வண்டுகள் எல்லாம் உன்னை மொய்த்தால்
என்ன செய்யும் பூ
வாடாமல்?
—
சிகப்போ மஞ்சளோ
ஒற்றை ரோஜா வேண்டாம் சஹா!
குறைந்தது நான்கு பூக்களாவது வேண்டும் –
என்னோடு சந்தோஷப்பட!
தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு
வண்டுகள் எல்லாம் உன்னை மொய்த்தால்
என்ன செய்யும் பூ
வாடாமல்?
—
சிகப்போ மஞ்சளோ
ஒற்றை ரோஜா வேண்டாம் சஹா!
குறைந்தது நான்கு பூக்களாவது வேண்டும் –
என்னோடு சந்தோஷப்பட!
நான் உன்னை பார்க்கிறேன்.
நீ என்னை பார்க்கிறாய்.
நம்மை யாருமோ யாரையும் நாமோ
பார்த்ததாக நினைவில்லை.
சொல்லலாம் தான்..
“ஏதாச்சும் பேசே” என்று..
என்றாலும், எத்தனை முறை தான் இதையே சொல்வது?
“கோயிலுக்குப் போ” – பாட்டி;
“கடைக்குப் போ” – அம்மா;
“collegeக்குப் போ” – அப்பா;
சொல்லலாம் தான்..
என்றாலும், யாருமே சொல்லாமல்
யாருன்னை என் முன்னால் போகச் சொன்னது?
மீன் போல் துள்ளுகிறாய்.
மான் போல் ஓடுகிறாய்.
குயில் போல் கதைக்கிறாய்.
அன்னம் போல் நடக்கிறாய்.
சொல்லலாம் தான்..
நேற்றுவரை நானும்
விலங்கு தானே!
நிலா – மலர் – புறா
அழகென்று
சொல்லலாம் தான்..
அப்பொழுது தானே நன்றாக இருக்கும் –
அதைவிட அழகு நீ எனச் சொல்ல!
எதையுமே காதலிக்காத தமிழாசான்
சொல்லலாம் தான்..
கீழ்வரும் சொற்றொடர்கள் தவறென்று:
“நீ இன்று என்னை பார்த்தேன்.”
“நீ இன்று மகிழ்ச்சியாக இருந்தேன்.”
சொல்லலாம் தான்..
“உடைந்து போன கண்ணாடி என் இதயம்.”
என்றாலும்,
தெளிவாகத் தெரிகிறது
உன் முகம் மட்டும்!
நெருப்பு சுடும் – நெருஞ்சி குத்தும் – மழை நனைக்கும்
என்பது கூட உனக்குத் தெரியாவிட்டால்,
சஹா,
சொல்ல வேண்டியது தான்..
நானும் உன்னை விரும்புகிறேன்!
வெட்டிப் பேச்சு வேண்டாம்.
“என் Tiffin Boxல் தயிறும் ஊறுகாயும்;
உன்னிடம் என்ன?”
என்றதெல்லாம் போதும்!
வேண்டுமானால் கேள்.
கடைசியாக சாப்பிட்ட தேதி சொல்கிறேன்.
“உன் தங்கை அப்படியா,
என் தம்பி இப்படியதாக்கும்..”
என்றதெல்லாம் போதும்!
இப்பொழுது அவர்கள் கூட
இந்தப் பேச்சை தாண்டிவிட்டார்கள்.
“சும்மா, ஒன்னுமில்லை, ம்ஹூம்..”
என்றதெல்லாம் போதும்!
மிச்சமேதும் இல்லை என்னிடம் –
ஈரிதழால் பேச.
மேலே கொஞ்சம் கீழே கொஞ்சம்
பார்த்து மருகிப் பின் “அப்புறம்..”
என்றதெல்லாம் போதும்!
மிச்சமேதும் இல்லை உன்னிடம் –
பார்வையால் பருக.
கிளம்பிப் போய்த் திரும்ப வந்து
Hairpin இத்யாதிகள் எடுத்துக்கொண்டு
“மறந்தே போய்ட்டேண்டா”
என்றதெல்லாம் போதும்!
எத்தனை நாட்கள் சேகரிப்பது?
உன் நினைவுகளையும் வாசத்தையும் மட்டும்.
நீ எப்படி இங்கு வந்தாய்
நான் எப்படி இங்கு வந்தேன்
என்றதெல்லாம் போதும்!
ஒன்றாய் எங்கு போகலாம்?
“அடுத்து எப்போ பார்க்கலாம்?”
“தெரியலையே, Let’s see”
என்றதெல்லாம் போதும்!
இன்றிரவு இரண்டு மணிக்கு
கனவில் சந்திப்போம்.
உனக்கு என்ன பிடிக்கும்
எனக்கு இன்னின்ன பிடிக்கும்
என்றதெல்லாம் போதும்!
எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.
அவ்வளவு தான்.
உன்னை எறும்பு கடிக்கும் தருணங்களில்,
சிரித்துக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து
காரணம் கேட்பாய்.
மக்குப் பெண்ணே!
உனக்கே தெரிய வேண்டாமா?
You are so sweet!
—
எடுத்துக் காண்பிக்கும்
ஒவ்வொரு புகைப்படத்திலும்
உன் தோழிகள் பெயரைச் சொல்லும்
வெட்டி வேலையை விட்டு விடு.
நேரிலோ புகைப்படத்திலோ
நான்
உன்னை மட்டுமே பார்க்கிறேன்.
—
ஒரே பிள்ளையான உன்னை
ஒழுங்காகக் கூட வளர்க்காமல்
என்ன முறித்தனர் உன் பெற்றோர்?
பெண் வளர்க்கச் சொன்னால்
தேவதையை வளர்த்திருக்கிறார்கள் !
—
“என்னை மறந்துவிடு.
இனி பேசாதே.
இது நடக்காது.
பிரிவது தான் நல்லது..”
இன்னும் ஆயிரம் பொய் கூட சொல்.
ஓர் உண்மை சொல்கிறேன்.
“காதலித்துக் கொண்டே இருப்பேன்”.
—
Excuse me
வரலாமா
போர்வைக்குள்.
—
சொல்வது கேள்.
“முத்தம்” !
—
என் வீட்டிலிருந்து உன் வீட்டுக்கு
– ஓடி வந்தால் 20 நிமிடங்கள்
– Cycleஐ விரட்டினால் 8 நிமிடங்கள்
– கோபியின் Scooterல் 4 நிமிடங்கள்
இருந்தாலும்,
ரயிலோ விமானமோ விடச்சொல்லி
மனு கொடுத்ததில்
கூச்சமில்லை எனக்கு.
சிரிக்காமல் மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரியும்
ஒருவேளை காதலித்திருந்தால் தெரியும் –
வெட்கங்கெட்டு உன்னகம் பாயும்
என் மனதுக்கு மட்டும்
இன்னும் வரையறுக்கப்படவில்லை.
போவதற்கான குறைந்தபட்ச நொடிகளும்
வந்து சேர்வதற்கான அதிகபட்ச யுகங்களும்.
—
முதலில் http://ravikavithaigal.blogspot.com/2007/02/blog-post_7411.html என்ற முகவரியில் பதிப்பிக்கப்பட்டது.