இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் Creative Commons உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது

இன்று முதல் இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன். இதன் மூலம்,

  • இந்த வலைப்பதிவின் உள்ளடக்கத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
  • திருத்தி மேம்படுத்தலாம்.
  • விற்கலாம்.
  • முழுக்கட்டுரையாக இன்னொரு தளத்தில் இடலாம்.
  • அச்சிட்டோ, ஒலிப்பதிவாகவோ, EPUB, PDF, MOBI போன்ற வடிவங்களிலோ பகிரலாம்

இவற்றைச் செய்ய என்னுடைய முன் ஒப்புதல் தேவையில்லை. ஆனால், அவ்வாறு பயன்படுத்தும் போது, நீங்கள் வெளியிடும் உள்ளடக்கமும் மேற்கண்ட அனைத்து உரிமங்களையும் அதனைப் பயன்படுத்துபவருக்குத் தர வேண்டும். உள்ளடக்கத்தின் மூலமாக இந்த இணையத்தளத்தின் முகவரியையும் கட்டுரையையும் குறிப்பிட வேண்டும். இணையத்தை அணுகவல்ல ஊடகமாக இருப்பின், சொடுக்கவல்ல இணைப்பு ஒன்றைத் தருவதும் வரவேற்கப்படுகிறது.

Zenhabits தளம் தனது உள்ளடக்கத்தை இவ்வாறு தந்ததில் இருந்தே நானும் இப்படிச் செய்யலாமே என்று எண்ணி வந்தேன். இன்று தமிழில் கட்டற்ற நூல்களை வழங்குவதற்கான முயற்சியைக் கண்ட பிறகு இதனை உடனே செய்ய வேண்டும் என்று தோன்றியது. வருங்காலத்தில் தமிழ் தழைத்தோங்க எண்ணற்ற உள்ளடக்கம் கட்டற்று கிடைப்பது இன்றியமையாதது. எனவே, உங்கள் ஆக்கங்களையும் இவ்வாறு பொதுப்பயன்பாட்டுக்கு ஏற்ற உரிமத்தில் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நினைவில் நின்றவை – ஏப்ரல் 20, 2013

* தமிழில் வலைப்பதிந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் ஆகி விட்டது ! இனி அடிக்கடி வலைப்பதியும் அளவுக்கு வாழ்ந்து பார்க்க வேண்டும் 🙂

* போன ஆண்டு சனவரி முதல் சூன் வரை பேசுபுக்கு, துவிட்டர் விடுப்பு எடுத்தது போலவே இந்த ஆண்டும் மூன்று மாதங்களைக் கடந்து விட்டேன். தகவல் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க பேசுபுக்கு நண்பர்கள் எண்ணிக்கையை 50க்கு கீழே கொண்டு வந்துள்ளேன். துவிட்டரில் பின்தொடர்பவர்களையும் 100க்குள் கொண்டு வர முயன்று கொண்டிருக்கிறேன்.ஒரு like, retweet போடவாவது மனம் துடித்தாலும் கட்டுப்படுத்திக் கொள்கிறேன். நிம்மதியாக இருக்கிறது.

* வேலை நேரத்தில் கவனம் சிதறாமல் இருக்க, முக்கியமான பக்கங்களை Pocket செயலியில் சேர்த்து வைத்து பிறகு படிக்கலாம். ஒரே பிரச்சினை என்னவென்றால், புத்தகங்களை வாங்கிக் குவித்துப் படிக்காமல் விடுவது போல், இதிலும் நூற்றுக்கணக்கான இணைப்புகள் தேங்கிக் கிடக்கின்றன 🙁

* iPad mini வாங்கி இருக்கிறேன். வெகுமக்கள் இதழ்களையும், நூல்களையும் இதன் மூலம் படிக்கத் தொடங்கியிருப்பதால் வீட்டில் காகிதக் குவியல் குறைகிறது. அதே நேரம், தொடர்ந்து வாங்கவே தோன்றியிருக்காத பல படைப்புகளையும் செயலிகளையும் வாங்கத் தூண்டுகிறது ! இதனைக் கொண்டு அக்கா மகனுக்குக் கணிதம் கற்பிக்க முடிகிறது. பெரும்பாலான நேரம் குழந்தையுடன் இருக்கும் மனைவிக்கும் வாசிப்புக்கு உகந்த கருவியாக இருக்கிறது. கையடக்கக் கணினி வாங்குவதாக இருந்தால் தயங்காமல் iPad mini வாங்குங்கள். திற மூலத்துக்கு மட்டுமே ஆதரவு என்பவர்கள் Google Nexus 7 வாங்கலாம். அதற்கும் பெரிதாக வாங்கினால், கையில் வைத்துக் கொண்டு செயல்பட இடையூறாக இருக்கும். உங்களிடம் ஏற்கனவே உயர் வகை கைப்பேசி இருந்தால், wifi மட்டும் உள்ள iPad போதுமானது. இணைய இணைப்பு தேவைப்படும் நேரங்களில் கைப்பேசியில் wifi hotspot போட்டுக் கொள்ளலாம்.

