* ஆங்கில வழியத்தில் படித்து தமிழில் துறை சார் சொற்கள் அறியாதோர் பயன்படுத்த வேண்டியது தமிழ் இணையப் பல்கலை அகரமுதலி . இதனால், சொற்களைத் திரும்ப கண்டுபிடிக்கும் அசட்டுத்தனத்தையும் பொருத்தமற்ற சொற்களை புதிதாக உருவாக்கும் பிழையையும் தவிர்க்கலாம்.
* இலக்கியத்தில் உள்ள பழங்காலத் தமிழ்ச் சொற்கள், போன சில நூற்றாண்டுகளில் தமிழில் புழங்கிய பிற மொழிச் சொற்கள் குறித்து அறிய சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி விலை மதிப்பற்ற ஒரு களஞ்சியம்.
* வலைப்பதிவு (blog), திரட்டி (aggregator) போன்ற அண்மைய கால நுட்பங்கள், போக்குகளுக்கான தமிழ்ச் சொற்களை அறிய உள்ள ஒரே தளம் தமிழ் விக்சனரி மட்டுமே. அதில் இல்லாத சொற்கள் குறித்து கேட்க, தேவையான இடங்களில் புதுச் சொற்களை உருவாக்க, பழைய பொருத்தமற்ற சொற்கள் குறித்து உரையாட தமிழ் விக்சனரி உரையாடல் குழுமத்தில் சேரலாம்.
4. இந்த முறை நான் இந்தியா சென்று திரும்பிய போது வாங்கி வந்த ஒரே நூல் – க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. சன்னதியா சன்னிதியா சந்நிதியா? கருப்பா கறுப்பா? சிகப்பா சிவப்பா ? அரைஞாணா அரைஞானா ? – போன்ற அடிக்கடித் தோன்றும் குழப்பங்களைத் தீர்த்துக் கொள்ள உதவும் நல்ல அகரமுதலி இது. இது போன்று அச்சடிக்கப்பட அகரமுதலிகள் இல்லாதோர் பலர், இந்தக் கேள்விகளுக்கான விடையை அறிய கூகுளில் கருப்பு-கறுப்பு என்று இரு சொல்லையும் இட்டு எது அதிகமான முடிவுகளைத் தருகிறதோ அதை சரியெனக் கருதுவது உண்டு. சில சமயம், இது சரியான முடிவுகளைத் தரும் என்றாலும், இது ஒரு பிழையான அணுகுமுறையாகும். மேலும் அறிய கூகுளுக்குத் தமிழ் தெரியாது பாருங்கள்.