தமிங்கில ஊர்கள்

தற்போது ஊர்ப் பெயர்களின் ஆங்கில முன்னொட்டை இட்டு எழுதும் வழக்கம் பெருகி வருகிறது. எடுத்துக்காட்டுக்கு, மேலூர் அருகில் இருக்கும் அம்மாப்பட்டி முன்பு மே. அம்மாப்பட்டி. இப்பொழுது M. அம்மாப்பட்டி. தமிழ்நாட்டில் தமிழ் பெயரில் உள்ள ஊருக்கு எதற்கு ஆங்கில முன்னொட்டு?

ஏன் இந்தப் போக்கு?

இட நெருக்கடியில் பெயர் எழுத வேண்டிய பேருந்து அறிவிப்புப் பலகைகள், கடித முகவரிகள், மற்ற இடங்களில் சுருக்கி எழுத வேண்டிய தேவையின் காரணமாகப் பெயரைச் சுருக்குகிறார்கள். ஆட்களின் பெயர்ச்சுருக்கங்களை எழுதும் போது ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்துவது போலவே ஊர்ப் பெயர்ச்சுருக்கங்களுக்கும் ஆங்கிலம் வந்துவிடுகிறது. எல்லாமே வேகமாகிப் போன காலத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை என்று சொல்வதை விட ECR, OMR என்பது வசதியாக இருக்கிறது.

என்ன பிரச்சினை?

தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்ப்பெயர்கள் அழகான தமிழ்ச் சொற்கள். பெயர்க்காரணத்துடன் உள்ளவை. பண்டைய வரலாற்றை அறிய உதவுபவை. ஆனால், இப்போது Special தோசையும் SP தோசை தான். சிங்கப்பெருமாள் கோயிலும் SP கோயில் தான். போன தலைமுறை சிராப்பள்ளி என்னும் திருச்சிராப்பள்ளியில் இருந்து பொருளே இல்லாமல் திருச்சி என்பதைப் பிய்த்து எடுத்துக் கொண்டது. இந்தத் தலைமுறை அதே ஊரில் உள்ள திருவானைக்கோயிலை TV கோயில் ஆகிவிட்டது. அடுத்த தலைமுறை என்ன செய்யும்?

நியூயார்க்கைப் புதுயார்க் என்று ஒத்துக் கொள்ளாத நம் மக்கள், செங்குன்றத்தை Red Hills என்று எழுதினால் ஒத்துக் கொள்வார்கள். ஆங்கிலேயர் சிதைத்தது போதாது என்று நாமும் இருக்கிற ஊர்ப்பெயரை எல்லாம் ஆங்கிலமயமாக்கி வருகிறோம். ஊர்ப்பெயர்களைச் சிதைப்பதினால் தமிழக வரலாறும் தொடர்ச்சியும் தொலைகிறது. இனியாவது இதனைக் கருத்தில் கொள்வோமா?

தமிழ்நாட்டில் ஆங்கிலம் தெரியாதவர்கள்

ஆங்கிலம் தெரிந்தாலும் தமிழை விரும்பிப் பேசும், ஆங்கிலம் தெரியாமலேயே வாழ்க்கையில் வெற்றி பெற்ற எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஓரிருவரையாவது நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தால் உரையாடல் நன்றாக இருந்திருக்கும். ஆங்கிலம் தெரிந்து கொள்வது தான் வெற்றிக்கு வழி என்பது போல ஒருவர் தட்டுத்தடுமாறி அழுது கொண்டே ஆங்கிலம் பேசுகிறார். அவரை எல்லாரும் கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறார்கள். நிகழ்ச்சி முடிந்தது. ம்.

ஊடகத் தமிழ்

“தமிழ் வெகுமக்கள் ஊடக நிறுவனங்கள் பெருமளவு தமிங்கிலத்தில் எழுதுகின்றன. தமிழ் இலக்கண முறைகளை மதிப்பதில்லை. ஆனால், இந்நிறுவனங்களின் தொலைக்காட்சிகள், இதழ்கள், திரைப்படங்கள் நன்றாக “விற்று” வெற்றி பெறுகின்றன. எனவே, இது இவ்வூடகங்கள் முன்னிறுத்தும் “தற்காலத் தமிழுக்கு” மக்கள் தரும் ஆதரவு ஆகும். NewYork Times, Washington Post போன்றவற்றின் எழுத்து நடையை யாரும் விமர்சிப்பது இல்லை. மக்கள் ஊடகங்களான வலைப்பதிவுகள் கூட, வெகுமக்கள் ஊடக நடையிலேயே உள்ளன. எனவே, தமிழ் ஊடகங்களின் எழுத்து நடையை விமர்சிப்பது தவறு. இத்தனைப் பேரைக் காட்டிலும் விமர்சிக்கும் மக்கள் அறிவாளிகளா?” என்று சிலர் கேட்கிறார்கள்.