* நேரம் கிடைக்கும் போது Google Mapsல் நேரம் செலவிடுகிறேன். இந்திய மாநிலங்களாவது பாதி எங்கிருக்கிறது என்று தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு தமிழக மாவட்டங்கள் எவற்றின் அருகே எவை உள்ளன என்று தெரியும்? வெவ்வேறு ஊர்களுக்குப் போக நினைக்கும் போது சரியான, விரைவான வழிகளை அறிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தின் காட்டு வளம், ஊர்களின் பிரச்சினைகள் என்று பலவற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது. புவியியலும் ரொம்ப முக்கியம், அமைச்சரே !

* பிராய்லர் கோழி உண்பது அவ்வளவு நல்லதல்ல என்று பரவலான கருத்து இருப்பதால், நாட்டுக் கோழி வாங்கி வந்தேன். அதையும் பண்ணையில் வைத்து தீவனம் போட்டே வளர்க்கிறார்கள் என்கிறார்கள். பழங்கள் சத்தானவை என்று ஆசைப்பட்டு வாங்கினால், என்ன மருந்து போட்டு வளர்த்தார்களோ என்றே யோசிக்க வேண்டி இருக்கிறது. எதைச் சாப்பிட, எதை விட? ஊர் பக்கம் போய், நாமளே முழுக்க முழுக்க இயற்கை முறை வேளாண்மை பார்த்துச் சாப்பிடுவது தான் ஒரே வழி போல !

* கூகுள் ரீடர் மூடுவிழா காண இருக்கிறது. எனவே, இந்தப் பதிவில் புதிய இடுகைகள் வந்தால் தெரிந்து கொள்வதற்கு, இத்தளத்தின் கீழ் பகுதியில் உள்ள பெட்டியில் உங்கள் மின்மடல் விவரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். கூகுள் ரீடருக்கு மாற்றாக Feedly பயன்படுத்தலாம்.

விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுங்கள். புத்தகங்களை வெல்லுங்கள் !

என்னிடம் உள்ள சில புத்தகங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இவற்றில் ஏதாவது ஒன்று உங்களுக்கு வேண்டுமா? அந்த நூல் குறித்தோ அந்த நூலின் பேசு பொருள்கள் குறித்தோ தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரை எழுதி விட்டு, இந்த இடுகையின் மறுமொழிப் பெட்டியில் குறிப்பிடுங்கள். கட்டுரை எழுத உதவி தேவையெனில் இங்கு கேளுங்குள். மின்மடல் மூலம் உங்களைத் தொடர்பு கொண்டு, உங்கள் முகவரிக்குப் புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்.

புத்தகங்களின் பட்டியல்:

1. தேடு – கூகுளின் வெற்றிக் கதை. நா. சொக்கன், கிழக்கு பதிப்பகம்.

2. தாமரை பூத்த தடாகம். சு. தியடோர் பாசுக்கரன், உயிர்மை பதிப்பகம். (2 படிகள்)

3. இப்போது அவை இங்கு வருவது இல்லை. கிருசுணன் ரஞ்சனா, உயிர்மை பதிப்பகம்.

4. பாம்பு என்றால்?. ச. முகமது அலி, இயற்கை வரலாறு அறக்கட்டளை.

5. கூழாங்கற்கள் பாடுகின்றன. எசு. இராமகிருசுணன், உயிர்மை பதிப்பகம்.

6. பெண் ஏன் அடிமையானாள்?. தந்தை பெரியார், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு.

7. அர்த்தமுள்ள இந்துமதம். பாகங்கள் 1, 2, 3, 5, 6, 7, 8. கண்ணதாசன், வானதி பதிப்பகம். (அனைத்துப் பாகங்களையும் சேர்த்துப் பெற ஏழு கட்டுரைகள் எழுத வேண்டும்.)

8. The Alchemist. Paulo Coelho, Harpercollins Publishers India.

9. The Google Story. David A. Vise, Pan Books.

10. Go Kiss the World – Life lessons for the young professional. Subroto Bagchi, Penguin portfolio.

11. Chetan Bhagat Novel collection from Rupa. Co publishers: five point someone, Revolution 2020, 2 States, one night @ the call center. (அனைத்தையும் சேர்த்துப் பெற நான்கு கட்டுரைகள் எழுத வேண்டும்)

விதிகள்:

* கட்டுரை 10 கிலோ பைட்டுக்கு குறையாமல் இருக்க வேண்டும். நீங்கள் எழுத விரும்பும் தலைப்பில் ஏற்கனவே கட்டுரை இருந்தால், அதனை விரிவாக்குங்கள். பரிசுக்கு ஏற்ற தரமான கட்டுரையா என்று பார்க்கப்படும். எடுத்துக்காட்டுக்கு, சில நல்ல கட்டுரைகளை இங்கு காணலாம்.

* அனைத்து நாட்டவரும் போட்டியில் பங்கேற்கலாம். ஆனால், புத்தகங்களை இந்தியா அல்லது இலங்கையில் உள்ள உங்கள் முகவரிக்கோ உங்கள் நண்பர்களின் முகவரிக்கோ மட்டுமே அனுப்பி வைக்க இயலும். இலங்கை முகவரிக்கு நூல் வந்து சேர சற்று தாமதம் ஆகலாம்.

