தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம்

1. தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம் கொண்டு எழுதலாமா கூடாதா?

எழுதலாம். கிரந்தம் தவிர்த்து தான் எழுத வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த மாட்டார்கள்.

2. தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம் பயன்பாட்டில் உள்ளதா?

தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்த எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள் பட்டியலைக் கீழே காணலாம். இவை தவிர, கட்டுரை உரைகளில் ஆயிரக்கணக்கான இடங்களில் கிரந்த எழுத்துகள் உள்ளன. இவை எல்லாவற்றையும் நீக்கி தமிழ் எழுத்துகளுக்கு மாற்றும் திட்டம் ஏதும் இல்லை. அதற்குத் தேவையும் இல்லை. சாத்தியமும் இல்லை.

தமிழ் விக்கிப்பீடியாவில் ஸ என்ற எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள்

தமிழ் விக்கிப்பீடியாவில் ஷ என்ற எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள்

தமிழ் விக்கிப்பீடியாவில் ஹ என்ற எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள்

தமிழ் விக்கிப்பீடியாவில் ஜ என்ற எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள்

தமிழ் விக்கிப்பீடியாவில் ஸ்ரீ என்ற எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள்

3. தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தப் பயன்பாடு குறித்த கொள்கை என்ன?

இதுவரை தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தப் பயன்பாடு குறித்த உறுதியான வழிகாட்டல் ஏதும் இல்லை. விரைவில் இது குறித்த வழிகாட்டுக் கொள்கை ஒன்றைப் பொதுவில் முன்வைத்து உரையாடி, தேவையான மாற்றங்களைச் செய்வோம். இக்கொள்கை கிரந்தத்தை முற்றிலும் நீக்காது. குறிப்பாக, தமிழர் பெயர்கள், கலைப்படைப்புகள், ஊர்ப்பெயர்களில் உள்ள கிரந்த எழுத்துகளை ஏற்று எழுதுவதற்கான பொதுவான புரிந்துணர்வு உண்டு.

4. விக்கிப்பீடியாவில் ஏன் கிரந்தத்தை எல்லா இடங்களிலும் ஏற்றுக் கொள்ளக்கூடாது?

கிரந்தம் விடுத்து எழுதுவது தமிழ் விக்கிப்பீடியர்களின் கண்டுபிடிப்போ திணிப்போ இல்லை. ஆழ்வார்கள், நாயன்மார்கள், கம்பன், பாரதி முதற்கொண்டு பல நூற்றாண்டுகளாக கிரந்தம் விடுத்து எழுதும் வழக்கம் இருக்கிறது. ஓட்டல், இந்தி, இமயம் என்பது போன்று பரவலான மக்கள் புழக்கத்தில் உள்ள சொற்கள் கிரந்தம் விடுத்து எழுதப்பட்டவையே. இந்த வரலாற்று, மக்கள் வழக்கத்தைப் பின்பற்றியும் தகுந்த காரணங்களைச் சுட்டியும் கிரந்தம் விடுத்து எழுதலாமே என்று மற்ற பங்களிப்பாளர்கள் கோரலாம்.

எடுத்துக்காட்டு 1: கிரந்த எழுத்து துல்லியமான ஒலிப்பு தராத போது.

எடுத்துக்காட்டு 2: பயன்பாடு அருகி வரும் க்ஷ போன்ற எழுத்துகளைப் பயன்படுத்தினால்.  இலக்ஷம் என்பதற்குப் பதில் இலட்சம் என்று எழுதலாமே என்று ஒருவர் கேட்கலாம்.

எடுத்துக்காட்டு 3: கிரந்தம் விடுத்து எழுதும் வழக்கு கூடுதலாக இருந்தால். ஹிந்தி, ஹிந்து என்பதை விட இந்தி, இந்து ஆகியவை கூடுதலாகப் புழக்கத்தில் உள்ளன.

5. ஏன் தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தத்தை முன்னிட்டு சர்ச்சைகள் எழுகின்றன?

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உங்கள் வலைப்பதிவில் எழுதலாம். யாரும் உங்களைக் கேள்வி கேட்டு மாற்ற முடியாது. நீங்கள் ஒரு வார இதழுக்கு எழுதும் கட்டுரையை, இதழாசிரியர் எப்படி வேண்டுமானாலும் மாற்றி வெளியிடலாம். நீங்கள் அவரைக் கேள்வி கேட்க முடியாது 🙂 ஆனால், விக்கி ஒரு கூட்டாக்கம். நீங்கள் எழுதுவதை எல்லாரும் கேள்வி கேட்கலாம். எல்லாரும் மாற்றலாம். விக்கியின் மொழி நடை உட்பட்ட அனைத்துக் கூறுகளும் கலந்துரையாடி எடுக்கும் பொது முடிவுக்கும் மாற்றத்துக்கும் உட்பட்டவையே. இந்தக் கூட்டுச் செயற்பாடுகளும் கூட்டு எழுத்தாக்கமும் தமிழுக்குப் புதிது.

