சிறுவர் இலக்கியம் படைப்பவர்களுக்கான மொழி சார் பொறுப்பு

மாடர்ன் முயலும் முட்டாள் ஆமையும் என்ற தலைப்பில் கண்மணி எழுதிய ஒரு சிறுவர் கதையைக் கண்டேன். அதில் உள்ள தமிங்கில நடையைத் தவிர்க்கலாமே என்று நடந்த உரையாடலைப் பதிந்து வைக்கிறேன்.

நான்: இயன்ற வரை நல்ல தமிழில் கதை சொன்னால் பரவாயில்லை. வளரும் பருவத்திலேயே குழந்தைகளுக்கு அரை குறை தமிழைக் கற்றுத் தர வேண்டுமா? ஆண்ட்டி என்பதை விட அத்தை என்று சொன்னால் இனிமையாக இருக்குமே? குட்டீஸ், சுட்டீஸ் என்ற சிறுவர் மலர், ஆனந்த விகடன் தமிழ்க் கொலையைத் தவிர்க்கலாம். இப்போது உள்ள பதிவின் நடையைக் கிராமத்துப் பிள்ளைகளால் பின்பற்றுவது சிரமம் என்றே நினைக்கிறேன்.

கண்மணி: இது அரைகுறை தமிழ் இல்லை. பேச்சு வழக்கு நடை. எந்த கிராமத்து குழந்தைக்கு ஆண்ட்டி, மம்மி, டாடி என்றால் தெரியாது சொல்லுங்கள்? குட்டீ, சுட்டீ என்பது ஆசையில் சொல்வதுதானே. சில நடைமுறை வார்த்தைகளின் பயன்பாடு தமிழைப் பாதிக்கும் என நான் நினைக்கவில்லை. சரியா? முடிந்தவரை கதையின் சாராம்சம் தமிழிலேதான் உள்ளது. இந்த தளத்தில் ஆங்கில புதிர்களும் உண்டு நண்பரே. தமிழ் என்று வந்த பிறகு கிராமம் நகரம்னு ஏன் பாகுபாடு? மேலும் வலையில் இதைப் படிக்கும் வாய்ப்புள்ள கணிணி பற்றித் தெரிந்த எந்த குழந்தையும் ஓரளவு ஆங்கிலம் அறிந்திருக்கும்தானே.

நான்: குட்டிகள், சுட்டிகள், கண்ணுங்களான்னு சொன்னா அது தமிழ். குட்டீs சுட்டீs தமிங்கிலம்.

குட்டீஸ் junction என்ற தலைப்பே தமிங்கிலம் தான். அரும்புகள் என்பதையே பெயரா வைச்சிருக்கலாமே?winning point, rest, friends, slow and steady, time manage, correct, time set, alarm, sorry, ok c u bye, aunty என்று இத்துணூன்டு கதையில் எதற்கு இத்தனை ஆங்கிலச் சொற்கள்?

ஆண்ட்டி, அங்கிள்னாலே என்னன்னு தெரியாத குழந்தைகள் எங்கள் சிற்றூரில் உண்டு. winning point, slow and steady, manage எல்லாம் புரிய வாய்ப்பே இல்லை. ஐரோப்பாவில் ஆங்கிலம் பேசாத செருமனி, பிரான்சு போன்ற இடங்களில் வளரும் தமிழ்க் குழந்தைகளுக்கு இதில் உள்ள friends போன்ற ஆங்கில வார்த்தையும் கூட சத்தியமாகப் புரியாது. எல்லா தமிழ்க் குழுந்தைகளுக்கும் ஆங்கிலம் தெரியும், புரியும் என்பது பிழையான எண்ணம். தமிழ்நாட்டு நகரத் தமிழ்க்குழந்தைகளுக்கு மட்டும் தான் உங்கள் பதிவு என்றால் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