* நிறைய பேர் பங்கேற்க வேண்டும் என்பதால் ஒருவருக்கு ஆகக்கூடி இரண்டு புத்தகங்கள் மட்டுமே. முந்துவோருக்கு முன்னுரிமை. எனினும், தொடர்ந்தும் விக்கிப்பீடியாவில் எழுதுவீர்கள் தானே? 🙂

* ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பவர்கள் இப்போட்டியில் பங்கேற்க ஒரு நூலுக்கு இரண்டு கட்டுரைகள் எழுத வேண்டும் 🙂 புதியவர்கள் ஒன்று எழுதினால் போதும்.

இந்த முயற்சி வெற்றி பெற்றால் இன்னும் சில நூல்களைப் பகிர்ந்து கொள்ள முயல்வேன். இன்னும் சிலரும் இது போல் தங்கள் சேகரிப்புகளைப் பகிர்ந்து கொள்ள முன்வந்தால் நன்றாக இருக்கும்.

புதுமையான தமிழ்ப் பெயர்கள் போட்டி

இற்றை:போட்டிக் காலம் முடிந்தது. சூன் 7 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும். தொடர்ந்தும் புதிய பெயர்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். அவை peyar.in தளத்தில் தொகுத்து வைக்கப்படும். நன்றி.

குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவது குறைந்து வருகிறது. யாரும் தமிழில் பெயர் வைக்க மாட்டேன் என்று கங்கணம் கட்டுவது இல்லை என்றாலும், தமிழ்ப் பெயர்கள் என்றாலே பழமையானவை, பாமரத்தனமானவை என்ற பிழையான பொதுக் கருத்து நிலவுகிறது. தமிழில் பெயர் வைக்கிறோம் என்று நினைப்பவர்கள் கூட பிறமொழி மூலம் உள்ள பெயர்களை வைத்து விடுகிறார்கள். எனவே, தமிழ்ப் பெயர்களைச் சூட்டும் வழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், பின்வரும் போட்டியை அறிவிக்கிறோம்.

குழந்தைகளுக்குச் சூட்டுவதற்கு புதுமையான தமிழ்ப் பெயர்கள் தேவை.

மொத்தப் பரிசு: இந்திய ரூபாய் 1000/- அல்லது அதற்கு ஈடான புத்தகங்கள்.

போட்டி நடைபெறும் காலம்: ஏப்ரல் 20, 2013 முதல் மே 20, 2013 வரை.

பெயர்களை எப்படித் தெரிவிப்பது?: கீழே உள்ள மறுமொழிப் பெட்டியில் தெரிவியுங்கள்.

விதிகள்:

* பெயர்கள் / பெயரின் மூலச் சொற்கள் தூய தமிழாக இருக்க வேண்டும். இலக்கியங்கள் / அகரமுதலிகளில் இருந்து மேற்கோள் தர முடிந்தால் கூடுதல் புள்ளிகள்.

* பெயர்கள் புதுமையாக இருக்க வேண்டும்.

* கிரந்த எழுத்துகள் உள்ள பெயர்கள், வட மொழியா பிற மொழியா தமிழ் மொழியா என்று குழப்பும் மூலச் சொற்களை உடைய பெயர்களைப் போட்டியில் சேர்க்க இயலாது.

* ஒருவர் எத்தனைப் பெயர்களை வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். ஒரே பெயரை ஒன்றுக்கு மேற்பட்டவர் பரிந்துரைத்திருந்தால், முதலில் பரிந்துரைத்தவர் மட்டுமே போட்டிக்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்.

* சிறந்த பெயர்கள் நடுவர் குழு மூலமாகவும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டும் தேர்ந்தெடுக்கப்படும்.

* விதிகளுக்குப் பொருந்தாத பெயர்கள் உடனுக்குடன் நீக்கப்படும். போட்டி விதிகளுக்கு உட்பட்டு வரும் அனைத்துப் பெயர்களும் peyar.in தளத்தில் சேர்க்கப்படும்.

பி. கு. – பரிசுத் தொகை / புத்தகங்களை அளிக்க புரவலர்கள் வரவேற்கப்படுகிறார்கள் 🙂

தமிழ் ஆவண மாநாடு, கொழும்பு – ஏப்ரல் 27, 28

வரும் ஏப்ரல் 27, 28 தேதிகளில் கொழும்பில் தமிழ் ஆவண மாநாடு நடைபெறுகிறது. ஏப்ரல் 26ல் கொழும்பிலும், ஏப்ரல் 29ல் வவுனியாவிலும் ஒரு விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு ஏப்ரல் இறுதி வாரம் இலங்கைக்குச் செல்கிறேன். தமிழ், விக்கிப்பீடியா ஆகியவற்றில் ஆர்வம் உள்ள நண்பர்களைச் சந்திக்க விரும்புகிறேன். இந்தியாவில் இருந்து இலங்கை சென்று வருவது எளிது. இலங்கையில் இறங்கிய பிறகு விசா பெற்றுக் கொள்ளலாம். முயன்று பாருங்களேன் !