லை.பிடித்த பதிவுகளை மட்டும் தான் சேர்த்துக் கொள்ளப்போகிறோம் என்பதால் பிடிக்காத பதிவுகளை நீக்கும் வேலை இல்லை.
2. எவ்வளவு நாள் ஆனாலும் நம் விருப்ப வலைப்பதிவுகளைத் தவற விடாமல் எளிமையாகப் படிக்கலாம்.
3. பின்னூட்டக் கயமையில் ஏமாந்து மொக்கைப் பதிவுகளைப் படிக்க வேண்டியதில்லை.
4. ஒவ்வொரு தளமாக சென்று பார்க்காமல் அனைத்து வலைப்பதிவுகளையும் ஒரே இடத்தில் முழுமையாகப் படிக்க முடிகிறது.
5. வலைப்பதிவுகள் மட்டுமல்லாமல் ஆங்கில, தமிழ் இணையத்தளங்களின் செய்திகளையும் கூட ஒரே இடத்தில் படிக்க முடிகிறது.
6. பதிவுகளை நாம் விரும்பும் துறை வரிசை, கால வரிசையில் படிக்க முடிகிறது.
7. அருமையான, எளிமையான தள இடைமுகப்பு. கூகுள் வழங்கியின் வேகம்!
மொத்தத்தில் நான் விரும்பிய பதிவுகள், தளங்களை நான் விரும்பும் வகையில் யாருடைய திணிப்பும் சார்பும் இல்லாமல் எளிமையாகப் படிக்க முடிகிறது. நான் எதைப் பார்க்க நேரிடும், படிக்கிறேன் என்பதை நானே தீர்மானிக்கிறேன்.
தமிழ்மணம் சில சமயம் வழங்கிக் கோளாறால் செயல் இழந்த போது, “கை, கால் ஓடவில்லை” என்று சொல்லும் அளவுக்கு சிலர் ஒரு திரட்டியைச் சார்ந்து இருப்பவர்களாக இருக்கிறார்கள். கூகுள் திரட்டி போன்ற தன்விருப்பத் திரட்டிகளை உருவாக்கிக் கொள்வது இதைத் தவிர்க்கும். Tamilblogs, தேன்கூடு, தமிழ்மணம் ஆகியவை தங்களிடம் இணைக்கப்பட்டுள்ள பதிவுகளின் முழுமையான விவரம் அடங்கிய OPML கோப்பை வழங்குவது நல்ல முன்மாதிரியாக இருக்கும். தற்போது தேன்கூடு இத்தகைய OPML கோப்பு வழங்குகிறது. ஆனால், இது முழுமையானதாகத் தோன்றவில்லை.
—
தமிழ்மணத்துக்கு என் புதுப்பதிவுகளை அனுப்பிக் கொண்டிருந்த போது இருந்ததற்கும், தற்போது எந்த ஒரு திரட்டியையும் சாராமல் வலைப்பதிவதற்கும் உள்ள வேறுபாட்டை எண்ணிப் பார்க்கிறேன்.
1. முன்பு தொடர்ந்தாற் போல் வரிசையாக இடுகைகளை இட மாட்டேன். காரணம், தமிழ்மண முகப்பில் ஒரு இடுகை மட்டுமே பெரிதாகத் தெரியும். அடுத்தடுத்த இடுகைகள் ஒரு வரி இணைப்பாக மட்டுமே தெரியும். இதனால், ஒரு இடுகைக்கு கிடைக்கக்கூடிய கவனத்தைக் குறைக்கக்கூடாது என்பதற்காக காத்திருந்து அடுத்த இடுகையை இடுவது வழக்கம். வார இறுதிகளில் இடுகைகளை இட யோசிப்பேன். காரணம், இந்நாள்களில் வாசகர் வரவு குறைவாக இருக்கும். அதையே திங்கள் கிழமை இட்டால் அதிகம் பேர் வருவரே என்று யோசிப்பேன். போலி டோண்டு, சல்மா அயூப் என்று தமிழ்மணப் புயல்கள் அடிக்கையில் நல்ல இடுகை போட்டால் காணாமல் போய் விடுமே என்று காத்திருந்திருப்பது உண்டு. இல்லை, நல்ல இடுகை போட்டாலும் போதிய கவனம் கிடைக்காதது போல் தோன்றும்.
சில சமயம் பின்னூட்டங்களையும் உடனடியாகவோ வரிசையாகவோ பதிப்பிப்பதில்லை. இதனால், அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பட்டையில் இருந்து கிடைக்கும் கவனம் குறையும் என்பது காரணம். ஒரு வேளை 😉 பின்னூட்ட மழை பொழியும் பதிவாக இருந்திருந்தால், பின்னூட்டங்கள் 40 நெருங்குவது போல் தோன்றினால், நானே பின்னூட்டம் இட்டு கவனத்தை வீண்டிக்க வேண்டாமே என்று பின்னூட்ட உரையாடலை ஒரு செயற்கையான, வேகம் குறைவான, தொடர்ச்சியற்ற முறையில் கொண்டு சென்றிருப்பதற்கும் வாய்ப்பு உண்டு.
