புதிய எழுத்துக்களைப் பெற்றுக் கொள்வதால் தமிழ் வளருமா?

திண்ணையில், சோதிர்லதா கிரிசா எழுதிய தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும் கட்டுரை படியுங்கள்.

அக்கட்டுரையின் முக்கிய கருத்து:

* கங்கை என்பதை kangkai, gangai, gankai என்று பலவாறு பலுக்கிக் குழம்பலாம் என்பதால் g, d, dh, b போன்ற இத்தகைய குழப்பம் தரும் ஒலிகளுக்கு புதிய எழுத்துக்கள் அல்லது குறியீடுகளைச் சேர்க்கலாம். இப்படி பல புதிய எழுத்துக்களைப் பெறுவது பிற மொழியினரின் குழப்பத்தை நீக்கி தமிழைத் திக்கெட்டும் பரப்ப உதவும்.

சோதிர்லதாவுக்கு என் கேள்விகள்:

1. read என்று ஒரே மாதிரி எழுதி விட்டு நிகழ்காலத்தில் ரீட் என்கிறார்கள். இறந்த காலத்தில் ரெட் என்கிறார்கள். போதாதற்கு red நிறம் வேறு இருக்கிறது. character – கேரட்கடர் என்கிறார்கள். chalk – சாக் என்கிறார்கள். சொல்லின் முதலில் ch வந்தால் சா என்பதா கா என்பதா என்று குழப்புகிறது. இது போல் ஆங்கிலத்தில் பல குழப்பங்கள். இவற்றைத் தெளிவிக்க எந்த இலக்கண விதிகளும் இல்லை. இவை ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டிராத எனக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது. இதை யாரிடம் சொல்லி எப்படி மாற்றுவது?

2. இந்தக் குழப்பங்களால் தமிழைக் கற்கச் சிரமமாக இருக்கிறது என்று எத்தனை இலட்சம் வேறு மொழித் தமிழ் மாணவர்கள் முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்? இந்தியா+சீன மக்கள் தொகை 250 கோடி பில்லியன் மக்களும் ஆங்கிலம் கற்க வேண்டிய தேவையை முன்னிட்டு ஆங்கிலத்தை நம் நாடுகளுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்ளலாமா?

3. இந்தி இந்தியாவில் பரவியதற்கு அம்மொழியின் இனிமை காரணமா? இல்லை, அதனைத் தாய்மொழியாகப் பேசுவோர் எண்ணிக்கையும் அதற்குப் பின்னால் இருக்கும் நடுவண் அரசுக் கொள்கையும் காரணமா?

4. நீங்கள் சொல்லும் அத்தனை ஒலிகளையும் / எழுத்துக்களையும் கொண்டுள்ள ஒரு மொழி ஏன் வழக்கொழிந்து போனது?

சரி கேள்விகள் போதும்.

* ஒரு காலத்தில் இந்தியாவில் வடமொழித் தாக்கம் இருந்தது. ஓரிரு நூற்றாண்டுகள் முன்னர் பிரெஞ்சும் தற்போது ஆங்கிலமும் உலக மொழிகளாக இருக்கின்றன. அடுத்து எந்த மொழி அதிகம் வழங்குமோ! இப்படி ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் வருகிறவர், போகிறவர், பிற மொழி மாணவர்களுக்காக எல்லாம் ஒரு மொழியின் இயல்பை மாற்ற முடியாது.

* ஒரு மொழி எவ்வளவு தான் கடினமாக இருக்கட்டுமே? அதை ஒழுங்காகக் கற்பிக்கத் தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். கற்றுக் கொள்வது தான் மாணவரின் அழகு. ஒரு கணிதத் தேற்றத்துக்கான நிறுவம் சிரமமாக இருக்கிறது என்று தேற்றத்தையே மாற்ற முடியுமா?

* முதலில் கேட்டு, பிறகு பேசி அதற்குப் பிறகு தான் வாசிப்பது என்னும் நிலைக்கு ஒரு மொழியின் மாணவன் வருகிறான், முதல் இரு நிலைகளிலேயே ஒவ்வொரு சொல்லும் எப்படி ஒலிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் பிறந்து வளரும் குழந்தைகள் சொற்களில் ஒலிப்பை இப்படித் தான் உணர்கின்றனவே தவிர, எழுத்துக்களைப் பார்த்து அல்ல. இது பிற மொழி மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தல் முறையை மாற்றுவதன் தேவையை உணர்த்துகிறதே தவிர, தமிழையே மாற்ற எந்தத் தேவையும் இல்லை.

