ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

கிரந்தம்

July 29th, 2008 · 77 Comments · தமிழ்

கிரந்த எழுத்துப் பயன்பாடு குறித்து சிந்திக்கையில் எழும் எண்ணங்கள்:

(எந்த வரிசையிலும் இல்லை)

* thamiழ், thiruஞaanasambandhar, vaள்ள்i, faன், hஆட், jஓக், shஅவர், பs என்று எழுதுவதற்கும் விஜய், ஹாரி, ஜெய் என்று எழுதுவதற்கும் என்ன வேறுபாடு? ஆங்கிலத்தோடு தமிழ் கலந்து எழுதுவது உறுத்துகிறது, பிழை என்றால் கிரந்தத்தோடு தமிழ் கலந்து எழுதுவது மட்டும் ஏன் உறுத்த வில்லை? பழகிப் போவதால் ஒரு பிழை சரியாகுமா?

* டாய்ட்ச், நெதர்லாந்து மொழிகளில் ஓசை இல்லை. ramanujan என்று எழுதினால் ராமானுயன் என்று தான் வாசிப்பார்கள். அது அவரை மரியாதைக் குறைவாகச் சொல்கிறார்கள் என்று ஆகுமா? தமிழில் இராமானுசன் என்று எழுதினால் மட்டும் ஏன் மரியாதைக் குறைவு என்று நினைக்கிறார்கள்?  thamil என்று கூட எழுதாமல் tamil என்று ஆங்கிலேயர் எழுதுவது தமிழரை அவமதிப்பதாகுமா? கிரந்தம் கலந்து ஒலிப்பு பிசகாமல் எழுதி ஒருவரைக் காறித் துப்பவும் முடியும். கிரந்தம் தவிர்த்து எழுதி ஒருவரைப் போற்றவும் முடியும். ஒருவரைப் போற்றவோ தூற்றவோ ஒலிப்பு ஒரு பொருட்டே இல்லை.

* இந்து, பௌத்த, இன்னும் பல சமய மந்திரங்களின் ஒலிப்பில் மந்திர ஆற்றல் உள்ளதாகவும் அதைக் காக்க கிரந்தம் அவசியம் என்றும் சொன்னால், சீன, சப்பானிய மொழிகளில் இந்த ஒலிப்புகளுக்குத் தொடர்பே இல்லாமல் இம்மந்திரங்கள், பெயர்களைச் சொல்லி வழிபடுகிறார்களே? அவர்களுக்கு அருள் கிடைக்காதா? கிரந்த எழுத்துகளே கலக்காமல் பாடல் பாடிய நாயன்மார்கள், ஆழ்வார்கள் வீடுபேறு அடையவில்லையா? பக்திக்கு ஒலிப்பு எவ்விதத்தில் முக்கியமாகிறது? மொழியின் இயல்பு காரணமாகவோ கவனக் குறைவு காரணமாகவோ இயலாமை காரணமாகவோ ஒருவர் ஒலிப்புப் பிசகிப் பேசினாலும் பாடினாலும் பக்தனின் உள்ளத்தை அறிந்து அருள இயலாத மூடரா கடவுள்? ஒரு கடவுளுக்குப் பல அவதாரங்கள், ஒவ்வொரு அவதாரத்துக்கும் பல பெயர்கள், ஒவ்வொரு மொழி, நாட்டிலும் ஒவ்வொரு ஒலிப்பு என்று இருக்கையில் ஒரு கடவுளின் பெயரை ஒலிப்பு கெடாமல் எழுதுவது அவசியமா? கண்ணன், திருமகள் என்று கிரந்த எழுத்துத் தேவையின்றி பிற மொழிச் சமயப் பெயர்களையும் தமிழாக்கிக் கூட எழுதலாமே? எல்லாம் கடந்த ஒரு ஓசையில் தான் தங்கி இருக்கிறாரா? ஒலிப்பை மாற்றிச் சொன்னால் மதிப்புக் குறைவு என்று கோபப்படுவரானால், பக்கத்துத் தெரு அரசியல்வாதிக்கும் கடவுளுக்கும் அவரது தூதர்களுக்கும் என்ன பெரிய வேறுபாடு?

* கிரந்தம் கலக்காமல் தமிழ் எழுத்துகளில் மட்டும் எழுத வேண்டும் என்று சட்டம் இல்லை. அதே போல், கிரந்தம் கலந்து தான் எழுத வேண்டும் என்றும் சட்டம் இல்லை. தமிழ் இலக்கணப் படி பள்ளியில் சொல்லித் தரப்பட்ட தமிழ் எழுத்துகளை மட்டும் கொண்டு எழுதுவதற்கு எவருக்கும் முழு உரிமை உண்டு.

* “தமிழ் இயல்புக்கு ஏற்ப ஒலிகளை உள்வாங்கியும் கிரந்தத் தவிர்த்தும் எழுதுவது தங்களை, தங்கள் நம்பிக்கைகளை அவமதிப்பதாகும்” என்று எவரும் சொல்வது ஒரு தொன்மையான இனத்தின் தன்மானத்துக்கு விடப்படும் நேரடி மிரட்டலாகும்.

* தமிழில் எழுதும் போது தமிழ் ஒலிகளை மட்டும் பயன்படுத்துங்கள் என்று தமிழரிடம் வேண்டுவது எவ்வாறு தமிழ்த் திணிப்பாகும்?

* பிற மொழி ஒலிப்புகள், அதை எழுதுவதற்கான தேவை ஏதோ புதிதாய் எழுந்தது இல்லை. தொல்காப்பியக் காலத்தில் தமிழருக்கு பிற மொழி, வட மொழியனருடன் தொடர்பு உண்டு. அதனாலேயே அச்சொற்களை எப்படி ஆள்வது என்று இலக்கணம் இயற்றப்பட்டது. வரலாற்றுக் காலம் நெடுகிலும் உலகம் முழுக்க வணிகத் தொடர்புகளைத் தமிழர் கொண்டிருந்திருக்கின்றனர். இத்தனை காலமும் கிரந்தம் இன்றி இருக்க வல்லதாய் இருந்த தமிழுக்குத் தற்போது மட்டும் கிரந்தத்தின் தேவை என்ன?

* புஷ்பா, ஹரீஷ் என்று எழுதினாலும் எங்கள் ஊர்க்காரர்களுக்கு புசுப்பா, அரீசு என்றே அழைக்க வருகிறது. அதை ஏன் புசுப்பா, அரீசு என்றே எழுதி விட்டுப் போகக்கூடாது? சார்ச்சு புசு, சாக்கி சான் என்று எழுதினாலும் அவர்கள் யாரும் நம்மோடு சண்டைக்கு வரப் போவதில்லை. அவர்களே கண்டு கொள்ளாத போது நாம் ஏன் விழுந்து விழுந்து ஒலிப்புத் துல்லியம் காட்ட வேண்டும்? கிரந்த ஒலிகள், எழுத்துகள் தேவைப்படுவோரைக் காட்டிலும் அவற்றின் தேவையின்றி வாழும் தமிழர் எண்ணிக்கை மிகக் கூடுதல். கிரந்தத்தை வலியுறுத்துவது தான் அவர்கள் மேலான உண்மையான திணிப்பு.

* கிரந்த எழுத்துகளைப் பொது ஊடகங்களில் பயன்படுத்துவது என்பது ஒரு சிலர் முடிவு எடுத்த, ஒருவரைப் பார்த்து இன்னொருவர் கண்மூடித்தனமாகப் பின்பற்றிய மரபு. கிரந்த எழுத்துப் பயன்பாடு என்பது திறந்த முறையில் மொழியிலாளர்களைக் கலந்துரையாடி எடுக்கப்பட்ட இறுதி முடிவு அல்ல. கிரந்த எழுத்து அறிமுகத்தில் பிற மொழி, சமய, இனத்தினர் நலமே மிகுந்துள்ளதே தவிர தமிழ், தமிழர் நலம் காக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

* அச்சூடகங்களைக் காட்டிலும் இணைய ஊடகத்தில் ஒலிப்பைச் சுட்ட எழுத்துகளின் தேவை குறைவு. ஒலிக்கோபுகள் மூலமே ஒலிப்பை எளிதாகச் சுட்ட முடியும். வருங்காலம் முழுக்க முழுக்க இணைய மயமான உலகாக இருக்கும் என்பதால் ஒலிப்பைக் கற்பதற்கு எழுத்துகளை மட்டும் தங்கியிருக்கத் தேவை இல்லை.

* ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் மட்டும் இருப்பது கற்றுக் கொள்ள குழந்தைகளுக்கு இலகுவாக இருப்பதாகவும் தமிழில் 247 எழுத்துகள் இருப்பது சிரமமாக இருப்பதால் அதைக் குறைத்து எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் சொல்பவர்கள் மேற்கொண்டும் கிரந்த எழுத்துகளுக்காக (ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ) 66 மேலதிக எழுத்துகளைக் கற்கச் செய்வது ஏன்?

* பல நாடுகள், சமயங்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றியது. பல நாட்டினரும் பல சமயத்தினரும் தமிழ் பேசுகின்றனர். ஒரே பிறப்பில் நாட்டையும் சமயத்தையும் ஒருவர் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், தாய்மொழியை மாற்றிக் கொள்ள இயலாது. எனவே, நாடுகள், சமயங்களைக் காட்டிலும் மொழி பெரிது என்று கருதாவிட்டாலும், அவற்றுக்குத் தருவதற்கு ஈடான மதிப்பை மொழிக்கும் தர வேண்டும்.

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

Tags: ··

77 responses so far ↓

  • 1 Balaji // Jul 29, 2008 at 9:49 pm

    —அதை ஏன் புசுப்பா, அரீசு என்றே எழுதி விட்டுப் போகக்கூடாது? சார்ச்சு புசு, சாக்கி சான் என்று எழுதினாலும்—

    இவ்வாறு எழுதினால் யாரை சொல்கிறீர்கள் விளங்காது என்பதுதான் என்னுடைய இயலாமை. ஹ்ம்ம்!

