ஏன் ஒரு ஆங்கிலச் சொல்லை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தமிழாக்கக்கூடாது?

பண அட்டைகள் குறித்த தமிழாக்கங்கள் பற்றி இராம.கி எழுதி இருந்தார். இது தொடர்பான உரையாடல் தமிழ் விக்சனரி குழுமத்தில் நடந்தது.

ஒரு ஆங்கிலச் சொல் வெவ்வெறு சூழல்களில் வந்தாலும், தமிழிலும் எல்லா இடங்களிலும் ஒரே சொல் கொண்டு தான் மொழிபெயர்க்க வேண்டும் என்பது இராம. கி.யின் பரிந்துரை. இது தொடர்பில் என் கருத்துக்கள்:

ஆங்கிலத்தில் ஒரு வேர்ச்சொல் பல இடங்களில் வரும்போது அவ்வெல்லா இடங்களுக்கும் ஒரே தமிழ்ச் சொல்லை ஆளத் தேவை இல்லை.

தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கிறோம் என்று வைப்போம். கண், கண்ணாடி, கண்ணீர் என்பதை eye, eye glass, eye water என்றா மொழிபெயர்ப்போம்? eye, glass, tear என்று அந்த ஊர் மொழிச் சொல்லை வைத்து தானே மொழிபெயர்க்கிறோம்.

ஏன் ஆங்கிலத்தில் இருந்து பெயர்க்கும் போது மட்டும் பல சூழல்களில் இருக்கும் ஒரு சொல்லைப் பிடித்து தொங்க வேண்டும்? இதுவும் ஒரு வகை ஆங்கில அடிமைச் சிந்தனை தான். ஆங்கிலேயன் என்ன சொல் பயன்படுத்தினான், எதற்குப் பயன்படுத்தினான் என்பதை அச்சு பிசகாமல் மதிப்பளித்துப் பின்பற்றித் தமிழாக்குவது போல் இருக்கிறது. ஏன் இந்தத் தமிழ்ச் சொல் என்று யாராவது வினவினால், குறிப்பிட்ட ஆங்கிலச்சொல்லைக் குறிப்பிட்டு விளக்காமல் நம் தமிழாக்கத்தை நியாயப்படுத்த முடியாது. இங்கு தமிழ்ச் சொல் என்பது ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு மாற்று போல் இருக்கிறதே தவிர, தமிழர்களின் சுதந்திரமான சிந்தனைக்கு வித்திடுவதாகத் தெரியவில்லை. ஒரு புதிய சிந்தனையைச் சூழலைப் புரிந்து கொள்ள ஆங்கிலச் சொல் ஒரு கருவியாக இருக்கலாமே தவிர,  தமிழின் அனைத்துப் புதுச் சொற்களும் ஆங்கில அடிப்படை, சார்பு உடையதாக இருப்பது சரி இல்லை.

ஆங்கிலச் சொற்களை நேரடியாக மொழிபெயர்ப்பது செயற்கையாக இருக்கிறது. ஒரே பொருளை இரு வேறு மொழியினர் வேறு விதமாகப் பார்ப்பது இல்லையா? rainbow – ஆங்கிலேயேனுக்கு மழையின் வில்லாகிறது; நமக்கு வானின் வில்லாகிறது.  இரண்டும் குறிக்கும் பொருள் ஒன்று தான். இரு சக்கர வண்டி, துவி சக்கர வண்டி போன்ற சொற்கள் இருந்தாலும் மிதிவண்டி என்ற சொல்லே நிலைத்தது. மக்களைப் பொருத்தவரை அது மிதித்தால் நகரும் வண்டி. அவ்வளவு தான். 

நாம் பயன்படுத்தும் சொற்கள் நம் சமூகத்தை, பண்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். அஞ்சலி, condolence meeting, இரங்கல் கூட்டம்  போன்ற சொற்கள் இருக்க,  அக வணக்கம், வீர வணக்கம்  போன்ற சொற்களை ஈழத்தவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சொற்களின் ஊடாக வெளிப்படும் அம்மக்களின் பண்பாட்டைத் தலைகீழாக நின்றாலும் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்து விட முடியாது. 

சொற்கள் உள்ளூர் சிந்தனையை வெளிப்படுத்த வேண்டும். சொல்லைத் தமிழாக்காமல் சிந்தனையைத் தமிழாக்க வேண்டும். ஆங்கிலச் சொல்லையே அறியாவிட்டாலும், தமிழ்ச் சிந்தனைக்கு ஏற்ப சொல் ஆக்குவது தான் மொழி மரபு என்பது என் நம்பிக்கை, நிலைப்பாடு.


Comments

12 responses to “ஏன் ஒரு ஆங்கிலச் சொல்லை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தமிழாக்கக்கூடாது?”

  1. எப்படி இப்படியெல்லாம் உங்களால் தெளிவாக சிந்திக்க முடிகின்றது?