* தமிழில் இன்ன ஒலிக்கு அடுத்து இன்ன ஒலிகள் தாம் வரலாம் என்று தெளிவான இலக்கணம் இருக்கிறது. இது தமிழின் சுமை இல்லை. அழகு. இது போன்ற இலக்கணம் எத்தனை மொழிகளுக்கு உண்டு? பள்ளிக்கூடம் வந்து கற்றறியாதோரும் அனுவத்தாலேயே இந்த இலக்கணத்தை அறிந்திருக்கின்றனர்.

* எந்த ஒரு மொழியின் அனைத்து ஒலிப்புகளையும் எல்லா பிற மொழிகளாலும் எழுதிக் காட்டி விட முடியாது. இது பிற மொழிகளின் குறை அன்று. அது அவற்றின் இயல்பு. ஒவ்வொரு மொழியும் ஒரு தனித்தனி உயிரினம் போல. ஒவ்வொரு மொழியின் தோற்றம், வளர்ச்சிக்குப் பின்னும் ஒரு உயிரினத்தின் பரிணாமத்தை ஒத்த கூறுகள் உள்ளன. “ஏன் மீனைப் போல் நீந்த மாட்டேன் என்கிறாய்” என்று குயிலைப் பார்த்துக் கேட்பது மடமை.

* செருமன் முதலிய உலக மொழிகள் எல்லாம் ஏற்கனவே இருக்கிற எழுத்துக்களைக் குறைத்துத் தான் வருகின்றனவே ஒழிய எந்த பெரிய மொழியும் புதிதாய் எழுத்துக்களைப் பெற்றுக் கொள்வதாய் தெரியவில்லை.

இது போன்று, “புது எழுத்துகளால் தமிழ் வளரும்”, என்ற பரப்புவோர் / பசப்புவோரிடம் பின்வரும் கேள்விகளுக்கு விடை சொல்லலாம்:

– இது போல் புது எழுத்துக்களைப் பெற்று பரவலான உலக மொழிகள் எத்தனை? அவை யாவை? அவற்றில் எத்தனை மொழிகள் தமிழுக்கு நிகரான தொன்மையும் செம்மொழித் தகுதியும் வாய்ந்தவை? புது எழுத்துக்களைப் பெற்றதால் மட்டுமே அவை பரவின் என்பதற்கு என்ன சான்று?

தொடர்புடைய இடுகைகள்:

இது குறித்து திண்ணையில் வெளிவந்த எனது விரிவான கடிதம்

சோதிர்லதா கிரிசாவின் எதிர்வினை

F


Comments

15 responses to “புதிய எழுத்துக்களைப் பெற்றுக் கொள்வதால் தமிழ் வளருமா?”

 1. வணக்ககம்.
  தங்கள் கருத்தில் முழுமையாக உடன்படுகிறேன்.
  சோதிர்லதாவுக்கு யானும் மறு(த்து)மொழி எழுத உள்ளேன்.
  வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
  மு.இளங்கோவன்
  புதுச்சேரி,இந்தியா

 2. கேள்விகள் நம்மையும் சிந்திக்க வைக்குது.

 3. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  நன்றி இளங்கோவன், கலை.

 4. // தமிழில் இன்ன ஒலிக்கு அடுத்து இன்ன ஒலிகள் தாம் வரலாம் என்று தெளிவான இலக்கணம் இருக்கிறது. இது தமிழின் சுமை இல்லை. அழகு.//

