இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் Creative Commons உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது

இன்று முதல் இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன். இதன் மூலம்,

 • இந்த வலைப்பதிவின் உள்ளடக்கத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
 • திருத்தி மேம்படுத்தலாம்.
 • விற்கலாம்.
 • முழுக்கட்டுரையாக இன்னொரு தளத்தில் இடலாம்.
 • அச்சிட்டோ, ஒலிப்பதிவாகவோ, EPUB, PDF, MOBI போன்ற வடிவங்களிலோ பகிரலாம்

இவற்றைச் செய்ய என்னுடைய முன் ஒப்புதல் தேவையில்லை. ஆனால், அவ்வாறு பயன்படுத்தும் போது, நீங்கள் வெளியிடும் உள்ளடக்கமும் மேற்கண்ட அனைத்து உரிமங்களையும் அதனைப் பயன்படுத்துபவருக்குத் தர வேண்டும். உள்ளடக்கத்தின் மூலமாக இந்த இணையத்தளத்தின் முகவரியையும் கட்டுரையையும் குறிப்பிட வேண்டும். இணையத்தை அணுகவல்ல ஊடகமாக இருப்பின், சொடுக்கவல்ல இணைப்பு ஒன்றைத் தருவதும் வரவேற்கப்படுகிறது.

Zenhabits தளம் தனது உள்ளடக்கத்தை இவ்வாறு தந்ததில் இருந்தே நானும் இப்படிச் செய்யலாமே என்று எண்ணி வந்தேன். இன்று தமிழில் கட்டற்ற நூல்களை வழங்குவதற்கான முயற்சியைக் கண்ட பிறகு இதனை உடனே செய்ய வேண்டும் என்று தோன்றியது. வருங்காலத்தில் தமிழ் தழைத்தோங்க எண்ணற்ற உள்ளடக்கம் கட்டற்று கிடைப்பது இன்றியமையாதது. எனவே, உங்கள் ஆக்கங்களையும் இவ்வாறு பொதுப்பயன்பாட்டுக்கு ஏற்ற உரிமத்தில் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இத்தளத்தைத் தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்கு…

சில நண்பர்கள் அன்றாடம் தளத்தை எட்டிப் பார்ப்பதாகவும் ஏன் புதிய இடுகைகள் இல்லை என்றும் கேட்கிறார்கள். இவ்வலைப்பதிவைப் படிக்க அன்றாடம் வரத் தேவை இல்லை. தளத்தின் வல மேல் முனையில் உள்ள “கூகுள் ரீடரில் படியுங்கள்” என்ற தொடுப்பை அழுத்தி http://reader.google.com தளத்தின் மூலம் படிக்கலாம்.

இந்த கூகுள் ரீடரின் add subscription பெட்டியில் உங்கள் விருப்பத் தளங்களின் முகவரிகளைச் சேர்த்துக் கொண்டால் அனைத்துத் தளங்களையும் ஒரே இடத்தில் இருந்து படிக்கலாம்.

மாற்றாக, புதிய கட்டுரைகளை உங்கள் மின்மடல் பெட்டிக்கு வரச் செய்தும் படிக்கலாம். கட்டுரைகளை மின்மடலில் பெற இங்கே அழுத்தவும். அல்லது, தளத்தின் வலப்பக்கப் பட்டையில் உள்ள மின்மடல் பெட்டியையும் பயன்படுத்தலாம்.

பணிப்பளுவினால் இந்த வலைப்பதிவில் அடிக்கடி எழுத முடியவில்லை. இயன்ற அளவு முயல்கிறேன்.

அவ்வப்போது மனதில் தோன்றுபவற்றை உளறல் , டுவிட்டர் தளங்களிலும் பதிந்து வைக்கிறேன்.

நன்றி.

பிற தளங்களில் எழுதியவை..

இந்தத் தனிப்பதிவு போக, அப்பப்ப பிற தளங்களில், கூட்டுப் பதிவுகளில், நண்பர்களின் பதிவுகளில் எழுதுவதும் ஒலி உரையாடல்களில் பங்குபெறுவதும் உண்டு. அவற்றில் சிலவற்றை ஒரு குறிப்புக்காக இங்கு தொகுத்து வைக்கிறேன்.