    ஏதோ நம்மபாட்டுக்கு எந்த மொழியிலாவது (கலந்துகட்டி) பேசிக்கொண்டு, எழுதிக்கொண்டு போவோம் என்றில்லாமல், மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உங்கள் பதிவுக்கு பாராட்டுக்கள்.

  2. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    கலை »

    //எப்படி இப்படியெல்லாம் உங்களால் தெளிவாக சிந்திக்க முடிகின்றது? //

    கண்டிப்பா தனியா அறை எடுத்து யோசிக்கலை 😉

    //பதிவுக்கு பாராட்டுக்கள்.//

    நன்றி

  3. சிறந்த பதிவு.

    ஆனால் //சொல்லைத் தமிழாக்காமல் சிந்தனையைத் தமிழாக்குவதே நல்ல தமிழாக்கமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து//

    விளங்கவில்லை

    இன்றைய உலகில் பாலர் பாடசாலையே போகாதவர்கள் கூட தமது அன்றாக வாழ்வில் என்னற்ற ஆங்கில சொற்களை உபயோகிப்பதை அவதானிக்கலாம். இவை ஆங்கில சொற்களா, தமிழ் சொற்களா என்றுக்கூட பலருக்கு தெரியாது. அதுபற்றிய சிந்தனையோ ஆராய்ச்சியோ அவர்களிடம் இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை.

    இந்த சூழ்நிலையடிப்படையில் எப்படி சிந்தனையை தமிழாக்குவது?

    பேசுவது தமிழா ஆங்கிலமா என்ற எந்த சிந்தனையுமின்றி தமது எண்ணக்கருவை வெளிப்படுத்தினால் சரி எனும் போக்கில் பேசிவரும் மக்கள் மத்தியில், எழுத்துத்துரையில் தம்மை ஈடுபடுத்தியுள்ளவர்களாவது முடிந்தவரையில் தூய தமிழ் சொற்பிரயோகங்களை உபயோகித்தால் தான் தமிழ் சொற்களின் சிதைவுகளில் இருந்து தமிழை நிலை நிறுத்த முடியும் என்பது எனது கருத்தாகும்.

    மொழி சிந்தனையற்று பேசிவரும் நம்மவர்களுக்கு வாசிக்கும் போதாவது தூய தமிழ் சொற்கள் சென்றடையட்டுமே.

    இவ்வாரான சிறந்த சிந்தனைக்குரிய பதிவுகளே நம்மவர்களிடம் விழிப்புனர்வை ஏற்படுத்தக்கூடியன. நன்றி இரவிசங்கர்.

  4. ரவிசங்கர் Avatar
    ரவிசங்கர்

    அருண் –

    பண அட்டைகள் குறித்த இராம.கி அவர்களின் இடுகையைப் பாருங்கள். இதில் credit என்ற சொல்லின் பொருள் என்ன என்று ஆய்ந்து credit card என்பதற்கான தமிழ்ச் சொல்லைப் பரிந்துரைக்கிறார். இது சொல்லைத் தமிழாக்குவது.

    credit என்பதன் பொருளை ஆயாமல் “credit card கடன் பெற உதவுகிறது; எனவே, இதைக் கடன் அட்டை என அழைக்கலாம்” என்று சொல்வது சிந்தனையைத் தமிழாக்குவது. இங்கு நாம் credit என்னும் சொல்லைக் குறித்து கவலைப்படுவதில்லை. அதன் பயன்பாடு, அது குறித்த நம் சிந்தனை, புரிதல் என்ன என்றே நோக்குகிறோம்.

    இந்த எடுத்துக்காட்டு உங்கள் புரிதலுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.

    பாமரர்கள் தானாக ஆங்கிலச் சொற்களைக் கற்றுக் கொள்வதில்லை. அவர்களுக்கு அச்சொற்களை அறிமுகப்படுத்துவதில் அச்சு, வானொலி, காட்சி ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே, இவ்வூடகங்கள் நல்ல தமிழ்ச் சொற்களை ஆள்வதன் மூலம் பாமரர்களின் சொற் பயன்பாட்டிலும் மாறுதல்களைக் கொண்டு வர முடியும்.
    என்றாவது ஒரு நாள் சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 கேட்டுப் பாருங்கள். நல்ல தமிழ்ச் சொற்கள் எவ்வளவு இலகுவாக மக்கள் வாயில் புழங்குகின்றன என்று புரியும்.

