தமிங்கில ஊர்கள்

தற்போது ஊர்ப் பெயர்களின் ஆங்கில முன்னொட்டை இட்டு எழுதும் வழக்கம் பெருகி வருகிறது. எடுத்துக்காட்டுக்கு, மேலூர் அருகில் இருக்கும் அம்மாப்பட்டி முன்பு மே. அம்மாப்பட்டி. இப்பொழுது M. அம்மாப்பட்டி. தமிழ்நாட்டில் தமிழ் பெயரில் உள்ள ஊருக்கு எதற்கு ஆங்கில முன்னொட்டு?

ஏன் இந்தப் போக்கு?

இட நெருக்கடியில் பெயர் எழுத வேண்டிய பேருந்து அறிவிப்புப் பலகைகள், கடித முகவரிகள், மற்ற இடங்களில் சுருக்கி எழுத வேண்டிய தேவையின் காரணமாகப் பெயரைச் சுருக்குகிறார்கள். ஆட்களின் பெயர்ச்சுருக்கங்களை எழுதும் போது ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்துவது போலவே ஊர்ப் பெயர்ச்சுருக்கங்களுக்கும் ஆங்கிலம் வந்துவிடுகிறது. எல்லாமே வேகமாகிப் போன காலத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை என்று சொல்வதை விட ECR, OMR என்பது வசதியாக இருக்கிறது.

என்ன பிரச்சினை?

தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்ப்பெயர்கள் அழகான தமிழ்ச் சொற்கள். பெயர்க்காரணத்துடன் உள்ளவை. பண்டைய வரலாற்றை அறிய உதவுபவை. ஆனால், இப்போது Special தோசையும் SP தோசை தான். சிங்கப்பெருமாள் கோயிலும் SP கோயில் தான். போன தலைமுறை சிராப்பள்ளி என்னும் திருச்சிராப்பள்ளியில் இருந்து பொருளே இல்லாமல் திருச்சி என்பதைப் பிய்த்து எடுத்துக் கொண்டது. இந்தத் தலைமுறை அதே ஊரில் உள்ள திருவானைக்கோயிலை TV கோயில் ஆகிவிட்டது. அடுத்த தலைமுறை என்ன செய்யும்?

நியூயார்க்கைப் புதுயார்க் என்று ஒத்துக் கொள்ளாத நம் மக்கள், செங்குன்றத்தை Red Hills என்று எழுதினால் ஒத்துக் கொள்வார்கள். ஆங்கிலேயர் சிதைத்தது போதாது என்று நாமும் இருக்கிற ஊர்ப்பெயரை எல்லாம் ஆங்கிலமயமாக்கி வருகிறோம். ஊர்ப்பெயர்களைச் சிதைப்பதினால் தமிழக வரலாறும் தொடர்ச்சியும் தொலைகிறது. இனியாவது இதனைக் கருத்தில் கொள்வோமா?


Comments

One response to “தமிங்கில ஊர்கள்”

  1. //ஊடகங்களில் இருந்து விலகி வாழ்வதே ஒரு இதமாக இருக்கிறது. // எல்லாம் அறிந்து வாழ்வது சுகம். நடப்புகளையும், உலக அறிவையும் தெரிந்த, அறிந்த ஒருவன் அறியாமையில் வாழும்போது அது பேரானந்தம்.