தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

எழுத்துச்சீர்மை பற்றிய பேரா. வா.செ.கு அவர்களின் உரையைக் கண்டேன்.

தமிழ் உயிர்மெய்யெழுத்துகளில் ஆ, ஐ, எ, ஏ, ஒ, ஓ, ஔ வரிசைகளை எழுத அந்தந்த மெய்யெழுத்துகளையும் அவற்றுக்கு முன்பும் பின்பும் சில குறியீடுகளையும் பயன்படுத்துகிறோம். இது போல், இ, ஈ, உ, ஊ வரிசைகளை எழுதுவதற்காகப் புதிய குறியீடுகளை அறிமுகப்படுத்துகிறார்.

இந்தச் சீர்திருத்தத்தை முன்வைப்பதற்கு முக்கிய காரணமாக தமிழகத்துக்கு வெளியே 15 இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றும் இச்சீர்திருத்தம் அவர்கள் இலகுவாகத் தமிழ் கற்க உதவும் என்றும் சொல்கிறார். இந்த அடிப்படையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இத்தொகையைக் காட்டிலும் பெரிய மக்கள் தொகையை அயலகத்தில் கொண்டுள்ள மொழிகள் எத்தனையோ உள்ளன. (எடுத்துக்காட்டுக்கு, சீனம்.) இந்த மொழிகள் எவையும் இதற்காக தங்கள் எழுத்து முறையை மாற்றுவதில்லை.

அயலக மக்கள் மொழியைக் கற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு பல காரணிகள் உள்ளன. அவர்களுக்குத் தாயக மக்களுக்கு உள்ள கல்வி, சமூகச் சூழல் வாய்க்காததே முக்கிய காரணம். இப்படி ஒரு எழுத்துச் சீர்திருத்தம் செய்தால், அவர்கள் மொழித்திறன் கூடும் என்பதற்கு எந்த அறிவியல் அடிப்படை ஆய்வும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருக்க, இந்த மாற்றம் அவர்களுக்காக தாயகத் தமிழர்களையும் சேர்த்துக் குழப்பும்.

பெரியார் செய்த எழுத்துச் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம் என்று இதனைக் குறிப்பிடுவதும் ஏற்புடையதாக இல்லை.

அச்சு வில்லைகள் தொடர்பான (நிறுவக் கூடிய) நடைமுறைப் பிரச்சினையின் காரணமாக பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் வந்ததாக கேள்வி.

அதுவும் அவர் புதிதாக குறியீடுகள் ஏதும் புகுத்தவில்லை. ஆகார, ஐகார வரிசைகளில் ஏற்கனவே மற்ற உயிர்மெய்யெழுத்துகள் பயன்படுத்திய குறியீடுகளையே றா, னா, ணா, லை, ளை, னை, ணை ஆகியவற்றுக்குப் பொருத்தினார். எழுதும் முறை புதிதானாலும் மக்கள் ஏற்கனவே அக்குறியீடுகளுக்குப் பழகி இருந்தது ஒரு முக்கிய விசயம். தற்போதைய பரிந்துரையில் முழுக்க புதுக் குறியீடுகள் வருவது குழப்பும்.

நூற்றாண்டுகள் தோறும் நேர்ந்த தமிழ் எழுத்து மாற்றம் குறித்த படம் காணலாம். இதில் எனக்கு சில ஐயங்கள்:

* இந்த மாற்றம் ஒரு சில ஆதாரங்களை அடிப்படையாக கொண்டதா? அல்லது, சீராக அக்காலத்தைய எல்லா கல்வெட்டுகள், செப்பேடுகளிலும் காணப்பட்டதா?

* தகவல் தொடர்பு பெரிதாக இல்லாத அக்காலத்தில் சீரான எழுத்து மாற்றங்கள் இருந்தது எப்படி?

* இந்த எழுத்து மாற்றங்கள் எவ்வாறு நேர்ந்திருக்க கூடும்? இப்போது போல் யாரும் முடிவெடுத்து மாற்றி இருப்பார்களா? அதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரம் யாரிடம் இருந்தது?