எப்படி கிரந்த எழுத்தை விடுத்து எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாதோ அதே போல் கிரந்தம் சேர்த்து தான் எழுத வேண்டும் என்றும் கட்டாயப்படுத்த இயலாது. இரு வேறு கருத்து நிலைகள் உள்ளோர் கூடிச் செயலாற்றும் போது கருத்து வேறுபாடுகள் எழுவது இயல்பு. ஒரே வகையான கருத்து முரண்பாடுகள் வந்தால், அவை பற்றி பேச்சுப் பக்கத்தில் உரையாடுகிறோம். ஒரு கருத்து உரையாடலில் இருக்கும் போது, அதே வகை மாற்றங்களைத் தொடர்வதைத் தவிர்க்கிறோம். ஆனால், கிரந்தம் கலந்து எப்படி எழுதினாலும் கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கத் தொடங்கும் போது சர்ச்சைகள் வருகின்றன. சோவியத் யூனியை சோவியத் ஒன்றியம் என்று மாற்றினால் கூட தனித்தமிழ் வெறி என்கிறார்கள். இவர்களிடம் என்னவென்று உரையாட?


Comments

4 responses to “தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம்”

 1. பாலாஜி Avatar
  பாலாஜி

  தமிழ் விக்கிபீடியா சம்பந்தமான சர்ச்சையில் தலையிட விரும்பவில்லை.

  மற்றபடி “ஆழ்வார்கள், நாயன்மார்கள், கம்பன், பாரதி முதற்கொண்டு பல நூற்றாண்டுகளாக கிரந்தம் விடுத்து எழுதும் வழக்கம் இருக்கிறது.” என்ற வாக்கியம் எவ்வளவு சாத்தியமென்று தெரியவில்லை.

  இராம்.கி. அவர்கள் பதிவில் இந்த இடுகை நினைவிருக்கா? நீங்கள்கூட பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள்.

  தொல்காப்பியர், பவணந்தி முனிவர் ஆகியோர்கூட நடைமுறையில் கிரந்த எழுத்துகளை தமிழில் எழுதப் பயன்படுத்தியிருந்தால், அதில் ஆச்சரியமில்லை.

  1. ரவிசங்கர் Avatar
   ரவிசங்கர்

   //மற்றபடி “ஆழ்வார்கள், நாயன்மார்கள், கம்பன், பாரதி முதற்கொண்டு பல நூற்றாண்டுகளாக கிரந்தம் விடுத்து எழுதும் வழக்கம் இருக்கிறது.” என்ற வாக்கியம் எவ்வளவு சாத்தியமென்று தெரியவில்லை.//

   அவர்களின் சமகாலத்தில் கிரந்தம் இல்லவே இல்லை என்று சொல்லவரவில்லை. கிரந்தம் விடுத்து எழுதும் வழக்கமும் பழமையானது தான் என்பதே சொல்ல வருவது. ஆழ்வார்கள், கம்பன்.. கிரந்தம் விடுத்து எழுதி இருக்கிறார்கள் என்பதற்கு அவர்களின் படைப்புகள் ஆதாரம். பாரதி பாடல்களில் கிரந்தம் விடுத்தும் கட்டுரைகளில் மணிப்பிரவாள நடையிலும் எழுதி இருக்கிறார்.

   //தொல்காப்பியர், பவணந்தி முனிவர் ஆகியோர்கூட நடைமுறையில் கிரந்த எழுத்துகளை தமிழில் எழுதப் பயன்படுத்தியிருந்தால், அதில் ஆச்சரியமில்லை.//

   ஊகம் வேண்டாமே.

   1. பாலாஜி Avatar
    பாலாஜி

    கவிதை எழுதுவதற்கும், அன்றாட உரைநடைக்கும் வித்தியாசம் இருப்பதையே சுட்டிக்காட்டினேன். சமசுகிரத்தில்கூட இலக்கிய்ம் படைத்தவர்கள் நடைமுறையில் பிராக்கிரதங்களையே பேசவும் எழுதவும் செய்தார்கள்.

    கிரந்தமில்லா தமிழ் கவிதை எழுதப் பயன்படும் என்பதை ஒத்துக்கொள்கிறேன்!

 2. பாலாஜி Avatar
  பாலாஜி

  இப்போதுகூட கவுஞர் வாலி எழுதும் மரபுக்கவிதைகளும் அவரது நடைமுறை பேச்சும், எழுத்தும் நல்ல உதாரணம்.