counter, filter, reader போன்று –er இல் முடியும் ஆங்கிலச் சொற்களையும் இன்ன பல சொற்களையும் எண்ணுவான், வடிகட்டுவான், படிப்பான் என்று –ஆன் விகுதி போட்டு தமிழாக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இதைத் தவிர்க்கலாம்.
* –er விகுதி எந்தப் பாலையும் குறிப்பதில்லை. –ஆன் விகுதி ஆண்பாலைச் சுட்டுகிறது. அனைத்து பாலருக்கும் பொதுவாக தமிழாக்குவது அவசியம்.
* இந்த –ஆன் விகுதி சொற்கள் பெரும்பாலும் அஃறிணைகளையே குறிக்கின்றன. இவற்றுக்கு -ஆன் விகுதி உயிருள்ளது போல் மயக்கம் தருகிறது.
* எதைப் பார்த்தாலும் -ஆன் என்று தமிழாக்கப் புகும்போது ஏற்கனவே உள்ள சொற்களை மறந்து விடுகிறோம். Gmail தமிழாக்கத்தில் Filter = வடிகட்டுவான் என்ற பிழையைக் காணலாம். Filter = வடிகட்டி என்பதே சரி.
இத்தகையை சொற்களுக்கு –இ விகுதி உதவலாம். சுருக்கமாகவும் மேற்கண்ட குறைகள் இல்லாமலும் இருக்கும். எ.கா: Counter – எண்ணி, Washer – துவைப்பி, கழுவி.
Comments
21 responses to “ஆன்”
நான் அடிக்கடி செய்யும் தவறு 🙁
இனி திருத்திக்கொள்கிறேன் 🙂 🙂
அட ஆமாம்…
உறைக்க வைத்ததற்கு நன்றி.
ரவி, ஆன் என்பது ஆண்பால் விகுதி மட்டும் அல்ல. அப்படிக் கொண்டால் இ என்பதும் பெண்பால் விகுதி என்று கொள்ளலாம். இறைவன் இறைவி, தலைவன் தலைவி ஒருவன் ஒருத்தி. உங்கள் கருத்து சரியானதல்ல.
செல்வா
செல்வா, என் கருத்து தவறென்றால் திருத்திக் கொள்கிறேன்.
ஆன், அன் இரு விகுதிகளும் ஒத்தவையா? ஆன், அன் வேறு என்னென்ன பொருள்களில் எங்கெங்கு வரக்கூடும்?
வடிகட்டி என்றால் அது பெண் தோற்றம் தருவதில்லை. ஆனால், வடிகட்டுவான் என்பது ஆண் பால் போலவும் வடிகட்டுவாள் பெண் பால் போலவும் மயக்கம் தருகிறதே?
இறை (பெயர்ச் சொல்) + அன் = இறைவன்
தலை (பெயர்ச் சொல்) + அன் = தலைவன்
ஆனால், ஓட்டி, வடிகட்டி, தேடி, ஓடி போன்றவற்றில் வினைச்சொல் + இ என்றல்லவா வருகிறது? இங்கு இ பெண்பால் விகுதி என்றால் ஓட்டன்-ஓட்டி, தேடன் – தேடி, ஓடன் – ஓடி, கட்டன்-கட்டி என்றல்லவா வரும்?
மொழி இலக்கணம் முறண்பாடு மூட்டை – முதல் எடுத்துக்காட்டு இந்த பதிவும் , மறுமொழிகளும்.
இறைவன் மற்றும் தலைவன் இரண்டுமே ஆண்பால் தான். இங்கு ‘அன்’ உயர்திணைகளைக் குறிப்பதால் அச்சொற்கள் ஆண்பால் என்று கொள்ள வேண்டும். இதே ‘அன்’ அஃறிணையை குறிப்பிடவும் உதவும். அஃறிணைச் சொற்களில் பால் பார்க்கக் கூடாது. எனவே ‘ஓட்டன் – ஓட்டி’ வாதம் இங்கு சரிவராது.
filter என்ற சொல்லுக்கு வடிகட்டு என்பதே சரி காரணம் அது வினை [verb] அல்லது ஏவல் [command].
முரளி, இலக்கணத்தில் முரண்பாடுகள் இல்லை.