நான் ஆங்கிலத்துக்கு எதிரி இல்லை. ஒன்று முழுக்க ஆங்கிலத்தில் எழுதுங்கள். இல்லை, முழுக்க தமிழில் எழுதுங்கள். இரண்டையும் குழப்பி அடிக்க வேண்டாம். தமிழில் எழுதி விட்டு அதற்கு அடைப்புக்குறிக்குள் (under estimate) போன்று விளக்கம் தருவது கொடுமையின் உச்சம். நீங்கள் சொல்ல வரும் கருத்தைத் துல்லியமாகத் தமிழில் தெரிவிக்கத் தெரியாவிட்டால் முழுக்க ஆங்கிலத்திலேயே எழுதி விடுங்கள். உங்கள் கதையின் சாரத்தை ஆங்கில அறிவு இல்லாமல் புரிந்து கொள்ள முடியாது என்றால் அப்புறம் என்ன கதை எழுதும் திறன்?

உள்ளதைத் தானே காட்டுகிறோம் என்ற திரைத்துறையினர் போல் செயல்பட வேண்டாமே? குழந்தைகளுக்கு கதை சொல்பவர்களுக்கு பல விதங்களிலும் சமூகம், மொழி சார் பொறுப்பணர்வு உண்டு. ஆங்கிலச் சொற்கள் அவர்களுக்குப் புரிந்தால் கூட முறையான தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்த வேண்டியது நம் கடமை. இன்று 100க்கு 5 சொற்கள் இக்கதையில் ஆங்கிலத்தில் இருந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் 100க்கு 25 சொற்கள் ஆகும். அப்புறம் ஒரு கட்டத்தில் இது கதை முழுக்க ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதுவதில் தான் போய் முடியும்.

இதைத் தொடர்ந்து, இது போல் மொழிநடை பற்றிய விமர்சனங்கள் குறித்த தன் கருத்தை முழி பிதுங்க வைக்கும் மொழி என்ற தலைப்பில் கண்மணி எழுதினார். அங்கு தொடர்ந்த உரையாடல் கீழே:

கண்மணி: சில நேரங்களில் சொல்லப் போனால் பல நேரங்களில் ஆங்கிலக் கலப்பு வந்து விடுகிறது. பள்ளியில் குழந்தைகள் நிச்சயம் ஆங்கிலம் படிப்பார்கள்தானே. ஆங்கிலமே இல்லாத ஆங்கிலக் கலப்பில்லாத பாடமுறை ஏதேனும் உள்ளதா? அல்லது கணிணி பற்றி அறிந்து இந்த வலைப் பக்கத்தை படிக்கக் கூடிய பிள்ளைகள் சுத்தமாக ஆங்கிலமே அறியாதவர்களா?

பலமுறை நண்பர்கள் இந்த பதிவுகளில் இடம் பெறும் ஆங்கிலக் கலப்பைச் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். பல கதைகளில் எளிமையான ஆங்கில வார்த்தைகள் ஆண்ட்டி, டைம், ஹெல்ப் போன்றவை வந்த போது சில நண்பர்கள் கேட்டார்கள் இதையும் தவிர்த்து முழுமையான தமிழிலேயே எழுதியிருக்கலாமே என்று.

சில இடங்களில் ஆங்கில வார்த்தைகளின் பக்கத்தில் அடைப்புக்குறிக்குள் தமிழும் கொடுத்திருந்தோம்.
என் சக கூட்டுப் பதிவர்கள் மாணவப் பருவத்தினரே. எனவே அவர்கள் எழுத்தில் ஆங்கிலக் கலப்பிருப்பது ஆச்சரியமில்லை. எங்கள் பதிவின் நோக்கம் சிறுவர்களுக்கான ஒரு வலைப் பூ. அவர்களுக்குப் பிடித்தமான,உபயோகமான பதிவுகள் தருவதே. ஆனால் ஆங்கிலக் கலப்பைத் தவிருங்கள். ஆங்கில மணம் வீசுதே என்று அவ்வப் போது குரல் ஒலிக்கிறது. நானும் தமிழ்ப் பெண்தானே. தமிழ் பேசும் நாட்டவள் தானே என்ன விரோதியா? இல்லை ஆங்கிலப் புலமை மிக்கவளா அதுவும் இல்லை. ஒரு வழக்கு நடையில் குழந்தைகளின் மனம் கவரும்படி எழுதுவதே நோக்கம். இதில் மொழி பற்றிய விவாதம் தேவையில்லை என்பது என் கருத்து.