அண்மைய இடுகைகள்

தமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள்

தமிழாக்கத் தொனி குறித்த உங்கள் கருத்து தேவை

ஆன்மிகப் பதிவுகளால் தமிழ் இணையத்துக்கு நன்மை உண்டா?

பதிவர் சுதந்திரமும் போலித்தனமும்

தமிழ்99 – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தமிழ் வலைப்பதிவுலகம்

2 நிமிடத்தில் செய்த திரட்டி

2680+ தமிழ் வலைப்பதிவுகள் பட்டியல், OPML வெளியீடு

பதிவுகளைத் திரட்ட பதிவரின் அனுமதி தேவையா?

பதிவரா திரட்டியா? திரட்டி அரசியல், திரட்டிச் சார்பின்மை, திரட்டிகளின் தாக்கம் – பதிவர் பட்டறை உரையாடல்

தமிழ்ப்பதிவுகளைக் கடத்தும் Thatstamil.com

திரட்டி எத்தனை திரட்டியடா?

திரை விமர்சனம்

தாரே சமீன் பர், பில்லா, ஓரம் போ,

பதேர் பாஞ்சாலி, Catch me if you can, Munich, Schindler’s List, சக் தே இந்தியா, அம்முவாகிய நான், நாளைய பொழுது உன்னோடு,

பொல்லாதவன், வேல், அழகிய தமிழ் மகன், மச்சக்காரன், மலைக்கோட்டை, மருதமலை, வீராப்பு, சபரி, நம்நாடு, சிவி,

அதிதி, ஆர்யா (2004), சத்தம் போடாதே

தமிழ்

ஆய்த எழுத்தைக் கொல்வது முறையா?

தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்

தமிழ் விக்கிபீடியா அறிமுக நிகழ்படம்

தமிழ் விக்சனரி அறிமுக நிகழ்படம்

எப்படி?

கூகுள் ரீடர் பயன்படுத்துவது எப்படி? – விளக்க நிகழ்படம்

தமிழ்99 தட்டச்சு விளக்க நிகழ்படம்

WordPressல் பதிவிடுவது எப்படி? – விளக்க நிகழ்படம

Bloggerல் பதிவிடுவது எப்படி? – விளக்க நிகழ்படம

தனித்தளத்தில் வலைப்பதிவு தொடங்குவது எப்படி?

தனித்தளப் பதிவுகள் தேவையா?

ஒலி உரையாடல்கள்:

சிவாஜி திரைப்படம், தமிழக ஈழ உறவுகள் என்று பலதரப்பட்ட விசயங்கள் குறித்து சயந்தனுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்.

தமிழ்ப் பதிவுலகம், கட்டற்ற மென்பொருள்கள், மாற்று! என்று இன்னும் பல விசயங்கள் குறித்து சயந்தனுடன் மேற்கொண்ட உரையாடல்.

வணிக நிறுவனங்களுக்குத் தன்னார்வ உழைப்பைத் தருவது சரியா?

ஆர்க்குட் தமிழாக்கத்துக்கு ஆலோசனைகள் வழங்கலாம் என்று தமிழ் விக்சனரி குழுமத்தில் ஒரு மடல் இட்டிருந்தேன். அதை ஒட்டி எனக்கும் மு. மயூரனுக்கும் நடந்த பயனுள்ள உரையாடலை ஒரு குறிப்புக்காகப் பதிந்து வைக்கிறேன்.

நான்: ஆர்க்குட் தளம் தமிழ் இடைமுகப்புடன் தற்போது கிடைக்கிறது. அது குறித்த தமிழாக்க உரையாடல்கள் இங்கு நிகழ்கின்றன. உங்கள் ஆலோசனைகளையும் தரலாம்.

மு.மயூரன்: இது கூகிள் சம்பளம் கொடுத்து செய்தெடுத்திருக்கவேண்டிய பணி. ஏதோ ஒரு மூடிய கம்பனிக்காக நாம் எமது உழைப்பை வீணடிக்கத்தேவையில்லை. ஆர்குட்டை கூகிள் தமிழில் செய்தால் அது மகிழ்ச்சி. இல்லை என்றால் நாம் தமிழில் செய்யும் வேறு யாரையாவது நாடிப்போவோம். இதிலென்ன இருக்கிறது? சில காலங்களுக்கு முன்பு மாலன் தலைமையில் மைக்ரோசொப்டும் இதேபோன்றதொரு சுரண்டலைத்தான் செய்தது. அதுவே நல்ல கடைசிப்பாடமாக அமையட்டும்.