ஊடகத் தமிழ் மட்டும் தான் தமிழா?

ஊடகத் தமிழ் பெரும்பாலும் சென்னை மாநகர, மேட்டுக்குடி, உயர் சாதி சார்புடையதாக உள்ளது. பல நாட்டுத் தமிழுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், தமிழகம் – ஈழத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஊர்ப்புற வழக்குகள் வெகுமக்கள் ஊடகங்களில் பதிவாவதில்லை. மக்கள் பேச்சு வழக்கில், நாட்டுப்புறத் தமிழ் வழக்குகளில் எத்தனையோ நல்ல தமிழ்ச் சொற்கள் உள்ளன. ஆனால், வெகுமக்கள் ஊடகங்களோ ஏற்கனவே புழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொற்களைக் கூட விட்டு விட்டு வலிந்து ஆங்கிலச் சொற்களைத் திணிக்கின்றன. பார்க்க: ஆனந்த விகடனும் தமிங்கிலமும். எனவே, வெகுமக்கள் ஊடகத் தமிழ் மட்டுமே தமிழ் ஆகாது.

ஒரே மாதிரியான வெகுமக்கள் ஊடக நடை என்று ஒன்றில்லை

வெகுமக்கள் ஊடக நிறுவனங்களுக்கு இடையேயே கூட தமிழ் நடை வேறுபாடு உண்டு. நாளிதழ்கள், வார இதழ்கள், இலக்கியச் சிற்றிதழ்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள் ஆகியவை தனித்தனி தமிழ் நடை உடையன. ஒரே வகை இதழ்களுக்குள்ளேயே நாட்டுக்கு நாடு, நிறுவனத்துக்கு நிறுவனம் எழுத்து நடை மாறும். இந்தியா டுடேவுக்கும் விகடனுக்கும் சூரியன் பண்பலை வானொலிக்கும் சிங்கப்பூர் ஒலி பண்பலை வானொலிக்கும் வேறுபாடு உண்டு. எனவே, ஒரே மாதிரியான வெகுமக்கள் ஊடக நடை என்று ஒன்றில்லை. இலக்கு வாசகர்களைப் பொருத்தும் தனி நிறுவனங்களின் மொழிக் கொள்கை, சமூக அரசியலைப் பொருத்தும் எழுத்து நடை மாறுகிறது.

தமிழ் நலம் காப்பது விற்காதா?

மக்கள் தொலைக்காட்சி மேலும் பரவாததற்கு அதன் தமிழ் சார்பா காரணம்? பார்க்கும் கொஞ்சம் ஆட்களும் அதன் தமிழ்ச் சுவையை விரும்பியே பார்க்கிறார்கள். திரைப்படங்களுக்கு உரிய இடம் தராதது, சந்தைப்படுத்துதல் தடைகள், அரசியல் சார்பு என்று பல முக்கிய காரணங்கள் இருக்கலாம். விசய் தொலைக்காட்சி சென்னையைத் தாண்டி பரவாததற்கு அதன் அளவு கூடிய தமிங்கில நடையும் ஒரு காரணம்.

வாழ்த்துகள் என்ற தமிழ்த் திரைப்படம் தோற்றதற்கு அதன் தமிழ் உரையாடல் காரணம் இல்லை. அப்படத்தைத் தமிங்கிலத்தில் எடுத்திருந்தாலும் தோற்றிருக்கும். வலுவற்ற கதை. சொதப்பலான திரைக்கதை. மேட்டுக்குடி நகரத்து ஆங்கிலம் பேசும் இளைஞர்களை குறி வைத்து எடுக்கும் உன்னாலே உன்னாலே போன்ற படங்கள் ஊர்ப்புறங்களில் ஓடாது. ஆனால், ஊர்ப்புறக் கதைகள், சொல்லாடல்களை வைத்து வரும் அழகி, பருத்திவீரன் போன்ற படங்கள் நகரத்திலும் ஓடும்.

உள்ளடக்கமும் சந்தைப்படுத்துதலும் சரியாக இருந்தால் தமிழ் சார்பு ஒரு தடையில்லை. எல்லா நாட்டுத் தமிழர்களுக்கும் எல்லா வகுப்புத் தமிழர்களுக்கும் புரியும்படி எழுத, இயன்ற அளவு நல்ல தமிழில் எழுதுவது மட்டுமே ஒரே வழி.

