செருப்புக்காக காலை வெட்டுவது எப்படி?

இன்றைய உதவிக் குறிப்பில், புதிதாக வாங்கிய மேலைநாட்டு ஆங்கிலச் சிந்தனைச் செருப்புக்குப் பொருத்தமாக உங்கள் தமிழ்க் காலை வெட்டுவது எப்படி என்று பார்ப்போம்.

1. திற, மூடு, நிறுத்து, துவக்கு போன்ற பல சுருக்கமான தமிழ் வினைச்சொற்களை பயன்படுத்துவது சிரமம் என்பதால் பண்ணு என்ற ஒரே ஒரு “magic வினைச்சொல்லை” மட்டும் பயன்படுத்துங்கள். இதனுடன் open, close , start , stop போன்ற ஆங்கில வினைச்சொற்களைச் சேர்த்துக் கொள்க.

இந்த முறையின் சிறப்புகள் –

ஆங்கில / பண்ணித் தமிழ் / தமிழ் முறைகளுக்குத் தேவைப்படும் எழுத்துக்கள், அதனால் வீணாகும் ஆற்றல், நேரம் குறித்து பார்ப்போம்.

ஆங்கிலம் பண்ணித் தமிழ் தமிழ் பண்ணித் தமிழ் வீணாக்கும் எழுத்துக்கள்
opened ஓபன் பண்ணினேன் திறந்தேன் 3
close க்ளோஸ் பண்ணு மூடு 4
think தின்க் பண்ணு நினை, யோசி 4
cut கட் பண்ணு வெட்டு 2

நல்ல தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசுவது வினைத்திறம் மிக்கது என்பதைக் கண்டுகொள்ள வேண்டாம். பண்ணித் தமிழ் பேசுவது தலையைச் சுற்றி காதைத் தொடுவது போல் தான் என்றாலும் கவலைப்பட வேண்டாம். தொடர்ந்து முயன்றால் நிச்சயமாகப் பழக்கப்பட்டு விடும். ஒரு தலைமுறைக்கும் இதைத் தொடர்ந்து செய்தால் தலையைச் சுற்றாமலேயே காதைத் தொடலாம் என்பது அடுத்த தலைமுறைக்கு தெரியாமல் போகும் என்பது வரலாற்றுப் பாடம் – பண்ணித் தமிழ் என்ற நான்காம் வகைத் தமிழ் உருவாவது தனிச்சிறப்பு.

– நீங்கள் வளர வளர உங்கள் மொழி அறிவை வளர்த்துக் கொள்ளும் சிரமம் இல்லை. என் அக்கா மகன் twenty nineக்கு அடுத்து twenty ten என்கிறான். அவனைப் போல் நீங்களும் தமிழ் மொழி அறிவை வளர்த்துக் கொள்ளாமல் என்றும் சிறியோனாக ஆங்கில வினைச்சொல்+பண்ணு என்ற சமன்பாட்டை எளிதாகப் பின்பற்றலாம்.

– ஆங்கில வழியத்தில் பயிலும் தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் கற்கச் சிரமப்பட வேண்டாம். இதனால் அவர்கள் பாடச்சுமை குறையும்.

2. பண்ணித் தமிழ் கற்ற பிறகு, கணினியில் அதை எழுதும்போது தமிங்கிலத் தட்டச்சுப் பலகையைப் பயன்படுத்துங்கள். இதனால், உங்கள் தட்டச்சும் நேரம் அதிகமாகும், கை வலிக்கும், தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களாக மனதில் பதிவீர்கள், மூணு சுழி ண-வா இரண்டு சுழி ன-வா என்பது போய் SHIFT+nஆ nஆ என்று நவீனமாகச் சிந்திப்பீர்கள் என்பது பெரு மகிழ்ச்சிக்குரியதாகும்.

எடுத்துக்காட்டுக்கு, romanised / அஞ்சல் / தமிங்கில முறைக்கும் தமிழ்99 முறைக்கும் தேவைப்படும் விசையழுத்தங்களைப் பார்ப்போம்.

சொல் romanised தமிழ்99 தமிங்கிலத் தட்டச்சு வீணாக்கும் எழுத்துக்கள்
தொழிலாளி thozilaa+SHIFT+li த ஒ ழ இ ல ஆ ள இ 3
வெற்றி ve+SHIFT+r+SHIFT+ri வ எ ற ற இ 2
கணையாழி ka+SHIFT+naiyaazi க ண ஐ ய ஆ ழ இ 4
தந்தம் thantham த ந த ம f 3

இன்னும் விரிவாக அறிய இங்கு பார்க்கவும்.

3. தமிழின் ஒவ்வொரு எழுத்தும் தனித்துவமானது என்று உணராமல், தமிழுக்கு என்று தனித்துவமான இடங்களை ஒருங்குறி அமைப்பில் கேட்டு வாங்காமல், ெ ி ் என்று கொம்பு வேறு கொக்கி வேறு புள்ளி வேறாக இடங்களைப் பெற்று அவற்றை இட்டு ஒட்டி தமிழ் எழுத்துக்களை கணினியில் படம் காட்டுங்கள். இதனால், கணினியில் உள்ள தமிழ்க் கோப்புகள் தேவையற்று மும்மடங்கு அளவு கூடும். தரவுப் பரிமாற்றம் மெதுவாக நடக்கும். கொம்பும் கொக்கியும் உலாவிகளில் பிய்ந்து திரிந்து கண்வலி, தலைவலி வர வைக்கும். பிறகு, நாம் அவற்றை நிரல் எழுதி சரி செய்து நம் நிரலாக்க அறிவை மெச்சிக் கொள்ளலாம். இப்படிப் பிய்த்துப் பிய்த்து தமிழ் எழுத்துக்களை உருவாக்கியதால் ஒரு ஆவணத்தில் உள்ள எழுத்துக்களைத் திறம்பட தேடுதல், வரிசைப்படுத்துதல் எல்லாமே சிரமமாகிப் போகும்.