  • 2 புருனோ // Jul 29, 2008 at 10:11 pm

    //சார்ச்சு புசு, சாக்கி சான் என்று எழுதினாலும் அவர்கள் யாரும் நம்மோடு சண்டைக்கு வரப் போவதில்லை. அவர்களே கண்டு கொள்ளாத போது நாம் ஏன் விழுந்து விழுந்து ஒலிப்புத் துல்லியம் காட்ட வேண்டும்?//

    ஆமாம்ல :) :)

    //இவ்வாறு எழுதினால் யாரை சொல்கிறீர்கள் விளங்காது என்பதுதான் என்னுடைய இயலாமை. ஹ்ம்ம்!//

    பாலாசி என்று எழுதினால் !!!

    அது சரி, திருச்சிராப்பள்ளியை ட்ரிச்னாபோலி என்று ஆங்கிலேயர்களில் சிலர் எழுதியது ஆங்கிலேயரில் மற்றவர்களுக்கு புரிந்தது என்று நினைக்கிறேன்

    திருநெல்வேலி -> டின்னெவெல்லி

  • 3 புருனோ // Jul 29, 2008 at 10:11 pm

    //ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் மட்டும் இருப்பது கற்றுக் கொள்ள குழந்தைகளுக்கு இலகுவாக இருப்பதாகவும் தமிழில் 247 எழுத்துகள் இருப்பது சிரமமாக இருப்பதால் அதைக் குறைத்து எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் சொல்பவர்கள் மேற்கொண்டும் கிரந்த எழுத்துகளுக்காக (ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ) 66 மேலதிக எழுத்துகளைக் கற்கச் செய்வது ஏன்?//

    நானும் விடையை எதிர்பார்க்கிறேன்

  • 4 ரவிசங்கர் // Jul 30, 2008 at 12:11 am

    balaji - இது கிரந்த எழுத்துகளுக்குப் பழகியதால், முதன் முதலில் தமிழ்ப் பெயர்களைக் காணும் போது வரும் குழப்பமே. தேவையென்றால், இப்பெயர்களை முதன்முதல் எழுதும் போது தெளிவுக்காக அடைப்புக்குறிகளுக்குள் ஆங்கிலத்தில் எழுதலாம்.

    //திருச்சிராப்பள்ளியை ட்ரிச்னாபோலி என்று ஆங்கிலேயர்களில் சிலர் எழுதியது ஆங்கிலேயரில் மற்றவர்களுக்கு புரிந்தது என்று நினைக்கிறேன்//

    என்று புருனோ சொல்லுவதும் நியாயமான விடை. ஆங்கிலத்தில் Emirtaes, தமிழில் அமீரகம் என்று புரிந்து கொள்வது போல் தமிழ்வயப்படுத்தப்பட்ட பெயர்கள் நாளடைவில் இயல்பாகவும் புரிந்து கொள்வது போலவும் மாறிவிடும்.

  • 5 bmurali80 // Jul 30, 2008 at 1:56 am

    //அச்சூடகங்களைக் காட்டிலும் இணைய ஊடகத்தில் ஒலிப்பைச் சுட்ட எழுத்துகளின் தேவை குறைவு. ஒலிக்கோபுகள் மூலமே ஒலிப்பை எளிதாகச் சுட்ட முடியும். வருங்காலம் முழுக்க முழுக்க இணைய மயமான உலகாக இருக்கும் என்பதால் ஒலிப்பைக் கற்பதற்கு எழுத்துகளை மட்டும் தங்கியிருக்கத் தேவை இல்லை.//
    ஒரு சொல் கூட புரியலை. விளக்க இயலுமா?

  • 6 bmurali80 // Jul 30, 2008 at 2:35 am

    //பழகிப் போவதால் ஒரு பிழை சரியாகுமா?//
    சரி தவறு என்று சொல்ல நாம் யார். 100 வருடம் முன் உள்ள தமிழ் எப்படி என்று உங்களுக்கு தெரியுமா. கல்வெட்டுகளிலுள்ளது தமிழென்றால் நாம் ஏன் அதனைப் படிக்க முடிவதில்லை? மொழி மாருவதே அழகன்றோ?

    //தமிழில் இராமானுசன் என்று எழுதினால் மட்டும் ஏன் மரியாதைக் குறைவு என்று நினைக்கிறார்கள்?//

    //தமிழில் இராமானுசன் என்று எழுதினால் மட்டும் ஏன் மரியாதைக் குறைவு என்று நினைக்கிறார்கள்?//
    இது மரியாதைக்குறைவல்ல தவறான பயன்பாடு. ஸ்டாலின் எப்படி எழுதுவீர்கள்? பெயர்சொல் தானே இது. ‘ர’ என்பது உயிர் மெய் அதனால் ‘இ’ உபயோகம் செய்யுங்கள் என்பதை எப்படி மக்கள் இயல்பாக ஏற்கவில்லையோ அது போலத்தான். இயல்பாக இருக்கும் வரை யாரும் தானாக பயன்படுத்துவர். மிக சிறந்த எடுத்துக்காட்டு இந்த பதிவிலிருந்தே காட்டலாம் - //சப்பானிய மொழிகளில் இந்த ஒலிப்புகளுக்குத் தொடர்பே இல்லாமல் இம்மந்திரங்கள்// ஜப்பானிய மொழியா? அல்லது சப்பானியர்களின் மொழியா?

    //தமிழில் எழுதும் போது தமிழ் ஒலிகளை மட்டும் பயன்படுத்துங்கள் என்று தமிழரிடம் வேண்டுவது எவ்வாறு தமிழ்த் திணிப்பாகும்?//
    முதலில் கூறியது போல் யார் யாரை வேண்டுவது. ஏன் யூ.எஸ். இங்கிலிஸ் மற்றும் யூ.கே. இங்கிலிஸ் என்று உள்ளது? முதலில் இந்த சரியா தவறா வாதமே அடிப்படையற்றது.

    //கிரந்த ஒலிகள், எழுத்துகள் தேவைப்படுவோரைக் காட்டிலும் அவற்றின் தேவையின்றி வாழும் தமிழர் எண்ணிக்கை மிகக் கூடுதல்.//
    இந்த வரியின் உள்ளர்த்தம் கசப்பாக உள்ளது. இருப்பினும் என் மனத்தில் படுவது , இது அத்தாட்சியற்ற முடிவு. உங்கள் கணக்கேடுப்பு சென்னையல்லாத தமிழ்நாடு மட்டுமா?

    //கிரந்த எழுத்துப் பயன்பாடு என்பது திறந்த முறையில் மொழியிலாளர்களைக் கலந்துரையாடி எடுக்கப்பட்ட இறுதி முடிவு அல்ல. //
    அது தான் சொல்லிட்டாங்களே மொழி சீர்திருத்தத்தில் இனி இது கூடாது என்று. அப்போது அனைவரது கருத்தும் கேட்கப்பட்டதா?

    பதிவில் நான்கு ஐந்து இடங்களில் கவனித்தது - யாரும் கிரந்த எழுத்துக்களை ஏற்க சொல்லவில்லை. ஆனால் கிரந்த ஏற்க கூடாது என்று பரபலங்களின் அலம்பல் தான் அதிகம்.

    //எனவே, நாடுகள், சமயங்களைக் காட்டிலும் மொழி பெரிது என்று கருதாவிட்டாலும், அவற்றுக்குத் தருவதற்கு ஈடான மதிப்பை மொழிக்கும் தர வேண்டும்.//
    மொழி ஒரு மனிதனுக்கு கருவியே. இதில் மதிப்பு, தாங்கல…

    மொழியின் இலக்கணம் முறண்பாடு மூட்டை. இது தான் சரி என்றும் இது தவறு என்றால் நாம் நம்மை சிறு வட்டத்தில் அடைத்துக்கொள்ளும் சிந்தனையைத்தான் தூண்டும். ஆக இயல்பான மாற்றங்களை அறவனைப்போம். கிளை மொழிகளை உருவாக்குவோம். சுத்தத் தமிழ் அதன் தாயாக இருக்கட்டுமே!

  • 7 ரவிசங்கர் // Jul 30, 2008 at 2:48 pm

    முரளி -

    //கல்வெட்டுகளிலுள்ளது தமிழென்றால் நாம் ஏன் அதனைப் படிக்க முடிவதில்லை? மொழி மாருவதே அழகன்றோ? //

    காலத்துக்கு காலம் ஒரு எழுத்தின் வடிவம் மாறுவது வழமை தான். இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். ஆனால், ஒரு மொழியில் புதிதாக கூடுதல் எழுத்துகள் வருவது இயல்பன்று. இப்படி எழுத்துகளைச் சேர்ப்பதும் விடுப்பதும் பிற மொழிகளில் மொழியியல் அறிஞர்களால் தீர ஆராயப்பட்டு எடுக்கப்படும் முடிவாகவே இருக்கிறது. கிரந்த எழுத்துகளைப் பொருத்த வரை யாரும் அப்படி ஆய்ந்து எடுத்ததாக ஆதாரத்தைக் காணோம்.

    //ஏன் யூ.எஸ். இங்கிலிஸ் மற்றும் யூ.கே. இங்கிலிஸ் என்று உள்ளது? முதலில் இந்த சரியா தவறா வாதமே அடிப்படையற்றது.//

    தமிழிலும் ஈழத்தமிழ், இந்தியத் தமிழ் என்று சொற்கள், பேச்சு வழக்குகளில் வேறு பாடு உண்டு. அதை யாரும் மறுப்பதில்லை. ஆனால், அடிப்படை எழுத்துகள் வேறு. சொல் இலக்கணம், எழுத்து இலக்கணம், பொருள் இலக்கணம் என்று தமிழ் இலக்கண வரையறை உடைய மொழி. இது போன்ற இலக்கணங்கள் ஆங்கிலத்துக்கு உண்டா? தமிழ் தளைத்து இருப்பதற்கு இந்த இலக்கண ஒழுங்கு ஒரு முக்கிய காரணம் என்பதால் அதனைச் சீராக்கும் எதனையும் இலக்கண அடிப்படையில் தவறு என்று சொல்லலாம்.

