தமிழ் மொழிக் கல்வி

“ஆங்கில வழியத்தில் பயிலும் குழந்தைகள், வெளிநாடுகளில் வளரும் தமிழ்க் குழந்தைகள் தமிழ் கற்றுக் கொள்ளச் சிரமப்படுகின்றன. தமிழ் எழுத்து முறை இலகுவாக்கினால், தமிழ் படிப்பதை இலகுவாக்கலாம்” எனச் சிலர் கருதுகின்றனர்.

குழந்தைகள் தமிழ் கற்கச் சிரம்பபடுவதற்கான காரணங்கள்:

* பாடச் சுமை. ஒன்றாம் வகுப்புப் பிள்ளைக்குத் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று மூன்று மொழிகளைக் கற்பித்தால் குழம்பாதா?

* ஆர்வமூட்டாத தமிழ் மொழிப் பாடத்திட்டம். அலுப்படிக்கும் பயிற்சி முறைகள். திறம் குறைந்த பள்ளிகள். ஆசிரியர்கள்.

* தமிழ் படித்தால் என்ன நன்மை என்ற எண்ணத்தால் வரும் ஐயம், அலட்சியம்.

* வெளிநாட்டில் வளரும் குழந்தைகளுக்கு தமிழ் மொழியால் சமூகப் பயன் ஏதும் இல்லை. பெரும்பாலும் வாழும் நாட்டின் உள்ளூர் மொழியிலேயே நண்பர்கள், உறவினர்களுடன் பேசத் தலைப்படுகின்றன. பெற்றோரின் விருப்பத்துக்காக கட்டாயப்படுத்தப்படுபவர்கள் பலர். அதிகபட்சம், தமிழ்த் திரைப்படங்களைப் புரிந்து கொள்ள, ஆங்கிலம் தெரியாத தாத்தா பாட்டிகளுடன் பேசத் தமிழ் தேவைப்படலாம். எழுத, படிப்பதற்கான தேவை இல்லை. தேவையில்லாத ஒன்றைக் கற்றுக் கொள்ள ஆர்வம் குறைவாகவே இருக்கும்.

இது வெளிநாட்டில் வாழும் அனைவரின் தாய்மொழிகள், முதன்மை சமூக, பொருளாதார பயன் தராத, குறைபாடுடைய கல்வி முறைகள் மூலம் கற்பிக்கப்படும் மொழிகள் அனைத்தும் எதிர்க்கொள்ளும் பிரச்சினை. தமிழ் மொழியின் இயல்பு, கட்டமைப்பால் வரும் பிரச்சினை இல்லை.

கணிதம் பயிலச் சிரமமாக இருக்கிறது என யாரும் 1 முதல் 9 எண்களுக்குப் பதிலாக 1, 0 ஆகிய இரு எண்களை மட்டும் பயன்படுத்துவோம் என்பதில்லை. பித்தகாரசு தேற்றம் புரிந்து கொள்ளச் சிரமமாக இருக்கிறது என்று யாரும் தேற்றத்தையே மாற்றுவதில்லை. கல்வி முறையின் குறைபாட்டை, கற்பிக்கப்படும் பொருளின் குறைபாடாக எண்ணக்கூடாது. குழந்தைகள் தமிழ் கற்கச் சிரமப்பட்டால், கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லித் தரலாம். பாடத்திட்டத்தை, பயிற்சி முறையை இலகுவாக்கலாம். புதிய ஆர்வமூட்டும் பயிற்சி முறைகளைக் கொண்டு வரலாம். ஆசிரியர்களின் திறன்களைக் கூட்டலாம்

வேலை கிடைக்கும், வெளிநாட்டு மேல்படிப்பு வாய்ப்பு கிடைக்கும் என்றால் சிரமமான செருமன், பிரெஞ்சு, ஆங்கில மொழிகளையே கூட மாணவர்கள் காசு செலவழித்து தனிப்பயிற்சி மூலம் கற்றுக் கொள்ளத் துணிகின்றனர்.  தாய்மொழியைக் கற்க இயலாதா?

தமிழின் சமூக, பொருளாதார பயன்களைக் கூட்டுவதே தமிழ்க் கற்றலைத் தூண்டும். தமிழ் மொழியின் இயல்பையும் கட்டமைப்பையும் மாற்றுவது தீர்வு அல்ல.

தொடர்புடைய ஆய்வுக் கட்டுரை: Tongue-Tied in Singapore: A Language policy for Tamil


Comments

One response to “தமிழ் மொழிக் கல்வி”

  1. /தமிழின் சமூக, பொருளாதார பயன்களைக் கூட்டுவதே தமிழ்க் கற்றலைத் தூண்டும். தமிழ் மொழியின் இயல்பையும் கட்டமைப்பையும் மாற்றுவது தீர்வு அல்ல./

    உண்மை தான் நண்பரே

    /
    கணிதம் பயிலச் சிரமமாக இருக்கிறது என யாரும் 1 முதல் 9 எண்களுக்குப் பதிலாக 1, 0 ஆகிய இரு எண்களை மட்டும் பயன்படுத்துவோம் என்பதில்லை. பித்தகாரசு தேற்றம் புரிந்து கொள்ளச் சிரமமாக இருக்கிறது என்று யாரும் தேற்றத்தையே மாற்றுவதில்லை. கல்வி முறையின் குறைபாட்டை, கற்பிக்கப்படும் பொருளின் குறைபாடாக எண்ணக்கூடாது. குழந்தைகள் தமிழ் கற்கச் சிரமப்பட்டால், கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லித் தரலாம். பாடத்திட்டத்தை, பயிற்சி முறையை இலகுவாக்கலாம். புதிய ஆர்வமூட்டும் பயிற்சி முறைகளைக் கொண்டு வரலாம். ஆசிரியர்களின் திறன்களைக் கூட்டலாம்/

    அருமை , சரியாகச் சொன்னீர்கள்