உயிர்ப் பேணியலுகை – 1

எங்க ஊர் அம்மாபட்டில உள்ள அபத்தா, அப்பச்சிகளுக்கும் புரியிற மாதிரி நான் மேற்படிப்பு படிக்கணும்னா, பல் doctor, மனுச doctor, மாட்டு doctor, வீடு கட்டுற engineer, current விடுற engineerனு ஒரு சில படிப்புகள் தான் இருக்கு 😉 ஆனா, நான் எடுத்த படிப்புக்கள் எல்லாம் Industrial Biotechnology, Industrial Ecology, Sustainability-னு படிச்சவங்களுக்கே விளக்க வேண்டியதா இருக்கு.

நான் என்ன படிக்கிறேன்னு பிறருக்கு சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ள விரும்பும் அக்கா, தங்கைக்காகவும் bore அடித்தால் “What’s ur research abt buddy?”னு 108வது முறையாக கேட்டுக் கடுப்பேற்றும் உயிர்த் தோழர்களுக்காகவும் (!) என் ஆய்வு எதைக் குறித்துன்னு விளக்கக் கடமைப்பட்டிருக்கேன்.

தொழில்சார் உயிரித் தொழில்நுட்ப விளைபொருட்களின் பேணியலுகை ஆய்வு (Sustainability analysis of Industrial Biotechnology Products)

– இது தான் என் ஆய்வுப் படிப்புக்காக நான் எடுத்திருக்கிற தலைப்பு !

(கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிறேன் 😉 )

மனித வரலாறு நெடுகிலும் ஆடை, தளபாடங்கள், வீடு போன்ற நம் தேவைகளை நிறைவு செய்ய மரம், செடி, கொடிகளையும் அவற்றின் விளைபொருட்களையும் சார்ந்திருந்தோம். எடுத்துக்காட்டுக்கு, ஆடை நெய்ய பருத்தியைச் சார்ந்து இருந்தோம்.

19ஆம் நூற்றாண்டில் தான் தொல் நெய் வளத்தைக் கண்டறிந்தோம். அதற்குப் பிறகு எரிமம் தொடங்கி ஆடை, தளபாடங்கள், வேதிகள் என்று பல பொருட்களையும் தொல் நெய்யை மூலப்பொருளாகக் கொண்டு உருவாக்கத் தொடங்கினோம். எடுத்துக்காட்டுக்கு, பருத்திக்குப் பதில் Polyester கொண்டு ஆடைகள் உருவாக்கினோம். தொல் நெய் வழி உருவான பொருட்களின் விலை குறைவு, பயன், நீடித்த தரம், உருவாக்கு எளிமை, விளைபொருட் பல்வகைமை ஆகியவற்றின் காரணமாக தொல் நெய் வழிப் பொருட்களின் மீதான சார்பு நிலை கூடிக் கொண்டே வருகிறது.

எனினும் தொல் நெய் வளங்கள் நீடித்திருப்பவை அல்ல. 2050 வாக்கில் இவற்றின் கிடைப்பு அருகி விடும். கிடைப்பு குறையக் குறைய இவற்றுக்கான விலை உயரும். மூலப் பொருள் விலை உயர்வால், இதன் வழி உருவாக்கப்படும் பிற பொருட்களின் விற்பனை விலை கட்டுபடியாகாது. எனவே, தொல் நெய்க்கு மாற்றாக ஒரு மூலப் பொருள் தேவைப்படுகிறது. எரிமம், ஆற்றல் போன்ற துறைகளில் இந்த மாற்று மூலப்பொருளுக்கான தேவை மிகக் கூடுதலாகவும் உடனடியாகவும் உணரப்படுகிறது. சூரிய ஆற்றல், காற்றாற்றல், நீராற்றல், எரிமக் கலங்கள், ஹைட்ரஜன் என்று மாற்று ஆற்றல் மூலங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவை ஆற்றல் தேவைகளை நிறைவு செய்யக்கூடும் என்றாலும், தொல் நெய் தரும் எண்ணற்ற வேதிகளை உருவாக்குவதற்கு ஒரு மாற்று மூலப் பொருள் தேவை.

இந்த இடத்தில் நுட்ப வரலாறு ஒரு வட்டம் அடிக்கிறது !