நான்: உங்கள் வாதத்தை ஒப்புக் கொள்கிறேன் மயூரன். கட்டற்ற மென்பொருள்களைத் தமிழாக்கும் ஆர்வம் கூகுள், மைக்ரோசாஃப்ட்டுக்கு உதவுவதில் எனக்கு இருப்பது இல்லை.

ஜிமெயில், கூகுள் போன்ற சேவைகளுக்குத் தன்னார்வத் தமிழாக்கத்துக்கு ஒரு பக்கத்தை கூகுள் வைத்து இருக்கிறது. அதில் ஆர்க்குட்டுக்கான தெரிவு இல்லாத நிலையில் ஆர்க்குட் தமிழாக்கம் வந்திருப்பதால், இந்தத் தமிழாக்கத்தை கூகுள் சம்பளம் கொடுத்து தான் செய்திருக்கிறது என்ற எண்ண முடிகிறது. நான் மேலே குறிப்பிட்டுள்ள இழையில் முழு தமிழாக்கத்துக்கான
பணி நடைபெற வில்லை. ஏற்கனவே வெளிவந்துள்ள தமிழாக்கத்தில் காணப்படும் ஒரு சில அபத்தமான பிழைகளைச் சுட்டிக் காட்டலாம். மாற்றுச் சொற்களைப் பரிந்துரைக்கலாம். ஆர்க்குட் வணிக நிறுவனம் தான் என்றாலும் அதன் பலம்
காரணமாக அபத்தமான தமிழாக்கங்களை மக்கள் மத்தியில் பரப்பினால் அதன் விளைவுகள் நீங்கள் அறிந்தது தானே? இது போல் உள்ள market leaderகள் அறிமுகப்படுத்தும் சொற்கள் பரவலாக நிலைக்கும், பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருப்பதால் குறைந்தபட்சம் இந்தத் தமிழாக்கங்களில் உள்ள பிழையையாவது சுட்டிக் காட்டுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

அதே வேளை விண்டோசுக்கு மாற்றாக லினக்ஸ் என்பது போல் ஜிமெயில், ஆர்க்குட் போன்றவற்றுக்கு மாற்றாக திற மூலமாக ஒன்றும் இல்லையே? வருங்காலத்தில் இது போன்ற திற மூல சேவைகள் வருவதற்கான வாய்ப்பு இருந்தால்
தெரியப்படுத்துங்கள். திற மூலம், தமிழ், வணிக நோக்கமின்மை, கூடிய தரம் உள்ள முயற்சிக்கே தன்னார்வலர்கள் உதவ விரும்புபவர். ஆனால், அப்படி ஒரு மாற்று வரும் வரை, குறைந்தபட்சம் தற்போது ஆங்கிலத்தில் மட்டும் கிடைக்கும் சேவைகளிடம் இருந்து தமிழர்களை அன்னியப்படுத்த தான் வேண்டுமா?

மு. மயூரன்: என் கருத்தோடு ஒத்து அதிர்வதற்கு நன்றி ரவி.

பெரு நிறுவனங்கள் பயன்படுத்தும் சொற்கள் நிலைத்துவிட வாய்ப்புண்டு எனும் வாதத்தையே அப்போது மாலனும் முன்வைத்திருந்தார். இது தொடர்பான மாற்றுக்கருத்துக்கள் மிகவும் குழப்பகரமானவை. ஆர்குட் சிலவேளை facebook இடம் தோற்றுப்போய்விடக்கூடிய வாய்ப்புண்டு. தற்போது இத்தகைய சேவைகள் மூலம் யாஹூ கூகிளை ஆட்டங்காணச்செய்யத் தொடங்கியிருக்கிறது. நல்ல உதாரணங்கள், google answers காணாமற்போனதும் yahoo answers நிலைத்து நிற்பதும். piccasa வினை விஞ்சி flicker இன் பயன்பாடு அதிகரித்திருப்பமை. orkut Vs facebook பிரச்சினைகள்.