* இல்லை, எழுதப்பட்ட பொருள், அதற்குப் பயன்படுத்திய கருவிகளின் தன்மை காரணமாக, அதாவது நடைமுறை நுட்பக் காரணங்களால், இம்மாற்றங்கள் தானாக நிகழ்ந்தவையா (யாரும் முடிவெடுத்துச் செயற்படுத்தாமல்)?

தமிழ் மொழி குறித்த இவ்வாதாரங்கள் இல்லாவிட்டாலும் இதே போல் மாற்றங்கள் நிகழ்ந்த பிற மொழிகளின் தன்மைகளையாவது அறிய வேண்டும். இதன் மூலம், நாம் தற்காலத் தமிழில் மேற்கொள்ள விரும்பும் மாற்றங்கள் குறித்து ஒரு அறிவடிப்படை நிலைப்பாட்டை எடுக்க இயலும்.

தொடர்புடைய உரையாடல்:  எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு


Comments

9 responses to “தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்”

 1. என்னைப் பொறுத்தவரை, முன்னை எந்தக்காலங்களிலும் பார்க்க கணினிக்காலமான நிகழ்காலம் எழுத்துச் சீர்திருத்தத்துக்கான தேவையை வெகுவாக இல்லாமற்செய்துவிட்டது. இயல்பான பரிணாமமாக ஏற்படும் எழுத்தின் மாற்றங்களைக்கூட கணினிக்காலம் தாமதப்படுத்துவதாகவே இருக்கும். கணினிக்காக எழுத்துச்சீர்திருத்தம் என்பது சுத்த மடத்தனம்.

  அதிலும் தொடர்பாடல் யுகம் என்பது சீர்திருத்தத்தை இன்னும் தேவையற்றதாக்கிறது.

  இயல்பான எழுத்தின் பரிணாமம் என்பது எழுதும் ஊடகம், மக்கள் வாழ்க்கை முறை, அரசியற் பொருளாதாரக் காரணங்களால் ஏற்படுவது.

 2. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  //கணினிக்காலமான நிகழ்காலம் எழுத்துச் சீர்திருத்தத்துக்கான தேவையை வெகுவாக இல்லாமற்செய்துவிட்டது.//

  //இயல்பான எழுத்தின் பரிணாமம் என்பது எழுதும் ஊடகம், மக்கள் வாழ்க்கை முறை, அரசியற் பொருளாதாரக் காரணங்களால் ஏற்படுவது.//

  உண்மை. இது போன்ற பரிந்துரைகளால், கணினி-நுட்ப அடிப்படையில் என்னென்ன சிக்கல்கள் வரலாம் என்பதையும் அலச வேண்டும்.

 3. ganesan.m Avatar
  ganesan.m

  அன்பு இரவி,
  தமிழ் எழுத்துச் சீர்திருத்தக் கட்டுரை மிகச் செம்மையாக உள்ளது. இதில் நீங்களும் நானும் ஒன்றே.மு.மயூரனின் கடைசிவரியின் கருத்துத் தெளிவாக உள்ளது.மேல்வரிகளில், கணினிக்காலம் எழுத்துச் சீர்திருத்தத்தேவையைத் தவிர்க்கும் வல்லமை கொண்டது என்க் கூற வருகிறாரா! ” டாடி,மம்மித் தமிழன் பிறந்துவிட்டனே! “, இதற்கு என் செய்வது?. தமிழறிஞர் மு.வ. கூறிய கருத்தென நினைக்கிறேன். அனைத்து ஆட்சித்துறையின் தலையர்கள்(chiefs)தமிழ்ற்றிறம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். அனைத்திலும் மேலாக தமிழை விரும்பும் தமிழன் பிறக்கட்டும். அவன் எல்லாச் சீர்திருத்தங்களையும் இரவி விரும்புவதுபோல் செய்து கொள்வான்.இதற்கு என் செய்வது?
  யாரிடம் முறையிடுவது? என்ன நோன்பு ஏற்பது? பரிதிமாற்கலைஞன்
  வழித்தோன்றல் வரவேண்டுமே!
  அன்புடன் மீ.க.

 4. தமிழை இதை விட கேவலப்படுத்த முடியாது!
  பழங்காலம் மாதிரி எழுத்துக்கள் ( உருண்டை வடிவம் ) எழுவது சுலபம்.