    //உங்கள் கணக்கேடுப்பு சென்னையல்லாத தமிழ்நாடு மட்டுமா?//

    சென்னைக்கு வெளியே இருக்கும் தமிழர்கள் 7, 8 மடங்கு கூட. சென்னையோடு மற்ற நகரங்களையும் உங்கள் வசதிக்குச் சேர்த்தாலும் நகரங்களிலும் கீழ்த்தட்டு, நடுத்தட்டு, மேல்த்தட்டு மக்கள் என்று பலர் இருக்கிறார்கள். கிரந்த எழுத்துகள் இவர்களில் எத்தனை பேருக்குத் தேவை?

    //யாரும் கிரந்த எழுத்துக்களை ஏற்க சொல்லவில்லை. ஆனால் கிரந்த ஏற்க கூடாது என்று பரபலங்களின் அலம்பல் தான் அதிகம்.//

    இராமனுஜத்தை இராமனுசம் என்று எழுதப்போய் கிரந்த எழுத்தை வலியுறுத்தி எவ்வளவு பெரிய உரையாடல் நடந்தது என்று இராமானுசன் பற்றிய விக்கிப்பிடீயா கட்டுரை பாருங்கள்.

    //மொழியின் இலக்கணம் முறண்பாடு மூட்டை.//

    என்ன முரண்பாடு கண்டீர்கள் என்று விளக்குவீர்களா? தமிழ் அளவுக்குத் தெளிவான எழுத்து இலக்கணம் உடைய மொழிகளைக் காட்டுவீர்களா?

  • 8 ரவிசங்கர் // Jul 30, 2008 at 2:53 pm

    முரளி - //ஒரு சொல் கூட புரியலை. விளக்க இயலுமா?//

    Web media doesn’t need letters as much as print media to explain the pronunciation. Audio files can easily explain the pronunciation. As the future would rely on web media a lot, we don’t need to depend entirely on letters to explain pronunciation.

  • 9 வெட்டி ஞாயம் « Mr. Critic // Aug 1, 2008 at 4:30 pm

    [...] கிரந்த எழுத்துக்கள் தேவையா [...]

  • 10 periyar critic // Aug 10, 2008 at 6:53 pm

    Nothing is lost in writing புஷ்பா, ஹரீஷ் as that makes clear what these names are.Some people may have trobule in pronounciation.
    Languages like Hindi have more than one ka,
    ja and Sanskrit has more influence in their development than in Tamil.When Tholkappiam
    was composed we did not have contact with
    English or with French.
    Web media doesn’t need letters as much as print media to explain the pronunciation. Audio files can easily explain the pronunciation. As the future would rely on web media a lot, we don’t need to depend entirely on letters to explain pronunciation.
    But the way words are pronouced varies from
    country to country. American English is different from British English in many ways
    including pronounciation.BBC and CNN do not adhere to same style in pronounciation.English as spoke in continental europe is distinct from
    english spoken in U.K.About other countries
    like China and India the less said the better it is.
    The way Tamils and Malayalees speak English varies.So your hypothesis is not acceptable.

    Purity is language should not result in being a zealot.I think you are more bothered about
    purity and sticking to grammar rules of the
    earlier centuries than about providing a pragmatic response to issues. Sometimes
    too much respect for the past can be a hurdle in understanding and finding solutions.

  • 11 periyar critic // Aug 10, 2008 at 6:56 pm

    ‘கிரந்த எழுத்துகளைப் பொது ஊடகங்களில் பயன்படுத்துவது என்பது ஒரு சிலர் முடிவு எடுத்த, ஒருவரைப் பார்த்து இன்னொருவர் கண்மூடித்தனமாகப் பின்பற்றிய மரபு. கிரந்த எழுத்துப் பயன்பாடு என்பது திறந்த முறையில் மொழியிலாளர்களைக் கலந்துரையாடி எடுக்கப்பட்ட இறுதி முடிவு அல்ல. கிரந்த எழுத்து அறிமுகத்தில் பிற மொழி, சமய, இனத்தினர் நலமே மிகுந்துள்ளதே தவிர தமிழ், தமிழர் நலம் காக்கப்பட்டதாகத் தெரியவில்லை.’

    what have tamils or the language has lost
    by that.
    Who are these மொழியிலாளர்களைக்?
    I think you sound like a purist than like a
    pragmatist.

  • 12 ரவிசங்கர் // Aug 10, 2008 at 7:40 pm

    periyar critic,

    தயவு செய்து உங்கள் கருத்துகளைத் தமிழில் பதிந்தால் இன்னும் பலருக்குப் புரியும்.

    //Nothing is lost in writing புஷ்பா, ஹரீஷ் //

    //what have tamils or the language has lost
    by that.//

    என்ன இழந்தோம் என்பதை அடுத்தடுத்த இடுகைகளில் விளக்குகிறேன்.

    //But the way words are pronounced varies from
    country to country. //

    இதைத் தானே நானும் கேட்கிறேன்? ஆங்கிலம், பிற மொழிப் பெயர்களுக்கு ஊருக்கு ஊர் ஒலிப்பும், எழுத்துக்கூட்டலும் மாறுபடுவதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், பிற மொழிப் பெயரைத் தமிழில் எழுதும் போது மட்டும் ஏன் கண்டிப்பாக ஒரே மாதிரி உச்சரிக்கவும் எழுதவும் வேண்டும்? harsih, pushpa என்பதை வேண்டுமென்றே அரீசு, புசுப்பா என்று திரித்து எழுதவில்லை. குறிப்பிடத்தக்க, தமிழ்மக்கள் வாயில் இந்தப் பெயர் இப்படித் தான் ஒலிக்க வருகிறது என்றால் அதை ஏன் அப்படியே எழுதிக் காட்டவும் கூடாது?

    //Who are these மொழியிலாளர்கள்//

    தமிழறிஞர்கள்.

  • 13 புருனோ // Aug 11, 2008 at 4:10 am

    //When Tholkappiam
    was composed we did not have contact with
    English or with French.//

    அப்படி என்றால் ஏன் ஆங்கிலேயர்கள் மற்றும் பிரஞ்சு தேசத்தவர்கள்

    tamiழ் என்று எழுதாமல் tamil என்று எழுதுகிறார்கள்

  • 14 புருனோ // Aug 11, 2008 at 4:14 am

    //Nothing is lost in writing புஷ்பா, ஹரீஷ் as that makes clear what these names are.//

    உங்களுக்கு இந்தி தெரியுமா

    தமிழ் என்பதை எப்படி எழுதுகிறார்கள்

    तमिल என்றா
    அல்லது
    तमिழ் என்றா

    இந்தி தெரிந்தால் நீங்களே பதில் கூறுங்கள்

    அல்லது யாரிடமாவது கேட்டு கூட கூறலாம்
    -

  • 15 புருனோ // Aug 11, 2008 at 4:16 am

    //Purity is language should not result in being a zealot.//
    तमिழ் என்று எழுதாத zealotகள் குறித்து உங்கள் கருத்து என்ன. அப்படியென்றால் இந்தியாவில் zealot அல்லாதவர்கள் எத்தனை பேர் என்று கூற முடியுமா

  • 16 புருனோ // Aug 11, 2008 at 4:18 am

    //.I think you are more bothered about
    purity and sticking to grammar rules of the
    earlier centuries than about providing a pragmatic response to issues. //

    तमिழ் என்று தான் இந்தியில் எழுதவேண்டும். இந்தியில் ஒரு எழுத்தை சேர்க்க வேண்டும். pragmatic ஆக இருக்க வேண்டும் என்று எத்தனை இந்தி அல்லது ஆங்கில இடுகைகளில் நீங்கள் மறுமொழி எழுதியுள்ளீர்கள். சில சுட்டிகளை தந்தால் அது குறித்து இந்தி மக்கள் உங்களின் zealot , pragmatic கருத்துகளுக்கு என்ன விளக்கம் அளிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியும்

  • 17 புருனோ // Aug 11, 2008 at 4:22 am

    ரவி,

    http://www.ularal.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/

  • 18 பாலாஜி // Aug 14, 2008 at 12:13 pm

    ம்… ரவி, மொழிக்கும் எழுத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புறக்கணிப்பது வருத்தமளிக்கிறது.

    மேலும் உங்களின் முந்தைய இடுகையில் நான் கேட்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் விடையளிப்பீர்கள் என்று நினைத்தேன்.

    வடமொழி, ஆங்கிலச் சொற்களை (நிகரான தமிழ் சொற்கள் இருக்கும்போது) தவிர்க்க வேண்டும் என்பதை யாரும் எதிர்க்கப் போவதில்லை. நீங்கள் அதனோடு கிரந்தத்தை தேவையில்லாமல் குழுப்பிக்கொள்கிறீர்கள்.

    தமிழ் எழுத்து என்று நாம் சொல்லிக்கொள்ளும் எழுத்தையே தமிழர்கள் கண்டுபிடித்திருப்பார்களா என்று இன்னும் தெரியவில்லை. நடுகற்களில் எழுதப்பட்ட எழுத்தே இப்போது நாம் பயன்படுத்தும் எழுத்தின் முன்னோடி என்று நிரூபணம் ஆகும் வரை மகதத்திலிருந்து சமண மதத்தார் கொண்டு வந்த பிராமி எழுத்தே தமிழ் எழுத்தின் முன்னோடியாக கருதப்படும்.

    பார்க்கப்போனால் கிரந்தமே தமிழரின் கண்டுபிடிப்பு. அதை மலையாளிகளும், சிங்களவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்!