விற்பது எல்லாம் சரியானதா?

ஒரு இதழ் விற்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதை விட தரமான வேறு இதழ் இல்லாததும் ஒரு காரணம். தங்களுக்குத் தேவையான தரத்தில் பொருள் கிடைக்காத போது கிடைக்கிற பொருளைத் தேவைக்குப் பயன்படுத்துவது சந்தை வழமை. அதனால், ஒரு பொருள் விற்பதனாலேயே அதன் அனைத்து கூறுகளும் சரியானவை, மக்கள் ஏற்புடையவை என்று பொருள் ஆகாது.

நடுப்பக்கத்தில் நமிதா படம் போட்டு, நான்கு சோப்புப் பெட்டிகள் தந்து இதழை விற்றுவிட்டு, அதை வைத்து “தங்கள் தமிழ் நடையும் சரி” என்பது முறையா?

எது சமூக ஏற்பு?

சமூகத்தில் ஒரு பரவலான வழக்கம் இருப்பது, அது தான் சிறந்தது என்பதற்கான சான்று இல்லை. தீமை என்று தெரிந்தும் மாற்றிக் கொள்ள முடியாமலும், தவறு என்றே தெரியாமலும் எத்தனையோ சமூக வழக்கங்கள் உள்ளன. மருத்துவர்கள் உட்பட பெரும்பான்மையோர்  மது அருந்துகிறார்கள். அரசே மது விற்கிறது. ஆனால், அதற்காக எந்த மருத்துவரும் மது அருந்துவதைப் பரிந்துரைக்க இயலாது.

ஊடகங்களின் வணிக நோக்கம், சில பிரிவினரின் திட்டமிட்ட தமிழின – மொழி அழிப்பு வேலை, அரசின் மெத்தனம், மக்களின் பழக்க அடிமைத்தனம், உலகமயமாக்கம், தாய்மொழி விழிப்புணர்வின்மையால் தமிங்கிலம் என்னும் நோயும் இதைப் போன்றே சமூகத்தில் பரவும் போது தமிழார்வலர்கள் இவற்றுக்கு எதிராக இயங்கலாமா கூடாதா?

ஆனந்த விகடனும் தமிங்கிலமும்

செப்டம்பர் 17, 2008 இதழில் ஆனந்த விகடன் எழுதிய சரோசா திரைப்பட விமர்சனத்தை NHM Lister கொண்டு ஆய்ந்ததில்,

தனித்துவமான மொத்த சொற்கள்: 346

தனித்துவமான மொத்த ஆங்கிலச் சொற்கள்: 69

ஆங்கிலக் கலப்பு விழுக்காடு: 19.94% (ஐந்தில் ஒரு சொல்!)

கலந்துள்ள சொற்கள்:

Underplay, out, acting, action, english, innings, editing, episode, over, factory, group, climx, commitment, colorful, comedy, comedian, good night, cool, chemical, successful, car, cinema, serial, serious, second, treatment, dull, tanker, tragedy, damage, thrill, thriller, theory, theatre, plus, purse, photo, bomb, bottle, brother, buildup, BGM, balance, midnight, missing, mega, match, language, lorry, logic, like, licence, lighting, location, just, geaographical, jolly, score, scene, shot, share, humour

இவ்விழுக்காடு பெரும்பாலான வெகுமக்கள் ஊடகங்களுக்கும் பொருந்தலாம். ஆங்கிலம் + பிற மொழி + (உட்டாலக்கடி, டாலடிக்கிறார்) போன்ற சொற்களையும் நீக்கிப் பார்த்தால் எவ்வளவு விழுக்காடு தமிழ் மிஞ்சும்?

கூகுள் X கூகுல்

ஆங்கில L ஐத் தமிழில் எழுதும் போது ல.ள எழுத்துகளில் எதை எங்கு பயன்படுத்துவது என்பதற்கு சு.சீனிவாசன் வழிகாட்டுகிறார்.

a, e, i, o, u அடுத்து வரும் L க்கு லகரமும் பிற இடங்களில் ளகரமும் பயன்படுத்த வேண்டும்.

அப்படி என்றால். கூகுள் சரி. கூகுல் தவறு 🙂

பி.கு – சீனிவாசனின் சில பரிந்துரைகளுடன் வேறுபடுகிறேன். எனவே, லகர, ளகரப் பயன்பாடு குறித்த உசாத்துணைக்கு மட்டுமே அவரது கட்டுரையை மேற்கோளாகக் காட்டுகிறேன் என்பதை நினைவில் கொள்ளவும்.