ஆகவே , வணிக நிறுவனங்களின் இருப்பும் மேலாதிக்கமும் நிலையற்றது. சந்தைப்படுத்தும் தேவையே மாற்று மொழிகளை நோக்கி அவர்களை ஈர்க்கிறது. அத்தோடு தற்போது கூகிள் labs இன் இந்தியப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டிருகிறது. அதன்
விளை பொருளாக இந்தத் தமிழாக்கம் அமையக்கூடும். இந்தியா என்கிற பெரும் சந்தையை நோக்கிய நகர்வுகள் இவை.

இவர்களுக்கான எமது தன்னார்வ உதவிகளை நாம் நிறுத்தும்போதுதான், சம்பளம் கொடுத்து நாலு தமிழர்களை வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டிய தேவைக்கு இவர்கள் தள்ளப்படுவார்கள். மேற்பார்வையாளர்களையும் பணம் கொடுத்தே வைத்துக்கொள்ளட்டும். நீங்கள் சொல்வது போல, அபாயமான சொற்பரம்பலுக்கு எதிராக நாம் எமது கருத்துக்களைத்
தெரிவிக்கலாம். அதிலொன்றுமில்லை.

வணிக நோக்கம் கொண்ட இத்தகைய சேவைகள் குறைந்தவை அல்ல. அவற்றின் தேவையும் இந்த மென்பொருட் சாகியத்தில் வலுவாக உண்டு. ஆனால், பொய் சொல்லிச் சுரண்டல் செய்யக்கூடாது. வணிகம் என்றால் வணிகம். பொதுப்பணி என்றால் பொதுப்பணி. தமிழர்களும் இத்தகைய வணிக ரீதியான சேவைகளை ஆரம்பிக்கலாம். நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது. cricinfo வின் வெற்றி சாதாரணமானதல்ல. வணிக ரீதியாக வளர்வதும்
தமிழர்களின் எதிர்காலத்துக்கு நன்மைதரும்.

நான்: வணிக நோக்கிருந்தாலும் வலு மிக்க நிறுவனங்களின் தமிழ்ப்படுத்தலில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்ட முயல்வதற்கு பெரும்பாலான நேரங்களில் எனக்கு இருக்கும் உந்துதல் அந்த சேவை / மென்பொருள் மேல் விருப்பத்தை விட “கண் முன்னே தமிழ்க் கொலையைக் காணச் சகியாமை” தான் 🙂

நீங்கள் தந்திருக்கும் orkut எதிர் facebook எடுத்துக்காட்டு முக்கியமானது. தற்போது இந்தியச் சூழலில் orkut தான் முன்னணி என்றாலும் (facebook கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணோம்!), அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு முன்னணி நிறுவனத்துக்கும் நாம் தொடர்ந்து உழைப்பை வழங்கிக் கொண்டிருக்க முடியாது என்பது உண்மை. இணையத்தில் அதிகம் தன்னார்வத் தமிழாக்கத்தில் ஈடுபடுவோருக்கு இது குறித்த புரிந்துணர்வு, செயல்பாட்டுத் தெளிவு வர வேண்டி இருக்கிறது.

யாஹீ, கூகுள், msn என்று வரிசையாக இந்திய மாநில மொழிகளைக் குறி வைப்பதற்குச் சந்தை வாய்ப்பைத் தவிர வேறு ஒரு காரணமும் இல்லை என்பது தெளிவு. வருங்காலத்தில் தமிழாக்கத்தை காசு கொடுத்தே செய்வார்கள் என்பதும்
உறுதி. அப்படி நேர்கையில் ஒவ்வொரு தளமாகச் சென்று நாம் மொழிபெயர்ப்பு வழிகாட்டுதலைத் தந்து கொண்டிருக்க முடியாது. அதற்கு மாறாக என்ன செய்யலாம் என்று யோசிப்பது அவசியம்..இதில் முக்கியமாகத் தோன்றுவது, இது போன்ற
மொழிபெயர்ப்பாளர்கள் உசாவிப் பார்க்கும் அளவுக்கு தமிழ் விக்சனரி போன்ற தளங்களை வலு மிக்கதாக வளர்த்தெடுப்பது. அதில் ஒப்புக் கொள்ளப்படும் சொற்களைக் கொண்டு தமிழ் விக்கிபீடியா கட்டுரைகளை உருவாக்குவது..தமிழ் விக்கி தளங்களில் பயன்படுத்தப்படும் பல சொற்கள் வலைப்பதிவுகளிலும் அதன் ஊடாக பிற அச்சு, இணைய ஊடகங்களிலும் பயன்படுத்தப்பட்டு வரும் நல்ல போக்கைக் காண முடிகிறது. இந்த நிறுவனங்களுக்கு வெளியே பொதுக்களத்தில்
இப்படிப்பட்டச் சொற்களை நியமமாக்கும்போது அவற்றுடன் ஒத்து வராத இந்நிறுவனங்களின் தமிழாக்கங்கள் பெரிதும் முரண்படும்போது அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். குறைந்தபட்சம், அதை இடித்துரைக்க நிறைய பேர் இருப்பார்கள். நம்மைப் போன்று தன்னார்வக் களங்களில் முழுமையாக கவனம் செலுத்துவோர் இது போன்ற நிறுவனக்களங்களுக்குச் சென்று நேரம் விரயமாக்கத் தேவை இராது.