    மேலும் தமிழ் மொழியில் புதிய ஒலிகள் ஏன் சேர்க்கப்படக்கூடாது என்பதும் எனக்கு விளங்கவில்லை. C R செல்வகுமார்கூட தமிழில் புதிய ஒலிகளை diacritics கொண்டு எழுதலாம் என்கிறார். அதை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புதிய மெய்யெழுத்துக்களாக சேர்த்திருக்கிறார்கள் என்பதை ஏனோ ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.

    ஹாஹா உள்ளிட்ட ஒலிகளை தமிழர்கள் சாதாரணமாகப் பயனபடுத்தும் போது அதை எப்படி எழுதுவது என்ற என் கேள்விக்கும் நீங்கள் விடையளித்திருக்கலாம்.

    ன் இருக்கும் போது ண் எதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது என்று விளக்கியிருக்கலாம்.

    1, 2, 3 என்னும் அரபிய எழுத்துகள் பற்றிய எனது கேள்விக்கும் நீங்கள் விடையளித்திருக்கலாம்.

    தமிழ் பற்றி அளவுக்கு அதிகமாகவே ஆர்வம் கொண்டுள்ள நீங்கள் கிரந்தம், மணிப்பிரவளம் (வந்துண்டு :) ) பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள மறுப்பது வியப்பளிக்கிறது.

    கிட்டத்தட்ட தமிழ் “கல் தோன்றி, மண் தோன்றா காலத்துக்கு முன்பே தோன்றியது” என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் நீங்கள் நெதர்லாந்து மக்கள் செய்யவில்லை, அதனால் தமிழரும் செய்யக்கூடாது என்று சொல்லுவது எதன் அடிப்படையில் என்பதும் விளங்கவில்லை!

  • 19 பாலாஜி // Aug 14, 2008 at 12:46 pm

    >> தமிழ் அளவுக்குத் தெளிவான எழுத்து இலக்கணம் உடைய மொழிகளைக் காட்டுவீர்களா?

    >> Audio files can easily explain the pronunciation.

    உங்களின் இந்த இரண்டு வாக்கியங்களில் உள்ள முரண்பாடு உங்களுக்கு விளங்குகிறதா? தமிழில் எழுதியதயே படிக்கவேண்டும், அவ்வாறு இல்லாதபோது குறுக்கம் உள்ளிட்ட இலக்கண விதிகளுக்கு உட்பட்டு ஒலிக்கவேண்டும். எதையாவது எழுதிவிட்டு ஒலிப்பை ஒலித்துண்டுகள் கொண்டு தெரிவிக்கலாம் என்பது விந்தையான அணுகுமுறை.

    கிரந்த எழுத்துகள் சேர்த்தபோது பெரிய ஆராய்ச்சி செய்யப்படவில்லையாம்?!!! தமிழ் எழுத்துகள் கொண்டு சமஸ்கிரதம் எழுதியவர்களுக்கு மொழியியல் தெரியவில்லையா? யப்பா ….

    18 மெய்களோடு புதிய மெய்கள் சேர்த்தால் குறைபட்டுப்போகும் தமிழ் இலக்கண விதிகளை நீங்கள் தெரிவிக்கலாமே? அத்திசூடி பாட்டா?

    சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துகள் உசத்தி. ஆனால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சேர்த்த எழுத்துகள் தாழ்வு என்பது என்ன வாதமோ? இல்லை “தமிழ் ‘இறைவன்’ சிவன் அகத்தியர் வழியாய் நமக்கு அருளியது” என்பது மாதிரியான நகைச்சுவைகளையும் நீங்கள் நம்ப ஆரம்பித்துவிட்டீர்களா. தமிழ் இறைவன் கொடுத்தது என்கிற அபத்த வாதம்தான் தமிழில் புதிய ஒலிகள், எழுத்துகள் சேர்ப்பதை எதிர்க்க தக்க சாக்காக இருக்கமுடியும்!!!

  • 20 ரவிசங்கர் // Aug 14, 2008 at 2:01 pm

    balaji, உங்கள் கேள்விகள் வருவதற்குப் பல நாள் முன்பே கிரந்தம் குறித்து அவ்வப்போது எழும் எண்ணங்களை இங்கு எழுதி வைத்திருந்தேன். அதையே இங்கு மீள இட்டிருக்கிறேன். கிரந்தம் குறித்து இன்னும் ஒன்றிரண்டு இடுகைகளாவது எழுத வேண்டி உள்ளது. கண்டிப்பாக உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்வேன்.

    //மொழிக்கும் எழுத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புறக்கணிப்பது வருத்தமளிக்கிறது//

    மொழியும் அதன் ஒலிகளும் வரையறுக்கப்படும் போதே அதன் எழுத்துகளும் வரையறுக்கப்பட்டு விடுகின்றனவே? மொழி வேறு. எழுத்து வேறு அல்ல. எந்த ஒரு மொழியும் தன் மொழியின் ஒலிகளை எழுதிக் காட்டத் தான் எழுத்துகளை உருவாக்கும். பிற மொழிகளின் ஒலிகளை எழுதிக் காட்டுவதற்காக அல்ல.

    தமிழ் எழுத்து வடிவம் எங்கிருந்து தோன்றியது என்பது பிரச்சினை இல்லை. 70களில் லை, ணா வின் எழுத்து வடிவம் வேறு. தற்போது வேறு. இது போல் காலத்துக்கு காலம் எழுத்து வடிவம் மாறி வருகிறது. ஆனால், ஒரு மொழியின் ஒலிகளும் அதை எழுதிக் காட்டும் எழுத்துகளின் எண்ணிக்கையும் வரையறுக்கப்பட்டவை என்பதே என் புரிதல். நான் அறிந்தவரை தேவையில்லாத எழுத்துகள், ஒலிகளை நீக்கும் மொழிகளைக் கண்டிருக்கிறேனே தவிர, சேர்த்துக் கொண்ட மொழியைக் காணோம்.

    பிற மொழி ஒலிகளை எழுதிக் காட்டுவதற்காக புதிய எழுத்துகளைச் சேர்த்துக் கொண்ட ஒரு பெரிய மொழியையாவது காட்டுங்களேன்? IPA குறியீடுகள் வேறு. ஆங்கில எழுத்துகளின் எண்ணிக்கை என்றுமே 26ஆகத் தான் இருக்கும். 26 ஆங்கில எழுத்துகளைக் கொண்டு பெயரை வளைத்து நெளித்து எழுதிவிட்டு அடைப்புக்குறிக்குள் IPA விளக்கம், ஒலிக்கோப்புகள் தருவது போல் தமிழுக்கும் தரச் சொல்கிறேன்.

    புசுப்பா என்று எழுதி புஷ்பா என்று வாசிக்கச் சொல்லவில்லை. அது தமிழ்க் கொலை. புசுப்பா என்று மக்கள் பேச்சில் புழங்குவதால் புசுப்பா என்றே எழுதலாம் என்று சொல்கிறேன். புசுப்பா என்று எழுதியதை புசுப்பா என்றே வாசிக்கலாம் என்கிறேன். மூல மொழியின் உச்சரிப்பு தெரிந்தே ஆக வேண்டும் என்பவர்களுக்காக அடைப்புக்குறிக்குள் ஒலிக்கோப்புகள் தரலாம். இதில் எங்கே முரண்? ஆங்கில விக்கிப்பீடியாவில் சீன, அரேபிய பெயர்களுக்கு இது போல் செய்திருப்பதைக் காணலாம். thamil, thooththukkudi போன்ற பெயர்கள் ஆங்கிலேயர்கள் வாயில் நுழைவதற்காக tamil, tuticorin என்று ஒரு ஆங்கிலப் பெயர் இருப்பது போல் தமிழர்கள் (நகரத்தில் இருப்பவர்கள் மட்டுமே தமிழர்கள் இல்லை!) வாயில் நுழைவதற்காக ஒரு தமிழ்ப் பெயர் ஏன் இருக்கக்கூடாது? எப்பாடு பட்டேனும் மூல மொழி ஒலிப்பை ஒலிக்க வேண்டும், எழுதிக் காட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

    //கிட்டத்தட்ட தமிழ் “கல் தோன்றி, மண் தோன்றா காலத்துக்கு முன்பே தோன்றியது” என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் நீங்கள் நெதர்லாந்து மக்கள் செய்யவில்லை, அதனால் தமிழரும் செய்யக்கூடாது என்று சொல்லுவது எதன் அடிப்படையில் என்பதும் விளங்கவில்லை!//

    நேற்று வந்த மொழிகளே தங்கள் இயல்பைக் காக்க முற்படும் போது பழமை வாய்ந்த மொழிகள் எவ்வளவு மெனக்கெட வேண்டும் என்று நாம் உணர வேண்டாமா?

    ஆங்கிலேயன், டச்சுக்காரன் செய்யவில்லையென்றால் நாமும் ஏன் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது ஊரெல்லாம் நிமிர்ந்து நிற்கிறது என்பதற்காக நாம் ஏன் குனிந்து கூழைக்கும்பிடு போடக்கூடாது என்பது போல் இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் மொழியை எவ்வாறு காக்கிறார்கள் என்பதை அறியும் போது தானே, நாம் செய்யும் தவறுகள் புலப்படுகின்றன?

    //கிரந்த எழுத்துகள் சேர்த்தபோது பெரிய ஆராய்ச்சி செய்யப்படவில்லையாம்?!!! தமிழ் எழுத்துகள் கொண்டு சமஸ்கிரதம் எழுதியவர்களுக்கு மொழியியல் தெரியவில்லையா? யப்பா ….//

    தமிழ்ப் பாடல்களை சமசுகிருதம், பிற இந்திய மொழிகளில் எழுதிக் காட்டி இருக்கிறீர்களா? அப்படி எழுதிய தங்கள் “மொழியிலாளர்கள்” தமிழ் ஒலிகளை சரியாக எழுதிக் காட்டுவதற்காக எத்தனை புது எழுத்துகளை தங்கள் நெடுங்கணக்கில் சேர்த்தார்கள் என்று சொல்வீர்களா? மற்ற மொழிகள் மாற்றக் கூடாத அளவுக்கு “உசத்தி”, நினைத்தபடி மாற்றுவதற்கு தமிழ் மட்டும் கிள்ளுக்கீரையா?