தொல் நெய்யின் கண்டுபிடிப்புக்கு முன் நம் தேவைகளை மரம், செடிகளை கொண்டு தானே நிறைவு செய்தோம்! அதே போல் இப்பொழுதும் பெரும்பாலான நம் நவீன உலகத் தேவைகளை உயிர் மூலப் பொருட்களைக் கொண்டே நிறைவு செய்ய முடியும். எடுத்துக்காட்டுக்கு, சோளத்தில் இருந்து நெகிழி உருவாக்க முடியும். கரும்பில் இருந்து உயிர் எத்தனால் என்ற எரிம நெய்யை உருவாக்க முடியும். இவற்றை செய்து முடிப்பதற்குத் தோதாக, உயிரித் தொழில்நுட்பமும் நன்கு வளர்ச்சி அடைந்து உள்ளது.

ஆக, தொல் நெய்க்கு மாற்றாக உயிர் மூலப் பொருட்களும் அவற்றை செய்து முடிக்க உயிரித் தொழில்நுட்பமும் இருக்கிறது. தொல் நெய் வழிப் பொருட்களுடன் போட்டியிடும் அளவுக்கோ அதை விட மேம்பட்ட தரத்திலோ கூட இவ்வுயிர்வழிப் பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றில், சில சமயம், விலை கட்டுபடியாகாவிட்டாலும் கூட இவற்றை சந்தைப்படுத்த பெரும்பாலான அரசுகள் மானியங்கள் தருகின்றன.

ஏன்?

தொல் நெய்யை நிலத்தில் இருந்து எடுத்தல், அவற்றைப் பகுத்தல், தொல் நெய் வழிப் பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு என்று வழி நெடுகிலும் ஏராளமான காரணிகள் சூழலுக்குக் கேடு விளைவிக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு, கல்நெய்ப் பயன்பாட்டால் வாகனப் புகை வருகிறது. புகையால் உடல் நலம் கெடுகிறது. உலகளாவிய எரிம நெய் எரிப்பால் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு அளவு உயர்கிறது. இதனால் உலக வெப்பநிலை அதிகரிக்கிறது. உலக வெப்பநிலை அதிகரித்தால் கடல் நிலை உயரும். கடல் நிலை உயர்ந்தால் நாடுகள் மூழ்கும்.

நாடுகள் மூழ்கினால் யாரும் வலைப்பதிய முடியாது என்ற அபாயத்தை உணர்ந்த உலக நாடுகள் அனைத்தும் கூடி, தொல் நெய் மீதான சார்பு நிலையையும், அதன் வழியாக உலக வெப்பமாதலையும் குறைப்பது என்று உறுதி பூண்டார்கள். அதற்கு உதவியாக உயிர் மூலப் பொருட்கள் வழி உற்பத்தி, அவற்றின் மீதான ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு மானியங்கள், நிதி ஒதுக்குகிறார்கள்.

சரி, உயிர் மூலப் பொருட்களும், உயிரித் தொழில் நுட்பமும் இருக்கிறது. அரசு, நிறுவன ஆதரவும் இருக்கிறது. இனி எல்லாம் சுகம் தானே !

– என்று மகிழ முடியாது.

ஏனெனில், உயிர்மூலப் பொருட்கள் வழி உற்பத்தியிலும் 1007 பிரச்சினைகள் இருக்கின்றன!

என்றாலும், பிரச்சினைகள் இருப்பது நல்லதே!

இல்லாவிட்டால் எனக்கு இந்த PhD படிப்புக்கான வாய்ப்பு கிடைத்திருக்காது 😉

(தொடரும்..)

அருஞ்சொற்பொருள்:

1. தளபாடம் – Furniture
2. தொல் நெய் – Fossil Oil
3. எரிமம் – Fuel
4. வேதி – Chemical.
5. எரிமக் கலம் – Fuel Cell
6. நெகிழி – Plastic
7. உயிர் எத்தனால் – BioEthanol
8. உயிர்வழிப் பொருட்கள் – Bio Products
9. கல் நெய் – Petrol


Comments

12 responses to “உயிர்ப் பேணியலுகை – 1”

  1. நுட்பவிடயத்தை எப்படி உங்களுக்கு இவ்வளவு சரளமாக எழுத வருகிறது. நான் முயற்சி செய்து தோல்வி அடைந்து தள்ளி போட்டுக்கொண்டு இருக்கிறேன் :-). தொடருக்கு வாழ்த்துக்கள்.
    ஒரு கேள்வி இங்கே, இந்த தொல் நெய் சார்பில்லா முயற்சிகளில் பெரும் தடையாய் இருப்பது எப்படி உடனே கிடைக்ககூடிய மூலபொருட்களை உருவாக்குவது? அதாவது இப்பொழுது கல் நெய்க்கு பதில் ethanolலாய் உபயோகிக்லாம். இது எப்படி ஒரு உலகளாவிய மாற்றாக முடியும். எல்லோரும் கரும்பும், ஜட்ரொப்பாவும்(ஆமணக்கு?) பயிரிடவேண்டியிருக்காதா? அதனால் மற்ற பயிரின் விலைகள் ஏறிவிடாதா?