மயூரன்: ரவி இங்கே orkut என்றால் யாருக்கும் தெரியாது. hi5 மற்றும் facebook இனைத்தான் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். மென்பொருளாளர்களிடையே facebook மிகவும் பிரபலமகியிருக்கிறது.

//இதில் முக்கியமாகத் தோன்றுவது, இது போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் உசாவிப் பார்க்கும் அளவுக்கு தமிழ் விக்சனரி போன்ற தளங்களை வலு மிக்கதாக வளர்த்தெடுப்பது. அதில் ஒப்புக் கொள்ளப்படும் சொற்களைக் கொண்டு தமிழ் விக்கிபீடியா கட்டுரைகளை உருவாக்குவது..//

இதுதான் சரியான முடிவாக இருக்க முடியும் ரவி. விக்சனரி நல்லதொரு மையப்புள்ளி. சில காலங்களுக்கு முன்னர் மீடியாவிக்கி மென்பொருளாளர்களிடம் ஒரு விடயம் தொடர்பில் பல முறை உரையாடியிருந்தேன். dict வழங்கியைப்போல் ஒரு பொதுவான API இனை விக்சனரிக்கு வழங்கும்படி. இப்படி ஒரு API இருக்குமானால், விக்சனரியின் தரவுத்தளத்தைப்பயன்படுத்தி நாம் தனித்தியங்கும் அகராதி மென்பொருட்களை உருவாக்க முடியும்.

இது பெரிய அளவில் விக்சனரியை மையப்புள்ளியாக்கும். இதன்மூலம் தமிழுக்கான கலைச்சொற்களஞ்சியமாகவும், சேமிப்பகமாகவும் பெருமெடுப்பில் விக்சனரி மாற வழியுண்டு. dict வழங்கி தொடர்பாக தேடிப்பாருங்கள். பார்த்துவிட்டு இது தொடர்பில் மீடியாவிக்கி மென்பொருளாளர்களிடம் நீங்களும் உரையாடிப்பாருங்கள்.


இத்தோடு அந்த குழும உரையாடல் நிற்கிறது. இந்த API ஆலோசனைகளை வருங்காலத்தில் தான் முன்னெடுக்க வேண்டும். இதற்கடுத்து நிகழ்ந்த தொடர்புள்ள மின்மடல் உரையாடலில் இருந்து சில பகுதிகள்.

நான்: wordpress தமிழாக்கம் குறித்து உங்கள் கருத்து என்ன? WordPress.org மூலம் அது திறமூலமாக இலவசமாக கிடைக்கும் வேளை, இந்தத் தமிழாக்கம் இலாப வாய்ப்புள்ள WordPress.comக்கும் பயன்படும். WordPress.comன் வணிக நோக்குக்காக அதைப் புறக்கணித்தால் ஒரு அருமையான கட்டற்ற மென்பொருள் குறுகிய காலத்தில் தமிழருக்குத் தமிழில் கிடைப்பதற்கான வாய்ப்புகளைக் காணோம்..1000க்கணக்கில் தமிழ்ப் பதிவர்கள் இருக்கையில் வலைப்பதிய தமிழில் ஒரு மென்பொருள் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது..ஒரு வேளை ப்ளாகர் சம்பளம் கொடுத்தே தமிழாக்கம் செய்யலாம். ஆனால், வேர்ட்ப்ரசின் வசதிகளில் கவரப்பட்டு அதற்கு தன்னார்வமாக தமிழாக்கம் செய்ய நான் முன்வந்தேனானால் அதை எப்படி நோக்குகிறீர்கள்? அதுவும் சுரண்டல் தானா?