    //தமிழ் இறைவன் கொடுத்தது என்கிற அபத்த வாதம்தான் தமிழில் புதிய ஒலிகள், எழுத்துகள் சேர்ப்பதை எதிர்க்க தக்க சாக்காக இருக்கமுடியும்!!//

    தேவையில்லாமல் திசை திருப்புகிறீர்கள். எனக்கு தெய்வ நம்பிக்கையும் இல்லை. தமிழ் தெய்வம் தந்தது என்று நினைக்கவும் இல்லை.

    உண்மையில், “மாற்றி ஒலித்தால் மந்திரம் பலிக்காது. மாங்காய் பழுக்காது” என்று தமிழில் கிரந்த எழுத்துகளைப் புகுத்தியவர்கள் வேண்டுமானால் தெய்வ குற்றத்துக்கு அஞ்சிச் சேர்த்திருக்கலாம் :)

    கடைக்குப் போய் அரை கிலோ கத்தரிக்காய், அப்புறம் கொஞ்சம் மிளகாய், பூண்டு என்று சமையலுக்குத் தேவைப்படுவதை கூடையில் அள்ளிப்போட்டு வருவது போல் பழந்தமிழர்கள் ஒலிகள், எழுத்துகளை masala mixஆகச் சேர்க்கவில்லை. தமிழ் இலக்கணத்தின் ஒவ்வொரு விதியும் தன்னார்ந்த அறிவியல் ஒழுங்கு கொண்டது. அத்தகைய ஒழுங்கும் தேவையும் “கிரந்தச் சீர்திருத்தத்தில் காணவில்லை”

  • 21 Balaji // Aug 14, 2008 at 10:05 pm

    கிரந்தம் பற்றிய உங்களுடைய பிற இடுகைகளுக்காகக் காத்திருக்கிறேன்!

    >> ஆங்கில எழுத்துகளின் எண்ணிக்கை என்றுமே 26ஆகத் தான் இருக்கும்.

    ஆங்கிலம் எழுதப்பயன்படும் 26 லத்தின் எழுத்துகளும்கூட கிரேக்க எழுத்துகளிலிருந்து வந்தவையே. அந்த 26இல் W (double u = uu) உள்ளிட்ட எழுத்துகள் பின்னர் சேர்க்கப்பட்டவையே.

    உலகின் பெரும்பாலான மொழிகளில் அ - a, இ - e, ஐ- i, ஒ - o, உ - u உள்ளிட்ட உயிர்கள் பொதுவானதாகவே இருக்கும். மெய்கள் சேர்ப்பது மொழிகளைப் பொருத்தது.

    >> நகரத்தில் இருப்பவர்கள் மட்டுமே தமிழர்கள் இல்லை!

    என்னால் கிரைஸ்டாப் கெஸ்லாவ்ஸ்கி என்று ஒலிக்க முடிகிறதென்றால் தமிழ் நாட்டிலுள்ள ‘கிராமத்தவர்’களால் ஒலிக்கமுடியாதா? பழக்கமின்மை ஒரு பிழையா? அதே கிராமத்தார் தேவைப்பட்டால் புதிய ஒலிகளைக் கற்றுக்கொள்வதற்கு தயங்கவோ, சிரமப்படவோ போவதில்லை. தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் தமிழக கிராமத்தவர்களை நீங்கள் பார்த்ததேயில்லையா? தமிழர்களை தமிழொலி தவிர்த்த எதையும் ஒலிக்கத் தெரியாதவர்கள் என்று சித்தரிப்பது அருவறுக்கத்தக்கது.

    >> மொழியும் அதன் ஒலிகளும் வரையறுக்கப்படும் போதே அதன் எழுத்துகளும் வரையறுக்கப்பட்டு விடுகின்றனவே?

    மிகவும் தவறான வாதம். உலகிலுள்ள பெரும்பாலான மொழிகளுக்கு எழுத்துகளே இல்லை. தமிழ் உள்பட பல மொழிகள் பிறரிடமிருந்தே எழுத்துகளைப் பெற்றிருக்கின்றன. எழுத்துமுறை தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொழிகள் தோன்றிவிட்டன. சித்திர எழுத்துகள் (hieroglyphs) தோன்றி பின்னர் அவை standardize ஆகும் போது தான் எழுத்து பிறக்கிறது.

    எழுத்துகள் கண்டுபிடிப்பது சாதாரணமான காரியமில்லை. சுமார் 2500 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதத்தெரிந்த சமூகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த எண்ணிக்கையில் தமிழர் இருந்தனரா என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

    >> பிற மொழி ஒலிகளை எழுதிக் காட்டுவதற்காக புதிய எழுத்துகளைச் சேர்த்துக் கொண்ட ஒரு பெரிய மொழியையாவது காட்டுங்களேன்?

    அரபு மொழி உள்பட பல உதாரணங்கள் காட்ட முடியும்.

    >> தமிழ்ப் பாடல்களை சமசுகிருதம், பிற இந்திய மொழிகளில் எழுதிக் காட்டி இருக்கிறீர்களா?

    இது என்ன தாழ்வு மனப்பான்மையோ? தமிழை மற்றவர்கள் படிக்கவில்லை என்பதற்காக நாம் யாரை கோபித்துக்கொள்ள முடியும்?

    வேண்டுமானால் தமிழர் கண்டுபிடித்த கிரந்தம் சிங்களம், மலையாளம், Khmer, Javanese, Mon உள்ளிட்ட எழுத்துகளை பாதித்தது என்று பெருமைபட்டுக் கொள்ளலாம்.

    >> தமிழ் இலக்கணத்தின் ஒவ்வொரு விதியும் தன்னார்ந்த அறிவியல் ஒழுங்கு கொண்டது. அத்தகைய ஒழுங்கும் தேவையும் “கிரந்தச் சீர்திருத்தத்தில் காணவில்லை”

    18 மெய்களோடு இன்னும் பிற மெய்கள் சேர்த்தால் என்ன குறை என்று நீங்கள்தான் விளக்கவேண்டும். மற்றவர் செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது நல்ல சப்பைக்கட்டு.

    கிரந்த எழுத்துகள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. தமிழர்களுக்கு புதிய ஒலிகளும் அவைகளுக்குத் தேவையான எழுத்துகளும் தேவைப்படும்போது diacritics போன்று மீண்டும் ஆராய்ச்சியில் இறங்காமல் கிரந்த எழுத்துகளை பயன்படுத்திக்கொள்வது மிகவும் இயல்பானதே.

    பேசுவதற்கு கடினமாக இருப்பதால் தமிழன் ஏற்கனவே ஆங்கிலம் கலந்து பேசிக்கொண்டிருக்கிறான். இந்த அழகில் கிரந்த எழுத்து புறக்கணிப்பு, தனித்தமிழ் இயக்கம் போன்ற தேவையற்ற பிடிவாதங்கள் ஒரு நாள் தமிழ் எழுத்துகள் ஒழிந்து 26 ஆங்கில எழுத்துகள் கொண்டு தமிழை எழத வழிசெய்யப்போகின்றன.

  • 22 ரவிசங்கர் // Aug 15, 2008 at 1:04 am

    //ஆங்கிலம் எழுதப்பயன்படும் 26 லத்தின் எழுத்துகளும்கூட கிரேக்க எழுத்துகளிலிருந்து வந்தவையே. அந்த 26இல் W (double u = uu) உள்ளிட்ட எழுத்துகள் பின்னர் சேர்க்கப்பட்டவையே.//

    ஆங்கிலம் போல் தமிழ் எதிலிருந்தும் வந்த மொழி அல்லவே? மூல மொழி அல்லவா? தமிழ் போன்ற செம்மொழிகளில் இப்படி புது எழுத்துகள் சேர்க்கிறார்களா? அம்மொழிகளில் எழுத்திலக்கணம் உண்டா?

    //மெய்கள் சேர்ப்பது மொழிகளைப் பொருத்தது.//

    அது தான் தமிழைப் பொருத்தவரை 18 மெய்கள் என்று வரையறுத்து தெளிவாக இலக்கணம் எழுதி வைத்திருக்கிறார்களே? பிற மொழி ஒலிகள், சொற்களை எப்படித் தமிழ் வயப்படுத்தி எழுத வேண்டும் என்பதற்கும் இலக்கண வழிகாட்டுதல் இருக்கின்றதே?

    //என்னால் கிரைஸ்டாப் கெஸ்லாவ்ஸ்கி என்று ஒலிக்க முடிகிறதென்றால் தமிழ் நாட்டிலுள்ள ‘கிராமத்தவர்’களால் ஒலிக்கமுடியாதா? பழக்கமின்மை ஒரு பிழையா?//

    சில மொழிகளில் r, j போன்ற ஒலிகள், எழுத்தே கிடையாது. அது என்ன அவர்களால் ஒலிக்க இயலாது என்றா விட்டார்கள்? அவர்கள் மொழியில் இல்லை. அதனால் ஒலிக்கவும் தேவை இல்லை என்று விட்டுவிட்டார்கள். பிற மொழி ஒலியா தன் மொழி இயல்பா என்று வருகையில் தன் மொழி இயல்புக்கு முன்னுரிமை கொடுப்பதே நலம்.

    குறிப்பிடத்தக்க எண்ணிக்கை மக்களால் ஒலிக்க முடியவில்லை என்பது முதல் பிரச்சினை. அப்படி ஒலிக்க இயன்றாலும் கண்டிப்பாக அப்படித் தான் ஒலிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. roja - ரோசா, raja - ராசா எல்லாமே இரு வழக்கிலும் பொதுப் புழக்கத்தில் உள்ளவையே. இரண்டு வழக்கமும் இருக்கையில் தமிழ் வழக்கத்துக்கு முன்னுரிமை கொடுப்பதில் தவறில்லை.