அன், ஆன் விகுதிகள் ஆண் பாலை மட்டுமே குறிப்பதில்லை. ஆனால், இ, ஆள், அள் விகுதிகள் பயன்படுத்தாமல் ஆன் மட்டுமே பயன்படுத்துவது நம்மை அறியாமல் இருக்கும் ஆண் நடுவ எண்ணமோ என்று தோன்றியது.
இலக்கணம் குறித்த என் புரிதலில் தவறு என்றால் திருத்திக் கொள்வேன்.
**
அன் விகுதியில் முடியும் அஃறிணைகளுக்கு எடுத்துக்காட்டுகள் தந்தால் உதவும். (கொம்பேறி மூக்கன்?)
filter (பெயர்ச்சொல் – noun) க்கு வடிகட்டி என்பது தான் சரியான சொல்.
ஆன் என்று முடியும் அஃறிணைப் பெயர்கள் பலவும் அண்மையில் உருவாக்கப்பட சொற்களாகவே காண்கிறேன். காலம் காலமாக ஆன் ஈற்றில் முடியும் அஃறிணைச் சொற்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.
நாட்காட்டி (நாட்காட்டுவான் அல்ல), தொலைப்பேசி (தொலைப்பேசுவான் அல்ல), திசைகாட்டி (திசைகாட்டுவான அல்ல), சுமைதாங்கி (சுமைதாங்குவான் அல்ல) போன்ற சொற்களை ஒப்பிட்டால் என் உறுத்தல் புரியும்.
//ஆன் மட்டுமே பயன்படுத்துவது நம்மை அறியாமல் இருக்கும் ஆண் நடுவ எண்ணமோ என்று தோன்றியது//
இந்த இடத்தில் என் விளக்கம். இறைவன் என்றே நான் படித்த அனைத்திலும் கண்டுள்ளேன் அல்ல கண்டுவருகிறேன். இறைவி இல்லையா என்று எங்கள் வகுப்பில் பிள்ளைகள் கேட்க ஆசிரியர் சிரித்தார். புழக்கத்தில் இல்லை என்றார் [தேவி உள்ளதாகச் சொன்னார்]. இறைவன் ஆண்பாலா பெண்பாலா என்ற கேள்வி எந்த விடைக்கொடுத்தாலும் மதிப்பெண் போட்டார்கள்!! உண்மையில் இறைவனுக்கு பால் கிடையாது இருப்பினும் சங்க இலக்கியம் முதல் இன்று வரை ‘அன்’ விகுதியைத் தான் பயன்படுத்துகின்றனர். இறைவி என்ற சொல்லை செல்வா சொல்லியே நான் அறிந்தேன். ஆக தமிழில் இறைவன் ஆண் மகன் என்று நம்மை அறியாமல் ஏற்றுக்கொண்டுள்ளோம். இப்போ இந்த இடத்தில் நாம் சற்றே புதிய சிந்தனையான நடுநிலை நாட்டுதல் [ஆண்-பெண் பேதமின்றி] ‘குழப்பத்தை’ ஏற்படுத்தவில்லையா?
கண்டிப்பாக தலைவன் ஆண்பால் தான் ஐந்தாம் வகுப்பு மாணவனும் எளிதில் சுட்டிக்காட்டுவான்.
பாலற்ற சொல்லுக்கும் பாலுள்ள சொல்லிற்கும் ஒரே விகுதி வருகிறதே! இதைத் தான் முறண்பாடு என்றேன். சுய அறிவோடு சிந்திக்க விழையும் எவருக்கும் ஏற்படும் இயல்பான ஐயம் இது!
மிதிப்பான், ஒலிபான் என சில அஃறிணை எடுத்துக்காட்டுகள் இருக்கிறது. ஆனால் இவை மொழிப்பெயர்ப்பில் உருவானவை. காலம் கடந்து வர சங்க காலத்தில் நாம் எதையும் மொழிப் பெயர்த்துள்ளோமா?