தமிழ் நம் உயிரென்றால் பிற மொழிகள் நம்மை அலங்கரிப்பவை போலத்தான். உயிரும் உணர்வுமாய் இருந்தாலும் அலங்காரம் இல்லாமல் இருக்கிறோமா? தாய்மொழி அவரவர்க்கு உயிர் மூச்சென்றாலும் பிற மொழிகள் உடுத்தும் உடைபோல அலங்காரமாகிவிடுகின்றது.

முடியாது என்பதில்லை என் வாதம். ஒற்றை ஆங்கிலச் சொல் கலப்பில்லாமல் எழுத முடியும். ஆனால் கலப்பினால் என்ன தவறு. எந்தப் பள்ளியில் ஆங்கிலமே இல்லாமல் இருக்கிறது. ஆங்கிலவழிக் கல்வி இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஆங்கிலம் அல்லாத பாடத்திட்டம் உண்டா?

நான்: குட்டீஸ் ஜங்ஷனில் குழந்தைகள் எழுதும் எந்த இடுகையையும் மொழி நடை குறித்து நான் விமர்சிக்கவில்லை. ஏனெனில் குழந்தைகள் வேண்டுமென்றே ஆங்கிலம் கலந்து எழுதுவதில்லை. அவர்களுக்கு எப்படி சிந்திக்கத் தெரிந்திருக்கிறதோ, எப்படி சிந்திக்க கற்றுத்தரப்பட்டிருக்கிறதோ அப்படித் தான் எழுதுவார்கள். அவர்கள் வளர வளர இன்னும் நல்ல தமிழ் கற்று எழுதுவார்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துகிறேன்.

தமிழ் வலைப்பதிவுலகில் எத்தனையோ பேர் ஆங்கிலம் கலந்து தான் எழுதுகிறார்கள். உங்கள் தனி வலைப்பதிவிலும் நீங்கள் அப்படி எழுதுகிறீர்கள் தான். அப்படி எழுதுவது உங்கள் உரிமை. ஆனால், இங்கெல்லாம் இவர்களை விமர்சிக்காமல் குட்டீஸ் ஜங்ஷனில் வந்து விமர்சிக்க ஒரே காரணம் – குழந்தைகளுக்காக எழுதபவர்களுக்காவது இன்னும் கொஞ்சம் கூடுதலாக மொழி சார்ந்த பொறுப்பும் கடமையும் இருக்கலாமே என்ற எதிர்ப்பார்ப்பு தான்.

பசுமரத்தாணி போல் மனதில் பதியும் வயசு குழந்தைகளுக்கு. முடிந்தளவுக்கு அவர்களுக்கு நல்ல வழியைக் காட்டலாமே? எது தமிழ் எது ஆங்கிலம் என்றே புரியாமல் ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள்கின்றன குழந்தைகள். “ஸ்கூல் என்று எழுதினால் எல்லா குழந்தைக்கும் புரியுமே. அப்புறம் ஏன் பள்ளிக் கூடம் என்று எழுத வேண்டும்” என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால், எல்லாரும் இப்படியே பேசி, எழுதியதால் வந்த விளைவு என்ன தெரியுமா? ஸ்கூல் என்றால் தமிழ் தான் என்று குழந்தைகள் நினைக்கத் தொடங்கி விட்டனர். கூடவே, பள்ளிக்கூடம் என்றால் என்னவென்றும் புரியாத ஒரு தலைமுறை உருவாகி வருகிறது. இந்தப் போக்கு விரும்பத்தக்கது என்று நினைக்கிறீர்களா? பார்க்க – சிறிலின் இடுகை. எத்தனையோ இதழ்களில் ஆங்கிலக் கலப்பு இருந்தாலும் சிறில் ஏன் குழந்தைகள் நூல் ஒன்றை மட்டும் விமர்சித்துள்ளார்? குழந்தைகளுக்காக எழுதபவர்களுக்கு கூடுதல் பொறுப்பு வேண்டும். குழந்தைகளுக்கான மொழியின் அறிமுகம் தவறாக அமைந்து விடக்கூடாது என்பதால் தான்.