    முடியுமா முடியாதா என்பதை விட தேவை இல்லை என்பதே சொல்ல வருவது. ஆங்கிலப் பெயர் china. தமிழ்ப் பெயர் சீனா என்று இருப்பது போல் கிரந்தம் தாங்கிய சொற்களுக்கும் ஏன் ஒரு தமிழ்ப் பெயர் இருக்கக்கூடாது?

    //தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் தமிழக கிராமத்தவர்களை நீங்கள் பார்த்ததேயில்லையா?//

    இவர்கள் மொத்த தமிழ் மக்கள் தொகையில் எத்தனை வீதம்? எல்லையோரப் பகுதிகளில் இருப்பவர்கள், மேற்கண்ட மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கு இது எளிதே. என்னால் raja என்று ஒலிக்கத் தெரியாமல் ராசா என்று எழுதவில்லை. தமிழில் எழுதும் போதும் ஒலிக்கும் போதும் ராசா என்பதே தமிழின் இயல்புக்கு இயைவதாய் மதிப்பதாய் இலகுவாய் இருக்கும் என்பதாலேயே. இழவு வீட்டில் போய் ஒப்பாரி கேட்டிருக்கிறீர்களா? “என்னைப் பார்த்த ராசா” என்று தான் அழுவார்கள். “என்னைப் பெத்த ராஜா” என்று அழுபவர்களைக் கண்டதில்லை.

    //தமிழர்களை தமிழொலி தவிர்த்த எதையும் ஒலிக்கத் தெரியாதவர்கள் என்று சித்தரிப்பது அருவறுக்கத்தக்கது.//

    உண்மையைச் சொல்வதில் என்ன அருவருப்பு? ஒருவருக்கு கிரந்தம் ஒலிக்க வராவிட்டாலே “இவன் நாட்டுப்புறத்தான், நாகரிகம் தெரியாதவன், படிக்காதவன்” என்று முத்திரை குத்தும் போக்கு இருக்கா இல்லையா? இது தான் அருவருப்பானது. தமிழகத்தில் எத்தனை பேருக்கு (நான் உட்பட) ல, ள, ழ, ண, ந, ன, ற, ர வேறுபாடுகளைத் தெளிவாக உச்சரிக்க வருகிறது? தாய் மொழியையே ஒழுங்காக உச்சரிக்காமல் இருக்கிறோம் என்பதை விடவா பிற மொழி ஒலிகளை ஒழுங்காக ஒலிக்காதது ஒரு பிரச்சினை?

    //

    >>மொழியும் அதன் ஒலிகளும் வரையறுக்கப்படும் போதே அதன் எழுத்துகளும் வரையறுக்கப்பட்டு விடுகின்றனவே?< <
    மிகவும் தவறான வாதம். உலகிலுள்ள பெரும்பாலான மொழிகளுக்கு எழுத்துகளே இல்லை. தமிழ் உள்பட பல மொழிகள் பிறரிடமிருந்தே எழுத்துகளைப் பெற்றிருக்கின்றன.

    //

    தங்கள் வாதம் தான் தவறு என்று கருதுகிறேன். தமிழில் எழுத்து, பொருள், சொல் இலக்கணம் என்று தனித்தனியாக இல்லையா? தமிழ் எழுத்துகள் அ முதல் ன வரையானவை, அவற்றின் வகைப்பாடு என்ன, அவற்றை ஒலிக்கும் முறை என்ன என்றெல்லாம் தெளிவாக வரையறுக்கவில்லையா? எழுத்து என்பது இப்படி வரையறுக்கப்பட்ட ஒலிகளை எழுதிக் காட்டும் கருவி தானே?

    எல்லா மொழிகளிலும் முதலில் ஒலி தோன்றிய பிறகே எழுத்துகள் தோன்றின. அந்த எழுத்து வடிவங்கள் சொந்தமாக இருக்கலாம், கடன்பெற்றும் இருக்கலாம். அண்மைக் காலத்தில் தான் எழுத்து வடிவமும் வந்திருக்கலாம். நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சட்டை போடுவது காலத்துக்கு ஏற்ப எழுத்து வடிவங்களும் மாறலாம். ஒரு காலத்தில் நாம் சட்டை போடாமல் தான் இருந்தோம். ஆனால், நாம் பிறந்த கணமே நாம் யார் என்று வரையறுக்கப்பட்டு விடுகிறோம். சட்டையை மாத்துவதற்குப் பதில் ஆளையே மாத்தி குடும்பத்தைக் குழப்பக்கூடாது :)

    மொழியின் ஒலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலக்கியம் வளர்ந்து இலக்கணம் எழுதும் காலகட்டத்திலேயே அதன் இயல்பும் வரையறை செய்யப்பட்டு விடுகிறது. அதற்குப் பிறகு எழுத்தைத் தானே திணிக்கிறோம் என்ற பெயரில் புது புது எழுத்துகள் ஊடாக புதுப்புது ஒலிகள், மெய்கள் என்று சேர்ப்பது மொழியைச் சிதைப்பதே அன்றி வளர்ப்பது ஆகாது.

    ஏதோ கிரந்தம் என்பது இன்றைய தேவை, கண்டுபிடிப்பு போல ஏன் சொல்ல வேண்டும்? தொல்காப்பியர் காலத்திலும் பிற சொல், ஒலிகள் குறித்து அறிந்து தானே அவற்றை எப்படித் தன்வயப்படுத்த வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார்? தற்கால “முற்போக்கு மொழியிலாளர்களை” விட தொல்காப்பியர் மேல் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.

    //இது என்ன தாழ்வு மனப்பான்மையோ? தமிழை மற்றவர்கள் படிக்கவில்லை என்பதற்காக நாம் யாரை கோபித்துக்கொள்ள முடியும்?//

    இது தாழ்வு மனப்பான்மை இல்லை தன்மானம் / விழிப்புணர்வு. எப்படியாவது பிற மொழி ஒலிகளைப் பிசகாமல் ஒலித்து விட வேண்டும் என்று எண்ணுவது தான் தாழ்வு மனப்பான்மை. பிற மொழியினர் தமிழ் இலக்கியங்களை அறிவதற்காக தங்கள் மொழியில் எழுதிப் படித்தாலும் ஒரு போதும் அதற்காகப் புது எழுத்துகளை உருவாக்கிக் கொள்ள மாட்டார்கள். நாம் தான் வருகிற மொழிகளுக்கு எல்லாம் “சலாம்” போடுகிறோம்.

    //18 மெய்களோடு இன்னும் பிற மெய்கள் சேர்த்தால் என்ன குறை என்று நீங்கள்தான் விளக்கவேண்டும்.//

    நாம் ஒரு வாலும் சிறகும் உடம்பில் பொருத்திக் கொண்டால் என்ன குறை என்று நீங்கள் விளக்கலாமே?

    //தமிழர்களுக்கு புதிய ஒலிகளும் அவைகளுக்குத் தேவையான எழுத்துகளும் தேவைப்படும்போது diacritics போன்று மீண்டும் ஆராய்ச்சியில் இறங்காமல் கிரந்த எழுத்துகளை பயன்படுத்திக்கொள்வது மிகவும் இயல்பானதே.//

    diactrics பயன்படுத்துவதிலும் எனக்குத் தயக்கங்கள் உண்டு. அதற்கு தனி இடுகை எழுதுவேன் (இப்படியே எழுதுறேன்..எழுதுறேன்னு முன்னோட்டம் விட்டுக்கிட்டே இருக்கேன் !! :) )

  • 23 பாலாஜி // Aug 15, 2008 at 5:57 am

    ரவி,

    நீங்கள் எனக்கு அளித்துள்ள பதில்களை நீங்களே மீண்டும் படித்தால், நீங்கள் செய்து கொண்டிருப்பது விதண்டா வாதம் என்பது விளங்கும்.

    >> தொல்காப்பியர் காலத்திலும் பிற சொல், ஒலிகள் குறித்து அறிந்து தானே அவற்றை எப்படித் தன்வயப்படுத்த வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார்?

    தொல்காப்பியர் காலத்தில் தமிழருக்கு பழக்கமாயிருந்த ஒலிகளையும், எழுத்துகளையும் குறித்து அவர் இலக்கணம் எழுதியிருக்கிறார். தொல்காப்பியர் தமிழை கண்டுபிடித்தவரல்ல. பிற்காலத்தில் தமிழர் சேர்த்துக்கொண்ட ஒலிகளுக்கும் எழுத்துகளுக்கும் பின்னர் வந்தவர்கள்தாம் இலக்கணம் எழுதவேண்டும். எழுதியும் இருக்கிறார்கள்.

    பல மாதங்களாகவே நீங்கள் வைத்துவரும் ஒரே வாதம் எங்கள் ஊர் கிராமத்தவருக்கு உச்சரிக்கத் தகுந்ததே தமிழாகமுடியும் என்பது தான்.

    இத்தனைக்கும் யாரும் அவர்களை கிரந்த எழுத்துகள் பயன்படுத்தச் சொல்லவில்லை. பிறமொழிகள் தெரிந்தவர்கள் அம்மொழி சொற்களை (குறிப்பாக பெயர்களை) தமிழில் எழுத கிரந்தம் பயன்படுத்தலாம் என்பதே விவாதம். ஜலம், ஹஸ்தம், ஜாஸ்தி போன்ற தேவையற்ற பிறமொழி கலப்பை யாரும் ஊக்குவிக்கச் சொல்லவில்லை.

    ஆங்கிலமும், வடமொழியும் தெரிந்தவர்கள், சென்னை உள்ளிட்ட நகரவாசிகள், இப்போது எல்லையோர மாவட்டங்களில் வாழ்பவர்கள், நான் மலேசியா, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஆந்நாட்டு மொழிகளை அறிந்திருப்பதை சுற்றிக்காட்டினால் அவர்களையும் என்று எத்தனை தமிழர்களைதான் ‘அரைகுறை’ தமிழர்களாக ஆக்குவீர்களோ தெரியவில்லை!