கொம்பேறி மூக்கன் பெயரா இல்லை மிருகமா? பால் பார்க்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே அந்த வரியை எழுதினேன். அது மட்டுமல்ல ஓட்டம்-ஓட்டி விளக்கம் சரியன்று என்று கூறவும் விழைந்தேன். ஆனால் அது நமக்கே டிமிக்கி கொடுத்துவிட்டது. ஆனால் இந்த வாதத்தை நாம் பெண்பாலிற்கு/அஃறிணைக்குப் [இ ஈற்றுக்கு] பொருத்தினால் உங்கள் உறுத்தலுக்கு விடைக்கிட்டும்.
Gmail குள் சென்று இப்பொழுது தான் பார்த்தேன். Filter: action button என்றே நினைவிருந்ததால் ஏவல் சொல்லைத்தந்தேன். உண்மையில் அது Filters எனவே வடிகட்டிகள் என்றா மொழி பெயர்க்க வேண்டும்? ஆனால் நான் பார்ப்பது “வடிப்பான்கள்”. [உள்வரும் அனைத்து அஞ்சல்களுக்கும் கீழேயுள்ள வடிப்பான்கள் பிரயோகிக்கப்பட்டு இருக்கின்றன]
அன் விகுதி கொண்ட அஃறிணைக்கு நன்றாக அறிந்த வியாழன், கதிரவன் முதலியவற்றைக் கூறலாம். அரச மரத்தை அரசன் என்றும் கூறுவதுண்டு. நண்டுக்கு அலவன் என்று ஒரு பெயர் உண்டு. காதில் அணியும் தோட்டுக்கு கடுக்கன். கடப்பமரத்திற்கு அடப்பன் என்று ஒரு பெயர் உண்டு. ஏன் கடன், என்னும் சொல்லைக் கூடச் சொல்லலாம். கூரன் என்பது ஒருவகையான நெல்லுக்கும், ஒரு வகையான நாய்க்கும் பெயர் . கூழன் என்பது ஒரு பலாப்பழ வகை. தட்டான் என்பது தட்டாரப்பூச்சிக்கு (தும்பிக்கு) வழங்கும் பெயர். முயலுக்கு செவியன் என்று ஒரு பெயருண்டு. கடுவன் என்பது பூனை, நாய், குரங்கு ஆகியவற்றின் ஆண். விரியன் என்பது ஒரு பாம்பு கட்டுவிரியன், கண்ணாடி விரியன் என்று கேள்விப்பட்டிருக்கலாம். நண்டுக்கு அலவன் என்று ஒரு பெயர் உள்ளது போலவே களவன் என்றும் ஒரு பெயருண்டு. சுழல் காற்றுக்குச் சுழியன் என்று பெயர். என்று பற்பல சொர்கள் உண்டு.
ஆன் என்னும் விகுதிக்குத் தட்டான் (தட்டாரப்பூச்சி). பல்லாங்குழியில் பயன்படுத்தும் காய்களுக்கு அலவான் என்று பெயர் (அலவுதல் = சுழலல், சிந்துதல், அலைதல்..) அடைப்பான் என்பது மூடி அடைக்கும் பொருள். இதே அடைப்பான் என்பது கால்நடைகளுக்கும், ஒரு நோய்க்கும் பெயர். சுக்கான் (ஒருவகைக் கல். இதனை சிக்கிமுக்கிக் கல் என்றும் சொல்வர்). காளான், பூரான், என்று பலவற்றைக் காட்டலாம்.
செல்வா
செல்வா, என் அறியாமைக்கு வருந்துகிறேன். பிழையைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. இடுகையைத் திருத்தி உள்ளேன்.
ரவிசங்கர் உங்கள் முன்னைய கருத்துத்தான் சரியானது. இந்த பதிவை பார்க்கவும்.
http://oorodi.com/?p=524
நன்றி.
ரவிசங்கர்,
////-er விகுதி எந்தப் பாலையும் குறிப்பதில்லை. -ஆன் விகுதி ஆண்பாலைச் சுட்டுகிறது. அனைத்து பாலருக்கும் பொதுவாக தமிழாக்குவது அவசியம்./////
என்ற உங்கள் வாக்கியம்தான் சரியான வாக்கியம்.
////இந்த -ஆன் விகுதி சொற்கள் பெரும்பாலும் அஃறிணைகளையே குறிக்கின்றன. இவற்றுக்கு -ஆன் விகுதி உயிருள்ளது போல் மயக்கம் தருகிறது.////
என்ற வாக்கியம் மிகத்தவறானதாகும். தயவுசெய்து மாற்றி விடுங்கள்.