  நல்ல விளக்கம்

  நன்றி

 5. செ.இரா.செல்வகுமார் Avatar
  செ.இரா.செல்வகுமார்

  ரவி,

  நன்றாக கேட்டுள்ளீர்கள்!
  அந்த கட்டுரையாளர், தமிழின் சீர்மையையும்,
  Principle of parsimony என்பார்களே அந்த
  சிக்கனமும் அறியவில்லை என்றே கூறுவேன்.
  தமிழ் மொழியின் சொற்களைத் தமிழில்
  ஒலிக்கத் தமிழ்மொழியில் நல்லிக்கணம்
  இருப்பதுபோல் பிறமொழிகளில் இருப்பவை
  மிக மிகக்குறைவாகவே இருக்கும். தமிழின்
  குற்றியலுகரமும், குற்றியலிகரமும், ஆய்த
  எழுத்தும், தமிழ் எழுத்தொலிகளின் பிறப்பியலும்,
  அறிந்து வியக்கத்தக்கவை. எல்லா ஒலிகளுக்கும்
  தமிழ் மொழியின் எழுத்து என்னும் சிறப்பு
  கிடையாது. இதில் மூச்சு நுட்பம் முதல்
  பல நுண்னிய கருத்துகள் உள்ளன.
  சில ஒலிகளை எழுத்திலா ஒலிகள் என்றே தமிழர்கள்
  அறிந்து வகைபடுத்தி வைத்திருந்தனர்.
  மாடு ஓட்டுப்வன் மாட்டை
  விரட்ட நாவை மடித்து வெடிப்பொலியாக தருவான்
  ” க்ற்ட்ள ” என்பதுபோல இருக்கும்.
  குழந்தையை கொஞ்சும் பொழுதும், இத்தகு ஒலிகள்
  ஆக்கி குழந்தையின் கவனத்தை ஈர்ப்பது உண்டு. யானை பிளிறுவதை எழுத்தில் காட்ட முடியுமா?
  தமிழில் சிறப்பாக * ஓதை * என்று கூறுவது எழுத்தொலியை.
  எல்லா ஒலியும் எழுத்தொலியாக தமிழர்கள் கருதவில்லை.
  முற்கம், வீளை என்பதைப்போன்றவை எழுத்திலா ஒலிகள்.
  நாமடி (நாவை மடித்து) ஒலிகளாகிய களக் என்பது போன்ற ஒலிகள் ஆப்பிரிக்க மொழிகளில் உண்டு. தமிழில் ஏற்கப்படாதவை.
  எல்லா ஒலிகளியும் நம் காதுகள்
  கேட்டாலும், எப்படி சிலவற்றைத் தேர்ந்து பயன்பெறுகின்றதோ,
  அதே போல ஒருசில ஒலிகள்தான் ஒரு மொழிக்கு உகந்தது என்று
  தமிழறிஞர்கள் தேர்ந்து சீர்மையுடன் வளர்த்தெடுத்து வந்துள்ளனர். தமிழ்போலும் நீடிய சிறப்பான வரலாறு உள்ள மொழிகள் மிக மிகக் குறைவானவையே. தமிழ் முன்னோர்களின் நுண்ணறிவை உணராது தமிழை இழித்தும் பழித்தும் சிலர் பேசுகின்றார்கள்.

  தமிழ் மொழியில் இல்லாத வேற்றுமொழிப் பெயர்ச்சொற்களையும், பிற கலைச்சொற்களையும் **சிறுபான்மை** வழங்க முறை ஒன்று இருந்தால் நல்லது என்பது பற்றி நான் 10 ஆண்டுகளுக்கு மேலாக கூறிவருகின்றேன்.
  1997ல் பேராசிரியர் ‘ஆர்ட் அவர்கள் பாராட்டி எழுதியதைக் கீழே
  கொடுத்துள்ளேன்.
  http://www.infitt.org/tscii/archives/msg00203.html
  என் வலைப்பதிவில் வேற்று மொழிச் சொற்களுக்கு
  மட்டும், சிறுபான்மையாக வழங்க ஒரு முறை பரிந்துரைத்து
  உள்ளேன். பார்க்கவும்:
  http://tamilveli.blogspot.com/

  செல்வா

 6. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  //எல்லா ஒலிகளுக்கும் தமிழ் மொழியின் எழுத்து என்னும் சிறப்பு
  கிடையாது. இதில் மூச்சு நுட்பம் முதல் பல நுண்னிய கருத்துகள் உள்ளன. சில ஒலிகளை எழுத்திலா ஒலிகள் என்றே தமிழர்கள்
  அறிந்து வகைபடுத்தி வைத்திருந்தனர்.//

  செல்வா, இக்கருத்தைப் பல இடங்களிலும் தெரிவித்து இருக்கிறீர்கள். இது குறித்து விரிவாக, தெளிவாக அறிய ஆவல். விரைவில் எழுதி விளக்குவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்,

 7. தமிழ் வாலிபன் Avatar
  தமிழ் வாலிபன்

  அருமையான பதில்.
  சுருக்கமாச் சொன்னா ‘ந்ச்’ னு இருக்குங்க.