    நான் மொழியியல் அடிப்படையில் கேட்கும் எந்த கேள்விக்கும் நீங்கள் பதில் அளிப்பதில்லை. சீக்கிரம் உங்களுடைய மற்ற பதிவுகளையும் எழுதுங்களேன்!!

    “ஒரே ஒரு உதாரணம் கொடு” என்று சல்லியடித்துக் கொண்டிருந்தீர்கள். நான் அரபு மொழி, ஆங்கிலம் என்று அடுக்கினால் அவை செம்மொழி அல்ல என்று கோல் போஸ்டை நகர்த்துகிறீர்கள்.

    நான் w உள்ளிட்ட எழுத்துகள் சேர்க்கப்பட்டது என்று சொன்னது லத்தீன் என்னும் செம்மொழியில்தான். ஆதி லத்தினில் 21 எழுத்துகளே இருந்தன. அது ஜெர்மானிய மற்றும் நோர்டிக் மொழிகளோடு உறவாடி புதிய எழுத்துகளைப் பெற்றது.

    செம்மொழிகளில் தமிழ் தவிர்த்த மற்றவை வழக்கொழிந்து போனதுபோல் தமிழும் ஆவதற்கு உங்களுடைய கிரந்த எதிர்ப்பு நிச்சயம் உதவும். முயன்று பாருங்கள்!

  • 24 ரவிசங்கர் // Aug 15, 2008 at 2:02 pm

    //தொல்காப்பியர் காலத்தில் தமிழருக்கு பழக்கமாயிருந்த ஒலிகளையும், எழுத்துகளையும் குறித்து அவர் இலக்கணம் எழுதியிருக்கிறார்.//

    நீங்கள் சொல்வது படி பார்த்தால் தொல்காப்பியர் காலத்தில் தமிழனுக்கு கிரந்த ஒலிகள், வட ஒலிகள் அறிமுகமாக வில்லையா? ஒலிகளே அறிமுகமாகி இருக்காவிட்டாலும் பிறர் ஏன் திசைச்சொல், வட சொல் குறித்து இலக்கணம் எழுத வேண்டும்? வராத நோய்க்கு மருந்து எழுதிக் கொடுப்பாரா எந்த மருத்துவரும்?

    //பிறமொழிகள் தெரிந்தவர்கள் அம்மொழி சொற்களை (குறிப்பாக பெயர்களை) தமிழில் எழுத கிரந்தம் பயன்படுத்தலாம் என்பதே விவாதம்//

    நீங்கள் எழுதுவது பிரச்சினை இல்லை. மாற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்தப் போவதும் அது பலன் அளிக்கப் போவதும் இல்லை. ஆனால், ஏதாவது ஒரு இடத்தில் தமிழில் எழுத முற்பட்டாலும், வரும் எதிர்ப்புகளே எரிச்சல் ! கிரந்தம் கலந்து எழுத உங்களுக்கு எவ்வளவு நியாயங்கள் உண்டோ, அதைக் காட்டிலும் கிரந்தம் கழித்து எழுதவும் நியாயங்கள் உண்டு.

    கிரந்தத்தைச் சேர்த்தால் என்ன குறை என்று கேட்டிருந்தீர்கள். கிரந்தத்தைச் சேர்க்காவிட்டால் என்ன குறை என்றும் நினைக்கலாமே? ஒரே குறை பிற மொழி ஒலிகளைத் துல்லியமாக எழுத இயலாது. அது எனக்கு பெரிய பிரச்சினையாகத் தோன்றவில்லை. எந்த ஒரு மொழியாலும் உலகின் பிற எல்லா மொழி ஒலிகளையும் எழுத இயலாது. தேவையும் இல்லை. நாளை சீனம் உலகம் முழுக்கப் பரவினால் அதை எழுதிக் காட்ட எத்தனை தமிழ் எழுத்துகளை உருவாக்க இயலும்?

    //செம்மொழிகளில் தமிழ் தவிர்த்த மற்றவை வழக்கொழிந்து போனதுபோல் தமிழும் ஆவதற்கு உங்களுடைய கிரந்த எதிர்ப்பு நிச்சயம் உதவும். முயன்று பாருங்கள்!//

    கிரந்தம் தவிர்த்தும் அழகாய் அற்புதமாய் வாழும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. 2000+ ஆண்டுகளாகவும் தமிழ் அப்படியே வாழ்ந்து இருக்கிறது. போன நூற்றாண்டில் நடந்த தனித்தமிழ் இயக்கத்தால் மாண்டதாய் காணவில்லை. மீண்டே வந்திருக்கிறது. தற்போதைய தமிழின் தொய்வு நிலைக்கு அரசியல், சமூக காரணங்களே முக்கியமே ஒழிய, மொழியின் இயல்பு அல்ல.

    கிரந்தம், புது ஒலிகளைச் சேர்க்காவிட்டால் தமிழ் அழியும் என்று சொல்லும் நீங்கள் இந்த ஒலிகள், எழுத்துகளை இயல்பாகவே கொண்டுள்ள வட மொழி ஏன் அழிந்தது என விளக்குவீர்களா? நீங்கள் சொல்வது போல் புதிய எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டாலும் இலத்தீனம் ஏன் அழிந்தது? ஏற்கனவே இவ்வொலிகளை உடைய மொழிகளே அழிந்து போய் இருக்கையில் என்ன நம்பிக்கையில் இந்த ஒலிகளைச் சேர்த்தால் தமிழ் தப்பிப் பிழைத்து விடும் என்று எண்ணுவது?

    புதுப் புது ஒலிகளையும் எழுத்துகளையும் சொற்களையும் சேர்ப்பதால் தான் மொழி வாழும் என்றால் செயற்கை மொழியான esperanto தான் உலக மொழியாக இருக்க வேண்டும்.

    ஒரு செம்மொழி அழிவதற்கு எண்ணற்ற காரணங்கள் உள. அதை எல்லாம் விடுத்து கிரந்தம் நீங்கினால் தமிழ் அழியும் என்று சொல்வது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல் உள்ளது. சாபம், மிரட்டல் போன்றும் தோன்றுகிறது !!!

    “காலம் பதில் சொல்லும்” என்று பல இடங்களில் உள்ள உரையாடல்களுக்குச் சொல்லி வருகிறேன் :) இதற்கும் அப்படித் தான் சொல்ல வேண்டும்.

  • 25 புருனோ // Aug 16, 2008 at 4:01 am

    //எந்த ஒரு மொழியும் தன் மொழியின் ஒலிகளை எழுதிக் காட்டத் தான் எழுத்துகளை உருவாக்கும். பிற மொழிகளின் ஒலிகளை எழுதிக் காட்டுவதற்காக அல்ல.//

    இதைத்தானே நாங்கள் திரும்ப திரும்ப கூறுகிறோம்

    //செம்மொழிகளில் தமிழ் தவிர்த்த மற்றவை வழக்கொழிந்து போனதுபோல் தமிழும் ஆவதற்கு உங்களுடைய கிரந்த எதிர்ப்பு நிச்சயம் உதவும். முயன்று பாருங்கள்!//

    உங்களுக்கு இந்தி தெரியுமா

    தமிழ் என்பதை எப்படி எழுதுகிறார்கள்

    तमिल என்றா
    அல்லது
    तमिழ் என்றா

    இந்தி தெரிந்தால் நீங்களே பதில் கூறுங்கள்

    அல்லது யாரிடமாவது கேட்டு கூட கூறலாம்

    நீங்கள் கூறுவதை பார்த்தால் இந்தி அழிவை நோக்கி போகிறது :) :)

    ஏன்

    ஆங்கிலம் கூட அழிவை நோக்கித்தான் போகிறது ஏனென்றால் tamiழ் என்று எழுதாமல் tamil என்று எழுதுகிறார்கள்

    :) :)

  • 26 பாலாஜி // Aug 16, 2008 at 10:49 am

    ரவி,

    மொழியல் குறித்த, அறிவிப்பூர்வமான எந்த கேள்விக்கும் பதில் அளிப்பதில்லை. உணர்வுப்பூர்வமான பதில்களே அளிப்பது என்று கொள்கை வைத்திருக்கிறீர்கள். நடத்துங்க!

    >> நீங்கள் சொல்வது படி பார்த்தால் தொல்காப்பியர் காலத்தில் தமிழனுக்கு கிரந்த ஒலிகள், வட ஒலிகள் அறிமுகமாக வில்லையா?

    தொல்காப்பியர் காலத்தில் என்ன, மணிமேகலை எழுதிய காலத்திலேகூட வேதமத்தாரும், சமணரும் ஊருக்கு வெளியதான் வசித்துக்கொண்டிருந்தர்கள். அதனால் பின்னர் நடந்த அளவுக்கு தமிழில் பிறமொழித் தாக்கத்தை தொல்காப்பியர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இத்தனைக்கும் அவர் முன்னெச்சரிக்கையாகவே திசைச்சொல்களையும் சேர்த்தே இலக்கணம் எழுதியிருக்கிறார்.

    >> இந்த ஒலிகள், எழுத்துகளை இயல்பாகவே கொண்டுள்ள வட மொழி ஏன் அழிந்தது என விளக்குவீர்களா?

    மொழியியல் குறித்து துளியாவது தெரிந்த எவரும் சமசுகிரதம் எப்போதுமே பெரிய பேச்சுமொழியாய் இருந்தத்தில்லை என்பதை அறிந்திருப்பார்கள். அது இந்தியாவில் எப்போதுமே இலக்கிய (literary) மொழியாகத் தான் இருந்தது. பிராகிரதம் (prakrit), ஹிந்துஸ்தானி, இந்தி என்று மக்கள் பயன்படுத்திய பேச்சுமொழிகள் வேறாகவே இருந்திருக்கின்றன.

