வட்டார வழக்குத் தமிழ்

இன்று மாலை எனக்கும் அக்காவுக்கும் நடந்த உரையாடல்

அக்கா: “முன்ன எல்லாம் அப்பா என்னம்மா, என்னப்பா-ன்னு கூப்பிடுவார். இப்ப என்னத்தா-ன்னு கூப்பிடுறார். எனக்கு எரிச்சலா இருக்கு. அப்பா படிச்சுட்டு ஊர்ல போய் வாழ்ந்து இப்ப ஊர்க்காரனவே பேச்சுலயும் மாறிட்டார்.”

நான்: “முன்னல்லாம் நீ ஊர்ல இருந்தப்ப எல்லாரும் அப்படித்தானக்கா கூப்பிடுவாங்க..அப்பா பிறந்து வளர்ந்தது, நாம வளர்ந்தது எல்லாமே ஊர்ல தானக்கா..நானே இப்ப ஊருக்குப் போனா தங்கச்சிகளை வாத்தா, போத்தா-ன்னு தானே பேசுறேன்.”

அக்கா: “ஆத்தான்னு கூப்பிடுறது எனக்கு எரிச்சலா ஒரு மாதிரியா இருக்கு. எதுக்கு கிராமத்தான் மாதிரி பேசணும்”

நான்: “அக்கா, நீ இப்ப கோயம்புத்தூர்ல இருக்க. வேற ஊருக்குப் போய் வா கண்ணு, போ கண்ணு-ன்னு பேசினா ஓட்டுவாங்க. அதுக்காக, அப்படி பேசுறது குறைச்சலா என்ன?”

அக்கா: ம்ம்…

**

தொலைந்து வரும் வட்டார வழக்குச் சொற்கள் குறித்த ஆழியூரானின் இடுகை.

**

என் அப்பா, அம்மா தங்கள் அப்பா, அம்மாவை ஆயா, ஐயா என்று அழைத்தார்கள். நாங்கள் அப்பா, அம்மா என்று அழைக்கிறோம். நாங்கள் எங்கள் தாத்தா, பாட்டியை அப்பத்தா, அப்பச்சி, அமத்தா என்று அழைக்கிறோம். அக்காவின் பையனோ என் அப்பா, அம்மாவை தாத்தா, பாட்டி என்று அழைக்கிறான்.

தலைமுறை மாற்றம், நகர்ப்புறம் நோக்கிய இடப்பெயர்வுகள், கல்வியறிவு, செயற்கைத் தமிழைத் திணிக்கும் ஊடக வளர்ச்சி எல்லாம் சேர்ந்து தன் சிறு வயதில் வளர்ந்த ஊரில் பேசிய தமிழை மதிப்புக் குறைவாக எண்ண வைக்கும் போக்கு பெருகுவது கவலைப்பட வைக்கிறது 🙁 இந்தத் தாழ்வு மனப்பான்மை படிப்படியாக எண்ணற்ற நல்ல தமிழ்ச் சொற்கள் புழங்குவதை குறைத்து வழக்கொழியச் செய்கின்றது.

சிலர் தங்கள் சாதி அடையாளத்தை மறைப்பதற்காக சில சொற்களைப் பேசாமல் இருக்கலாம். ஆனால், நான் கண்டவரை ஊர்ப்புறங்களில் இந்தச் சாதி அடையாளத்தைத் தாண்டி பொதுவாகப் பல சாதிகளும் புழங்கும் எத்தனையோ நல்ல சொற்கள் உள்ளன. அவற்றைப் பேசுவதிலும் வட்டார அடையாளத்தைக் காப்பதிலும் தவறு இல்லை. ஒவ்வொரு வட்டாரமும் ஒவ்வொரு வகையில் நல்ல தமிழ்ச் சொற்களின் காப்பகமாக விளங்குகின்றன.

**

என்ன ஆனாலும் சரி, என் குழந்தைகளை என் அப்பா, அம்மாவை அப்பத்தா, அப்பச்சி என்று தான் அழைக்கச் சொல்ல வேண்டும் என்று இருக்கிறேன்.

அது அவர்களுக்கே பிடிக்காவிட்டாலும் கூட 🙂


Comments

9 responses to “வட்டார வழக்குத் தமிழ்”

 1. மிச்சத்தையாவது காப்பாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. வட்டார வழக்கைத் தொலைப்பதென்பது ஒரு இனக்குழு வாழ்க்கைமுறையின் பண்பாட்டு, கலாச்சார அடையாளங்களை தொலைப்பதுதான். அதற்குள் நீங்கள் சொல்லியிருப்பது போல சாதி,வர்க்க பேதங்கள் இருக்கின்றன என்றாலும், அவற்றை கலைந்து எல்லோருக்கும் பொதுவான பூர்வ மொழியை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.