  கேள்விக்குத தகுந்த பதிலும், அதற்கு மேலேயும் உள்ள ஆத்மார்த்த சிந்தனைகளும் உங்களுடைய பண்பாடான/பக்குவமான கேள்விகளும் மகுடமாயிருக்கிறது.
  //“ஏன் மீனைப் போல் நீந்த மாட்டேன் என்கிறாய்” என்று குயிலைப் பார்த்துக் கேட்பது மடமை.//
  🙂
  தவா

 8. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  நன்றி, தமிழ் வாலிபன்.

 9. kalaiyarasan Avatar
  kalaiyarasan

  சோதிர்லதா கிரிசா போன்ற பலர் ஆங்கிலத்தை தவிர வேறு ஐரோப்பிய மொழிகளை கற்று அறிவதில்லை. இவர்கள் தமிழை ஆங்கிலத்திற்கு ஏற்றதாக சீர்த்திருத்துவதன் மூலம், தமிழை இன்றும் தாய் மொழியாக பேசுவோர் மீது, ஆங்கிலத்தை திணிக்க முயலும் நோக்கம் தெளிவாக தெரிகின்றது. எம் மத்தியில் இருக்கும் படித்தவர்கள் கூட, உலக நாட்டு மக்கள் அனைவரும் ஆங்கிலம் பேசுவதாக மூட நம்பிக்கைகளை பரப்பி வருகின்றனர். உலகின் அனைத்து வாழும் மொழிகளும், பிற மொழிச் சொற்களை உள்வாங்கி, அவற்றை தமது உச்சரிப்புக்கு ஏற்றதாக பயன்படுத்துகின்றன, இதிலே ஆங்கிலமும் விதிவிலக்கல்ல. உதாரணத்திற்கு John என்ற பெயர் ஆங்கிலத்தில் ஜோன் என்றும், லத்தீன் மொழியில் யொஹனுஸ் என்றும், பிரெஞ்சு மொழியில் ழான் என்றும், ஜெர்மன் மொழியில் யோவான் என்றும், ஸ்பானிய மொழியில் ஹுவான் என்றும் வெவ்வேறாக பாவிக்கப்படுகின்றன. இது தெரியாமல் உலகில் எல்லா மொழிகளும் ஆங்கிலத்தை பின்பற்றுவதை போல கற்பனை பண்ணுவது, கிணற்று தவளையின் சிந்தனைக்கு ஒப்பானது. சோதிர்லதா கிரிசா போன்றவர்களின் மனதில் இன்றும் இருப்பது காலனிய காலத்து அடிமைப்புத்தியே தவிர வேறன்று.

 10. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  கலையரசன் – தனிப்பட்ட முறையில் சோதிர்லதா கிரிசா அவர்களைப் பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், இது போன்ற சிந்தனைகளைக் கொண்ட பலருக்குத் தமிழ் குறித்த தாழ்வு மனப்பான்மை (அல்லது விசமத்தனமாக அத்தகைய உணர்வைப் தமிரிடம் உருவாக்க முனைவது), ஆங்கிலமே உயர்வு என்ற எண்ணம் இருக்கிறது. ஆங்கிலமே இந்தியாவுக்கு வரும் முன்னும் கிரந்த ஒலிகள் / எழுத்துக்களைப் புகுத்திய வட மொழி முன்னெடுப்புச் சூதின் தொடர்ச்சியாகவும் பார்க்கலாம்.

 11. வி. சு. Avatar
  வி. சு.

  வேண்டுமளவு எழுத்துக்களைச் சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் இவ்வாறு உருவாக்கும் மொழியைத் “தமிழ்” என்று சொல்லிக் கொள்ள வேண்டாம்.

  🙂

 12. ரவிசங்கர் Avatar
  ரவிசங்கர்

  வி. சு. – 😉

 13. நன்றி!
  பாராட்டுகள்.
  திண்ணையில் மறுமொழி எழுதியுள்ளேன்.
  -தமிழநம்பி

 14. அனைத்து வினாக்களும் நன்று. அதிலும் 5,11 அமர்க்களம்.

 15. வணக்கம். மிக நன்றான கட்டுரை. தருக்க நிலையில் கருத்துகளை முன்வைத்துள்ளீர்கள். எனக்கு மிகப் பயனாக அமைந்தது. பாராட்டுகள்.