    அவ்ஸ்தன் (avestan), old persion மற்றும் சமசுகிரதம் ஆகிய மூன்றும் மத்திய ஆசியாவிலிருந்த நாடோடிகளிடம் மட்டுமே பேச்சு மொழியாய் இருந்தது. நாடோடிகளின் மொழி வழக்கொழிந்து போனதில் வியப்பில்லை. சமசுகிரதம் இன்றும் பிழைத்திருப்பதற்குக் காரணங்களில் சாரதா (sarada - kashmir), தேவநகரி (north india), கிரந்தம் (south india) என்று பல எழுத்துமுறைகளை சமசுகிரதம் ஏற்றுக்கொண்டதே முதன்மையான காரணம். தமிழிலிருந்துகூட சமசுகிரதம் சில எழுத்துகளைப் பெற்றிருக்கிறது.

    மந்திரங்கள் கடவுளிடமிருந்து வந்தது என்ற நம்பிக்கையால் கிரந்தம் கொண்டு வேதத்தை எழுதினார்கள் என்று நீங்கள் நக்கலிடித்துக் கொண்டிருக்கலாம். வேத காலத்தில் சமசுகிரததுக்கு எழுத்தேயில்லை. வேதப்பாடல்களை வாய்வழியாகவே காக்கவேண்டிருந்தது என்ற practical காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும். அவ்வளவு கஷ்டப்பட்டு காப்பாற்றியதை தமிழர் மெனக்கெட்டு கிரந்தம் கொண்டு தொடர்ந்து எழுதியதில் வியப்பில்லை. எழுத்தில் எழுதமுடியாத வேதப்பாடல்கள் இன்றும் இருக்கின்றன.

    ஆயிரமாயிரம் ஆண்டு பாரம்பரியத்தை காக்க எடுக்கும் முயற்சிகளை யார் நக்கலடித்தாலும் ஒரு தமிழன் நக்கலடிக்கக்கூடாது.

    சமண மதத்தார் கொண்டுவந்த பிராமி எழுத்தில் சிலபல சங்கப் பாடல்கள் கிடைத்ததாலேயே இன்று தமிழின் வயதுகுறித்து நாம் அலட்டிக்கொண்டிருக்கிறேம். அன்று மற்றவர் கொண்டுவந்த எழுத்துக்களை புறக்கணிப்போம் என்று ‘தமிழர்’ அடம்பிடித்திருந்தால், புராதனம் வேண்டி இன்று கன்னடம் படும்பாட்டை நாம் அனுபவித்துக் கொண்டிருந்திருப்போம்.

    >> கிரந்தத்தைச் சேர்க்காவிட்டால் என்ன குறை என்றும் நினைக்கலாமே?

    கிரந்தம் சேர்ப்பதால் மட்டும் தமிழ் பிழைக்கும் என்று சொல்லவில்லை. பிறமொழி சொற்களையும் ஒலிகளையும் தமிழர் தெரிந்திருந்தும், பெருமளவில் பயன்படுத்தியும்கூட அதை எழுத முடியாவிட்டால் நிச்சயம் தமிழ் அழிந்துபோகும்.

    இஸ்திரி, ஹாஹா, ஜல்ஜல், புஸ்வானம் உள்ளிட்ட தமிழ் சொற்களை எப்படி எழுதுவீர்கள் என்ற கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கப்போவதில்லை!

    அன்று தமிழையும் வடமொழியையும் சேர்த்து எழுதியதால்/பேசியதால் மணிப்பிரவளம் வந்து தமிழிலிருந்து மலையாளம் பிரிந்துபோனது. இன்று ஆங்கில வார்த்தைகளை, ஆங்கிலத்தில்தான் எழுதுவேன் என்று நீங்கள்கூட ஆரம்பத்தீர்கள்.

    அதே போல எக்கச்சக்கமான வடமொழி சொற்கள் தமிழை மூழ்கடித்ததால்தான் தனித்தமிழ் இயக்கம் தொடங்கவேண்டியதாகியது. இன்று தமிழன் கிட்டத்தட்ட ஆங்கிலத்தில்தான் பேசிக்கொண்டிருக்கிறான்.

    மேர்கூரிய பிரச்சனைகளை ஓரளவு சரிசெய்ய கிரந்தம் உதவும். நாம் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டாலும் அதை எழுதும்போது தமிழில் எழுத முடிந்தால் சமசுகிரதம் போல தமிழ் இலக்கிய மொழியாகவேணும் பிழைக்கும்.

    முந்தைய தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

  • 27 ரவிசங்கர் // Aug 16, 2008 at 1:00 pm

    //மொழியல் குறித்த, அறிவிப்பூர்வமான எந்த கேள்விக்கும் பதில் அளிப்பதில்லை. உணர்வுப்பூர்வமான பதில்களே அளிப்பது என்று கொள்கை வைத்திருக்கிறீர்கள். நடத்துங்க!//

    மொழியும் உணர்வும் பிரிக்கக்கூடியதா? தமிழில் தலை எழுத்து எழுதுங்கள் என்பதில் மொழியியல் நோக்கில் என்ன தவறு? ஆனாலும், “மரியாதை, ஆணவம், அநாகரிகம், பண்பு’ என்று உணர்வு அடிப்படையில் தானே உங்கள் வாதத்தை முன்வைக்கிறீர்கள்? உங்களுக்கு உள்ள நியாயம் எனக்கு இருக்கக்கூடாதா?

    //தொல்காப்பியர் காலத்தில் என்ன, மணிமேகலை எழுதிய காலத்திலேகூட வேதமத்தாரும், சமணரும் ஊருக்கு வெளியதான் வசித்துக்கொண்டிருந்தர்கள். அதனால் பின்னர் நடந்த அளவுக்கு தமிழில் பிறமொழித் தாக்கத்தை தொல்காப்பியர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இத்தனைக்கும் அவர் முன்னெச்சரிக்கையாகவே திசைச்சொல்களையும் சேர்த்தே இலக்கணம் எழுதியிருக்கிறார்.//

    ஆதாரம் கொடுங்கள். படித்துப் பார்க்கிறேன்.

    //மொழியியல் குறித்து துளியாவது தெரிந்த எவரும் சமசுகிரதம் எப்போதுமே பெரிய பேச்சுமொழியாய் இருந்தத்தில்லை என்பதை அறிந்திருப்பார்கள்//

    பிறகு ஏன், பேச்சு மொழிகளாய் இருந்திராத இலத்தீனம், வட மொழியின் அழிவை பேச்சு மொழி, ஆட்சி மொழியாக உள்ள தமிழுடன் ஒப்பிட்டு பயம் காட்டிக் குழப்புகிறீர்கள்? தமிழை ஒத்த பரவலான மொழி ஒன்று இருந்து அது பேச்சு மொழி, பிற மொழி ஏற்புக்கு முறையான ஒப்புதல் தராமல் அழிந்து போன வரலாறு இருந்தால் சொல்லுங்கள்.

    //வேதப்பாடல்களை வாய்வழியாகவே காக்கவேண்டிருந்தது என்ற practical காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும். அவ்வளவு கஷ்டப்பட்டு காப்பாற்றியதை தமிழர் மெனக்கெட்டு கிரந்தம் கொண்டு தொடர்ந்து எழுதியதில் வியப்பில்லை.//

    யார் காப்பாற்ற வேண்டாம் என்றார்கள்? வட மொழிக்கு எழுத்து கண்டுபிடித்து வட மொழியிலேயே சொல்லிக்கொடுத்து காத்திருக்க வேண்டியது தானே? இப்போது எழுத்துகள் வந்த பிறகும் அந்த மந்திரங்களை எழுதும் பொருட்டு ஏன் தொடர்ந்து தமிழிலேயே எழுதிக் கொண்டிருக்க வேண்டும்? எந்த ஒரு மொழி படிக்கும் மாணவனும் முதலில் எழுத்துகளைத் தானே படிக்க வேண்டும்? அவ்வளவு மந்திரங்களை மனனம் செய்பவர்கள் ஒரு எழுத்து முறையை கற்றுக் கொள்ள இயலாதா? எழுத்துகள் இல்லாத போது தமிழில் கிரந்தத்தில் எழுத வேண்டி இருந்த தேவை, தற்போது வட மொழிக்கு எழுத்துகள் உள்ளபோது இல்லை தானே?

    //ஆயிரமாயிரம் ஆண்டு பாரம்பரியத்தை காக்க எடுக்கும் முயற்சிகளை யார் நக்கலடித்தாலும் ஒரு தமிழன் நக்கலடிக்கக்கூடாது//

    ஒரு பாரம்பரியத்தைக் காப்பதற்காக இன்னொரு பாரம்பரியத்தைச் சிதைக்கக்கூடாது. ஒரு மொழியின் ஒலிப்புத் துல்லியம் காக்க விரும்புபவர்கள் எங்கள் மொழியின் எழுத்திலக்கண ஒழுங்கை மதிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதில் என்ன தவறு?

    //அன்று மற்றவர் கொண்டுவந்த எழுத்துக்களை புறக்கணிப்போம் என்று ‘தமிழர்’ அடம்பிடித்திருந்தால், புராதனம் வேண்டி இன்று கன்னடம் படும்பாட்டை நாம் அனுபவித்துக் கொண்டிருந்திருப்போம்.//

    தமிழனுக்கு எழுத்தே இல்லாமல் ஆங்கிலேயரிடம் இருந்து கடன்பெற்று ammaa என்று எழுதிக் கொண்டிருந்தாலும் எனக்கு ஒரு **** இல்லை. ஆனால், தமிழ் ஒலிகளுக்குத் தேவையான எழுத்துகளைத் தான் பெற வேண்டும். தமிழில் இல்லாத ஒலிகளான x, z, f எல்லாவற்றையும் கடன் வாங்கத் தேவை இல்லை.

    //பிறமொழி சொற்களையும் ஒலிகளையும் தமிழர் தெரிந்திருந்தும், ப