தொடர்பான செய்திகள் ஓரிடத்திலேயே இருப்பது நல்லது என்று எண்ணி, ஊரோடி பகீ என்னும் வலைப்பதிவர் இட்ட கருத்துகளுக்கு இங்கேயே மறு மொழி இடுகின்றேன்.
என் மறுமொழிகள் ரவியின் கேள்விகளுக்காக இங்கு பதித்தவை. ஊரோடி பகீ இது பற்றிக் கூறிய மாற்றுக் கருத்துக்களுக்கு என் மறுமொழி இது.
நான் ரவிக்கு இட்ட முதல் மறுமொழி:
//ரவி, ஆன் என்பது ஆண்பால் விகுதி மட்டும் அல்ல. அப்படிக் கொண்டால் இ என்பதும் பெண்பால் விகுதி என்று கொள்ளலாம். இறைவன் இறைவி, தலைவன் தலைவி ஒருவன் ஒருத்தி. உங்கள் கருத்து சரியானதல்ல.// 3
அதற்கு ரவி
// ஆன், அன் இரு விகுதிகளும் ஒத்தவையா? ஆன், அன் வேறு என்னென்ன பொருள்களில் எங்கெங்கு வரக்கூடும்?// 4
மேலும் ரவியின் சில கேள்விகள்:
(1) //அன் விகுதியில் முடியும் அஃறிணைகளுக்கு எடுத்துக்காட்டுகள் தந்தால் உதவும். (கொம்பேறி மூக்கன்?)// 6
(2)//ஆன் என்று முடியும் அஃறிணைப் பெயர்கள் பலவும் அண்மையில் உருவாக்கப்பட சொற்களாகவே காண்கிறேன். காலம் காலமாக ஆன் ஈற்றில் முடியும் அஃறிணைச் சொற்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.//6
(3)// காலம் காலமாக ஆன் ஈற்றில் முடியும் அஃறிணைச் சொற்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.// 6
இவற்றுக்குத்தான் எடுத்துக்காட்டுகள் தந்தேன். அவை சரியல்ல என்கிறார் ஊரோடி பகீ. போதாததற்கு அவர் என் அறியாமை, நான் செய்யும் தவறுகள் என்று பலமுறை சாடியுள்ளார். நன்னூல் காண்டிகை உரைக் கூற்றெல்லாம் முன்வைக்கிறார். அவருடைய தனிமனித தாக்குதலை விட்டுவிட்டு, அவர் என்னதான் கூறுகிறார் என்று பார்க்கலாம்.
(செ-1) நன்னூலில் கூறியுள்ள விகுதிகளைக் காட்டினார் அவை சரியே. சரியான எடுத்துக்காட்டுகளே. ஆனால் “இது வினையெச்சம் மற்றும் பெயரெச்சத்தின் ஈற்றில் நிற்கின்ற மேற்சொன்னவை எல்லாம் விகுதி என்று பொருள்படும்.” இதனை என்கிருந்து பெற்றார் என்று தெரியவில்லை. வெற்பன் என்னும் சொல் வெற்பு (மலை) + அன் என்றாகும். இதில் வெற்பு என்பது பெயரெச்சம் அல்ல. அதே போல கறுப்பன் (அல்லது கருப்பன்) என்பது கறுப்பு + அன் என்றாகும். கறுப்பு (அல்லது கருப்பு) என்பது நிறப்பண்பைக் குறிக்கும் பெயர்; அது பெயரச்சம் அல்ல. உண்டான் என்னும் வினைச்சொல்லை உண் + ட் + ஆன் என்னும் பிரிவில் உண் என்பது ஏவல் வினை; வினையெச்சம் அல்ல. இவ்வெடுத்துக்காட்டுகளில் அன், ஆன் எனபன விகுதிகள். எனவே ஊரோடி பகீ அவர்களின் “வினையெச்சம் மற்றும் பெயரெச்சத்தின் ஈற்றில் நிற்கின்ற மேற்சொன்னவை எல்லாம் விகுதி என்று பொருள்படும்” என்னும் கூற்றை நான் ஏற்கவில்லை.