இப்பொழுது நினைத்த நாள், நினைத்த நேரம், நினைத்த வேகத்தில் வரிசையாக எந்த மனக்கட்டுக்களும், வாசகர் வருகை குறித்த மனக்கணக்குகளும் எதிர்ப்பார்ப்புகளும் இன்றி இடுகைகள், பின்னூட்டங்களைப் பதிப்பிக்கிறேன். ஒரு நாளுக்குத் துண்டுத் துண்டாக 50 இடுகைகள் இட்டாலும் ஏன் இப்படி செய்கிறாய் என்று யாரும் கேட்கப்போவதில்லை. முறையிடப் போவதில்லை. இதே தமிழ்மணத்தில் இணைந்திருக்கையில் செய்தால், தமிழ்மண வைரஸ் என்று முறையிடப்பட்டிருப்பேன்.
2. முன்பு, நல்ல இடுகை ஒன்று எழுதி இருப்பதாகத் தோன்றினால், அது பூங்காவில் வருகிறதா, வாசகர் பரிந்துரையில் வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருப்பேன். மெனக்கெட்டு கள்ள வாக்குகள் போடுவதும் உண்டு.
இப்பொழுது வலைப்பதிய மட்டும் செய்கிறேன். வீண் பரப்பு வேலைகளுக்கான உந்துதல் இல்லை.
3. புது பிளாக்கருக்கோ wordpressக்கோ பிற வலைப்பதிவு மென்பொருள்களுக்கோ மாறும் முன்னர் இதைத் திரட்டிகள் ஆதரிக்குமா என்று தயங்க வேண்டி இருக்கும். திரட்டி நிரல்களில் ஏதேனும் குறை வந்தால் அதை சரி செய்ய பொழுது வீணாகும்.
இப்பொழுது நினைத்த வலைப்பதிவு மென்பொருளில் எந்தத் தயக்கமும் இன்றி உடனடியாக வலைப்பதியலாம்.
4. தமிழ்மணத்தில் ஒரு பதிவை இணைக்கும் முன் பதிவு முழுக்கத் தமிழில் இருக்க வேண்டும், மூன்று பதிவுகள் இருக்க வேண்டும் என்று கட்டாயம் சில சமயம் தேவையற்ற ஒட்டுப் பதிவுகளை இட வைத்தது. தவிர, தமிழ்ப் பதிவில் நடுவில் ஆங்கிலத்திலும் எழுத முடியாது.
தற்போது, என் பதிவில் என்ன மொழியில் வேண்டுமானாலும் மாற்றி மாற்றி எழுதிக் கொள்ளலாம். யாருடைய ஏற்பும் அவசியம் இல்லை.
திரட்டிகளைச் சாராதிருக்கத் தொடங்கிய பின், நான் எதை, எப்படி, எங்கு, எப்போது, எவ்வளவு வலைப்பதிகிறேன் என்பதை நானே தீர்மானிக்கிறேன். ஒரு திரட்டியோ அதில் இணைந்துள்ள பிற வலைப்பதிவர்களின் போக்குகளோ இப்பொழுது என் வலைப்பதியும் போக்கைத் தீர்மானிப்பதில்லை. இது ஒரு வகையில் நுட்ப, மனக் கட்டற்றதாய், எனக்குப் பிடித்ததாய் இருக்கிறது 🙂
எல்லோருக்கும் இக்கட்டுக்கள் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், புதிதாகவோ விவரம் தெரியாமலோ இருக்கும் பெரும்பான்மைப் பதிவர்கள் தங்களை அறியாமல் இக்கட்டுக்களை இட்டுக் கொள்ளும் வாய்ப்பு நிறையவே உண்டு.
என் கட்டற்ற கணினி, கட்டற்ற கலைக்களஞ்சிய, கட்டற்ற அகரமுதலி ஆர்வ வரிசையில் தமிழ்ச் சூழலில் கட்டற்ற வலைப்பதியும் / வாசிக்கும் வழக்கமும் ரொம்பவும் பிடித்ததாய் இருக்கிறது 🙂
Comments
2 responses to “திரட்டிச் சார்பின்மை!”
[…] ரவிக்கு இப்போத்தான் “புரிபடுது“! இப்பொழுது வலைப்பதிய மட்டும் […]
//திரட்டிகளைச் சாராதிருக்கத் தொடங்கிய பின், நான் எதை, எப்படி, எங்கு, எப்போது, எவ்வளவு வலைப்பதிகிறேன் என்பதை நானே தீர்மானிக்கிறேன். ஒரு திரட்டியோ அதில் இணைந்துள்ள பிற வலைப்பதிவர்களின் போக்குகளோ இப்பொழுது என் வலைப்பதியும் போக்கைத் தீர்மானிப்பதில்லை.//
நூறு வீதம் உண்மை. எனது தமிழ் வலைப்பதிவை தமிழ் மணத்திற்கு இப்போ அனுப்புவதில்லை.
என் விருப்பத்திற்கு, ட்ரென்ட் பார்த்து மொக்கை, திரைவிமர்சனங்கள் எழுதாமல் விரும்பிய நேரத்தில் விரும்பிய பதிவுகளை இடுகின்றேன்.