4. ஆங்கிலச் சொற் திருத்திகளை உருவாக்குபவர்கள் அனைத்து ஆங்கிலச் சொற்களையும் குவித்து ஒரு தொகுப்பு உருவாக்கி அதில் இருந்து பிழைகளை சரி பார்ப்பார்கள். நாமும் இலட்சக்கணக்கான தமிழ்ச் சொற்களை இப்படிக் குவித்து சொற் திருத்தி உருவாக்குகிறோம் என்று ஆமை வேகத்தில் ஆண்டுகணக்கில் கூட்டு முயற்சியில் ஈடுபடுவோம். தமிழ் ஒரு கட்டமைப்புடைய மொழி என்பதையும் அதற்கு இலக்கணத் திருத்தியே கூடிய பொருத்தமாகவும் இருக்கும் என்பதையும் மறந்து எளிமையான சொற் திருத்திகள் உருவாக்கும் முறையைக் கிடப்பில் போடுவோம்.


Comments

5 responses to “செருப்புக்காக காலை வெட்டுவது எப்படி?”

 1. சயந்தன் Avatar
  சயந்தன்

  உங்க பதிவை ஓப்பன் பண்ணினதில இருந்து குளோஸ் பண்ணும் வரைக்கும் படித்தேன். நிறைய திங் பண்ண வைச்சிருக்கிறீங்க.. உங்களுக்கு தாங்க் பண்ணணும்.

 2. து.சாரங்கன் Avatar
  து.சாரங்கன்

  பல தமிழருக்கும் பழக்கப்பட்ட பல திரைப்படங்களிலும் நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்ட “பண்ணித்தமிழ்” பற்றி நன்றாக எழுதியுள்ளீர்கள். இது எதிர்வினையாகக் கூறும் கருத்து (sarcastic comment) என்று அறியாமல் உண்மையாகவே பின்பற்றிவிடப் போகிறார்கள், ஜாக்கிரதை 😉

  இதேபோல் ஒரு தமிழ் சொல்லொடு அதே பொருள் தரும் ஆங்கிலச் சொல்லைச் சேர்த்துப் பயன்படுத்துவதை – நடு சென்டர், கட்ச் பிடி – என்னவென்று சொல்வது?

 3. ரொம்ப உண்மைங்க. நான் கூட முதன் முறை தமிழ் தட்டச்சு செய்யும் போது பலர் தமிங்கலத்தை பரிந்துரைத்தார்கள். சிலர் தமிங்கலம் மட்டும் தான் உள்ளது என்றும் அது தான் சிறந்தது என்றும் வாதிட்டனர். என்ன செய்வது தவறான வழிகாட்டலில் நானும் தமிங்கலத்தையே பயின்றுவிட்டேன். தங்கள் பதிவின் மூலம் தமிழ்99 பற்றி அறிந்து கொண்டேன். கற்று வருகிறேன். கூடிய விரைவில் மாறுவேன்.

  நன்றி.

 4. சயந்தன் – என் பிளாக்குக்கு நீங்க விசிட் பண்ணது ஹேப்பியா இருக்கு 😉

  சாரங்கன் – நடு செண்டர், கேட் வாசல் போன்ற சொற்பயன்பாடுகள் ஒப்பீட்டளவில் குறைவு தான். ஆனால், கவலை தரும் இன்னொரு போக்கு என்னவென்றால் ஆங்கில உரிச்சொல்+ {அ, ஆ, ஆன} போட்டு பேசுவது. எடுத்துக்காட்டுக்கு, starightஆ போ, leftல cut பண்ணு, freeஆ விடு, homelyஆன பொண்ணு, superஆ இருக்கு 🙁 என்னளவில் பேசும்போது பண்ணத்தமிழையும் இந்த ‘ஆ’ தமிழையும் குறைக்கப் பார்க்கிறேன். இன்னுமொரு ரொம்பவும் கொச்சையான போக்கு – ஆங்கிலப் பெயர்ச்சொல் + தமிழ்ப் பெயர்ச்சொல் கலந்து கூட்டுச் சொற்களை உருவாக்குவது. எடுத்துக்காட்டுக்கு, பீச்சாங்கரை (beach+கரை = பீச்சாங்கரை = கடற்கரை!)..இந்த எடுத்துக்காட்டில் தெரியும் உறுத்தல் டீ+கடை = டீக்கடை என்பதில் தெரிவதில்லை. அப்படியே கேட்டுக் கேட்டு நம் மூளை மழுங்கி விட்டது. சிங்கப்பூரில் தேக்கடை என்று கூறும் வழக்கம் இருக்கிறது.

  கூமுட்டை (ஏங்க உங்க பேர மாத்திக்கக்கூடாதா, இப்படி அழைக்க சங்கடமா இருக்கு!) – தமிழிணையத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் கூட தமிங்கிலத் தட்டச்சு முறையைத் தொடர்ந்து புதியவர்களுக்கு சொல்லித் தருவது கவலையளிக்கிறது. நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

 5. க.சத்தியசீலன் Avatar
  க.சத்தியசீலன்

  ஆங்கிலம் கலந்து பேசுவது தவறே. பண்ணு என்பது தூய தமிழ்ச்சொல்லின் திரிபே. பண்படச்செய்தலே ‘பண்ணு’வென திரிந்தது.