ஏதோ தனித்தமிழ் வெறியுடன் உங்கள் பதிவு விமர்சிக்கப்பட்டது போலவும் அது தேவை இல்லை என்பது போலவும் உங்களது இந்த இடுகையும் வரும் மறுமொழிகளின் தொனியும் அமைந்துள்ளது வருந்தத்தக்கது. குறிப்பிட்ட அந்தக் கதையில் இருந்த ஆங்கிலச் சொற்கள் winning point, rest, friends, slow and steady, time manage, correct, time set, alarm, sorry, ok c u bye, aunty, modern, judge. இதில் alarm என்பதற்கு இந்தச் சூழலில் எனக்கு சொல் தெரியவில்லை. மற்றபடி, வெற்றிக் கோடு, ஓய்வு, நண்பர்கள், நிதானமாகவும் நிலையாகவும், நேரத்தை திட்டமிடல், சரி, நேரத்தைக் குறித்து வைத்திருந்தேன், மன்னிக்கவும், மீண்டும் பார்க்கலாம், அத்தை, நவீன, நீதிபதி என்று எழுதி இருந்தால் உலகத்தில் உள்ள எல்லா தமிழ்க் குழந்தைகளுக்கும் புரியுமே? அப்படியே புரியா விட்டாலும் புதிதாக சில தமிழ்ச் சொற்களைத் தங்கள் பெற்றோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டுமே? இந்த வயதில் கற்றுக் கொள்ளாமல் எப்போது கற்றுக் கொள்வார்கள்? கணினி இருக்கிற எல்லா குழந்தைகளுக்கும் ஆங்கிலம் புரியும் என்பது தவறான புரிதல். ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் பலருக்கு ஆங்கில அறிவு குறைந்த அளவே இருக்கலாம். அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் தமிழும் உள்ளூர் ஐரோப்பிய மொழியும் மட்டுமே புரிபடும். கணினி என்றாலே அது பண வசதியும் ஆங்கில அறிவும் உடையவர்களுக்கு உரித்தானது தானே என்பது போன்ற ஒரு சிந்தனை இதில் இருப்பது வருந்தத்தக்கது. ஒரு வசதியும் இல்லாத எங்கள் ஊராட்சித் தமிழ் வழியத் தொடக்கப் பள்ளியில் கூட கணினி வரலாம். அங்குள்ள மூன்றாம் வகுப்பு பிள்ளைகளுக்கு winning point, modern போன்ற சொற்கள் கண்டிப்பாகப் புரியாது. அவர்கள் ஆங்கில எழுத்துக்களைப் படிக்கத் தொடங்குவதே மூன்றாம் வகுப்பில் இருந்து தான். ஆனால், மூன்றாம் வகுப்புக் குழந்தைகள் இந்த முயல் கதையைத் தமிழில் படித்துப் புரிந்து கொள்ள முடியும்.

nanotechnology குறித்த கட்டுரையைத் நல்ல தமிழில் சிரமப்பட்டு எழுதுமாறு உங்களை யாரும் கேட்கவில்லையே? (அந்தப் பணியையும் தமிழ் விக்கிபீடியாவில் செய்பவர்களும் இருக்கிறார்கள் 🙂 ) மேலே உள்ளது போல் எளிமையாக ஏற்கனவே உள்ள தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி எழுதுங்கள் என்று தானே கேட்கிறோம்? நம் எல்லாருடைய சிந்தனையிலும் ஆங்கிலக் கலப்பு இருப்பதால் எழுதும்போது இப்படி தானே ஆங்கிலச் சொற்கள் வந்து விழுவது இயல்பு தான். ஆனால், எழுதி விட்டுப் பதிப்பிக்கும் முன் ஒரு முறை வாசித்துப் பார்த்தால் time, sorry போன்ற எளிமையான சொற்களையாவது தமிழில் தர இயலுமே?