(செ-2) மேலும் ஊரோடி பகீ கூறுகிறார்: // இங்கே அன் மற்றும் ஆன் என்பது குறிப்பாய் ஆண்பால் படர்க்கைக்கே ஆனதென்று காண்டிகை உரை சொல்கிறது.// ஒப்புக்கொள்கிறேன், ஆனால் அவர் “இங்கு” என்றும் “குறிப்பாக” என்று கூறுவதன் பொருள் உணர்தல் வேண்டும். வேறு இடத்தில் அன், ஆன் என்பனவற்றுக்கு வேறு பொருள் சுட்டுகள் இருக்கலாம். சாரியைகளில் கூட அன் என்பது உண்டு ஆனால் அது ஈற்றில் நிற்பதில்லை. சாரியைகள் விகுதிக்கு முன்னும் இடைநிலைக்குப் பின்னும் வருவன.
(செ-3) பகீ கூறுகிறார்: // இங்கு செல்வகுமாரின் தவறு என்னவென்றால் அவர் குறிப்பிட்ட சொற்கள் விகுதிகளை கொண்டவை அல்ல. அவை அனைத்தும் ஒன்று காரண பெயர்கள் அல்லது இடுகுறி பெயர்கள். அனைத்தும் பெயர்ச்சொற்கள். எச்சங்கள் அல்ல.//
நான் எடுத்துக்காட்டியவற்றுள் எவை இடுகுறிப்பெயர்கள்? அச்சொற்கள் விகுதிகளைக் கொண்டவை அல்லவா? சரி, பின்னர் அச்சொற்களை எப்படிப் பிரிப்பீர்கள்? பெயர்ச்சொற்களைப் பற்றித்தானே பேச்சே!! எச்சங்களாக இருக்கவேண்டுமா??!! யார் சொன்னார்கள்? ஏன்??!!
வடிகட்டி என்பது எச்சமா, காரணப்பெயரா? //வடிகட்டி எடுத்தேன் // என்றால் அங்கே வடிகட்டி என்பது வினையெச்சம், ஆனால் filter என்னும் சொல்லுக்கான கலைச்சொல்லாகச் சொல்லும் பொழுது அது காரணப்பெயர். ஒளிமிகைப்பி, ஒலிபெருக்கி என்பனவும் காரணபெயர்கள். இங்கு பேச்சே இவ்வகைக் காரணப்பெயர்களைப் பற்றித்தான்.
(செ-4) ஊரோடி பகீ கூறுகிறார்: //அன் என்று முடிகின்ற எல்லா சொற்களும் “அன் விகுதி” கொண்டவை அல்ல. (முரளி மற்றும் செல்வகுமார் கவனிக்க) மாறாக அன்விகுதி கொண்ட எச்சங்களனைத்தும் ஆண்பால் படர்க்கையை குறிப்பன. இவ்வெச்சங்களும் பொருளால், இடத்தால், காலத்தால், சினையால், குணத்தால், தொழிலால் மற்றும் இடைச்சொல்லால் வரல் வேண்டும்//
ரவி கேட்டக் கேள்விகளுக்கு நானும் அன், ஆன் என்று முடிவன எல்லாம் திணை, பால், சுட்டுவன அல்ல என்றுதான் கூறினேன். எடுத்துக்காட்டுகளும் தந்தேன். மீண்டும் ஊரோடி பகீ, “அன்விகுதி” கொண்ட “எச்சங்கள்’ என்று கூறுகிறார். இது தவறு என்று மேலே காட்டியுள்ளேன். பகுபதங்களில் வரும் விகுதிகள், ஒரு பகுதிக்குப் பின்னொட்டாக வருவனவற்றுள் ஒன்று. இங்கே பகுதி என்பது முழுப்பொருளைத் தரும் ஒருசொல்லாக இருத்தல் வேண்டும் (எ.கா ஏவல் வினை). எச்சம் அல்ல!!
மேலும் சில சொல்லல் வேண்டும் ஆனால் பின்னர் பார்ப்போம்.