    இந்த ஊடக வரிசையில் புதிதாக வலுவாகவும் இணைய ஊடகம் சேர்ந்திருக்கிறது. மற்ற ஊடகங்களைப் போல் அல்லாமல் இணைய ஊடகம் முழுக்க முழுக்க நம்மைப் போன்ற மக்களின் கட்டுப்பாட்டில் இருக்க வல்லது என்பதால் இதில் நம் பொறுப்பை உணர்ந்து நல்ல தமிழ்ச் சொற்களை ஆள்வதன் மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வர முடியும் என்று நினைக்கிறேன். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு – தமிழ் வலைப்பதிவுகளில் இடுகைகள், பதிவு, மறுமொழி, வார்ப்புரு, ஓடை போன்ற அழகான தமிழ்ச் சொற்கள் புழங்குவது தான். இவற்றைப் புழக்கத்தில் கொண்டு வந்ததற்கு தமிழ் வலைப்பதிவுகள் தொடக்கத்தில் இத்துறையில் இயங்கிய தமிழார்வம் உள்ள தளங்கள், நபர்கள் முக்கிய காரணம். அது போலவே இனி வரும் காலங்களில் கணினியிலும் இணையத்திலும் வரும் நுட்பங்களை நல்ல தமிழில் சொல்லத் தொடங்கினோம் என்றால் அவை புழக்கத்துக்கு வரும்.

  5. மீண்டும் ஒரு முறை இதே ஆக்கத்தை திரும்பிப்பார்த்தேன். உங்களது சீரிய விளக்கத்திற்கு மிக்க நன்றி!
    //ஆங்கில மொழியே இல்லாவிட்டாலும், அந்தச் சொல்லையே அறியாவிட்டாலும், நம்முடைய தமிழ்ச் சிந்தனையில் நம்முடைய பார்வையில் நம்முடைய புரிதலுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படித் தான் சொல் ஆக்க வேண்டும். அது தான் மொழி மரபு என்பது என் நம்பிக்கை//

    நம்பிக்கையல்ல, அது தான் மொழி மரபு.

    உங்கள் கருத்து ஏற்புடையது. நன்றிகள்.

  6. எப்படி அழகு என்று ஒரு சொல்லுக்கு ஈடாக பல ஆங்கில சொற்கள் இருக்கின்றனவோ அது போல் ஒரு ஆங்கில சொல்லுக்கு ஈடாக பல தமிழ் சொற்களை பயன் படுத்துவது தவறல்ல

  7. Credit Card – கடனட்டை
    Debit Card – செலவட்டை

  8. அருமையான சிந்தனை
    மொழியாக்கம் செய்யும்பொழுது எண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியவை.

    வாழ்த்துகள்
    அருமையான பதிவிற்கு

  9. ganesan.m Avatar
    ganesan.m

    அன்பு இரவி,
    நாணயம் என்றால் இருபுறம் அதன் சிறப்பு. உங்களுக்குத் தெரியுமா ஓர்புற நாணயம் (one side imprint)?. மெளரியர் காலத்தில் புழக்கத்தில்
    இருந்தது. நாமிருவரும் ஓர்புற நாணயம் போல் ஒரே சிந்தனை.
    அழகான சாட்டையடி ஆங்கில அடிமைச்சிந்தனைக்கு. ஒலிக்கட்டும் சாட்டை போர்ப்பறை எக்காளம் போல்.

    1. ரவிசங்கர் Avatar
      ரவிசங்கர்

      கணேசன், பல கட்டுரைகளிலும் உடன்பாடான கருத்துகளைத் தெரிவித்து இருக்கிறீர்கள். நன்றி.

  10. homeonesan Avatar
    homeonesan

    அன்பு இரவி,
    தன்னை மறந்த தமிழன், த்லையெழுத்தைத் துறந்த தமிழன், கலப்படத்தமிழ்பேசும் தமிழன், இவ்வாறாக மலிந்து காணும் தமிழ்ச்சமுதாயத்தை செம்மைப்படுத்த ஓர் செந்தமிழரசு மலரவேண்டும்.
    அரசிடம் சாதிச்சமுதாயம் தன்னல்ம் வேண்டிப் பெறுவது போல் ஏன் அரசுக்கு கோரிக்கை இட்டுப்பெறக்கூடாது?
    வலுவான ஊடகங்களாகிய தொலைக்காட்சி, நாளேடு, வார,திங்கள் இதழ் ஊடகங்கள், மற்றும் விளம்பர ஊடகங்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் களைத்தமிழை கட்டுப்படுத்த கோரிக்கை இடுவோம். நிலம்,நீர்,நெருப்பு,வளி, வான் சீற்றம் வருங்கால் மக்கள் உயிர் காப்பதை அரசு முதற்கடமையாக செய்யவில்லையா? அதுபோல் தமிழுக்கும் பேரிடர்,களைத்தமிழ் பேரிடர் வந்துவிட்டது.
    அரசுக்கு நம் கோரிக்கையை முன்வைப்போம்.
    மின்தமிழில் ” தமிழ் உயிர் காக்க வாரீர்! ஆதரவு தாரீர்!! என ஓர் முழக்கம் எழுப்புங்கள் என் இளங்கதிரே!
    அன்புடன், மீ.க.

  11. K.Vijayakumar Avatar
    K.Vijayakumar

    Idhu nalla padhivu!!!