ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

தமிழ் அகரமுதலிகள்

April 15th, 2007 · No Comments · எப்படி, தமிழ்

இணையத்தில் தமிழில் எழுதப் புகும் பலருக்கும் வரும் முதற் தடை - ஆங்கிலச் சொற்களுக்கு இணையான துல்லியமான தமிழ்ச் சொற்கள் தெரியாமை, தமிழ்ச் சொற்களின் பலுக்கல்* (Pronunciation) அறியாமை.

இதற்கான ஒரே தீர்வு - தமிழ் அகரமுதலிகளைப் பயன்படுத்துவது தான் !!

கீழ்வரும் வரிசையில் அகரமுதலிகளைப் பயன்படுத்துவது வேலையை சுளுவாக்கும்.

1. ஆங்கில வழியத்தில் படித்து தமிழில் துறை சார் சொற்கள் அறியாதோர் பயன்படுத்த வேண்டியது தமிழ் இணையப் பல்கலை அகரமுதலி நிலைகாட்டி (cursor), செருகி (plug) போன்று ஏற்கனவே உருவாக்கப்பட்டு தமிழ்ப் பாட நூல்களில் புழக்கத்தில் இருக்கும் பல சொற்களையும் இங்கு காணலாம். இதனால், சொற்களைத் திரும்ப கண்டுபிடிக்கும் அசட்டுத்தனத்தையும் பொருத்தமற்ற சொற்களை புதிதாக உருவாக்கும் பிழையையும் தவிர்க்கலாம்.

2. இலக்கியத்தில் உள்ள பழங்காலத் தமிழ்ச் சொற்கள், போன சில நூற்றாண்டுகளில் தமிழில் புழங்கிய பிற மொழிச் சொற்கள் குறித்து அறிய பல இணையத் தமிழ் அகரமுதலிகள் உள்ளன. இவற்றின் தொகுப்பை இங்கு காணலாம். குறிப்பாக, சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி விலை மதிப்பற்ற ஒரு களஞ்சியம். எடுத்துக்காட்டுக்கு, யானையின் பெரிதாக நீட்டிக் கொண்டிருக்கும் பல்லை தந்தம் என்கிறோம். இது போல் காட்டுப் பன்றி முதலிய விலங்குகளில் நீட்டிக் கொண்டிருக்கும் பற்களை (tusk) என்னவென்று அழைப்பது என்று உங்களுக்குத் தெரியுமா? தமிழ் இலக்கியத்தில் இவற்றுக்கு கொம்பு, கோடு, எயிறு, மருப்பு என்று பெயர்கள் வழங்கியுள்ளன. இத்தகவல்கள் சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியை கொஞ்சம் துழாவினால் கூட கிடைக்கும். தமிழில் உள்ள சொல் வளம், ஒத்தது போல் உள்ள சொற்களுக்கு இடையே உள்ள நுணுக்கமான வேறுபாடுகள் ஆகியவை மலைக்க வைப்பதாக இருக்கிறது. உயிரியில், சூழல், அளவை, சிந்தனை என்று பண்டைத் தமிழர் வாழ்க்கையோடு இயைந்த பல துறை சார் சொற்கள் இந்த அகரமுதலியில் உறங்கிக் கிடக்கின்றன. மீட்டுக் கொண்டு வர வேண்டியது நம் கடமை.

3. வலைப்பதிவு (blog), திரட்டி (aggregator) போன்ற அண்மைய கால நுட்பங்கள், போக்குகளுக்கான தமிழ்ச் சொற்களை அறிய உள்ள ஒரே தளம் தமிழ் விக்சனரி மட்டுமே. அதில் இல்லாத சொற்கள் குறித்து கேட்க, தேவையான இடங்களில் புதுச் சொற்களை உருவாக்க, பழைய பொருத்தமற்ற சொற்கள் குறித்து உரையாட தமிழ் விக்சனரி உரையாடல் குழுமத்தில் சேரலாம்.

4. இந்த முறை நான் இந்தியா சென்று திரும்பிய போது வாங்கி வந்த ஒரே நூல் - க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. சன்னதியா சன்னிதியா சந்நிதியா? கருப்பா கறுப்பா? சிகப்பா சிவப்பா ? அரைஞாணா அரைஞானா ? - போன்ற அடிக்கடித் தோன்றும் குழப்பங்களைத் தீர்த்துக் கொள்ள உதவும் நல்ல அகரமுதலி இது. இது போன்று அச்சடிக்கப்பட அகரமுதலிகள் இல்லாதோர் பலர், இந்தக் கேள்விகளுக்கான விடையை அறிய கூகுளில் கருப்பு-கறுப்பு என்று இரு சொல்லையும் இட்டு எது அதிகமான முடிவுகளைத் தருகிறதோ அதை சரியெனக் கருதுவது உண்டு. சில சமயம், இது சரியான முடிவுகளைத் தரும் என்றாலும், இது ஒரு பிழையான அணுகுமுறையாகும். இணையத்தில் பல தரப்பட்ட தமிழறிவு உடையோரும் எழுதுவதால், ஒரு சொல்லுக்குச் சரியும் தவறுமாகப் புழங்கும் பல விதமான பலுக்கல் முறைகளை அறியத்தான் கூகுள் முடிவுகள் உதவுமே தவிர, எது சரி என்று முடிவு எடுக்க உதவாது. கற்றறிந்த பல தமிழர்களும் கூட பிழையான ஒரு பலுக்கலை பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் இடத்தில் தவறான பலுக்கலை நாம் சரியென்று நினைத்துக் கொள்ள வாய்ப்புண்டு என்பதால் இந்த முறையைத் தவிர்க்க வேண்டும்.

ஆங்கிலத்தில் ஒரு சொல்லுக்குப் பொருளோ எழுத்துக்கூட்டலோ (spelling) தெரியாவிட்டால் Dictionary.com தளத்துக்கு ஓடுவது போல் இந்தத் தளங்களையும் அணுகும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால் தமிழ்ச் சொற்கள் அறியாததால் வரும் தடுமாற்றத்தை பெருமளவு குறைக்கலாம்.


* பலுக்குதல் என்றால் தெளிவாக உச்சரித்தல் என்று பொருள். தமிழில் பலுக்குவதைத் தான் எழுதுகிறோம் என்பதால், பலுக்கத் தெரியாததாலேயே ஒருவருக்கு எப்படி எழுதுவது என்றும் தெரியாமல் போகிறது. அதனால், தமிழில் எழுத்துக்கூட்டல் தெரியவில்லை என்று சொல்வதைக் காட்டிலும் பலுக்கல் தெரியவில்லை என்று சொல்வது தான் பொருந்தும். ஆங்கிலம் போன்ற மொழிகளில் பலுக்கல் வேறு எழுத்துக்கூட்டல் வேறு என்பதால் இரண்டையும் தனித்தனியாகத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. என்னே தமிழின் எளிமை :)

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

Tags: ·······

0 responses so far ↓

  • There are no comments yet...Kick things off by filling out the form below.

Leave a Comment