செல்வா
@பகீ
//இந்த -ஆன் விகுதி சொற்கள் பெரும்பாலும் அஃறிணைகளையே குறிக்கின்றன. இவற்றுக்கு -ஆன் விகுதி உயிருள்ளது போல் மயக்கம் தருகிறது//
என்பதை
//நாம் உருவாக்கும் எண்ணுவான், படிப்பான் போன்ற இந்த -ஆன் விகுதிச் சொற்கள் பெரும்பாலும் உயிரற்றவையையே குறிக்கின்றன. ஆனால், ஆன் விகுதி இவற்றுக்கு உயிருள்ளது போல் மயக்கம் தருகிறது//
என்று இருந்திருக்க வேண்டும்.
@செல்வா, பகீ
என் உள்ளுணர்வில் தோன்றிய கருத்துகளை இலக்கணம், மரபுடன் பொருத்திப் பார்த்து உறுதி செய்யாமல் எழுதியதாலேயே குழப்பம். உங்கள் இருவரின் கருத்துகளைப் புரிந்து கொண்டு கட்டுரையில் இறுதியாக உரிய மாற்றங்களைச் செய்வேன்.
@செல்வா
தங்கள் கருத்துகளை பகீ சற்று கடுமையாக மறுத்து எழுதி இருந்தாலும், அவரை அறிந்தவன் என்ற முறையில், நிச்சயம் உங்களைத் தனிப்பட்ட முறையில் சாட நினைத்திருக்க மாட்டார் என்று என்னால் சொல்ல இயலும். எனினும், அது சாடலாகத் தோன்றியதற்கு வருந்துகிறேன்.
@பகீ
செல்வா அவர்கள் நான் பெரிதும் மதிக்கும் அறிஞர். நம்முடைய கேள்விகள், ஐயங்களை நட்புடன் முன்வைத்து நாம் ஒரு புரிதலுக்கு வரலாம் என்று எதிர்ப்பார்க்கிறேன்.
நன்றி.
ரவி,
நான் முன்னர் கூறிய சொற்களோடு கீழ்க்காண்பனவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
கக்குவான் என்பது ஒரு நோய். இதனை கக்கிருமல் என்றும் கூறுவார்கள்.
வேலிக்காத்தான் என்பது ஒரு செடி.
முடக்கத்தான் என்பது ஒரு செடி
சூடன் = கற்பூரம் (ஒரு மீனுக்கும் இப்பெயர் உண்டு).
தவளைக்குச் சொறியன் என்று ஒரு பெயர் உண்டு.
நடையன் என்பது செருப்பாகிய காலணிக்கும், கால்நடை விலங்குகளுக்கும் பெயர். கால்நடை என்னும் சொல்லாடியையும் நோக்குக.
கறையான் (termite) என்பது மரத்தை அரிக்கும் பூச்சி
கரப்பான் என்பது பலவகையான நோய்களுக்கும் ஒரு வகையான பூச்சிக்கும் பெயர்.
சூறன் என்பது மூஞ்சூறு அல்லது வீட்டெலி
தடுமன் என்பது த்டிமல் என்று கூறும் சளிபிடித்து இருக்கும் உடல்நிலை. (இலங்கையில் வழக்கு என்றாலும், தமிழகத்திலும் முன்பு உண்டு, நான் கேட்டிருக்கிறேன்)
கோட்டான் என்பது ஆந்தை.
ஊமன் என்பதும் ஆந்தை.
ஓமான், ஓணான் என்பன ஓந்தி.
ஒட்டுவாரொட்டி என்னும் தொற்றுநோய்வகைகளை ஒட்டுவான் என்றும் கூறுதல் உண்டு.
—-
தமிழில் வினையும் பெயரும்
——–
தமிழில் காலம், திணை பால் முதலியனவற்றின் சுட்டுகள் சேராத் தனி வினைவடிவம் ஏவல் வினை வடிவில் இருக்கும். (ஆங்கிலத்திலே infinitive என்பார்களே அது தமிழில் ஏவல் வினை என்னும் imperative வடிவில்
இருக்கும்).