 2. அழைக்கும் முறைகள் நிறைய மாறிக் கொண்டேதான் போகின்றது. எங்க ஊர்ல அப்பா, அம்மாவை ஐயா, ஆச்சி என்று முன்னையோர் அழைத்து வந்தார்கள். ஆனால் யாருமே இப்போது அப்படி அழைப்பதில்லை. நீங்கள் சொல்வதுபோல் பழந்தமிழ் சொற்கள் மறைந்துபோவது வருந்தத்தக்கதுதான். பலருக்கு, நான் உட்பட, :), அவை சரியான தமிழ் சொற்கள்தானா என்பதே தெரியாது.

 3. ஆமாம், நான் அறிய எங்களுக்கு முந்தய தலைமுறை தாய், தகப்பனை ஐயா, ஆச்சி என்றே கூப்பிடுவினம். இப்ப யாருமே அதைப் பாவிக்கிறதில்லை. பழைய தலைமுறையினர் பேசுவதை மட்டும் கேட்கலாம்.

  மாமாவை அம்மான் என்று கூப்பிடும் வழக்கு இப்போது இலங்கையில் இல்லை. ஆனால் என் தாய் மாமனாரை நான் அம்மான் என்றுதான் கூப்பிடுவேன்..! மற்றவர்களுக்கு அறிமுகம் செய்கையில் மாமா என்று சொல்வது வழக்கம்!

 4. என் பெற்றொர்கள் தங்களது பொற்றோரை ஐயா/அப்பா, அம்மா என்றுதான் கூப்பிடுவினம். நாங்கதான் இந்தியவில் இருந்து மம்மி டடா(Dad(a)) என்று பழகிட்டோம். இங்கிலாந்துக்கு வந்த பிறகுதான் ஒழுங்கா அம்மா அப்பான்னு கூப்பிடுறோம். ஆனால் சின்னதில இருந்தே தாத்தா பாட்டியை, அம்மம்மா அம்மப்பா/பப்பா, அப்பம்மா, அப்பப்பா என்றுதான் அழைத்துவருகிறொம் 🙂

 5. அன்பு நண்பரே!

  என்னுடைய பிளாக்கில் நான் என்கல்து கொங்கு தமிழிலேயே பிடிவதமாக எழுதி வருகிறேன்.

  தங்கள் வருகைக்கும் என் நன்றி!

  எனது நடை தொடர்பான உங்கள் மேலான கருத்தைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்

  லதானந்த்

 6. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  ஆழியூரான், கலை, மயூரேசன், கலை – நன்றி.

  லதானந்த் – உங்களை என் வலைப்பதிவில் காண மகிழ்ச்சி. உங்கள் வலைப்பதிவில் விரிவான மறுமொழி அளித்துள்ளேன்.

  //என்னுடைய பிளாக்கில் நான் என்கல்து கொங்கு தமிழிலேயே பிடிவதமாக எழுதி வருகிறேன்.//

  இதில் என்கல்து என்று எழுதி உள்ளீர்கள். இது எழுத்துப் பிழையா இல்லை கொங்கு நடை என்பதற்காக இப்படி எழுதி உள்ளீர்களா தெரியவில்லை. உங்கள் பதிவில் பல இடங்களில் ல, ள மாற்றிப் போட்டுப் பார்த்து உள்ளேன். ஒரு வேளை வட்டார நடை என்பதற்காக இப்படி எழுதினால் இதைப் பார்த்து தமிழறியாதோர் பிழையாக சொற்களை மனதில் பதித்துக் கொள்ள மாட்டார்களா? வட்டார நடைக்கு ஏற்ப சொற்களை வளைத்து எழுதுவதைக் கண்டிருக்கிறேன். ஆனால், எழுத்துக்கூட்டலையும் பிழையாக எழுதுவது ஏற்புடையதா என்று உங்கள் கருத்து அறிய விரும்புகிறேன்.

  1. யுவா Avatar
   யுவா

   நீங்க சொல்வது சரிதாங்க ரவிசங்கர்.. லதா அவங்க தட்டச்சுல பிழை செஞ்சு இருக்கலாங்க..

   நாங்க எங்க கொங்கு தமிழ்ல நிறைய ‘ங்க’ சொல்லி பேசுவம்ங்க..

 7. அழ.இராசேந்திரன் Avatar
  அழ.இராசேந்திரன்

  ஆத்தாள்-ஆற்றாள்-ஆற்றும்+ஆள்=பசி,தூக்கம்,வலி,ப்யம்,கோபம் முதலியவற்றை அறிந்து ஆற் றும் ஆள் ஆத்தாள்.இந்த நல்ல தமிழ் சொற்களை நம் பிள் ளைகள் இழக்கிறார்கள் என்பது எனக்கும் வேதனை யாகத்தான் இருக்கிறது.அகத்து+ஆள் என்று ம் பொருள் கொள்ளலாம் யாத்தாள் என்ற் பொருளும் உண்டு என்கிறார்கள். உன்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்

  1. ரவிசங்கர் Avatar
   ரவிசங்கர்

   வணக்கம், அழ. இராசேந்திரன். ஆத்தாள் குறித்த உங்கள் விளக்கம் மிக அருமை. இது போன்ற பல நல்ல விளக்கங்களையும் பகிர வேண்டுகிறேன்.