OS, software தவிர்த்த mailing, social networking போன்ற இணையத்தள வழி சேவைகளுக்குத் திறமூல மாற்றுகளுக்கான வாய்ப்பு என்ன? எவ்வளவு சீக்கிரம் சாத்தியமாகும்?

மு. மயூரன்: ரவி, WordPress விஷயத்தில் குழப்பம் தேவையில்லை. அது முழுமையான GPL உரிமத்தில் கிடைக்கிறது. ஆகவே தன்னார்வ உழைப்புக்களை யாரும் மூடி வைத்துவிட முடியாது. அத்தோடு இந்த மொழியாக்கத்தைப் பயன்படுத்தி நானும் நீங்களும் கூட WordPress.com இற்கு போட்டிக்கம்பனி ஆரம்பிக்கலாம். உழைப்பு எப்படியோ தடையற்றுச் சமூகத்துக்குக் கிடைக்கும்.

இப்போது இல்லை என்றாலும் ஒருநாள் தமிழில் நல்ல பெரிய மென்பொருள் நிறுவனங்கள் உருவாகும். அத்தோடு, உங்களை குழப்புவதற்காகவோ ஆர்வம் குன்றச்செய்வதற்காகவோ சொல்லவில்லை, பயப்பட வேண்டம், திறந்த மூல இயக்கம் என்பதே ஒரு பெரும் வணிக ஏமாற்றுத்தான். (!!!!!) கூகிள் திறந்த மூல இயக்கங்களுக்கு நன்கொடை அளிக்கும் தொகையின் எத்தனையோ மடங்கினை அதே திறந்த மூலத்தைப் பயன்படுத்தி சேமித்து இலபமாக்கிக்கொள்கிறது. தன்னுடைய கோடிக்கணக்கான உபுண்டு வழங்கிகளை யாருக்கு காசு கொடுத்து கூகிள் பயன்படுத்துகிறது? இந்த வழங்கிகளுக்கான மென்பொருட்களை எவரெவரோ எல்லாம் இரவு பகலாக உட்கார்ந்து இலவசமாக பைத்திக்காரர் போல கூகிளுக்கு செய்து கொடுக்க வேண்டுமா?

இந்தக்கேள்வி திறந்த மூல இயக்கத்தையே கட்டுடைத்து ஆட்டாங்காணச்செய்யக்கூடியது. ஆனால் இதற்கு வலுவான பதிலாக GPL v3 இருக்கிறது. அதுவே ஒரேயொரு நம்பிக்கைக்கீற்று. ஆனால், திறந்த மூலம் என்கிற பெரும் அறிவுக்களஞ்சியம் சமுதாயத்திடம் வழங்கப்படுகிறது. அந்த ஒரு உண்மைதான் கவனிப்புக்குரியது.

Raaga.comல் விளம்பரங்கள் இல்லாமல் பாட்டு கேட்கலாம்

Firefox பயனர்கள் ராகா தளத்தில் விளம்பரங்கள் இல்லாமல் பாட்டு கேட்கலாம். முதலில் Greasmonkey நீட்சியை நிறுவி Firefoxஐ மீளத் திறங்கள். அடுத்து Raagaadskipperuser என்ற நிரலை நிறுவிக் கொள்ளுங்கள்.

விளம்பரங்களை நிறுத்துவதுடன் பின்வரும் குறுக்கு விசைகளும் கிடைக்கும்.

 • z – முந்தைய பாட்டு
 • x -பாடு
 • c -பொறு
 • v -நிறுத்து
 • b – அடுத்த பாட்டு
 • Up அம்பு – ஒலியளவைக் கூட்டு
 • Down Arrow – ஒலியளவைக் குறை

நிரலை உருவாக்கிய சரவணனுக்கும் Firefoxக்கும் நன்றி 🙂