இந்த ஏவல் வினையே விகுதிகள் சேரா பெயர்ச்சொல்லாகவும் இருப்பது பல இடங்களில் தமிழில் மரபு. எடுத்துக்காட்டாக அடி என்னும் சொல் ஓர் வினைச்சொல் (அடித்தான், அடிப்பான், அடிப்பேன் எனக் காலம், பால் திணை ஏற்றி சொல்லாக்கலாம்). ஆனால் ஒருவரை அடி என்று ஏவ (ஆணையிட) கூறுவதால் ஏவல் வினை. இதே போல காய்-காய்த்தல் என வினையாகவும், காய் என்னும் பெயர்ச் சொல்லாகவும் வரும். இப்படி ஏராளமான சொற்கள் உண்டு. இப்பொழுது விகுதிகள் சேர்க்கும் பொழுது வினைச்சொல்லுடன் சேர்த்ததா, பெயர்ச்சொல்லுடன் சேர்த்ததா என்று அலசி அறிய வேண்டும்.
வடிகட்டு என்னும் சொல் வினையாகவும், பெயர்ச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளக்கூடியது. “போனமுறை செய்த வடிகட்டு சரியில்லை” என்றால் அங்கு வடிகட்டு என்பது பெயர்ச்சொல். வடிகட்டியை வடிகட்டு என்றும் சொல்லலாம். படிக்கட்டு என்றும், உடற்கட்டு என்று கூறும் சொல்லாட்சிகளையும் நோக்கலாம். Foundational principles என்று வரும் இடங்களில் அடிக்கட்டு என்னும் சொல்லையும் ஆளலாம். வடிகட்டுவான், வடிகட்டி ஆகிய இரண்டுமே வடிகட்டப் பயன்படும் ஒன்றைச் சுட்டும் பெயர்கள். வடிகட்டுவான் என்பது வினைமுற்றாகக் கொண்டால், கட்டாயம் ஆன் என்னும் விகுதி _அங்கு_ காலத்தோடு சேர்ந்துவரும் ஆண்பால் படர்க்கைக்கான விகுதி. எல்லா விகுதிகளும் எண், திணை , பால் காட்டுவன அல்ல.
கடைதல், புகைபிடித்தல், கூறுதல் முதலானவற்றை பெயர்ச்சொல்லாகக் கூறும்பொழுது (எ.கா. புகைபிடித்தல் உடல்நலத்திற்குக் கேடு தரும்) அவை “தல்” என்னும் விகுதியுடன் வரும் ஆனால் அது போன்ற விகுதிகள், பால், திணை, எண் காலம் முதலியன் சுட்டா. அவை பெயர்ச்சொற்கள். தல், அல், கை முத்லான விகுதிகள் தொழிற்பெயர் விகுதிகள். அதேபோல “து” என்னும் விகுதி ஒன்றல்பால் படர்க்கை விகுதியாக இருந்தாலும் (மான் துள்ளி ஓடியது), து என்னும் விகுதி பிற இடங்களில் பால் சுட்டா தொழிற்பெயர் விகுதியாகவும் வரும் . எனவே விகுதிகள் பால் சுட்டுவனவும் சுட்டாதனவும் ஆக இருவகையிலும் உண்டு.
செல்வா
அன்புடன் செல்வா,
உங்களை தனிப்பட்ட ரீதியில் சாடவேண்டும் என்ற எண்ணத்தில் அந்த பதிவு இடப்பட்டதல்ல. அப்படி உங்களுக்கு தோன்றினால் மன்னிக்க வேண்டுகிறேன்.
உங்கள் பதில் தொடர்பாய் பின்னர் பதிலிடுகிறேன்.
நன்றி.
பகீ
பகீ,
உங்கள் பதிவு தாக்குமுகமாக
இருந்ததாகவே உணர்ந்தேன்.
ஆனால் நீங்கள் அப்படி
நினைத்தேதும் கூறவில்லை என்பதால்
அது என் மருட்பார்வைதான். என்னையும்
அப்படிப் பிறழ உணர்ந்தற்கு மன்னிக்கவும்.
ஆன் என்பது “ஒன்றன் பாலீறு” ( neutral singular ending ) என்று செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் (முதல் மண்டலம் – இரண்டாம் பாகம் பக்கம் 209இல்) கொடுக்கப்பட்டுள்ளது. இன்றுதான் பார்த்தேன், ஆனால் ஏற்கனவே பட்டறிவால் உணர்ந்திருந்தது.
கறையான், அகழான் என்னும் இரு சொற்கள் எடுத்துக்காட்டாகவும் தந்துள்ளனர்.