  1. ரவிசங்கர் Avatar
   ரவிசங்கர்

   புரியலியே? சீர்திருத்தத்தை எதிர்க்கிறீர்களா ஆதரிக்கிறீர்களா? பேராசிரியர் வா.செ.கு தன்னுடைய எழுத்துச் சீர்திருத்தத்துக்கு ஆதாரமாக பழைய தமிழ் எழுத்துக்களைத் தான் முன்வைக்கிறார்.

 5. JamesD Avatar
  JamesD

  Thanks for the useful info. It’s so interesting

 6. நல்ல பதிவு…!

  http://vetripages.blogspot.com/2009/06/blog-post_6845.html
  எனது கன்னி எழுத்து முயற்சிக்கு உங்க‌ள் பின்னூட்ட‌ம் வ‌ழியாக‌வும்,ஓட்டு போட்டும் ஆத‌ர‌வு த‌ருக‌..!
  குறைக‌ள் இருப்பின் பின்னூட்ட‌ம் வாயிலாக‌ச் சுட்டிக்காட்ட‌‌வும்.

 7. maa elangkannan Avatar
  maa elangkannan

  எழுத்துச் சீர்திருத்தம் தமிழ் மொழிக்கு
  உடனடித் தேவை! சீர்த்திருத்தம் செய்ய இடம் இருக்கும் போது ஏன் செய்யக் கூடாது! எளிமையாக்குவது எற்கத்தக்கதுதானே!

 8. தமிழ் எழுத்துகளில் இப்போது செய்யப்படவுள்ள மாற்றங்கள் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதாக பயனளிப்பதாக இல்லை. மாறாக, இந்த மாற்றத்தினால், தமிழ்மொழிக்குப் புதியதொரு நெருக்கடி ஏற்படப் போவது உண்மை.

  இன்றைய நடைமுறையில் பயன்படுத்தப்படும் தமிழ் வரிவடிவம் மிகவும் செம்மையாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டது என்பதே உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்களின் பொதுவான கருத்தாகும்.

  மேலும், கணினி – இணையம் முதலான தொழில்நுட்பத் துறைகளிலும் தமிழ் எழுத்துகளின் பயன்பாட்டுக்கு உரிய நுட்பங்கள் வல்லுநர்களால் செயற்படுத்தப்பட்டுவிட்டன.
  இந்தச் சூழலில், இப்போது செய்யப்படும் எழுத்து மாற்றமானது கண்டிப்பாகத் தமிழ்மொழியின் வளர்ச்சியையும் வேகத்தையும் மட்டுப்படுத்தும் அல்லது முடக்கிப்போடும்.

  தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துவதில் இருந்த பல்வேறு சிக்கல்கள் களையப்பட்டுவிட்ட இன்றைய சூழலில், இன்னும் சில சிரமங்கள் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, தமிழ் எழுத்துகளை மாற்ற நினைப்பது புதிய வகையிலான பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

  அதுமட்டுமல்லாது, தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் புதிய வகை எழுத்து மாற்றத்தை, அயலகத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போனால் தமிழின் நிலைமை என்னவாகும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

  தமிழர்கள் உலகம் முழுவதும் சிதறி இருந்தாலும் மொழியாலும் தமிழ் எழுத்தாலும் ஒன்றியிருக்கிறார்கள்; தொடர்பு கொண்டிருக்கிறார்கள்; கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

  தமிழ் எழுத்துகளில் செய்யப்படும் மாற்றம் தமிழகத் தமிழர்களையும் அயலகத் தமிழர்களையும் அன்னியப்படுத்திவிடக்கூடும்.

  தமிழ்மொழியிலிருந்து பிரிந்து இன்று கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என பல மொழிகள் உருவாகி, மொழி வழியாகத் தனித்தனி இனமாகி பிறகு தமிழுக்கும் தமிழருக்கும் பகையாகி இருக்கின்ற பரிதாப நிலைமை போதாதா?

  உலகத் தமிழர்களை நாடுவாரியாக சிறுபான்மை இனமாகப் பிரித்துப்போட்டு சிதறடிக்கும் சூழ்நிலை நமக்குத் தேவையா?