  2. சத்யா, நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சினையும் குறிப்பிடத்தக்கது. அதோடு பிறவற்றையும் அடுத்தடுத்த பாகங்களில் விளக்க முயல்கிறேன்.

  3. தல,
    – ஏன் எண்ணெய்ய நெய்னு சொல்றீங்க ?
    – TERIங்ற ஆராய்ச்சி நிலயத்துல ஏழே மாசத்துல ஆமணக்கெண்ணைய் எடுக்கலாம்னு சொல்றாங்க. சுட்டி இங்கே. அதைப் பற்றி உங்க கருத்து என்ன ? ஊர்ல கொஞ்சம் எடம் இருக்கு, வானம் பாத்த பூமி, தண்ணி கெடையாது, கருவேல மரம் தான் இருக்கு, அது தான் மொளைக்கும். இந்த நெலத்துல ஆமணக்கு ட்ரை பண்ணலாமா ?

    கேள்வியப் பாத்து டென்சனாயிறாதீங்க. Biotechnologyன்னா விவசாயத்திற்க்கும் கொஞ்சம் தொடர்பு இருக்குனு நெனச்சேன்.

    நன்றி.

  4. தொண்டா 🙂

    எள்+ நெய் = எண்ணெய் ஆனது. அதனால் எள்ளில் இருந்து வராத பிற நெய்களுக்கும் எண்ணெய் என்று நீட்டி முழக்கத் தேவையில்லை. எல்லா நெய்யும் எண்ணெயானாதால் உண்மையான எண்ணெய் நல்ல எண்ணெய் ஆனது 😉

    இந்தக்
    கட்டுரையில் இது போன்ற பல கலைச்சொற்களை இராம.கி தருகிறார். படித்துப் பார்க்கலாம்.

    TERI நம்பகத் தன்மை வாய்ந்த நிறுவனம் தான். ஆமணக்கு நெய்க்கு விலை இருந்து உங்கள் நிலத்தில் விளையும் என்றால் விளைவிக்கலாம் தான் 😉 கூடிய விரைவில் இது இந்தியாவில் பெரும் தொழிலாக உருவெடுக்கும் என்று கணிக்கப்படுகிறது.

  5. //தொழில்சார் உயிரித் தொழில்நுட்ப விளைபொருட்களின் பேணியலுகை ஆய்வு (Sustainability analysis of Industrial Biotechnology Products)
    – இது தான் என் ஆய்வுப் படிப்புக்காக நான் எடுத்திருக்கிற தலைப்பு !
    (கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிறேன்)//
    வாசிச்ச எனக்கே மூச்சு வாங்கிச்சு. அப்ப எழுதின உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? 🙂
    இந்த கட்டுரை வாசித்துக் கொண்டு போனபோது, சத்யாவுக்கு வந்த அதே ஆச்சரியம்தான் எனக்கும் வந்தது. எப்படி தமிழ்மொழியை, இப்படி சரளமாக இந்த விடயங்களில்கூட எழுதுறீங்க? Sustainability க்கு தமிழ் தேடி நான் தலை சுற்றிப் போன நாட்களும் உண்டு. இந்த ‘பேணியலுகை’ என்ற சொல்லை எங்கிருந்து பெற்றீர்கள்?
    நானும் ஆராய்ச்சிபற்றி சுருக்கமா தமிழில் எழுத ஆரம்பித்து (உங்களுக்கு அக்கா, தங்கை கேட்டது மாதிரி, என்னையும் ஒரு அண்ணா எழுதும்படி கேட்டார்), தமிழ் சொற்களுக்கு பட்ட கஷ்டத்தில், முயற்சியை கை விட்டு விட்டேன் :(.
    உங்க உதவியோட, அந்த முயற்சியை மீண்டும் ஆரம்பிக்கலாம்னு தோணுது. 🙂

  6. கலை, தமிழ் விக்கிபீடியாவில் பேண்தகுநிலை, தாங்குதிறன் என்று இரு வேறு சொற்களால் sustainability குறிக்கப்படுகிறது. அது இரண்டுமே சரியான பொருளாக எனக்குத் தோன்றவில்லை. அங்கு இன்னும் உரையாட வேண்டும். தமிழ் விக்சனரி குழுமத்தில் கலந்துரையாடியதிலும் தெளிவான பரிந்துரை கிடைக்கவில்லை. ஆக, பேணியலுகை என்பது நானாக இட்டுக் கட்டிய சொல் தான்.