செல்வா
இலக்கணத்தில் தங்களது அறிவும் ஆர்வமும் கண்டு மகிழ்ச்சி. இலக்கணத்தில் எனக்கு அவ்வளவு அறிவில்லாவிட்டாலும் மொழிபெயர்ப்பில் கொண்ட ஆர்வம் காரணமாய் இவிடத்தில் என் கருத்தை பதிய விரும்புகிறேன். பொதுவாக மொழிபெயர்ப்பின் பிரதான நோக்கம் வாசகனிடம் சரியான பொருளை எளிமையாகவும் தெளிவாகவும் கொண்டுசேர்ப்பதாகும். அந்த நிலையில் நோக்கும்போது அன் விகுதியை சேர்க்கும்போது ஏற்ப்படும் பால்சார் மயக்கத்தை தவிர்த்து இ விகுதியை சேர்த்துக்கொள்வது சாலப்பொருந்தும் என்பது எனது அபிப்பிராயம். தவிர கதிரவன், வியாழன் போன்ற சொற்கள் ஆண்பாலை குறிப்பவையே. கதிரவன் எழுந்தான் என்று கூறுவதே மரபு. எனவே பகியின் கருத்து சரியானது என்பதே என்ன கருத்துமாகும்.
நன்றி
கேதா
ஆன் என்பது சரியா? இல்லை ஆண் என சொல்வது சரியா?
எனக்கு எங்கோ படித்த ஞாபகம், ஆன் என்பது சரி என்று.
விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
நன்றி
சுப்ரா சங்கரலிங்கம்
தலைவன் தலைவி என்ற சொல்லில் தலைவன் என்பது ஆண்பாலையும், தலைவி என்பது பெண்பாலையும் குறிப்பது இயல்பே. ஆனால் வடிகட்டி என்பது பெயராக தோற்றமளித்தாலும் அது வடிகட்டு என்ற வினையடியிலிருந்து வினையெச்சமாக மாறும்பொழுது “வடிகட்டி” என்றே அமையும். அதனால் இச்சொல் வரும் இடம் அல்லது அது பயன்படும் பொருண்மை அடிப்படையில் தான் வினையாகவோ, பெயராகவோ எடுத்துக்கொள்ளப்படுகிறது.
t
”இ” பெண்பால் விகுதி என்பார் டாக்டர் அகஸ்தியலிங்கம்!
சில மொழிகளில் ஆண்பால் பெண்பால் என்று இரு பால்களே உண்டு.அவர்கள் அஃறிணைச்சொல்லை ஆண்பால் அல்லது பெண்பால் விகுதிகளை இணைத்து வழங்குவர்.அதற்காக அச்சொல் ஆண்பாலோ பெண்பாலோ ஆகிவிட முடியாது.
அது நியூட்டர் எனப்படும் அஃறிணைப்பால் தான்.
மேலும் பால் விகுதி பெற்று வரும் பெயர்ச்சொற்களும்,பொருளால் மட்டும் பாலை உணர்த்தும் பெயர்சொற்களும்,ஆண் அல்லது பெண் என்ற சொற்களை குழந்தை போன்ற பொதுப்பெயர்களின் முன் இட்டு வழங்கும் பெயர்ச்சொற்களும் தற்காலத்தமிழில் உண்டு.கரப்பான் என்பதும் வடிகட்டி என்பதும் கடுக்கன் என்பதும் பொருள்மயக்கம் உடையனவாகத் தோன்றவில்லை.தமிழில் இவ்வாறு நாம் எந்தப்பாலில் பெயர்சொற்களைக்கூறினாலும் நமது வினைமுற்று அது என்ன பால் என்று காட்டிவிடும்.
எ.கா.கடுக்கன் காணாமல் போனது(கடுக்கன் காணாமல் போனான் என்று சொல்வதில்லை)
வடிகட்டி எங்கே இருக்கிறது?(வடிகட்டி எங்கே இருக்கிறாள் என்று சொல்லோம்!)
கரப்பான் பறந்துவிட்டது!(கரப்பான் பறந்துவிட்டான் என்று சொல்வதில்லை.)
எனவே இவைகள் பொருள்மயக்கம் இருப்பனவாக தெரியவில்லை!!!