தமிழ்க் குழந்தைகளுக்கான ஆங்கில வலைப்பதிவில் A modern muyal and a muttaaL rabbit என்று எழுதிவிட்டு muttaaL என்றால் தான் எல்லா தமிழ்க் குழந்தைகளுக்கும் புரியும் என்பீர்களா? ஆங்கிலத்தில் தமிழ் கலக்காமல் கவனம் காக்கும் நாம் தமிழில் மட்டும் அசட்டையாக ஏற்கனவே தமிழில் இருக்கிற சொற்களுக்கு கூட ஆங்கிலம் கலப்பது ஏன்? உங்களையும் யாரையும் நிச்சயம் தமிழ் விரோதிகளாக யாரும் பார்க்கவில்லை. ஆனால், குழந்தைகளுக்காவது நம் மொழியை இன்னும் சிறப்பாக அறிமுகப்படுத்தலாமே? அதுவும் நம்மால் அதை எளிதாகச் செய்ய இயலும் போது. ஏற்கனவே ஒரு தலைமுறை mummy, daddyக்கு மாறிவிட்டது. இன்னும் மீதமிருக்கிற உறவுகளையும் aunty, uncle என்று மாற்றி நாம் சாதிக்கப் போவது என்ன? “இந்தப் பிள்ளைகள் எல்லாம் தான் என் கதைகளை வந்து படிக்கப் போகிறதாக்கும். நான் ஏதோ நகரத்தில் உள்ள கணினி வசதியும் ஆங்கில அறிவு உள்ள பெற்றோர்கள் வாய்த்த குழந்தைகளுக்கும் தான் எழுதுகிறேன்” என்று நீங்கள் கருதலாம். ஆனால், இப்படி தொடங்குகிற மனப்பான்மை தான் சிறுவர் மலர் முதல் சுட்டி விகடன் வரை நிகழும் தமிழ்க் கொலைகளுக்கு காரணமாக இருக்கிறது. இது குழந்தைகளுக்கான படைப்புகள் எழுதுபவர்கள் மீதான பொதுவான விமர்சனம் தான். இதில் நியாயம் இருக்கிறது என்று நினைத்தால் இனி வரும் இடுகைகளில் கவனியுங்கள். இல்லாவிட்டால், சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

இயன்றால் முனைவர். மு. இளங்கோவனின் இந்த இடுகையைப் படித்துப் பாருங்கள். குழந்தைகளுக்கான படைப்பாளிகளுக்கு அந்த அளவுக்குக் கடுமையான தனித்தமிழை நான் பரிந்துரைக்கப்போவதில்லை என்றாலும், time, sorry, correct போன்ற எளிய சொற்களையாவது தவிர்த்து தமிழில் எழுதலாம் என்பதே என் வேண்டுகோள்.

கதை ஒரு கருவி தான். அதன் ஊடாக கதையின் நீதி, கதையில் அறிமுகமாகும் விலங்கு, தாவரம் போன்ற உலகம், கதை சொல்லப்படும் மொழி ஆகியவற்றை மறைமுகமாகக் குழந்தைகளிடம் சேர்க்கிறோம் என்பதைக் கருத்தில் கொள்ளலாம். கதையின் நீதி போன்றவற்றில் சமரசம் செய்யாமல் மிகச் சரியானதை எடுத்துரைப்பது போல் மொழி அறிமுகத்திலும் நல்ல பாணியைப் பின்பற்றுவது வரவேற்கத்தக்கது.

அப்புறம், முழுக் கணினியுமே தமிழில் கொண்டு வர வேண்டும், ஆங்கில அறிவு இன்றியும் கணினியைத் தமிழர் இயக்கும் நிலை வர வேண்டும் என்று பல ஆர்வலர்கள் உழைத்து வருகிறார்கள். இந்த வேளையில் கணினியை இயக்குபவர்களுக்கு ஆங்கிலம் தெரியும் தானே என்ற முன்முடிவுகளை வருங்காலத்திலாவது தவிர்ப்போமே? கணினி, ஆங்கிலம் இரண்டுமே தெரியாத குழந்தைகளுக்கு முன் உங்கள் வலைப்பக்கத்தை ஆர்வலர்கள் எவரும் கூட திறந்து காட்டிப் படிக்கச் சொல்ல முடியும் தானே? உங்கள் கதைகள் தொடர்ந்து நன்றாக வந்தால் புத்தகமாகக் கூடத் தொகுத்துப் போடலாம். குறைந்த பட்சம் தாளில் அச்செடுத்து வகுப்பறையில் படிக்கக் கொடுக்கலாம். கணினி, ஆங்கிலத்தைத் தாண்டி உங்கள் கதையை அணுகுவதற்கு எவ்வளவோ சாத்தியங்கள் இருக்கின்றன என்பதற்காகச் சுட்டிக் காட்டுகிறேன்.

குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி கதை சொல்லும் உங்கள் பணியை மதிக்கிறேன். பாராட்டுகிறேன். தொடர்ந்து செய்யுங்கள். வாழ்த்துக்கள் .

கண்மணி: என்னுடைய சிந்தனைகள் எந்த இலக்குமின்றியும், பரந்து பட்டதாகவும் இல்லாததால் எதிர்கால சாதக பாதகங்களைப் பற்றிய கணிப்பு இன்றி எழுதினேன். இனி முடிந்தவரை சரி செய்ய முயற்சிக்கிறேன். அதே நேரம் குழந்தைகளுக்கு என்பதால் பன்முகப் பதிவாக தமிழ், அறிவியல் கணிதம், புதிர், விளையாட்டு என வரும்போது ஆங்கில கதைகள், புதிர்கள் வருகின்றன. மற்றபடி நீதிக் கதைகளில் அறிவியல் சார்ந்த செய்திகளில் ஆங்கிலப் பிரயோகத்தைத் தவிர்க்க முயல்கிறேன்.

நான்: முழுக்க ஆங்கிலத்தில் இருக்கும் இடுகைகள், புதிர்கள், அவந்திகா போன்ற குழந்தைகள் எழுதும் இடுகைகளில் உள்ள ஆங்கிலம் குறித்த எந்தப் பிரச்சினையுமில்லை. குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்ததைத் தான் எழுதுவார்கள். நாளாவட்டத்தில், உங்களைப் போன்ற பெரியவர்கள் எழுதும் இடுகைகளில் நல்ல தமிழ் சொல்லைக் கண்டு கொண்டார்கள் ஆனால் தானே தாங்களும் பயன்படுத்தத் தொடங்க விடுவார்கள். குழந்தைகளுக்கு எல்லாமே புது சொல் தான். ஆங்கிலம், தமிழ் என பிரித்தறியத் தெரியாது. புது ஆங்கிலச் சொற்களை அவர்கள் கற்றுக் கொள்வதைக் காணும் நாம், அந்தப் புதுச் சொல் தமிழாக இருந்தால் மட்டும் தயங்கி விடுவார்கள் என்று நினைக்க ஏதும் இல்லை. தெரியாத சொற்களைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் குழந்தைகளுக்கு நிறையவே உண்டு. ஒரே ஒரு முறை சொல்லிக் கொடுத்து விட்டால் காலத்துக்கும் மறக்க மாட்டார்கள்.

//மற்றபடி நீதிக் கதைகளில் அறிவியல் சார்ந்த செய்திகளில் ஆங்கிலப் பிரயோகத்தைத் தவிர்க்க முயல்கிறேன்.//

நன்றி. என்னுடைய அதிகபட்ச எதிர்ப்பார்ப்பும் இது தான். அறிவியல் சொற்களுக்கு உங்களுக்குத் தமிழில் தெரியாமல் ஆங்கிலத்தில் எழுதினால் பரவாயில்லை. ஆனால், time, sorry, correct போன்ற உங்களுக்கு நன்றாகவே தெரிந்து இருக்கும் எளிய தமிழ் வார்த்தைகள் இருக்கும் இடங்களில் ஆங்கிலத்தைத் தவிர்க்கலாமே என்பதைத் தான் சொல்ல வந்தேன்.


Comments

One response to “சிறுவர் இலக்கியம் படைப்பவர்களுக்கான மொழி சார் பொறுப்பு”

  1. வெகு நேர்த்தியான பதிவு இரவி! புண்பட்ட மனது, இப்பொழுது ஆறி விட்டது!! 🙂

    வாழ்த்துக்கள்!!!