    பேண் – sustain
    பேண இயன்ற – sustainable
    பேணியலுகை – sustainability

    உண்மையில் இது வரை இக்கட்டுரையில் ஒரு நுட்பத்தையும் விளக்கத் தொடங்கவில்லை 🙂 ஆனால், இது போன்ற அறிவியல் துறை சார் கட்டுரைகளை நாம் இணையத்தில் அவ்வளவாக படிக்க வாய்ப்பு குறைவாக படித்திருப்பதால் ஒரு வித வியப்பு வருகிறது என்று நினைக்கிறேன்.

    அடுத்து விளக்க இருக்கும் கருத்துருக்களுக்கும் கலைச்சொல் வகையில் நிறைய யோசிக்க வேண்டும் 🙁

    இராம.கி அறிவியல் கருத்துக்களை விளக்குவதைப் பார்த்து தான் நாமும் எழுத முடியும் என்று நம்பிக்கை வந்தது. உங்களுக்கும் சத்யாவுக்கும் அந்த நம்பிக்கை வந்தால் மகிழ்ச்சி தான்

  7. ரவி,

    அருமையான தொடரொன்றை ஆரம்பித்திருக்கிறீர்கள். நன்றி!

    கலை மற்றும் சத்தியாவைப்பின்பற்றி நானும் ஆச்சரியப்பட்டுக்கொள்கிறேன். கைவசம் ஒரு அகராதியும் இல்லாதநிலையில் (கப்பலில் வந்துட்ட்டேஏஏஏ இருக்கு…) படுகஷ்டமாக இருக்கிறது. இணைய அகராதிகளும் பெரிய அளவில் உதவியாக இல்லை. 🙁

    சரி, உங்களுடைய இடுகைக்கு வருகிறேன். எத்தனால் பயன்பற்றுவதும், அதற்காக பணப்பயிர்களை விளைவிப்பதும் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?

    விரிவாக உங்களுடைய தொடரை எழுதுவீர்களென்று எதிர்பார்க்கிறேன். இந்தத் தொடருக்காகவே, உங்களை என்னுடைய கூகுள் படிப்பானில் போட்டுவைக்கப்போகிறேன். 🙂

    -மதி

  8. மதி,

    இணையத் தமிழ் அகரமுதலிகளின் பயன் மட்டுப்படுத்தப்பட்டது தான் 🙁 இயன்ற அளவு விக்சனரியை வளர்த்தெடுக்க முயல்கிறோம் !

    > 😉

    பல வேளைகளில் புது நுட்பச் சொற்களுக்கு நாமே இட்டுக் கட்ட வேண்டியிருக்கும்.

    //உங்களுடைய இடுகைக்கு வருகிறேன். எத்தனால் பயன்பற்றுவதும், அதற்காக பணப்பயிர்களை விளைவிப்பதும் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?//

    இது குறித்து thesisஏ எழுத முடியும் !! இயன்ற அளவு விரிவாக எழுத முயல்கிறேன்.

  9. அடுத்த பாகம் எங்கே.. எங்கே..எங்கே…
    நானும் ஓரே ஒரு நுட்ப பதிவை போட்டேன். வரும் ஒன்றிரண்டு பதிவர்களும் வருவதை நிறுத்திவிட்டார்கள் போலிருக்கறது. இதுக்கெல்லாம் அசரலாமா?

  10. சிவகுமார் Avatar
    சிவகுமார்

    ரவி, நல்லம் என்றால் கருப்பு என்று எங்கேயோ படித்த நினைவு. கருநிறத்தில் இருப்பதால் நல்ல + எள் + நெய் = நல்லெண்ணெய் ஆனது. இன்றும் தெலுங்கில் கருப்பைக் குறிக்க நல்லா என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

  11. ஓ..நல்லாவுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா..இன்னும் நிறைய தெலுங்குப் படம் பார்க்கணும் 🙂 விளக்கத்துக்கு நன்றி சிவகுமார்

  12. சிவகுமார் Avatar
    சிவகுமார்

    சூழல் பற்றி நிறைய எழுதுங்க ரவி. எனக்கு இதைப் பற்றி தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் உண்டு.